in

தரையில்  விழுந்த‌  தாரகை (சிறுகதை) – ✍ சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு 

தரையில்  விழுந்த‌  தாரகை (சிறுகதை)

அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ந்த ஊரில் தொடர்ச்சியாக மூன்று நாள் நடக்கும் பழனியாண்டவர் திருவிழா, பங்குனி மாதம் முருகனுக்கு உகந்த உத்திரத்தன்று அவ்வூர் கிராமத்து மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவாகும். 

வருடம் முழுவதும் விவசாயம் செய்து களைத்துச் சலித்த‌ ஆண்களும், விவசாய வேலையோடு கூட, பிள்ளைகள் பராமரிப்பு, சமையல் என்று நிற்க நேரமில்லாமல் தினசரி வேலையில் உழன்று கொண்டிருக்கும் பெண்களும், அந்தத் திருவிழாவை, பழனியாண்டவரே கொடுத்த ஓய்வு நாளாக நினைத்து அனுபவித்து மகிழ்வர்.                        

மூன்று நாள் விழாவில், முதல் நாள், அருகில் இருக்கும் சிறிய  மலைக் கோவிலில் இருந்து  முருகனை சப்பரத்தில் ஏற்றி,  ஊருக்குள் கொண்டு வந்து, பெண்கள் பொங்கல் வைத்து, மற்றும் கொட்டு முழக்கத்துடன்  மாவிலக்கு, முளைப்பாரியை  ஊர்வலமாய் எடுத்து வந்து,  சிறப்பாக பூஜை செய்து கும்பிடுவர்.

இரண்டாவது  நாள், வெளியூரிலிருந்து கூட்டி வரப்பட்ட கலைக்குழுவினர் நடத்தும் பொய்க்கால் குதிரை, கரகாட்டம், சிலம்பாட்டம் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகள் விடிய விடிய‌ நடக்கும்.  

மூன்றாம் நாளன்று,  உள்ளூர்  இளைஞர்கள் பங்கேற்று நடிக்கும் ச‌மூக நாடகம் நடைபெறும். 

அன்று இரண்டாவது  நாள். சேலத்திலிருந்து அழைத்து வரப்பட்டிருக்கும் கரகாட்டக் குழுவினரின்  நிகழ்ச்சிகள்,  இரவு எட்டு மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை நடக்கும்.

நடுவில் ஆடுவதற்கு மணல் கொட்டப்பட்டு, சுற்றிலும் பெருவட்டமாக உட்கார்ந்தும், நின்றும் ரசிப்பார்கள் மக்கள்.   இரவு ஏழு மணிக்கே சிறுவர்கள் முன் வரிசையில் உட்கார்ந்து பார்க்க இடம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

ஏழு மணிக்கே ஒப்பனையைத் தொடங்கி விட்டாள் விஜயா.  அப்போது ஆரம்பித்தால்தான் எட்டு மணிக்குத் தயாராக முடியும். தலையில் வைக்கும் கரகம் சரியாக நிற்கும் வகையில் கொண்டை போடுவதற்கே, அரை மணி நேரம் பிடிக்கும்.

தம்பி கோபாலும் உடன் இருந்து  உதவி செய்து கொண்டிருந்தான். பன்னிரண்டாம் வகுப்பைத் தாண்ட முடியாததால், படிப்பை அத்தோடு விட்டுவிட்டு, கரகாட்டம் ஆடும் அக்காவுக்கு உதவியாக ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருக்கிறான்  கோபால்.

தாய், தகப்பன் இல்லாத தம்பியை அதிகம் கண்டிக்க முடியாமல், தன் ஒரே உறவான அவனை, தன் பாதுகாப்பிற்காக உடன் வைத்துக் கொண்டிருக்கிறாள் விஜயா.  கூட ஆடும் மல்லிகாவும், கமலமும் சலசலத்துக் கொண்டே சுறுசுறுப்பாக தங்களின் ஒப்பனையைச் செய்து கொண்டிருந்தனர்.

அன்று அவர்களின் கரகாட்டம் மிகச் சிறப்பாகவும், கோலாகலமாகவும் நிறைவடைந்தது. அந்த ஊர் மக்கள் ரசனை உள்ளவர்களாகவும், கரவொலி எழுப்பி பாராட்டுபவர்களாகவும் இருந்தது  ஆட்டக் கலைஞர்களுக்கு நிறைவைத் தந்தது. 

விஜயா ஒப்பனையைக் கலைத்துக் கொண்டிருக்கும் போது அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த அந்த ஊர்ப் பெரியவர் வந்தார்.

“அம்மா… இந்த ஊர்க்காரர் ஒருவர் சினிமாவில‌ டைரக்டர். திருவிழாவுக்காக சொந்த கிராமத்துக்கு வந்திருக்காரு. உங்க ஆட்டத்தைப் பார்த்தாரு. உங்ககிட்ட என்னமோ பேசனுமாம்”

இது போன்ற அழைப்புக்களைத் தவிர்த்து விடுவாள் விஜயா.  கலைஞர்களுக்கு இதுபோன்ற தனிப்பட்ட பாராட்டுதல்கள், பாலியல் சம்பந்தப்பட்ட சம்பவங்களில் முடிந்துவிடும் என்பதால், அவள் இதுபோன்ற சந்திப்புகளை விரும்புவதில்லை. 

அவளின் தயக்கத்தைப் புரிந்து கொண்ட பெரியவர், “அம்மா இவர் எங்க ஊர்க்காரர், பெரிய டைரக்டர். நானும் கூட இருக்கிறேன், தயங்காம வாங்க” என்றார்.

சினிமா என்றதும் தம்பி கோபாலின் கண்களில் ஒரு ஒளி மின்னுவதைக் கண்டாள் விஜயா.  அவன் கூட இருக்கும்போது என்ன பயம்?

“தம்பி, நீயும் வாடா”

டைரக்டர் ராஜசேகர் முகம் பரிச்சயப்பட்டதாகவே இருந்தது.  பத்திரிகைகளில் பார்த்திருக்கக்கூடும். தம்பி அவளைப் பிராண்டி கிசுகிசுத்தான்.

“இவர்தாங்க்கா  தல  படம்  ‘பட்டாசு’  டைரக்ட் பண்ணியவர்”

டைரக்டர் ராஜசேகர் அவளைப் பற்றியும், குடும்பத்தைப் பற்றியும் விசாரித்துவிட்டு, நேரடியாகவே விசயத்திற்கு வந்தார்.

“நான் இப்போ டைரக்ட் பண்ணிக்கிட்டுருக்கிற படத்தில் ஒரு முழுப்பாட்டை கரகாட்டத்துடன் படமாக்கப் போகிறோம். மூன்று பேர் ஆடுகிறார்கள்.  தேனியில் இருந்து ஒரு பெண்ணும், தஞ்சையில் இருந்து ஒரு பெண்ணும் புக் ஆகியிருக்காங்க.  உங்க ஆட்டம் பார்த்தேன்.  நல்லா இருந்தது.  உங்களுக்கு சம்மதம்னா அந்த மூன்றாவது பெண்ணா நீங்க நடிக்கலாம். அதுக்கு சென்னை வந்து டெஸ்ட் எடுத்துப் பார்த்துட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் படப்பிடிப்பிற்காக சென்னைல‌ தங்க வேண்டி இருக்கும்.  போக வர ஆகும் செலவு, அங்கே தங்கும் இடம் எல்லாம் கம்பெனி ஏற்றுக் கொள்ளும்.  சரின்னா உங்க போன் நம்பர் கொடுங்க.  என் அசிஸ்டெண்ட் கூப்பிடும்போது உடனே புறப்பட்டுச் சென்னை வரணும்”

“சார்… ஒரு சின்ன வேண்டுகோள். கூட என் தம்பியும் இருப்பான். பரவாயில்லைங்லா?”

சின்னதாகச் சிரித்துக் கொண்டே ராஜசேகர் சொன்னார், “அதெல்லாம் கம்பெனி பார்த்துக் கொள்ளும்.  ம்… படப்பிடிப்பு முடியும் வரைக்கும் வெய்யில்ல போகாம, வெயிட் போடாமா பாத்துக்கம்மா. வரட்டுமா?”  எழுந்து விட்டார்  ராஜசேகர்.

அடுத்து வந்த நாட்கள் விஜயாவிற்கும், கோபாலுக்கும் பல கற்பனைகளுடன் கடந்தன. சினிமாப் புத்தகங்களில் படித்ததை வைத்து கோபால் சினிமாவைப் பற்றி எல்லாம் தெரிந்தவன் போல் விஜயாவிடம் விளக்கிக் கொண்டிருந்தான். 

சென்னையில் இருந்து போன்கால் வந்ததும், இவர்கள் கிளம்பி சென்னை சென்றதும் ஒரு கனவு போலவே இருந்தது.  படப்பிடிப்பிற்கு ஸ்டூடியோவிற்குள் நுழைந்து, ராஜசேகர் முன்பு நிற்கும் வரை விஜயாவும், கோபாலும் வானத்தில் மிதப்பதாகவே உணர்ந்தனர். 

சென்னை வந்தவுடனே ராஜசேகர் செய்த முதல் காரியம் விஜயாவின் பெயரை  ‘மதுமிதா’  என்று மாற்றியதுதான். 

அவள் சம்பத்தப்பட்ட படப்பிடிப்பு முடிந்து ஊர் செல்வதற்கு முன் ராஜசேகரிடம் சொல்லிக் கொள்வதற்காக சென்றிருந்தாள் ‘மதுமிதா’. 

அப்போது அவர் சொன்னார், “நான் சொல்வதை கவனமா கேளும்மா.  இந்தப்படம் வெளி வந்தவுடன் நீ ஆடியுள்ள காட்சியும், பாட்டும் நிச்சயம் ஹிட் ஆகும். உன்னைத் தேடி நிறைய சினிமாக்காரங்க வருவாங்க.  இதே போல நடனக் காட்சிக்குக் கூப்பிடுவாங்க. சில்லறை வேசங்களுக்கும் கூப்பிடுவாங்க. நல்ல ரோல் கிடைக்கும் வரை, எதையும் காசுக்கு ஆசைப்பட்டு ஒத்துக்காதே.  காரணம் உன் நடிப்பும், அழகும் நிச்சயம் ஒரு நல்ல நிலைக்கு உன்னைச் சேர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. ஏதாவது உதவி அல்லது ஆலோசனை தேவைப்பட்டால் என்னை எப்போது வேண்டுமானாலும் கூப்பிடு”

மதுமிதாவும், கோபாலும் அவரை வணங்கி விடைபெற்றனர்.

படமும்  வெளி வந்தது.  நல்ல கதையோடு கூட பிரபல மியூசிக் டைரக்டரின்  கை வண்ணமும் சேர,  படம் ஹிட் அடித்தது.  அதிலும், மதுமிதா  குழுவினரின் கரகாட்டமும், அதற்கான பாடலும் வ‌ரும் காட்சியில் தியேட்டர் ஆரவாரத்தில் அதிர்ந்தது. 

டைரக்டரின் அறிவுறுத்தல்படி காமிராமேன் மதுமிதாவை முன்னிருத்தி அவளின் நடன அசைவுகளையும், அவளின் முகத்தையும் க்ளோசப்பில் வைத்திருந்ததால், அவள் முகம் அந்த ஒரு பாடலில் எங்கும் பிரபலமடைந்தது. அந்த கரகாட்டப் பாடலும், மதுமிதாவின் நடனமும் அந்தப் படத்தின் வெற்றியில் மிகப் பெரும்பங்கு வகித்தன.

உடனே சென்னை வரச்சொல்லி டைரக்டர் ராஜசேகரிடம் இருந்து ஒரு நாள் போன் வந்தது.  தம்பியுடன் கிளம்பி சென்னையில் அவரின் வீட்டிற்குச் சென்றவளிடம் ராஜசேகர்  பொறுமையாகப் பேசினார்.

“இந்தப் பட வெற்றிக்குப் பிறகு, உன்னை விசாரித்து பல போன் கால்கள் எனக்கு வந்தன. கிட்டத்தட்ட நான் எதிர்பார்த்ததைப் போல எல்லோரும் ஒரே ஒரு டான்ஸ் காட்சிக்காக மட்டும் உன் கால்ஷீட் கேட்டார்கள்.  நான் அதையெல்லாம் தவிர்த்து விட்டேன். என் டைரக்டர் நண்பர் ஒருவர் மட்டும் ஒரு பெரிய கதாநாயகனை வைத்து எடுக்கும் படத்தில் செகண்ட் ஹீரோயின் ரோல் உனக்குத் தருவதாக கூறினார். இதை ஒப்புக்கொண்டு நீ நடித்தால், உன் அழகுக்கும்,  திறமைக்கும் நிச்சயம் தமிழ்ப் பட உலகில் ஒரு பிரபல கதாநாயகி ஆக வாய்ப்புண்டு”

“நீங்க சொன்னா சரிங்க சார். எனக்கும் தம்பிக்கும் இங்கே யாரையும் தெரியாது. தங்குவதற்கு பாதுகாப்பான ஒரு இடம் கிடைச்சா…”

“நீங்க ரெண்டு பேரும் வேற இடம் கிடைக்கிற வரைக்கும் இங்கே என் வீட்டிலேயே தங்கிக்கலாம். மாதத்தில பாதி நாள்  நான் வெளியூர் ஷூட்டிங்ல இருப்பேன். ஒரு சமையல்கார அம்மா மாத்திரம் எப்பவும் இங்க இருப்பாங்க”

கோபால் ஆவல் தெரிக்கக் கேட்டான், “விஜய் சாரை பார்க்க முடியுமா சார்?”

“ஹ..ஹ.. உன் அக்கா நடிக்கும் படத்தின் ஹீரோவே அவர்தான் தம்பி..”  என்று சொல்லிச் சென்றவரை வாய்  பிளந்து பார்த்தான் கோபால்.

வேலைக்கார அம்மா  இரண்டு பேரையும் நன்றாகவே கவனித்துக் கொண்டார்.  ராஜசேகர்  மணம் முடிக்காமல் ஒற்றையாக இருப்பதைப் பற்றி மதுமிதாவிடம் அடிக்கடி புலம்பிக் கொண்டே இருந்தார். 

மதுமிதாவிற்கு முன்பு அந்த வீட்டிற்கு இதுவரை எந்தப் பெண்ணும் வந்ததில்லை என்றும், மதுமிதாவும், ராஜசேகரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களா? என்றும் கேட்டு அவளை வெட்கமடையச் செய்தார்.

அடுத்து வந்த‌ நான்கு ஆண்டுகள் அவளின் வாழ்க்கையில் பல மாறுதல்களைக் கொண்டு வந்தன. தனது அழகாலும், நடிப்புத் திறமையாலும் தமிழ்த்திரையுலகில் அனைத்து முண்ணனி ஹீரோக்களுடனும் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றாள். 

தம்பி கோபால், ஒரு தெலுங்கு துணை கதாநாயகியை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு அக்காவின் வீட்டிலேயே மனைவியுடன் தங்கி அவளின் பணவரவையும், கால்ஷீட்களையும் கவனித்துக் கொண்டான். 

நிற்க நேரமில்லாமல் இரவும் பகலும் ஷீட்டிங்கில் இருந்ததால், தம்பி நீட்டிய இடத்திலெல்லாம் அவனை  நம்பி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாள். 

ஏதாவது விழாவிலோ, ஸ்டூடியோவிலோ  ராஜசேகரைப் பார்க்கும் போதெல்லாம் எழுந்து சென்று ஓரிரு வார்த்தைகள் பேசி தன் மரியாதையைத் தெரிவிக்க மறக்கவில்லை அவள்.

