in

வல்லபி ❤ (பகுதி 6) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

வல்லபி ❤ (பகுதி 6)

செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5

“அதற்கு சாவி?” என வல்லபி கேட்க

“அந்த கப்போர்டிலேயே தொங்கும், அம்மா  உங்களை மிகவும் விசாரித்தார்கள்” என்றான்.

அடிபட்டதால் உண்டான வலி சரியாக நிவர்த்தியாகாத நிலையில் விஷ்ணு பணியில் சேர்ந்து விட்டதால், அவன் அம்மாவை மதுரையில் ஒரு அபார்ட்மெண்ட் வாடகை எடுத்து அவனுக்குத் துணையாக வைத்து விட்டார் மூர்த்தி.

மூர்த்தி வீட்டிற்குச் சென்று அவன் ஆபீஸ் டைரியை எடுத்துக் கொண்டாள். ஆனால் அங்கு பார்த்த யாமினிப் பாப்பாவின் பெயின்டுகள் அவளை ஆச்சர்யப்படுத்தின.

வல்லபியையே ஆறு வயதில், பன்னிரண்டு வயதில் பதினெட்டு வயதில் படம் எழுதினால் எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது. யாமினிப் பாப்பாவின் குழந்தைப் படத்தை கிராபிக்ஸ் மூலம் டெவலப் செய்து பெயிண்ட் செய்திருக்கிறான்.

‘விஷ்ணுவிற்கு பெயிண்டிங் தெரியுமோ?’ என்று ஆச்சரியப்பட்டாள் வல்லபி.

அவன் மனதில் அந்தக் குழந்தை எப்படி ஆழப்பதிந்திருக்கிறாள் என்று உணர்ந்து கொண்டாள். சுருட்டி வைக்கப்பட்டிருந்த அந்த பெயிண்டுகளின் அடியில் இன்னொரு குட்டி டைரி இருந்தது. மற்றவர்கள் டைரியைப் படிப்பது நாகரிகம் இல்லையென்று அறிவு உணர்த்தினாலும், மனம் அதைப் படிக்கத் தூண்டியது.

சமீப காலமாக எழுதப்பட்டு வரும் டைரி போல் இருக்கிறது. பக்கத்திற்குப் பக்கம் ஒவ்வொரு நாள் குறிப்பும் முடிக்கும் போது வல்லபியும், யாமினியும் ஒருவரே என்று முடித்திருந்தான்.

‘சரிதான், இவன் டைரியைப் பார்த்தால் நாமே லூசாக விடுவோம்’ என்று நினைத்துக் கொண்டாள். இருந்தாலும் டைரியில் வல்லபியின் அழகைப் பற்றி வர்ணித்திருந்ததும், அவள் மென்மையான குணங்களை விவரித்திருந்ததும் அவளுக்கு சந்தோஷத்தையும், அதே நேரத்தில் அவனிடம் நெருக்கமும் உண்டாகியது.

அந்த டைரியை எடுத்துக் கொண்டாள். கனகாவிடம் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லி விட்டு, மதுரைக்கு விஷ்ணுவின் வீட்டிற்குக் கிளம்பி விட்டாள்.

அவளுக்கு முன்பே சுகந்தியும் முரளியும் அங்கு வந்து விட்டிருந்தனர். அந்த சின்ன டைரியைப் பார்த்து விஷ்ணு துள்ளிக் குதித்தான்.

“நானே இந்த டைரியை எடுத்துக் கொண்டு வரச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். சொல்லாமலே நீங்கள் எடுத்து வந்தது மிகவும் சந்தோஷம்” என்றான், அவளை ஏதோ ஒரு பொருள் பொதிந்த பார்வையில் பார்த்துக் கொண்டு.

வல்லபிக்கு அவன் பார்வை ஏதேதோ உணர்த்தியது. கன்னம் சிவந்து தலை கவிழ்ந்தாள். அவளை ரசித்துப் பார்த்து சிரித்துக் கொண்டான் விஷ்ணு.

ருக்குத் திரும்பிய வல்லபிக்கு மனம் மிகவும் சந்தோஷமாக இருந்தது. விஷ்ணுவை விட்டு மனம் அகல மறுத்தது. கனகா மட்டும் ஏதோ புரிந்து கொண்டாள்.

“மதுரைக்குப் போகும் முன்பு இருந்த வல்லபி அம்மா வேறு, திரும்பிய பின்பு பார்க்கும் வல்லபி அம்மா வேறு”  என்று கிண்டல் செய்து கொண்டிருந்தாள் கனகா.

விஷ்ணுவும் மாமாவைப் பார்க்கும் சாக்கில் இரண்டு நாட்கள் விடுமுறையில் பின்னாலேயே வந்து விட்டான். வல்லபி மருத்துவமனையில் வேலையாக இருக்கும் போது மட்டும் நான்கு முறை விஷ்ணு போன் செய்து விட்டான். வேலை முடிந்ததும் அவன் வீட்டிற்கு வருவதாக வல்லபி வாக்களித்த பின்னர் தான் அமைதியானான்.

மருத்துவமனையிலிருந்து வந்து குளித்து விட்டு, கனகா கொடுத்த டிபன், காபியை சாப்பிட்ட பிறகு தன் ஸ்கூட்டி எடுத்துக் கொண்டு விஷ்ணுவின் வீட்டிற்கு கிளம்பினாள். கிளம்பும் போதே ஸ்கூட்டியில் போவதை தடுத்தாள் கனகா. 

“காரிலேயே தனியாகப் போக வேண்டாம் என்று விஷ்ணு சார் அவர் வீட்டு டிரைவரை அனுப்பியுள்ளார். நீங்கள் என்னம்மா, ஸ்கூட்டியில் போகிறேன் என்கிறீர்கள். இருங்கள் நானும் வருகிறேன்” என்று எல்லா வேலைகளையும் போட்டது போட்டபடி, தெருக்கதவைத் தாழிட்டுக் கொண்டு வல்லபிக்கு பின்னால் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

வல்லபிக்குக் காரில் போவதை விட ஸ்கூட்டியில் போவது மிகவும் பிடிக்கும். சுதந்திரமாக இறக்கைகள் கட்டிப் பறப்பது போல் இருக்கும். அதனால் வேகமும் அதிகமாக இருக்கும். இப்போது விஷ்ணு வீட்டிற்குப் போவதால் வேகம் அவளையறியாமலேயே அதிகமாக இருந்தது. பின்னால் உட்கார்ந்திருந்த கனகா, பயத்தில் வல்லபியை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள்.

“டாக்டரம்மா, நீங்கள் இப்போது விஷ்ணு சார் வீட்டிற்குப் போகிறீர்களா இல்லை சொர்க்கத்திற்கா?” என்றாள் கண்களை மூடி பயத்துடன்.

“சரியான பயந்தாங்கொள்ளி” என்று கலகலவென்று சிரித்துக் கொண்டே இன்னும் வேகத்தை அதிகப்படுத்தினாள்.

அப்போது எதிர்பாராத விதமாக நான்கு முரடர்கள் கையில் தடியோடு எதிரே வந்தனர். ஒருவன் மட்டும் தன் கையிலிருந்த தடியை வல்லபியின் ஸ்கூட்டியின் சக்கரத்தின் மேல் எறிந்தான்.

வல்லபி இதைத் சற்றும் எதிர்பார்க்காததால் சடன்பிரேக் போட முயன்று முடியாமல், ஸ்கூட்டி நடுரோட்டில் குப்புற கவிழ்ந்தது. ஸ்கூட்டியில் இருந்து விழுந்த இருவரும் எழுந்திருப்பதற்குள், மற்றவர்கள் அவர்களைத் தடியால் அடிக்கத் தொடங்கினார்கள்.

“டேய் கன்னையா, ஏண்டா எங்களை அடிக்கிறாய்?” என்று கத்திக் கொண்டே தன் ஹெல்மெட்டைக் கழற்றினாள் வல்லபி.

“ஐயோ டாக்டரம்மா, நீங்களா? டேய் நிறுத்துங்கடா” என்று ஒருத்தன் மற்றவர்களைப் பார்த்துக் கூச்சலிட்டான்.

“என்ன கன்னையா, ஏன் இப்படிக் கழியால் அடிக்கிறீர்கள்? நான் என்ன தப்பு செய்தேன்?” என்றாள் வலியில் துடித்த வல்லபி.

“ஐயோ டாக்டரம்மா நீங்களா? டேய் மாணிக்கம், இந்த டாக்டரம்மா தான் என் ஆறு வயது மகனை டிப்தீரியா ஜுரத்தில் இருந்து ஒரு நாள் இரவு முழுவதும் கண் விழித்துக் காப்பாற்றினார்கள்” என்றான் கண்கள் கலங்க.

இன்னொரு ஆளும், “இந்த டாக்டரம்மா தான் என் மனைவிக்குப் பிரசவம் பார்த்தார்கள். எங்களை மன்னித்து விடுங்கள் டாக்டரம்மா, எல்லாம் அந்த ராஜாபாதரால் தான்” என்றான்

“என்ன?” என்றாள் ஆச்சரியத்துடன் வல்லபி.

“நீங்கள் அடித்த அடியில் என் கை எலும்பு உடைந்து விட்டது என்று நினைக்கிறேன். வலி உயிர் போகிறது, என் கையைத் தூக்கினால் வளைந்து விடுகிறது. நீங்கள் கிளம்புங்கள்” என்றாள் மேலும்.

இதற்குள் கனகா போன் செய்து விஷ்ணுவும், மூர்த்தியும் காரில் வந்து விட்டனர். மூர்த்தியைப் பார்த்தவுடன் அந்த நான்கு அடியாட்களும் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்கள்.

“டாக்டரம்மா, எங்களை மன்னித்து விடுங்கள். போலீஸிற்கெல்லாம் போகாதீர்கள். நாங்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த கொடூர வேலையைச் செய்தோம். ஐயா, எங்களை மன்னிக்க வேண்டுமென்று நீங்கள் சொல்லுங்கள்” என்றனர்.

“போலீசெற்கெல்லாம் போக மாட்டோம். எய்தவன் இருக்க அம்பை நோக மாட்டோம். நீங்கள் கிளம்புங்கள். மூர்த்தி சார், எனக்கு கையில் ஏதோ பிராக்ச்சர் என்று நினைக்கிறேன். நான் பெரியகுளம் போய்த் தான் எக்ஸ்-ரே எடுத்து அங்கே உள்ள ஆர்த்தோ டாக்டரிடம் ட்ரீட்மென்ட் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். கனகா, உனக்கும் இலவச அடிகள் விழுந்தது போல் இருக்கிறதே. வலி பலமோ?” என்றாள் பரிதாபமாக வல்லபி.

விஷ்ணு காரின் பின் ஸீட்டில் வல்லபி உட்காருவதற்காகக் கார் கதவைத் திறந்து விட்டு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான். ஆனால் வல்லபிக்கு காலிலும் பலமான அடி போலும். வலியில் அவள் முகம் சுருங்கியது. காலைத் தூக்கி காரில் வைக்க முடியாமல் தடுமாறினாள்.

விஷ்ணு ஓடி வந்து அவளைத் தாங்கிப் பிடித்துத் தூக்கி மென்மையாக ஒரு மலர் மாலையை வைப்பது போல் உட்கார வைத்தான். அவள் பக்கத்தில் கனகாவை உட்காரச் சொன்னான். மூர்த்தி எல்லாவற்றையும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தார். அவருக்கு ஏதோ புரிந்தாற் போல் இருந்தது, ஆனால் ஒன்றும் பேசவில்லை.

“மாமா, உங்களை வீட்டில் விட்டு பிறகு பெரியகுளம் போகட்டுமா?” என்றான் விஷ்ணு.

“அதெல்லாம் வேண்டாம், உடனே எல்லோரும் பெரியகுளம் போக வேண்டும். வல்லபி வலியை வெளியே காட்டாமல் பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டு இருப்பதால் அடியின் அளவு நமக்குத் தெரியவில்லை. கை நன்றாக வீங்கி விட்டது, காலும் வலிக்கிறது என்கிறாள். கனகாவிற்கும் அடி பலம் தான் போல் இருக்கிறது. காரில் பிளாஸ்கில் காபி இருக்கிறது. இருவருக்கும் கொடு”

பிளாஸ்க்கில் இருந்த காபியை இருவருக்கும் கொடுத்தான். வல்லபியின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அவள் கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டான். சூடாக காபி உள்ளே சென்றதும் வலியாலும், களைப்பாலும் வல்லபி தன்னையறியாமல் கண்களை மூடி, விஷ்ணுவின் தோளில் சாய்ந்து கொண்டாள். மூர்த்தியை நினைத்து நெளிந்தான் விஷ்ணு.

மூர்த்தியோ, கண்களாலே அவனை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். கனகாவும் தன் சந்தேகத்திற்கு விடை கிடைத்தது என்று லேசாக சிரித்துக் கொண்டாள்.

“நான் கார் ஓட்டுகிறேன். நீ வல்லபியின் பக்கத்தில் உட்கார்ந்து கொள், கொஞ்சம் ஆறுதலாகவும், தைரியமாகவும் இருக்கும்” என்றார் மூர்த்தி.

கனகாவிற்கு அடிதான் பலமாக இருந்ததே தவிர, எலும்பு முறிவு இல்லை. ஆனால் வல்லபியின் இடது கையின் மேல் எலும்பில் ‘ஹேர் பிரெத் பிரேக்கிங்’ என்றார்கள். கட்டுப் போட்டு, பெயின் கில்லர் மாத்திரை கொடுத்து ஒரு வாரம் ஓய்வு எடுத்தால் போதும் என்று கூறி அனுப்பி விட்டார்கள். வல்லபியையும், கனகாவையும் அவர்கள் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு, மதுரைக்குக் கிளம்பி விட்டான் விஷ்ணு.

விஷயம் தெரிந்து, மல்லிகா அலறிக் கொண்டு பத்து நாட்கள் விடுமுறையில் தாமரைக்குளம் வந்து விட்டாள். அவள் வல்லபி, கனகா இருவரையும் எந்த வேலையும் செய்ய விடவில்லை. கனகா, எவ்வளவோ தடுத்தும் மல்லிகா அவளுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்தாள்.

ன்று ஞாயிற்றுக்கிழமை. கனகாவிற்கு அடிபட்ட வலி ஏதும் இல்லை. ஆனால் வல்லபிக்கு லேசாக எலும்பு முறிவு என்பதால், வலி நிவாரணி எடுத்தும் வலி இருந்து கொண்டே இருந்தது. வல்லபியின் மருத்துவவிடுப்பு இன்னும் முடியவில்லை. ஆதலால் வல்லபி தூங்கிக் கொண்டிருந்தாள். கனகா முடிந்த அளவு மல்லிகாவிற்கு சமையலில் உதவி செய்து கொண்டிருந்தாள்.

யாரோ காலிங்பெல் அடிக்கும் ஓசை கேட்டு போய் கதவைத் திறந்தாள் கனகா. அவ்வளவு காலையில் மூர்த்தியையும், விஷ்ணுவையும் பார்க்க அவளுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

“வாங்க சார், உட்காருங்கள். டாக்டரம்மா தூங்குகிறார்கள். டாக்டரின் அம்மா சென்னையிலிருந்து வந்திருக்கிறார்கள். இருங்கள், அவர்களை அழைத்து வருகிறேன்” என்றாள் கனகா.

“கனகா, யார் வந்திருப்பது? யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டபடி உள்ளேயிருந்து வந்தாள் மல்லிகா.

மல்லிகாவைப் பார்த்ததுமே மூர்த்தி தன் இருக்கையிலிருந்து எழுந்து விட்டார்.

“தேவி, நீயா? அப்படியானால் வல்லபி?” என்றவர் விழிகள் பிதுங்க, வாயில் நுரை தள்ள, தன்னிலை தவறி வழக்கமாக வரும் வலிப்புடன் தொப்பென்று சோபாவில் உட்கார்ந்தார். அவரை அப்படியே தாங்கிப் படுக்க வைத்தான் விஷ்ணு.

மல்லிகாவின் நிலையோ இன்னும் மோசம். பேயைக் கண்டவள் போல் அரண்டு போய் நின்றாள். இந்த கலாட்டாவில் கனகா ஓடிப்போய் வல்லபியை எழுப்பினாள். அவள் எழுந்து வருவதற்குள் விஷ்ணு, மூர்த்தியின் பாக்கெட்டிலிருந்த ஒரு மாத்திரையை எடுத்து மூர்த்தியின் இறுக மூடியிருந்த வாயில் பலவந்தமாகப் போட்டு தண்ணீரும் ஊற்றினான். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு பிரமை பிடித்தவள் போல் நின்றாள் மல்லிகா.

எல்லாமே சிறிது நேரம் தான். மல்லிகா தான் போய் மிதமான சூட்டில் ஒரு டம்ளர் பாலைக் கொண்டு வந்து விஷ்ணுவிடம் கொடுத்தாள். வல்லபி தன் தாயின் அருகில் வந்து நின்றாள்.

தன் தாயை ஏதோ கேட்பது போல் ஏறிட்டுப் பார்த்தாள். அவள் கேள்விக்கு பதில் சொல்வது போல் ‘ஆமாம்’ என்று தலையசைத்தாள் மல்லிகா.

“அம்மா” என்றழைத்து, அவள் கைகளை ஆதரவுடன் பிடித்துக் கொண்டாள் வல்லபி.

வலிப்பிலிருந்து தெளிந்த மூர்த்தியும், “தேவி” என்று அழைத்துக் கொண்டு தள்ளாடியபடியே அருகில் வந்தார். அவரை உறுத்துப் பார்த்தபடி வல்லபியின் கைகளை உதறி விட்டு மல்லிகா அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.

“அத்தை, வெளியே வாருங்கள். கதவை ஏன் தாழ்ப்பாள் போடுகிறீர்கள்?” என்று ஓடிச் சென்று கதவைத் தட்டினான் விஷ்ணு.

“விஷ்ணு, நீங்கள் போய் விடுங்கள். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. என்னால் இப்போது யாரையும் பார்க்க முடியாது” என்றாள் மல்லிகா அழுகையும் ஆத்திரமும் கலந்து.

மூர்த்தியோ, “வல்லபி” என்று துக்கம் தொண்டையை அடைக்க அழைத்துக் கொண்டு வல்லபியிடம் வந்தார். வல்லபி ஏறக்குறைய நிலமையைப் புரிந்து கொண்டாள்.

“நான் அப்பாவை இதுவரைப் பார்த்ததோ, அவர் அன்பை அனுபவித்ததோ இல்லை. அம்மா தான் எனக்கு எல்லாம். அவரையும் நான் இழக்கத் தயாராக இல்லை. எல்லோரும் போய் விடுங்கள்” என்று ஒரு கையில் கட்டுடன், காலில் லேசான வலியுடன் விந்திவிந்தி நடந்து கொண்டே கூறினாள் வல்லபி.

மூர்த்தி வல்லபியின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “என்னை மன்னித்து விடம்மா. எல்லாத் தவறுக்கும் காரணம் நான் தான். என் நிலையை நான் எப்படி  உங்களுக்கு விளக்கிச் சொல்வேன்?” என்று அழுதார்.

“விஷ்ணு, தயவு செய்து மூர்த்தி சாரை அழைத்துக் கொண்டு கிளம்புங்கள். நீங்கள் இங்கிருந்து போனால் தான் என் அம்மா வெளியே வருவார்கள்” என்று கூறி நிற்க முடியாமல் தடுமாறினாள் வல்லபி. ஓடிப்போய் அவளைத் தாங்கிக் கொண்டான் விஷ்ணு.

இந்த “வல்லபி” நாவல் அச்சுப் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. நாவலை வாங்க விரும்பும் வாசகர்கள், கீழே பகிர்ந்துள்ள ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின் QR Code Scan செய்து தொகையை செலுத்தி Screen Shot எடுத்து, 77082 93241 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியுடன் பகிருங்கள். விரைவில் புத்தகம் உங்களை வந்து சேரும். அல்லது 77082 93241 என்ற எண்ணில் அழைத்தும் ORDER செய்யலாம். நன்றி

(தொடரும் – திங்கள் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

பெற்றால் தான் பிள்ளையா (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி.

மங்குவின் சங்கடம் (சிறுவர் கதை) – ✍ லலிதா விஸ்வநாதன், நாகப்பட்டினம்