sahanamag.com
தொடர்கதைகள்

காக்க! காக்க! ❤ (பகுதி 6) – ✍ விபா விஷா, அமெரிக்கா

ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

எந்நாளையும் போலவே இந்நாளும் அதி காலையிலேயே விழிப்புத் தட்டிவிட்டது சிருஷ்டிக்கு. இன்றும் அது போலவே அதே கனவு. அதே மனிதன். அதே போலவே.. ஒரு கண்ணில் காதல், மறு கண்ணில் ஏக்கம், இரண்டுமாய்க் கலந்ததான ஒரு மந்தகாச பார்வை.

எப்பொழுதும் போல அந்தப் பார்வையில் தொலைந்து, அவன் உள்ளே அவள் மூழ்கும் அவ்வேளையில் விழிப்பு தட்டி எழுந்து விட்டாள். அவள் எழுந்ததும் மீண்டுமாய் உடலெங்கும் அவனின் அந்தவொரு அற்புத சுகந்தம். கூடவே, தலையை லேசாய் வலிப்பது போல் ஒரு உணர்வு.

உடனே அவள் அப்பா மகிந்தன் அவளுக்காகத் தயாரித்திருந்த அந்த மருந்தை தேடி எடுத்து அவர் கூறிய அளவு விழுங்கிவிட்டு அப்படியே அமைதியாய் அசையாமல் அமர்ந்திருந்தாள். ஆனால் மனமெங்கும் என்றும் போல இன்றுமே அவனது நினைவின் கோலங்கள்.

அவன் நினைவுகள் மனதோரம் மெல்லிய மழைச்சாரலாய், பசுமை குறையாத மண்வாசமாய்த் தோன்றிட, இன்னுமே மனத்தின் எங்கோ ஒரு ஓரத்தில் அவனைப் பற்றிய ஏக்கமும், வலியும், கனவை தாண்டிய நினைவிலும் இருந்து விட்டாலும்.. அவன் முகம் கனவில் காணும் நேரமெல்லாம் மனமெங்கும் மந்தகாச மேகங்கள்.. பன்னீரைத் தூவும் விண்மீன்கள்.

அப்படியான ஒரு மனநிலையில் இன்று தன் வீடு எப்படிப்பட்ட காலநிலையில் இருக்க வேண்டும் என முடிவு செய்வதற்காகத் தன் வீட்டின் அந்தக் குட்டி கணினியை எடுத்து நோண்டலானாள்.

என்னவெல்லாமோ காலநிலையை மாற்றி மாற்றி வைத்துப் பார்த்து விட்டு இறுதியாக இலையுதிர் காலத்திற்கு முன்பு மரங்களின் இலைகள் எல்லாம் பற்பல நிறம் மாறி காதலனின் வரவுக்காகக் கன்னம் எங்கும் வெட்கம் பூசிய மங்கையாய் திகழ்ந்து இருக்கும் அந்தப் பொழுதை தேர்ந்தெடுத்தாள்.

பார்க்கப் பார்க்க தெவிட்டாத தேன் சுவையாய்.. தித்திக்கும் தேன் மழையாய்.. அந்தக் காலநிலையும் அவள் மனநிலையும் இருந்தாலும், இதெல்லாம் செயற்கை தானே என்ற எண்ணம் அவள் மனதை லேசாக அரிக்கத் தொடங்கியது.

என்னதான் ஆயிற்று இயற்கைக்கு? காலநிலை கூட மனிதனால் செயற்கையாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நிலை. அதுவும் இது போன்ற பணக்கார வீடுகளில் மட்டுமே இந்த வசதி.

சாதாரண மக்களுக்கு.. ஏழைகளுக்கு.. என்றுமே அதே மாசுபட்ட காற்று தான். அதே அமிலம் கலந்த மழை தான். அதே புறஊதாக்கதிர்கள் ஊடுருவும் வெய்யோனின் கதிர் தான்.

