in ,

நட்பின் மேன்மை (சிறுவர் கதை) – ✍ கவிஞர் இரஜகை நிலவன், மும்பை

நட்பின் மேன்மை (சிறுவர் கதை)

ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

முத்துவும் அன்பரசனும் நல்ல நண்பர்கள். முத்து வீட்டார் பொருளாதரத்தில் பின் தங்கி இருந்ததால் அவன் தினமும் தந்தையோடு மாடு மேய்ப்பதற்கு மலைப் பகுதிக்குச் சென்று வந்தான்.  

அன்பரசன், அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். இருவரும் தினமும் சாயங்காலம் சந்தித்துக் கொள்வது வழக்கம். 

அன்றும், முத்து, மாலை வேளை மாடுகளை மேய்ச்சலிருந்து திருப்பி இழுத்து வந்து மாடுகளை அந்தந்த வீடுகளில் விட்டு விட்டு தான் காட்டிலிருந்து கொண்டு வந்த பலா பழத்தை தலையில் தூக்கிக் கொண்டு அன்பரசன் வீட்டிற்கு வந்தான். 

ஓடி வந்து பலாப்பழத்தை வாங்கி கீழே இறக்கி வைத்த அன்பரசன்,‘‘ஏன் இவ்வளவு கடினமான சுமைகளை எல்லாம் தூக்கி வருகிறாய்?’’ என்று அன்பாக கடிந்து கொண்டு பழத்தை உள்ளே வைத்து விட்டு ‘‘அம்மா, முத்து பசியோடு வந்திருப்பான் நல்ல சிற்றுண்டியும் தேநீரும் கொண்டு வாருங்கள்’’ என்று சமையலறையில் நின்ற அம்மாவிடம் சொல்லி விட்டு முன்னறைக்கு வந்தான்

‘‘ஏய் முத்து, ஏன் நின்று கொண்டிருக்கிறாய், உட்கார். இன்றைக்கு பள்ளியில் படித்த பாடங்களை உனக்குச் சொல்லித் தருகிறேன்’’என்றான்.  

‘‘ஆம், நான் உன்னிடம் பாடங்கள் படிப்பதோடு சில செய்திகளை உனக்கு சொல்ல வந்துள்ளேன்’’என்றான் முத்து. 

‘‘அருமை, என்ன சேதிகள்?’’ என்று கேட்ட அன்பரசன், முத்து தன் பையிலிடுந்த தீப்பெட்டியைத் திறந்து காட்டவும், கண்கள் விரிய ‘‘அய்… பொன் வண்டு’’ என்று மகிழ்ச்சியோடு ஆரவாரித்தான் அன்பரசன்.

‘‘ஆம், உனக்காகத் தான் பொன் வண்டு கொண்டு வந்தேன். நீ பார்க்க வேண்டுமென்றாயே… அதனால் இதோ தட்டான் பூச்சியையும் கொண்டு வந்துள்ளேன்.’’ என்று இன்னொரு தீப்பெட்டியைத் திறந்து காட்டினான்

‘‘அருமை, அது என்ன?’’ என்று மூன்றாவது தீப்பெட்டியை அன்பரசன் சுட்டிக் காட்ட, ‘‘அது… நீ கேட்டாயே மின் மின்பூச்சி. இரவில்மினு மினுக்குமே… உன்னிடம் காட்டவே பிடித்து வந்தேன்’’ என்றான் முத்து. 

‘‘மிக்க மகிழ்ச்சி’’ என்றவாறு அவன் கொண்டு  வந்தவைகளை உள்ளே எடுத்து வைத்து விட்டு ‘‘வா, நான் இன்று படித்த பாடங்களைப் படிக்கலாம்.’’ என்றவாறு அன்று, அறிவியலில் படித்த பூக்களைப் பற்றியும், வரலாற்றில் படித்த விடுதலை வேள்வியில் திளைத்த விடுதலைத் தியாகிகள், தமிழ்ப் பாடத்தில் படித்த திருக்குறள் பற்றியும் ஒவ்வொன்றாகச் சொல்லி வந்தான். 

அன்பரசனின் அம்மா சூடான சிற்றுண்டியையும் தேநீரும் பரிமாறி விட்டு ‘‘அன்பு நான் சந்தைக்கு போகிறேன். என்னோடு வருகிறாயா?’’ என்று கேட்டார்கள்.

‘‘இல்லை அம்மா. நான் முத்துவுக்கு இன்னும் நிறையச் சொல்லி கொடுக்க வேண்டியதிருக்கிறது. நீங்கள் போய் வாருங்கள்.’’ என்று சொன்னான். 

அம்மா சந்தைக்குக் கிளம்ப, தான் அன்று முழுவதும் படித்த எல்லா பாடங்களையும் முத்துவிடம் விரிவாகச் சொல்லிக் கொண்டு வந்தான். 

அப்புறம் நேரம் இருட்டி விட ‘‘அன்பு, உனக்கு வீட்டுப் பாடம் எழுத வேண்டாமா?’’ என்று கேட்டான் முத்து.

‘‘ஆமாம் முத்து. இன்றைய பாடங்கள் இன்னும் மிச்சமிருக்கின்றனவே. உனக்குச் சொல்லித் தர வேண்டுமே என்ன செய்ய?.’’ என்றுகேட்டான்.

‘‘நாளைக்குச் சாயங்காலம் திரும்பச் சொல்லிக் கொள்ளலாம்.’’ என்றான் முத்து.

‘‘இல்லை. நான் படித்த பாடங்களை இன்றே உனக்குச்  சொல்லித்தர வேண்டாமா? நீ, காலையிலே மலைக்கு எப்போது கிளம்புவாய்?  என்று கேட்டான் அன்பரசு. 

‘‘அது.. காலையிலே ஆறு மணிக்கு மாட்டை எல்லாம்  பற்றிக் கொண்டு மலைக்குக் கிளம்பி விடுவேன்’’ என்றான் முத்து

‘‘மிக்க நல்ல சேதி. நான் இப்போது வீட்டுப் பாடம் எழுதி  விடுகிறேன். எனக்கு காலை ஒன்பது மணிக்குத் தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். நான் காலையிலே ஆறு மணிக்கு உன்னோடு நடந்து வந்து மீதி பாடங்களைச் சொல்லிக் கொடுத்து விட்டு நீ மலையைச் சென்றடைந்ததும் நான் பள்ளிக்குச் செல்கிறேன்.’’ என்று மகிழ்ச்சியோடு சொன்னான் அன்பரசு

‘‘ரொம்ப மகிழ்வாக இருக்கிறது. நாளைக் காலையில்  சந்திப்போம். நீ இப்போது வீட்டுப் பாடம் எழுது’’ என்று சொல்லி விட்டு மகிழ்ச்சியோடு, துள்ளலாக, முத்து தன் வீட்டிற்கு திரும்பினான். 

இதையே தான் வள்ளுவர் தன் திருக்குறளில், 

‘நவில் தொறும் நூல் நயம் போலும் பயில் தோறும் 

பண்புடையார் தொடர்பு’ 

என, நல்ல பண்பு உடையவர்கள் தொடர்பை படிக்கப் படிக்க நூலின் நயம் மேன் மேலும் இனிமை தருவது போல பழக்கம் பழக மேன் மேலும் இன்பம் தருவதாகும் எனக் குறிப்பிடுகிறார். 

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 6) – ✍ விபா விஷா, அமெரிக்கா

    வல்லபி ❤ (பகுதி 4) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை