sahanamag.com
தொடர்கதைகள்

காக்க! காக்க! ❤ (பகுதி 1) – ✍ விபா விஷா, அமெரிக்கா

ஜூன் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

காக்க காக்க.. மண் காக்க..

மண் கொண்டு தவழும் புனல் காக்க..

புனல் தொட்டு வளரும் மரம் காக்க..

மரம் போன்ற பல்லுயிர் நீ காக்க..

உயிர் என்பதும் நீயாம், உனைக் காக்க..

உனக்குள் இருக்கும் இறை காக்க..

இறையது யாதாம் எனைக் கேட்க..

மனிதமே இறையாம் எனக் கொள்க..

இறையும் உறையும் வான் நோக்க..

நீயிங்கு தனித்தில்லை என்றுணர்க..

உனைப்போல் துளிர்க்கும் அனைத்துயிரும்..

இயற்கையின் குழவி என்றாக..

இயற்கை என்பது அழகென்றால்..

காதலாய் வாழ்வது அலாதியாமே..

மனிதனின் காதலொன்றே உயரவன்றே..

வானும், மண்ணும் புணர்தல் இங்குக் காதலன்றோ?

இவ்வியல்பின் பேரெழிலில் நீயும் காதலுற்றால்,

இயற்கையும் நேசம் கொண்டு உனைக் காக்குமாமே!!

வானெங்கும் முக்கியமாய்.. நித்தியமாய்.. நிறைந்திருக்கும் கருமை நிறத்துடன், நீல நிற சாயமும் சற்றே பூசியபடி அதனுடன் சூரியனின் மென்கதிர்களும் வண்ணம் தீட்டிய படி மெல்ல மெல்ல விடிந்து கொண்டிருந்தது அந்த நற்காலை.

அந்த விடியற்காலையின் பொன்வேளையில் பொற்சிலை எனத் தன் அருகில் நின்றிருந்த தன்னவளை கம்பீரம் கொண்ட கண்களால் பார்த்து, பார்வையாலேயே மெல்ல பருகினான் அவன்.. அதிரூபன்.

அவன் பார்வையைச் சற்றும் சளைக்காமல் வாங்கிய அவளும், அதே மையல் கொண்ட பார்வையை அவனை நோக்கி செலுத்தினாள். அந்தப் பார்வையில் புதிதாய் பிறந்து, தன் உயிர் மீட்டு, வான்நோக்கி பறந்து விடத் தோன்றாதா அவனுக்கு? தோன்றத் தான் செய்தது.

சுற்றிலும் இருந்த அத்தனை பேரும் அவர்களையே வைத்த கண் வாங்காது பார்க்காமல் இருந்திருந்தால், பறந்து விட்டிருப்பான் தான்.

அவனது பார்வையைக் கண்டு கொண்ட அவள், சிருஷ்டி. இந்த உலகத்தின் இன்பங்களைச் சிருஷ்டிக்கப் பிறந்தவள். அவனது பார்வையின் பொருள் உணர்ந்து மற்றவர் எவரைப் பற்றியும் யோசிக்காது சட்டென அவன் கரம் பற்றினாள். அதுதானே அந்த வேளையின் முறைமையும் கூட?

இருவரும் ஒருவருக்கொருவர் மற்றவர் கரம் கோர்த்துக் கொண்டு தங்களுக்கான சுய உறுதிமொழியை, அது உறுதிமொழி என்பதை விட அவ்விருவருக்குமான காதல் மொழியைப் பகிர்ந்து கொண்டனர் என்றும் கூறலாம்.

முதலில் அதியனோ, அவனவளை, “தனக்குள்ளே போட்டு பொத்தி வைத்து கொள்வேன் என்றும்.. அவள் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து அவளை என்றென்றுமே தனித்து விடாது தன் வாழ்நாள் முடியும் நேரம் வரை அவள் கரம் பற்றியே இவன் வாழ்வு தொடரும் என்றும்” அவன் உறுதி கூற, அவளுக்கு அப்படியே அவனை அள்ளிக்கொண்டு தன் நெஞ்சுக்குள் போட்டு புதைத்து விடத் தோன்றாதா?

அதே அந்தக் காதல் பார்வையுடனே அவளும் அவனை நோக்கி அவளுக்கான அவனை, “அவனாகவே என்றென்றும் தன்னுடைய சரி பாதியாக, தனக்கும் மேலான முதலொருவனாகப் போற்றுவேன் என்றும், அவனது இன்பத் துன்பங்களை அவன் கரம் பற்றி ஒன்றாக நடந்து, இன்பத்தில் கரைந்து.. துன்பத்தைக் கரைத்து.. வாழ்வின் இறுதிவரை இணை பிரியாது நிற்பேன்” என்றும் உறுதி கூறினாள்.

இவ்விருவரின் இந்த உறுதி கூறுதல் என்னும் காதல் பகிர்தலில் இதோ முடிந்துவிட்டது இருவரின் திருமணமும். இதற்குமேல் யாருக்காக எதற்காகக் காத்திருப்பான் அவன்?

‘சாத்திரம் ஏதுக்கடி’ என்று காதல் படிப்பவர் இருக்க, அந்தச் சாத்திரமும் இருவருக்கும் சம்மதமாய் முடிந்துவிட இனி பறந்து விட மாட்டானா? இதோ பறந்தே விட்டானே.

ஆம்… அந்தத் தாவ் கிரகத்தின் பனிசூழ்ந்த பெருமலையின் உச்சியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது அவர்களது அந்தத் திருமணம். சுற்றிலும் இருந்த அந்த ஐந்திணைத் தலைவர்களும் இவர்களுக்கு முகம் மலர ஆசி, கூற காதலால் கவி படித்து, கல்யாண பாட்டிசைத்த அந்த இருவரும் சிருஷ்டி வெகுநாளாகச் செல்ல வேண்டும் என எண்ணியிருந்த இடத்திற்குப் பறந்து கொண்டிருந்த அந்த வேளையில் அவர்களுக்குப் போட்டியாக அவர்களுடன் வந்து கொண்டிருந்தான் செந்தூரன்.

அவனைக் கண்டதும் சற்று பொய் கோபம் கொண்டதாய் முகத்தை வைத்துக் கொண்ட சிருஷ்டி, “ஆதி இங்க பாரு. இப்பவும் இவன் எனக்குப் போட்டியா வந்துட்டான். இவன இப்பவே இங்கிருந்து போகச் சொல்றியா? இல்ல நீயும் இவனும் மட்டுமே அந்த இடத்துக்குப் போகப் போறீங்களா?” என்று செல்லமாய்ச் சிணுங்கலுடன் அவன் காதில் அவள் கூற, காதல் மனைவியின் சிணுங்கல் பொறுக்குமோ அந்தச் சிங்காரனுக்கு?

உடனே தங்களுடன் பறந்து கொண்டே இருக்கும் அந்தச் செந்நிற பருந்தை பார்த்து, “செந்தூரா உனக்கு நேரம் காலம் எல்லாம் கிடையாதா? இன்னைக்குத் தான் நாங்க ரெண்டு பேரும் திருமணம்ன்ற ஒரு பந்தத்துல இணைந்திருக்கோம். இந்த முதல் நாளே எனக்கும் என்னோட சிருஷ்டிக்கும் சண்டை பண்ணி விடாதே. ஓடிப் போய்டுடா மூக்கா…” என்று அதிரூபன் அந்தப் பருந்திடம் செல்லம் கொஞ்ச

அதுவும் ஒரு கணநேரம் அசையாது அப்படியே நின்று இருந்து அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு, “சரி பொழச்சு போ…” என்று எண்ணியதோ என்னவோ, அப்படியே திரும்பி சென்றது. அந்தப் பார்வையில் கொஞ்சம் பொறாமையும் மகிழ்வும் கலந்திருக்கத் தான் செய்தது.

இவர்கள் இருவரும் இறுதியாக வென்பனி மலைக்குச் சொல்ல அங்கிருந்த பஞ்சுப்பொதி மேகங்களே இவர்களுக்கு மஞ்சம் செய்து வைத்திருக்க, அவன் அவளை நோக்கி மோகப் பார்வையுடன், மேகத் திரை விலக்கி செல்ல இருந்த அந்த வேளையில், சட்டென மின்னலாய் வந்தது அந்தச் செந்தூரன்.

அதைக் கண்ட அவளோ, இங்கு இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவனை முறைக்க, “அட இப்போ என்ன டா மூக்கா? அதுக்குள்ள உனக்குப் பிரச்சனை?” என்று சலிப்புடன் வினவ, அது அவனை நோக்கி அதன் பாஷையில் ஏதோ கூற தொடங்கியது.

இப்பொழுது செந்தூரனின் கழுகுப்பார்வை அதிரூபனின் கண்களில். அந்தக் கழுகுப் பார்வையுடன் அதிரூபன் வான்நோக்கி விருட்டெனச் சென்று சுற்றிலும் பார்க்க, அவனுக்குப் புரிந்துவிட்டது. அந்த நீல நிற கோளத்தின் தான் ஏதோ பிரச்சனை என்று.

உடனே அவன் மீண்டும் தரையிறங்கி சிருஷ்டியையும் உடன் அழைத்துக் கொண்டு அவர்களது ஐந்திணை தலைவர்கள் இருக்கும் இடம் நோக்கி சென்றான். அதன் பின்பு சற்று நேரத்திற்கெல்லாம் சிருஷ்டி தாவ் கிரகத்திலிருந்து புழுத்துளை வழியாக அந்த நீல நிற கோளமான யுவா கிரகத்திற்குப் பறந்து கொண்டிருந்தாள்.

****************************

கார்மேகங்கள் அந்த வானுயர்ந்த மலையினைச் சூழ்ந்து… தானும் சூல் கொண்டு, பெருமழைக்குத் தயாராக இருந்த வேளை. அந்த மேகங்கள் தம் பாதம் தழுவிட, மலை உச்சியின் முகப்பில் இரு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு, தனது வெற்று மார்பின் மீது ஊசியென இறங்கும் பனிக்காற்றையும் பொருட்படுத்தாது தூரத்தில் தெரியும் அந்த நீர் சூழ்ந்த நீல நிறக்கோளத்தை வெறித்துக் கொண்டிருந்தான் அவன்… அதிரூபன்.

அப்பொழுது இலக்கினை நோக்கி விரைந்து வரும் ஏவுகணையென, காற்றைக் கிழித்துக் கொண்டு வந்தது அந்தக் செம்பருந்து. நேரே வந்து லாவகமாய் அவன் தோள் பற்றி அவனது அமைதியில் தானும் கரைந்தது அது.

அந்தக் கருடன் வந்து அவனது தோள் தொட்டு அமர்ந்ததையே சற்று நேரம் கழித்துத் தான் உணர்ந்த அதிரூபன், “செந்தூரா… நீயே வந்துட்டயா? அதற்குள்ள என்ன அவசரமாம் அவங்களுக்கு? என்ன அழைச்சுட்டு வர உன்ன அனுப்பி இருக்காங்க? நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வரேன். நீ போ…” என்று கூறி அந்தப் பறவையை அனுப்ப முயன்றவன் அந்த முயற்சியில் தோற்றுத் தான் போனான்.

சிறிது நேர முயற்சிக்குப் பின், “சரி செந்தூரா… நானும் வரேன். நீ முன்னால் பற. இதோ நானும் உன் கூடவே வர்றேன்” என்று கூறி மீண்டும் ஒரு முறை அந்த நீல நிறக் கோளத்தை நோக்கியவனின் கண்களில் சிறு வலி தோன்ற மனத்தில் பெரும் ஆவேசத்துடன் தன் கால்களின் பெருவிரலிரண்டையும் ஒரு சேர தரையில் ஓர் அழுத்து அழுத்தியவன் மறுகணம் காற்றில் மிதந்து வானில் பறந்து கொண்டிருந்தான்.

வானில் பறந்த சில நிமிடங்களிலேயே ரூபன் தரை தொட்டு, தன்னை அழைத்த தேவ தேவர் முன்பு நின்றிருந்தான். அவன் வந்த செய்தி அறிந்து மேலும் நால்வர் அந்த அறைக்குள் ஆவேசத்துடன் நுழைந்தனர்.

“ஏய் நீ என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல? உனக்காக நாங்க ஐந்து திணைத் தலைவர்களும் காத்துக் கிடக்கறோம். எங்க போன இவ்வளவு நேரமா?” என ஒருவர் கேட்க அவரைத் தொடர்ந்து மற்றவரனைவரும் தேவதேவரைத் தவிர அவனைச் சூழ்ந்துகொண்டனர்.

“சொல்லு அதிரூபா… நாங்க இன்னைக்கு உன்கிட்ட பேச வருவோம்னு உனக்குத் தெரியும் தான? அப்படி இருந்தும் நீ இங்க தாமதமா வந்துருக்க”

“அவனெங்கே தாமதமா வந்தான்… அவன் நம்மள சந்திக்க வரதாகவே இல்ல. நாம தூது அனுப்பிய பிறகு தானே அவனுக்கு நாம இவனுக்காகக் காத்துட்டு இருக்கற நினைவே வந்துச்சு போல இருக்கு”

“ஹ்ம்ம்… எப்போ பார்த்தாலும் மலை முகட்டுல நின்னு அந்த யுவா கிரகத்தைப் பார்த்துட்டு இருந்தா போதுமா?”

“அங்க போனவளுக்கு என்ன ஆச்சுன்னும் தெரியல, இங்க நம்ம தாவ் கிரகத்துல பாதுகாப்பும் சரியா இருக்கான்னு தெரியல.”

இவ்வாறு மற்ற நால்வரும் பேசிக்கொண்டிருக்க, தேவ தேவர் மட்டுமே பரிவுடன், “அதிரூபா… உனக்கிருக்கும் சக்தி கொண்டு நீ தூரத்துல இருந்தாவது சிருஷ்டி போயிருக்கற யுவா கிரகத்தைப் பார்க்கலாம். ஆனா எனக்கு அந்தச் சக்தி இல்லையே. வெறும் பறவைகளோட மொழி தெரிஞ்சு, போர் புரியறதுல வல்லவனா இருந்து என்ன உபயோகம்? அதனால தான் வாரா வாரம் இந்தக் கூட்டத்துக்கு உன்னைய அழைச்சு அந்த யுவா கிரகத்துல ஏதாவது சலனம் தெரியுதா? இல்ல உன்னோட கைக்கணினிக்கு ஏதாவது தகவல் வந்துச்சான்னு கேட்கறோம்” என்று சோகத்தில் உடைந்துவிடும் குரலைக் கட்டுப்படுத்தியவாறு கேட்டார்.

அப்பொழுதும் மறுமொழி கூறாதவனைப் பார்த்து பாலை நிலத்தலைவர் சேத், “என்னப்பா இப்படி அமைதியாகிட்ட? நீயே அவளை நாம கைவிட்டுடலாம்னு சொல்றியா? அந்த முடிவுக்காவது சீக்கிரம் வந்து நம்ம தாவ் கிரகத்தையும், இன்னும் மற்ற கிரகங்களையும் கவனிப்பா. நாங்க எல்லாரும் ஐந்து நிலங்களையும் மேற்பார்வை தான் பார்க்க முடியும். அங்க என்னவெல்லாம் நடக்குது? எங்கெங்கே என்னென்ன தேவைன்னு உன்னால தான் கண்டறிய முடியும். சும்மா மலையில உட்காந்து வேடிக்கை பார்த்துட்டு இருந்தா…” என்று கூறிக்கொண்டிருந்தவர் சரேலென அதிரூபன் அவரை நிமிர்ந்து பார்க்கவும், அவன் பார்வையில் முதுகுத் தண்டு சில்லிட தனது பேச்சை சிறு திணறலுடன் நிறுத்திக் கொண்டார் சேத்.

உடனே தேவ தேவரோ, “நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க சேத்” என்று அவரிடம் கடுமையாகக் கூறியவர், அதிரூபனிடம் வந்து அவன் வலக்கையைப் பிடித்துக் கொண்டு, “இங்க பாரு ரூபா… நான் குறிஞ்சித் திணையோட தலைவனா, உங்க எல்லாருக்கும் மூத்தவனா இத கேட்கல. சிருஷ்டியோட அப்பாவா கேட்கறேன். சிருஷ்டிய பத்தி ஏதாவது தகவல் வந்துச்சா? இல்ல அவளை மீட்கறதுக்கு ஏதாவது வழி இருக்கா?” என்றவர் கேட்கவும், அந்த அறையில் இருந்த அனைவரையும் தன் கீழ் கண்களால் ஒரு பார்வை பார்த்தான் அதிரூபன்.

அப்பொழுது தான் அந்தக் செம்பருந்து அவர்கள் இருக்கும் இடம் நோக்கி வந்தது. அதை நோக்கிச் சென்றவன் அதைத் தனது கைகளில் வைத்துக்கொண்டு மெல்ல அதன் முதுகை நீவி விட்டவாறே பேசத் தொடங்கினான்.

“என்ன செந்தூரா… நான் வந்து நிறைய நேரம் ஆகிடுச்சே. நீ ஏன் இவ்வளவு தாமதமா வர? வழில எங்கயும் நீ ஓய்வெடுத்துட்டு வரலையே? ஹ்ம்ம்… உன் வேகம் குறைஞ்சுடுச்சா? இல்ல என் வேகம் கூடிடுச்சா? இல்ல, நான் ரொம்பப் பலவீனமாகிட்டேன்னு தப்பு கணக்கு போட்டுட்டியா?” என்று அந்தப் பருந்திடம் பேசிக்கொண்டே மீண்டும் அவர்களை ஒரு பார்வை பார்க்கவோ, மற்றவர்கள் தலை தானே தாழ்ந்தது.

“யுவா கிரகத்தில் ஏதோ பிரச்சனைன்னு எனக்குத் தெரிஞ்சதும் நானே அங்க போகறேன்னு சொன்னேன். ஆனா நீங்க தான் நான் அங்க போய்ட்டா நம்ம கிரகத்துல என்னுடைய வேலைகளை யாராலயும் செய்ய முடியாது. வெளிகிரகத்துல இருந்து ஆபத்து வந்துடும்ன்னு சொல்லி என்னைப் பிடிவாதமா தடுத்துட்டு, எனக்கு அடுத்த நிலையில இருந்த சிருஷ்டியை அங்க அனுப்புனீங்க. இப்போ அவளைப் பத்தி எந்தத் தகவலும் இல்லன்னு ரொம்பவே சீக்கிரமா கவலைப்படுற மாதிரி இருக்கு? அவ யுவா கிரகத்துக்குப் போய் ஒரு வருடம் கழிச்சு தானா அவளோட அப்பாக்கே அவ ஞாபகம் வந்துச்சு” என்று குற்றம் சாட்டும் பார்வையில் தேவ தேவரை நோக்க

அவரோ குற்ற உணர்ச்சியில் கண்களில் வழிந்தோடும் கண்ணீருடன், “அதிரூபா… பேசிப் பேசியே உன் வார்த்தைகளால் என்னைக் கொல்லாத. ஆமா… அவளை அனுப்ப வேணாம்னு நீ எவ்வளவோ தடுத்தும் கூட நாங்க தான் அவளை அனுப்பினோம். அவளும் எல்லா மக்களும் நல்லபடியா இருக்கணும்னு முழு மனசோட தான் கிளம்பிப் போனா. அங்க போய்ச் சேர்ந்துட்டேன்னு அவகிட்ட வந்த தகவலுக்கு அப்பறம் நமக்கு வேற எந்தத் தகவலும் வராதப்போவே நீ உடனே கிளம்பி அவளுக்கு என்ன ஆச்சுன்னு பார்க்க போறேன்னு சொன்ன. ஆனா நாங்க தான் அப்பவும் உன்ன தடுத்துட்டோம்” என்று தழுதழுத்த குரலில் அவர் கூறிக்கொண்டிருக்க

இடைபுகுந்த அதிரூபனோ, “ஆமாமா அதுக்கு அப்பறமும் இன்னொரு ஒரு வருஷமா நான் உங்ககிட்ட போராடிகிட்டு தான் இருக்கேன். ஆனா நீங்க இன்னும் நம்ம கிரகம், அதோட பாதுகாப்பு, அதோட நன்மைன்னு இத மட்டும் தான் பேசிட்டு இருக்கீங்க. ஆனா நம்மல மாதிரியே இருக்கற இன்னொரு கிரகம் அழிய போகுதேன்னு கவலை இல்ல” என்று வார்த்தைகளில் அமிலம் கொட்டினான்.

அவன் பேசியதைக் கேட்ட மருதநிலத் தலைவன் அரிமாவோ, “ஓ.. அப்போ நாங்க எல்லாம் எங்க கிரகம் எங்க மக்களின் உயிர்னு சுயநலமே உருவா இருக்கோம். ஆனா நீ அந்த யுவா கிரகத்துக்கு எதுவும் ஆகிடக் கூடாதுன்னு தானா இவ்வளவு துடிக்கற? சிருஷ்டிக்காக இல்ல?” என்று வினவவும்

ஒரு கணம் தனது கண்களை இறுக்க மூடித் திறந்தவன், “யுவா கிரகத்துல என்ன பிரச்சனைன்னு உங்க யாருக்காவது தெரியுமா? இல்ல என்ன பிரச்சனைன்னு கேட்கவாவது செஞ்சிங்களா? எதுவுமே தெரியாம சிருஷ்டிய அங்க அனுப்பிட்டீங்க” என்று கூறவும்

அதே அரிமாவோ, “சரி இப்போ கேட்கறோம் சொல்லு. அங்க என்ன தான் பிரச்சனை?” என்று வினவினார்.

“நம்ம தாவ் கிரகத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சக்தி இருக்கு. அது ஒவ்வொருத்தருடைய தனித்தன்மையாவும் இருக்கு. ஆனா அந்த யுவா கிரகத்துல அங்க இருக்கற மக்கள் எல்லாரிடமும் பொதுவா இருக்கற தனித்தன்மையான சக்தி என்ன தெரியுமா? அசட்டுத் துணிச்சல். அத முட்டாளின் தைரியம்னும் சொல்லலாம்.

ஆமா… பின்விளைவுகள் பத்தி எதுவும் யோசிக்காம தான் மட்டும் தான் பெரியவன். இந்த வானத்துக்குக் கீழ தான் மட்டும் தான் இருக்கேன். ஒட்டு மொத்த அண்டப் பேரண்டமும் எனக்குத் தான் சொந்தம்ன்னு நினைச்சுட்டு, இயற்கை என்பதுல மனிதனும் ஓர் அங்கம் தான்னு மறந்துட்டு அந்த இயற்கையையே அழிச்சுட்டு இருந்தாங்க அந்த மக்கள். இப்போ அடுத்தக் கட்டமா அவங்க கண்டு பிடிச்சுருக்கறது என்ன தெரியுமா? அணு ஆயுதம்…” என்று ரூபன் கூறி நிறுத்தவும், அங்கிருந்தோர் அனைவரின் முகமும் அதிர்ந்து போய் அந்த ஒரு நொடியில் அவர்கள் உடல் முழுதும் வியர்வையால் நனைந்து விட்டிருந்தது.

“ஹ்ம்ம்… அணு ஆயுதம்ன்னு சொன்னதுக்கே உங்களுக்கு இவ்வளவு அதிர்ச்சி ஆகிடுச்சா? முழுசா சொல்றேன் கேளுங்க. அவங்க ஆயுதம் கண்டுபிடிச்சு அத மத்த கிரகங்கள் மேல எல்லாம் உபயோகப் படுத்தல… அது தான் அவங்க இந்த அண்டத்துல தங்களைத் தவிர வேறெந்த உயிரினமும் இல்லன்னு நினைச்சுட்டு இருக்காங்கள்ல. அதனால அந்த அறிவாளிகள், மதியில் உயர்ந்த மகானுபவர்கள் என்ன செய்யறாங்க தெரியுமா? அவங்க உலகத்துக்குள்ளயே இது என்னோட நாடு, அது உன்னோட நாடுன்னு பிரிச்சுட்டு ஒவ்வொருத்தங்களும் இன்னொரு நாட்டு மேல அணு ஆயுதத்தை உபயோகிக்கறாங்க” என்று நக்கலாகக் கூறியவன், இறுதியில் “முட்டாள்கள்.. முட்டாள்கள்…” என்று கடுங்குரலெடுத்து சீறிவிட்டு மேலும் தொடர்ந்தான்.

“அவங்களோட முட்டாள்தனத்தோட முடிவு என்ன தெரியுமா? இப்போ யுவா கிரகமே பாதிச் சிதைஞ்சுடுச்சு, இயற்கை வளங்கள் வத்தி போய்டுச்சு. அதனால அந்த அறிவாளிகள் அவங்க வாழறதுக்காக வேற கிரகம் உருவாக்கப் போறாங்களாம்.

பல வருஷங்களுக்கு முன்னாடி இதே மாதிரி தான் ஒரு கிரகம் அணு ஆயுதங்களால் வெடிச்சு சிதறினத நாம நம்ம கண்ணால பார்த்தோம். அவங்களோட முட்டாள்தனத்தால நம்ம உதவிய ஏத்துக்காததுனால அவங்க அழியறத நாம கைய கட்டி நின்னு வேடிக்கை பார்த்தோம்.

இப்போ வரலாறு திரும்புது. அதனால தான் நான் அவ்வளவு தூரம் சிருஷ்டியை அங்க போக விடாம தடுத்தேன். ஆனா அவ எல்லாரும் நல்லா இருக்கணும்னு போனா. இப்போ அவளைக் காணோம்ன்னு எல்லாரும் கலங்கறீங்க?” என்று தனது நாக்கையே சவுக்காய்க் கொண்டு அனைவரின் முகத்திலும் விளாசினான்.

“அப்படினா… யுவா கிரகத்தையும், நம்ம சிருஷ்டியையும் எப்படிக் காப்பாத்தறது? என்று உயிர் வற்றிட தேவ தேவன் கேட்கவும்

அதிரூபனோ, இரண்டெட்டு அவர்கள் முன்னே வந்து நின்று, “நானே போறேன்… ஆபத்துல இருக்கற ஒவ்வொரு உயிரையும் காப்பாத்தறது எல்லா மக்களோட கடமையும் தான். அதனால நான் யுவாக்குப் போகப் போறேன். அது மட்டுமில்ல சிருஷ்டியை காப்பாத்தறதும் அவளோட கணவனா என்னோட கடமை. அதனால என்னோட சிருஷ்டிக்காக நான் போறேன்” என்று இறுகிய குரலில் கூறினான்.

(தொடரும் – புதன்தோறும்) 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!