in

கொடிக்கு காய் பாரமா (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி. 

கொடிக்கு காய் பாரமா (சிறுகதை)

செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“அம்மா… நான் கிளம்புறேன்” கீர்த்தனா குரல் கொடுத்தாள். 

பிரபல பெண்கள் மாத இதழில் ரிப்போர்ட்டர் வேலை கிடைத்து, அன்று தான் ஜாயின் பண்ணுகிறாள்.

“போற வழியில் பிள்ளையாரைக் கும்பிட்டுட்டு போ கீர்த்தனா!” என்றாள் அம்மா.

ஆபீஸ் வந்தவள் தன் அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரை காண்பித்து ஜாயின் பண்ணிவிட்டு, ஆசிரியரை போய் பார்த்தாள்.

“என்னமா ஜாயின் பண்ணிட்டியா? மிஸ் கீர்த்தனா! ஒண்ணு செய்யுங்க, கஸ்தூரிபா அன்னை இல்லத்திற்கு போங்க… நம்ம பத்திரிக்கை ஐடி கார்டு எடுத்துட்டு போங்க… அங்க உள்ள யாரையாவது பேட்டி கண்டு ஒரு ஆர்டிகிள் தயார் பண்ணி கொண்டு வாங்க” என்றார்.

எளிதான வேலை என நினைத்து கஸ்தூரிபா இல்லத்துக்கு  வந்த கீர்த்தனாவுக்கு, அந்த சூழல் அதிர்ச்சியை அளித்தது.

மிகவும் வயதாகி கட்டிலில் படுத்திருந்தவர்கள், தனியாக புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்க்க மனசு சங்கடப்பட்டது. நடமாடிக் கொண்டிருந்த சிலரை  அணுகிப் பேச முற்பட, சிலர் பேசுவது புரியவில்லை…. சிலர் கோபப்பட்டனர்… சிலர் பேசவே மறுத்தனர்…

இரண்டு மணி நேரமாக அந்த இடத்தையே சுற்றி வந்தவள், மிகவும் மனம் சோர்ந்து போனாள்.

பசி வயிற்றை கிள்ள, அம்மா கொடுத்த லெமன் சாதத்தை ஒரு மரத்தடியில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.

அப்போது அவள் அருகே வந்த மங்களத்தம்மாள், “என்னம்மா! காலையிலிருந்து சுத்தி சுத்தி வர்ற…. ஒருத்தரும் சரியா பேசல… நீ சாப்பிட்டு முடிச்சிட்டு இங்கேயே வெயிட் பண்ணு! பெட்ல இருக்கிற ரெண்டு பேருக்கு கஞ்சி கொடுத்துட்டு வர்றேன்!” என்று சொல்லிவிட்டுப் போனார்.

சற்று நேரத்தில் திரும்பி வந்தவர் அவளருகில் அமர்ந்தார். “கண்ணு! ஏம்மா சோர்வாயிட்ட?” என்றார்.

“அம்மா! நான் வேலைக்கு சேர்ந்த முதல் நாள், இந்த சூழ்நிலை மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு”

“பொண்ணுங்கறவ தைரியசாலியாக இருக்கணும். இரக்கப்படலாமே தவிர, தன்னம்பிக்கையை இழந்திடக் கூடாது. நாம சந்தோஷமா இருந்தா தான், நம்மள சுத்தி உள்ளவங்களை, சந்தோஷமா வச்சுக்க முடியும்! நான் என் கதையைச் சொல்றேன்…. அதையே எழுது” என்று புன்னகைத்தார்.

“என் வீட்டுக்காரர் இறந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. அவர் இருந்தபோது வாழ்க்கை அர்த்தமுள்ளதாக, சுதந்திரமானதாக இருந்தது. சாதாரண குடும்பம்தான் என்னுது. எனக்கு ஆறு மகன்களும், ஒரு மகளும். அவருடைய குறைந்த சம்பளத்தில், குழந்தைகளை வளர்க்க படாத பாடுபட்டேன், அம்மா வீட்டு சப்போர்ட் உதவியாக இருந்தது. குழந்தைகள் எல்லோரையும் நன்றாக படிக்க வைத்தேன்.

பிள்ளைகளுக்கும் படிப்பு நன்றாக வந்தது. ஸ்காலர்ஷிப் கிடைத்தது… மூத்த இரண்டு குழந்தைகளை என் அண்ணன் படிக்க வைத்தார். மூத்தவன் ராஜு வக்கீல், இரண்டாமவன் சுந்தர் ஆடிட்டர், கணேஷும் விக்னேஷும், மூன்றாவது நான்காவது பையன்கள்… எம்.காம் படிச்சிட்டு திருச்சியில் ரெண்டு பேரும் சேர்ந்து எலக்ட்ரிக்கல் கடை வச்சிருக்காங்க.

அடுத்தது பொண்ணு அஞ்சனா, ‘அஞ்சாவது பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது’… அவ செழிப்பா, காரும், பங்களாவுமா இருக்கா. அவ ஆத்துக்காரர் என்ஜினியர். என் ஆறாவது பையன் கண்ணன், ரியல் எஸ்டேட் பிஸினஸில் இருக்கான். கடைக்குட்டி நாகராசுக்குத்தான் படிப்பு சரியா வரலை… கிராமத்துல இருக்கிற நிலத்தை கவனிச்சு விவசாயம் பண்ணுறான்”

“ஏன் மாமி, ஏழு பிள்ளைகளை பெத்ததுக்கு எப்பவாவது வருத்தப்பட்டிருக்கீங்களா?”

“அப்படி சொல்லாதடிம்மா… பிள்ளைச் செல்வம் தான் பெரிய செல்வம். எந்தக் காலத்திலும் எந்த கஷ்டத்திலும் அவங்களை நாங்க பாரமா நெனச்சது இல்ல. கொடிக்கு காய் பாரமாகுமா சொல்லு”

‘ஆனால் அந்த காய்களுக்கு தன்னை தாங்கிய கொடி தேவைப்படவில்லையே….. வெட்டி விட்டு விட்டார்களே….’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் கீர்த்தனா.

“என் புருஷன் இறந்ததும் மூத்த பிள்ளை ராஜு வீட்டில்தான் இருந்தேன். முதல்ல பிரச்சனை ஒன்றுமில்லை. என் மருமகள் வேலைக்குப் போயிட்டிருந்தா… அவள் வேலையை விட்டுட்டு வீட்டுக்குள் இருந்த போதுதான் பிரச்சனை ஆரம்பித்தது. அவளுக்கு நான் இருப்பது  எரிச்சலை உண்டாக்கியது. இந்த நிலையில் என் கணவரின் முதல் திதி வந்தது.

பிள்ளைகள் எல்லோரும் கூடி தகப்பனாருக்கு திதி கொடுத்தனர். அன்று இரவு எல்லோரும் மாடியில் கூடிப் பேசினர். கீழே உட்கார்ந்திருந்த என் காதில் அவர்கள் பேச்சு பூராவும் விழுந்தது. காதில் விழுந்தாலும் விழட்டும், என்று நினைத்தார்களோ என்னவோ!

என் மூத்த பிள்ளை ராஜு, “அம்மாவை ஒரு வருஷம் நான் வச்சு பாத்துட்டேன்! இனி உங்க எல்லோர் டேர்ன்” என்றான். 

“என்ன சொல்றீங்க அண்ணா? என் பிள்ளைங்க ரெண்டும் சின்னது, அதுங்களோட போராடவே எனக்கு நேரம் சரியா இருக்கு!” என்றான் கண்ணன்.

“எனக்கு என் மாமியார் கூட இருக்காங்க அதனால அம்மாவை என் வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியாது!” என்றான் சுந்தர்.

“உங்க வீடுகள்ல வசதியா  இருந்து பழகிட்டு… கிராமத்துல அம்மாவால இருக்க முடியாது. டாக்டர் வசதியும் அவசரத்துக்கு கிடையாது” என்றான் கடைக்குட்டி நாகராசு.

“எங்களுக்கு அடிக்கடி டிரான்ஸ்பர் ஆகுற ஜாப்… ஊர் ஊராக வயசானவங்கள கூட்டிட்டு திரிய முடியுமா?  விக்னேஷும் கணேஷும் கடைதானே வச்சிருக்காங்க, அவங்க ரெண்டு பேருமே ஒரே ஊர்ல தான் இருக்காங்க, ரெண்டு பேரும் மாறி மாறி வைச்சு பார்த்துக்கலாம்” என்றாள் என் இரண்டாவது மருமகள்.

“அண்ணி! நீங்க பேசறது நல்லா இல்ல…. ஏன் நாங்க மட்டும்தான் அம்மாவுக்கு பிள்ளையா?  எங்களை மட்டும் தான் பெத்தாளா? நீங்களும் பார்த்து தான் ஆகணும்…. நாங்க மட்டும் என்ன ஏமாளியா? இருக்கிற சொத்தை மட்டும் சமமாக பிரித்து எடுத்துக்கத்தானே செஞ்சீங்க…”

“உன் புள்ளைங்க வளர்ந்துட்டாங்க… என் பசங்க சின்ன புள்ளைங்க…”

“அப்ப அம்மாவ நீ கூட்டிட்டு போ… உன் புள்ளைங்களை அம்மா வளர்த்து கொடுப்பா..”

“வாய மூடு! அவளுக்கு என்ன தெரியும்? இந்த காலத்து குழந்தைகள அவ வளர்த்தா குட்டிச்சுவரா தான் இருக்கும்…”

ஒரு பெரிய குதிரை பேரமே… என்னை வெச்சு நடந்தது. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நான் இடிந்து போனேன். ரொம்ப கூசிப் போனேன். பெரிய அவமானமாக இருந்தது.

என்னை வச்சு நடந்த பேரம், கடைசியில ஒரு உடன்படிக்கைக்கு வந்தது. மூத்தவன் தவிர அந்த வருடம் முழுவதும் ஒவ்வொரு பிள்ளை வீட்டிலும் ஒரு மாதம் இருக்க வேண்டுமென முடிவாகியது. வயதானவளை இப்படி அலக்கழிக்கிறோமே என்ற இரக்கம் அவர்கள் மனதில் இல்லை.  உடம்பும் மனதும் ரொம்பவே சோர்ந்து போனது”

“அம்மா… உங்க பொண்ண பத்தி நீங்க ஒண்ணுமே சொல்லலையே?”

“வெட்கத்தை விட்டு, என் பொண்ணு அஞ்சனாவிடம், உன்னுடன் கொஞ்ச நாள் இருக்கிறேன் அஞ்சு என்றேன். அதற்கு அவள் சொன்ன பதில் இருக்கிறதே. ‘அம்மா! பெங்களூர் ரொம்ப குளிரும்! உனக்கு செட் ஆகுமான்னு பார்த்துக்கோ!’ என்றாள். பரவாயில்லைம்மா… ஆறுமாசம் குளிர் வரும் வரை உன் கூட இருக்கிறேன் என்றேன். அதற்கு அவள், ‘அம்மா உனக்கா புரியணும்… ஆறு ஆம்பிளப் பிள்ளைங்களை பெத்துட்டு, பெண் வீட்டில் வந்து தங்கினா நல்லாவா இருக்கும்? அது உனக்கும் கேவலம் எனக்கும் கேவலம். இதைவிட நீ இருக்குற இடத்துல அட்ஜஸ்ட் பண்ணிக்கோ!’ என்றாள், மனசு வலித்தது.

ஒவ்வொரு மாதமும் ஒரு மகன் கொண்டு போய் அடுத்த மகன் வீட்டில் விட்டு வருவான். அதுவும் ரயில்வே ஸ்டேஷனில் பார்சல் மாற்றுவது போல அண்ணன், தம்பியிடம் ஒப்படைத்துவிட்டு அப்படியே ஊர் போய்விடுவான்.

ஒரு வருடம் அல்லாடினேன்…  அப்புறம்தான் ஒரு முடிவுக்கு வந்தேன். வெறும் அம்மாவா இருந்தவள் தன்னம்பிக்கை கொண்ட புது மங்களமாக மாறினேன். என் பிள்ளைகளைக் கூப்பிட்டு வைத்து, நான் இந்த இல்லத்திற்கு வருவதற்கு முடிவெடுத்திருப்பதாக சொன்னேன்.

பிள்ளைகள் மறுத்தனர். யார் கேட்டாலும் உங்கள்  அம்மா முதியோர் இல்லத்தில்  முதியோர்களுக்கு சேவை பண்ண தங்கியிருக்கிறாள் என்று சொல்லுங்கள். உங்களுக்கு கெட்ட பெயர் வராது என்றேன்.

ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை கீர்த்தனா. நான் என் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் போதெல்லாம் பாசத்தையும் சேர்த்து ஊட்டித்தான் வளர்த்தேன், என் பிள்ளைகளும் பாசமானவர்கள்தான். ஒரு தாயை சுமையாக நினைக்க வைப்பது எது? தாயின் வயோதிகமா? பிள்ளைகளின் வேலைப்பளுவா? உறவுகள் கொடுக்கும் நெருக்கடியா? இல்லை பிள்ளைகளுக்கே வயதாவதாலா? ஏதோ ஒரு காரணத்தால் தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஒரு திரை விழுந்து விடுகிறது, தாயே சுமையாக தெரிய ஆரம்பித்து விடுகிறாள்.

என் கதை உனக்கு ஒன்றை உணர்த்தி இருக்கும் கீர்த்தனா. ஒரு தாயால் ஏழு குழந்தைகளை ஏழ்மையிலும் வளர்க்க முடிகிறது, ஆனால் ஏழு பிள்ளைகளால் வசதி இருந்தாலும் ஒரு தாயை பராமரிக்க முடியவில்லை! இதுதான் விதியா?” என்று முடித்தார்.

‘இது உங்கள் விதி மட்டுமல்ல அம்மா, பல தாய் தந்தையரின் விதி’ என்று நினைத்துக் கொண்டாள் கீர்த்தனா.

மங்களம் மாமியின் கண்களில் துளிர்த்த கண்ணீரை  பேனாவின் மையாக கொண்டு, தன் முதல் கதையை எழுத ஆரம்பித்தாள் கீர்த்தனா.

(இக்கதை… உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது) 

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வல்லபி ❤ (பகுதி 9) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    காக்க! காக்க! ❤ (பகுதி 12) – ✍ விபா விஷா, அமெரிக்கா