ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
சிப்பிக்குள் உறைகின்ற நித்திலமாய்..
கார்முகில் சூல் கொண்ட மழைத்துளியாய்..
நிலாப்பெண் களவாடிய கதிரொளியாய்..
என்னுள் அவன் காதல்! – எந்தன்
மனக்கதவின் தாள் உடைத்து,
எனைக் கொண்ட மாயோனின்..
இதழ் தொடும் வேங்குழலாய் நானாகிடவோ?
அங்கு வந்த வம்சி கிருஷ்ணாவைப் பார்த்து மாணவர்கள் பயந்து போய் நிற்க, அபி லயாவிற்கும் அவள் தோழி நேத்ராவிற்கும் அது ஆச்சர்யமாகத் தான் இருந்தது.
அவர்களருகே கோபமாக வந்த கிருஷ்ணாவோ, அந்த மாணவர்களைப் பார்த்து, “என்ன டா ராகிங்கா? செகண்ட் இயர் வந்ததுமே சீனியர்ன்ற திமிர் வந்துடுச்சா?” என்று எகிறினான்.
அதற்கு அவர்களோ, “இல்ல அண்ணா..” என்று கூற
“ஏய் என்ன அண்ணா? கால் மீ சீனியர்” என்று எடுப்பாகக் கூறவும்
அசடு வழிய, “இல்ல சீனியர்.. இவங்க பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ்.. எங்க கைல இவங்க மட்டும் தான் சிக்குனாங்க. அதான் இவங்கள வச்சு நாங்களும் பழகிக்கலாம்னு…” என இழுக்கவும், அவர்களை முறைத்தான் அவன்.
“உங்களோட இந்தப் பந்தா எல்லாம் அடுத்த வருஷம், நான் இந்தக் காலேஜ விட்டு போனதுக்கப்பறம் வச்சுக்கோங்க. அது வரைக்கும்.. ஏன் அதுக்கு அப்பறமும் கூட இது என் காலேஜ் தான். நீங்க எப்பவுமே ஜுனியர்ஸ் தான். இந்த சீனியர்ஸ்ன்ற நினைப்பு கூட இனி உங்களுக்கு வரக் கூடாது. இங்க யாரையும் ராக் பண்ற உரிமை.. கடமை.. எனக்கு மட்டும் தான். புரிஞ்சுதா?” என்று அவன் கேட்கவும், மற்றவர்கள் வேக வேகமாகத் தலை அசைத்தனர்.
பின்பு அபியிடம் திரும்பியவன், “என்ன கண்ணுங்களா? ராக் பண்றாங்களா?” என்று கேட்டு விட்டு, மீண்டும் அந்த இரண்டாமாண்டு மாணவர்களிடம் திரும்பி, “ஏய் என்ன டா செய்யச் சொன்னீங்க இவங்கள? ரெண்டும் பெஞ்ச் மேல ஏறி நிக்குதுங்க?” என்று கேட்டான்.
“இல்ல சீனியர்.. இந்த வழில வர ஸ்டுடென்ட்ஸ் எல்லாருக்கும் சல்யூட் வச்சு வெல்கம் பண்ண சொன்னோம்” என்று தயங்கி கொண்டே அவர்களில் ஒருத்தி கூறினாள்.
“ஓஹோ.. இந்த வழில வரவங்க எல்லாருக்கும் சல்யூட் வைக்கணுமா? சரி சரி.. நானும் இந்த வழில தான வந்தேன்.. அப்போ எனக்கும் அதே மரியாதை வேணும். ஆனா.. இந்தச் சல்யூட் எல்லாம் வேண்டாம். அதுக்குப் பதிலா நம்ம தமிழ் நாட்டு கலாச்சாரத்துபடி, ரெண்டு கையையும் சேர்த்து தலைக்கு மேல கும்பிட்டு வணக்கம் சொல்லி, நல்வரவு சீனியர்னு சொல்லுங்க” என்று கூறினான்.
அதைக் கேட்ட மற்ற மாணவர்கள், “இதுக்கு நாமளே பரவாயில்ல டா, நல்லா வசமா வந்து சிக்கிடுச்சுங்க ” என்று நமட்டுச் சிரிப்புடன் கிசுகிசுத்தனர்.
அது கிருஷ்ணாவின் பாம்புக் காதிலும் விழுந்துவிட, அவன் திரும்பி அவர்களைப் பார்த்து, “என்னடா நீங்களும் இந்த மரியாதை எனக்குச் செய்யணும்னு ஆசைப்படறீங்களா?” என்று கேட்கவும், மற்றவர்கள் இல்லையெனத் தலைஅசைத்துவிட்டு அமைதியாயினர்.
பிறகு மீண்டும் அபியிடம் திரும்பியவன், “என்னமா இது ரொம்ப ஈஸியான டாஸ்க்கா இருக்கா? வேணும்னா இன்னும் கொஞ்சம் கஷ்டமான டாஸ்க் குடுக்கட்டுமா?” என்று கேட்கவும்
“இல்ல இல்ல சீனியர் இப்பவே செஞ்சுடறோம்” என்று கூறிவிட்டு, அவன் கேட்ட மரியாதையைச் செய்தாள் நேத்ரா.
ஆனால் அப்பொழுதும் கூட அபி அமைதியாகவே இருக்கவும், கிருஷ்ணாவுக்குக் கோபம் வந்து விட்டது.
“என்னம்மா மகாராணி… உங்களுக்குத் தனியா வேற சொல்லனுமா? இப்போ செய்றீயா இல்ல…” என்று மிரட்டினான் அவன்.
“செய்ய முடியாது.. என்ன பண்ணுவ?” என்று அசராமல் திமிராகக் கேட்டாள் அபி.
அதைக் கேட்ட கிருஷ்ணா, முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாது.. வெடுக்கென நேத்ராவின் தோள் பையைப் பிடுங்கி, அதிலிருந்த அவளது அலைபேசியை எடுத்துக் கொண்டு விறுவிறுவென நடந்தான்.
உடனே பதறிய நேத்ரா, “ஏய் என்னடி திமிரா பேசின உன்ன விட்டுட்டு, என்னோட செல்போனை பிடுங்கிட்டு போய்ட்டான். ப்ளீஸ் டி.. அதுல என் ஆளோட நம்பர் வேற இருக்கு.. அவன் பாட்டுக்கு ஏதாவது செஞ்சுடப் போறான். எனக்காக அவனுக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு டி..” என்று கெஞ்சினாள்.
அதைக் கேட்ட அபியோ தலையில் அடித்துக் கொண்டாள். பிறகு, “ஏய் இவனுக்கு இந்த ஒரு டைம் இப்படிப் பயந்து போய் அவன் சொல்றத செஞ்சா.. அப்பறம் நாம இந்த வருஷம் பூராவும் அவன் சொல்றபடி எல்லாம் செஞ்சுட்டே தான் டி இருக்கணும். நீ முதல்ல எதுக்கு அவன் கேட்டதும் அவனுக்கு வணக்கம் வச்ச? எல்லாம் உன்னால தான். நீ மட்டும் சும்மா இருந்திருந்தா.. அவனைப் பத்தி பிரின்சிபால்கிட்ட புகார் கொடுத்திருக்கலாம். இப்போ உன் ஆளோட நம்பர் வேற இருக்குதுன்னு சொல்ற?” என்று எரிந்து விழவும்
நேத்ரா சிறிது விசும்பலுடன், “அபி ப்ளீஸ் டி.. வந்த முதல் நாளே வம்பு வேணாம்டி.. என் வாழ்க்கை பிரச்சனைடி..” என்று மேலும் கெஞ்சினாள். அதற்கு அபியோ இறுகிப் போன முகத்துடன் நின்றாள்.
அவளது மௌனத்தையே சம்மதமாய் எடுத்துக் கொண்ட நேத்ரா, தூரத்தில் போய்க் கொண்டிருந்த வம்சி கிருஷ்ணாவை விளித்து.. “சீனியர் நில்லுங்க.. அபி நீங்க சொன்னதைச் செய்யறேன்னு சொல்லிட்டா” என்று கத்திக் கொண்டே அபியையும் இழுத்துக் கொண்டு அவனிடம் விரைந்தாள்.
ஆனால் அவர்கள் அவனருகே சென்று அவனை வழி மறைக்கும் வரையில் அவன் தனது நடையை நிறுத்தவில்லை.
மூச்சிரைக்க வந்தவர்கள் அவன் முன்னே நிற்கவும், ஏறிட்டு நோக்கியவனிடம், நேத்ரா மீண்டும் அபி அவனுக்கு வணக்கம் தெரிவிப்பதற்குச் சம்மதித்ததைக் கூறினாள்.
அவன் அதற்கும் மறுமொழி உரைக்காது இருக்கவும், “ஹேய் அபி சீக்கிரம் ஒரு கும்பிடு போட்டுட்டு வந்துடுடி.. இன்னும் இவன் என்னென்ன செய்வானோன்னு பயமா இருக்கு” என்று கூறவும், அவனை முறைத்துக் கொண்டே, அவனுக்குத் தலை மேல் கரம் கூப்பி வணக்கம் தெரிவித்து.. “நல்வரவு சீனியர்…” என்று அவனைக் கடித்து மெல்வதைப் போல வார்த்தைகளைக் குதறி துப்பினாள் அபி.
அதற்கு மேல் அவனும் பேசாது நேத்ராவின் அலைபேசியை எடுத்து நீட்டவும், அதை நேத்ரா வெடுக்கெனப் பிடுங்கி கொண்டாள்.
பின்பு, “இந்த மரியாதைய எனக்குத் தினமும் செய்யணும்.. நீ மட்டும் செய்யணும்..” என்று அபியிடம் உரைத்துவிட்டுக் கிளம்பினான்.
அவனை அனல் கக்கும் விழிகளால் அபி பார்த்துக் கொண்டிருக்க, சிறிது தூரம் சென்றவன், திரும்பி அவர்களை நோக்கினான்.
அப்பொழுதும் அபி அவனையே நோக்கக் கண்டவன், புருவம் உயர்த்தி என்னவென்று விசாரிக்கவும், அபி மீண்டும் ஏதாவது ஏழரையைக் கூட்டி விடுவாளோ என்று அஞ்சிய நேத்ரா, அபியின் கையைப் பிடித்து விறுவிறுவென வேறு பக்கம் அவளை இழுத்துச் சென்றாள்.
ஆனால் அங்கேயே நின்று அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணாவின் முகத்தில் மென்னகை மலர்ந்தது.
இங்கு அபிக்கோ , கிருஷ்ணாவின் மீது சொல்லொணாத கோபம் பொங்கியது. அந்தக் கோபமெல்லாம், நேத்ராவின் மேல் கும்மாங்குத்தாய் விழுந்தது.
“எல்லாம் உன்னால… நீ மட்டும் உன் செல்போனை அவங்கிட்ட பறிகொடுக்காம இருந்திருந்தா அவன் இப்படிச் செஞ்சிருப்பானா?” என்று கேட்டுக் கொண்டே அவள் முதுகில் மாத்து மாத்தென்று மாத்தினாள்.
ஆனால் நேத்ராவிற்கு அபியின் நிலையை எண்ணி சிரிப்பு தான் வந்தது.
அவளும் சிரித்துக் கொண்டே.. “உன்ன யாரு அவன்கிட்ட அப்படி லொள்ளு பேச சொன்னது. அமைதியா அவன் முதல் முறை கேட்டப்போவே செஞ்சிருந்தா, இந்த நிலைமை வந்திருக்குமா? இப்போ பாரு நீ தான் தினமும் அவனுக்கு வணக்கம் வைக்கப் போற..” என்று கிண்டலாகக் கூறிவிட்டு மேலும் சிரித்தாள்.
அதில் மேலும் கடுப்படைந்தாள் அபி. அவளது கோபத்தீக்கு நெய் வார்ப்பது போல, நேத்ராவின் மூலம் இந்த விஷயம் மளமளவென முதலாமாண்டு மாணவர்களிடையே பரவி விட்டது.
அது இன்னும் அபியின் உள்ளக் கனலை அதிகப்படுத்தியது. அந்தக் கோபத்துடனே அவள் சுத்திக்கொண்டிருக்க, மறுநாள் வம்சி கிருஷ்ணா அவளிடம் வசமாகச் சிக்கினான். (அப்படித் தான் அவள் நினைத்தது. ஆனால் யார் சிக்கியது என்று பிறகு தானே தெரியும்)
மறுநாள், கல்லூரி மைதானத்தின் வழியே அபியும், நேத்ராவும் நடந்து சென்ற பொழுது, கிருஷ்ணா கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பது தெரிந்தது.
அவன் தான் அவர்கள் கல்லூரியின் கிரிக்கெட் டீம் கேப்டன். அவன் அங்கே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்த அபி, அவன் தனது எதிரி (!) என்பதையும் மறந்து, தனக்கிருந்த கிரிக்கெட் மீதான ஈடுபாட்டினால் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் அவளைக் கண்டுவிட்ட கிருஷ்ணா விளையாட்டில் தடுமாறிப் போனாலும், வேண்டுமென்றே அவளை சீண்டுவதற்காகவே அவளை நோக்கி பந்துகளை அடித்துக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த நேத்ரா பயந்து போய், “ஏய் வாடி இங்கருந்து போய்டலாம், அவன் வேணும்னே நம்ப மேல பால அடிக்கறதுக்குப் பிளான் பண்ணிட்டு இருக்கான். அவன் ஸ்போர்ட்ஸ்லயும் சரி படிப்புலையும் சரி பர்ஸ்ட்டா இருக்கறதால பிரின்சிபாலுக்குக் கூட ரொம்பச் செல்லமாம். அதனால அவன பத்தி நாம ஏதாவது புகார் கொடுத்தா கூட எங்கயும் எதுவும் செல்லாது, அதனால வந்துடுடி” என்று அவளை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றாள்.
அவளைத் திரும்பி முறைத்த அபி லயா, “போன டைம் உன்னால நான் பண்ணின தப்புக்கு, இன்னைக்கு அவனுக்குத் தண்டனை கொடுக்காம நான் வர மாட்டேன். உனக்குப் பயமா இருந்தா நீ போய்டு” என்று கோபமாகக் கூறவும்
“ஹையோ எனக்கு எதுக்குமா வம்பு” என்று நேத்ரா அங்கிருந்து ஓடியே விட்டாள்.
பிறகு அபி தனது கைகளைக் கட்டிக்கொண்டு அவன் என்னதான் செய்து விடுவான் என்பது போல அங்கேயே நிற்கவும், ‘இவளுக்கு என்ன திமிரு பாரு’ என்று எண்ணிய கிருஷ்ணா.. அவள் மேல் படுவது போலப் பந்துகளை விளாசிக் கொண்டிருந்தான்.
அவன் செய்கை புரிந்த மற்ற மாணவர்களும், எதுவும் செய்யவியலாமல் அவன் அடிக்கும் பந்துகளைச் சேகரிக்கும் பணியில் மட்டுமே இருந்தனர்.
அப்படி ஒரு முறை அந்தப் பந்து நேராக அபியின் மேலே விழுவது போலவே வரவும், அபி அதை லாவகமாகப் பிடித்துக் கொண்டாள். எனவே அதனை அவளிடமிருந்து வாங்குவதற்காக, கிருஷ்ணாவுக்குப் பவுலிங் செய்தவன் வந்தான்.
அவனிடம் அந்தப் பந்தை தர மறுத்த அபி, “இந்தப் பால யார் இங்க அடிச்சாங்களோ, அவங்களையே வந்து வாங்கிக்கச் சொல்லுங்க” என்று கூறினாள்.
அதனால் என்ன செய்வதென்று தெரியாத அவனோ, திரும்பி கிருஷ்ணாவைப் பார்க்க, அவன் தனது கிரிக்கெட் மட்டையைச் சுழற்றியபடி அபியை நோக்கி நடந்து வருவது தெரிந்தது.
அதனால் அவனும் வேறெதுவும் பேசாது அங்கிருந்து அகன்று விட, கிருஷ்ணா அபியின் அருகில் வந்தான்.
அபி இப்பொழுதும் கூடக் கைகளைப் பின்புறம் கட்டிக்கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். எனவே கிருஷ்ணா எதுவும் பேசாது, கையை மட்டும் நீட்டினான், அந்தப் பந்தைப் பெறுவதற்காக.
அபியும் பந்தை அவனிடம் தருவது போலக் கையை முன்னே கொண்டு வந்தவள், வேண்டுமென்ற அதை அவளது காலின் கீழே தவற விட்டாள்.
பிறகு அவனைப் பார்த்து “பால எடுத்துக்கோ கிரிஷ்” என்று கூறவும், அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.
அந்தப் பார்வையின் பொருள் புரியாத அபி, அவனைத் தன் காலடியில் குனிந்து பாலை எடுத்துக் கொள்ளும்படி கூறியதால் அவ்வாறு பார்க்கிறான். கண்டிப்பாகத் தனது காலடியில் விழமாட்டான் என்று உறுதியாய் நம்பினாள்.
ஆனால் கிருஷ்ணாவோ சிறிதும் தயங்காது, பந்தை எடுக்கக் கீழே குனிந்தான். அவன் அபியின் காலடியில் குனியவுமே, அவளுக்கு அவனைக் காலில் விழ வைத்த வெற்றி பெருக்கு ஏற்பட்டு முகத்தில் மகிழ்ச்சி கூத்தாடியது.
ஆனால் அடுத்த வினாடியே, உடலெல்லாம் விதிர்விதிர்க்க, இரண்டெட்டுப் பின்னால் நகர்ந்தாள் அபி. ஏனென்றால் பந்தை எடுக்கக் கீழே குனிந்த கிருஷ்ணா, அபியின் செந்தாமரை மலர் போன்ற பாதத்தை மெதுவே வருடிவிட்டு மேலே நிமிரவும், இனம்புரியா சிலிர்ப்பு பாத நுனியிலிருந்து உடலெங்கும் பரவ, அங்கம் பதற மலங்க மலங்க விழித்தாள் அபி.
சிரிப்புடன் நிமிர்ந்த அவனோ, ரகசியம் பேசும் குரலில்.. “பொண்டாட்டி கால, புருஷன் தொடறது தப்பில்லையே. கல்யாணம் நடக்கற அன்னைக்கே பொண்டாட்டி காலைப் பிடிச்சுத் தான புருஷன் மெட்டி போட்டு விடணும். அதுக்கு நான் இன்னைக்கே பயிற்சி எடுத்துக்கிட்டேன்” என்று கூறி கண்ணடித்துவிட்டு மந்தகாச சிரிப்புடன் அகன்றான்.
ஆனால் அதிர்ச்சி விலகாத பாவையோ.. கால்கள் வேரோடியது போல அவ்விடமே நின்று இதயப் படபடப்பை சமன் செய்ய முயன்றாள்.
மறுபுறம், கிருஷ்ணாவின் நண்பர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு.. “ஏய் ஏண்டா அவ கால்ல போய் விழுந்த, இது நமக்கெல்லாம் எவ்வளவு அசிங்கம் தெரியுமா?” என்று ஒருவர் மாற்றி மற்றொருவர் பிடிபிடி எனப் பிடித்துக் கொண்டனர்.
ஆனால் கிருஷ்ணா அதற்கெல்லாம் சற்றும் சுணங்காது சிரித்துக் கொண்டே சென்று விட்டான்.
(தொடரும் – சனிக்கிழமை தோறும்)
GIPHY App Key not set. Please check settings