in

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 12) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

அழைத்தான்... (அத்தியாயம் 12)

ஜூலை 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

12. பாவையின் பார்வை

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இணைப்பு

குடியாத்தம் – கிருஷ்ணன் வீடு..!  

அப்பாவிற்குக் கால் ஆபரேஷன் என்று கேள்விப்பட்டதும் கிருஷ்ணன் ஒடிந்து போனான். பார்வதி அப்போது ரெண்டு முட்டையை உடைத்து ஆம்லெட் போட்டுக் கொண்டு, கையில் தட்டோடு நின்றாள்.

கிருஷ்ணன் தாயை அன்போடு பார்த்தவனாய், “மா.! இப்டி உட்காரும்மா..! நான் நல்லா கணக்கு எழுதுறேன்னு சொல்லி, ஆடிட்டிங் வேல கொடுத்திருக்காங்க மா..! இந்த போஸ்ட்டுக்கு சம்பளம் அதிகம்னு தா பேசிக்கிறாங்க. ஆனா… நீ எப்டிம்மா? இங்க தனியா சமாளிச்சிடுவியா..? எனக்கு ஒரு மாறி இருக்குதும்மா. பேசாம வேலைய விட்டு வந்துட்டா..?” என்று மென்மையாய் கேட்டான். 

“அதுலாம் நான் பாத்துக்குவேன்டா. நீ என்னத்துக்கு மனச போட்டு கொழப்பிக்கிற. இப்போதான்டா உனக்கு நல்ல நேரம். எங்களால தான் உனக்கு எதுவும் வெச்சிட்டு போக முடில. நீயாவது சம்பாரிச்சு நல்லாரு சாமி..! மொத இத சாப்பிடுறா, வவுத்துக்கு எதுவும் போட்டுக்காம வர ஆளுநீ..” என்று பாசம் பொழிந்தாள்.

கிருஷ்ணனின் கண்கள் மிளிர்ந்தன, அழுதே விட்டான். ஜெயகாந்தன் சொன்னது போல், மனதின் அசுத்தப்பட்ட நீர் தான் அது. கிருஷ்ணனின் கன்னத்தில் வழிந்தோடி, பின்வரும் செய்தியை அது சொல்லிற்று.

“எனக்கு ஏமா கிருஷ்ணன்னு பேரு வெச்ச? பெத்தவங்களோட இருக்குற குடுப்பனையே வாய்க்கலயே…” 

பார்வதியும் தன் விழிநீரை முந்தானையில் துடைத்துக் கொண்டவளாய், “நீ ஏன் கண்ணு அழுவுற? ராதா வேலைய விட்டு வந்துட்டான். முன்ன விட, அவன் ஜோசியமு  ஜோரா தான் போது. தொணைக்கு ஆளு இல்லன்னு வருத்தப்படாத சாமி..! அப்பப்போ கரெக்ட்டா கடிதாசி மட்டும் போட்டுறா கண்ணு” என்று விக்கித்துச் சொன்னாள். 

கிருஷ்ணனுக்கு ஏனோ தொண்டையை அடைத்துக் கொண்டது. மாமா வீட்டுக்குக் கால்களைப் பறக்க விட்டான். அவன் பாதுகை நேரே மாமா வீட்டு வாசலில் தான் நின்றது.

“ஐ… மாமா வந்துட்டாரு.. நீங்கதா அந்த வெளியூர் மாமாவா?” என்று ஒரு குழந்தை அவனை வரவேற்றது.

கிருஷ்ணன் ஒன்றும் புரியாமல் திகைத்து, ஓரிரு நிமிடத்தில் தெளிந்து, “ஓ.. நா ஊர விட்டு போகையிலே நீங்க கை கொழந்த.. இப்போ நல்லா வளந்துட்டிங்களே..” என்று தூக்கித் தோளில் வைத்துக் கொண்டான்.

மாமா கிருஷ்ணன் வருவதைப் பார்த்துவிட்டு, “வாய்யா.. வாய்யா.. கிஸ்னா..! நடுல ரெண்டு மூணு முறை வந்தன்னு ராதா சொன்னான். இங்க வீட்ல கொஞ்சம் பிரச்சனை, அதான் நா உன்ன வர வேண்டான்னு சொல்லிட்டேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே…

கிருஷ்ணனின் அக்கா குறுக்கிட்டு, “டேய் கிஸ்னா.. எப்டிடா இருக்க? அம்மாதா அப்பப்ப வந்து, உனக்கு ஒரு கண்ணானம் பண்ணி வைக்கணும்னு சொல்லிட்டே இருக்கு. ராதாக்கு எங்கேயோ ஆம்பூர்ல அதுவே பாத்து வெச்சிடுச்சி… அப்பாவுக்கு தான் இப்டி..” என்று வந்த வார்த்தையை முடிக்காமல் அழுதாள். 

கவலையை அடக்கிக்  கொண்ட கிருஷ்ணன், “மாமா..! பொண்ணுக்கு ஆறேழு வயசு இருக்கும்ல. நா ஊருக்கு போறப்ப இது கைக்கொழந்த.. என்ன பேரு வெச்சிருக்கீங்க..?” என்று ஒரு தாய்மாமனுக்குரிய ஏக்கத்துடன் கேட்டான்.

“செம்மலர்..” என்று மாமா பதிலுறைத்ததும்…

“செம்மு.. இங்க வாடா குட்டி” என்று மடியில் அமர வைத்து, “இந்தா மாமா குடுத்தா வாங்கிக்கணும்..” என்று செகரெட்ரி கொடுத்த நூறு ரூபாயைக் கையில் திணித்தான்.

இதைக் கவனித்த அக்கா, “என்னடா.. மாமன் சீரா? நமுக்குள்ள எதுக்கு இந்த சடங்கெல்லாம்..? நீ நல்லா சம்பாரிச்ச பொறவு இதுங்களுக்கு செஞ்சா நாங்க வேணான்னா சொல்லப் போறோம்.?” என்று அக்கறையோடு கோபித்தாள்.

கிருஷ்ணனுக்கு பேச வாய் வரவில்லை. வீட்டில் யாரிடமுமே பேசாத அக்காவா இப்டி பேசுது..!  என்று மனதிலேயே மெச்சிக் கொண்டான்.

அவளுக்காக ஒரு புன்முறுவலை தெளித்துவிட்டு, “மாமா..! அக்கா..! ரெண்டு பேரும் கேளுங்க சேதி..! நா வந்ததே இத சொல்லத்தான். எனக்கு ஆடிட்டிங் செக்ஷன்ல போஸ்ட் போட்ருக்காங்க. மாமா சொன்ன மாறியே பத்தாங் கிளாஸ்னு இவளோ நாள் ஓட்டிட்டேன். ஃப்ரெண்ட் ஒருத்தனுக்கு ஹெல்ப் பண்ண போய், லெஜ்ஜர் நோட்புக்ல கைய வெச்சேன். கையெழுத்துல மாட்டிக்கிட்டேன். அப்ரோ உண்மைய சொன்னதும், அந்த செகரெட்ரி உடனே வேலை போட்டு குடுத்துட்டாரு. கைல ரூபாயு கொடுத்து அனுப்பினாரு..” என்று ஆச்சரியத்துடன் சொன்னார்.

மாமாவிற்கு முதலில் சந்தேகம் தான் புத்தியைத் தட்டியது.

“கிஸ்னா.. மீசக்காரந்தன.. உங்க பிராஞ்சுக்கு..? அவனான்டா கொஞ்ச ஜாக்கிரதையா இருந்துக்கோ. பொதுவா அவ இப்டிலாம் பெருந்தன்மையா செய்ற ஆளு கெடயாது…” என்று நாசுக்காகச் சொன்னார்.

கிருஷ்ணனும் அதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டான்.

இதற்கு நடுவே வீட்டு வாசலில், கிருஷ்ணனின் நண்பன், ஒருவன் வந்து, “டேய் வாடா.. தியேட்டருக்கு போவோம். நீ ஊருக்கு வரத தெருவுல இருக்குறவன் சொல்லித்தான் நான் தெரிஞ்சிக்கணுமோ. சார் அப்டே எனக்கும் ஒரு கடுதாசி போட்டா கொறஞ்சிடுவாறோ..?” என்று வீட்டின் முன்நின்று கூச்சல் போட்டான்.

கிருஷ்ணன் விறுவிறுவென்று மாமாவிடமும் அக்காவிடமும் விடைபெற்று கொண்டு, “சரிங்க மாமா.. பொழுது சாயப் போது.. இந்தப் பைய கூட படத்துக்குப் போய்ட்டு வெரசா வீட்டுக்குப் போறெ..” என்று கிளம்பினான். 

சினேகிதன் வழியெல்லாம் பேசிக் கொண்டே வந்தான். கிருஷ்ணன் அவ்வப்போது அவன் கேட்டதற்குப் பதிலுறைத்து பேச்சை “சட் சட்” என்று முடித்தான்.

சினேகிதன் ஓரளவு புரிந்து கொண்டு, “என்னடா? அப்பாவ நெனச்சி வருத்தமா? டேய் நாங்களாம் எதுக்கு இருக்கோம். கூப்பிட குரலுக்கு வந்துருவோம்டா. நீ ஒன்னும் வருத்தப்படாத. நிம்மதியா வேல பாரு..” என்று ஆறுதல் கூறினான்.

எந்த வித ரத்த பந்தமும் இல்லாமலே அவன் கிருஷ்ணனுக்கு சொந்தமாகி விட்டான்.

தியேட்டர் வாசலில் மிதிவண்டி சரெலென்று நின்றது. அங்கிருந்த ஜூஸ் கடைக்கு எதிரே ஒரு பெரிய வண்டி நின்று கொண்டிருந்தது. வண்டி நம்பர் “TN91….” என்று ஏதோ நாலு நம்பர் எழுதியிருந்தை கிருஷ்ணன் பார்த்தான்.

எங்கிருந்தோ நெஞ்சில் படபடப்பு ஒட்டிக்கொள்ள, “டேய்.. இந்த வண்டி சிதம்பரம் வண்டிடா.. அங்கிருந்து யாரு இங்க வராவ? லாரியப் பாத்தா.. பெரிய குடும்பம் மாறி தெரிது..” என்றதும் சிநேகிதன் தொடர்ந்தான்.

“ஆமாண்டா.. அங்க நின்னு ஜூஸ் குடிச்சிட்டே அட்ரஸ் கேக்குறாங்க பாரு..” 

“போய்.. நம்ம என்னன்னு கேப்போமா?” என்பது போல கிருஷ்ணன் பார்க்க, சினேகிதன் “ஊர்ப்பாசம்… ஹ்ம்ம்.. நமக்கு எதுக்கு பெரிய இடத்து சமாச்சாரம்..?” என்பது போல எரிந்தான்.

இந்த கண் பேச்சு வார்த்தைக்குள், படம் போடும் நேரம் தொடங்கி விட்டது. சிநேகிதன் தன் உட்சபட்ச குரலில், “டேய் கிஸ்னா.. கொட்டாய்ல படம் போட்டாச்சுடா..! வா வா போவோம்..” என்று மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தான்.

‘தன் மனதில் அயராது ஒலித்துக் கொண்டிருக்கும் பெயரை யாரிவன் இப்படி நாராசமாகக் கூப்பிடுகிறான்?’ என்பது போல் லட்சுமி எட்டிப் பார்த்தாள்.

(ஆம்!! வாசகர்களே..! அங்கு நின்றிருப்பது லட்சுமியின் குடும்பம் தான். லட்சுமியின் அம்மா புனிதவதிக்கு, வேலை இடமாற்றம் குடியாத்ததில் உள்ள பள்ளிக்குத் தான் கிடைத்துள்ளது)

கிருஷ்ணனும் அப்போது தான் லட்சுமியை முதல் முறையாகப் பார்த்தான்.

கன்னங்கள் பளிச்சிட, கண்கள் மிளிர, நெற்றியில் சுருட்டை முடி தாளம் போட, நுனி மூக்கில் வியர்வை பொட்டு மின்ன, அவளைப் பார்த்ததும், “மகாலட்சுமி…” என்று அவன் வாய் லேசாக முணுமுணுத்தது.

இருவர் கண்களிலும் எத்தனையோ ஆயிரம் கேள்விகள் அலைகளாய் எழுந்து, பின் அப்படியே மெல்ல அடங்கியது.  

அதே சமயம் சிநேகிதன் கிருஷ்ணனைக் கையோடு வாரிச் சுருட்டிக்கொண்டு தியேட்டருக்குள் இழுத்துச் சென்றான்.

லட்சுமி, தன் இருவிழிகளைக் கேமரா போல் நன்றாக விரித்து, தான் பார்த்த அந்த இளைஞனின் முகத்தை, மனதில் பதித்துக் கொண்டாள்.

ம்பலத்தான் கோயில்..! 

பெரியவர் அம்பலத்திலேயே தங்கி விட்டார். இப்போதெல்லாம் அவர் தினசரி காலை எழுந்து, குளித்து, கோயில் பிரஹாரங்களை முடிந்த வரை சுத்தம் செய்து, நடராஜர் சன்னதியில் தியானத்தில் உட்காருகிறார்.

முதலில் அங்கிருந்த அய்யர் அவரை ஏளனமாகப் பார்த்தார். பிறகு, தினமும் இதே நிகழ்வு தொடரவே, அய்யருக்குப் பக்தி வந்து விட்டது.

பெரியவர் தியானத்தில் அமரும் நேரத்திற்குள் பூஜையை முடிக்கும்படி செய்து கொள்வார். பிரசாதத்தை அவர்முன் வைத்து விட்டு சென்று விடுவார். 

பெரியவரும் தியானம் கலைத்து, கண் விழித்ததும் “அம்பலத்தான் அருளே அருள்..” என்று சாப்பிட்டு ஒரு ஓரமாக போய் உட்கார்ந்து கொள்வார்.

பிரசாதம் ஒரு பிடி சோறாக இருந்தாலும் சரி, ஒரு கிளாஸ் பாலாக இருந்தாலும் சரி, திருநீறாக இருந்தாலும் சரி, எது வைத்தாலும் அவர் ஒன்று போலவே கருதுவார்.

இப்போதெல்லாம் அவர் தூங்குவதே இல்லை. அந்தக் காட்சிகளைக் கண்ட பிறகு, அவர் அம்பலத்தான் காலடியிலேயே இருந்து விட முடிவு செய்து விட்டார்.

நாள்தோறும் அந்த ஆனந்த தாண்டவம் ஆடும் ஈசனைத் தரிசித்து விட்டு, வருகிறவர் போகிறவர்களை உற்று உற்று பார்ப்பார். இல்லையேல் தியானம்… தியானம்… தியானம்… அவ்வளவு தான். 

அன்றும் அப்படி வேடிக்கை பார்க்கையில், அவர் கண்கள் திடீரென்று பனையளவு உயரத் தொடங்கின.

ராமலிங்கமும் யமுனாவும் கோயிலில் கால் பதித்துக் கொண்டிருந்தார்கள். கையில் ஒரு குழந்தை.

பிள்ளையாரைத் தரிசித்துவிட்டு, நேரே உள்ளே வந்தார்கள். அய்யர் குழந்தையைப் பார்த்ததும், “கொழந்தைக்கு என்ன வயசு? ரொம்ப நன்னா வளர்ந்துட்டானே..! பரவால்லயே, பிள்ளையாண்டான் புண்ணியத்துல தோப்பனார் இப்போல்லாம் கோவில் பக்கம் வந்துடுறார்..” என்ற கடைசி வரி ராமலிங்கத்தைத் தொட்டது.

ராமலிங்கமும் பொறுமையாக பதில் சொன்னான்.

“ஆமா அய்யரே..! எங்களுக்கு கல்யாண ஆகி, ரொம்ப வருஷமா கொழந்த இல்லை. நாலு வருஷத்துக்கு முந்தி தான், அந்த அருள் கெடச்சிது..! நேரமும் காலமு எவ்ளோ முக்கியம்னு நா அப்போதான் புரிஞ்சிகிட்டேன். அந்த நேரத்தையு காலத்தையு ஆள்றவனே அவன்தன…! அதோட இனிக்கு சித்திரை திருநாள்..!” என்று புது பக்தியோடு சொன்னான்.

அவன் வார்த்தையிலும் உண்மை தெரிந்தது. பூரிப்படைந்த அய்யர், “இனிமே உங்களுக்கு நல்ல நேரந்தான்..” என்று மந்திரத்தைச் சொல்லி அர்ச்சனையைத் தொடங்கினார்.

விபூதியைக் குழந்தையின் நெற்றியில் பூசுகையில், “அய்யர் அங்கிள்… எனக்கு இன்னு கொஞ்ச குடுங்க..” என்று திருநீரைப் பார்த்து மழலை மனங்கவர்ந்தது.

உடனே யமுனா குறுக்கிட்டு, “கொடுக்காதீங்க அய்யரே..! இவன் சாப்பிடுறேன்னு சட்டைலாம் அழுக்கு பனிடறான்” என்று சொல்ல, அய்யர் சிரித்தார்.

அப்படியே யமுனா குழந்தை பக்கம் திரும்பி, “மனோ.. நல்ல புள்ள தானே..! அம்மா வீட்டுக்கு போனது… உனக்குப் பிடிச்ச கலர் தோசை ஊத்தி தரேன்..” என்று பாசமாய் அணைத்துக் கொண்டாள்.  

இவற்றை ஓரமாய் நின்று கவனித்துக் கொண்டிருந்த பெரியவருக்குக் விழிகள் பனித்தன. வெகு நாட்களுக்குப் பிறகு, அவர் விழிநீரில் பந்தப் பாசம் ஒளிர் விட்டது.

‘இப்படி ஒரு சித்திரை நாளில் தானே,  வீட்டை விட்டு வெளியேறினோம். பதினான்காவது வருடம் இது…! குழந்தைக்கு கூட என் பெயரான ‘மனோகரன்’  தான் வைத்திருக்கிறார்கள். ராமலிங்கத்திடம் ஏக மாற்றம் தெரிகிறதே..! எப்படியோ.! வனவாசம் போல 14வது ஆண்டில் காலடி எடுத்து வைத்தாகி விட்டது. இந்த ஆண்டு, ரொம்பவும் முக்கிய ஆண்டாக எனக்கு இருக்கலாம்..’ என்று தனக்குள்ளே பேசிக் கொண்டார்.

அப்போது திடீரென்று மனதுக்குள் ஒரு காட்சி. அது குதிரை போல் ஓட்டமெடுத்து முடிந்ததும், பெரியவருக்கு சலனம் ஏற்பட்டுவிட்டது.

‘எப்போதும் எதிர்காலம் பற்றி ஏதாவது தோன்றும். இது என்ன..! நடந்து முடிந்த பழைய காட்சி ஒன்று வருகிறதே..! அன்று ஒருவன் என்னை இடித்தானே. எனக்குக் கூட அவன் முகத்தைப் பார்த்ததும் கண்களில் நீர் பெருகிற்றே..!’ என்று ஆழமாக யோசிக்கத் தொடங்கினார். 

‘ம்ம்ம்……! அம்பலத்தான் உண்மையான ஆட்டத்தை இப்போது தான் ஆரம்பிக்கிறான் போலும்…!’ என்று மனதை ஒருநிலைப்படுத்தி, தியானத்தில் ஆழ்ந்தார்…

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    முற்றும் இழந்த பாவி – கற்பனையில் உண்மைகள் (சிறுகதை) – ✍ மு.தீன், கோவை

    காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 1) – ✍ விபா விஷா, அமெரிக்கா