சிறுகதைகள் சிறுவர் பக்கம்

மங்குவின் சங்கடம் (சிறுவர் கதை) – ✍ லலிதா விஸ்வநாதன், நாகப்பட்டினம்

செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

குளத்தங்கரையில் தன் வழக்கமான அரசமரக் கிளையில் ‘உர்’ரென்று உட்கார்ந்திருந்த குரங்குக் குட்டி மங்கு, இலக்கின்றி  கையிலிருந்த பூமாலையைப் பிய்த்துக் கொண்டிருந்தது.  குச்சியால் வாங்கிய அடிகளினால் உடம்பு வலித்தது, மனமும் வலித்தது.

அப்படி மங்கு என்னதான் பெரிய தப்பு செய்து விட்டது?

தெப்பத்தெருவில் வீட்டுக் கூரைகளில் தாவித் தாவி  வந்து கொண்டிருந்த போது வழியில் ஒரு வீட்டு வாசலில் ஒரு தட்டில் நல்ல வாழைப்பழம் இரண்டு சீப்பு கேட்பாரில்லாமல் இருந்தது. ரொம்ப பசித்ததால் மங்கு ஆசையாகப் போய் ஒரு சீப்பு பழத்தை கையில் எடுத்தது. அவ்வளவு தான்.

“ஐயோ குரங்கு குரங்கு” என்று திடீரென்று ஒரு சிறுவன் கத்த, எங்கிருந்தோ இரண்டு பேர் ஆளுக்கொரு குச்சியோடு வந்து பட்பட்டென்று அடித்து விட்டார்கள். சிறுவன் ஒரு கல்லை விட்டெறிய, அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று மங்கு ஓட்டமெடுத்தது. கூரைகளிலும் மதில்களிலும் தாவி ஓடி இங்கு குளக்கரைக்கு வந்து விட்டது.

கண்ணீரோடு கீழே குனிந்து பார்த்த மங்குவின் அழுகை அதிகரித்தது. தண்ணீரில் தெரிந்த தன் பிம்பத்தைப் பார்க்கும் போது கோபமும் வெறுப்பும் வந்தது. நான் மட்டும் ஏன் தான் இப்படி அசிங்கமாக இருக்கேன்? எனக்கு மட்டும் ஏன் இத்தனை பிரச்னைகள்? நம்மைத் தவிர வேறு எல்லாரும் நன்றாக இருக்கிறார்களே.

அம்மாவிடம் சொன்னால் ஒரே புத்திமதி. நீ நீயாக இருப்பதுதான் அழகு என்பாள். ஒவ்வொரு உயிரினத்துக்கும் அதனதன் முக்கியத்துவம் உண்டு என்பாள். மனிதனுக்கு அடுத்தது நாம் தான்  என்று பெருமைப்பட வேண்டும் என்பாள். இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படாதே என்பாள்.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை என்பாள். ஒரே போர்.

தினம் தினம் மங்கு படும் பாடு பற்றி அம்மாவுக்கு என்ன தெரியும்?

எங்கே போனாலும் நம்மை அடிக்கவென்றே தனியாக கம்பு ரெடியாக வைத்திருக்கிறார்கள். நம் தலை அல்லது வாலைப் பார்த்ததும் நொடியில் எல்லா பொருட்களையும் ஒளித்து வைத்து விடுகிறார்கள்.

சும்மா தேமேன்னு உட்கார்ந்திருந்தால் கூட இந்த குழந்தைகள் விடுவதில்லை. மெனக்கெட்டு எதிரே வந்து வெவ்வெவ்வே என்று அழகு காட்டுவது, வாலைப் பிடித்து இழுப்பது, கல்லெறிவது, வெடிவைப்பது என்று விதவிதமாக வம்புக்கிழுக்கிறார்கள். எப்படியோ ஒரு வாழைப்பழம் கிடைத்தால், அதைக்கூட நிம்மதியாகச் சாப்பிட முடிவதில்லை.

