in

வல்லபி ❤ (பகுதி 8) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

வல்லபி ❤ (பகுதி 8)

செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7

மூர்த்தியின் வலிப்பிற்கான காரணம் புரிந்ததென்று வல்லபியும், சுகந்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“நீயாவது என்னை மன்னிப்பாயா வல்லபி?” கெஞ்சும் குரலில் கேட்டாள் மரகதம்.

“யாருக்கோ தவறு செய்து விட்டு யாரிடமோ மன்னிப்பு கேட்கிறீர்கள், வேடிக்கை தான்” என்றவள், “நான் கிளம்புகிறேன்” என்று விருட்டென்று எழுந்து வெளியே வந்து விட்டாள் வல்லபி.

விஷ்ணுவும், மரகதமும் என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாக இருந்தனர். சுகந்தியும் மௌனமாக அவளைப் பின் தொடர்ந்தாள். விஷ்ணு பலமுறை முயன்றும் வல்லபியைப் பார்க்க முடியவில்லை.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக  விஷ்ணுவைப் பார்க்க மறுத்தாள் வல்லபி. ஒருநாள் பேஷண்ட் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று பார்க்க மறுத்து விட்டாள். ஒருநாள் சுகந்தியோடு பெரியகுளம் போய் விட்டாள்

“வர இரண்டு நாள் ஆகும்” என உள்ளிருந்தபடியே பதில் கூறினாள் கனகா.

அப்படியும் ஒரு நாள் அவளை, அவள் மருத்துவமனையில், ஒரு நோயாளியாக ‘டோக்கன்’ வாங்கிக் காத்திருந்து பிடித்து விட்டான்.

“இப்படி என்னை ஏமாற்றினால் என்ன அர்த்தம் வல்லபி?” என்றான் விஷ்ணு அழமாட்டாத குறையாக.

“உங்கள் யாரையும் பார்க்கப் பிடிக்கவில்லை என்று அர்த்தம். முக்கியமாக மரகதத்தின் மகனான உங்களை வெறுக்கிறேன் என்று அர்த்தம்” என்றாள் வல்லபி எங்கோ பார்த்துக் கொண்டு.

“என் அம்மா செய்த தவறுக்கு என்னைப் பழி வாங்காதே. இன்று மாலை ஏழு மணிக்கு நான் உன் வீட்டிற்கு வருவேன். எந்தக் காரணம் கொண்டும் என் யாமினியை என்னால் இழக்க முடியாது, வருகிறேன்” என்று வேகமாக வெளியேறி விட்டான்.

கூறியபடியே, அன்று இரவு ஏழு மணிக்கு வல்லபி வீட்டிற்கு வந்தான் விஷ்ணு. கனகா கொண்டு வந்து வைத்த ஆரஞ்சு பழரசத்தைக் கூட குடிக்க மறுத்து விட்டான். அவன் எதிரே வந்து அமைதியாக அமர்ந்தாள் வல்லபி.

“உன் மனதைத் தொட்டு சொல் வல்லபி, நானா உன்னை டார்ச்சர் செய்கிறேன்? என் அம்மா எத்தனை முறை  உன்னிடம் மன்னிப்பு கேட்டார்கள்? அவர்களை மதித்துப் பேசக் கூட மறுக்கிறாயே, இது நியாயமா?” என்றான் விஷ்ணு.

“உங்கள் அம்மாவின் மன்னிப்பு யாருக்கு வேண்டும்? என் அம்மா ஏன் அழுகிறார்கள் என்றே எனக்குத் தெரியாது. அவர்களின் இருபது வருட அழுகைக்கு உன் அம்மாவின் மன்னிப்பு விடையாகுமா? நீங்கள் உங்கள் பெற்றோரின் அன்பிலும், அரவணைப்பிலும் தானே வளர்ந்தீர்கள்? அந்த அன்பும் அரவணைப்பும் என் தந்தையிடம் இருந்து எனக்குக் கிடைக்காததற்கு உங்கள் அம்மா ஒரு காரணம் அல்லவா? அவர்களை எப்படி மதித்துப் பேச முடியும்? அவர்களை ஒரு பெண்ணாகக் கூட என்னால் மதிக்க முடியாது”

விஷ்ணுவிற்குக் கோபம் ஏறியது. அவன் அம்மா தவறு செய்திருக்கிறார்கள் என்பதை அவனும் மனதளவில் ஒத்துக் கொண்டான். ஆனாலும் அவன் மாமா செய்த தவறுக்கு அம்மா என்ன செய்வாள் என்று நினைத்தான்.

“மாமா தானே எல்லாத் தவறுகளுக்கும் காரணம்? அம்மா தவறு செய்ய வேண்டாம் என்றால் மட்டும் அவர் திருந்தியிருப்பாரா?” என்றான் விஷ்ணு.

“காமவயப்பட்டவர்களுக்கு வெட்கமும், பயமும் இல்லை என்று கற்றறிந்த அறிஞர்கள் சொல்வார்கள். தவறான வழியில் செல்பவர்களை நேர்வழிப்படுத்துவது ஒரு சகோதரியின் கடமையல்லவா? அதை உங்கள் அம்மா செய்தார்களா? மிஸ்டர் மூர்த்தியை பொறாமையால் இன்னும் தூண்டித்தான் விட்டார்கள். தவறு செய்பவர்களை விட தூண்டி விடுபவர்கள் தான் இன்னும் கொடூரமானவர்கள். இப்படிப்பட்ட அம்மாவிற்கு வக்காலத்து வேறு வாங்குகிறீர்கள். இதிலிருந்தே உங்கள் மட்டமான குணம் தெரிகிறது” என்று எரிமலையாக் குமுறினாள் வல்லபி.

விஷ்ணு வழக்கமாக அதிகக் கோபப்பட மாட்டான். ஆனால் அன்று வல்லபியின் பாராமுகத்தால், அவனால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கையாலாகாத் தனத்தினால் அவனுக்குக் கோபம் அதிகமாகி பட்டென்று வல்லபியின் கன்னத்தில் அறைந்து விட்டான்.

எல்லாவற்றையும் மறைவிலிருந்து பார்த்திருந்த கனகா பயந்து விட்டாள். வலுவான அவன் கரங்களின் அடி தாங்காமல் வல்லபி கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்து விட்டாள். மென்மையான ரோஜா வண்ண வல்லபியின் கன்னம் ஐந்து விரல்களின் அடையாளத்துடன் நன்றாக சிவந்து விட்டது.

கலங்கிய கண்களுடன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அவனை ஏறிட்டுப் பார்த்த வல்லபி, தன் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள். விஷ்ணுவும் கோபத்துடனும், வெளியே சொல்ல முடியாத வருத்தத்துடனும் அங்கிருந்து வெளியேறினான்.

ரு வாரம் தான் விஷ்ணுவால் அவளைப் பார்க்காமல் இருக்க முடிந்தது. அவளைக் கன்னத்தில் அடித்தது, அவனுக்கும் தொண்டையில் மாட்டிய முள்ளாக அவனை வதைத்தது. அவனையே அவனால் மன்னிக்க முடியவில்லை. வல்லபியிடம் மன்னிப்பு கேட்டால் கட்டாயம் மன்னித்து விடுவாள் என்று நம்பினான். ஆனால் அவள் வீட்டிற்குச் செல்ல தைரியம் இல்லாததால் அவள் பணிபுரியும் மருத்துவமனைக்குப் சென்றான். ஒரு வாரமாக அவள் விடுமுறை என்று கூறவே, அவள் வீட்டிற்குச் சென்றான், வீடு பூட்டியிருந்தது.

சுதந்திக்குப் போன் செய்தான். முதலில் அவள் போனை எடுக்கவில்லை. பிறகு அசட்டையாக ஏதோ கூறி போனை வைத்து விட்டாள். இரண்டு நாட்கள் பொறுத்து பிறகு நேரிடையாக சுகந்தியிடம் சென்றான்.

சுகந்தி முறைத்தாள், திட்டினாள்.

“தாலி கட்டிய புருஷனா நீ? வல்லபியின் கன்னத்தில் உன் விரல்களைப் பதிய வைத்திருக்கிறாயே. நான் எதிர்பார்த்த விஷ்ணு வேறு, நேரில் பார்த்த விஷ்ணு ஒரு மிருகம்” என்று கண்டபடி திட்டினாள்.

“என் அம்மாவை மரியாதையில்லாமல் திட்டினாள், அதனால் தான்…” என்று முனகினான்.

“உன் அம்மா செய்தது ரொம்ப நியாயம் பாரு, இதில் வக்காலத்து வேறு. வல்லபி டெபுடேஷனில் தென்ஆப்பிரிக்கா போவதற்கு எப்போதோ விண்ணப்பித்திருந்தாள். நம் தமிழ் நாட்டிலிருந்து அவள்  மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாள், வல்லபியும் போக முடிவெடுத்து விட்டாள். சென்னையில் அவள் வீட்டில் போய் பார்” என்று கூறி சென்னையில் அவள் வீட்டு முகவரி கொடுத்தாள்.

சென்னைக்கு ஓடினான் விஷ்ணு. வல்லபி இரண்டு சூட்கேஸுகள், ஒரு ஹேண்ட் லக்கேஜ் என்று எல்லாவற்றையும் அடுக்கிக் கொண்டு ஒரு பக்கம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தாள். அவள் அம்மா மல்லிகா டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டு ஏதோ கீரைக் கட்டை ஆய்ந்து கொண்டிருந்தாள்.

விஷ்ணுவைப் பார்த்தவுடன், வல்லபி எழுந்து கொண்டாள்.

மல்லிகா, “வாங்க”” என்று கூறி விட்டு எழுந்து உள்ளே போய் விட்டாள்.

“வல்லபி இதெல்லாம் என்ன?”

“வாங்க விஷ்ணு, உங்களிடம் சொல்லாமலே போகிறோம் என்று நினைத்தேன்”

“வல்லபி நீ எங்கும் போக வேண்டாம், எல்லாவற்றையும் கேன்ஸல் செய்து விடு. நாம் திருமணம் செய்து கொண்டு அமைதியாக வாழலாம்” என்று கெஞ்சினான் விஷ்ணு.

“நான் ஏன் என் பயணத்தை ரத்து செய்ய வேண்டும்? உங்களை நம்பியா?” என்று கேலியாகச் சிரித்தாள்.

“என்னை நம்பு வல்லபி. நான் என் அம்மா, மாமா ஆகியோரின் மேல் எவ்வளவு அன்பும், மதிப்பும் வைத்திருக்கிறேன் என்று உனக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் என் கோபத்தை அடக்க முடியாமல் நான் உயிராக நினைக்கும் என் யாமினிப் பாப்பாவிடம் கை நீட்டி விட்டேன். என்னை தயவு செய்து மன்னித்து விடு வல்லபி” என்று கெஞ்சினான்.

“நான் மல்லிகா இல்லை விஷ்ணு, ஆண்களின் பசப்பு வார்த்தைகளில் மயங்குவதற்கு. என் ரத்தத்தில் மூர்த்தி சாரின் ஜீன்களும் இருக்கிறது அல்லவா? அவர் திமிரும், அகம்பாவமும் என்னிடமும் இருக்கும். ஆனால் உங்களுக்கு எப்படி உங்கள் அம்மாவும், மாமாவும் முக்கியமோ, அதேப் போல் நான் என் அம்மாவின் மரியாதையையும் விட்டுத் தரமாட்டேன்”

“அப்படியானால் என்னை எப்போதுமே மன்னிக்க மாட்டாயா வல்லபி? நான் உன்னை மறந்து வாழ்வேன் என்று மட்டும் நினைக்காதே. வல்லபி… நீயில்லாத வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. எனக்கு என் மாமாவிடம் அளவில்லாத அன்பு இருப்பது உண்மை தான், ஆனால் நான் அவரைப் போல் பெண்கள் பின்னால் அலைபவன் அல்ல. காலம் உனக்கு உணர்த்தும்” என்றான் விஷ்ணு.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு அமைதியாக வந்தாள் மல்லிகா. கையில் கொண்டு வந்த காபியை அவனிடம் கொடுத்தாள். கலங்கிய அவன் கண்களையும், கலைந்த தலையையும் பரிதாபமாகப் பார்த்தாள்.

“அத்தை, நீங்கள் வல்லபியிடம் சொல்லக் கூடாதா?” என்றான் விஷ்ணு.

“எனக்கு மட்டும் என் மகளைப் பிரிய முடியும் என்றா நினைக்கிறாய் விஷ்ணு?” என்றவள் கண்களைத் துடைத்துக் கொண்டு உள்ளே போய் விட்டாள்.

ல்லபி, தென்ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் வந்து இரண்டு வருடங்கள் முடிவடைந்து விட்டன. இரண்டு வருடங்களில் மல்லிகா மூன்று முறை வந்து விட்டாள். ஆனால் விஷ்ணுவிற்கு மட்டும் போனில் கூட தன்னுடன் பேசக் கூடாது என்றும், தன்னைப் பார்க்க வரக் கூடாது என்றும் தடை விதித்து விட்டாள். தடைகளை மீறி முதல் வருடம் விஷ்ணு அவளைப் பார்க்க, பேச பலமுறை முயற்சித்தான். ஆனால் வல்லபி மறுத்து விட்டாள்.

பிறகு விஷ்ணுவிடமிருந்து எந்த போனும் இல்லை. வாட்ஸ்அப், ஸ்கைப் என்று எந்தவொரு தொடர்பும் இல்லை. பிறகு தான் வல்லபி அவன் தொடர்பு இல்லாதது குறித்து நினைத்து ஏங்கத் தொடங்கினாள். அவளையும் மீறி ஒரு நாள் சுகந்தியிடம் போன் செய்து விஷ்ணுவைப் பற்றி விசாரித்தாள்.

“நீ தான் அவனைப் பற்றிப் பேசக் கூடாது, அவன் விவரம் ஏதும் தெரிய வேண்டாம் என்று கூறி விட்டாயே, இப்போது ஏன் கேட்கிறாய்?” என்று குத்தலும் கோபமுமாக கேட்டாள் சுகந்தி.

“நான் என்ன செய்வேன் சுகந்தி? அவன் மேலுள்ள அன்பையும், அவன் என்னிடம் காட்டும் பிரியத்தையும் என்னால் மறக்க முடியவில்லை. ஆனால் அவன் அம்மாவையும், என் அப்பாவையும் நினைத்தால் எனக்கு பயங்கரக் கோபம் வருகிறது” என்றாள் வல்லபி.

பிறகு தான் சுகந்தி சொன்னாள், “நீ எப்படி டெபுடேஷனில் தென்ஆப்ரிக்கா போனாயோ, அதேபோல் விஷ்ணுவும் மிலிட்டரி இன்ஜினீயரிங் ஸர்வீசில் சேர்ந்து விட்டான். சிவில் இன்ஜினீயரிங் ஆனதால் துப்பாக்கி பிடிக்கும் வேலை இல்லை, ஆனாலும் எல்லைப் பாதுகாப்புப் படையில் தான் வேலை என்றான்” என்று கூறினாள்.

வல்லபி ஒன்றும் சொல்லவில்லை. அவளுடைய டெபுடேஷன் பீரியடும் முடிந்து விட்டது. மதுரை அரசாங்கப் பொது மருத்துவமனையில் பணிக்கு உத்தரவு கிடைத்தது. பணியிலும் சேர்ந்து விட்டாள் வல்லபி.

அப்போது ஒரு நாள் திடீரென்று சுகந்தியிடமிருந்து போன்.

“விஷ்ணு பலத்த அடிகளுடன் சென்னையில் இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறான். அவன் உயிர் பிழைப்பதே கஷ்டம் என்று கேள்விப்பட்டேன். நான் சென்னை சென்று அவனைப் பார்க்கப் போகிறேன், நீயும் வருகிறாயா?” என்று கேட்டாள்.

வல்லபிக்குப் பேசவே வாய் வரவில்லை. நாக்கு அப்படியே அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது போல் இருந்தது.

“ஏன் அப்படி ஆனது?” என்றாள் வல்லபி ஹீனஸ்வரத்தில்.

“யாருக்குத் தெரியும்? விஷ்ணுவின் அம்மா, அப்பா, மாமா எல்லோரும் அங்கே தான் இருக்கிறார்கள். யாரிடம் கேட்பது? நேரில் போய் பார்த்தால் தான் நமக்குத் திருப்தி. நீ வருகிறாயா இல்லையா? அதை மட்டும் சொல்”  என்றாள் சுகந்தி.

சென்னையில் மல்லிகா வீட்டில் போய் இறங்கி பெட்டிகளை வைத்து விட்டு, தங்களை மனதளவில் தயார்படுத்திக் கொண்டு, மல்லிகாவிடம் விஷயத்தைச் சொல்லி விட்டு இருவரும் நந்தம்பாக்கத்தில் உள்ள இராணுவ மருத்துவமனைக்குப் சென்றனர்.

விஷ்ணுவைப் பார்த்தால் வல்லபிக்கு உயிரே போய்விடும் போல் இருந்தது. இதயம் வெடித்து வயிற்றுக்குள் இறங்கியது போல் வயிறு கலங்கியது. விஷ்ணு ஐ.சி.யூ’வில் சேர்க்கப்பட்டிருந்தான். வெளியே பார்வையாளர்களுக்கான பெஞ்சில் தான் மூர்த்தி, மரகதம் மற்றும் அவள் கணவரும்  உட்கார்ந்து இருந்தனர்.

கதவிலுள்ள கண்ணாடி வழியாக விஷ்ணுவைப் பார்த்தார்கள் வல்லபியும், சுகந்தியும். அவன் உடம்பே தெரியவில்லை. பாண்டேஜ் துணியால் ஆன ஒரு மூட்டை போல் இருந்தான். அவன் அகன்ற  நெற்றியும், அடர்ந்த புருவமும், கூரிய நாசியும், சிரிக்கும் இதழ்களும் தான் வெளியே தெரிந்தன.

‘மதுரையில் தன்னிடம் எவ்வளவு அன்பாக, நெருக்கமுடன் பழகினான் இந்த விஷ்ணு. அவனிடம் அலட்சியமாக நடந்து வெறுப்பைக் காட்டியது என் தவறு’ என்று மனதிற்குள் நொந்து கொண்டாள் வல்லபி.

வல்லபியைப் பார்த்தவுடனே மூர்த்தி அருகில் வந்து “வாம்மா” என்றார்.

மரகதமோ, பொங்கி வரும் அழுகையை அடக்கிக் கொண்டு, “வல்லபி… என் மகனைப் பாரம்மா. எங்கே எனக்கில்லாமல் போய் விடுவனோ என்று பயமாக இருக்கிறது” என்றாள் இருவரையும் பார்த்து.

“அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். அதிக ரத்தப் போக்கினால் மிகவும் பலஹீனமாக இருப்பார். தலையில் அடி பலமாக இல்லை. அதனால் பயப்பட வேண்டியதில்லை. டாக்டர்கள் என்ன சொல்கிறார்கள்?” என்று கேட்டாள் சுகந்தி.

“டாக்டர்கள் ஒன்றும் சரியாகச் சொல்லவில்லை. வருவதும் போவதுமாக ரொம்ப பிஸியாக இருக்கிறார்கள். நீங்கள் இருவரும் டாக்டர்கள் ஆயிற்றே, ஒருவேளை நீங்கள் கேட்டால் சொல்வார்களோ” என்றார் தயக்கத்துடன் ராமச்சந்திரன் விஷ்ணுவின் தந்தை.

இந்த “வல்லபி” நாவல் அச்சுப் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. நாவலை வாங்க விரும்பும் வாசகர்கள், கீழே பகிர்ந்துள்ள ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின் QR Code Scan செய்து தொகையை செலுத்தி Screen Shot எடுத்து, 77082 93241 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியுடன் பகிருங்கள். விரைவில் புத்தகம் உங்களை வந்து சேரும். அல்லது 77082 93241 என்ற எண்ணில் அழைத்தும் ORDER செய்யலாம். நன்றி

(தொடரும் – திங்கள் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பீட்டா ஷீட் ப்ரோட்டீன் (சிறுகதை) – ✍ ஜேஸூ ஞானராஜ், ஜெர்மனி

    காக்க! காக்க! ❤ (பகுதி 11) – ✍ விபா விஷா, அமெரிக்கா