ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
“ஏண்டா அம்பி! எங்க பராக்கு பார்த்திண்டிருந்த, காப்பிப் பொடி வாங்கிண்டு வர இவ்வளவு நேரமா?”
“மாமி! அவன் காபி கொட்டையை வறுத்து திரிச்சு தர வேண்டி யிருக்குதுல்ல.. அதான் இம்புட்டு நேரம்….”
“போன தடவை பிஞ்சு கொட்டையா கொடுத்துட்டான். பொடி கசந்துச்சு… இந்த தடவை சொன்னியா இல்ல அசடுமாரி நின்னுண்டிருந்தியா? உன்ன வச்சுண்டு ஒரு காரியம் செய்ய முடியாது. சமத்து கொஞ்சம் கூட போறாது. ஆளுதான் தண்டத்துக்கு வளர்ந்து நிக்கிற, ஒரு கதைக்கு ஆக மாட்ட”
கடைக்காரன் காபி கொட்டைய வறுப்பதுபோல மங்களா அம்பியை வறுத்தெடுத்தாள்.
“அன்னைக்கு அப்படித்தான் ஐயராத்துல 50 அப்பளம் வாங்கிட்டு வான்னு அனுப்பினா, பாதி அப்பளத்தை உடைச்சிண்டு வந்தான். கேட்டா சைக்கிள் கவுந்துடுச்சுங்கறான், என் தலையெழுத்து இவனோட மாரடிக்க வேண்டியதாயிருக்கு”.
இத்தனையும் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த பார்த்தசாரதிக்கு அம்பியைப் பார்க்க பாவமாக இருந்தது. மனசு தாங்கவில்லை.
“ஏண்டி மங்களா! உனக்கே இது சரியாயிருக்கா? பாவம் மாங்கு மாங்குன்னு காலையிலிருந்து ராத்திரி வரை உழைக்கிறான், அவனை இப்படி திட்டறயே”
பார்த்தசாரதிக்கு மனம் விட்டுப் போயிற்று. அவன் தலையெழுத்து மாடாய் உழைச்சுகிட்டு.. இவளிடமும், இவள் மகளிடமும் சேர்ந்து வதைபடுகிறான் என்ற வருத்தம் மனதை அழுத்தியது.
பார்த்தசாரதி தன் தங்கை கமலத்தை உள்ளூர் மாப்பிள்ளை என்று பார்த்து தான் கல்யாணம் பண்ணி கொடுத்தார். தன் தகுதிக்கு மிச்சமா சீர்செனத்தியெல்லாம் சிறப்பாக செய்தார். தன் ஒரே தங்கையின் மீது உயிரையே வைத்திருந்தார். உடம்பு பலஹீனமாக இருந்ததாலோ என்னவோ அம்பி பிறந்த மூன்றாம் நாள் ஜன்னி கண்டு இறந்து போனாள் கமலம்.
அவள் புருஷனும் இரண்டாவது கல்யாணம் பண்ணியதும் அம்பியை கவனிப்பதை நிறுத்தி விட்டார். அனாதையாக நின்ற குழந்தையை தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர் பார்த்தசாரதியும், மங்களமும்.
முதல் நான்கைந்து வருடங்கள் அம்பியை தன் சொந்த மகனாக பாசமாக தான் வளர்த்தாள் மங்களா. காஞ்சனா பிறந்ததும், அவளுக்கு ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மை வந்து விட்டது. பத்து வயதிலிருந்தே அந்த வீட்டின் சம்பளம் வாங்காத வேலைக்காரனானான்.
அதற்குள் காஞ்சனா, “அம்பி ஏஏஏஏய்ய்ய் எங்க போய் தொலைஞ்ச! என்னோட காட்டன் புடவைய கஞ்சி போட்டு இஸ்திரி போட்டு வைக்க சொன்னேன். அதுகூட செய்யலையா?” என்று கத்தினாள்.
“ஏம்மா! உங்க அம்மா தான் அவனை புழிஞ்சு எடுக்கிறா… கேவலமா நடத்தறா… நீயே உன் புருஷனை.. தாலி கட்டினவன இந்த மாதிரி பேசலாமா?”
“யாரு? இவனா… என் புருஷன்… இதைவிட ஒரு பொம்மைய கட்டிண்டு இருந்திருக்கலாம்…” வெறுப்பை உமிழ்ந்தாள் காஞ்சனா.
அங்கே வந்த மங்களா,” ஏண்டி கத்தறே? நான்தான் பின்னாடி மாட்டையெல்லாம் அவுத்து வெளிய கட்டிட்டு… தொழுவத்தை சுத்தமா கழுடி விடச் சொல்லியிருக்கேன். அதை முடிச்சுண்டு வருவான்” என்றாள்.
“அம்பி நான் தாலி கட்டின புருஷன்னு அப்பா சொல்லித்தான் நினைப்பே வருது! இவனை ஏன் என் தலைல கட்டி வச்சேம்மா?”
“பேசாம இருடி! நீ அடிச்ச கூத்துக்கு எனக்கு வேற வழி தெரியல… செட்டியார் மகனோட ஓடிப்போன உன்ன எவன் கட்டுவான்? எங்க போய் ஒரு மாப்பிள்ளை நான் தேடிப்பிடிக்க? அதுதான் இந்த பயலே உன் தலையில கட்டி வச்சேன், ஊர் வாயை அடைக்கிறதுக்குத்தான்”
“கொஞ்ச நாள் போனா இந்த பயலே கழட்டி விட்டுட்டு உனக்கு வேற யாரையாவது கல்யாணம் பண்ணி வச்சிடுவேன்”
“நீ ஒரு அம்மாவா? பெத்த மகள்கிட்ட எவ்வளவு கேவலமா பேசுற… கேவலமா நடந்துக்குற…. இந்த பய பாவம்டி! அவன் வாழ்க்கையைக் கெடுத்த…. அம்மாவும் மகளும் நல்லாவே இருக்க மாட்டீங்க”
“போதும்! போதும்! உங்க சாபமெல்லாம் என்ன ஒன்னும் பண்ணாது. என் மகளையும் ஒன்னும் பண்ணாது”
கொல்லைப்புறத்தில் மாட்டு தொழுவத்தை அம்பி கழுவிகிட்டிருக்க, அஞ்சலை பால் கொண்டு வந்தாள்.
அம்பியை பாவமாக பார்த்தவள், “ஐயா தள்ளுங்க” என்றவள் பால் சொம்பை அவன் கையில் கொடுத்துவிட்டு சேலையை இடுப்பில் இழுத்துச் சொருகிக் கொண்டு மடமடவெனவு கழுவி விட ஆரம்பித்தாள்.
“நீ ஏன் அஞ்சல என் வேலைய செய்ற? நானே செஞ்சுட்டு வர்றேன்”.
“பெரியம்மாவும்..அவுக மகளும்.. இந்த மாதிரி ஒங்கள வேல வாங்குகிறாங்க, நீங்க பாவம்ய்யா. ஐயா மட்டும் தான் உங்களை பிரியமா நடத்துறாக… அவுகளுக்கு தங்கச்சி மகன்ங்கற பாசமிருக்கு… ஆனா இவுகளுக்குத்தான் கொஞ்சம் கூட இரக்கமே இல்லையே” என்றாள் ஆதங்கத்தோடு.
“அதெல்லாம் பழகி போச்சு அஞ்சலை… எதுவுமே எனக்கு பெருசா தெரியல. என் மேல உண்மையான அன்பு வைச்சிருக்கிறது நீயும், மாமாவும் மட்டும்தான். காஞ்சனா கண்ணுக்கு நான் எப்பவுமே ஒரு மனுஷனா தெரியமாட்டேன். அவ என்ன ஒரு வேலைக்காரனாத்தான் பார்க்கறா… என்ன ஏன் கல்யாணம் பண்ணிண்டான்னு சத்தியமா நேக்கு இப்ப வரைக்கும் புரியல”
“இது கூட உங்களுக்கு புரியல! அவுக சொல்றத கேக்குறதுக்கு ஒரு அடிமை வேணும்.. அப்படித்தான் உங்கள வச்சிருக்காக! நீங்களும் அது புரியாம இந்த வீட்ல கிடந்து கஷ்டப்படுறீங்க… உங்களுக்கு என்ன தலையெழுத்தாய்யா?”
