in

காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 8) – ✍ விபா விஷா, அமெரிக்கா

காதலாய் ❤ (பகுதி 8)

செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7

தயக்கமும் மயக்கமும் சேர்ந்திருந்த

அந்நொடியில்..

உன் விழிப்பார்வையின் வேக வீச்சினில்..

எந்தன் தயக்கம் கொன்று மயக்கம் வென்றது!!

தவு தட்டப்படும் ஓசையில் மனதின் சிந்தை களைந்தாள் அபி. பிறகு மீண்டும் இருமுறை கதவு தட்டப்பட்டு அதுவும் அடங்கிவிடவே, யோசனையுடனே கதவைத் திறந்து பார்த்தவளுக்கு, தன்யா திரும்பிச் சென்று கொண்டிருப்பது தெரிந்தது.

அவள் தான் தன்னை அழைக்க வந்தது என்றுணர்ந்த அபி, “தன்யா ” என்று சற்று உரக்க அழைத்தாள். உடனே அவளைத் திரும்பிப் பார்த்த தன்யா, சிறு சங்கடமான முகத்துடன் அவளை ஏறிட்டாள்.

“தூங்கிட்டியா அபி… சாப்பிடாம இருக்கயேன்னு தான் கூப்பிட்டேன். ஆனா நீ பதில் சொல்லாம போகவும், ஒருவேளை தூங்கிட்டியோன்னு கிளம்பிட்டேன்” என்று கூறவும், அவளைத் தனது அறைக்குள் அழைத்தாள் அபி.

“எனக்குப் பசி எல்லாம் இல்ல தனு, ஆனா நீ இன்னைக்குச் சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பணுமா?” என்று தயங்கியவாறே அபி கேட்கவும்

அவள் இப்பொழுது தன் துணையை விரும்புகிறாள் என்று உணர்ந்த தன்யா, ஆறுதலாக அவளது கரங்களைப் பற்றியபடி, “இல்ல அபி… தருண் ஒரு மெடிக்கல் கான்பரன்ஸ்க்கு டெல்லி போயிருக்காரு. திரும்ப அவர் இங்க வரதுக்கு இன்னும் ரெண்டு நாள் ஆகும். அதனால நான் இங்க தான் இருப்பேன். என்ன விஷயம்? என்கிட்டே ஏதாவது சொல்லனுமா?” என்று கேட்டாள்.

அதற்கு மெளனமாக ‘ஆமாம்’ என்று மட்டும் தலையசைத்தாள் அபி.

அவளது அந்த மௌனம் வெகுநேரம் வரையில் நீண்டிருக்க, தன்யா ஒருபுறம் அபியைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருக்க.. அபியின் மனத்திலோ என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பது தான் யாருக்கும் புரியவில்லை.

சிறிது நேரம் கழிந்த பிறகு, தன்யாவே மீண்டும் பேச்சை ஆரம்பித்தாள்.

“வந்து அபி… அண்ணா உன்ன ரொம்பத் தொந்தரவு பண்றங்களா?” என்று மட்டும் கேட்டு வைத்தாள்.

அவள் அவ்வாறு கேட்டதும், சலீரென விழி உயர்த்திப் பார்த்தவள், தன்யாவின் விழிகளையே இருகணம் கூர்ந்து நோக்கிவிட்டு, மீண்டும் இமை தாழ்த்திக் கொண்டாள்.

ஆனால் அபியின் மனதில் என்ன உறுத்துகிறது என்பதை ஓரளவு புரிந்து கொண்ட தன்யா, அவளைத் தேற்றும் விதமாகப் பேசத் துவங்கினாள்.

“அபி… நாம இன்னைக்குத் தான் முதன்முதலா தனியா வெளியே போனோம். அப்படிப் போனதுலயே.. என்ன பொறுத்தவரைக்கும் நீ என்னோட உயிர்த்தோழி ஆகிட்ட. எனக்கு ரொம்ப நெருக்கமானவளா ஆகிட்ட, ஆனா இதெல்லாம் எனக்குத் தோணுற விஷயங்கள் தான். அதேசமயம், உனக்கும் இதே மாதிரி தோன்றலாம், தோன்றாமலையும் போகலாம்.

அப்படி நான் உனக்கு நெருக்கமானவளா இல்லன்னு நீ சொன்னா கூட என்னால உன்ன புரிஞ்சுக்க முடியும். அதனால் உனக்கு என்கிட்டே ஏதாவது பேசணும்னு தோணினாலோ, அல்லது சொல்லணும்னு தோணினாலோ, தயங்காம சொல்லலாம். அது என்னைப் பற்றியதா இருக்கலாம், இல்ல அப்பா, அம்மா, அண்ணா, யாரை பற்றி வேணாலும் இருக்கலாம்.

நீ மனசு விட்டு பேசினாலே உனக்குள்ள இருக்கற குழப்பம் எல்லாம் தீர்ந்துடும்னு தோணுது. ஆனா உனக்கு அப்படி இல்ல, நான் சும்மாவே உன் பக்கத்துல உட்காந்திருக்கணும்னு நினைச்சாலும் சொல்லு. நான் உனக்குத் துணையா இங்கயே இருக்கேன்” என்று மிகப் புரிதலுடன் அவள் பேசவும், அந்த அன்பு, வேறொருத்தியின் பாசத்தை நினைவுறுத்த, சற்றுக் கண்கள் கலங்கியது அபிக்கு.

அதைக்கண்ட தன்யா, மனதில் முதிர்ந்தவளாக பதட்டப்படாமல், அவளது தோளுடன் தோளாக லேசாக அணைத்தவாறு அவளைத் தேற்ற முனைந்தாள். அதன் பின்பே அபி, தனது மனதின் எண்ணவோட்டங்களை வாய் விட்டு கூற முனைந்தாள்.

“எனக்கு… லயான்னா..” என்று ரதியை லயாவாகப் பெயர் மாற்றம் செய்து கூறும்போது மீண்டும் தொண்டை அடைத்துவிட, அதைச் சிரமப்பட்டுச் சரிபடுத்திக் கொண்டு மீண்டும் ஆரம்பித்தாள் அபி.

“எனக்கு அவள்னா ரொம்ப உயிர் தனு. அது எப்படின்னா, என்னை உன்னோட உயிர் தோழின்னு சொன்னல்ல, அதே மாதிரி தான் லயாவும். இன்னும் சொல்லனும்னா… அவ தான் என்ன உயிர்ப்போடு வச்சிருந்தா. எனக்கு இதுக்கு முன்னாடி நிறையப் பேரிழப்புகள் நடந்துருக்கு, அதையெல்லாம் தாண்டி என்ன உயிர் வாழ வச்சது.. அவளோட நட்பு தான்.

அவளுக்கும் எனக்கும் இருந்தது நட்புன்னு சொல்றத விட, என்ன அவளோட குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டா. அதனால தான் நான் அந்த இழப்புகளையெல்லாம் தாண்டியும் கூட எல்லாரையும் மாதிரி வாழ முடிஞ்சுது. அவ.. அவ.. இப்போ இல்ல. அவளோட இடத்தை யாராலயும் நிரப்ப முடியாது. அது வந்து எப்படின்னா.. அம்மா.. மறுபடியும் வந்ததுக்கு அப்பறம் கூட, அவள் இல்லாத அந்த இடம் நிரப்பப்படாமலேயே தான் இருக்கும்.

ஆனா… என் மனசு அவளை மாதிரியே இன்னொரு துணையைத் தேடுச்சு. அதே சமயம், புதுசா யாரையும் ஏத்துக்க விடாமையும் தடுத்துச்சு. இத்தனைக்கும் நடுவுல, உனக்கும் எனக்கும் இந்த ஒரு நாள்லயே நல்ல நட்பும் உருவாச்சு. அதுக்கான காரணம் உன்னோட தூய்மையான மனசு தான். சோ… நீயும் எனக்கு உயிர் தோழி தான். இன்னும் சொல்லப் போனா… லயா மாதிரியே என்ன புரிஞ்சுகிட்ட ஒருத்தி. ஆனா…” என்று இழுத்து ஒரு கணம் நிறுத்தியவள்… எதுவும் பேசாது கண்களிலிருந்து கண்ணீரை மட்டுமே வழிய விட ஆரம்பித்தாள்.

அப்பொழுதும் தன்யா மெதுவாக அவளது கரத்தை தட்டிக் கொடுக்கவும், அபி தன்யாவின் மடியிலேயே சுருண்டு படுத்துக் கொண்டாள்.

“எல்லா இழப்பின் போதும் என் கூடவே லயாவும், அப்பாவும் மலை மாதிரி துணை இருந்தாங்க தனு. அதனால அதையெல்லாம் ரொம்பச் சுலபமா கடந்துட்டேன். இப்போ அவங்களே இல்ல.. அத என்னால தாங்கவே முடியல. ஆனா.. அம்மாவுக்காக, என் வலிகளை மறந்துட்டு நான் சாதாரணமா இருக்க நினைக்கறேன் தனு. அம்மாவுக்கு நானும் இல்லன்னா… என்னவாகிடுவாங்களோன்ற பயத்துல தான், நான் ரொம்பக் கஷ்டப்பட்டு என்ன நானே அழிச்சுக்காம பாத்துக்கறேன். ஆனா… இப்ப சில விஷயங்கள் என்ன ரொம்பப் பாதிக்குது தனு” என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக் கொண்டே போனவள், பின்பு தானாகவே ஒருகட்டத்தில் தன் பேச்சை நிறுத்தி விட்டு…

“என்னமோ… உன்கிட்ட மனசுல இருக்கறத கொட்டிடணும்னு தோணுச்சு… அதான் சொல்லிட்டேன். நீ எதுவும் பயந்துடாத தனு” என்று வார்த்தைகளில் கூறினாலும், அப்பொழுதும் தாழ்ந்திருந்த அவளது விழிகள்… தனுவின் கண்களுக்கு அவள் எதையோ சொல்ல முடியாமல் தவிக்கிறாள் என்பதை உணர்த்தியது.

எனவே ஒரு முடிவுக்கு வந்தவளாக, “நான் உன்னோட நல்ல தோழின்னா… ஒரு விஷயத்தை நான் உன்ன மறுபடியும் கேட்கலாமா?” என்று வினவினாள்.

அதைக் கேட்ட அபியோ, சிறு புருவமுடிச்சுடன் அவளை ஏறிட்டு, “ஹ்ம்ம்.. கேட்கலாம்” என்று கூறியதும்

அவளது விழிகளைக் கூர்ந்து நோக்கியவள், “அண்ணா உனக்குத் தொந்தரவா இருக்கானா?” என்று வினவினாள்.

அதற்கு மறுப்பாய் அபி தலையசைக்கவும், “அபி… எனக்கு அண்ணாவை பத்தி நல்லாத் தெரியும். நீ இவ்வளவு வேதனையில் இருக்குறப்போ அவன் உன்ன இப்படி வம்பிழுக்கனும்னு நினைக்க மாட்டான். அதையும் மீறி இப்படி உன்ன டீஸ் செஞ்சா, உனக்கு அவன் மேல வெறுப்பு தான் அதிகமாகும்ன்னு தெரியாத அளவுக்கு அவன் சின்னக் குழந்தை கிடையாது.

அதையும் மீறி அவன் இப்படிச் செய்யறான்னா.. அவன் மேல வர கோபத்தினாலயாவது, நீ உன்னோட துக்கத்தைக் கொஞ்சம் மறந்துட்டு.. இந்த வீட்டுல என் கூடவும், அம்மா கூடவும் ஒட்டுவேன்னு நினைச்சான். அவன் நினச்சது சரியா நடந்துடுச்சு. நீ கொஞ்சம் கொஞ்சமா உன் சோகத்தை ஒதுக்கி வைக்க ஆரம்பிச்சிருக்க. இன்னும் எனக்கு என்ன தோணுதுன்னா… கிருஷ்ணா, உன்ன அவன் பக்கம் ஈர்க்க ஆரம்பிச்சுருக்கான்” என்று கூறியதும்

அவளை அதிர்ந்து நோக்கிய அபி, எதையோ கூற முனையும் முன்னே அவளைத் தடுத்த தன்யா, “நான் முழுசா சொல்லிடறேன் அபி..” என்று விட்டு மேலும் தொடர்ந்தாள்.

“எனக்கு உங்க ரெண்டு பேருக்கு இடையில என்ன பிரச்சனை இருக்குனு தெரியல, ஆனா கிருஷ்ணா உன்ன விரும்பறான்னு மட்டும் நல்லாவே தெரியுது” என்று கூறி நிறுத்தினாள்.

அதைக் கேட்டு அபி இப்பொழுது அதிர்ச்சியடைவாள் என்று தன்யா எதிர்பார்த்திருந்தால், அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கும். ஏனென்றால், முன்னெப்போதும் இருந்ததை விட, இப்பொழுது அதிக அமைதியுடன் காணப்பட்டாள் அபி.

அது அவளும் கிருஷ்ணா அவளைக் காதலிக்கிறான் என்பதை உணர்ந்தேயிருக்கிறாள் என்பதைக் காட்டியது. ஆனால் இதில் இந்த விடயத்தில் அபிக்கு எந்த அளவிற்கு உடன்பாடு என்பது தான் தெரியவில்லை தன்யாவிற்கு.

தன்யா அபியின் மனத்தினுள் என்ன இருக்கிறதென்பதை அறிய முயன்று தோற்றுக் கொண்டிருக்கும் பொழுது அபியே, “அவர் என் மேல விருப்பப்பட்டா போதுமா தனு? உங்க வீட்டுல காதல் கல்யாணத்துக்குச் சம்மதிப்பார்களா?” என்று ஒரு மாதிரி குரலில் கேட்டாள்.

அந்தக் குரலில் இருந்தது… பயமா? வருத்தமா? வெறுப்பா? இல்லை அசூசையா? என்று தெரியவில்லை தனுவிற்கு. ஆனால் ஏதோ ஒன்று மனதினுள் நெருடத் துவங்கியது.

அது போன்ற வேறு ஏதோ ஒரு நெருடலில் தான் அபியும் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறாள் என்று எண்ணிய தன்யா, அவளது அந்த மனஉறுத்தலை போக்கும் வேகத்துடன், “காதலுக்கு இந்த வீட்டுல எதிர்ப்பு இல்ல அபி. ஏன் சொல்றேன்னா.. என்னோடதும் காதல் கல்யாணம் தான்” என்று கூறவும், அவளை ஆச்சர்யத்துடன் நோக்கினாள் அபி.

அதற்குத் தன்யாவோ, “ஹேய்.. எதுக்கு இவ்வளவு ஆச்சர்யமா பார்க்கற? அப்பா அம்மாக்கு மட்டுமில்ல, தாத்தா பாட்டிக்கும் கூடக் காதல் மேல வெறுப்பு இல்ல. ஏன்னா… எங்க கல்யாணம் இந்த வீட்டுல இருக்கற எல்லாரோட சம்மதத்துலையும் தான் நடந்துச்சு” என்று அவள் கூறவும்

சிறு பரபரப்புடன், “என்ன? தாத்தா பாட்டிக்கு கூட உங்க கல்யாணத்துல வெறுப்பு இல்லையா? அது எப்படி முடியும்?” என்று ஒரு ஆவேசத்துடன் கேட்டாள் அபி.

அதைக் கேட்டு மெல்ல சிரித்துக் கொண்ட தன்யா, “எதுக்கு இவ்வளவு படபடப்பு? முதல்ல நான் சொல்லறதை குறுக்கிடாம முழுசா கேளு. அப்போதான் உனக்கு நம்ம குடும்பத்தைப் பத்தி நல்லா புரியும்” என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்தாள்.

“தாத்தாவுடைய சின்ன வயசு நண்பர் தான் தருணோட தாத்தாவும். ஆனா அவர் ஒரு கட்டத்துல வடநாட்டுக்கு போயிட்டதால ரொம்ப வருஷம் தொடர்பில்லாம இருந்தாங்க. ஒருமுறை தாத்தாக்கு ஒரு கல்யாண வீட்டுல ரொம்ப உடம்பு சரியில்லாம போனப்போ, அங்கிருந்த தருண் தான் சிகிச்சை செஞ்சாரு. அதுல தருண் மேல ரொம்ப நம்பிக்கை வந்துட, அதுக்கு அப்பறம் தருண் ஹாஸ்ப்பிட்டல்ல தான் சிகிச்சை எடுத்துப்பேன்னு பிடிவாதமா இருந்துட்டார்.

அப்படி ஒரு முறை தாத்தாகூட நானும் அங்க போனப்போ, எனக்கும் தருணுக்கும் பார்த்த முதல் பார்வையில ஒருத்தருக்கு ஒருத்தர் பிடுச்சுப் போக, நாங்க ரெண்டு பேரும் பார்த்த முதல் நாளேன்னு பாட்டு பாட, அத கிருஷ்ணாவும் பார்த்துட்டான். ஆனா… தருண் எங்களோட காதலைப் பற்றி எடுத்துச் சொன்னதும், அவனும் வீட்டுப் பெரியவங்ககிட்ட பக்குவமா பேசி சம்மதம் வாங்கிட்டான்.

இன்னும் சொல்லனும்னா எங்க நிச்சயதார்த்தம் நடந்த சமயத்துல தான், தருண் தாத்தாவ பற்றியே நம்ம தாத்தாக்கு தெரிஞ்சுது. அந்தச் சமயத்துல அவர் உயிரோடவும் இல்ல. இதெல்லாம் நான் ஏன் இவ்வளவு விளக்கமா சொன்னேன்னா, தாத்தாக்கு கூட என் காதல்ல சம்மதம் தான். அது தருண் அவரோட நண்பரோட பேரன்றதுக்காக இல்ல.

அவருக்கு எங்களோட நேர்மை பிடிச்சுது, அதனால தான். மத்தபடி… காதலை வீட்டுக்கு சொல்லாம மறைச்சு, கடைசி நேரத்துல வீட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்துற இந்த மாதிரி விஷயங்கள் தான் தாத்தாக்கு பிடிக்காது” என்று கூறிக்கொண்டே எதையோ நினைத்து முகம் இறுகியவள்

மீண்டும் அபியைக் கனிவுடன் நோக்கி, “இப்போ கூடக் கிருஷ்ணா உன்ன விரும்பறது அப்பாக்கும், அம்மாக்கும் தெரியும். இது தாத்தாக்கும் அரசல் புரசலா தெரியும்ன்னு நினைக்கறேன்” என்று கூறியதும் அபி தூக்கி வாரிப்போட படுக்கையில் இருந்து எழுந்தாள்.

(தொடரும் – சனிக்கிழமை தோறும்)

பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 20) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

    பெற்றால் தான் பிள்ளையா (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி.