in

வல்லபி ❤ (பகுதி 12) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

வல்லபி ❤ (பகுதி 12)

அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7  பகுதி 8_பகுதி 9_பகுதி 10 பகுதி 11

“பாலாஜிக்காகத் தான் என்னைத் திருமணம் செய்யப் போகிறாயா வல்லபி? காலமெல்லாம் உனக்காகக் காத்திருந்து தவம் செய்தவன் நான். உனக்கு முன்பின் தெரியாத ஒருவனுக்காக என் விருப்பத்தைப் பந்தயம் வைப்பது எந்த விதத்தில் நியாயம்?”” என்றான் விளையாட்டாக, அவள் முகத்தைத் தன் இருகரங்களில் ஏந்தி.

“இது பந்தயம் இல்லை விஷ்ணு. என் தந்தையைக் கொஞ்சமாவது பாவத்திலிருந்து காப்பாற்ற வேண்டாமா? என்னைப் போற்றிப் பாதுகாக்க என் அம்மா இருக்கிறார்கள். அதனால் தான் உன் எதிரில் நிற்கும் இந்த டாக்டர் வல்லபி.

ஆனால் பாலாஜி பாவம், ஒழுங்கான அம்மா அப்பா இருவரும் இல்லை. நான் அதனால் தான் அப்படிப் பேசினேன். அதுவுமில்லாமல் இனிமேல் நடக்கப்போகும் நம் திருமணம் வெறும் வெளிஉலக சம்பிரதாயம் தான் விஷ்ணு. மதுரையில் முரளி, சுகந்தி எதிரில் நீ உன் காதலைச் சொன்னாயே, அன்று முதலே உள்ளத்தால் நான் உன் மனைவி தான் புரிந்ததா?” என்றாள் வல்லபி, முகத்தில் செம்மையும் இதழ்களில் புன்னகையும்‌ மின்ன.

“அப்படியா?” என்ற விஷ்ணு, ஆசையுடன் அவளுக்கு மிக அருகில் நெருங்கினான்.

“சற்றே விலகி இரும் பிள்ளாய்” என்று கூறியவள், அவன் மார்பில் செல்லமாகக் குத்தினாள். பிறகு அவனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டு, கலகலவென்று சிரித்தபடியே ஓடத் தொடங்கினாள். சிரித்துக் கொண்டே விஷ்ணுவும் அவளைத் தொடர்ந்து ஓடினான்.

ல்லபி அன்று மிகவும் சந்தோஷமாக மருத்துவமனைக்குச் சென்றாள். இரண்டு மணி நேரம் பிஸியாக ரௌண்ட்ஸ் முடித்து விட்டுத் தன் பேஷண்ட்டுகளையும் கவனித்து விட்டுக் கொஞ்ச நேரம் ஓய்வாக அமர்ந்தாள்.

அப்போது அந்தப் பகுதி காவல்துறை கண்காணிப்பாளர், இரண்டு பெண்காவலர்கள், நான்கு பெண்களுடன் வல்லபியைத் தேடி வந்தார். அவர் மிகவும் நல்லவர். மனிதாபிமானம் மிக்கவர். ஆதலால் வல்லபி மகிழ்ச்சியுடன் வரவேற்றாள். அந்த நான்கு பெண்களையும் கேள்விக்குறியுடன் பார்த்தாள்.

“இந்த நான்கு பெண்களும் மதுரை, தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மும்பை சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டவர்கள். இருவர் ஏற்கனவே மணமானவர்கள், இரண்டு பெண்கள் திருமணம் ஆகாதவர்கள். ஒரே மாதத்தில் மும்பை போலீசால் மீட்கப்பட்டு தமிழ்நாடு போலீஸிடம் ஒப்படைக்கப் பட்டவர்கள். இவர்களை மருத்துவப் பரிசோதனை செய்து ஒரு மருத்துவச் சான்றிதழுடன் இவர்களைச் சார்ந்தவர்களிடம் ஒப்புவிக்க வேண்டும்” என்றார் இன்ஸ்பெக்டர்.

ஏதோ யோசனையுடன் தலையாட்டினாள் வல்லபி.

“என்ன டாக்டர்?” என்றார் இன்ஸ்பெக்டர்.

“ஒன்றுமில்லை இன்ஸ்பெக்டர் ஸார்” என்று தன் தோள்களைக் குலுக்கினாள் வல்லபி. இன்ஸ்பெக்டர் விடைபெற்றுச் சென்றார், பெண் காவலர்கள் மட்டும்  காத்திருந்தனர்.

நால்வரையும் பரிசோதனை செய்ததில் உடம்பு முழுவதும் காயங்கள், சிகரெட்டால் சுடப்பட்ட புண்கள். இரத்தமும் பரிசோதனைக்குக் கொடுக்கப்பட்டது. பிறகு அந்த நான்கு பெண்களையும், பெண் காவலர்களுடன் அனுப்பி விட்டாள்.

அன்று காலை மிக மகிழ்ச்சியுடன் மருத்துவமனைக்குள் நுழைந்த வல்லபி, மிகுந்த சோகத்துடனும், வருத்தத்துடனும் வீடு திரும்பினாள். மல்லிகா அவளுக்குப் பலவிதமாக ஆறுதல் கூறினாள்.

“உலகம் இப்படித் தான் வல்லபி. வாழும் ஒவ்வொரு நிமிடமும் எச்சரிக்கையுடன் வாழ வேண்டும். கண்ணாடிக் கோப்பையைக் கையில் ஏந்தி நடந்தால் எப்படி எச்சரிக்கையுடன் நடப்போமோ, அவ்வளவு எச்சரிக்கையுடன் வாழ வேண்டும். அப்போது தான் வாழ்க்கை நம் கையில் இருக்கும். இல்லையென்றால் வாழ்க்கை விதியின் கையில் தான்”

“அந்த நான்கு பெண்களையும் பார்த்தால் மிகவும் பாவமாக இருந்தது. எப்படித்தான் அந்தப் பாவிகளிடம் மாட்டினார்களோ தெரியவில்லை. கடவுள் இருக்கிறாரா என்று சந்தேகமாக இருக்கிறது. மிகவும் மென்மையான பெண்கள், பணத்திற்காக விலை பேசப்பட்டிருக்கிறார்கள்… அநியாயம்” என்றாள் வல்லபி ஆற்றாமையுடன்.

மல்லிகா அவளைப் பலவிதமாக ஆறுதல்படுத்தி, சின்னக் குழந்தையைத் தூங்க வைப்பது போல் முதுகில் தட்டித் தூங்க வைத்தாள். கனகாவும் பெருமூச்செறிந்தாள்.  

“டாக்டரம்மாவிற்கு இன்னும் உலகம் புரியவில்லை, அம்மாவின் குழந்தையாகவே இருக்கிறார்கள். உலக வாழ்க்கை சதுப்பு நிலம் போன்றது, கொஞ்சம் ஏமாந்தாலும் உள்ளே இழுத்துக் கொண்டு போய் கழுத்தை நெரித்து விடும். ஆனால் இந்த அனுபவப் பாடங்களை ஏழைப் பெண்கள் தான் அதிகமாகப் படிக்க வேண்டியிருக்கிறது” என்றாள்.

“அப்படி இல்லை கனகா. ஏழை பணக்காரர் என்பதை விட, போதிய அளவு கல்வியறிவு இல்லாத பெண்கள்  தான் அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள்” என்றாள் மல்லிகா.

டுத்த நாளும் வல்லபி மிகச் சோர்வுடனே காணப்பட்டாள். அவளால் முடியாமல் அரைநாள் விடுமுறை எடுத்துக் கொண்டு விஷ்ணு ஆபீஸிற்கு சென்றாள்.

அங்கு அடிக்கடி போனதில்லை. எங்கு பார்த்தாலும் காலியான தார் டிரம்கள், ஓடாத, ஓடுகின்றன ஜீப்புகள், வேறு ஏதேதோ சாமான்கள் இறைந்து கிடக்கும். ரோட் ரோலரும், கான்கிரீட் மிக்ஸர்களும், நிறைய கார்களும் கண்டபடி நின்றிருக்கும்.

ஆபீஸ் உள்ளே மட்டும் ஏ.சி.யோடு சௌகரியமாக இருக்கும். விஷ்ணு கெஸ்ட்டட் ஆபிசர் என்பதால், ஒரு சிறிய தனி அறை அட்டாச்ட் பாத்தோடு இருக்கும். ஆனால் பெரும்பாலும் அவனை அறையில் பார்க்க முடியாது.

