in

வல்லபி ❤ (பகுதி 10) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

வல்லபி ❤ (பகுதி 10)

அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7  பகுதி 8_பகுதி 9

ப்போது தான் விஷ்ணு தன் நிலை உணர்ந்து தன் கைகளையும் கால்களையும் பார்த்தான். கையைத் திரும்பத் திரும்ப நீட்டி மடக்கிப் பார்த்தான். வல்லபியின் தோளில் கைகளை வைத்து அழுத்தியவாறு சிரித்தான்.

“காதலின் சக்தியைப் பார்த்தாயா வல்லபி?”

“இது கை கால்களின் சக்தி, காதலின் சக்தியல்ல” என்று கேலியாக சிரித்தாள் வல்லபி.

“உன் மேல் அந்த மடையன் மட்டும் கை வைக்காமல் இருந்தால், நான் என் பலத்தை உபயோகப்படுத்தியிருக்க மாட்டேன் வல்லபி. உன் கழுத்தை அவன் நெறிக்கும் போது எனக்கு உயிர் போய் விடும் போல் இருந்தது. அந்த உயிரின் வலி தான், உன் மேல் கொண்ட காதல் தான் எனக்கு கையும், காலும் திரும்பக் கிடைத்தது. அதை நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது தான் உண்மை” என்றவன் மீண்டும் அவள் கழுத்தை மென்மையாகத் தடவிக் கொடுத்தான்.

“போதுமே, இது பொது இடம்” என்றாள் வல்லபி கன்னம் சிவக்க.

கொஞ்ச நேரம் இருவரும் அமைதியாக சென்றார்கள். சிறிது தூரம் சென்றவுடன் விஷ்ணு அவளைப் பார்த்து மெதுவாக சிரித்தான்.

“என்ன சிரிப்பு?” என்றாள் வல்லபி.

“சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டாயே?”

“சொன்னால் தானே தெரியும்!” வல்லபி.

“அதில்லை வல்லபி, என்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டே, என்ன அழகாக என் மேல் உள்ள காதலை வெளிப்படுத்தினாய். அதை நினைத்து சிரிப்பு வந்தது”

“கற்பனை எல்லாம் பலமாக இருக்கிறது. நான் எப்போது உங்கள் மேல் உள்ள காதலை வெளிப்படுத்தினேன்?” வல்லபி.

“நான் கையை நீட்டி மடக்கி அந்த பாலாஜியை அடிக்கும் போதும், கால்களை மடக்கி அவனைப் பந்தாடும் போதும் உதடுகள் துடிக்க, கண்களில் நீர் வழிய என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாயே, அதற்குப் பெயர் என்னவாம்?”

“மிஸ்டர் விஷ்ணு, அது ஒரு டாக்டர் தன் பேஷண்ட் உடம்பு பழைய ஆரோக்கியமான நிலையை அடைந்தது குறித்து வெளிப்படுத்தும் ஒரு சந்தோஷம்” என்றாள்.

“அப்படியா? ஆனால் நீ என்ன சொன்னாலும் என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. ஆனால் வல்லபி, நீயே வந்து என்னிடம் ஒரு நாள் உன் காதலைத் தெரிவிப்பாய் பார். அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை என்று நினைக்கிறேன்”  விஷ்ணு.

“இந்தப் பேச்சை விடுங்கள் விஷ்ணு. யாரிவன் இந்த பாலாஜி? அவன் என்னை ஏன் விரோதியாக நினைக்க வேண்டும்?”

“இவன் அந்தப் பார்வதியின் மகன். பார்வதி வேறு ஒரு வசதியான ஆளைத் தேடிப் போய் விட்டாள். ஆனால் இவனால் அங்கு போய் அவர்களோடு சேர்ந்து இருக்க முடியவில்லை. ஆரம்பத்திலிருந்தே பார்வதி இவனை ஒரு பகடைக்காயாக உபயோகித்து மாமாவிடம் பணம் பறித்துக் கொண்டிருந்தாள்.  அப்பாவோட பேசுவதும், பழகுவதும் பணத்திற்காக மட்டுமே என்ற எண்ணம் இவனுள் வேரூன்றி இருந்தது. கொஞ்ச நாட்களில் சொத்து, பாகம் என்று ஆரம்பித்தான். அத்தோடு மாமாவும் அவனை ஒதுக்கி விட்டார்” என்று முடித்தான் விஷ்ணு.

“ஏன் அவனைப் படிக்க வைக்கவில்லையா?” வல்லபி.

“படிக்க வைத்தாலும் படிக்க வேண்டும் அல்லவா? அவனுடைய கெட்டப் பழக்கங்களுக்கும், ஊதாரித்தனத்திற்கும் பார்வதியும் அவள் உறவினர்களும் துணை நின்றனர். கடைசியில் இப்போது பணத்திற்காக அவர்களையே கலாட்டா செய்கிறான்”

“இவனுக்கென்று ஏதாவது கொஞ்சம் நிலம் அல்லது ஏதாவது ஒரு தொழிலோ மூர்த்தி சார் வைத்துக் கொடுத்திருக்கலாம். ஆனால் அவர் முதல் மனைவிக்குப் பிறந்த என்னையும் கவனிக்கவில்லை. இரண்டாம் மனைவிக்குப் பிறந்த இந்தப் பையனையும் ஒழுங்காக வளர்க்கவில்லை. சுயநலமாகவே வாழ்ந்திருக்கிறார், நல்ல மனிதர்” என்று கூறி விட்டு கசப்புடன் சிரித்தாள் வல்லபி.

ன்று மருத்துவமனையில் வல்லபிக்கு ஆபரேஷன் தியேட்டரில் வேலை. ஒரு மேஜர் சர்ஜரி. அதை முடித்து விட்டு சக டாக்டர்களோடு, அதைப் பற்றிய விவாதத்தில் இருக்கும் போது, அட்டெண்டர் வந்து “ஒரு ஸிஸ்டர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்” என்றார்.

வல்லபி எழுந்து சென்று ஸிஸ்டர் மேரியிடம் பேசினாள். அவர் அந்த ஊரில் இருக்கும் “ஹோம் பார் தி விடோஸ் அண்ட் டெஸ்டிடியூட்” என்ற நிறுவனத்தின் பொறுப்பாளர்.

ஒரு மாதத்திற்கு முன்பு அந்த நிறுவனத்தில் இருந்த ஒரு விதவைப் பெண் வயிற்று வலியால் துடித்தாள் என்று ஸிஸ்டர் மேரி வல்லபியிடம் அழைத்து வந்தார். வல்லபி ஸ்கேன் செய்து பார்த்து அந்தப் பெண்ணிற்கு கர்ப்பப்பையில் கட்டி என்று கூறி, கர்பப்பையை ஆபரேஷன் செய்து எடுத்து விட்டாள்.

ஒரு வாரம் மருத்துவமனையில் வைத்து மருத்துவம் பார்த்து, மருந்து, மாத்திரை எல்லாம் கொடுத்து நல்ல முறையில் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பினாள்.

அந்தப் பெண் நன்றாக, ஆரோக்கியமாகத் தானே அவர்கள் ஹோமிற்குத் திரும்பினாள். ஸிஸ்டர் ஏன் வந்தார்களோ தெரியவில்லையே என்று யோசித்துக் கொண்டு ஸிஸ்டரையும் அழைத்துக் கொண்டு கேன்டீனுக்குச் சென்றாள். இருவரும் ஆளுக்கொரு காபி சாப்பிட்டார்கள்.

அப்போது ஸிஸ்டர் மேரி, “டாக்டர் மாதத்தில் ஒரு நாள் எங்கள் ஹோமில் உள்ளவர்களுக்கு பீரியாடிகல் மெடிக்கல் செக்அப் செய்ய முடியுமா? எங்களால் முடிந்த அளவு அதற்கு பீஸ் கொடுத்து விடுகிறோம்” என்றார்.

“ஸிஸ்டர், எனக்குப் பணம் எதுவும் வேண்டாம். எனக்குக் கூட இந்த மாதிரி சர்வீஸ் செய்ய ஆசைதான். ஆனால் நீங்கள் அனுமதி கேட்டு எங்கள் டீனுக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் கொடுத்து அனுமதி பெற வேண்டும். அப்போது தான் நான் உங்கள் இல்லத்தில் பணி செய்ய முடியும்” என்றாள்.