காற்று எப்போதும் ஒரே பக்கம் வீசாது.  பல வட இந்திய கவர்ச்சிப் புயல்களும், அண்டை மாநிலத்து தமிழ் தெரியாத நாயகிகளும் தமிழ்த் திரையுலகை ஆக்கிரமிக்க மதுமிதாவின் கால்ஷீட் டைரி காலியாகவே காட்சியளித்தது.

அக்கா வேசத்திற்கும், அம்மா வேசத்திற்கும் மதுமிதா தயாராக இல்லை.  இதுவரை சம்பாதித்தது போதும் என்று திருப்தியடைந்து தம்பியை அழைத்தாள்.

தம்பியும் அவன் ஆந்திர மனைவியும் வந்தார்கள். முதன் முறையாக தனக்கு இருக்கும் சொத்துக்களைப் பற்றியும், பணஇருப்பைப் பற்றியும் கேட்டாள்.

“வந்த பணம் எல்லாம் அப்பப்ப செலவாயிட்டது. சொத்து இந்த வீடு மட்டும்தான், அதுவும் சேட்டுகிட்ட அடமானத்தில இருக்குது” 

ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டு விட்டதைப் போல அவன் கோபக்குரலில் பதில் கொடுத்தான்.  மதுமிதா  மேலும் ஏதோ கேட்க முயல, வலிய சண்டையை இழுத்து, திட்டமிட்டபடி கோபத்துடன் மனைவியைக் கூட்டிக் கொண்டு வெளியேறி விட்டான் கோபால்.

ஆடிட்டரை அழைத்தாள் மதுமிதா.  நேரிலேயே கிளம்பி வந்த ஆடிட்டர்,  தான் கோபாலின் நடவடிக்கைகளைப் பற்றி பல முறை அவளுக்குத் தெரிவிக்க முயற்சி செய்தும், அவள் தம்பியின் மீதுள்ள பாசத்தால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று வருத்தப் பட்டார். 

மேலும், அவளிடம் இருந்து சுருட்டிய பணத்தில் கோபால் தனது மனைவியின் ஊரான திருப்பதியில் அறுபது ஏக்கர் மாந்தோப்பு வாங்கிப் போட்டிருப்பதையும் தெரிவித்தார். மேலும் சேட்டிடம் வாங்கியுள்ள கடனுக்கும், இந்த வீடு சரியாகிவிடும் என்றும் விளக்கினார்.

ஒட்டு மொத்தத்தில் தற்போது தான் ஒரு காலி பாத்திரம் என்ற நிதர்சனத்தை உணர்ந்தாள்.  சேட்டிற்கு போன் செய்து அன்று மாலை வந்து வீட்டின் சாவியை வாங்கிக் கொள்ளும்படி சொன்னாள். 

ஹாலில் தரையில் படுத்து மேலே தொங்கிக் கொண்டிருக்கும் வண்ண வண்ண விளக்குகளைப் பார்த்தாள்.  மின்னி மின்னி எரியும் அவ்விளக்குகள் அவளின் வண்ண மயமான சினிமா வாழ்க்கையை நினைவுபடுத்தின. 

சேட்டை எதிர்பார்த்து இருந்த நேரத்தில் ராஜசேகர் உள்ளே நுழைந்தார்.  தன் வலது கையை அவளை நோக்கி நீட்டினார்.  நீட்டிய அந்தக் கையைப் பற்றியவுடன் அதுவரை அடக்கி வைத்திருந்த அவளின் துக்கம் விம்மலாக வெடித்தது. இழுத்து அணைத்த அவரின் தோள் அவளின் சுமை தாங்கியாகியது.

“போகலாம் வா விஜயா”  

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளின் உண்மைப் பெயரின் உச்சரிப்பு அவளை உணர்ச்சி வசப்பட வைத்தது.

“எங்கே?” என்றாள்.

“நம் வீட்டிற்கு… என் மனைவியாக வாழ்வதற்கு…”

இணைந்த கரங்களுடன் இரண்டு உருவங்கள் அந்த வீட்டை விட்டு வெளியேறின புது வாழ்வை நோக்கி.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 12) – ✍ விபா விஷா, அமெரிக்கா

    வல்லபி ❤ (பகுதி 10) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை