sahanamag.com
சிறுகதைகள்

முற்றும் இழந்த பாவி – கற்பனையில் உண்மைகள் (சிறுகதை) – ✍ மு.தீன், கோவை

ஜூலை 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ன் குடும்பத்தையும், ஊரையும் நீண்ட நாட்களுக்குப் பிறகு காணச் செல்வதால் ஆவலானப் பரபரப்புடன் தயாராகிக் கொண்டிருந்தான் ராஜதுரை.

ராஜதுரை செத்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது. ஆம் இன்று அவனது நினைவு நாள்.

அவன் இப்போது இருப்பது இறந்தவர்கள் இருக்கும் மேலுலகத்தில். அதிலும் அவன் இருப்பது மனிதத் தன்மையற்ற, மனசாட்சி இல்லாமல் வாழ்ந்து செத்தவர்களில் ஒருவனாக. புகை மண்டலம் சூழ்ந்த, கொடியவர்களும் கயவர்களும் மூச்சற்று வாழும் உலகம் அது.

அவன் இருக்கும் மேலுலகத்தின் விதிப்படி இறந்தவர்கள் அவர்களது நினைவு நாளன்று, அவர்களது குடும்பத்தினரை காணச் செல்லலாம். கூடவேக் காவலர்கள் வருவார்கள். ஆனால் மனித உலகத்தில் வாழும் மற்றவர்கள் கண்களுக்கு இவர்கள் தெரிய மாட்டார்கள். அந்த ஒரு நாளுக்காக இறந்தவர்கள் எப்போதும் காத்து இருப்பர்.

உணர்ச்சிப்பெருக்கானப் பலச் சிந்தனைகளுடன், வினாக்களுடன் உத்தரவுக்குக் காத்து இருந்தான் ராஜதுரை.

“குறித்த நேரத்தில் திரும்பி விடு! இல்லையெனில் கடும் தண்டனையுடனான விளைவைச் சந்திக்க நேரிடும்!” என்ற மேலிடக் கட்டளையுடன் அனுமதிக்  கிடைத்தது. பயங்கர உருவம் கொண்ட இருகாவலர்களுடன் அவன் விடைதேடும் பயணம் ஆரம்பமானது.

“ஊர் எப்படிப்பட்ட மாற்றத்தை அடைந்து  இருக்கும்? தாயும், மனைவியும் எப்படி ஆறுதல் அடைந்திருப்பார்கள்? குழந்தைக்கு இரண்டரை வயதாயிருக்குமே?!!” என ஏகப்பட்ட கேள்விகள் அவனுக்குள்.

உயிருடன் இருந்த வாழ்க்கையை, உயிரற்ற பயணத்தில் அவன் நினைக்க வேண்டியதாய் இருந்தது.

தன் வாழ்ந்த  நாட்களை, நினைவுகளை அசைப் போட்டுக் கொண்டேச் சென்றான். எதைப் பற்றியும் சிந்திக்காமல் வாழ்ந்து மறைந்த பயனற்ற, அபத்தமான நாட்கள் அவை.

சுமார் நானூத்தி சொச்சம் பேர் வாழும் நெடுவனூர் கிராமத்தில் நடுத்தர வசதியைக் கொண்டு வாழ்ந்த  ராஜதுரை தடித்த, வட்ட முகம் கொண்ட இருபத்தி ஒன்பது வயது மானிடன்.

அவன் தன் தாய், மனைவி ஈஸ்வரி மற்றும் குழந்தையுடன் வாழ்ந்தான். “வாழ்ந்தானா??? இல்லை!இல்லை!!! அவன் அவனது அழிவுக்காக வாழ்ந்து, தன் குடும்பத்தையும் அழித்தான்!” என்று தான் சொல்ல வேண்டும்.

அவனுக்கு இல்லாத கெட்டப் பழக்கமே இல்லை. தினசரி தன் நண்பன் சுதாகருடன் சேர்ந்து கொண்டு குடி, புகை, கஞ்சா என்று போதையுடன் பொழுதைக் கழிப்பான். வீட்டில் இருந்து கிளம்பும் போதும் சரி, இரவு நெடுநேரம் கழித்து வீட்டிற்குள் வரும் போதும் சரி, அவன் நிதானமாக இருந்ததே இல்லை. வீட்டில் இருப்பவர்களையும் நிம்மதியாக இருக்க விட்டதே இல்லை.

“இது ஏஏன்ன் அப்பன் பணம்! என்னோட சந்தோசத்தில புத்தி சொல்லாத! கேள்வி கேக்க யாருக்கும் உரிமை இல்லை!! போயுடு!” என்றுத் தன் தாயையேக் கை நீட்டிய கொடும்பாவி அவன்.

மனைவி ஈஸ்வரியை தினமும் அடித்துத் துன்புறுத்தி, அவமானப்படுத்துவதே அவனது போதையின் பணி. குழந்தையிடமும் அவன் பெருசாக பாசம் காட்டியது இல்லை. குடித்து விட்டு இங்கிதமே இல்லாமல் குழந்தையின் பக்கத்தில் போய் படுப்பான்.

ஈஸ்வரியின் பெற்றோரோ, ”அவனை பிரிஞ்சு வந்திடு! உன்ன கொல்றதுக்குக் கூட அவன் தயங்க மாட்டான்! வந்துருமா!” என்று ஓயாமல் அழைத்தனர்.

“உங்க அப்பன் யாருடி என்ன கேக்கறதுக்கு? உந்தம்பி எல்லாம் பொடிப்பய! அவன்ல்லாம் கை நீட்டி பேசுறான்!” எனப் பல  சிகரெட் சூடுகளை அவள் உடம்பு அனுபவித்தது.

பல இன்னல்கள் அவன் கொடுத்தும் தன் ஒரு வயது பிஞ்சுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டாள் ஈஸ்வரி.

‘என்றாவது ஒருநாள் அவன் மனம் மாறி,நல்ல மனிதனாக வாழ்ந்திடுவான்!’ என்ற நம்பிக்கை மட்டும் அவன் தாயிடமும், மனைவியிடமும் இருந்தது.

அவர்களது நம்பிக்கையை பொய்த்துப் போகச் செய்ய நாட்கள் அதிக காலம் எடுத்துக் கொள்ளவில்லை.

வாழ்க்கையை வாழத் தெரியாமல்,கு டும்பத்தைப் பற்றிக்  கவலைப்படாமல், எதை அவன் சந்தோசமாக கருதினானோ, அதுவே அவனது உயிரை எடுத்து, உயிரற்ற இந்நெடும்பயணத்தை மேற்கொள்ள வைத்துவிட்டது.

தன் அலங்கோல வாழ்க்கை நடத்தைகளை நினைத்துக் கொண்டே ஊரை அடைந்தான், பிணமான ராஜதுரை. நாட்கள் பல ஓடியதால், வளர்த்த ஊர் அவனுக்கு சற்று வித்தியாசமாகத் தெரிந்தது. அவன் உயிரற்ற விழிகள் வீட்டை நோக்கி பயணிப்பதில் கவனம் கொண்டது.

ராஜதுரை தன் மாமாவின் வீட்டைக் கடந்துச் செல்ல வேண்டி இருந்தது. அவன் மாமா வேலுச்சாமி ஒரு அரசுப்பணியாளர். அவரும் அவனும் ரொம்ப தோஸ்த்.

“எம்ம்மாமா எனக்காக என்ன வேணாலும் செய்வாருடா!” என்று ராஜதுரை தன் நண்பனிடம் எப்போதும் பெருமையாகப் பேசுவதுண்டு. புதுப்பிக்கப்பட்டத் தன் மாமாவின் வீட்டை  ஆச்சரியத்துடன் பார்த்தவாறு நிழலற்ற அவன் கால்கள் நின்றது.

பெரிய துண்டைப் போர்த்திக் கொண்டு, தன் சகாக்களுடன் வெடித்தச் சிரிப்போடு வீட்டிலிருந்து வெளியே வந்தார் அவன் மாமா வேலுச்சாமி.

சற்றே ஏமாற்றத்துடன், “செத்துப் போன நம்ம உடம்ப பார்த்து மனுஷன் கதறித் துடிச்சாரே!! அவ்ளோ அன்பக் கொட்டினாரே! என் நினைப்ப இந்த நாள்ல எப்படி மறந்தார்???” என யோசித்துக் கொண்டே முனுமுனுத்தான் ராஜதுரை.

மரணத்திற்குப் பிறகு மனிதனின் நிலையைத் தன் மாமாவின் மூலம் உணர்ந்து கொண்டான். குருதியற்ற ராஜதுரை தன் வீட்டை நோக்கி மெல்ல நகர்ந்தான்.

தான் பார்த்துப் பழகிய முகங்கள் தன்னைக் கடந்துச் செல்வதை ஆச்சரியத்துடன் பார்த்த அவன் கண்கள், தீடீரென இமைக்காமல் பார்த்தது. தன் குழந்தை  ஒரு வீட்டின் வாசலில் அமர்ந்து இருப்பதைக் கண்டு அருகில் சென்றான்.

தன் மகனின் முகம் மாறி இருப்பதை மலைப்புடன் பார்த்தான்.

‘நம்ம புள்ள ஏன் இங்க உக்காந்து இருக்கான்? முகமெல்லாம் ஏக்கம் நிறைஞ்சு இருக்குதே!” எனத் தன் வாரிசை மெய்சிலிர்க்கப்  பார்த்துக் கொண்டிருந்த போது, நல்ல வாட்டசாட்டமாக, சுருள் முடியுடன் மதிக்கத்தக்க ஒரு ஆசாமி மோட்டார் சைக்கிளில் வீட்டின் முன் இறங்கினான்.

வாயில் ஏதோ முனுமுனுத்துக்கொண்டே குழந்தையை முறைத்துப் பார்த்தான். ராஜதுரைக்கு ஒன்றும் புரியவில்லை.

‘இவன் எதுக்கு எம்புள்ளைய வெறிச்சுப் பாக்குறான்??!!’ எனத் திகைத்தான் ராஜதுரை.

மோட்டர் சைக்கிளில் இருந்து ஒரு பையை எடுத்த அந்த ஆசாமி, “ஈஸ்வரி! ஈஸ்வரி!” என்றுக் கத்தினான்.

‘அடுத்து என்ன???’ என்ற எதிர்ப்பார்ப்பும், பதைபதைப்பும் மேலோங்கியது ராஜதுரையிடம். நெற்றித்  திலகமிட்டு, மெல்ல நடந்தவாறு  ஈஸ்வரி வெளியே வந்தாள். ஒரு வருடத்திற்குப் பிறகு மனைவி ஈஸ்வரியைப் பார்த்த, அந்தக்கணமே அதிர்ந்து போனான் ராஜதுரை.

அவள் வயிறு சற்று பெரிதாக இருந்தது. அவள் கர்ப்பமாக இருப்பது போல் தெரிந்ததால் அவன் சற்று ஆடிப் போனான். கழுத்தில் தாலிக்கொடி இருந்தது.

“ஏங்க இவ்வளவு லேட்? இப்ப  வந்திங்கன்னா! எப்பப்போய் டாக்டர பாக்கறது?” எனக் கொஞ்சிக் கோபப்பட்டாள் ஈஸ்வரி.

“இல்ல! ஈஸ்வரி! சின்ன வேல… அதான்! ஒன்னும் பிரச்சனை இல்ல! இப்பவே கிளம்பி போலாம்!” என அவள்  கன்னத்தைக் கிள்ளினான் அந்த மோட்டார் சைக்கிள் ஆசாமி.

நடக்கும் நிகழ்வுகள் உயிரற்ற ராஜதுரைக்கு அதிர்ச்சியான நிஜத்தைப் புரிய வைத்தது. மோட்டார் சைக்கிளில் இறங்கிய அந்த ஆசாமியைத் தான் ஈஸ்வரித் தன்  கணவனாக ஏற்று, மறுமணம் செய்துள்ளாள். அவனது குழந்தையையும் வயிற்றில் சுமக்கிறாள் என்பதுதான் அந்த நிஜம். நடக்கும் உண்மை ராஜதுரையை இறந்தப் பின்னரும் வலியோடுக் கொன்றது.

‘இந்தக் காட்சியைக் காணவா வந்தோம்??!!’ என்று உள்ளூறக் குமுறினான் முதல் கணவன் ராஜதுரை. 

சில நிமிடக் கண்ணீருக்குப் பின், நிதர்சனத்தை யோசித்துப் பார்த்தான் ராஜதுரை.

‘அவள் செய்ததும் தவறில்லையே! தினமும் அவளுக்குத் துன்பத்தையும், அழுகையையும் தானே பரிசாகக் கொடுத்தோம்! அவள் பக்கம் மட்டும் தானே நியாயம் உள்ளது! இனியாவது அவள் இன்பத்தை மட்டும் பெறட்டும்! அவள் எதிர்காலத்திற்கு இனி நம்மால் ஒன்றும் பதில் தர இயலாதே?!!’ எனத் தனக்குத் தானே ஆறுதல் கூறித் தேற்றிக் கொண்டான்.

ஈஸ்வரியின் புதுக்கணவன் வண்டியில் இருந்து ஒரு கவரை எடுத்தான். அதிலிருந்து கீ கொடுத்தாள் சப்தமிட்டு ஓடும் பொம்மையை எடுத்துக் காண்பித்தான்.

அவள் அதை வாங்கிக் கொண்டு,  ”இப்பவே எதுக்குங்க இது? நம்ம கொழந்த இன்னும் பொறக்கவே இல்லை! அது பொறந்து கொஞ்ச நாள் ஆனப் பிறகுதான் இத புரிஞ்சே விளையாடும்!” என்றாள் ஈஸ்வரி.

“எம்புள்ள புத்திசாலி! பொறந்த உடனேயே இதை எல்லாம் விளையாடிடும்! பாரு!” என ஆணித்தரமாக அடித்து, பிறக்காத பிள்ளையின்  பெருமை பேசினான் அவள் புதுக்கணவன்.

“சொன்னாக் கேக்கவே மாட்டீங்களே!!” என சிரித்துக் கொண்டே ஈஸ்வரி அதனை வாங்கித் திரும்பிய போது, அவளது முதல் குழந்தை அந்தப் பொம்மையை வெறித்துப் பார்த்தது.

ராஜதுரைக்கு பிறந்து இருந்தாலும் அதுதானே அவளுக்கு முதல் குழந்தை. தூணைப் பிடித்தவாறே குனிந்த ஈஸ்வரி “அப்பா, உனக்காக வாங்கிட்டு வந்திருக்கிறார்டா செல்லம்!!”” என்று குழந்தையிடம் கொடுத்து விட்டு, ”நா போய் ரெடி ஆகுறங்க! ஆஸ்பிடல் போயிட்டு  வந்திரலாம்!” எனத் தயாராகச் சென்றாள்.

தான் உயிரோடு இருந்தவரைத்  தன் குழந்தையைக் கவனிக்காததையும், பிறக்காத குழந்தை மேல் அவன் வைத்த பாசத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தான் ராஜதுரை.

‘நம் குழந்தைக்கு வாங்கி வந்ததை எவனோ ஒருவனின் குழந்தை விளையாடுகிறதே!!’ என்ற மனக்கோபம் கொண்ட அவள் புதுக்கணவன், குழந்தையின் தலையில் தட்டி, பொம்மையை வெடுக்கென பிடுங்கி உள்ளேச் சென்றான். தடுமாறியக் குழந்தை சோகமாக, அழுகையை அமுக்கி விம்மியது.

‘தன் கண் முன்னே தன் குழந்தையை ஒருவன் அடித்தும், தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே!’ எனத் துடித்துப் போனான் ராஜதுரை.

‘நாம ஒழுங்கா இருந்திருந்தா? நம்மக் கொழந்த இந்தக் கொடுமையையெல்லாம் அனுபவிச்சுருக்காதே!’ எனத் தன் தவறை நினைத்து,  தன்னைத்  தானே வெறுத்துக் கொண்டான். குழந்தையின் முகத்தில் தென்பட்ட பரிதவிப்பைக் கண்டு உடைந்து போனான்.            

உடன் வந்த காவலர், “ஏய்! உன் நேரம் நெருங்குகிறது ! கிளம்பு!” என்றார். அது அவன் காதில் செல்லவில்லை. தன் மகனின் எதிர்காலத்தை பற்றியச் சிந்தனையில் மூழ்கிப் போனான் ராஜதுரை.

இன்னொரு கோபக்காரக் காவலர் “டேய்! சொன்னா  கேக்க மாட்டியா? உன் நேரம் முடிஞ்சது! போதும் கிளம்பு!” என்றார் ஆத்திரத்துடன்.

ராஜதுரை தன் சிந்தனையை உடைத்து அவர்கள் காலில் விழுந்து, “ஐயா! இன்னும் ஒருத்தர  மட்டும் பாக்க விடுங்க???!!!” எனக் கெஞ்சினான்.

“அதெல்லாம் முடியாது! உன் நேரம் முடிஞ்சது!” என்று  உடம்பை உலுக்கினார் கோபக்காரக் காவலர்.

“ஐயா! என் அம்மாவ மட்டும் பாக்க விடுங்க! என் தாய் எப்படி இருக்கார்னு  மட்டும் பாத்துக்குறேன்!” என்றுக் கெஞ்சி விழுந்தான் ராஜதுரை.

முறைத்தப் பார்வையுடன் யோசித்தக் காவலர் ஒருவர் ”ம்ம்ம்! அதிக நேரம் எடுத்துக் கொள்ளாதே! போகலாம்! போ!” என்று முதுகைத் தட்டிப் போக வைத்தார். தன் குழந்தையைப் பார்த்தவாறே நகர்ந்தான் ராஜதுரை.

தன் ஊர்த்தெருக்களின் மாற்றத்தை அவன் கண்கள் காண மறுத்தது. தான் வாழ்ந்து, மரணித்த வீட்டை அடைந்தான் ராஜதுரை. மெதுவாக அவன் கண்கள் தன் தாயைத் தேடியது. உள்ளே அவன் படத்திற்கு புது மாலை போட்டு, திலகம் இடப்பட்டிருந்தது.

அவன் கண்கள் அழுகையைத் தேக்கி வைத்தது. தன் தாயைக் காணவில்லை என்று ஏங்கியவாறே மேலேச்  சென்றான்.

அங்கே கிழிந்த, பழைய புடவையுடன் அவனது தாய், ”க்கா! க்கா!!” என்று மெல்லியக்குரலுடன் காகத்தை அழைத்துக் கொண்டிருந்தாள். அவனுக்குப் பிடித்த உணவுப் பண்டங்கள் ஒரு இலையில் இருந்தன. நீண்ட நேரம் அழுதுள்ளாள் என அவன் தாயின் கண்கள் சொன்னது.

இந்த நாளில் தன்னை நினைவில் வைத்திருந்த ஒரே ஜீவனுக்கு, தான் செய்தக் கொடுமைகளை நினைத்தான், ஒரே மகனான ராஜதுரை.

”உயிரோடு இருந்தவரைக்கும் உனக்கு ஒரு சந்தோசத்தையும் கொடுக்கலையே! என் அம்ம்மா!” என்று தவறான நேரத்தில் புரிந்துக் கத்தினான்.

தாய்க்காக மனமுருகியதோடு, தன் கையறு நிலையை இப்போது விளக்க முடியவில்லையே எனப் பல்லை கடித்துக் கதறினான் ராஜதுரை. வாழ்ந்தவரை தன்னுடன் இருந்தவர்களை அழ வைத்த அவன், இன்று அவர்களுக்காக அழுதான்.

நேரம் கடந்ததால் காவலர் கண்டிப்புடன், “அழுதது போதும்! இனி அடுத்த வருடம் வந்து அழுதுக்கோ!” என்றார்.

அவர்கள் காலைப் பிடித்த ராஜதுரை, “ஐயா! இன்னொரு தடவ நா இங்கு வர விரும்பல! மனுஷனா பொறந்து வாழ ஆசைப்பட்றேன்!” என உணர்ச்சியைக் கக்கினான்.

காவலர்கள் வெடித்துச் சிரித்தவாறு, “முட்டாள்! முற்றும் இழந்த பின்னர், மடை திறந்த வெள்ளம் போல் உன் மனம் திருந்தி என்ன பயன்? கிளம்பு! கிளம்பு!” என்று எச்சரித்தனர்.

அப்போது ஒரு காகம் அவன் தாய் வைத்த படையலைச் சுவைக்க அருகே வந்தது. ‘தான் வைத்த உணவை ருசிப் பார்க்கத் தன் மகன் வந்துள்ளான்!!’ என உள்ளம் மகிழ்ந்தாள் அந்தக் கிழவித்தாய்.

உணர்ச்சிப்பெருக்கான அவள் அழுகை பெருங்கதைகள் சொன்னது. அழுகையை அடக்கியவாறுத் தன் தாயின் காலைத் தொட்டு உணர முடியாது என்ற நினைப்பை இழந்து, காலைத் தொட முயன்று ஏமாற்றத்துடன் வீட்டை விட்டு வெளியேறினான் ராஜதுரை.

வீட்டின் வெளிச்சுவற்றில் அவன் நண்பன் சுதாகர் குடிபோதையில் தள்ளாடியபடி ராஜதுரையின் முதலாமாண்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஒட்டிக் கொண்டிருந்தான். வீட்டை விட்டு வெளியேறிய ராஜதுரை நண்பனின் செயலைப் பார்த்தான்.

‘தன் நினைவை மறக்காது இருக்கும் தன் நண்பனைப் பார்த்து பெருமைப்படுவதா? தன்னுடைய நிலையை நோக்கியே தன் நண்பனும்  பயணிக்கிறானே! என நினைத்து வருத்தப்படுவதா?’ என்று எண்ணியவாறு  துடிப்பில்லா இதயத்துடன், காவலர்களுடன் ஊரிலிருந்து விடைபெற்று, மேலுலகம் நோக்கி புறப்பட்டான் – முற்றும் இழந்த பாவி

(முற்றும்)

கதாசிரியர் பற்றி

என் பெயர் மு.தீன். கோவையில் வசித்து வருகிறேன். பொறியியல் படிப்பு முடித்து விட்டு, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். என் மனதினை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள, கதைகள் எழுதுவேன். இந்தக்கதை ஒரு புதியக் கற்பனை முயற்சி. கற்பனைக்குள் பல உண்மைகளை புகுத்தி உள்ளேன். விகடனில் வெளிவந்த “#BAN TASMAC” இந்தக் கதை எழுத எனக்குப் பெரியத் தூண்டுதலாக அமைந்தது. சினிமாவில் நல்லக் கதைகளுடன் மக்களை உணர்வுப்பூர்வமாக ரசிக்க வைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் மனதளவில் தயாராகி வருகிறேன். விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது. Email ID – deen.professionalist@gmail.com

Similar Posts

3 thoughts on “முற்றும் இழந்த பாவி – கற்பனையில் உண்மைகள் (சிறுகதை) – ✍ மு.தீன், கோவை
  1. “Ithu oru muzhukka, muzhukka kaRpanaik kathai thaan. Oru kONaththil paarththaal ithu oru nalla uththi thaan! MaRaimugamaaga palarukkup paadam kaRpikkinRathu. IthaiyEth thaan nam aanmeegath thalaivarGaL karadiyaagak kaththi makkaLukku uNarththa muyalGinRaarGaL. Oru uthaaraNam Thiru. Muruga Krupaanantha Waariyaar swamiGaL aavaar. Ithu pOl eNNiladaGatha upanyaasam cheyGinRavarGaL perum sEvaiGaLaich cheyGinRaarGaL. VizhippuNarchchiyai adainthavarGaL butthisaliGaL.

    – “M.K. Subramanian.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!