“அதற்கென்ன இப்போதே கடிதம் கொடுத்து விட்டுப் போகிறேன். நீங்கள் ஒரு நாள் எங்கள் விடுதிக்கு வந்து பாருங்கள். அதன் வளர்ச்சிக்குக் கூட நீங்கள் ஏதாவது யோசனை சொல்லலாம்” என்றார் ஸிஸ்டர்.

அதன் பிறகு மருத்துவமனை சீப் டாக்டரையும், டீனையும் பார்த்து ஸிஸ்டர் வேண்டுதல் கடிதம் கொடுத்து விட்டுப் போனார்.

ரு நாள் விஷ்ணுவுடன் அந்த விடுதிக்குச் சென்றாள் வல்லபி. மனை மிகப் பெரியதாக இருந்தது. ஆனால் கட்டிடம் மிகவும் சிறியதாக இருந்தது. அந்த விடுதியில் ஐம்பது பெண்களுக்கு மேல் இருந்தார்கள். நல்ல வசதியான படுக்கைகள் இல்லை. சமையலறை காற்றோட்டம் இல்லாமல் ஒரே இருட்டாக இருந்தது. சுத்தமான கழிப்பறை இல்லை.

“கட்டிடமும் மிகவும் மோசமாக இருக்கிறது. நல்ல வசதிகளும் இல்லையே ஸிஸ்டர்” என்றாள் வல்லபி.

“கட்டிடப் பராமரிப்பிற்கு என்று ஒதுக்கீடு செய்யப்படும் தொகை இந்த இல்லத்தில் உள்ள பெண்களின் உணவு, உடைக்கே சரியாகி விடுகிறது. அதனால் தான் கட்டிடத்திற்கு பெயிண்ட் கூட அடிக்க முடியவில்லை” என்றார் வருத்தத்துடன் ஸிஸ்டர் மேரி.

வல்லபி அப்போதே இரண்டு இலட்சம் ரூபாய்க்கு செக் கொடுத்து விட்டாள். விஷ்ணுவும் ஐந்து இலட்சத்திற்கு செக் கொடுத்தான்.

அதுவுமன்றி, “எனக்குத் தெரிந்த நல்ல சிவில் இன்ஜினீயரிங் கான்ட்ராக்டர் இருக்கிறார். சிக்கனமாக, எந்தப் பொருளுக்கும் சேதமில்லாமல் தேவைக்கேற்ப கட்டித் தருவார்” என்றான் விஷ்ணு.

விஷ்ணுவே அந்த கட்டிடத்திற்கு வரைபடம் கொடுத்தான். கட்டிட ஒப்பந்ததாரரும் அந்தக் கட்டிடத்தை அழகாக ஆனால் சிக்கனமாகக் கட்டி முடித்தார்.

பெரியகுளத்தில் இருந்து இதைக் கேள்விப்பட்ட சுகந்தியும் இரண்டு இலட்ச ரூபாய் டொனேஷன் கொடுத்தாள். ஐம்பது புதிய பாய்களும், தலையணைகளும் வாங்கி அனுப்பினாள். வல்லபி எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் விஷ்ணுவுடன் சேர்ந்து அந்த விடுதிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டாள்.

ருநாள் விஷ்ணுவிற்கு அலுவலகத்தில் திடீரென இன்ஸ்பெக்ஷன் அதிகாரிகள் வந்து விட்டதால் வேலை அதிகம் இருந்தது. அதனால் வல்லபியுடன் இரண்டு நாட்கள் தொடர்பு  கொள்ள முடியவில்லை. மூன்றாவது நாள் அவளை செல்போனில் அழைத்தான். ‘ஸ்விட்ச் ஆப்’ என்று அறிவித்தது.

கோபித்துக் கொண்டு இருக்கிறாள் போலும் என்று நினைத்துத் தனக்குள் சிரித்துக் கொண்டான். அவளை சமாதானம் செய்ய அவள் பணிபுரியும் மருத்துவமனைக்குச் சென்றான். வல்லபி வேலைக்கு இரண்டு நாட்கள் வரவில்லை என்று கூறி அதிர்ச்சி கொடுத்தனர்.