“விடு அஞ்சல! என்னைக்கு எங்க அம்மா அஞ்சு வயசுல என்ன விட்டுட்டு போனாளோ… அன்னைக்கே எல்லாமே போச்சு. அத்தை என்னை எடுத்து வளர்த்ததற்கு நன்றிகடனாத்தான் இந்த வீட்டுக்கு உழைச்சிண்டிருக்கேன்”
“ஏய் அம்பி! இந்த பழைய சோறு எவ்வளவு நேரமா இங்கயே இருக்கு… குடிக்காம என்னத்தை வெட்டி முறிக்கிற” என்றபடியே வந்த மங்களம், அஞ்சலி தொழுவத்தை தழுவி கொண்டிருப்பதைப் பார்த்ததும் கோபாவேசமானாள்.
“ஏண்டி அஞ்சல! இது என்ன புது பழக்கம். அவன் செய்ற வேலையை நீ எதுக்குடி செய்ற? வந்தமா பால கொடுத்தமான்னு போயிண்டே இருக்கணும். நோக்கு என்னடி கரிசனம் இவன் மேல. ஊர் உலகத்துல ஒரு ஆம்பளைய விட மாட்டீங்க… எதுக்கு தான் இப்படி ஆம்பளைங்களுக்கு அலையறீங்களோ?”
“பாவம் அம்பி அய்யா கஷ்டப்படுறார்ன்னு நான் வாங்கி கழுவினேன், அதுக்குப் போய் இப்பிடி பேசறீங்களே பெரியம்மா”
“துரை கஷ்டபடுறது பாக்க இந்த அம்மாவுக்கு மனசு கஷ்டமா போச்சு. ஏண்டி எதுத்தா பேசுற… நாக்க அறுத்திடுவேன்”
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பார்த்தசாரதியின் மனம் வேதனைப்பட்டது. ‘இந்த அஞ்சலிதான் இவன் மேல எவ்வளவு பாசமாக இருக்கா… அந்த அக்கறை என் மககிட்ட இல்லையே…. அம்மா படுத்துறது போதாதுன்னு மகளும் சேர்ந்து கொடும படுத்துறாளே. தன் கையாலாகாதனத்தை எண்ணி வெறுப்பாக இருந்தது. இவ்வளவையும் பாத்து கொண்டு தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே’ என்ற எரிச்சல் வந்தது பார்த்தசாரதிக்கு.
ஓரிரு வாரம் கழிய, ஒரு நாள் காலை உரக்க சப்தம் கேட்டது.
“ஐயோ ஏங்க! இந்த கண்றாவியை வந்து பாருங்க! அடப்பாவி!! சண்டாளா… நீ கண்டிப்பா விளங்காம தான் போவே. அன்னைக்கே உங்க ஆத்தா போனபொறவு உன்ன தலைமுழுகி இருக்கணும். உன்ன கூட்டியாந்து வளர்த்ததுக்கு நீ நல்ல பலன் காமிச்சுட்ட. நம்மாத்து மானத்தை கப்பலேத்திட்ட. என் மகளுக்கு துரோகம் பண்ணிட்ட. என் கண்ணு முன்னாடி நிக்காத… ஓடிப்போ… இந்த வீட்டு படிய
மிதிச்ச, உன்னை நானே கொன்னு போட்டுருவேன்”
காஞ்சனாவும், பார்த்தசாரதியும் வெளியே ஓடிவந்து பார்க்க, வாசலில் மாலையும், கழுத்துமாக அஞ்சலியும், அம்பியும் நின்றிருந்தார்கள். காஞ்சனாவுக்கு தன் கண்ணையே தன்னால் நம்ப முடியவில்லை.
“ஏண்டி அஞ்சல! உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இந்த பயல கல்யாணம் பண்ணிண்டு என் வீட்டு வாசலிலே வந்து நிப்ப. இவனெல்லாம் ஒரு மனுஷன்… இவன கல்யாணம் கட்டிண்டு எதையோ சாதிச்சிட்ட மாதிரி வந்து என் கண் முன்னாடி நிக்கிற. இதுக்கு நீ நல்லா அனுபவிப்ப, விளங்காம தான் போகப் போற. நடுரோட்டில நிப்ப, என் வயித்தெரிச்சல வாங்கிண்டு இந்தப் பைய நாசமாத்தான் போவான்”
“அம்மா! வார்த்தைய அளந்து பேசுங்க… இப்ப அவரு என் புருஷன். அய்யனாரு முன்னாடி நாங்க ரெண்டு பேரும் மாலைய மாத்தி கல்யாணம் பண்ணிகிட்டோம். அவரு உங்ககிட்ட கிடந்து சீரழிஞ்சது போதும். இனி நான் அவர நல்லா பாத்துக்குவேன்”
“அடி செருப்பால! ஏண்டி சிறுக்கி! கள்ளத்தனமாக கல்யாணம் பண்ணிண்டு விளக்கமா குடுக்குற. ஏங்க பாத்துண்டு இருக்கிறீங்க.. இந்த பயலே இப்பவே அடிச்சு துரத்துங்க. நன்றி கெட்ட பைய.. இவ்வளவு தைரியம் அந்தப் பயலுக்கு கிடையாது. எல்லாம் அந்த சிறுக்கி கொடுத்த தைரியம்”
“டேய்ய்ய் அம்பி… உன்ன வளர்த்ததுக்கு நல்ல நன்றிய காமிசுட்டே. இந்த குடும்பத்து மானம் மரியாதை போச்சு… இனி உனக்கும் இந்த வீட்டுக்கும் உள்ள சம்பந்தம் முடிஞ்சு போச்சு! நீ இப்பவே எங்கேயாவது இவளை கூட்டிண்டு போயிடு.. இனி உனக்கு இந்த வீட்டில் இடமில்லை. நீ என் மகளுக்கு புருஷனும் கிடையாது.. சட்டப்படி நோட்டீஸ் வரும்… இனி இந்த ஊர் பக்கம்.. இந்த வீட்டுப்பக்கம் உங்கள பார்த்தா நானே உன்னை கொன்னு போட்டுருவேன்” பார்த்தசாரதி போட்ட சத்தம் வீட்டையும் தாண்டி தெருவில் எதிரொலித்தது. மங்களாவே ஆடிப் போனாள் ஒரு நிமிடம்.
“இப்பதான் சரியா பேசி இருக்கீங்க! போடா வெளியே” என்றாள் மங்களம்.
“மாமா என்னை மன்னிச்சிடுங்க” அம்பியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. கைகூப்பி வணங்கி விட்டு திரும்பி நடந்தார்கள்.
வாரங்கள் இரண்டு ஓடிவிட்டது. காலை கதிரவன் மெல்ல வானத்தில் எழ, சில்லென குளிர் காற்று அந்தச் சின்னஞ்சிறு வீட்டில், இரவின் மையல் தந்த மயக்கத்தில் இருந்த இருவரையும் தழுவியது.
“அஞ்சல எழுந்திரு! ரெண்டு பேரும் வேலைக்கு கிளம்ப நேரம் சரியா இருக்கும்” என்ற அம்பி, அவளை இறுக தழுவிக் கொண்டான்.
“நேரமாச்சுன்னு வாய் தான் சொல்லுது” என்று செல்லமாக சிணுங்கினாள். மனமில்லாமல் இருவரும் எழுந்து வீட்டு வேலை பார்த்துவிட்டு பக்கத்தில் இருக்கும் கடைக்கு வேலைக்கு கிளம்பினர்.
கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. அஞ்சலி போய் கதவை திறக்க ஆச்சரியம். பார்த்தசாரதி நின்றிருந்தார்.
