in

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 18) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

அழைத்தான்... (அத்தியாயம் 18)

ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

திகட்டாத திட்டுக்கள்

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இணைப்பு

 

ந்தோனேஷியா..! 

ராமலிங்கமும் யமுனாவும் குழந்தையோடு இந்தோனேஷியாவிற்குச் சுற்றுலா வந்திருந்தனர். லாட்டரி சீட்டு விழுந்ததில் ஏற்பட்ட விபரீத ராஜயோகம்.

மேலும், செகரெட்ரி பாலச்சந்தர் கொஞ்சம் பணம் கொடுத்து, “ரொம்ப நாளா நீ விடுப்பே எடுக்கல. எவ்ளோ நாள் வேணுமோ எடுத்துக்கோ..” என்று அக்கறையோடு சொல்லி அனுப்பியிருந்தார்.

ராமலிங்கமும் மனநிறைவோடு வந்திருந்தான். ஓரிரு மாதங்கள் தங்குவதற்குத் தேவையான எல்லாமும் அவர்களிடம் இருந்தன. 

ராமலிங்கம் – யமுனா மற்றும் அவர்களின் ஒரே குழந்தையான மனோ மூவரும் படகில் படர்ந்து சென்றார்கள், புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். கணவன் மனைவி இருவரின் முதல் சுற்றுலா என்பதால், பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. வீட்டில் பகிர மறந்த சிறுசிறு துணுக்குகளையும் மூளைக்குத் திருப்பி வரவழைத்து, மகிழ்ந்தார்கள். அகம் நிறைந்திருந்தது இருவருக்கும்.

கடற்கரையில் கைக்கோர்த்து கொண்டு, மழலையோடு மழலையாய், மணல் வீடு கட்டி மகிழ்ந்தார்கள். அலை கரையை வருடிப்போக, மனத்தையே வருடிச் செல்கிற அளவு ரசித்தார்கள்.

மொத்தத்தில் ‘நாளொரு ஆடை, பொழுதொரு மேனியாக..’ அவர்கள் ஒரு மாதத்தைக் கழித்தார்கள்.

யாருக்குத் தெரியும் இப்படி மக்கள் உலாவித் திரியும் இந்த இடம், இன்னும் ஓரிரு வருடத்தில் அடையாளம் தெரியாமல் மாறப் போகிறதென்று.

குடியாத்தம்..!

பார்வதியை வைத்துக் கொண்டு, தனியாக எல்லா வேலைகளையும் செய்து வந்த ராதாவுக்கு, ஒரு நாள் நல்ல நாளாக விடிந்தது.

ஏதும் பேசாமல் ஓரிடத்தில் அமர்ந்திருக்கும் பார்வதி, திடீரென்று எழுந்து, மாடத்திற்கு அருகில் போய், “டேய்.. எங்கடா இங்கேர்ந்த ரூவாயெல்லாம்..? அடுப்படி என்ன இப்டி கெடக்கு..? கூடத்துல என்னடா துணி இது?” என்று வாய்க்குள்ளேயே ராதாவை மென்றாள்.

அம்மா எதார்த்தமாக பேசுவதைக் கேட்டு, துணி அலசிக் கொண்டிருந்த ராதா ஓடி வந்தான்.

“அப்பாடா.. அம்மாவுக்கு சரியாப் போச்சு..” என்று நினைத்தான். அன்றிலிருந்து, அம்மா ஒரு நாள் திட்டவில்லை என்றாலும் ராதாவுக்கு ஒரு மாதிரி ஆகிவிடும். 

இப்படியாக ஒரு மாதம் திட்டு வாங்கி கொண்டே கழிந்தது. கிருஷ்ணன் வருவதாக கடிதாசி போடவே, அம்மா எல்லாவற்றையும் மறந்து குதூகளித்தாள். ராதாவும் அன்று பேருந்து நிலையத்தில் காத்திருந்து, அவனைக் கூட்டி வந்தான்.

கிருஷ்ணன் வீட்டில் நுழைந்ததிலிருந்து ஏதும் பேசவில்லை. எதையோ சொல்லத் தயங்கிக் கொண்டே இருந்தான்.

அவள் அம்மா பார்வதி அதைப் புரிந்து கொண்டு, “என்னடா.. சமாச்சாரம்..? வந்ததுலேர்ந்து ஒன்னும் பேசல..” என்று அவளே ஆரம்பித்துக் கொடுத்தாள்.

கிருஷ்ணனும் கொஞ்சம் தொண்டையைக் கணகணத்துக் கொண்டு, “இல்லம்மா.. ஊர்ல வேல செய்யுற இடத்துல, இன்னும் உனக்கு கண்ணானம் பண்லாயானு கேக்குறாங்க..” என்று இழுத்தான். 

பார்வதி அழுத்தமாக அவனை ஒரு பார்வை பார்த்தாள். கிருஷ்ணன் மேலும் தொடர்ந்தான்.

“நா ஒரு பொண்ண விரும்புறே.. அந்தப் பொண்ணும்… வீட்டுக்கு வந்து கேக்க சொல்லுது.. நீங்க என்ன சொல்றீங்க? எனக்கென்னமோ அவ நம்ம வீட்டுக்கு வந்தா நல்லார்க்கும்னு தோணுது..” என்று வார்த்தைகளை மென்று விழுங்கி, கடைசியில் சொல்லி விட்டான்.

பார்வதி இமை மூடாமல், “புளுக் புளுக்” என்று கண்ணடித்துவிட்டு, பின்பு கைகொட்டி சிரித்தாள்.

“டேய்.. ஒனக்குலா பொண்ணுகிட்ட பேச வருமான்னு நெனச்சேனேடா..! ஒன்னயு ஒரு பொண்ணு விரும்புதுன்னா ஆச்சரியம் தா.. படிக்கிற காலத்திலே உனக்கு அதுலாம் வரல.. எப்போவும் கவிதையும் கதையும் எழுதிட்டிருக்கிற உனக்கு, இதுலாம் ஏன் தோணலன்னு நான் கூட நெனச்சிருக்கேன்..” என்று சிரிப்பு தாளாமல் கூறினாள். 

கிருஷ்ணனுக்கு அப்பாடா என்றிருந்தது. ஆனாலும், “என்னமா.. நீங்க இப்டி சொல்லிடீங்க? சே.. நா சண்டைலாம் ஆவுனு பயப்புட்டே வந்தே..” என்று கொஞ்சலாகச் சொன்னான்.

பார்வதி அவன் தலையில் தடவிக்கொடுத்து, “எம் புள்ள சந்தோசந்தாண்டா எனக்கு முக்கியம்..” என்று மென்மையாகச் சொல்லி, “சரி.. அவுங்கபெரிய ஆளுங்களா? வசதி கிசதி பாத்து, மனஸ்தாபம் ஆகிறப்போது..” என்று ஒரு கொக்கியையும் போட்டாள்.

கிருஷ்ணனுக்கு இப்போது தான் அது உரைத்தது. “அவுங்க எப்படின்னு தெரில.. என்ன நல்ல ஃபிரண்டா அவுங்க அண்ண நினைக்குறான்.. ஆனா, அவுங்க அப்பா ஏதும் பேசுல.. அந்தப் பொண்ணு தங்கமான பொண்ணு ம்மா..” என்றான்.

பார்வதியும் ஓரளவு புரிந்து கொண்டு, “சரி வூடு எங்க?” என்றாள்.

உடனே மடைத் திறந்த வெள்ளம் போல் கிருஷ்ணன், “மா.. காங்கிரஸ் ஹவுஸ் ரோட்டாண்டாம்மா.. மொதல்ல சிதம்பரத்துலா தா இருந்தாங்களாம். இப்போ அவுங்க அம்மாக்கு வேலை கெடச்சி இங்க வந்துட்டாங்களாம்..” என்று நிற்காத நதி போல் அவன் வார்த்தைகள் ஓடின.

பார்வதி முடிவு எடுத்து விட்டாள். “அவ பேரென்னடா?” என்று கேட்க, கிருஷ்ணன் “லட்சுமி……” என்று சொல்லி ரசித்துக் கொண்டான்.

பார்வதி அன்று மாலை அவனைக் கூட்டிக்கொண்டு போய், மாமாவின் வீட்டில் நிறுத்தி, கிருஷ்ணன் சொன்னதை எல்லாம் சொன்னாள்.

மாமாவும் கிருஷ்ணனைக் கூர்ந்து கவனித்து, “உனக்கு சரிதானப்பா..? பொறவு மாட்டேன்னுலா சொல்லப் படாது..” என்று ஒரு முறை கிருஷ்ணனின் முடிவை உறுதி பண்ணிக் கொண்டார். அவரும் அம்மாவும் பெண் கேட்க செல்வதாக முடிவு செய்தனர்.

கிருஷ்ணனும் அவர்கள் முடிவு கேட்டு சந்தோஷப்பட்டான். அவர்களை தன்னுடனேயே அழைத்துச் செல்வதாகச் சொன்னான். தனது மேலதிகாரி பாலச்சந்தர் ஐயாவுக்கு இதைப் பற்றி கடிதம் போட்டான்.

இரண்டு நாள் கழித்து, அவன் வீட்டிற்கு நேரே கார் வந்து நின்றது. காரிலிருந்து மகிழ்ச்சியாகப் பாலச்சந்தர் இறங்கினார். கிருஷ்ணனைத் தேடி கட்டி அணைத்துக் கொண்டார்.

“ரொம்ப சந்தோசம் டா.. முடிவு சரியாதா எடுத்திருக்க. அம்மா மாமாவெல்லாம் என்னோட கார்லே கூட்டினு போயிடறேன்..” என்று சொன்னதும் கிருஷ்ணன் படக்கென்று காலில் விழ எத்தனித்தான்.

பாலச்சந்தர் அவனைத் தடுத்து, நிமிர்த்தினார். அனைவரையும் அள்ளிப்போட்ட கொண்ட கார், குடியேற்றம் புதுப்பேட்டை ஏரியாவிற்குள் சென்று நின்றது…

ந்தோனேசியா..!

ராமலிங்கமும் யமுனாவும் தங்கள் உதிரத்திலிருந்து பிறந்த குழந்தையைக் கொஞ்சிக் குலாவி அவனோடு சுற்றுலா சென்று மகிழ்கிறதை நினைத்துப் பூரித்தனர்.

மேலும், வீட்டை விட்டு வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என்பதையும் கருத்தில் கொண்டு, “ஏங்க.. லீவுல வந்தது ரொம்ப சந்தோஷம்’ங்க.. இப்டி ஒரு லீவு கிடைக்காதான்னு நா அப்பொப்ப யோசிப்பேன். இப்போ நம்ம வந்து ரொம்ப நாளாயிருச்சு.. வீட்டுக்குப் போவோமா?” என்று பேச்செடுக்கும் போதே, மனோகரன் கத்தினான்.

“நோ..நோ மா.. இன்னு கொஞ்ச நாள் இங்கே இருக்கலாம்..” என்று அடம் பிடித்தான். அவனை யமுனா பார்த்துக் கொள்வாள் என்று முடிவு செய்து, ராமலிங்கம் ‘கிளம்பத் தயாராகு’ என்பது போல சைகை செய்தான். 

யமுனா மனோவைப் பார்த்து, “மனோ.. நம்ம வீட்ல உன்னோட கார், பைக்’லாம் விட்டுட்டு இங்க வந்துட்டோமே.. எப்டி வண்டி ஓட்டுவ..?” என்று கேட்டதும்

மனோ சற்று யோசித்து, “ஆமா..லம்மா.. சரி நம்ம வீட்டுக்கு போய் பாத்துட்டு, அதுலாம் கூட இங்க எடுத்துட்டு வந்துடலாம்..” என்று சிரித்தான். யமுனா அவன் கன்னங்களில் தன் இரு கைகளைப் பதித்து, திருஷ்டி கழித்தாள். 

ராமலிங்கம் கிளம்புவதற்கான ஏற்பாடுகள் செய்வதில் மும்முரமாக இருந்தான். யமுனாவும் குளித்து, பயணத்திற்கு ஏற்றவாறு ஒரு மெல்லிய புடவையைச் சுற்றிக்கொண்டு, மனோவையும் கிளப்பினாள்.

தாய்நாட்டிற்குச் செல்ல இங்கிருந்து இரண்டாயிரம் (2000) மைல் கடக்க வேண்டும். வான்வழியாகப் பறந்து, 8 மணி நேர பயணத்திற்குப் பிறகு, தாய் மண்ணை அடைந்தார்கள்.

சென்னை விமான நிலையம் வந்தவுடன், அங்கிருந்து டாக்ஸி ஒன்றைப் புக் செய்து, சிதம்பரம் செல்ல நினைத்தார்கள். ராமலிங்கத்திற்கு ஏனோ மனம் வலித்தது. ஒரு லாட்டரி சீட்டு வந்தவுடன், நாம் பஸ்ஸில் இருந்து காருக்கு மாறிவிட்டோமா? என்று உள்ளுக்குள் குத்தியது.

‘சரி… முழுமையாக இந்தப் பயணத்தை முடித்து விடுவோம்…’ என்று நினைத்து டாக்சியில் ஏறினான். 

பயணம் மீண்டும் தரைவழியாகத் தொடர்ந்தது. டிரைவர் பேச்சு கொடுத்தான். “மழ காலம்.. ஏ.சி.வேணுங்களா?” என்று கேட்டான்.

ராமலிங்கம் வேண்டாம் என்று தலையசைத்தார். அதற்குப் பிறகும், “சிதம்பரம் தா ஊருங்களா?” என்று டிரைவர் கேட்க, “ஆம்..!” என்று சொன்னான் ராமலிங்கம்.

“எனக்குக் கூட அந்த அம்பலத்தான தரிசனம் பண்ணுன்னு நெனப்புங்க.. இப்போதா எனக்கு நேரம் வந்திருக்கு…” என்று பக்தியோடு சொன்னான் டாக்சி டிரைவர். 

இப்படியான பேச்சுகளுக்கு இடையில், அந்தக் கார், புழுதி பறக்க சிதம்பரம் ரோட்டில் தன் சக்கரங்களைப் பதித்தது.

ட்சுமி வீடு..!

லட்சுமி, வீட்டில் எப்போதும் எதையோ யோசித்துக் கொண்டே இருந்தாள். சிந்தை எல்லாம் கிருஷ்ணனைப் பற்றித்தான். ‘தான் சொன்னதை அவர் புரிந்து கொண்டிருப்பாரா? என்ன நினைத்துக் கொண்டாரோ என் செயலைப் பற்றி?’ என்று சிந்தித்து சிந்தித்து சிந்தனை அலைகளை சிலந்தி வலை போல் பின்னி விட்டாள்.

அதைக் கலைப்பது தானே அண்ணனின் வேலை. “ஏய்.. உன்ன அம்மா கூப்பிடுறாங்க..” என்றான் சத்தமாக. “தோ.. வரேன்..” என்று தாவணி முந்தானையை உதறிக் கட்டிக்கொண்டு எழுந்து சென்றாள். 

அவள் அம்மா அவளின் தலையில் பூ வைத்து, “எக்ஸாம்லாம் நல்லபடியா முடிச்சிட்டா என் கொழந்த. அம்மா உனக்கு நல்ல வரன் பாத்து வெச்சிட்டேன். எங்களுக்கு சம்மதம்.. உன்ன ஒரு வார்த்தை கேக்கணும்..! அப்ரோ உனக்கு பிடிக்கலனா எப்டி?” என்று சூசமாகப் பேச்சை ஆரம்பித்து மாப்பிள்ளை போட்டோவை நீட்டினாள்.

லட்சுமிக்கு வியர்வைப் பூ பூத்து விட்டது. ‘நடராஜா.. இந்த போட்டோல அவுரு தா இருக்கணும்..’ என்று வேண்டிக் கொண்டு படத்தைப் பார்த்தாள். அவள் அங்கமெல்லாம் சிரிப்பும் சிலிர்ப்பும் மலர்ந்தது. அவள் அம்மா அவள் செயல்களைக் கூர்ந்து கவனித்தாள்.

லட்சுமியின் முகத்தில் அப்படி ஒரு வெளிச்சம். அவள் அம்மா, “சரிம்மா… மாப்ள வீட்டுக்காரவுங்ககிட்ட அப்பாவ பேச சொல்றேன்.. வீட்டுக்குப் பெண் கேட்டு வர சொல்றேன்..” என்று காதைக் கடித்தாள்.

லட்சுமி உடனே அந்த போட்டோவை எடுத்துக் கொண்டு ஓடியே விட்டாள். அதிலிருந்தது கிருஷ்ணன் தான்..!

அண்ணன் அவளைப் பார்த்துச் சிரித்தான். லட்சுமியைப் பற்றிய சம்பாஷணை நடக்கையில், ஒரு கார் ஹாரன் சத்தம் காதைக் கிழித்தது. உடனே அண்ணன் வெளியே சென்று பார்த்தான். “யாரு…?” என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தான்.

அவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. “மா..! மாப்பிள்ளையே வந்துட்டாரு.. மா..” என்று கத்தினான்.

லட்சுமியின் அப்பா, கிருஷ்ணனை முறைப்படி வரவேற்றார். “மாப்பிள்ளை..” என்ற வார்த்தை கேட்டதும் லட்சுமியின் அறைக்கதவு திறந்தது. கூடவே, இதுவரை சந்தேக தொனியில் இருந்த, மனக்கதவும் குழப்பம் ஏதுமின்றி, மகிழ்ச்சியுடன் தன்னாலே திறந்து கொண்டது.

லட்சுமி ஓடி வந்தாள். அவள் அம்மா அவளைத் தடுத்து, “போய்.. அலங்காரம் பண்ணிட்டு வாடி.. திடுதிப்புன்னு வந்துட்டாங்களே..! பரவால்ல..!” என்று அப்படியே அவளை அறைக்குக் கூட்டிப் போய் பட்டு புடவை ஒன்றைக் கட்டி, அழகாக பூ வைத்துவிட்டு, “நா வந்து கூப்பிடுறேன்.. இங்கே இரு..” என்று சொல்லி நகர்ந்தாள்.

திடீர் வரவு லட்சுமி வீட்டாருக்கும் ஆச்சரியம் தான் என்றாலும், லட்சுமிக்கு அப்படி இல்லை. பஞ்சாட்சர மந்திரத்தை மனதில் ஓடவிட்டு, நடராஜனுக்கு நன்றி கூறிக் கொண்டே இருந்தாள்.

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தூக்கணாங்குருவி கூடு (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி

    காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 6) – ✍ விபா விஷா, அமெரிக்கா