உடம்பு ஏதும் சரியில்லையோ என்று பதறிக் கொண்டு அவள் வீட்டிற்கு ஓடிச் சென்றான். கதவில் தொங்கிய பூட்டு அவன் பயத்தை அதிகப்படுத்தியது. பக்கத்தில், எதிரில் விசாரித்தால் டாக்டரைப் பார்த்தே இரண்டு நாட்களாகின என்றனர்.

சுகந்திக்குப் போன் செய்தான். அவளோ “கடந்த இரண்டு நாட்களாக எப்போது போன் செய்தாலும் ‘ஸ்விட்ச் ஆப்’ என்றே வருகிறது. என்ன ஆயிற்று அவளுக்கு?” என்று கோபமாகக் கத்தினாள்.

விஷ்ணு அவளிடம் நிலைமையை விளக்கினான். சுகந்தியும் கொஞ்சம் பயந்து விட்டாள். மல்லிகாவிடம் எந்த விவரமும் கூறாமல் வல்லபியைப் பற்றி  விசாரித்தாள்.

மல்லிகாவோ, “என்னிடம் வல்லபியைப் பேசச் சொல். நானும் அவளுடன் பேச பலமுறை முயற்சித்தேன். ஸ்விட்ச் ஆப் என்றே அறிவிக்கிறது. ரொம்ப பிஸி போல் இருக்கிறது” என்றாள்.

மூர்த்தியும், இராமச்சந்திரனும் வல்லபியைப் பற்றி தங்களுக்குத் தெரியாது என்றே கூறினார்கள். விஷ்ணுவும், மூர்த்தியும் சென்று போலீஸில் புகார் கொடுத்தனர். அவரவர்கள் தனித்தனியே தேடிக் கொண்டு இருந்தார்கள். மல்லிகா விஷயம் தெரிந்து பயந்து போய் ஓடி வந்து விட்டாள்.

எல்லோரும் விஷ்ணுவின்  வீட்டில் கூடி விட்டனர். மல்லிகா எதையும் சாப்பிட மறுத்து விட்டாள். சுகந்தி தொந்தரவு செய்து கொடுத்த பழரசம் மட்டுமே கொஞ்சம் ஆகாரமாகக் கொண்டாள்.

விஷ்ணுவிற்கு உயிரே போய்விடும் போல் இருந்தது. வல்லபி யாரிடமும் எதுவும் சொல்லாமல் எங்கும் போக மாட்டாள்.

அவ்வளவு ஏன்? பாத்ரூம் போவதானால் கூட “அம்மா நான் பாத்ரூம் போகிறேன்” என்று அறிவித்து விட்டுத் தான் போவாள். விஷ்ணு கூட அப்போது சிரிப்பான். அவனால் அலுவலகத்திலும் வேலை செய்ய முடியவில்லை.

தண்ணீரிலிருந்து தவறி விழுந்த மீனைப் போல் துடித்துக் கொண்டு ஏதோ யோசனை செய்வதும், யார் யாருக்கோ போன் செய்வதுமாக துடிதுடித்துப் போயிருந்தான். அப்போது வீட்டு வாசலில் அவனிடம் பணிபுரியும் ஒரு ஜூனியர் இஞ்ஜினீயரும், அவர் மனைவியும் வந்தனர். இருவரும் மிக நல்லவர்கள்.

“வாருங்கள்” என்று அவர்களை வரவேற்றான். அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுக்குமாறு சொல்ல உள்ளே திரும்பினான் விஷ்ணு.

“சார், எங்களுக்கு ஒன்றும் வேண்டாம். ஒரு முக்கியமான விஷயமாக உங்களைப் பார்க்க வந்தோம். இந்தப் போட்டோவில் பாருங்கள்”” என்று தங்கள் செல்போனைக் காட்டினார்கள். அந்த போட்டோவில் ஒரு சங்கிலி ஒரு சிறிய லாக்கெட்டுடன் இருந்தது.

 “சார், V என்ற லாக்கெட்டுடன் கூடிய இந்த சங்கிலி டாக்டர் வல்லபியுடையது என்கிறாள் என் மனைவி ஷீலா” என்றான் அந்த ஜூனியர் இஞ்ஜினீயர்.

“ஆம்” என்று தலையசைத்தாள், அவன் கூட வந்த அவன் மனைவி.

அதை உற்றுப் பார்த்த விஷ்ணு, “ஆம். இந்த சங்கிலி வல்லபியுடையது தான். இந்த போட்டோ எப்படி?” என்றான் விஷ்ணு.

“என் குழந்தையின் காப்பை விற்று விட்டு குழந்தைக்கு வளையல் வாங்கலாம் என்று ஷீலா சேட் நகைக் கடைக்கு சென்றிருக்கிறாள். அங்கு ஒரு ஆள் தாடி மீசையுடன் பார்க்க ரௌடி போல் இருந்தான். அவன் கொண்டு வந்து இந்த சங்கிலியும், நான்கு வளையல்களும் கொடுத்துப் பணம் வாங்கிச் சென்றிருக்கிறான். என் மனைவி டாக்டர் வல்லபியிடம் தான் அவளுக்கோ அல்லது என் குழந்தைக்கோ உடம்பு சரியில்லை என்றால் வைத்தியம் பார்த்துக் கொள்வாள். அதனால் இந்த V எழுத்துப் பதிந்த டாலர் செயின் இவளுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. சேட்டிடம், இந்த சங்கிலியும் டாலரும் அழகாக இருக்கிறது என்று கூறித் தன் செல்போனில் போட்டோ எடுத்திருக்கிராள். சார், நாம் இப்போதே போலீஸிற்குப் போனால், சேட் மூலம் அந்த நகைகளைக் கொடுத்தவன் யார் என்று கண்டுபிடிக்கலாம். கொஞ்சம் தாமதம் ஆனாலும் திருட்டு நகைகளை சேட் உருக்குவதற்கு அனுப்பி விடுவான்” என்று கூறினார் அந்த ஜே.இ.

அவர் மனைவியும், “என் கணவர் கூறுவது தான் சரி. நாங்களும் காவல்நிலையம் வருகிறோம். உடனே கிளம்புங்கள்” என்றாள்.

மூர்த்தியும், இராமச்சந்திரனும் நாங்களும் வருகிறோம் என்று விஷ்ணுவுடன் சேர்ந்து கிளம்பினர். போலீஸார் தகுந்தவாறு சேட்டை விசாரிக்க அவன் உண்மையைக் கக்கி விட்டான். பாலாஜி என்ற அவன் பெயரும், போன் நம்பரும், விலாசமும் கொடுத்தான். போலீஸ் ஜீப் முன்னால் செல்ல, விஷ்ணுவும் மற்றவர்களும் அவன் காரில் பின் தொடர்ந்தனர்.

ஒரு வீட்டின் கதவைத் தள்ளிக் கொண்டு எல்லோரும் உள்ளே நுழைந்தனர். நகைகள் விற்ற பணத்தில், சாராய பாட்டில்களும், பிரியாணிப் பொட்டலங்களும் வாங்கி வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் பாலாஜி.

இந்த “வல்லபி” நாவல் அச்சுப் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. நாவலை வாங்க விரும்பும் வாசகர்கள், கீழே பகிர்ந்துள்ள ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின் QR Code Scan செய்து தொகையை செலுத்தி Screen Shot எடுத்து, 77082 93241 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியுடன் பகிருங்கள். விரைவில் புத்தகம் உங்களை வந்து சேரும். அல்லது 77082 93241 என்ற எண்ணில் அழைத்தும் ORDER செய்யலாம். நன்றி

(தொடரும் – திங்கள் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தரையில்  விழுந்த‌  தாரகை (சிறுகதை) – ✍ சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு 

    ஈசி ரெசிபிஸ் (குடைமிளகாய் தக்காளி குழம்பு, தக்காளி துவையல், ஸ்வீட் அப்பம், இன்ஸ்டன்ட் சட்னி மிக்ஸ், இன்ஸ்டன்ட் ரவா உப்புமா மிக்ஸ்)- 👩‍🍳 ராஜஸ்ரீ முரளி