in

காக்க! காக்க! ❤ (பகுதி 2) – ✍ விபா விஷா, அமெரிக்கா

காக்க! காக்க! ❤ (பகுதி 2)

ஜூன் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

வியாழன் உறங்கி வெள்ளி முளைத்துக் கொண்டிருக்கும் விடியற்காலை நேரம். மேகப்பொதிகளெல்லாம் பனிமழையாய் புவியின் மீது கொட்டிக் கொண்டிருந்த வேளை. ஆளரவமற்ற அடர்ந்த வனத்தில் அந்தப் பனியிலும் கூடப் பல்வகை மலர்கள் மனதைக் கிறங்கடிக்கும் மணத்துடன் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன.

அந்த மலர்களுள் பேரெழில் வாய்ந்த மலரெனப், பூவை அவள் பூக்கொய்து கொண்டிருக்க, அவள் முதுகுப்புறம் நோக்கி வந்தான் அவன். அவளருகே வந்தவன் மெல்ல அவளது புறங்கைகளில் தன் விரல்களால் கோலம் போட்டவாறே தன் கரங்களை மெல்ல மெல்ல மேலே கொண்டு வந்து அவளது தோளைப் பற்றித் திருப்பினான்.

கண்களெல்லாம் காதல் கசிந்துருக அவனை நோக்கியவள்… மனமெல்லாம் அவன் வரவில் நிறைந்து விட, இதழில் மகிழ்ச்சியும், மகிழ்ச்சியின் நிறைவாய் அழுகையும் உடன் சேர, “என்னைத் தேடி வர இவ்வளவு நாட்கள் ஆகிடுச்சா?” என்று கேட்டாள்.

அவளது கேள்விக்குத் தன் மென்சிரிப்பையே பதிலாக அளித்தவன், அவள் விழியோடு விழி சேர்த்து இதழோடு இதழ் கலந்தான்.

திடீரென மிக அருகில் கேட்ட பேரிரைச்சலால், அடித்துப் பிடித்து எழுந்தவள், கை கால்களெல்லாம் நடுநடுங்க உடலெல்லாம் வியர்வையில் நனைந்திருந்தது.

அலறிக் கொண்டிருந்த தனது கைபேசியின் அலாரத்தை அணைத்தவள், நடந்ததெல்லாம் கனவென்று உணரவே வெகுநேரம் ஆனது.

இரு உள்ளங்கைகளையும் பரபரவெனத் தேய்த்துக் கண்களில் ஒற்றிக் கொண்டவள் அந்தக் கனவை மறந்துவிடப் பெரும் பிரயாசைப்பட்டாள். ஆனால் அவன் அருகில் நெருங்கிய பொழுது அவள் உணர்ந்த அவனது உடலின் சுகந்தம் இப்பொழுதும் தன் மேனியெங்கும் படர்ந்திருப்பதைப் போல இருந்திடவே, விருட்டென எழுந்து குளியலறை சென்று முகம் கழுவிவிட்டு பால்கனிக்கு சென்றாள்.

அங்குப் போய்ப் பார்த்தால், அவள் கனவில் கண்டது போலவே தன் வீட்டுத் தோட்டம் முழுதும் மெல்ல பனி பெய்து கொண்டிருக்க, வானை நோக்கியவளின் கண்களில் விடிவெள்ளி தெரிந்தது. மனதிற்குள் ஏதோ பிசைய, தனது அறையை விட்டே வெளியே வந்தவள், அங்கே தன் தந்தை எங்கோ வெளியூர் செல்வது போலச் சிறுபெட்டியுடன் வரவும் குழப்பத்துடன் வினவினாள்.

“என்னப்பா? இந்நேரத்துல எங்க கிளம்பிட்டீங்க?” எனவும், அவள் தந்தையோ, “என்னம்மா? நான் வளநாடு போறதே மறந்துடுச்சா?” என்று வினவினார்.

“ஹோ ஆமால்ல, நீங்க வளநாடு போறீங்கல்ல? ஞாபகமே இல்ல” என்று அவள் திணறினாள்.

அதற்கு அவரோ, “சரியா போச்சு போ… உனக்கு நான் வெளில போறேன்றதே மறந்துடுச்சா? நான் யாருன்னாவது ஞாபகம் இருக்கா? நான் உன்னோட அப்பா மகிந்தன். நீ என் பொண்ணு சிருஷ்டி, நாம இருக்கறது யுவா கிரகத்துல, யகுசான்ற நாட்டுல. நான் இப்போ கிளம்பறது வளநாட்டுக்கு. நீ இவ்வளவு காலையில எழுந்து வரவும் எப்பவும் போல என்ன சென்ட் ஆப் பண்றதுக்குத் தான் வரன்னு நினச்சேன். ஆனா நீ என்னடான்னா…” என்று அவர் சலித்துக் கொள்ளவும்

“சாரிப்பா… அது வந்து எனக்கு ஏதோ கெட்ட கனவு வந்துச்சா, அது தான் ஒன்னும் புரியல. உங்கள வழி அனுப்பறதுக்குத் தான் நான் இந்த டைமுக்கு அலாரம் வச்சேன். ஆனா உங்களுக்குத் தான் இந்தக் கொஞ்ச நாட்களா என்னோட நிலைமை தெரியுமில்லையாப்பா… வெரி சாரி…” என்கவும், சமாதானமான மகிந்தன் அவளிடமிருந்து விடைபெற்று கிளம்பினார்.

என்னதான் அது இதென்று கூறி மகிந்தனைச் சமாதானப்படுத்தினாலும், சிருஷ்டியின் மனம் ஏதோ புரியாத உணர்வுகளில் குழம்பத்தான் செய்தது.

தாவ் கிரகத்தில்…

வெளிப்படையாக எதுவும் காட்டிக் கொள்ளாவிட்டாலும் மனதினுள் பெரும்பாரத்துடன் தான் யுவா கிரகத்திற்குச் செல்ல அதிரூபன் முடிவெடுத்திருந்தான்.

‘அங்குச் சென்று சிருஷ்டியை எவ்வாறு கண்டறிவது? அவள் நிலைமை அங்கு எப்படி இருக்குமோ? தான் யுவாவிற்குச் சென்றிருக்கும் வேளையில் தாவ் கிரகத்தின் பாதுகாப்பு, வெளி கிரகங்களின் உறவு, இந்த மக்களின் நிலை, இவையெல்லாம் எப்படி இருக்குமோ?’ என்று மனதோடு எண்ணிக்கொண்டு அந்த ஐயப்பாடுகளுக்கான தீர்வுகளையும் கண்டறிந்து கொண்டிருந்தான்.

அந்த வேளையில் தான் அங்கு வந்தார் முல்லை நிலத் தலைவர் சில்வானஸ்.

“என்ன ரூபா… ஏதோ பலத்த சிந்தனையில் இருக்கப் போலிருக்கு?” என்று கேட்டவாறே அவன் முன் வந்தமர்ந்தார்.

ஆனால் அவர் கேட்ட கேள்விக்கு என்ன? அவரது வருகையையே அசட்டை செய்தவனாக அதிரூபன் தன்போக்கில் தனது வேலையைச் செய்து கொண்டிருந்தான்.

அதைக் கண்டு சினத்தால் விழியிரண்டும் சிவக்க, “இந்த அலட்சியம் உனக்கு நல்லதல்ல அதிரூபா, என்ன அலட்சியப்படுத்தினா நீ யுவாக்கே போக முடியாது தெரியுமில்ல?” என்று கூறவும்

தலை நிமிர்ந்து அவரை நோக்கியவன், “நான் சிருஷ்டியோட நிலைமை அங்க எப்படி இருக்குன்னு தெரிஞ்சதுக்கு அப்பறம், யுவா கிரகத்தையும் ஆபத்துல இருந்து மீட்டு அதன் பிறகு தான் இங்க திரும்பி வருவேன். ஆனா அதுக்கு நான் உங்க உதவியால தான் என்னால புழு துளைக்குள்ள (WORM HOLE) நுழைய முடியும்.

(புழுத்துளை (Worm Hole) என்பது வான்வெளியின் குறிப்பிட்ட இரு முனைகளை ஒரு குழாய் மூலம் இணைப்பதாகும். அதாவது ஒரு காகிதத்தின் ஒரு முனையை “A” எனவும், மற்றொரு முனையை “B” எனவும் கொண்டால், அந்தக் காகிதத்தை இரண்டாக மடித்து இருமுனைகளையும் ஒரு குழாயின் மூலம் இணைப்பதாகும். அதன் வழியே விரைவாகப் பிரபஞ்சத்தின் ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பயணிக்க இயலும்)

நான் அப்படி அங்க நுழைஞ்சு யுவா கிரகத்தை அடைய நீங்க உதவ மாட்டீங்க? அப்படித்தான? உங்களால அது மட்டும் தான முடியும்? நான் யுவா கிரகத்துக்குப் போகலேன்னா, எப்பேற்பட்ட மோசமான எல்லைக்கும் என்னால போகமுடியும். காட்டவா?? நான் காட்டவா?” என்று மிகுந்த ஆவேசத்துடன் அதிரூபன் கேட்கவும், இருவரும் சண்டைக் கோழிகளென ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டனர்.

சில நிமிடங்கள் கழிந்த பின்பு, சற்று நிதானமடைந்த சில்வானஸ், “இங்க பாரு ரூபா, நான் முல்லை நிலத்தோட தலைவனா உன்கிட்டப் பேசறேன்னு நினைக்கறயா?” என்று வினவவும்

அதிரூபனோ, “நீங்க முல்லை நிலத்தோட தலைவரா பேசி இருந்தா கூட எனக்குக் கவலை இல்ல. ஆனா நீங்க என்னோட அப்பாவா மட்டுமே பேசறீங்க” என்று கூறினான்.

அதற்குச் சில்வானசோ, “இல்லப்பா… எனக்கும் சிருஷ்டியை அங்க அனுப்பறதுக்கு விருப்பம் இல்லாமத் தான் இருந்துச்சு. ஆனா சிருஷ்டியே அங்க போறதுல உறுதியா இருக்கவும் என்னால எதுவும் செய்ய முடியல. அதே மாதிரி நீயும் யுவாக்கு போகறதுல உறுதியா இருக்க. சரி போயிட்டு வா… ஆனா இங்க உன்னோட மக்கள் உன் வருகைக்காகக் காத்திருப்பாங்கன்றதையும் மறந்துடாத.

அது மட்டும் இல்லாம, உன்னோட சக்திகளை நீ யுவாக்குப் போனா தேவை இல்லாம உபயோகிக்கக் கூடாது. அது எவ்வளவு பெரிய மோசமான விளைவுகளை உருவாக்கும்னு உனக்குத் தெரியும். அங்க அந்தக் கிரகத்தைக் காப்பாத்த தான் நீ போற, அழிக்கறதுக்காக இல்ல. இதெல்லாம் உனக்கே தெரியும். ஆனா உன் தலைவர்களில் ஒருத்தனா இதையெல்லாம் நான் உனக்குச் சொல்றது எனக்கு அவசியம்ன்னு படுது” என்று மட்டும் கூறி முடித்தார்.

அவர் கூறியதைக் கேட்ட அதிரூபன், சரி எனது தலையசைத்து அவரது கூற்றுக்கு உடன்பட்டான். பின்பு சிறிதுத் தொண்டையைச் செருமிக்கொண்டவன், “நான் போய் நம்ம உலகத்தை ஒருமுறை சுத்தி பார்த்துட்டு வரேன். எல்லா இடத்துலயும் என்னென்ன தேவைன்னு பார்க்கணும்” என்று கூறியவன், விருட்டெனக் கிளம்பிவிட்டான். அவனைக் கவலை தோய்ந்த விழிகளால் பார்த்துக் கொண்டிருந்தார் சில்வானஸ்.

அதிரூபனோ, தான் யுவாவிற்குச் சென்ற பின்பு மீண்டும் எப்பொழுதுத் தன் உலகிற்கு வருவோம் எனது தெரியாததால், ஆசை தீரத் தன் கண்களில் தனது உலகினை நிரப்பிக் கொள்ள எண்ணினான்.

மாதம் மும்மாரி அல்ல, வருடம் முழுதும் மெல்லிய சாரலுடன் மழை பெய்து கொண்டிருக்கும் உலகமது. குறிஞ்சி மலை எங்கும் பசுமைப் போர்வை போர்த்தி அதனிடையே வெள்ளிக் கம்பிகளால் சரிகை இழைத்தது போன்ற சிறுசிறு நீரோடைகள் நதியென வளைந்திட, அவை யாவும் சூரிய ஒளி கூடப் புகமுடியாத அளவிற்கு நெருக்கமாய் வானோங்கி வளர்ந்திருக்கும் முல்லை வன மரங்களுள் நுழைந்து ரகசியம் பேசி, பருவக் கன்னியெனத் தரை தொட்டு வயல் வரப்பினூடே புகுந்து மருத நில மண்ணுக்கு கிச்சுக் கிச்சு மூட்டி, சிறு கர்வப் பார்வையுடன் கானலாய்ப் பாலை நிலத்திற்குக் காட்சியளித்து, பெரும் ஆசைக் கொண்ட காதலியாய் ஆழியில் சங்கமித்து விடுகிறது.

அந்த அற்புத உலகினை, மனதால் கூடச் சிறு மாசில்லாத அம்மக்களை, மூப்புப் பிணி என எதுவும் இல்லாத வரம் கொண்ட இம்மண்ணை விட்டுப் பிரிவது, தற்காலிகமாக என்றாலும் மனத்திற்குப் பாரமாகவே இருந்தது.

ஆனால் தான் செல்லப்போவது சிருஷ்டிக்காக… காணுமிடந்தோறும் கண் முன் தோன்றிக் காதலால் உயிர் பறிக்கும் அவளுக்காக என்று எண்ணிடுகையில், இந்த நிமிடமே அவள் இருக்குமிடம் நோக்கி பறந்து விட மனம் துடித்தது. இருப்பினும் அந்த மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு மீண்டும் அனைத்துத் தலைவர்களும் இருக்குமிடம் தேடிச் சென்றான்.

அங்கு அனைவரும் சிறு பதட்டத்துடனும், அதிரூபன் யுவாவிற்குச் செல்லப் போவதால் கவலையுடனும் இருந்தனர். தனது வேகநடையுடன் எப்பொழுதும் போல அங்கு வந்தவன், அனைவரை பார்த்தும் சிறுதலையசைப்புடன் அவர்கள் முன்பு நின்றான்.

அப்பொழுது நெய்தல் நிலத் தலைவியான அம்பரி, அதிரூபன் முன்பு வந்து, “அதிரூபா… உன்னுடைய பொறுப்புகள் எல்லாத்தையும் நாங்க பகிர்ந்து ஏத்துக்கறோம். அதுமட்டுமில்லாம உன்னோட மொத்தக் குழுவும் எங்களுக்குத் துணையா இருக்கும். அதற்கான உன்னோட ஏற்பாடுகள் பற்றி எல்லாம் எங்களுக்கும் தெரிஞ்சு தான் இருக்கு. அதனால நீ நாங்க எல்லாமே பார்த்துப்போன்னு ரொம்ப அலட்சியமா இருக்காத.

உனக்கு நாங்க ஆறு மாதங்கள் கெடு கொடுக்கறோம். அதுக்குள்ள நீ சிருஷ்டியை அங்கிருந்து மீட்டுட்டு, அதுக்கு மேலயும் யுவாவ காப்பாத்த முடிஞ்சா காப்பாத்திட்டு இங்க வந்தாகணும். இல்ல அடுத்ததா உன்னுடைய இடத்துக்கு நாங்க வேற யாரையாவது நியமிக்க வேண்டியதா இருக்கும். அதற்கான வேலைகள், நீ தாவ் உலகத்த விட்டுக் கிளம்பின அந்த நொடியிலே இருந்து துவங்க ஆரம்பிச்சுடும். இதுல உனக்கு மாற்றுக் கருத்து எதுவும் இல்லன்னு நினைக்கறேன். இறுதியா, நீயும் சிருஷ்டியும் அந்த யுவா கிரகத்திலிருந்து எந்தவொரு பொருளையும் இங்க எடுத்து வரக்கூடாது” என்று கூறி முடிக்கவும்

அவரை நேருக்கு நேர் நோக்கியவன், “இதுல எனக்கு முழுச் சம்மதம் தான்” என்று இரும்பாய் இறுகியக் குரலில் அவன் கூறவும், அம்பரியோ “நான் யாருக்கும் எதிரி இல்ல, எனக்கு நம்ம உலகம் எப்பவும் மகிழ்ச்சியா இருக்கணும். அதன் ஒரு காரணமாகத் தான் நீ யுவாக்கு உதவி செய்யப் போற. எனக்குப் புரியுது. அதே மாதிரி என்னுடைய கட்டுப்பாடுகளும் உனக்குப் புரியும்.” என்று அவர் கூறவும்

அவர் அருகே சென்ற அதிரூபன், சிறு புன்னகையுடன், “நான் போயிட்டு கூடிய சீக்கிரம் வரேன் ம்மா, உங்க மருமகளோட” என்று கூறினான்.

(தொடரும் – புதன்தோறும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வறுமையின்  அடி  வலிது (சிறுகதை) – ✍ சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு

    முற்றும் இழந்த பாவி – கற்பனையில் உண்மைகள் (சிறுகதை) – ✍ மு.தீன், கோவை