காற்றும், கடல் அலையும் யாரையும் பாகுபாடாய் நினைப்பதில்லை என்று இத்தனை நாட்கள் இருந்திருந்த நிலை, இன்று அடியோடு தலைகீழாய் மாறி.. இப்பொழுது அதுவே ஏழைக்கும் பணக்காரனுக்கும் வித்தியாசம் பார்த்து வாசல் நுழைந்தது.

இதெயெல்லாம் யோசித்தவளுக்கு.. இன்னும் இன்னுமாய் எப்போதும் போல அதே நினைவு. ஏதோ சரி இல்லை.. ஏதோ மனதோடு ஒட்டவில்லை.

தானாகவே வலிய வலிய அப்பா என்று எண்ணிக் கொள்ளும் உறவு. தானாகவே வலிய வலிய இதுவே என் இருப்பிடம் என்று எண்ணிக் கொள்ளும் நிலை. அப்படி எதன் காரணமாகத் தன் நினைவு மறந்து இப்படி மறுத்துப் போயிருக்கும்?

தினம் தினம் கனவில் வந்து எனக்காகக் காத்திருக்கும் அவன் யார்? அவனைக் கண்டதும் எதற்காக என் மனம் இப்படி ஏங்கித் தவிக்கிறது? என்று சுற்றுப்புறம் மறந்து தனது சுயசிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

அந்த நேரம் கதவைக் கூடத் தட்டாமல் அறைக்குள் வந்து நின்றார் மகிந்தன்.

“என்னம்மா காலையில எந்திரிச்சு இவ்ளோ நேரம் ஆயிடுச்சு.. இன்னும் ரூமை விட்டு வெளியில் வரல? ஏன் மறுபடியும் உனக்குத் தலைவலி வந்திருச்சா?” என்ற கேள்வியுடன்.

அந்தக் கேள்விக்கு வார்த்தைகளால் பதில் உரைக்காது, அமைதியாக “இல்லை” என்று தலையசைத்துவிட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் சிருஷ்டி.

இதைக் கண்ட மகிந்தனின் கண்கள் சற்று இடுங்கின. அவரின் காதோரம் லேசாகச் சிவந்தது. அது அவர் கோபம் கொண்டிருக்கிறார் எனக் கூறும் முதல் அறிகுறி இது எனத் தெரிந்தது.

அவரும் வெகுநேரம் வரையில் அவள் அறையிலேயே காத்துக் கொண்டிருந்தார். ஆனால் மகிந்தன் அவளது அறையை விட்டு செல்வதற்காகச் சிருஷ்டி உள்ளே அமைதியாகக் காத்திருந்தாள்.

இறுதியாக, காத்திருப்பில் சலித்துப்போன மகிந்தன்.. குளியல் அறையின் கதவருகே வந்து, “இன்னைக்கு உனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. சீக்கிரம் ரெடியாகி வெளியில வா” என்று கட்டளை இடுவது போன்றதான குரலில் பணித்துவிட்டு , அந்த அறையை விட்டு வெளியே சென்றார்.

‘அப்படி என்ன முக்கியமான வேலை? எனக்கு மறுபடியும் ஏதாவது புது மருந்து கொடுக்கப் போறாங்களா?’ என்று யோசித்தவாறே மனம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மகிந்தனின் கட்டளைப்படி தயாராகிக் கொண்டிருந்தாள் சிருஷ்டி.

அவள் குளித்து முடித்து வெளியே வரவும், வீட்டின் ஹாலில் அமர்ந்து கொண்டிருந்த மகிந்தன், அதற்கு முன் தான் கொண்டிருந்த அந்தக் கோபமுகபாவத்தை அடியோடு மறந்து விட்டு, அல்லது மறைத்து விட்டு.. அவளிடம் இன்முகமாகவே பேச முயன்றார்.

“என்னமா காலையிலேயே மூட் அவுட்டா? முகம் ஏன் சோர்ந்த மாதிரி தெரியுது?” என்று கொஞ்சம் அக்கறை கலந்த குரலில் கேட்டார்.

சிருஷ்டியும், ‘தேவையில்லாமல் தன் மனதை குழப்பிக் கொண்டிருக்க வேண்டாம்’ என்று எண்ணி அவரிடம் நல்லவிதமாகவே பதில் கூறினார். ஆனால் அதன்பின் அந்த ‘நல்லபடியாக’ என்ற வார்த்தைக்கு அவள் அகராதியில் இடம் இன்றிப் போனது தான் பரிதாபம்.

ஏனென்றால் அவர் அவளுக்கு இட்டிருந்த பணி அப்படிப்பட்டது. என்ன ஏதென்று எதுவும் புரியாத குழப்பத்தில் அவர் கூறுவதை நம்புவதா வேண்டாமா என்ற தயக்கத்தில் அவள் அதிர்ந்து போய்த் தான் நின்றிருந்தாள்.

ஆனால் அந்த அதிர்ச்சிக்கும் கூட நேரம் இல்லாது, அல்லது அவளது மனஉணர்வுகளை அலட்சியம் செய்தது போல, அவர் அவசரஅவசரமாய் அவருக்கு வேண்டிய காரியத்தை அவள் மூலமாய் நடத்த முயன்று கொண்டிருந்தார். ஆனால் இதில் அவளைப் பற்றி அவர் கூறியதெல்லாம் சற்றும் நடைமுறைக்கு ஒவ்வாததாக இருந்தது.

அதை என்னவென்று முழுமையாகத் தெளிவுபடுத்தவோ, அல்லது மகளுக்கு விஷயத்தை விளங்க வைப்பதிலோ கூட அவர் ஆர்வம் செலுத்தவில்லை. அவருக்கு அவரது வேலை ஆக வேண்டி இருந்தது.

அதைச் சிருஷ்டியும் எதிர்கேள்வி கேட்காமல், அவர் கூறுவதனைத்தையும் அவருக்குப் பணிந்து நின்று செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தார்.

இதெல்லாம் என்னவோ விரும்பாத பயணத்தின் விசித்திர நிகழ்வுகளாய் அவளுக்குத் தோன்றிட, அந்தக் குழப்ப உணர்வை தெளிய வைக்கத் தான் அவளுக்கு யாரும் இல்லை.

இதில் இனி குழம்பினாலும், கேள்வி கேட்டாலுமே அதில் விளையும் பயன் என்பது எதுவும் இல்லை. அப்படித் தன்னுடைய மனநிலையை மதிக்கவும் இங்கு ஆளில்லை என்று இறுதியாக உணர்ந்த சிருஷ்டி, அவர் இட்ட பணியைக் கடனே என்று செயல்படுத்தலானாள்.

ஆனால் அதில் ஒரு சுயநலமும் இருக்கவே செய்தது. இப்படி அவர் விரும்பிய அனைத்தையும் தன்னால் செய்ய முடியும் என்றான பிறகாவது, அவருக்குத் தன் மேல் முழு அன்பு பிறக்குமோ? இப்படிப்பட்ட விலகல் நிலை மாறி, முழு ஓட்டுதல் கிடைக்குமோ? என்றெல்லாம் எண்ணித்தான், அவர் கூறியதெற்கெல்லாம் தலையசைத்தாள் சிருஷ்டி.

ஆனால் தன்னால் அந்த வேலையைச் செய்ய முடியும் என்று அவள் தந்தை கூறிய போது அவள் சுத்தமாக அதை நம்பவில்லை. அப்படியிருந்தாலும் கூட அவரது வார்த்தையை மீறியதாக அவளுக்கு நினைவில்லை.

எனவே, அவர் கூறியது போல ஆழ்மனதில் ‘என்னால் முடியும்’ என்று எண்ணியவாறே நம்பிக்கையுடன் செய்யச் செய்ய ஒரே பேராச்சரியம் தான் பெண்ணுக்கு.

இங்கு மறுபுறத்திலோ அதிரூபனும், வாசுவும் மிகக் கடுமையான போர் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர், அதுவும் யுவா கிரகத்தின் மிக உயர்ந்த பனிமலையில்.

அதிரூபன் தான் யார் என்பதை இன்னமும் வாசுவிடம் வெளிப்படுத்தவில்லை. அது நம்பிக்கையின்மை என்ற அடிப்படையில் அல்ல, இதை எல்லாம் இப்படி ஒரு சாதாரண மனிதனிடம் கூறினால் அவன் நிச்சயமாகத் தன்னை மனநிலை சரியில்லாதவன் என்றே எண்ணுவான் என்று அவன் உணர்ந்திருந்தால்.

மேலும் அதனாலேயே அழிக்கும் சக்திக்கு அதிபதியாக விளங்கும் அதிரூபன், இந்தச் சாதாரணப் போர் பயிற்சியை அனைவரும் போலச் சாதாரணனாகவே செய்து கொண்டிருந்தான். யாரும் சந்தேகப்பட்டு விடாதபடி கவனமாகவும் இருந்தான். ஆனால் உண்மையாகவே ஒன்றை பாராட்டவே வேண்டும் என்றால், அது இந்த வ்ரித்ராவின் மனஉறுதிதான்.

ஏனென்றால் தாவ் கிரகத்திலிருந்து வெளியேறியவன், இப்படி யுவா கிரகத்தை வந்தடைந்து அந்தக் கிரகத்தின் ஆட்சியாளர்களை எப்படியோ கைக்குள் போட்டுக்கொண்டு, அதனை இப்பொழுது எப்படித் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான்.

அவனுக்கு எனத் தனியாக ஒரு படையை அமைத்து அதற்கு எப்பேர்பட்ட கடுமையான பயிற்சிகளை அளித்துக் கொண்டிருக்கிறான். யாருக்கும் சந்தேகம் ஏற்படாதபடி இந்தளவிற்குச் சாமர்த்தியமாகத் தனது ஒவ்வொரு காய்களையும் நகர்த்திக் கொண்டு இருக்கிறான்.

மேலும் இந்தப் பயிற்சியானது, அதிரூபனுக்கு வேண்டுமானால் சாதாரணமான ஒரு பயிற்சியாக இருக்கலாம். ஆனால் யுவா கிரகத்து மனிதர்களைப் பொருத்தவரையில், இது அவர்களது உயிரையே பறித்துவிடும் மிக அசாதாரணமான போர்ப்பயிற்சி தான்.

அதுவும் தினம் தினம் இந்தப் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்குக் காலையில் ஏதோ ஒரு பானம் அருந்த கொடுக்கிறான். அந்தப் பானத்தின் மூலம் இந்த மக்களின் உடல்நிலையில் ஏதோ மாற்றமும், அவர்களின் மனநிலையும் முற்றாக மாறியும் விடுகிறது.

ஏனென்றால் இங்கு இருக்கும் மக்கள் எவரும் சாதாரண மனநிலையில் இருப்பது போலவே தோன்றவில்லை. அனைவரிடமும் இருக்கும் கடவுள் பாதி.. மிருகம் பாதி.. என்ற கூற்று மறைந்து, கடவுள் கரைந்து, மிருகம் எழுகின்றது.

அப்படியான ஒரு போர் பயிற்சியில் தான், ஒருநாள் அவர்கள் எல்லோரும் மாமூத் எனப்படும் பனிப்பிரதேசங்களில் வாழும் அந்தப் பெரிய தந்தங்களை உடைய யானையுடன் தனித்தனியாகப் போர் புரிய வேண்டும் என்ற கட்டளை வந்திருந்தது.

அன்று அவர்களுக்கு வழக்கம்போலக் கொடுக்கப்படும் பானத்தின் அளவும் மும்மடங்காக அளிக்கப்பட்டிருந்தது. அதைக் குடித்த ஒவ்வொருவரும் கண்ணில் வெறியேற, பார்வையில் படும் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தனர்.

அப்படியும் கூட, மனதின் ஆவேசம் தாளாமல், வேறு எதுவும் அடித்து நொறுக்க இன்றிப் போய்விடவே, தங்களுக்குள்ளாகவே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு இருந்தனர்.

அதுவும் மீறி எல்லை தாண்டி உடலெங்கும் கொலை வெறியேறி, தங்களையே தாக்கிக் கொண்டிருந்தனர். ஆனாலும் கூட அவர்களது ஆவேசம் அடங்கியபாடில்லை.

வாசுவும் ஆதியும் இதையெல்லாம் கண்டு அதிர்ந்தாலும், தாங்களும் அவர்களைப் போலவே நடிக்க வேண்டிய ஒரு நிலை. இதில் அங்குப் போர் பயிற்சி செய்து கொண்டிருந்த மற்றொருவன், அந்தப் பானம் குடித்ததில் ஏற்பட்ட ஆவேசத்தில் வாசுவை நோக்கி அவனைத் தாக்கவென்று ஓடி வந்து கொண்டிருந்தான்.

வாசுவும் முடிந்த அளவு அவனைச் சமாளித்து விடலாம் என்று எண்ணி இருந்தாலும், அவன் ஆள் பார்ப்பதற்கு 4 யானைகளைச் சேர்த்ததைப் போல மிகப் பயங்கரமாக 7,8 அடியில் ஏற்கனவே மதம் பிடித்த யானைக்கு மது கொடுத்தது போல, அத்தனை அத்தனை மூர்க்கம் அவன் கண்களிலும், அவன் வேதத்திலும், அவன் உடலிலுமாய்.

இப்படிப்பட்ட அதி பயங்கரமான ஒருவனிடம் வாசு சிக்கினால் அவன் நிலைமை என்னாவது என்று எண்ணி, அதிரூபன் அந்த மாமிச மலையை நோக்கி ஓடினான். இங்கு அந்த மாமிச மலையின் கண்களிலோ வாசு, சாதாரணப் பூச்சியைப் போல் இருந்தான்.

அதைக் கண்ட வாசுவுக்கு மூச்சடைத்து விடும் நிலை. ஏனென்றால் இப்பொழுது இவனிடம் சண்டையிடவில்லை என்றால், மற்றவர் முன் தன் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயம்.

ஒருவேளை சண்டையிட்டால் இத்தனை நாள் எடுத்த முயற்சிகளும் எந்தவித பலனும் அடையாமல் வீணாய் போய், எந்தவித உபயோகமும் இன்றி வீணாய்த் தன் உயிர் போய்விடுமோ என்ற வருத்தம். இவ்விரண்டு நிலையிலும் நின்றிருந்த வாசுவின் பார்வையில், சூழ்ந்திருந்த பனி மலைகளெல்லாம் எல்லாம் பெரும் புயலாய் மாறி சுற்றி, சுழற்றி அடித்து வருவது போல் ஒரு தோற்றம்.

ஒருவேளை பனிப்புயல் தான் வந்துவிட்டதோ என்று அவன் எண்ணி பயப்படும் அந்தக் கணம், அந்தப் பெரும் புயலுக்கு நடுவில் தனிப்பெரும் சண்டமாருதமாய் வந்து கொண்டிருந்தான் அதிரூபன்.

அதுவும் வாசுவை தாக்க ஓடி வரும் அந்த மற்றொருவனை நோக்கி வந்து கொண்டிருந்தான் அவன். சரியாக அதே நேரம் அந்த மற்றொருவனும் வாசுவை நெருங்கி அவனை நோக்கி கைகளை மேலே தூக்கி அவனைத் தாக்க முற்பட்ட அந்த நொடியில், அவன் கன்னத்தில் இடியென இறங்கியது அதிரூபனின் கால்கள்.

அந்த ஒற்றை அடியில் அவன் உயிர் போய், உடலும் பனிப்பொதிக்குள் உறைந்து மறைந்து போனது. அதைக் கண்ட மற்றவர்களும் அதிரூபனிடம் சண்டையிடும் வெறியோடு வர அவர்கள் ஒவ்வொருவரையும் தனது ஒற்றைக் கையால் அடித்துத் துவம்சம் செய்து கொண்டிருந்தான் அவன்.

இறுதியில் அங்கிருந்த அந்தப் பலநூறு மதம் கொண்ட மாமோத் யானைகளும், இவனை நோக்கி, இவனைத் தாக்கி நொறுக்கிவிட, தங்களது அந்த மாபெரும் உருவத்தை மிகவும் சுலபமாகத் தூக்கிக்கொண்டு ஓடி வர, இவனின் அந்த நெருப்புப் பார்வையில் கூர்மை ஏற, கூடவே சினச்சிவப்பும் ஏறியது.

வாசு இதுவரை நடந்த சண்டையைக் கூட ஒரு சிறு கூடப் பிரமிப்புடன் தான் பார்த்துக் கொண்டு, அதிரூபனின் உடல் வலிமையை வியந்து கொண்டிருந்தான்.

ஆனால் இப்பொழுது அந்த மாமோத்கள் அத்தனையும், அதிரூபனே குறியென… அவனைப் பார்த்து சினமேற, அவனைத் தாக்கவெனச் சீறிக்கொண்டு அந்த ஒட்டு மொத்த பனிப்பிரதேசத்தின் முழு நிலமும் அதிர ஓடி வரவும், உண்மையிலேயே வாசுவிற்கு அங்கமெல்லாம் பதறி குலை நடுங்கி விட்டது.

உடனே ஓடிச்சென்று ரூபனை இழுத்துக் கொண்டு ஏதாவது மறைவான இடத்திற்குச் செல்லலாம் என்று எண்ணி அவனது கரம் பற்ற, பற்றிய அவனின் கரத்தை தட்டிவிட்டு, அதிரூபன் அவனைத் திரும்பிப் பார்த்த பார்வையில் முதுகுத்தண்டு சில்லிட்டது வாசுவுக்கு.

வாசு அந்தவொரு பார்வையிலேயே மிரண்டு போய் ஈரெட்டுப் பின்னால் நகர்ந்து விட்டான். அதற்குமேல் அவனை நெருங்க அவனுக்கும் தைரியம் இருக்குமா என்ன வாசுவுக்கு?

ஆனால் அதிரூபனைக் கண்ட அந்த மாமோத்களுக்கு அவனிடம் எந்தவித பயமும் இருப்பதாய் தெரியவில்லை. துளியளவு தயக்கமுமின்றித் தாங்கள் வந்து கொண்டிருந்த வேகமும் சிறிதும் குறையாது, தங்கள் ஒட்டுமொத்த வெறி அனைத்தையும் திரட்டி, தங்கள் ஒரே குறியாய் அதிரூபனை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தன.

இங்கு அதிரூபனின் கண்களில் அவை அவனை நோக்கி வரும் அதிர்வுகளின் சலனம்.. அவன் கண்களில் சிறிதேனும் தெரிய வேண்டுமே. அப்படி எந்த அறிகுறியும் அவனிடம் இல்லை.

அதே கூர்மையான… இரையை நோக்கும் பருந்தின் பார்வையுடன், உடலெங்கும் நாண் பூட்டிய அம்பாய் விறைத்து இருக்க, தனது இரை தன்னை நெருங்கும் தருணத்திற்குக் காத்திருந்தான் .

முதலில் சிறு குன்று அசைந்தாடி வருவது போல அந்த முதல் மாமோத் இவனிடம் வந்தது தான் தாமதம், அடுத்தக் கணம் இவன் தான் நின்று இருக்கும் இடம் மறந்து, சுற்றி இருக்கும் சூழ்நிலை மறந்து, வேறு எதையும் யோசியாது, அனைத்து விதிகளையும் அலட்சியப்படுத்தி… தன் பெருவிரலை தரையில் ஊன்றினான்.

மறுகணம் தனது இரண்டு கைகளும் ஓங்கிக் கொண்டு வானில் பறந்து சட்டெனக் கீழே இறங்கி அந்த யானையின் உச்சந்தலையில் ஒரே அடி. இதோ இப்பொழுது மந்திரம் போட்டது போல அந்த யானை மயங்கி சோர்ந்து அதிரூபனின் காலடியில்.

அந்த ஒற்றை யானை இப்படி அவனது ஒரே அடியில் தொப்பென விழுந்ததும், அப்பட்டமான அதிர்ச்சி அந்த மற்ற யானைகளிடமும். அதிர்ந்து திகைத்து, தாங்கள் அவ்வளவு வேகமெடுத்து, கோபம் கொண்டு அதிரூபனை அழிக்க ஓடி வந்ததெல்லாம் வீண் முயற்சி என்று அவை உணர்ந்த தருணம், கால்கள் சட்டென நிற்க முயல.. அந்தோ பரிதாபம்!! அவை ஓடி வந்த வேகத்துக்கு ஒவ்வொன்றும் சறுக்கிக் கொண்டு போயின. ஆனாலும் அந்த மூர்க்கம் மட்டும் குறையவில்லை.

எனவே மீண்டும் அவை அனைத்தும் இன்னும் வேக வேகமாய் அவனை நோக்கி ஓடிவர, அதே போல் ஒரே அடியில் பற்பல யானைகளுக்குக் கஜேந்திர மோட்சம்!

இப்பொழுதோ மீதம் இருக்கும் சொற்ப யானைகளுக்கும் அவனது அந்த வீரத்திலும், ஆவேசத்திலும், ஒரே பயம் பயமாய் வர, அப்படியே அவனிடம் மண்டியிட்டுப் பின்னால் நகர்ந்து சென்றன.

அதிரூபனின் இத்தகைய அசகாயச் சூரத்தனத்தை மிரண்டு போய்ப் பார்த்துக் கொண்டிருந்தது வாசு மட்டுமல்ல, அவர்களுக்கு மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த அந்த ஆனந்தனும் கூடத்தான். அந்தக் கணம் அதிர்ச்சியில் என்ன செய்வது என்பது கூட மறந்து போய்ப் பிரமிப்புடன் அதிரூபனின் வீரத்தையும், தைரித்தையும், சண்டை செய்த திறமையையும் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால், சற்று நேரம் கழிந்த பின்னரே தான் சுயநினைவை அடைந்தவன், உடனே யகுஷாவிற்கு அதிரூபனைப் பற்றிய தகவல் அனுப்பினான்.

யாகூசாவின் முதன்மை அதிகாரிக்கு இவ்விஷயம் தெரிந்துவிட, இது அவர் மனதிற்கு மிகவும் முக்கியமானதாய் பட, அந்த முதன்மை அதிகாரி மகிந்தனிடம் இந்தத் தகவலை பகிர்ந்தான். இதனை அறிந்த மகிந்தனிடம் அப்பிக்கொண்ட பேரதிர்ச்சி.

“அது யாரு? சரி அது யாரா இருந்தாலும் நான் எவ்வளவு சீக்கிரம் உங்களால முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் நான் உடனடியா அவனைப் பார்க்கணும்” எனக் கர்ஜித்தான்.

(தொடரும் – புதன்தோறும்) 

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!