in

காக்க! காக்க! ❤ (பகுதி 8) – ✍ விபா விஷா, அமெரிக்கா

காக்க! காக்க! ❤ (பகுதி 8)

ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7

ப்பொழுதும் குயிலின் குரல் ஓசையில் கண்விழிக்கும் அதிரூபன், இன்று மிகவும் இரைச்சலான ஒரு பேரொலியில் விழித்தெழுந்தான்.

இன்று தான் தனக்கும் சிருஷ்டிக்கும் இருக்கும் காதலைப் பற்றி ஐந்திணைத் தலைவர்களிடமும் எடுத்துரைத்து, திருமணத்திற்கு அவர்களின் சம்மதத்தைக் கேட்பதாய் எண்ணியிருந்தார்கள், அவர்கள் இருவரும்.

இந்நிலையில் காலையிலேயே இவ்வளவு கலவரம் ஏன் என்ற குழப்பம் அதிரூபன் மனமெங்கும் ஆழ்ந்திருந்தது. உடனே தனது கைகணினியை இயக்கிப் பார்த்தவன், வெளியே மாபெரும் மக்களின் கூட்டம் ஒன்று திரண்டு எதற்காகவோ, கத்தி கலவரத்தை உண்டு பண்ணி கொண்டு இருந்தார்கள்.

இதில் ஏதேதோ புரட்சிகரமான வசனங்கள் வேறு. அதைக் கண்டதை அடுத்து அதிரூபன் வெளியே சென்று பார்க்கையில், அந்த மாபெரும் கூட்டத்திற்குத் தலைவனாய் வ்ரித்ரா.

‘இவனெங்கே இங்கே? மருத்துவத்துறை தலைவன் அல்லவா இந்த வ்ரித்ரா? இவன் எதற்காக இப்படிக் கூட்டம் சேர்த்து கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறான்’ என்று யோசித்தவாறு மிகவும் கோபத்துடன் அந்த வ்ரித்ராவை நோக்கி சென்றான் அதிரூபன்.

“வ்ரித்ரா.. நீங்க என்ன காரியம் செய்துட்டு இருக்கீங்க? எதற்காக இந்தக் கூட்டம்? எதற்காக இந்தப் போராட்டம்?” என்று இடிஇடிக்கும் குரலில் கத்தினான் அவன்.

அதைக் கேட்டு ஒரு அமைதியான விஷம சிரிப்பு வ்ரித்ராவின் முகத்தில் இழையோடியது.

“நாங்க இங்க கலவரம் பண்ணல அதிரூபன். இது மக்கள் புரட்சி. ஐந்திணை திருவிழா அன்று நீங்களும் சிருஷ்டியும் பேசிய விஷயங்கள்.. அதாவது மக்கள் மனதில் இருக்கிற நியாயமான ஆசைகளை, ‘அதெல்லாம் பெரும்பாவம்.. அப்படியெல்லாம் நினைக்கவே கூடாது’ அப்படின்னு சொல்லி தேன் போன்ற வார்த்தைகளால் பேசி, அவங்களுக்கு நீங்க கட்டளையாய் இட்ட விஷயங்கள்.. இப்பொழுது மக்கள் மனசுல ஆழமா வேரூன்றிடுச்சு. இப்போ அது சம்மந்தமான மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற சொல்லி தான் நாங்க இங்க புரட்சி செய்துட்டு இருக்கோம்” என்று கூறவும், மக்கள் மனதை இத்தனை நாளாய் விஷமாய் மாற்றிக் கொண்டிருப்பது யார் என்று அக்கணம் அதிரூபனுக்குப் புரிய ஆரம்பித்தது.

“இங்க பாருங்க வ்ரித்ரா… நீங்க மருத்துவத்துறைக்குத் தலைவராக இருக்கலாம், இங்க இருக்கிற ஒவ்வொரு உயிரோட ஆரோக்கியத்துக்கும் நீங்க பொறுப்பா இருக்கலாம். ஆனா அதேசமயம் இந்தத் தாவ் கிரகத்தோட விதிகளை மாற்றுவதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அதுமட்டுமில்லாம இயற்கை நியதிகளை மீறுவதற்கு யாருக்குமே அதிகாரம் கிடையாது” என்று அவன் முதலில் பொறுமையாகத் தான் கூற ஆரம்பித்தான் அதிரூபன்.

ஆனால் எவ்வித பொறுமைக்கும் ஓர் எல்லை இருக்கிறது தான். நேரம் செல்ல செல்ல வ்ரித்ராவின் தூண்டுதலால் அங்குக் குழுமியிருந்த மக்கள் அனைவரும் மிகுந்த ஆவேசமடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட, பொறுமை இழந்த அதிரூபன் அவர்களுக்கு இப்பொழுது என்ன தான் வேண்டும் எனக் கேட்டான்.

அதன் பின்னரே பின்வரும் கோரிக்கைகளை வ்ரித்ரா கூற ஆரம்பித்தான். அதைக் கோரிக்கை என்பதை விடக் கட்டளை எனக் கூறுவது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், கட்டளையிடும் தொனியில்.. கட்டளையாகவே அதை வ்ரித்ரா அந்தக் கோரிக்கைகளை அதிரூபனுக்கு அறிவித்தான்.

அதில் முதல் கட்டளை என்னவென்றால், இப்படி மறைந்திருந்து பிற கிரகங்களுக்கு உதவி செய்வதை விட, தங்களைப் பற்றிய முழு விவரங்களைப் பற்றி விரிவாக விளக்கி, தங்களது அபூர்வ சக்திகளைப் பற்றி எச்சரிக்கையும் செய்து, பிற கிரகங்களைத் தங்களுக்கு அடிபணிய சொல்வதாய் ஒரு தகவல் அனைத்து கிரகங்களுக்கும் ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இரண்டாவது கட்டளை, சாகாவரம் பெறுவதற்கான முதல் முயற்சியாக, சாகா மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆய்வுக்கூடம், தாவ் கிரகமெங்கும் அமைக்கப்பட வேண்டும்.

மூன்றாவது கட்டளை, அந்தச் சாகாவரம் பெறுவதற்கான ஆய்வு பணிக்கு வ்ரித்ராவை தலைவனாக்க வேண்டும்.

நான்காவது, தாவ் கிரகத்தின் காவல் பொறுப்பையும் வ்ரித்ராவிடமே அளிக்க வேண்டும்.

ஐந்தாவது, அப்படித் தாவ் கிரகத்திற்கு ஏதாவது ஒரு கிரகமாவது அடிபணியாத பட்சத்தில், அந்தக் கிரகங்கள் மீது போர் தொடுக்க வேண்டும்.

ஆறாவது, அந்தப் போரில் உபயோகிக்க மிகவும் சக்தி வாய்ந்த வெய்யோனின் உட்காரு தனிமமான ப்ரக்ட்டானை, நமது தாவ் கிரகத்திலிருந்தும், அந்தத் தனிமம் கிடைக்கும் மற்ற கிரகங்களில் இருந்தும் கைப்பற்ற வேண்டும்.

இந்த ஆறு கட்டளைகளும் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு இப்பொழுதே அதிரூபன் பதவி விலக வேண்டும் என்று கூறிவிட்டுக் கொடூரமாகச் சிரித்தான் வ்ரித்ரா.

இப்படி ஒவ்வொரு கட்டளையைப் பற்றி வ்ரித்ரா கூற கூற, கண்கள் மெல்ல மெல்ல சிவப்பேறி, அதிரூபனின் கரங்கள் எக்கிரும்பாய் விறைத்து, கை நரம்புகள் முறுக்கேறி, சினமும் தலைக்கு ஏறிக் கொண்டிருந்தது.

இறுதியாக ப்ரக்ட்டான் பற்றிக் கூறிய அந்த நொடி, கை முஷ்ட்டிகள் கற்பாறையாய் இறுக, ஒற்றைக் காலை பின்னே வைத்து உடல் வலிமை எல்லாம் ஒருங்கே அந்தக் கையில் கொண்டு வ்ரித்ராவின் கன்னத்தை நோக்கி ஒரே குத்து.. பல நூறு அடிகள் தாண்டி பறந்து போய் விழுந்தான் அவன்.

அதைக் கண்ட மக்கள் மேலும் கோபம் கொண்டு அதிரூபன் மேலேயே பாய முனைய… அதிரூபனும் அதற்குள் தனது குழுவை அங்கு வர வைத்து அவர்களை எல்லாம் வேறொரு இடத்திற்கு இழுத்துச் சென்று அடைத்து வைத்தான்.

சாதாரணமாகத் தாவ் கிரகத்தின் மக்கள் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்பவர்கள் இல்லை. மிகவும் சாதாரணத் தேவையைக் கூட ஒரு சின்னஞ்சிறு குழந்தை தெரிவித்தாலும், அது அங்கே அக்கணமே உடனடியாக நிறைவேற்றப்பட்டு விடும்.

ஆனால் இப்படிக் கூட்டம் சேர்த்துப் புரட்சி செய்வது என்பதெல்லாம் நினைக்கவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது அதிரூபனுக்கு. ஏற்கனவே கூறியது போல இத்தகைய செய்கை அந்த மக்களின் இயல்பு அல்ல.

இந்த வ்ரித்ரா, இவர்களை ஏதோ செய்திருக்கிறான். முதலில் அவனைக் கவனிக்க வேண்டும். எல்லாக் குடும்பத்திலும் ஒரு கருப்பு ஆடு இருக்குமென்பது போல இப்படி எல்லா இடத்திலுமே ஒரு கருப்பு ஆடு இருக்கும் தான் போல.

இங்குக் கீழே விழுந்த வ்ரித்ராவோ, மிகுந்த ஆவேசத்துடன் அதிரூபனை நோக்கி ஓடிவர, அப்படி ஓடிவந்த அவனைத் தனது இடக் கையால் அவனது கழுத்தை பற்றியபடி தடுத்தான் அதிரூபன்.

“எதை நெனச்சுட்டு நீ இதையெல்லாம் செய்யற? மருந்து தயாரிக்கறதுல வல்லவனா இருந்தா, பிற உயிர்களைக் காப்பாற்றும் சக்தி இருந்தா அந்தக் கடவுள்ன்னு அர்த்தமா? இங்க எவனும் எவன் தலைக்கு மேலேயும் இல்ல, எவனும் எவன் காலுக்கும் கீழேயும் இல்ல. ஆனா, உன்னுடைய இந்தக் கேவலமான எண்ணமே நீ ரொம்பவும் தரம் தாழ்ந்துட்டதா தெரிவிக்காது. இனி நீ இந்தக் கிரகத்தில் இருப்பதற்கான தகுதியை இழந்துட்ட” என்று கூறிவிட்டு, அவனை ஐந்திணை தலைவர்களிடம் அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தலானான்.

விசாரணை முடிவில், அவன் ஒரு சில மக்களுக்கு அவனால் தயாரிக்கப்பட்ட ஏதோ ஒரு மருந்தைக் கொடுத்து அவர்களது மனதை நஞ்சாக்கி இப்படி ஆவேசம் உடையவர்களாக மாற்றி இருப்பதும், அதன் மூலம் அவனுக்கு ஆதரவாக ஆள் சேர்ப்பதும், அதன் மூலம் தாவ் கிரகத்தை அவன் கீழ் ஆள நினைப்பதும் தெரிய வந்தது.

இவையெல்லாம் தாவ் கிரகத்தின் விதிமுறைக்குப் புறம்பானதாக வகுக்கப்பட்டிருக்கிறது. எனவே தாவ் கிரகத்தின் சட்டப்படி, வ்ரித்ரா தனியாளாகக் கிரகத்தை விட்டு வெளியேற்றப்பட்டான்.

அப்படி அன்று தாயகத்தை விட்டுத் தன்னந்தனியாகத் துரத்தியடிக்கப்பட்டவன் தான் மகிந்தன். இவ்வாறு அதிரூபனின் சிந்தையெல்லாம் தாவ் கிரகத்திலிருந்து மீண்டும் யுவா கிரகத்திற்கு வந்து கொண்டிருந்த அந்த நொடி, அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கும் விமானமும் யாகுசாவை வந்தடைந்து தரைதட்டியிருந்தது.

முந்தைய நாள் மாமோத்துடன் நடைபெற்ற சண்டைக்குப் பிறகு இன்று விமானத்திலும் வரும் வரையிலும் கூட வாசுவும், ரூபனும் பேசிக் கொள்ளவே இல்லை.

அதிரூபனும் ஏதேதோ சிந்தனையில் இருந்ததால் வாசுவின் அமைதியை அவன் உணரவில்லை. அங்கு இருவரும் பல்வேறு பாதுகாப்புப் பரிசோதனைகளுக்குப் பிறகு, ஏதோ ஒரு காட்டுப் பகுதிக்கு அருகில் இருந்த விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அன்று அவர்கள் வகுசாவை அடைந்த சிறிது நேரம் பொறுத்து, அதிரூபனின் கைக்கணினி திடீரென்று ஒலியெழுப்ப ஆரம்பித்தது. அதிரூபனுக்கு அப்பொழுது கிரகத்திலிருந்து சில்வானஸ் அழைத்திருந்தார். அழைத்தவர் ஒரு பேரிடியை அவனை நோக்கி அனுப்ப தவறவில்லை.

“முட்டாள்… முட்டாள்.. காதல் இப்படி ஒருத்தன பைத்தியமாக்கும்ன்னு நினைச்சு கூடப் பார்க்கல. இப்படி அது உன்னுடைய திறமை எல்லாம் ஒட்டுமொத்தமா அழிச்சுடும்ன்னு நான் கனவுல கூட நினைக்கல. உன்னோட இந்த அலட்சியத்தால பாதிக்கப்பட்டிருக்கிறது உன்னோட சிருஷ்டி தான்” என்று அவர் மறுமுனையில் கத்திக் கொண்டிருக்க, இவனோ வார்த்தெடுத்த சிலையாய் விறைத்துப் போனான்.

பின் இரும்பாய் ஆன குரலில், “என்ன ஆச்சுன்னு அதை மட்டும் சொல்லுங்க. தேவையில்லாம கத்தி என்ன உபயோகம்?” என்று அவன் கூற

“என்ன தேவையில்லாம கத்திட்டு இருக்கிறானா நான்? நீ.. உன்னோட திறமை.. எல்லாம் எங்க போச்சு அதிருபா? நீ உயிர் சக்திக்கு இதுநாள் வரைக்கும் காவலா இருந்த. நீ தான் இந்தத் தாவ் கிரகத்தோட காவலன் காவலன்ன்னு பெருமையா சொல்லிட்டே இருப்ப?

நீ முக்கியமாகக் காவல் காக்க வேண்டியது நம்ம உயிர்சக்தியை. அந்த உயிர்சக்திக்கு நீ ஏன் நேரடியான காவலாளா இல்லாம, உன்னுடைய போர்க்குழுவில் இருந்த ஒருத்தன நம்பி அந்தத் துரு துருவ நியமிச்ச? ஆனா அவன் என்ன காரியம் பண்ணிட்டான் தெரியுமா? அவன் சிருஷ்டியோட உயிர்சக்தியை சிதைச்சிருக்கான்.

இதனால அங்க யுவாக்கு போன சிருஷ்டியோட உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும். மற்றவர்களை முகத்தைப் பார்த்து அவங்கள எடை போடக்கூடிய உன்னுடைய திறமை என்ன ஆச்சு? காதலி பிரிஞ்சு போனா, சோக கீதம் வாசிச்சிட்டு கடமையை மறந்துட்ட இல்லையா? இதுக்கான தண்டனை கண்டிப்பா உனக்குக் காத்துட்டிருக்கு” என்று சில்வானஸ் படபடவெனப் பொரிந்து கொண்டிருக்க

அவர் அருகில் நின்றிருந்த அம்பரியோ, “இங்க பாருங்க சில்வானஸ், இப்போ அவனைத் திட்டியோ, இல்ல அவனுக்கான தண்டனை பற்றிப் பேசவோ நமக்கு நேரம் இல்ல. முதல்ல இந்தப் பிரச்சனையைத் தீர்க்கற வழிய சொல்லுங்க. அந்தத் துருவ பிடிச்சு விசாரிச்சா அவன், தான் வ்ரித்ராவோட கையாள்ன்னு சொல்றான். இங்க எப்படி நாம இவ்வளவு தப்பு நடக்க விட்டோம்? எந்த இடத்தில் பிரச்சனை ஆச்சு?” என்று அம்பரியும் முதலில் பதறியவர்

பிறகு சற்று நிதானமாக, “இப்போ இங்க இன்னும் எத்தனை கருப்பு ஆடுகள் இருக்காங்கன்னு தெரியல. அவங்களை எல்லாம் முற்றிலும் வேரறுக்கற முயற்சிகள் இங்க நடந்துட்டு இருக்கு. இப்போ நீ செய்ய வேண்டியது என்னன்னா, முதல்ல சிருஷ்டிய கண்டுபிடிக்கிற வழியைப் பாரு. மேலும் அந்த வ்ரித்ராவ பற்றிய தகவல் ஏதாவது யுவால கிடைக்குதான்னு பாரு. நம்ம கிரகத்தை விட்டுத் துரத்தப்பட்ட வ்ரித்ரா, எனக்கென்னமோ யுவால இருக்கிறதா தான் சந்தேகமா இருக்கு” என்று கூற

சட்டென அப்பொழுது இடையிட்ட அதிரூபன், “நீங்க ரொம்பப் புத்திசாலி மா. வ்ரித்ரா இங்க தான் இருக்கிறான். அதுமட்டுமில்லாம, இங்க அவன் ரொம்ப ஆளுமை மிகுந்தவனா, அரசியல் செல்வாக்குள்ளவனா இருக்கறான். நீங்க அந்த உயிர் சக்தியை மீட்கற வழிய பாருங்க. எப்படி இருந்தாலும் வ்ரித்ராவோட உயிர்சக்தி இன்னும் நம்ம கட்டுப்பாட்டில் தான் இருக்கு. இங்க நான் அவனைப் பார்த்துக்கிறேன்” என்று ஆவேசத்துடன் கூறிவிட்டுத் திரும்பினான் ருபன்.

மேலும் இப்படி அடிமுட்டாளாய், வ்ரித்ராவின் கையாளிடமே உயிர்சக்தியை பாதுகாக்கும் அதிமுக்கிய பொறுப்பை அளித்து, இப்பொழுது சிருஷ்ட்டியின் மறைவிற்குக் காரணமாய் இருக்கும் தன் மேலேயே தனக்கிருந்த கோபத்தினால் தனது இரு கைகளையும் நீட்டி பெரு நெருப்பாய்.. எரிமலையாய்.. தனக்கு இருந்த கோபத்தை அவனது அழிவு சக்தி கொண்டு தனக்கு முன்னிருந்த காட்டைச் சினம் கொண்டு தீக்கிரையாக்கி கொண்டிருந்தான்.

அதைப் பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்த வாசுவிற்கோ உறைந்து போகும் பேரதிர்ச்சி. அதிரூபனின் கைக்கணினி, சில்வாசன் அழைக்கவும் ஒலியெழுப்பியதல்லவா, அப்பொழுதே அந்தச் சத்தம் கேட்டு வாசுவும் விழித்து விட்டான். ஆனால் அதை அதிரூபன் கவனிக்கவில்லை.

இப்பொழுது தன்னிரு கரங்களில் இருந்து வெளிப்பட்டுப் பெரும் தீப்பிழம்புடன் வெறிக்கொண்டு இந்த அண்டப் பேரண்டமெல்லாம் அதிரும்படி ஆத்திரத்தால் கத்தியபடி, அந்தக் காட்டை எரித்துத் தனது கோபத்தைத் தணிக்க முயன்று கொண்டிருந்த அதிரூபனுக்குப் பின்னால் நின்று கொண்டிருக்கும் வாசுவை கண்டதும் அப்பட்டமான அமைதி.

அதிர்ந்து போய்ப் பயத்தில் மிரண்டு போய் நின்றிருந்த வாசுவின் முகத்தைக் கண்டதும் குற்றஉணர்வுடன் தலைகுனிந்தான் அதிரூபன்.

அதைக் கண்ட வாசு, “நீ நேத்து அந்த யானைகள் கூட அவ்வளவு உக்கிரமா சண்டை போட்டு அதை வீழ்த்தினப்பவே உன்மேல எனக்குக் கொஞ்சம் சந்தேகம் இருந்துச்சு. ஆனா, அதையெல்லாம் கூட, நாம பயிற்சி எடுத்துக்கிட்ட இடத்துல உனக்கே தெரியாம நீ அவங்களோட அந்தப் பானத்த அளவுக்கு மீறி குடிச்சுட்டயோன்னு நினச்சேன். ஆனா இப்ப நீ பண்ணின காரியம்.. இத நான் என்னன்னு எடுத்துக்கறதுன்னு தெரியல. சொல்லு யார் நீ” என்று மிகவும் தீவிர முகபாவத்துடன் கேட்க

அதிரூபன்.. தான் யார் என்பதையும், அவன் எதற்காக இங்கே வந்து இருக்கிறான் என்பதையும், கூற தொடங்கினான். அந்த உண்மையை அறிந்த வாசுவும் அதிர்ந்து போனான் என்று கூறுவதெல்லாம் மிகவும் சாதாரண வார்த்தையாகும்.

நம்ப முடியாத ஏதோ ஒரு மாயாஜாலத்தில் சிக்குண்டிருப்பதாகவும், மிகப்பெரும் சதியில் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும் வாசுவிற்குத் தோன்றத் தொடங்கிவிட்டது. அதேசமயம் அதிரூபனை சந்தேகிக்க மனம் இம்மி அளவு கூடச் சம்மதிக்கவில்லை.

ஆனால் இப்போதைய யுவாவின் நிலைமை மேலும், மகிந்தனின் இந்தத் திடீர் செல்வாக்கு, அவனின் டி.என்.ஏ மாற்றும் திட்டம்.. இதையெல்லாம் எண்ணிப் பார்க்கையில் அவனால் அதிரூபனை நம்பாமலும் இருக்க முடியவில்லை.

எது எப்படி இருந்தாலும் அதிரூபனின் நேர்மை வாசுவிற்குப் புரிந்துதான் இருந்தது. என்னதான் இருந்தாலும் அந்தப் பயிற்சிக்கூடத்தில் அதிரூபன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது வாசுவைக் காப்பாற்றத் தானே?

அதனாலேயே அவனுக்கு அதிரூபன் மீதிருந்த சந்தேகமெல்லாம் போய்விட, அவனருகே சென்று அவனது கரங்களை ஆறுதலாக பற்றி, தோளில் தட்டிக் கொடுத்தான். இந்த ஒரு செய்தியே உணர்த்தியது, வாசுவிற்கு, அதிரூபன் மேல் எவ்வளவு மேல் நம்பிக்கை உள்ளது என்பதை.

அதிரூபன் மீதான வாசுவின் நம்பிக்கை, அதிரூபனுக்கு மிகுந்த தென்பளித்தது. அந்த நிலையில், அதிரூபன், சிருஷ்டியைக் கண்டுபிடிக்கும் கடமையைப் பற்றியும் வாசுவிடம் கூறினான்.

அவனது இப்படிப்பட்ட இக்கட்டான நிலை வாசுவிற்கும் புரிய தான் செய்தது. ஒரு பக்கம் காதல் மனைவியைத் தேட வேண்டும், மற்றொரு பக்கம் யுவாவின் அழிவிலிருந்து அதனைக் காப்பாற்ற வேண்டும். இதற்கிடையே, தன் கிரகத்து தலைவர்களையே தான் செய்துவிட்ட மிகப்பெரும் பிழைக்குத் தண்டனை கிடைக்கப் போகிறது என்ற நிலை.

இவ்வளவையும விட, அதிமுக்கியமாக அந்த மகிந்தனின் சூழ்ச்சி.. இவையெல்லாவற்றையும் எப்படி வெற்றிக் கொண்டு அதிரூபன் மீண்டு வரப் போகிறான் என்பதைப் பற்றியெல்லாம் இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்படியிருந்த அந்நிலையில் தான், மறுநாள் மாலை வேளையில் மகிந்தனுக்கும், அதிரூபன் – வாசுவிற்குமான சந்திப்பு நிகழவிருப்பதாய் செய்தி வந்தது. அதுவரை அவர்கள் இருவரும் யகுசாவை சுற்றிப் பார்க்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதனால் வாசுவும் அதிரூபனும் யகுசாவை சுற்றி பார்க்க கிளம்பினர்.

அவர்களுக்குப் பின்னே 2 காவலர்களும் அவர்களைத் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தனர். அப்படி அவர்கள் இருவரும் யகுசாவை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் தான், ஒரு மிகப்பெரிய காரிலிருந்து அவள் இறங்கினாள்.

முற்றிலும் மாறுபட்டவளாக முழுமையான யுவா கிரகவாசியாகவே மாறி விட்டிருந்த சிருஷ்டி. இதைப் பார்க்கும் அவனுக்கு எப்படி இருக்கிறதாம்?

(தொடரும் – புதன்தோறும்) 

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ‘நீலாவின் அம்மா’ மற்றும் ‘கவித்துளிகள்’ Books for Sale – எழுத்தாளர் மைதிலி ராமையா

    அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 20) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்