எப்போதும் ‘சைட் இன்ஸ்பெக்ஷன்’ அல்லது பெரிய இஞ்ஜினீயர்களுடன் மீட்டிங் என்ற இருப்பான். விஷ்ணு கடமை தவறாதவன், அதனால் வல்லபி அவனை ஆபீஸ் நேரத்தில் போய்ப் பார்ப்பதோ இல்லை டிஸ்டர்ப் செய்வதோ இல்லை. ஆனால் இன்று அவளால் பொறுக்க முடியவில்லை. கட்டாயம் அவனைப் போய் பார்க்க வேண்டும் என்ற முடிவோடு அவன் அறைக்கு வந்து விட்டாள்.

விஷ்ணுவும் ஏதோ அதிசயமாக அவன் அறையில் அமர்ந்து தன் ஸ்டெனோவிற்கு லெட்டர் டிக்கெட் செய்து கொண்டிருந்தான். வல்லபியைப் பார்த்து ஆச்சரியமாக புருவத்தை உயர்த்தியவன், சைகையால் அவளை உட்காரச் சொல்லி, தன் டிக்டேஷனை முடித்து ஸ்டெனோவை ஒரு பத்து நிமிடத்தில் அனுப்பினான்.

“டாக்டரம்மா, என்ன அதிசயம் இந்தப் பக்கம் காற்றடித்திருக்கிறதே?” என்றான் கிண்டலாக.

“விஷ்ணு, கிண்டலெல்லாம் வேண்டாம். ஒரு அரை நாள் லீவ் போட்டு விட்டு என்னோடு வா. நான் கொஞ்சம் பேச வேண்டும்” என்றாள் வல்லபி உணர்ச்சியற்ற குரலில்.

“என்ன ஆயிற்று வல்லபி? சாப்பிட்டாயா இல்லையா? என் கண்ணம்மாவிற்கு ஏன் முகமெல்லாம் வாடி இருக்கிறது?” என்றான் ரகசியமாக கொஞ்சும் குரலில்.

“விஷ்ணு, கொஞ்சல் எல்லாம் வேண்டாம். அரை நாள் லீவ் எடுத்துக் கொண்டு வர முடியுமா? முடியாதா?” என்றாள் வல்லபி அதிகாரமாக.

“நீ சொன்னால் அரை நாள் லீவ் என்ன, வேலையைக் கூட விடத் தயார். ஒரு நிமிடம் பொறு. பக்கத்து அறையில் என் பாஸ் இருக்கிறார். அவரிடம் சொல்லி விட்டு வந்து விடுகிறேன்” என்று அவள் கன்னத்தை லேசாகத் தட்டி விட்டு பக்கத்து அறைக்கு ஓடினான்.

இருவருமாக சேர்ந்து வெளியே வரும் போது, விஷ்ணுவின் அலுவலகத்தில் உள்ள மற்ற அலுவலர்கள் அவனைப் பார்த்து சிரித்தனர்.

“நிலைமை ரொம்ப மோசமப்பா” என்றான் விஷ்ணு, அவர்களைப் பார்த்து கண்களை சிமிட்டியபடி.

“வீட்டிற்கு வீடு வாசற்படி தான், என்ஜாய் செய்யுங்கள்” என்றனர் அவர்கள் சிரித்துக் கொண்டு.

விஷ்ணு தன் காரை எடுத்தான்.

“வல்லபி, உன் ஸ்கூட்டி இங்கேயே இருக்கட்டும். நான் யாரிடமாவது கொடுத்து உன் வீட்டில் விடச் சொல்கிறேன். நம் காரில் இப்போது போகலாம்” என்று அவளுக்குக் கார் கதவைத் திறந்து விட்டான்.

காரில் சிறிது தூரம் சென்ற பிறகு, “வல்லபி, என்னடா ரொம்ப கலக்கமாக இருக்கிறாய். என் வல்லபி என்றுமே இப்படி அரண்டு நின்று பார்த்தது இல்லையே?” என்றான் விஷ்ணு.

அவன் ஏதாவது கேட்க மாட்டானா என்று ஏங்கியது போல் அவள் கண்களில் மளமளவென கண்ணீர் கொட்டியது. விஷ்ணுவிற்கு ஒரே அதிர்ச்சியாகி விட்டது. வண்டியை ஓரமாக நிறுத்தி அவள் கண்களைத் துடைத்தான்.

“வல்லபி, என்ன ஆயிற்று உனக்கு?”

அவளோ ஒன்றும் சொல்லாமல் அவன் மார்பில் முகம் புதைத்து, முதுகை இருகைகளாலும் கட்டிக் கொண்டு அழுதாள்.

“சொல்லுடா கண்ணம்மா, என்ன ஆயிற்று உனக்கு? ஏன் இந்த அழுகை? நீ விவரம் ஏதும் சொல்லாமல் இப்படி அழுதால் எனக்கு உயிரே போய் விடும் போல் இருக்கிறது” என்றான் விஷ்ணு.

அவன் மார்பில் புதைத்த முகத்தை நிமிர்த்தாமலே, அவன் சட்டை பட்டனைத் திருகியபடி, அந்த நான்கு பெண்களின் கதையைக் கூறி முடித்தாள்.

“இந்த மாதிரிக் கதைகளை நீ படித்ததில்லையா? பெண்கள் கொஞ்சம் ஏமாந்தாலும் வாழ்க்கை இப்படித் தான் மாறிவிடும். நாம் என்ன செய்ய முடியும்? இது ஏன் உன் உள்ளத்தை அப்படிப் பாதித்தது?” என்றான் விஷ்ணு, அவள் முகத்தை நிமிர்த்தி அவள் நெற்றியில் முத்தமிட்டு, முதுகை வருடியபடி.

“நீங்கள் மட்டும் அன்று என்னை அந்த பாலாஜியிடமிருந்து காப்பாற்றவில்லை என்றால் என் கதையும் இப்படித் தானே முடிந்திருக்கும்” என்றாள் வல்லபி அழுது கொண்டே, அவனை இன்னும் இறுகக் காட்டியபடி. வேடன் அம்பிலிருந்து தப்பிய புறா போல் அவள் உடம்பு நடுங்கியது.

“இங்கே பார் வல்லபி, நீ இப்போது இந்த விஷ்ணுவின் கைகளில் இருக்கிறாய். இன்னுமா பயம்? என்னைப் பார்” என்றவன் அவள் கண்களில், கன்னத்தில், நெற்றியில், கழுத்தில் என்று முத்தமழை பொழிந்தான். வெட்கத்தால் முகம் சிவந்தவள், மெதுவாக அவன் பிடியில் இருந்து விலகினாள். அவனைப் பார்த்து பூவாகச் சிரித்தாள்.

“இப்போது பயம் போய் விட்டதா கண்ணா?” என்றான் விஷ்ணு.

“உங்கள் கைகளில் அடங்கி இருக்கும் போது ரொம்ப தைரியமாகத் தான் இருக்கிறது. சமயத்தில் இப்படி பலவீனமாகி உடைந்து விடுகிறேன்” என்றாள் வெட்கத்துடன், முகம் சிவந்து கண்களை இரு கைகளில் மூடிக் கொண்டு. அவள் கைகளை விலக்கி கண்களில் தன் இதழ்களை ஒற்றினான்  விஷ்ணு.

“சரி, நீ ஒன்றும் சாப்பிடவில்லை போல் இருக்கிறது. வா  ஏதாவது சாப்பிட்டு விட்டு பிறகு உன் வீட்டில் விடுகிறேன்” என்று பக்கத்தில் உள்ள ஒரு ரெஸ்டாரன்டிற்கு அழைத்துச் சென்றான். அவளுக்குப் பிடித்த பாஸந்தியும், மசாலா தோசையும் ஆர்டர் செய்தான்.

அவன் காட்டும் அன்பில் வல்லபி கரைந்து விட்டாள். அவன் இடது கையைப் பிடித்துத் தன் நெஞ்சில் வைத்துக் கொண்டாள்.

“வல்லபி, நீ சின்னக் குழந்தையாக இருந்த போது, அத்தை கொஞ்சம் உரக்கப் பேசினால் கூட இப்படித் தான் வந்து என் கழுத்தைக் கட்டிக் கொண்டு மடியில் உட்கார்ந்து விடுவாய். என் சிறிய வயசு யாமினிப் பாப்பாவை இப்போது திரும்பப் பார்க்கிறேன்” என்று பெருமூச்சு விட்டான்.

டுத்த நாள் காலையில் எழுந்து தற்செயலாக வெளியே பார்த்தாள் வல்லபி. அவளது ஸ்கூட்டர் புதிது போல் துடைக்கப்பட்டு பளபளவென்று நின்றிருந்தது.

“யாரோ ஒரு ஆள் கொண்டு வந்து நிறுத்தினார் டாக்டரம்மா. விஷ்ணு சாரின் ஆபீஸ் ஆளாம்” என்றாள் கனகா.

வல்லபி தூங்கி எழுந்ததிலிருந்து ஏதாவது ஒரு பாட்டைக் கேட்டு செல்லமாகக் குதித்து நடனமாடிக் கொண்டிருந்தாள். மல்லிகா ஆச்சரியப்பட்டாள்.

“நேற்றெல்லாம் ஒரேயடியாக அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தாய். இன்று ஒரே பாட்டும், ஆட்டமும். என்ன ஆயிற்று உனக்கு?” என்றாள்.

“வல்லபி அம்மா நேற்று விஷ்ணு சாரோடு பேசிவிட்டு வந்தார்களில்லையா? அதனால் தான் இந்த மாற்றம்” என்றாள் கனகா சிரித்தபடி.

வல்லபிக்கும், விஷ்ணுவிற்கும் ஒரு மாதம் இன்பமாகப் பறந்தது. தினமும் விஷ்ணு, வல்லபியை அவள் டியூட்டி முடிந்த பிறகு, தன் காரில் அழைத்துச் சென்று அவளுக்குப் பிடித்ததை சாப்பிட வாங்கிக் கொடுத்து, ஒரு மணி நேரம் காரில் இலக்கில்லாமல் சுற்றிக் கொண்டு தங்கள் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாவற்றையும் ஆராய்ந்து விட்டுப் பிறகு தான் அவளைக் கொண்டு போய் வீட்டில் விடுவான்.

சில நாட்கள் முன்பு வந்த பெண் காவலர்கள் அந்த நான்கு பெண்களை அழைத்து வந்தனர். நால்வரும் மிகவும் பரிதாபமாக இருந்தனர்.

வல்லபி, அந்த பெண் காவலர்களை விசாரிக்க, “இந்தப் பெண்களை அவர்கள் வீட்டில் அனுமதிக்கவில்லையாம். அதனால் அவர்கள் உங்களிடம் பேச வேண்டும் என்றார்கள். காவல் நிலையத்திற்கு திரும்ப வந்தவர்களை, இன்ஸ்பெக்டர் உங்களிடம் அழைத்துப் போகச் சொன்னார்” என்றார் ஒரு பெண் காவலர்.

“அப்படியா?” என்ற வல்லபி, பெண் காவலர்களைத் திருப்பி அனுப்பி விட்டாள்.

நான்கு பெண்களில் இருவர் பன்னிரண்டாம் வகுப்பு தேறியவர்கள். அவர்களுக்குத் திருமணம் ஆகவில்லை. இருவர் பத்தாம் வகுப்பு வரைப் படித்தவர்கள். திருமணம் ஆகி இருவருக்கும் ஒவ்வொரு குழந்தையும் உண்டு என்பதும் வல்லபி அவர்களிடமிருந்து கேட்டு அறிந்தாள். நால்வரும் கண்கள் கலங்க அமர்ந்திருந்தனர்.

“சொல்லுங்கள், என்ன நடந்தது?” என்று கேட்டாள் வல்லபி.

அவர்களில் மஞ்சுளா என்ற திருமணமான இருபது வயதுப் பெண், “என் கணவர் வீட்டில் என்னை உள்ளே விடவே இல்லை. என் குழந்தையைக் கூடப் பார்க்க அனுமதிக்கவில்லை. என்னைப் பார்த்தாலே பாவம் என்று துரத்தி விட்டார்கள்” என்றாள்.

“பிறகு?” என்றாள் வல்லபி.

“பிறகென்னம்மா? அங்கிருந்து என் அம்மா வீட்டிற்குப் போனேன், அங்கேயும் விரட்டியடிக்கப் பட்டேன்” என்று விம்மினாள்.

“சீதையையே தீக்குளிக்கச் சொன்னவர்களாயிற்றே நம் மக்கள். எங்களைச் சும்மா விடுவார்களா? எங்களுக்கும் தான் கண்ட இடத்தில் சூடு போட்டார்கள்” என்று தன் முழங்காலைக் காட்டினாள் திருமணமாகாத நர்மதா.

இரண்டு கால்களிலும் கண்டபடி சூட்டினால் கோலம் போடப்பட்டிருந்தது. அந்த தீக்காயம் கூட ஆறவில்லை. பிரம்மை பிடித்தாற் போல் பார்த்துக் கொண்டிருந்தாள் வல்லபி.

“சீதைக்காவது, அவள் தாய் அவளை அரவணைத்துத் தீயிலிருந்து அழைத்துச் சென்றாள். ஆனால் எங்களுக்கு சூடு வைத்ததே என் அண்ணியும் அம்மாவும் தான்” என்றனர்.

“என் அண்ணாவையும், அண்ணியையும், குடும்பத்தில் உள்ள மற்றவர்களையும் சந்தோஷப்படுத்தத் தான் அம்மா அவர்களுடன் கூட்டு சேர்ந்தாள். இல்லையென்றால் என் அம்மாவே அவர்களிடம் காலம் தள்ள முடியாது” என்றனர் ஒட்டுமொத்தமாக.

அவர்கள் நால்வரையும் மருத்துவர்கள் ஓய்வெடுக்கும் அறைக்கு அழைத்துச் சென்றாள். மருத்துவமனை கேன்டீனுக்குப் போன் செய்து அவர்களுக்கு உணவும், காபியும் வரவழைத்தாள். அவர்களைச் சாப்பிட சொல்லி விட்டு அவர்கள் காயங்களுக்கு வைத்தியம் செய்தாள். தன் மருத்துவமனை வேலைகளை முடித்துக் கொண்டு மீண்டும் அவர்களிடம் வந்தாள். அதற்குள் அந்த நான்கு பெண்களும் உணவும் காபியும் சாப்பிட்டு கொஞ்சம் தெளிவாக இருந்தனர்.

“உங்கள் உறவினர்கள் உங்களை மதிக்கவில்லையே என்ற கவலை வேண்டாம். அவர்களே உங்களைத் தேடி வருவார்கள். அதற்கு நீங்கள் நன்கு படித்தோ அல்லது கடினமான உழைத்தோ உங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும்” என்றாள் வல்லபி.

“மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில், அவர்கள் விருப்பத்திற்குக் கட்டுப்படாததால் சிகரெட்டால் சூடு வைத்தார்கள். அவர்களுக்காவது நாங்கள் புதியவர்கள். அவர்கள் விருப்பத்திற்கு அடிபணிய மறுத்ததால் கோபம் வந்தது. ஆனால் எங்களைக் காப்பாற்றக் கடமைப்பட்ட எங்கள் உறவினர்கள் கொள்ளிக் கட்டையால் சூடு போட்டார்கள். நாங்கள் கெட்டுப் போனவர்கள் என்றே முடிவு செய்து எங்கள் மேல் வெறுப்பும், கோபமும் கொண்டுள்ளனர். எங்கள் உறவினர்களைவிட மும்பை ஆட்களே மேல்” என்றாள் நர்மதா வெறுப்புடன்.

“விஷம் என்றும் விஷம் தான் நர்மதா, சர்க்கரை கலந்து கொடுத்தால் அமிர்தமாகாது” என்றாள் வல்லபி .

அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே இன்ஸ்பெக்டர் வந்தார். இருக்கும் அந்த நான்கு பெண்களையும் ஸிஸ்டர் மேரியிடம் ஒப்புவித்தனர்.

“நான் இவர்களைப் பார்த்துக் கொள்கிறேன், உங்களால் முடியும் போது நீங்கள் வந்து பாருங்கள்” என்றார் ஸிஸ்டர் மேரி.

வழி தவறிய ஆட்டுக்குட்டியைப் போல் நால்வரும் முதலில் விழித்தனர். டாக்டர் வல்லபியே முன்னின்று சேர்த்ததால் நால்வரும் ஒருவருடன் ஒருவர் கலந்து பேசி ஸிஸ்டரிடம் மரியாதையுடன் நடந்து கொண்டனர். அதைப் பின் தான் வல்லபி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

இந்த “வல்லபி” நாவல் அச்சுப் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. நாவலை வாங்க விரும்பும் வாசகர்கள், கீழே பகிர்ந்துள்ள ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின் QR Code Scan செய்து தொகையை செலுத்தி Screen Shot எடுத்து, 77082 93241 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியுடன் பகிருங்கள். விரைவில் புத்தகம் உங்களை வந்து சேரும். அல்லது 77082 93241 என்ற எண்ணில் அழைத்தும் ORDER செய்யலாம். நன்றி

(தொடரும் – திங்கள் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மலர்ந்தது புது நம்பிக்கை (சிறுகதை) – ✍ பு. பிரேமலதா, சென்னை

    கோதுமை மாவு அதிரசம் (எளிமையான செய்முறை) – 👩‍🍳 கமலா நாகராஜன், சென்னை