இந்த நாய்க்குட்டி டாமியை பார்க்கும்போதெல்லாம் மங்குவுக்குப் பொறாமையாக இருக்கும். உணவு தேடி அலைய வேண்டாம். உறைவிடம் தேடி ஓட வேண்டாம். மனிதர்களுக்கு சமமாக வாக்கிங், ஜாகிங்.. அந்தப் பையன் டாமியை எவ்வளவு அன்பாகப் பார்த்துக் கொள்கிறான? கழுத்தில் ஒரு காலருடன் ஏசி காரின் ஜன்னலிலிருந்து அது எட்டிப் பார்க்கும்போது எப்படி ‘கெத்’தாக இருக்கு?

இதேபோல் தான் அந்த ஆட்டுக்குட்டி அம்முலுவும். சாதுவாக புல் மேய்ந்துக் கொண்டு, எப்போதாவது அகத்திக் கீரை அல்லது முருங்கைக்கீரைக்கு அது எம்புவதைப் பார்த்தால் யாராவது அதைப் பறித்துக் கொடுத்து உதவுவார்கள்.

அதிலும் அந்த கடைசி வீட்டுப் பெண், அம்முலுவை தூக்கி அணைத்தவாறு, “மேரி ஹேட் எ லிட்டில் லேம்ப்” என்று பாடுவது எவ்வளவு அழகாக இருக்கும்?

இவர்களை விடு. இந்த மான்குட்டி பொன்னி எவ்வளவு அதிர்ஷ்டசாலி? எப்போதும் சிறுமியர் அதனுடன் எவ்வளவு மகிழ்ச்சியாக விளையாடுகிறார்கள்? பொன்னியின் முதுகைத் தடவுவது என்ன, செல்லமாகச் சீண்டுவது என்ன, அருகில் நிறுத்தி ஃபோட்டோ எடுத்துக் கொள்வது என்ன, போட்டி போட்டுக்கொண்டு புல் கொடுப்பதென்ன. பொன்னியும் தன் அழகிய கண்களால் எல்லோரையும் கவர்ந்து விடும். கொம்புகளை ஆட்டி ஆட்டி ஜாலியாகத் துள்ளிக் குதித்து ஓடிக்கொண்டிருக்கும்.

“ஹ்ம்.. இந்த டாமி, அம்முலு அல்லது பொன்னி போல மாற வழியே இல்லையா?” கவலையும் ஏக்கமுமாக கடைவீதியில் ஒரு மொட்டை மாடியில் உட்கார்ந்திருந்தது மங்கு. இலக்கின்றி எதிர்க்கடையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது தான் அந்த அதிசயம் நடந்தது.

சற்று முன் தான் தன் அம்மாவுடன் ஒரு சிறுவன் “அவதார் ஆடையகம்” என்ற அந்தக் கடைக்குள் சென்றிருந்தான். இப்போது அந்த அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு கரடி வெளியே வந்தது. இதென்ன விந்தை?

மங்கு மெதுவாக அந்தக் கடையருகில் சென்று ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தது.  அங்கே நிறைய ஆடைகள் தொங்கிக் கொண்டிருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மிருகத்தைப் போன்ற ஆடை. இன்னொரு பக்கம் பல விதமான முகங்கள்.

உள்ளே சில குழந்தைகள் ஆளுக்கொரு உடையை அணிந்து வெவ்வேறு மிருகமாக மாறிக் கொண்டிருந்தார்கள். ஏதோ ‘மாறு வேடப் போட்டி’ என்று பேசிக் கொண்டார்கள்.

மங்குவுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. தன் நீண்ட நாள் பிரச்சினைக்கு விடை கிடைத்து விட்டது. ஜன்னல் வழியாக மங்கு கையை நீட்டி ஒரு நாய் உடையைப் பிடித்து இழுத்தது. மரக்கிளைக்குச் சென்று அதை அணிந்து கொண்டு, தெருவில் இறங்கி உற்சாகமாக நடந்தது.

மைதானத்தில் சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மங்குவைப் பார்த்ததும் ஒரு சிறுவன் ஓடி வந்தான்.

“இங்கே பார்றா, நான் ஆசைப்பட்ட மாதிரியே அழகான நாய்க்குட்டி” என்றவன் மங்குவை ஆசையுடன் தூக்கிக் கொண்டு வீட்டை நோக்கி ஓடினான்.  மங்குவுக்கும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

வீட்டை அடைந்ததும் டைனிங் டேபிளில் இருந்த வாழைப்பழத்தைப் பார்த்ததும் மங்கு தன்னை மறந்து தாவி எடுக்க  முயன்றது.  உடனே சிறுவனின் அம்மா ஒரு சங்கிலியைக் கொண்டுவர, இருவருமாக மங்குவை திண்ணையில் ஒரு தூணோடு கட்டி விட்டனர்.

‘இதென்ன பிரச்னை?’ மங்குவால் இரண்டு அடிக்கு மேல் நகர முடியவில்லை. கொஞ்சம் முயன்றால், கழுத்தில் சங்கிலி அழுத்தியது.

வாழைப்பழத்தையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, சிறுவன் ஒரு சிறு தட்டில் இரண்டு பிஸ்கெட் கொண்டு வந்து  அருகில் வைத்தான். ஹ்ம்… மங்குவுக்கு பிஸ்கெட்டே பிடிக்காதே

மறுநாள் விடிந்ததும் சிறுவன் மங்குவை சங்கிலியுடன் வெளியே அழைத்துச் சென்றான். இதென்ன அநியாயம்? இயற்கை உபாதைகளுக்குக் கூட இவன் சொன்ன நேரம், சொல்கிற இடம் தானா? சிறிய சங்கிலி என்பதால் வேகமாகவோ, மெதுவாகவோ நடக்க முடியவில்லை. சிறுவனுடன் சேர்ந்தே நடந்து ஒருவழியாக வீடு திரும்பியது மங்கு.

மீண்டும் தூணில் கட்டி, பிஸ்கெட், பால் வைத்து விட்டு, எல்லோரும் ஸ்கூல், ஆஃபீஸ் என்று கிளம்பி விட்டார்கள்.

மாலை வரை அந்த இரண்டடிக்குள்ளேயே சுற்றிச் சுற்றி நொந்து போய் விட்டது மங்கு. சீ. இதைத்தான் ‘நாய் பட்ட பாடு’ என்கிறார்களா?

மாலையில் மைதானத்தில் நண்பர்களிடம் காட்ட மங்குவை சங்கிலியுடன் இழுத்துச் சென்றான் சிறுவன். ஆத்திரமும் வருத்தமும் தலைக்கேற, கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் சங்கிலியை அறுத்து விட்டு ஓட்டமெடுத்தது மங்கு. போகும் வழியிலேயே நாய் உடையைக் கழற்றி வீசி எறிந்தது.

மறுநாள் மீண்டும் ‘அவதார் ஆடையக’த்துக்குச் சென்ற மங்கு, ஓரு ஆட்டுக்குட்டியின் உடையை எடுத்து மாட்டிக் கொண்டது. பின், கோடி விட்டுத் தோட்டத்தில் போய் சாதுவாக நின்று கொண்டது.

எதிர்பார்த்தது போலவே உள்ளேயிருந்து ஓடி வந்த சிறுமி மங்குவை ஆசையுடன் அணைத்துக் கொண்டாள். உற்சாகமாக தோட்டத்திலும் வீட்டிலும் மங்குவுடன் விளையாடினாள். இடையிடையே தின்பதற்கு அவளுக்குக் கிடைத்த வாழைப்பழம், கடலை ஆகியவற்றை ஆசையுடன் மங்குவுக்கும் கொடுத்தாள். ‘அப்பாடா’ என்று நிம்மதியாக தோட்டத்தில் உறங்கியது மங்கு.

காலையிலேயே சிறுமி வந்து பார்த்துவிட்டுப் போனாள். ஆனால் ஹாயாக மரத்தடியில் உலாவிக் கொண்டிருந்த மங்குவின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. சிறிது நேரத்திலேயே சிறுமியின் பெற்றோர் தோட்டத்துக்கு வந்தனர்.

“நல்லவேளை, இந்த ஆட்டைத் தேடி இதுவரை யாரும் வரலை. நாளை மறுநாள் விருந்துக்கு மட்டன் இன்னும் ஆர்டர் பண்ணலை. இந்த ஆட்டையே உபயோகித்துக் கொள்ளலாம்” என்றார் அப்பா.

“ஆமாங்க… இதை வெட்டினால் ஏன்னு கேட்க யாருமில்லைன்னு தான் தோணுது” என்றாள் அம்மா.

அடப்பாவிகளா. இதற்காகத்தான் ஆடு வளர்க்கிறார்களா? ஆர்வமாக வளர்க்கறார்களே என்று பார்த்தால், உயிருக்கே வேட்டு வைக்கிறார்களே? ஐயையோ. தப்பித்தால் போதும் என்று மங்கு, அணிந்திருந்த ஆட்டு உடையைக் கழற்றி புதரில் வீசிவிட்டு, தன் மரக்கிளைக்குச் சென்றது.

மங்கு தீவிரமாக யோசித்துப் பார்த்தது. பின் ஒரு முடிவுடன் ‘அவதார் ஆடையக’த்துக்குச் சென்று ஒரு மான் உடையைத் தேர்ந்தெடுத்தது.

இந்த மனிதர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நம்பவும் முடியவில்லை. பிரச்னையே வேண்டாம். பேசாமல் சிறிது தொலைவிலுள்ள சிறு காட்டுக்குப் போய் விடலாம்.

காட்டுக்குள் சென்ற மங்கு சிறிது நேரம் விளையாடிவிட்டு, ஒரு தண்ணீர்க் குட்டையில் நீர் அருந்தச் சென்றது. அருகில் இன்னொரு மானும் நீர் அருந்திக் கொண்டிருந்தது. திடீரென்று எங்கிருந்தோ வந்த ஒரு சிறிய குண்டு அதன் மேல் பாய, அந்த மான் சுருண்டு விழுந்தது. உற்றுப் பார்த்தால் தூரத்தில் இரண்டு வேட்டைக்காரர்கள். பயந்து போய் மங்கு அருகிலிருந்த மரத்திற்குப் பின்னால் போய் ஒளிந்து கொண்டது.

ஆனால் மறுபுறத்திலிருந்து ‘கொர்ர் கொர்ர்’ என்று யாரோ  உறுமும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த மங்குவுக்கு சப்த நாடியும் அடங்கி விட்டது.

“ஐயையோ… சிங்கம்…” உடல் முழுதும் உதறலெடுக்க, நொடியில் மங்கு மரத்தின் மேல் தாவி ஏறியது. மான் உடையைக் கழற்றி வீசியவாறு, மரங்களினூடே தாவித் ஓடியது.

கண்ணை மூடிக்கொண்டு தம்கட்டி ஒரே மூச்சில் ஓடி, மங்கு தன்னையறியாமலேயே தன் வழக்கமான அரசமரத்துக் கிளைக்கு வந்து சேர்ந்தது. நீண்ட நேரம் ஓய்வெடுத்த பின்பே பதட்டம் தணிந்தது.

அம்மா சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் இப்போது புரிந்தது. நாம் நாமாக இருப்பதே உயர்வு என்பது தெளிவாகப் புரிந்தது.

பிறகென்ன? இப்போதெல்லாம் மங்குவின் மகிழ்ச்சிக்கும் உற்சாகத்துக்கும் அளவே இல்லை.

(முற்றும்)

Similar Posts

5 thoughts on “மங்குவின் சங்கடம் (சிறுவர் கதை) – ✍ லலிதா விஸ்வநாதன், நாகப்பட்டினம்
  1. அருமையான கதை, எளிமையான நடை. மிக அற்புதம்.

  2. நாம் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் “சௌக்கியமே “என்பதற்கு ஒரு அற்புதமான விளக்கத்துடன் இந்த கதை அமைந்துள்ளது . வாழ்த்துக்கள்🙏🙏

  3. “Naam naamaagavE irunthu vittaal entha vitha prachnaiGaLukkE idamillai. Innoruvaraip pOl naam eppadi aaga mudiyum? Enna cholReenga!!!

    -“M.K.Subramanian.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!