அம்பி ஓடி வந்தான். “மாமா வாசல்ல நிக்குறீங்க! உள்ள வாங்க” என்றான்.
“அம்பி எப்படிடாயிருக்க? அஞ்சலி நல்லா இருக்கியாம்மா?” என்றவர் காலில் இருவரும் விழுந்தனர்.
“மாமா எங்க இரண்டு பேருக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்திருக்கீங்க! நாங்க உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. நீங்கதான் எங்க கண்கண்ட தெய்வம். அன்னைக்கு நீங்க சொன்னபடி செய்தது எனக்கு மனசு உறுத்தலாக இருந்துச்சு. ஆயிரம்தான் இருந்தாலும் அத்தை என்னை வளர்த்தவங்க, அவங்களை தலைகுனிய வைச்சிட்டு அஞ்சலியை கல்யாணம் கட்டிக்கிட்டு வர்ரோமேன்னு மனசு பதறுச்சு. ஆனா நீங்க சொல்றத மறுக்க முடியாமதான் நான் இதுக்கு சம்மதிச்சேன்”
“அம்பி உணர்ச்சிவசப்படாத உன்னுடைய நல்ல மனசுக்கு நீ இப்படித்தான் நினைப்பே… ஆனா உங்க அத்தையையும் காஞ்சனாவையும் பத்தி எனக்கு தெரியும். அவங்க ரெண்டு பேரும் மனுச ஜென்மமே இல்ல, அவங்க உன்ன மனுஷனா மதிக்கவும் தயாரா இல்ல. வீட்டு வேலை செய்ற ஒரு ஆளா தான் உன்னை பார்த்தாங்க”
“உங்க அம்மா எப்படி செல்வாக்காக கல்யாணம் பண்ணி கொடுத்து எப்படி வாழ்ந்தா, அவளோட புள்ள நீ எப்படி கிடந்து சீரழியிறது எனக்கு மனசு உறுத்தலாக இருந்துச்சு. அஞ்சல உன்மேல அன்பா இருந்தா. அவளை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் வாழ்க்கை நல்லா இருக்கும், நீங்க ரெண்டு பேரும் நிம்மதியாக குழந்தை குட்டின்னு சந்தோஷமா இருப்பீங்கன்னு எனக்கு தோணுச்சு”
“இதுல உங்க அத்தைய நினைச்சு வருத்தப்பட ஒண்ணுமே இல்ல. அவ எப்படியும் இன்னும் கொஞ்ச நாள் போனா காஞ்சனாவுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடுவா. நீயேன் உன் வாழ்க்கையை கெடுத்துக்கணும்னு தோணுச்சு. அதனாலதான் நீ அஞ்சலியோட சேர்ந்து வாழுன்னு நானே இரகசியமாக கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணினேன்” என்றவர், கையிலிருந்த ஒரு சிறு பெட்டியை அவன் கையில் கொடுத்தார்.
“இது உங்க அம்மாக்கு போட்ட நகையும், அவளோட பணமும். உங்க அத்தைக்கு தெரியாமல் இதை மறைச்சு வைச்சிருந்தேன். நீ இதை உபயோகப்படுத்தி ஏதாவது சொந்தமா தொழில் செஞ்சு குடும்பத்தை நல்லபடியா நடத்து. அதுதான் உங்க அம்மாக்கு நீ தரக்கூடிய மிகப்பெரிய சந்தோஷம். இந்த மாமாவுக்கும் அதான் சந்தோஷம்” என்று அந்த பெட்டியை அம்பி கையில் கொடுத்தவர்
அஞ்சலியை பார்த்து, “சீக்கிரமே என்னத் தாத்தாவாக்குறதுக்கு கையில 10 மாசத்துல ஒரு புள்ளைய பெத்து கொடுக்கணும்… உன் பிள்ளையோடு என்னைக்குமே அம்பியையும் நல்ல பாத்துக்கணும்… அதுதான் நான் உன்கிட்ட எதிர்பார்க்கிறது” என்று கூற, வெட்கத்துடன் தலையசைத்தாள் அஞ்சலை.
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings