in

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 20) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

அழைத்தான்... (அத்தியாயம் 20)

செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

காகித சபதம்

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இணைப்பு

முனா வீடு..! 

குழந்தை மனோ, நன்றாக விளையாடிக் கொண்டிருக்க, ராமலிங்கம் அந்த இரவு வேளையிலே வந்து கதவைத் தட்டினான். யமுனாவிற்கு ஆச்சரியம்.

“சாப்டீங்களாங்க..? பொதுவா இந்த டைம்ல வர மாட்டீங்களே..? மனோ குட்டி..! வாங்க வாங்க..! மணி 11.00 ஆயிடுச்சு. போய் தூங்குவோம்..” என்று அவன் கையிலிருந்த பொம்மையை மெல்ல எடுத்துக் கொண்டு, படுக்கையறைக்குச் சென்றாள். 

ராமலிங்கம் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. மாறாக, மனைவி உள்ளே சென்று வரும்வரை காத்திருந்தான்.

பின் மனைவி வந்த பிறகு, “யமுனா…” என்று கண் கலங்கி, “நா செஞ்ச தப்பு, என் கொழந்தைய பாதிக்க போதுடி. உங்க அண்ணன அன்னிக்கு வெளிய அனுப்புனேன்ல, எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்..” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதான்.

இவ்வளவு நேரம், தூக்க கலக்கத்தில் கேட்டுக் கொண்டிருந்த யமுனா, ராமலிங்கத்தின் செயலைக்கண்டு விழித்துக்கொண்டு, அவனருகில் சென்றாள்.

“ஏங்க.. என்னங்க ஆச்சு? இந்த சாமத்துல வந்து இப்டி தலைல அடிச்சிக்கிறீங்க?” என்று படபடத்து, நீர் கொண்டு வந்து கொடுத்தாள். ராமலிங்கம், கோயிலில் நடந்ததை விம்மிக் கொண்டே சொன்னான்.

“ஏன் யமு..! கடவுள் பழிவாங்குவாரா என்ன? எந்தக் கடவுளும், பக்தன திருத்த தான செய்யணும்?” என்று நொந்து கொண்டான்.

யமுனா அமைதியாக இருந்து, பின் மெல்ல சொன்னாள். “என்னங்க கடவுள் உங்கள திருத்திட்டாரு.. இதுக்குமேல எது நடந்தாலும் அது நம்ம வினைப்பயன் தாங்க. இந்த உலகத்துல எதுவுமே நிலையில்ல. இந்த உறவு கூட கடவுள் கொடுத்தது தா.. போக வேண்டிய நேர வந்தா எல்லாம்  போயிரும்.  நீங்க மனச ரொம்ப கொழப்பிக்காதீங்க. மனுஷ கண்ணெதிர்ல இருந்தா தான் கடவுள நம்பனும்னா.. அது நம்பிக்கைன்னு எப்டி சொல்றது? நம்ம விஞ்ஞானத்தால, கண்டுபிடிக்க முடியாத பாக்க முடியாத, ஏன்? கிட்ட கூட நெருங்க முடியாத சக்திகள் இந்த பிரபஞ்சத்தில இருக்குது..! நீங்க பிரச்சனைன்னு நினைச்சா அது பிரச்சனை. இலனா அது இல்ல. எல்லாமே மனுஷ மனசு தான்..” என்றாள்.

இவள் இப்படி பேசுவதை நினைத்து வாயடைத்துப் போனான் ராமலிங்கம். 

யமுனாவிற்கு மனோவைப் பற்றிய முழு விவரமும் முன்னமே தெரியும். ஊருக்கு சாமியார் என்றாலும், யமுனவிற்கு அவர் உடன் பிறந்த உதரம். சாமியார் சிதம்பரம் வருகிறார் என்று தெரிந்தவுடனே, ராமலிங்கத்திற்குத் தெரியாமல், யமுனா முதலில் சென்று பார்த்தாள். அண்ணன் என்ற பந்த பாசமின்றி, அவர் சொன்னது அவளுக்கு நியாபகம் இருக்கிறது.

“தவமிருந்து பெத்த புள்ள, தானமாப் போயிருவான்..” என்பதை சொல்லக் கேட்டு யமுனா கண்ணீர் விட்ட போது, அவர் சொன்ன சமாதானங்களைத் தான் இப்போது யமுனா ராமலிங்கத்துக்கும் சொல்லி இருக்கிறாள்.

“ஹ்ம்ம்.. இது அவர் சொல்வதல்ல, அந்த நடராஜன் நடத்தும் நாடகம். நாம் வெறும் பொம்மைகள். உலகத்தில் பேர், புகழ், அருள், பொருள் எல்லாம் அவன் தருகிறது தான். அதே போல், பேரலை, பேராழி, புயல், மழை, வறட்சி, பசி, பஞ்சம் இவைகளும் அவனாலே தான் நிகழ்கின்றன. மனிதமனம், இன்பதுன்பங்களை சமமாகப் பாவிக்கத் தெரிந்து கொண்டுவிட்டால், இந்தப் பூவுலகு ஏது?” என்று தனக்குத் தானே பேசிக்கொண்டு, எழுந்து உள்ளே சென்றாள்.

மனோவை அணைத்துக் கொண்டு, ராமலிங்கம் உறங்கிக் கொண்டிருந்தான். யமுனாவும் எந்தவித சப்தமும் இன்றி, அங்கே படுத்துக் கொண்டாள்.

உடல் மட்டுந்தான், மயக்க நிலையில் இருந்தது. மனக்கண்ணானது விழித்துக் கொண்டே, தன் பிள்ளையை நினைத்துத் தவித்துக் கொண்டிருந்ததது…

ர்வோதயம் சிதம்பரம்!! 

கிருஷ்ணன் சொன்ன சேதி கேட்டு, அடுத்த நாள் காலை ஆதவன் கூட தனது அருங்கதிர்களைச் சுருக்கிக் கொண்டு, வர மறுத்திருந்தான். அன்றைய நாளில் வழிபாட்டில் வைத்திருந்த காந்தி படத்தில் இருந்த சிரிப்பு, எல்லோர் உள்ளத்திலும் மறைந்து போயிருந்தது.

வழிபாடு முடிந்தவுடன், பாலச்சந்தர் விடைபெற்றுக் கொள்ளும் உரை நிகழ்ந்து கொண்டிருக்க, வேலையாட்கள் அனைவரும், விழிகளில் நீருடன் தேங்கி நின்றனர். 

பாலச்சந்தர் எல்லோரிடமும், தான் வாங்கி வந்த துணிமணிகளைக் கொடுத்தார். ஒவ்வோர் வீட்டிலும் ஒவ்வொருவரை விசாரித்து அப்படியே கணக்கு வழக்குகளைக் கிருஷ்ணனிடம் ஒப்படைக்க, வெளியே அவரின் கார் ஹாரன் சத்தம் கேட்டது. உறுப்பினர்கள் அவருடனேயே சென்று மரியாதையுடன் வழியனுப்பி வைத்தனர்.

கருப்பு புகையை உமிழ்ந்து கொண்டு, அந்த மகிழுந்து புறப்பட்டது. மகிழுந்து என்று பெயர் வைத்தது சரி தான். அதனுள் இருப்பவர், சங்கத்து மகிழ்ச்சியை எல்லாம் எடுத்துக் கொண்டு சென்று விட்டார். 

அதை அனுபவிக்க, ஓரிரு நிமிடம் கூட தராமல், அடுத்த ஒரு டாட்டா சுமோ கார், வந்து நின்றது. இறங்கும் போதே, மீசைக்காரன் கண்ணில் அப்படி ஒரு அணல்.

ஆவேசத்துடன் கடைக்குள் சென்று, நேரே கிருஷ்ணனைத் தேடி, “டேய்.. திருட்டுப் பயலே.. இனிமே என்னாண்டா நீ வசமா மாட்னடா..” என்பது போல் ஒரு பார்வை பார்த்தார்.

அன்று இருந்த நிலைமையில் யாருமே அதை சட்டை செய்யவில்லை. செகரெட்ரி சீட்டில் அமர்ந்து கொண்டு, அதிகாரமாக எல்லோரிடமும் வேலை வாங்கினான். 

அங்கிருந்த வேலையாட்கள் பழையபடி எந்திரமானார்கள். கிருஷ்ணனுக்கு ஏண்டா ஆடிட்டிங் செக்ஷன் எடுத்துக் கொண்டோம் என்றாகி விட்டது. உறுப்பினர்கள் பணத்தைச் சுரண்டித் தின்பதற்குத் தானும் இப்போது உடந்தையாக அல்லவா ஆகிவிட்டோம் என்று கவலை பட்டான். ஏதோ கடமை என்று வேலை நடந்து, நாட்கள் நகர்ந்தன. கிருஷ்ணனின் கல்யாணம் வேறு நெருங்கிக் கொண்டிருக்கிறது.

அக்டோபர் குளிரிலும், அதிகாலை, அந்திமாலை என்று நேரம் பாராமல், சுற்றிக் கொண்டிருக்கிறான். “அடுத்த மாச கல்யாணம் சார். இந்த வாரம் கடைசில லீவு தரேன்னு சொன்னீங்களே..? பிளீஸ் சார். அம்மா ஒண்டியா எல்லாம் பண்ணிட்டு இருக்கும். நா போய் கூட மாட எதுனா செய்யணும் சார்..” என்று கெஞ்சினான் அவன்.  மீசைக்காரன் அறவே மறுத்துவிட்டான். 

இப்படி இரண்டு மூன்று வாக்குவாதத்திற்குப் பிறகு, கிருஷ்ணனின் கல்யாண தேதியும் வந்தது. அன்று முன்னமே ஆடிட்டிங் வேலைகளை முடித்துவிட்டு, “சார். எல்லா வேலையு முடிச்சிட்டேன் சார்.. என்ன ஊருக்கு போக உடுங்க சார்..” என்று பேச்செடுத்தான்.

மீசைக்காரர் மசியவேயில்லை. கிருஷ்ணனுக்கு மூக்கின் மேல் கோபம் வழிந்தது. அதை புரிந்து கொண்ட செகரெட்ரி, “எல்லா வேலையு முடிச்சாச்சா..? உனக்கு வேற விடிஞ்சா கல்யாணம். சரி.. இந்த நோட்ட எடுத்துட்டு போய், திருக்கோயிலூர்ல குடுத்துட்டு, கணக்கு முடிச்சிட்டு, திரும்பவும் அந்த நோட்ட இங்க குடுத்துட்டு நீ வூட்டுக்குப் போலாம்..” என்று கணக்கு புத்தகத்தை நீட்டி, விஷமமாகச் சிரித்தார். கிருஷ்ணன் என்ன நினைத்தானோ தெரியவில்லை. 

வடிவேலுவிடம் சென்று, “ஒரு வெள்ள தாளு குடுங்கண்ணே..” என்று வாங்கிக்கொண்டு, விறுவிறுவென்று எதையோ எழுதினான். பின்பு எல்லோர் முன்னிலையிலும் ஆவேசமாக சொன்னான்.

“இங்க பாருங்க. செகரெட்ரி சொல்ற மாறி, இந்த வேலைய முடிஸ்டு நா இங்கேர்ந்து கிளம்பிடறேன். அதுக்கு மேல, எனக்கு இங்க வேலை இருந்தாலு, நா இங்க இருக்க மாட்டேன். அத தான் இந்தப் பேப்பர்லயு எழுதிருக்கேன். கவர்மெண்ட் வேல வருதோ இல்லியோ.. நா கிளம்பிடுவேன். சொன்ன சொல் மாறமாட்டேன். எனக்கு விடிஞ்சா கல்யாணமுங்க.. எங்கள மாறி ஏழைகளுக்கெல்லாம் நல்ல நாளே வரக்கூடாதா..?” என்று கடைசி வரிகளைச் சொல்கையில் அவனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

மீசைக்காரனுக்கு அவன் செயல், பொட்டில் அறைந்தாற் போல் இருந்தது. கிருஷ்ணன் “விர்..” என்று பேப்பரை வீசியபடி, நோட்டுப் புத்தகத்தைப் பிடுங்கிக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டான். 

குடியாத்தம் – கல்யாண மண்டபம்..! 

யமுனாவைச் சுற்றி தோழிகள் பலர் இருந்தனர். கல்யாணம் குடியாதத்தில் என்பதால், சிதம்பரத்திலிருந்து உறவினர்கள் பத்து நாளைக்கு முன்பே வந்து விட்டனர். ஆனால், ஒருவரும் இன்னும் மாப்பிள்ளையை நேரில் காணவில்லை.

யமுனாவின் தோழிகள் வேறு கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். ஒரு கட்டத்தில் யமுனா, யாரிடமாவது போன் வாங்கி, அவரோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாள்.

ஆனால், நல்ல வேலையாக அதற்கு அவசியமில்லாமல், அவள் அண்ணன் அன்றைய இரவு வந்து, “இது உன் கண்ணானத்துக்கு என்னோட பரிசு..” என்று புது ஃபோனை நீட்டவும், லட்சுமி, “அண்ணே…” என்று ஓடிப்போய் கட்டிக்கொண்டாள்.

பிறகு, தன் மனக்கசப்புகளை எல்லாம் அவனிடம் கொட்டிவிட்டு, போனைப் பார்த்தாள். அவள் அண்ணன் அதைப் புரிந்துகொண்டு, சர்வோதய சங்கம் நம்பர் போட்டு அவளிடம் கொடுத்தான்.

“டிரிங்… டிரிங்..” என்று ரிங் போனது. யாரும் எடுக்கவில்லை. இரண்டாவது முறையும் அடித்தது. மீசைக்காரர், “யாருய்யா இது?” என்று முணங்கி கொண்டே எடுக்க, லட்சுமி உடனே செல்லை அண்ணன் காதில் வைத்தாள்.

அவன், “கிருஷ்ண இல்லீங்களா? போன மாசத்திலேர்ந்து அவனைப் பாக்கல. இப்போ மறுநாள் கல்யாணத்த வெச்சிட்டு, இப்டி திரியுறான். என் தங்கச்சி கூடதான் நிச்சயம் ஆயிருக்கு. என் தங்க, அழுவுது..” என்று கெஞ்சினான்.

மீசைக்காரனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. “சரிங்க.. நா அனுப்புறேன்..” என்றதும் குரல் சப்தம் நின்றுவிட்டது. 

லட்சுமியிடம் இன்னும் பலத்த அழுகை, உடன் புலம்பல்.

“ச்சே.. அவர ஏன் இப்படி பாடாப்படுத்துறாங்க..? கடவுளே..! இவளோ தூரம் எல்லாமே பன்ன நீ, இதையும் நல்லபடியா முடிச்சி கொடுப்பா. கூடவே அவர்கிட்ட மோசமா நடந்துகிட்டவங்களுக்கு நல்ல பாடம் சொல்லிக் கொடு நடராஜா..!” என்று கதறினாள்.

அவள் அண்ணன் பதறிப் போய், “கல்யாணப் பொண்ணு, இப்டி அழுவாதம்மா. வெளிய பாத்தா, பிரச்சனை ஆயிரும்..” என்று தேற்றி, தூங்க வைத்தான்.

போன் வாங்கிய புதிது, என்பதால் வேலுவிற்கு கால் கட் செய்கிற விஷயமெல்லாம் முழுமையாக தெரியவில்லை. தொடர்பு இன்னும் துண்டிக்கப்படாமல் இருந்தது.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த மீசைக்காரனுக்கு  முகமெல்லாம் அதிர்ச்சி..! மனதில் ஆயிரமாயிரம் எண்ண அலைகள்.

‘பெண் பாவம் சும்மா விடாது என்பார்களே..! தான் கிருஷ்ணனை மட்டும் காயப்படுத்த நினைத்து, இப்போது மூன்று பேரை காயப்படுத்தி விட்டதாக எண்ணி வாழ்க்கையில் முதல் முறையாக வருந்தினான்.  அதிலும் அந்தப் பெண்ணின் அலறல் அப்பப்பா..!’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான்.

அவனுக்கு உடம்பெல்லாம் வியர்த்திருந்தது. இதைப் பார்த்த வடிவேலு, “யாராண்டையோ செம்மயா வாங்கிருக்கான் போல, எப்டி வியர்க்குது பாரு அவனுக்கு?” என்று பக்கத்தில் இருப்பவனிடம் முணுமுணுத்தான். 

மாலை அரும்பி விட்டிருந்தது.

கிருஷ்ணன் நேரே கடைக்குள் நுழைந்தான். நடையில் அப்படி ஒரு வேகம். அதில் வேலை செய்த அலுப்பு இல்லை. காலையில் பேசிய வைராக்கியமே மிளிர்ந்து கொண்டிருந்தது. மீசைக்காரருக்கு எங்கிருந்தோ ஒர் குற்ற உணர்ச்சி எட்டிப் பார்த்தது.

‘சே.. இந்தப் பைய சாப உட்டானோ?’ என்று முதலுக்கு முதலாய் அவன் செயலுக்காகப் பயந்தான்.

கிருஷ்ணன் ஏதும் சலனமின்றி, “சார்.. வேல முடிஞ்சி போச்சு. ஆனா, நீங்க பண்ண இந்த செயல, காலத்துக்கு நா மறக்க மாட்டேன். என் கல்யாணத்த பத்தி யாராவது கேட்டா, ‘ஐயோ.. அத ஏன்பா கேக்குற? எனக்கு அப்போ இருந்த செகரெட்ரி கல்யாணத்துக்கு மொத நாள் கூட லீவு குடுக்கல’ன்னு நிச்சயமா சொல்வேன் சார். நா என் துணிமணியெல்லாம் எடுத்து வெச்சிட்டு தா வந்திருக்கேன். நா எழுதி கொடுத்த லெட்டர காட்டுங்க… சொன்ன மாறியே நா கிளம்புறேன். என் தோஸ்துகள்ட ஒரு வார்த்த சொல்விட்டு வந்துடறேன்..” என்று அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டான். 

(தொடரும் – வெள்ளி தோறும்)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இணைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காக்க! காக்க! ❤ (பகுதி 8) – ✍ விபா விஷா, அமெரிக்கா

    காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 8) – ✍ விபா விஷா, அமெரிக்கா