in

காக்க! காக்க! ❤ (பகுதி 9) – ✍ விபா விஷா, அமெரிக்கா

காக்க! காக்க! ❤ (பகுதி 9)

செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8

வெப்பம் கொடுக்கும் வெய்யோனே மொத்தமாய் உருகி அவனுக்குள் மிச்சமின்றி அமிழ்ந்து விட்டதாய் ஒரு நிறைவு. உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும், தனது எடையிழந்து காற்றில் சிதறி விடுவதாய் ஒரு பிரமை. சிலுசிலுக்கும் நீரோடையில் துள்ளி விளையாடும் சிறு மீனாய் அவனிருப்பதாய் ஒரு மகிழ்வு.

வானில் உள்ள லட்சம் விண்மீனும் ஒட்டுமொத்தமாய் அவன் கண்ணுள், மலையருவியின் ஒட்டுமொத்த சுகந்தமானஅவள் அவனுள்.

தரை தொடாத பச்சிளம் குழந்தையின் மென்பாதமாய் மிருதுவாகி போனது அவன் நெஞ்சம். உள்ளம் இப்பொழுதே அவளின் கரம் பற்றி உலகையே வலம் வர துடித்தது.

இத்தனை காலம் கழித்து இன்று அவளை நேரில் பார்த்ததிலேயே அத்தனையாய் அவன் சுகித்துப் போயிருக்க, அவளோ தூரத்தில் தெரியும் இவன் பக்கம் திரும்புவதாய்க் கூட இல்லை.

அதிரூபனின் பார்வை சென்ற திசையை நோக்கி தானும் பார்த்தான் வாசு. உடனே, “என்ன ரூபா… என்ன ஆச்சு? ஏன் திடீர்னு அப்படியே நின்னுட்ட?” என்று அதிரூபனை பார்த்து அவன் கேட்க, பதில் ஏதும் பேசாது சிருஷ்டியை நோக்கி தன் ஆள்காட்டி விரலால் சுட்டினான் அவன்.

அப்பொழுது அவனது மலர்ந்த முகத்தில் இருந்த அந்த மலர்ச்சியைக் கண்ட வாசுவும், “உங்களுக்கெல்லாம் எப்படிடா இந்தச் சூழ்நிலையிலும் கூடச் சைட் அடிக்கத் தோணுது?” என்று நக்கலுடன் நொந்து கொண்டே கேட்க, அவனை அதே சிரிப்பு மாறாமல் கூடவே கொஞ்சம் குழப்பமான பார்வையுடன் பார்த்தான் அதிரூபன்.

பின்பு வாசு ஏதோ தவறாகப் புரிந்து கொண்டான் என்று உணர்ந்த அவன், “அதுதான் சிருஷ்டி வாசு” என்று தெளிவுபடுத்தினான்.

உடனே வாசுவுக்கு ஆனந்த அதிர்ச்சி. பின்னர், “அப்படியே நின்னு பார்த்துட்டு இருந்தா போதுமா? சீக்கிரம் வா, அவ இப்ப எங்க தங்கி இருக்காள்ன்னு பார்க்கலாம். அவகிட்ட பேசவும் முயற்சி பண்ணலாம்” என்று கூறி, அவர்கள் யகுசாவை சுற்றி பார்க்க வேண்டி அளிக்கப்பட்டிருந்த அந்த இருசக்கர வாகனத்தில் அவளது அந்தப் பெரிய காரை பின் தொடர்ந்து சென்றனர்.

ஆனால் அவள் போய்ச் சேர்ந்த இடமோ மகிந்தனின் வீடு. அதைக் கண்டு வாசுவிற்கு பேரதிர்ச்சி.

“ரூபா இது அந்த மகிந்தனோட வீடு” என்று கூறவும், அப்பட்டமான அதிர்ச்சி அதிரூபனின் கண்களில்.

உடனே, “இது மகிந்தனோட வீடுன்னு உனக்கு எப்படித் தெரியும் வாசு?” என்று ரூபன் கேட்டதற்கு

“இது எனக்கு எப்படித் தெரியும்ன்னா, மகிந்தனோட வீடு, அவனுடைய தொழிற்சாலைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், இது எல்லாமே அடிக்கடி டிவியில காண்பிச்சிருக்காங்க. அதனால தான் சொல்றேன், இது கண்டிப்பா மகிந்தனுடைய வீடுதான்” என்று வாசு கூற, இருவருக்குமே பெரும் குழப்பம்.

இந்த வீட்டிற்குள் சிருஷ்டி எப்படி இருக்க முடியும்? ஏனென்றால் வ்ரித்ராவும், சிருஷ்டியும் ஏற்கனவே ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் தானே? அப்படி அந்த வ்ரித்ரா, தாவ் கிரகத்திலிருந்து துரோகம் செய்ததற்காக வெளியேற்றப்பட்ட விஷயமும், அவன் எப்படிப்பட்ட குயுக்தி கொண்ட கொடூரமானவன் என்பதும் கூடச் சிருஷ்டி முழுமையாக அறிந்த ஒன்று தானே?

ஆனால் இப்போது எப்படி அவன் வீட்டில் இவள் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க, “இப்படியே யோசிச்சிட்டு இருந்தா போதுமா? இல்ல மறுபடி சிருஷ்டி வெளில வரத்துக்காகக் காத்திருக்கலாமா?” என்று கேட்டான் வாசு.

“இனிமே என்னால ஒருகணம் கூடக் காத்திருக்க முடியாது வாசு. அதனால நாம இந்த வீட்டுக்குள்ள போய்த் தான் சிருஷ்டிய பார்க்கணும்” என்று அதிரூபன் கூற, அவனை வெறித்துப் பார்த்தான் வாசு.

“நீ என்ன சொல்றன்னு நல்லா யோசிச்சு தான் சொல்றியா ரூபா? இது வெளிவாசல்ல இருக்குற தடுப்புச்சுவரோட கேட். இதுக்குள்ள நான்கடுக்குப் பாதுகாப்பு இருக்குன்னு கேள்விபட்டிருக்கேன். அதையெல்லாம் தாண்டி நாம எப்படிச் சிருஷ்டிய பார்க்க முடியும்?  ஒருவேளை இவங்க யார்கிட்டயாவது நாம மாட்டிக்கிட்டா, ஒருவேளை மகிந்தன் நம்மள கையும் களவுமா பிடுச்சுட்டா, நம்ம நிலைமை என்ன ஆகிறதுன்னு யோசிச்சு பார்த்தியா? நாம வந்திருக்கிற காரியம் ரொம்பப் பெருசு. ஆனா அது எதையுமே சாதிக்காம உயிர் விடக் கூடாது தானே? இதையும் நீதான எனக்குச் சொன்ன?” என்று வாசு கேட்க

“எனக்கு எல்லாமே புரியுது வாசு, அதேசமயம் என் உயிரை விடவும் ரொம்ப முக்கியம் எனக்குச் சிருஷ்டி. அவ இங்க அந்த வ்ரித்ரா வீட்டுல தங்கியிருக்கா. இந்த விசயத்த என்னால நினைச்சுக் கூடப் பார்க்க முடியல வாசு. அவன் என்ன பழி வாங்கறதா நினைச்சு சிருஷ்டியை ஏதாவது பண்ணிடுவானோன்ற பயம், அவ இருக்கறது வ்ரித்ரா வீட்டுலன்னு தெரிஞ்சதுல இருந்து என்ன கொஞ்சம் கொஞ்சமா அரிச்சுட்டு இருக்கு. அதனால எப்படியாவது அவளை இங்க இருந்து மீட்டு வெளில கூட்டிட்டு போகணும்” என்று அதிரூபன் மிகவும் உணர்ச்சி பெருக்கெடுக்கச் சொல்லிக் கொண்டே போக

“சிருஷ்டியை மீட்டு கூட்டிட்டுப் போறது எல்லாம் இருக்கட்டும். ஆனா அவ இங்க யாருடைய கட்டாயத்துலயும் இருக்கிற மாதிரி எதுவும் தெரியல ரூபா. நீயே பார்த்தல்ல? அவளே தனியா தானே கார் ஓட்டிட்டு இப்போ வீட்டுக்கு வந்திருக்கிறா? இதுல மகிந்தன் எப்படி அவளைச் சிறை வச்சுருக்கான்னு சொல்ற?” என்று வாசு கேட்க

“அது தான் வாசு எனக்கும் குழப்பமா இருக்கு. அவளைப் பார்த்தா தாவ் கிரகத்திலிருந்து வந்த மாதிரியே தெரியல, ஏதோ இங்க யுவாலையே பிறந்து வளர்ந்தவ மாறி நடந்துக்கிறா. என்னமோ ரொம்பத் தப்பான ஒரு விஷயம் நடந்து இருக்கு. ஒருவேளை அவளோட உயிர் சக்தி பாதிப்படைஞ்சதாலயா இருக்கலாம். ஆனா எப்படி இருந்தாலும் நாம கண்டிப்பா அவளைச் சந்திக்கணும். இனி அவ எப்போ வீட்டை விட்டு வெளியில வருவாள்ன்னு நாம கைய கட்டிகிட்டு காத்துட்டு இருக்க முடியாது. நாம ரெண்டு பேரும் உடனே இந்த வீட்டுக்குள்ள போயாகணும்” என்று மிகவும் தீவிரமாக அதிரூபன் சொல்லவும்

“ஒரு நிமிஷம் பொறுமையா இருப்பா. நான் தான் சொன்னேன்ல, இந்த வீட்டுல 4 அடுக்குப் பாதுகாப்பு இருக்குன்னு. அது முதல்ல என்ன என்னன்னு தெரிஞ்சுக்கோ” என்று வாசு கூறவுமோ

“சரி அதெல்லாம் என்ன என்ன? முதல்ல அதைப்பத்தி என்கிட்ட விளக்கமா சொல்லு” என்று கேட்டான் அதிரூபன்.

“முதல் கட்ட பாதுகாப்பு யாருனா, மகிந்தனுடைய மெய்க்காவலர்கள். மகிந்தன் ஏற்கனவே அனுமதி வழங்கியிருக்கற, அவனுக்கு ஏற்கனவே தெரிந்த ஆட்கள். அவன் இங்க வருவதற்காக அனுமதிக்கப்பட்ட ஆட்கள் மட்டுமே அந்த முதல் கட்ட பாதுகாப்ப தாண்ட முடியும். ஏன்னா அவனோட மெய்க்காவலர்கள் அந்த மகிந்தனால அங்கீகாரம் வழங்கப்பட்ட ஆட்களை மட்டும் தான் உள்ள விடுவாங்க.

அடுத்து இருக்கிற பாதுகாப்பு வளையம் என்னன்னா, லேசர் ஷீல்டு கேட். அது ஏற்கனவே இருக்கிற அங்கீகரிக்கப்பட்ட அந்த மெய்க்காப்பாளர்களால மட்டும் தான் அந்தப் பாதுகாப்பு வளையத்தைத் திறக்கவோ, தாண்டவோ முடியும். இது முழுக்க முழுக்கக் கணினியால இயக்கப்படுது.

மூன்றாவது கட்ட பாதுகாப்பு ரோபோட்ஸ். இந்த ரோபோட்ஸ் எல்லாம் வெறும் டெஸ்ட் பண்ணுவதற்கு மட்டுமே உருவாக்கப்பட்டது இல்ல. நம்மல ஃபுல்லா அது ஸ்கிரீன் பண்ணும். அப்படி நம்மகிட்ட ஏதாவது ஆயுதம் இருக்கிறதா தெரிந்தாலோ, அல்லது நம்மட்ட ஏதாவது சந்தேகப்படுற மாதிரியான விஷயங்கள், உடல்மொழி, நடவடிக்கை… ஏதாவது இருந்தாலும் கூட, அது உடனே நம்மல அழிச்சுடும்.

இதையெல்லாத்தையும் தாண்டி தான், கடைசியா அந்த வீட்டோட உண்மையான கதவுக்குப் போக முடியும். அந்த அவ்வளவு பெரிய வீட்டுக்கு ஒரே ஒரு வாசல் மட்டும் தான் இருக்கு. மகிந்தன் அந்தக் கதவுக்கு ஏதோ செக்யூரிட்டி நம்பர், இன்னும் எலக்ட்ரிக் ஷாக், இல்லீகல் என்ட்ரின்னா, அவனுக்குச் சிக்னல் கொடுக்கறதுன்னு எல்லா ஏற்பாடும் பக்காவா பண்ணியிருக்கான்.

அந்த நம்பர ப்ளாக் பண்ணா தான் அந்த வீட்டுக்கு உள்ளே போக முடியும். அதையும் தாண்டினா, அந்த வீட்டுல இருக்கிற ஒவ்வொரு ஆட்களுமே தனித் தனியான பாடிகார்ட் தான். அவங்க கிட்ட நாம தகவல் தெரிவிக்காம, நம்மால சிருஷ்டியை பார்க்கவே முடியாது. இதுல நீ எப்படி அவ்வளவு சுலபமா சிருஷ்டிய உடனே பாக்கணும், அவளை இங்க இருந்து உடனடியா கூட்டிட்டு போகனும்னு சொல்ற?” என்று சிறு கேலி இழையோட கேட்டான் வாசு.

இரண்டு நிமிடம் இதைப் பற்றி எல்லாம் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்த அதிரூபன், பிறகு தெளிந்த முகத்துடன் வாசுவை ஏறிட்டான்.

அவன் அவ்வாறு பார்க்கவும் வாசுவுக்குத் தெரிந்து விட்டது ‘சார் ஏதோ பெரிதாகப் பிளான் செய்து விட்டார்’ என்று.

உடனே, “என்ன ரூபா தாவ் கிரகத்து மூளை ஏதோ பெருசா திட்டம் போட்டுடுச்சு போல?” என்று அவன் கேட்கவும்

அதிரூபனோ, ‘ஆமாம்’ என்பதாய் தலையசைத்தான். பின்பு, “நான் சொல்றத கவனமா கேட்டுக்கோ வாசு. இப்போ முதல்ல இங்க இருக்கற இந்த மெய் காவலர்களை என் பலம் கொண்டு அழிச்சுடுவேன். ஒரு சத்தம் கூடக் கேட்காம, யாருக்கும் சந்தேகம் வராம, முழுசா அவங்கள அழிச்சிடுவேன். அடுத்து இருக்கற அந்த லேசர் ஷீல்ட யாருக்கும் எந்தச் சந்தேகமும் வராம, உன்னால ஹேக் பண்ணி நிறுத்திவைக்க முடியுமா?” என்று கேட்டான்.

சற்று யோசித்த வாசு, “முதல்ல அந்த மெய் காவலர்களை நீ அழிச்சுட்டா அங்க இருக்கிற கம்ப்யூட்டர் மூலமா நான் அந்த லேசர் ஷீல்ட அணைச்சுடுவேன்” என்று கூறவும்

உடனே பரபரப்புடன் தனக்குத் தானே சந்தோசத்தில் கைதட்டிக் கொண்ட ரூபன், “அப்ப சரி… அடுத்து இருக்க அந்த ரோபோட்டையும் கூட உன்னால ஹேக் செய்ய முடியுமா? அப்பறம் அடுத்து இருக்கிற அந்த வீட்டு செக்யூரிட்டி சிஸ்டமையும் உன்னால ஹேக் செய்ய முடியுமா?” என்று அடுக்கடுக்காய் கேட்டான்.

“அந்த டீடைல்ஸ் எல்லாம் எந்தக் கம்ப்யூட்டர்ல பீட் பண்ணி வெச்சி இருக்காங்கன்னு தெரியல ரூபா. ஆனால் அதே கம்ப்யூட்டரில அதெல்லாம் இருந்ததுன்னா ரொம்பச் சுலபமா என்னால அது எல்லாம் ஹேக் செய்துட முடியும். அப்படி இல்லைன்னாலும், அந்தக் கம்ப்யூட்டர வச்சு, வேற எந்தக் கம்ப்யூட்டர்ல இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் பீட் பண்ணி வச்சிருக்காங்கன்னு என்னால கண்டுபிடிக்க முடியும்” என்று வாசு கூறியதும், மகிழ்வுடன் அவனைக் கட்டிக்கொண்டாள் அதிரூபன்.

“சரி அப்போ இங்க இருட்டாகவும் மொத்த ஆள் நடமாட்டமும் குறைந்துடும்ல? அதாவது இங்க காவல் புரியற ஆட்கள் மட்டும் தான வேலை செஞ்சுட்டு இருப்பாங்க? எனக்குத் தெரிஞ்சு அனேகமா இன்னைக்கு மகிந்தன் இங்க வர மாட்டான்னு நினைக்கிறேன்.

அப்படி அவனுக்கு வேற வேலை எதுவும் இல்லாம இருந்திருந்தா, நம்மள இன்னைக்கே சந்தித்திருப்பான். நம்மள அவ்வளவு அவசரமா வள நாட்டில் இருந்து இங்க வர வச்சவன், நம்மள சந்திக்காமல் காலம் தாழ்த்தறது ஏன்? அப்படின்னா அவனுக்கு அதை விட வேறு ஏதாவது முக்கியமான வேலை வந்து இருக்கும். அதனால நாம இப்போவே இன்னைக்கே சிருஷ்டிய சந்திக்கறோம்” என்று கூறிக் கொண்டே போகவும், ‘சம்மதம்’ என்பதாகத் தலையசைத்தான் வாசு.

அவர்கள் இருவரும் மீண்டும் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தனர். ஏனென்றால் அவர்களை இரு காவல் வீரர்கள் ரகசியமாக பின் தொடர்கிறார்கள் என்பது தான் அவர்களுக்குத் தெரியுமே. எனவே தாங்கள் மீண்டுமே தங்களது கூட்டுக்குள் அடைந்து விட்டதாகப் பேர் பண்ணிக்கொள்ள, மீண்டும் அவர்களது விடுதிக்கு திரும்பினார்.

அதன் பிறகு, அந்தி சாய்ந்து இருள் பரவும் நேரத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அதுபோலவே கதிரவன் தனது கடமையை முடித்துக்கொண்டு மூட்டை கட்டி கிளம்பும் நேரம், வானின் உச்சிக்கு வந்து கொண்டிருந்த சந்திரனின் காவல் தாண்டி அந்த நிலவொளி கூடத் தங்கள் மேல் படாதபடி அவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து வெளியேறினர்.

மீண்டும் அதே போல மகிந்தனின் வீட்டின் வெளிவாசல் முன்பு அதிரூபனும், வாசுவும் காத்திருந்தனர். அங்கிருக்கும் வெளி ஆட்கள் நடமாட்டம் எல்லாம் முற்றிலும் நின்றான பிறகு முதலில் அதிரூபன் அந்த முதல் தடையை முறியடிக்கச் சென்றான்.

நேரடியாக அந்த மெய்க்காப்பாளர்களிடம் அதிரூபன் செல்லவும், இவனை யார் என்று தெரியாது என்று கூறி அவர்கள் இவனை வெளியேற்ற முனையும் சமயம், “அப்படி எல்லாம் என்னால வெளியே போக முடியாது. உடனே நான் வீட்டுக்குள்ள போகணும்” என்று வேண்டுமென்றே வம்பிழுக்க, இவனைச் சோதித்துக் கொண்டிருந்த அந்த முதலாம் அடியாள் இவனை அடிக்க முயலும் சமயம், தன் கால் கொண்டு அவன் நெஞ்சின் மேலே தாக்கி அவனைக் கீழே விழ வைத்தான் அதிரூபன்.

பின்பு மேலும் இரண்டு பேர் அவனைப் பின்னே இருந்து தாக்க வர, வானில் தாவி ஒரு கால் மட்டும் நீட்டி அந்த இன்னொருவனின் முகத்திலேயே ஒரு உதை விட்டான். அதே போலவே.. மீண்டுமாய் வானில் ஒரு தாவல்.. இம்முறை முஷ்டிகள் இறுகிய முன் கரங்களே இனொருவனின் கன்னத்தில் பேரிடியாக இறங்கின.

இப்படியே அங்கிருந்த அனைத்து மெய்க்காப்பாளர்களையும் தாக்கிவிட்டு, அவர்கள் இருந்த இடத்துக்கான அடையாளம் கூட இல்லாதபடி முற்றிலுமாய் அழித்துவிட்டு, வாசுவை வரவழைத்தான் அதிரூபன்.

அங்கு வந்த வாசுவும் அந்தக் கணினியை நோண்டிக் கொண்டு, அதனை ஹேக் செய்ய முயன்று கொண்டிருந்தான். கன்னிப்பெண் இதயத்தில் கள்ளத்தனமாய் நுழைய முயலும் காளையரைப் போல அந்தக் கணினியின் மூளையைக் களவாட முயன்று கொண்டிருந்தான் வாசு.

சிறிது நேரத்திலேயே அந்தக் கணினி தனது எஜமான விசுவாசம் சிறிதும் இன்றி வாசுவின் தீண்டலில் இளகி, அவன் கேள்விகளுக்குப் பதிலுரைத்துக் கொண்டிருந்தது. அதன்படி அங்கிருந்த லேசர் ஷீல்டை வாசு செயலிழக்க செய்ய, அடுத்து இருந்தது அந்த ரோபோக்கள் தான்.

அந்த ஒற்றைக் கணினி கொண்டே அங்கிருந்த பல நூறு எந்திரன்களையும் மயங்கி விழ செய்திருந்தான் வாசு. அதைக் கண்டதில் அதிரூபனுக்கு அளவில்லாத சந்தோஷம், ஆச்சரியமும் கூட.

“எப்படி வாசு உன்னையெல்லாம் இந்த நாட்டு அரசாங்கத்துல உபயோகப்படுத்தாம உன்னோட தகுதியை விட ரொம்பக் கீழான பதவியில் வச்சுருக்காங்க? எவ்வளவு வேக வேகமா வேலை செய்ற” என்று அதிரூபன் அவனை மனமார பாராட்டவும்

“இப்ப பாரு அடுத்த வேலையை..” என்று கூறிவிட்டு மேலும் தனது திறனை காட்டலானான் வாசு.

அது போலவே ஏதேதோ அந்தக் கணனியில் செய்து அதனைத் தாலாட்டு பாடி உறங்க வைத்து விட்டு, கடைசியாகத் தலை நிமிர்ந்து அதன் பிறகே அந்த அரண்மனையைப் பார்த்தான். பார்த்தவன்… பார்த்தபடி திகைத்துப் போய் நின்றான்.

பிறகு, “சே.. ஏன் அரண்மனையை, அரண்மனைன்னு சொல்றாங்கன்னு இப்போ தான் புரியுது” என்று சிலாகிக்கும் குரலில் கூறினான்.

அவன் கூறியதைக் கேட்டு, “ஏன்?” என்பதை ஒரு பார்வை மட்டும் அதிரூபன் பார்க்க

“ஹ்ம்ம்.. இவ்வளவு அரண் அமைச்சு, அதுக்கு நடுவுல இவ்வளவு பெரிய மனை கட்டியிருக்கான்ல, அதனால தான் அரண்மனைன்னு பேர் வச்சுருக்காங்க போல” என்று இன்னமும் அந்த ஆச்சர்யம் குறையாது கூறிக் கொண்டிருந்தவனை, அதிரூபன் இரண்டு உலுக்கு உலுக்கிய பின்னரே, வாசு நிகழ்காலத்துக்கு வந்தான்.

பின்பு இறுதியாக அந்த வீட்டின் முக்கிய வாசலுக்கு வந்து அதன் கதவைத் தொட்டதும் அதுவோ மந்திரம் போட்டது போலத் திறந்து கொண்டது. அது தான் வாசு ஏற்கனவே அந்தக் கணினியின் மூலமாகவே இந்தச் செக்யூரிட்டி லாக் செய்யப்பட்ட கதவையும் ஹேக் செய்து விட்டிருந்தானே.

ஆனால் உள்ளே கதவின் பின்னே இருந்தது பலநூறு வேலையாட்கள். சொல்லப் போனால் அடியாட்கள். ஆனால், அநியாயத்தை அழிக்கும் ஆருத்ரன் இங்கே இருக்க அவர்களைப் பற்றிய கவலையும் வேண்டுமா என்ன? அது தான் அதிரூபன் அவர்கள் ஒவ்வொருவராய் மோட்ச நிலைக்குக் கொண்டு சென்று கொண்டே இருந்தானல்லவா?

இறுதியாகச் சிருஷ்டியின் அறையைக் கண்டறிந்து, அதிரூபன் மட்டுமே தனியாக அங்குச் சென்று விடப் பக்கத்தில் இருந்த ஒரு அறையில் ஒளிந்திருந்தான் வாசு. அங்குச் சிருஷ்டியின் அறைக்குள் நீல நிற விதானத்தில் வெண்ணிற பட்டு மெத்தையில் செதுக்கி வைக்கப்பட்ட பொற் சிலையென அமர்ந்து இருந்தாள் சிருஷ்டி.

அந்த அறையில் காற்பதனி வேறு ஓடப்பட்டிருக்க, சீராக வெளியேறிக் கொண்டிருக்கும் அந்தக் குளிர்காற்றில் சிருஷ்டியின் கற்றைக் கூந்தலும் சற்றாய் காற்றில் நர்த்தனம் ஆடிக்கொண்டு இருக்க, இவன் உள்ளே வந்திருப்பதைக் கூட அறியாமல், அந்தப் படுக்கையில் கால் நீட்டி, மார்போடு கைகட்டி, நேரெதிரே வெறித்தபடி, ஏதோ ஒரு சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் சிருஷ்டி.

அவள் பார்வை படும்படி அவளுக்கு நேரே அதிரூபன் போய் நிற்க,  லட்சம் மின்னல்கள் அவள் கண்களில். முகமெங்கும் மொட்டவிழும் புது மலராய் மலர, அதைக் கண்ட அதிரூபனுக்கும் அந்த மலரின் புதுச் சுகந்தம்.

அந்த மலர்ச்சி பிரதிபலிப்புடனே, படுக்கையிலிருந்து எழுந்து அவனருகே… மிக அருகே… ஒருவர் சுவாசம் மற்றவர் மீது வாசமாய்ப் படியும் அளவிற்கு நெருக்கமாய்ச் சென்றவள், தன்னையும் அறியாது கேட்ட முதல் கேள்வி, “என்ன தேடி வர இவ்வளவு நாள் ஆகிடுச்சா?” என்பது தான்.

அதைக் கூறுகையில் கண்ணோரம் நித்திலமாய்ப் பளபளத்தது ஒரு துளி கண்ணீர். அவளது அந்தக் கண்ணீரை ஒற்றை விரல் கொண்டு துடைத்தான் அதிரூபன். பிறகு அவன் முகம் அவள் காதலில் மேலும் மிருதுவாக, அவனது அந்தப் பார்வை… கனவில் கண்ட அதே பார்வை.

அடுத்து அவன் என்ன செய்யப் போகிறான்’ என்று சிருஷ்டிக்கு அவளது பெண்மை உணர்த்திவிட, அவளுக்கு இது கனவல்ல நிஜம் என்று உணர்ந்து ஈரெட்டுப் பின்னால் நகர்ந்தாள்.

அதிரூபனை இதுவரை கனவில் மட்டுமே கண்டதாய் எண்ணிக் கொண்டிருப்பவள், அவன் இவ்வாறு திடும்மென்று, அதுவும் இத்தனை கட்டுக்காவல்களை எல்லாம் கடந்து நேரில் வந்தால் அதிரத்தானே செய்வாள்? அதுதான் இவள் பழசெல்லாம் மறந்து விட்டாளே. ஆனாலும் மனதின் காதல் தான் விழியில் நீர்த்துளியாய் பளபளத்ததோ என்னவோ?

அப்படியே இருந்தாலும், இப்படி யாரென்று தெரியாத ஒருவன், வீட்டிற்குள்… அதுவும் தனது படுக்கையறைக்குள்ளும் வந்துவிட்டதை உணர்ந்து, அதிர்ந்து, அவனைத் தாக்க முற்பட்டாள் பெண்.

அவனோ, அவள் தாக்குதலை லாவகமாகச் சமாளித்து, இறுதியாக அவளது இருகரங்களையும் பின்னே கட்டி அவனுடன் அவளைச் சேர்த்து அணைத்துக் கொண்டு , “சிருஷ்டி ஏன் இப்படி வினோதமா நடந்துக்கிற? நான் யாருன்னு உனக்குத் தெரியலையா? ஏன் என்னயவே தாக்க முயற்சிக்கற? நீ எப்படி இங்க மகிந்தன் வீட்டுல?” என்று அவன் படபடப்பும் பரபரப்புமாய்க் கேட்க, அவளுக்கோ இன்னும் இன்னுமாய் மனது அவனுக்குள் ஆழும் நிலை.

அப்படியிருந்தும் விழித்துக்கொண்டு பெண்ணாய் அவனருகாமையை விளக்க நினைக்கும் அவஸ்தை நிலை. இன்னுமே அவனது அந்தத் திடீர் வரவால், அவன் மீதிருந்த அச்சமும், எச்சரிக்கை உணர்வும் கலந்ததானவொரு நிலை.

கடைசியாக, “உனக்கு நான் யாருன்னு எப்படித் தெரியும்? என் பெயர் எப்படி உனக்குத் தெரியும்? முதல்ல நீ யாருன்னு சொல்லு. இப்போ நான் மட்டும் கத்தினேன்னா, உன் நிலைமை என்னாகும்ன்னு தெரியுமா?” என்று அவனிடம் பட்டாசாய் இவள் பொறியவும், இவனுக்கும் ஒன்றுமே புரியாத குழப்பம்.

“சிருஷ்டி மா… ஏன் இப்படி நீ நடந்துக்கிற? நிஜமா உனக்கு நான் யாருன்னு தெரியலையா? இல்ல நீ யாருன்னு உனக்கே தெரியலையா?” என்றவன் கேட்க

திகைத்த அவளோ, “நான் யாருனு எனக்கே ஏன் தெரியாம போகும்? நான் மகிந்தனுடைய மகள்” என்றதும், அவனுக்கு ஆயிரம் தேள்கள் ஒன்றாகக் கொட்டி கொட்டி எடுப்பது போல் வலிக்காதா?

அவள் மகிந்தனின் மகள் தான் என்று கூற கேட்டதும், அதிர்ச்சியில் திடுக்கிட்டு தன்னையும் அறியாது அவளை விடுவித்து விட்டான். இந்நிலையைப் பயன் படுத்திக்கொள்ள எண்ணி, அவள் மீண்டும் அவனைத் தாக்க, மீண்டும் அவளை அடக்கி, தனது கைச்சிறைக்குள்ளாய் அவளை முன்புபோலவே இருத்திக் கொண்டான்.

பிறகு சிறிது தவிப்பும், காதலும் கலந்த குரலில், “ஏன் சிருஷ்டி இப்படி எல்லாம் பேசுற? நீ அந்த மகிந்தனுடைய பொண்ணு கிடையாது. நீ என்னோட சிருஷ்டி. உனக்கு என்னமோ ஆகிடுச்சு. நான் சொல்றத தயவுசெஞ்சு முழுசா கேளு” என்று கூறி அவன் தங்களது பழைய கதையெல்லாம் கூற, அவளோ நம்ப முடியாத பாவனையுடன், கண்களெல்லாம் பயத்தில் விரிய, மின்சாரம் தொட்ட அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

ஆனால் மனதில் ஒரு ஓரத்தில், ‘இவன் யார்? எதற்காக இப்படி இத்தனை கட்டுக்காவல் மீறி தன்னைச் சந்திக்க வந்துள்ளான்? எதற்காக இந்தக் கதையெல்லாம் கூறுகிறான்? அப்படி என்ன தான் வேண்டுமாம் இவனுக்கு. தன்னை இவன் மனைவி என்று வேறு கூறுகிறானே, அப்படி இவன் கூறியதும் நியாயமாகப் பார்த்தால் கோபம் தானே வர வேண்டும்? ஆனால் இவனது, ‘நீ என் மனைவி’ என்ற வார்த்தையில் உள்ளுக்குள் உற்சாக ஊற்றள்ளவோ பீறிடுகிறது?

என்ன தான் நடக்கிறது என்னுள்? இதோ இவன் கைப்பிடிக்குள் இருக்கும் இந்நிலை என் பெண்மையை அல்லவோ உடைப்பெடுக்கிறது. மனமோ ஆசை ஆசையாய் ‘இப்படியே என்னைச் சிறை கொண்டு உன்னுள்ளே பொத்திக்கொள்’ என்றல்லவா அவனிடம் கூறிக்கொண்டிருக்கிறது? ஆனால், என் மனதின் ஓசை இவன் காதில் விழுந்துவிடுமோ என்னும் அளவிற்கு மனம் அவ்வளவு பதறவும் செய்கிறதே? ஒரே உடலில் இருந்து கொண்டு என் மனமே இரண்டாய் பிரிந்து கொண்டு.. என்னக்கெதிராய் சதி செய்கின்றனவே’ என்று என்னவெல்லாமோ, எண்ணிக்கொண்டு, அவன் அருகாமை தந்த மயக்கத்தில், அவளையும் அறியாது சுகமாய் மிதந்துகொண்டு தான் இருந்தாள்.

அந்த வேளையில் தான் எப்பொழுதும் போல, கதவை தட்டி அனுமதி கேட்காமலே சிருஷ்டியின் அறைக்குள் நுழைந்தான் மகிந்தன்.

(தொடரும் – புதன்தோறும்) 

பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மங்குவின் சங்கடம் (சிறுவர் கதை) – ✍ லலிதா விஸ்வநாதன், நாகப்பட்டினம்

    குடும்பம் ஒரு கோயில் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை