in

பீட்டா ஷீட் ப்ரோட்டீன் (சிறுகதை) – ✍ ஜேஸூ ஞானராஜ், ஜெர்மனி

பீட்டா ஷீட் ப்ரோட்டீன் (சிறுகதை)

செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

சில பெண்கள்தான் அழகாக இருக்கிறார்கள்; அவர்களில் சரிதா ஒருத்தி. சில பெண்கள் ஏன் எவ்வளவோ பெண்கள் சாதாரணமாகத் தான் இருக்கிறார்கள். அவர்களில் நான் ஒருத்தி. அழகு என்றால் அகத்தழகு அது இது என்று புத்தகங்களில் எழுதுகிறார்களே அது இல்லை. நான் சொல்வது அழகு. வெளியில் கண்ணுக்குத் தெரியும் அழகு.

என்னடா எடுத்தவுடனே அழகைப் பத்தி பேசறாளேன்னு நினைக்கிறீங்களா? எந்த பெண்ணுக்குத்தான் தான் அழகா இருக்கனுமுனு ஆசை இருக்காது. ஒருவேளை சந்நியாசியா போயிருந்தா அந்த நினைப்பு இருக்காதோ என்னவோ?

திருமணமான தம்பதியரை ஈருடல் ஓருயிராய் இருங்கள் என்று வாழ்த்துவார்கள். ஆனால் ஓருடல் ஈருயிர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்னோட நிலைமை இப்போது அது தான். என்ன புரியவில்லையா?

காற்று வேகமாக வீசி ஜன்னலை அடித்தது. அருகில் சென்று கொண்டி வைத்து  தாளிட்டேன்.

பெங்களூர் இந்திரா நகரின் ஒதுக்குப்புற சிறிய வீட்டில் இப்படி தனித்திருக்க வேண்டிய நிலைமை வரும் என்று கொஞ்சமும் நான் எண்ணிப் பார்த்ததில்லை. என்ன செய்ய! ஒன்றை இழந்தால் தானே ஒன்றை பெற முடியும். சீக்கிரமே கல்யாணம் கட்டிக்கணும்.  

சிறிது நேரத்தில் காற்றின் வேகம் நின்றிருக்க, ஜன்னலை திறந்தேன். மெல்லிய தென்றல் காற்று முகத்தில் விளையாடியது.

என் மனம் பின்னோக்கி பழைய நினைவுகளில் மூழ்கியது.

பட்… பட்… பட்…

“ஏண்டி, அந்த ஈ என்ன பாவம் பண்ணிச்சு. அதைப் போய் அடிச்சி கொல்றே” என்றாள் ரஞ்சனி.

“நிம்மதியா சாப்பிட விடுதாடி, சுத்திக்கிட்டே இருக்கு”

“அடி கன்னக் குழியழகி! உன் அழகை ரசிக்கிறதுக்காகத் தான் அது  உன்னையே சுத்துது” என்றாள் ரஞ்சனி.

“எனக்கு பிடிக்காத எதையும் விட்டு வைக்க மாட்டேன், உனக்குத்தான் தெரியுமே” வார்த்தையில் கோபம் தெரிந்தது.

“அழகா இருக்கிறவங்க எல்லாம் ஆபத்தானவங்கதான் போல”  சொல்லிவிட்டு எழுந்த ரஞ்சனி, “இன்னிக்கு உனக்கும் சேர்த்து நானே பணம் கொடுக்குறேன்”  என்று அவளையும் அழைத்துக்கொண்டு கேன்டீன் கவுண்டரில் பணம் கட்டிவிட்டு லேபுக்கு சென்றனர்.

சென்னை பெருங்களத்தூரில் ஐந்து ஏக்கரில் பரந்து விரிந்து இருந்தது அந்த “ஐன்ஸ்டீன் பையோடெக் ரிசர்ச் சென்டர்”. ஜூனியர் மற்றும் சீனியர் சயின்டிஸ்ட், புரஃபசர்கள், ரிசர்ச் ஸ்காலர்ஸ்   Ph.D ஸ்டுடென்ட்ஸ் என தினமும் 500 பேர் நடமாடும் ஜெர்மனியை தலைமை இடமாகக் கொண்ட  ரிசர்ச் அலுவலகம் அது.

“ஏண்டி  நாம ரெண்டு பேரும், ஒரே சமயத்துல Ph.D முடிச்சி  இங்க  செல் பயாலஜி டிபார்ட்மென்ட்ல ஜூனியர் சயின்டிஸ்ட்டா சேர்ந்தோம். இந்த 10 வருஷத்துல ரெண்டு பேருமே சயின்டிஸ்ட்டா  ப்ரோமோஷன் ஆகி, நான் கல்யாணம் முடிச்சி ரெண்டு பிள்ளையும்  பெத்தாச்சு. உனக்கு என்னடி குறை? என்னை விட அழகா வேற இருக்கே. அப்புறமென்ன கல்யாணம் கட்டிக்க வேண்டியது தான?”

டெஸ்ட் டியூபில்  பட்டில் லித்தியத்தை ஊற்றிக்கொண்டே கேட்டாள் ரஞ்சனி.

“இல்லடி, இப்போ தான் என் பேருல 5 புராஜெக்ட்க்கு  பேடெண்ட் உரிமம்  வாங்கியிருக்கேன். இன்னும் இருபது காப்புரிமையாவது வாங்கினதுக்கப்புறமாத்தான் கல்யாணம்”

“அப்போ இன்னும் 20 ஜூனியர் அடிமைகள் உன்கிட்ட சிக்கணுமா? ”  சிரித்த ரஞ்சனி தொடர்ந்தாள்.

“போன வருஷம்  கூட ஒரு பொண்ணு சேர்ந்துச்சே. அப்போ அவ ரிசர்ச் ஒர்க்-ம் சீக்கிரமே  உன் பெயர்ல வந்துரும்னு சொல்லு” என்றவள், போன் வரவே அங்கிருந்து நகர்ந்தாள்.

“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்”

“வாடி, எவ்வளவு நேரம் உனக்காக இந்த பஸ்டாண்ட்ல வெயிட் பண்றது”

“எனக்காகவா… இல்ல அர்ஜுனுக்காகவா” என்றாள் மானசி.

“சீ… போடி”

“உன் அழகைப் பார்க்கும் போது எனக்கே உன்னை கல்யாணம் கட்டிக்கணும் போல இருக்குடி” என்ற மானசி, “அதோ உன் ஹீரோ பைக்ல வந்துட்டிருக்காரு, இனி நான் தேவையில்லையே… பை” என்று நகர்ந்தாள்.

“சாரி டார்லிங், கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என்றவன், அவள் பதிலை எதிர்பார்க்காமலேயே கையை பிடித்து பைக் பில்லியனில் உட்கார வைத்தான்.

பைக் கிழக்கு கடற்கரை சாலையில் பறந்து யாருமற்ற பீச் பகுதியில் நிலைகொண்டது.

கருமேகங்கள் அவர்களுக்கு குடை பிடிக்க, கரையோர அலைகள் தாள சுதியோடு இசை மீட்ட, அவள் மடி அவனின் தலையணை ஆனது. மெதுவாக குனிந்தவள் அவனின் மூச்சுக்காற்றை சிறிதுநேரம்  சுவாசித்துக் கொண்டிருந்தாள்.

“மழை வரும் போல இருக்கு, கிளம்புவோமா?”

“இப்போ தானே வந்தோம். இன்னும் பேசவே ஆரம்பிக்கலையே” என்றான் அர்ஜுன்.

“என்ன பேசணும்?”

“சில விஷயங்கள் பேசினா சுகம், இன்னும் சில செய்தாதான் சுகம்” என்றான்.

“சீ போ, நீ ரொம்ப மோசம்” என்றாள்.

“இந்த மொத்த அழகுக்கும் நான் தான் சொந்தக்காரன் என்று நினைக்கும் போதே எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா ஜில்”

“இப்படி ஜில்லுனு கூப்பிடாதீங்கன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். என் உண்மையான பெயரை சொல்லிக் கூப்பிடுங்க”

“உன் அழகுக்கும் அந்த பழைய பெயருக்கும் கொஞ்சமும் மேட்ச் ஆகல ஜில். இவ்வளவு அழகா இருக்கிற உனக்கு ஏன் அந்த பழைய சினிமா ஹீரோயின் பெயரை வச்சாங்க? மூணு எழுத்து வேற, எனக்கு அன்லக்கி. நான் உன்னை எப்பவும் ஜில்னுதான் கூப்பிடுவேன்” என்றான் அர்ஜுன்.

“போடா பொறுக்கி” செல்லமாய் அவன் கன்னத்தில் தட்டினாள். கடற்கரை மணலில் இரு நண்டுகள் சரசம் புரிய, போட்டியாய் அவர்களின் நான்கு உதடுகளும் நர்த்தனம் ஆடத் தொடங்கியது.

மழையின் முன்னறிவிப்பான கூதல் காற்று, அவள் சேலையை ஒதுக்கி இடுப்புடன் விளையாட, உதடுகளை   பிரித்து நிமிர்ந்தவள் முந்தானையால் கூதலுக்கு வேலி அமைந்தாள்.

தன் உதடுகளை தன் எச்சிலால் நனைத்துக்கொண்டவன், எழுந்து உட்கார்ந்தான்.

“உன்னோட ரிசர்ச் பத்தி ஏதோ சொல்றேன்னு சொன்னியே” என்று ஆரம்பித்தான் அர்ஜுன்.

“இப்போவாவது கேட்டியே, அடுத்தவாரம் நான் தீசிஸ் சப்மிட் பண்ணப் போறேன். சென்னையில் இருக்கிற ஐன்ஸ்டீன் பையோடெக் ரிசர்ச் சென்டர்ல, நான் தான் முதன்முறையா புரோட்டீன் வளர்த்து சக்ஸஸ் பண்ணியிருக்கேன் தெரியுமா?” என்றாள்.

“என்னமா, கலர் காலரா கதை விடுறே” என்று சிரித்தான் அருண்.

“மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மர மண்டைக்கு பயாலஜி பத்தி தெரிந்திருக்க நியாயமில்லை தான். சொல்றேன் கேளு” என்றவள் தொடர்ந்தாள்.

“அதாவது நம்ம உடம்புல  இருக்கிற ஒவ்வொரு உறுப்புலேயும் நிறைய செல்கள் இருக்கு. அந்த ஒவ்வொரு செல்லிலேயும் DNA இருக்கும்.  இந்த DNA தான் அந்த செல் எவ்வளவு ப்ரோட்டின் உற்பத்தி பண்ணனும்னு முடிவு பண்ணும். இப்ப நீரழிவு நோயாளிகளை எடுத்துக்குங்க. அவங்க உடலில் இருக்கிற கணையம் என்ற  உறுப்பு இன்சுலினை குறையா சுரக்குறதனால தான் அவங்க சுகர் பேஷன்டாகிறாங்க. இந்த கணையம் செல்களை உடலுக்கு வெளியே உற்பத்தி பண்ண முடியாது. ஆனால் ‘எஸ்சேரிச்சியா கோலி’ங்கற செல்லை உடலுக்கு வெளியே உற்பத்தி பண்ண முடியும். அதனால் அதனுடைய DNA எடுத்துட்டு கணையம் செல் DNAவை அதுல வச்சி இன்சுலினோட  பீட்டா ஷீட் ப்ரோட்டீனை ஆய்வகத்திலேயே வளர்கிறேன். வெற்றி என் பக்கம் தான்” சந்தோஷமாய் சிரித்தாள்.

“உன்னோட கைடு ஏதோ பிரச்சினை பண்றதா சொன்னியே, என்னாச்சு?”

“Phd பண்ணும் போதே அப்பா சொன்னார். நீ கஷ்டப்பட்டு ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிக்கிற புது விஷயங்களை உன்னோட சீனியர் அவர் பெயரில் வெளியிட்டு பெயர் வாங்கிவிடுவார், கவனமாய் இருன்னு. என்னோட மேடமும் அப்படித்தான் செய்ய நினைத்தார். நான் ‘பிராஞ்ச் ஹெட்’ வரைக்கும் இந்த பிரச்சினையை கொண்டு போய் இப்போ எல்லாமும் நல்ல படியாய் முடிஞ்சாச்சு. தீசிஸ் சப்மிட் பண்ணினதும் பேடெண்டுக்கு அப்பளை பண்ணனும்”

மழை வந்து இருவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தது.

ஐன்ஸ்டீன் பையோடெக் ரிசர்சின் பிராஞ்ச் ஹெட் சங்கரனின் அறை அவரின் கோபத்தில் ஏசியை மிஞ்சி தகித்தது.

“உட்காருங்க சரிதா” என்றார்.

“பரவாயில்லை சார்” முதன் முறையாக சரிதாவின் முகத்தில் பயம் தெரிந்தது.

“ரஷ்யாவின் கேஜிபி நிறுவனத்துக்கு பீட்டா ஷீட் ப்ரோட்டீன் தீசிஸ் விபரங்களை அனுப்பியதை மெயில் செர்வர் மூலம் கண்டுபிடிச்சாச்சு. இப்பவே உங்களை டிஸ்மிஸ் பண்ண சொல்லி ஜெர்மனியிலிருந்து செய்தி வந்திருக்கு. பழகின பாவத்துக்கு இன்னும் அரை மணி நேரம் டைம் தர்றேன். சீக்கிரமே இங்கிருந்து வெளியேறிடுங்க. போலீசுக்கும் தகவல் போயிடிச்சு. யூ கேன் கோ நவ்” என்றார்.

பயமும் கோபமும் ஒருசேர கூட்டணி அமைத்து  சரிதாவை ஆட்கொள்ள, கொஞ்ச நேரம்  என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள். ஒரு முடிவுடன் வேகமாக  ப்ரோட்டீன் வளர்க்கும் அறைக்குள் நுழைந்தாள். ஆறு புரோட்டீன் பாட்டில்களையும் ஷிரேட்டரில் போட்டு பாஸ்வேட் வைத்து லாக் செய்தாள். பாஸ்வேர்ட்டு  மறக்காமல் இருக்க ஒரு பேப்பரில் எழுதி தன் டைரியில் வைத்தாள்.

வேகமாக வெளியேறி தான் ஏற்கெனவே பேசி வைத்திருந்த பிளாஸ்டிக் சர்ஜரி டாக்டரிடம் சென்று முகத்தை மாற்றிக் கொண்டாள். இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருக்க, ரஷ்யாவின் கேஜிபி நிறுவனத்திடம் வாங்கிய கணிசமான பணம் டாக்டருக்கு கை மாறியது.

முகத்தில் கட்டுகள் அவிழ்க்கப்பட்டன. கண்ணாடியில் பார்த்த சரிதா அதிர்ந்தாள்.  தன் அழகிய முகம் எங்கே போனது?

அலுவலகத்தில் வேலை செய்யும் போது தினமும் ஒரு முறையாவது ரஞ்சனி என் அழகை வர்ணிப்பாள். இப்போ அந்த ஒட்டு மொத்த அழகும் என்னை விட்டுப் போயிடுச்சு. என் ஜூனியர் தேவிகாவின்  பீட்டா ஷீட் ப்ரோட்டீன் தான் என்னை கோடீஸ்வரி ஆக்கியிருக்கிறது. போலீஸ் கண்ணுல மண்ணைத் தூவி இந்த பெங்களூர் இந்திரா நகர் ஒதுக்குப்புற வீட்டுக்கு வந்து ஆறு மாசம் ஆச்சு.

மழைசாரல் முகத்தில் விழ சுயநினைவுக்கு வந்தேன்.

பழைய சரிதாகிட்ட அழகு இருந்தது, ஆனால் பணம் இல்ல.  இந்த புதிய சரிதாகிட்ட அழகில்லைனாலும்  பணம் நிறைய இருக்கு. எதையும் விலைக்கு வாங்கலாம்ங்கிற தைரியம் நிறைய இருக்கு. என்னையே நான் மெச்சிக் கொண்டேன்.

ஜன்னலை பூட்டினேன். பெட்ரூமுக்குள் நுழைந்தேன்.

ஏதோ என்னைப் பின் தொடர்வது போல் இருந்தது. திரும்பினேன். யாரும் இல்லை. கட்டிலில் உட்கார்ந்தேன். அறை முழுவதும் இருள் சூழ்ந்தது. அது வெள்ளையாய்… ஆவி மாதிரி… என்னை சுற்றிலும். என் இதயம் அதிகமாய் துடித்தது.

“நீ……நீங்க………எப்படி…….?” என் வாய் குளறியது.

“நாங்க யார்னு புரியலையா? கொஞ்சம் யோசித்துப்பாரு, அப்போ தெரியும்” கோரஸாக அந்த உடலற்ற  உயிர்கள்  பேசின.

“ஆறு பாட்டில்களில் தேவிகா வளர்த்த பீட்டா ஷீட் ப்ரோட்டீன் ஞாபகம் வருதா? லாக்கரில் வைத்து எங்களை கொன்று விட்டாயே. நீ மட்டும் எப்படி உயிரோடு இருக்கலாம். நீயும் எங்களோடவே வந்துவிடு” ஆறு புரொடடீன்களும் என்னை சுற்றி வளைத்தன.

கைகளை நீட்டி அவைகளை விரட்ட முயன்டேன். என் கை பட்டு, மேஜையில் இருந்த டைரி கீழே விழுந்து அதிலிருந்து ஒரு  பேப்பர் பறந்து வந்து என் வாயையும் மூக்கையும் மூடி அழுத்தியது.

மூச்சு முட்டியது எனக்கு. கண்கள் செருகியது. கடைசியாக இந்த உலகம் என்னை இழந்தது.

மூக்கிலிருந்த அந்த காகிதம் கீழே விழுந்தது. அதில் ஆறு பீட்டா ஷீட் ப்ரோட்டீன்களை நான் லாக்கரில் வைத்தவுடன் எழுதிவைத்த பாஸ்வேர்டு இருந்தது.

அந்த பாஸ்வேர்டு இது தான்- “ஆறு பேர் என்னை நெருங்கினார்கள்!”

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 10) – ✍ விபா விஷா, அமெரிக்கா

    வல்லபி ❤ (பகுதி 8) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை