in

கானல் நீர் (சிறுகதை) – ✍ வீ.சிவானந்தம், தஞ்சாவூர்

கானல் நீர் (சிறுகதை)

நவம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

து மாதிரி ஒரு கடிதம் மதிவாணனிடமிருந்து வரக்கூடாது என்று ஊரில் உள்ள கடவுள்களிடம் எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தேனோ… அது மாதிரி ஒரு கடிதம் எங்கள் நட்பு ஏற்பட்டு சரியாக ஒரே வருடத்திற்குள் வந்து விட்டது.

நான் பயந்து போனேன். ஏன்னுடைய ராசி பற்றி தெரியாத யாராவது ஒருவர் அந்த கடிதத்தை படித்தார்கள் என்றால், “அட எதுக்கப்பா இதுக்கு போயி இப்படி புலம்புறே…? நண்பன்தானே தன்னுடைய மகளுக்கு கல்யாணம்… வரதட்சணை கொடுக்க பணம் போதவில்லை… உதவு என்று எழுதியிருக்கிறார், இருந்தால் கொடுப்பது? இல்லை என்றால் இல்லை என்று நிலையை மோசமாக வர்ணித்து ஒரு கடிதம் எழுதிப் போட்டு விட்டு நிம்மதியாக இருக்க வேண்டியதுதானே?” என்பார்கள்.

அங்கேதான் சிக்கல்! என்னோட வருமானத்திற்கு பத்தாயிரம் ஒன்றும் பெரிதல்ல… ஆனால் அதைவிட எனக்கு மதிவாணனின் உயிர்தான் முக்கியம்! ஆந்த அளவுக்கு மதிவாணனை நான் நேசிக்கிறேன்.

தாம்பரம் ராஜசேகர், தஞ்சாவூர் காமராஜ் என் ஆருயிர் நண்பர்கள் எல்லாம் என்னை விட்டு பிரிந்ததற்கு முழுக்க முழுக்க நான்தான் காரணம் என்று என் சுட்டுவிரல் என்னை விட்டு விலகி நின்று சுட்டுகிறது!

 நானா?

 ஆமாம்… என் மனசாட்சி நீதான் என்கிறது.

 போதும் புரிந்தது புதிர்!

அப்போது நான் திருப்பதி வெங்கடேஸ்வரா மெடிக்கல் காலேஜில் படித்துக் கொண்டு இருந்தேன். திடீரென பக்தி முற்றிப் போய் ஒருநாள் சாமி தரிசனம் செய்ய திருமலை போய் இருந்தேன். திருமலையில் சாமி தரிசனத்திற்கு க்யூவில் நிற்கும் போது ராஜசேகரின் மனைவி என் காலை மிதித்து விட, நான் அலற… அவர் ரெடிமேட் ‘சாரி’ சொல்ல… நான் சிரிக்க அவர்கள் திரும்ப சாரி சொல்ல இப்படியாக ஆரம்பித்தது நட்பு ராஜசேகர் அண்ட ஒய்ப் நட்பு.

தரிசனம் முடித்து விட்டு மலையை விட்டு இறங்கையில் நட்பு மூவரும் ஒரே சீட்டில் உட்கார்ந்து பயணிக்கும் அளவுக்கு முன்னேறி இருந்தது.

கீழ் திருப்பதியில் இரண்டு வெங்கடஜலபதி சிலை வாங்கி தான் ஒன்று வைத்துக் கொண்டு என்னிடம் ஒன்றை கொடுத்தார் ராஜசேகர். நான் எவ்வளவோ மறுத்தும் இதை பார்க்கும் போது எல்லாம் என்னுடைய நினைப்பு வர வேண்டும் என்று சொல்லி கொடுத்தார்.

என்ன நேரத்தில் என்ன எண்ணத்தில் சொன்னாரோ தெரியவில்லை. இப்போதும் கூட அடிக்கடி அந்த சிலையைதான் பார்க்கிறேன். ஆனால் நினைவில் ராஜசேகர் வருவது இல்லை. அவர் மனைவி வள்ளிதான் வருகிறாள். வெள்ளை சேலையில் … ஆதரவுமின்றி!

ஊருக்கு போய் சேர்ந்தவுடன் தம்பதிகள் இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் என்று லெட்டரை பங்கு போட்டு எழுதி பாசத்தில் நிரப்பி இருந்தார்கள். அடுத்தடுத்த லெட்டர்கள் இன்னும் நெருக்கத்தை இறுக்கப்படுத்தின.

சென்னை போகும் போது எல்லாம் தவறாமல் போவேன். ஆனால் கடைசிவரை அவர்களால் என் வேண்டுகோளை ஏற்று சேலத்திற்கு வர வாய்ப்பு கிடைக்காமலேயே போனது.

அந்நிலையில் தான் அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. வீடு கட்டிக் கொண்டு இருப்பதாகவும்… உதவி செய்ய இங்கு யாரும் முன் வராததால் தங்களிடம் கேட்கிறேன். ஒரு பத்தாயிரம் கொடுத்து உதவ முடியுமா? என்று!.

நான் என்றைக்கும் பணத்திற்கு கொடுக்கும் மரியாதையை விட நட்புக்கு மதிப்பு கொடுப்பவனாகையால் அன்று இரவே சென்னை புறப்பட்டுப் போய் நேரில் பணத்தை கொடுத்து விட்டு வந்தேன்.

இந்த சம்பவம் குடும்ப அளவில் ஒரு மிகப் பெரிய நெருக்கத்தை கொடுத்தது. இந்த சம்பவம் நடந்து சரியாக ஒரு மாதத்தில் என் பெயருக்கு தந்தி. பிரித்து படித்து விட்டு அழுது புரண்டேன். உடனே புறப்பட்டுப் போனாலும் கூட நண்பனை பார்க்க முடியவில்லை. வள்ளியைதான் காணக் கூடாத கோலத்தில் காண நேர்ந்தது.

யாரோ வீட்டில் வேலை பார்த்துக் கொண்டு வயிற்றை கழுவிக் கொண்டு இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்னால் கடிதம் போட்டு இருந்தாள் வள்ளி. இந்த சம்பவம் நடந்து சரியாக ஒரு மாதத்திற்கு பிறகு என் தங்கையின் இண்டர்வியூக்காக தஞ்சாவூர் போக வேண்டி இருந்தது.

அங்கு போகும் போதுதான் பக்கத்து சீட்டில் உட்கார்ந்து இருந்த காமராஜின் அறிமுகம் கிடைத்து.

“தஞ்சாவூர்’ல பிருந்தா பெட்ரோ கெமிக்கல்ஸ் பாக்டரி எங்க சார் இருக்கு தெரியுமா?” என்று நான் கேட்க

“நானும் புதுசுதான்… அங்க தான் போறேன் இண்டர்வியூக்கு. நீங்க…?” என்றான்.

“நாங்களும்தான் …” என்றோம்.

“அப்போ போட்டி பலமா இருக்கும்னு சொல்லுங்க” என்றான்.

“அது இண்டர்வியூ வைக்கிறவங்க கேட்கிற கேள்விகளிலேயும், சொல்றவங்க பதில்களிலேயும் இருக்கு” என்றான்.

நல்ல ஆண்பிள்ளைதனமாய் இருந்தான் நிறைய பேசினான் பொருள்பட, காஷ்மீர், கார்கில் பற்றி பேசினான்… மனித நேயம் பற்றி பேசினான்… சோனியா பிரதமரானால் என்ன? என்றான்.

அசோகர் சாலை ஓரத்தில் மரங்களை நட்டது… வருங்கால அரசியல்வாதிகள் மரங்களை வெட்டி எடுத்துக்கத்தான்…என்றான்.

தஞ்சை போய் சேர்ந்த போது… தங்கையை அவனிடம் விட்டுவிட்டு ‘தம்’ அடிக்க தனியே போகும் அளவிற்கு முன்னேறி இருந்தது நட்பு!

‘இண்டர்வியூ’ முடிந்து சேலம் திரும்புகையில் நாமக்கல்லிலேயே இறங்கிக் கொண்டான். கனிவாய் பேசினான். முகவரி கொடுத்தான். பிரீத்தியின் பார்வையில் அப்போது தெரிந்து காதல். நான்கூட கண்டு கொள்ளவில்லை.

இரண்டு தினங்களுக்கு பிறகு மறக்காமல் லெட்டர் போட்டான். வேலை என்னவானது? ஏன்று நானும் விசாரித்து எழுதினேன். ப்ரீத்தி தானும் எழுதுவதாக கூறினாள். நானும் எதுவும் கண்டுக் கொள்ளவில்லை. நாகரீகமாக கடிதத்தை அவளிடமே கொடுத்து விட்டேன்.

எப்படியாவது அவனுக்கு இந்த வேலை கிடைத்து விட்டால்… ப்ரீத்தி ஆசைப்படுவது போல் அவனையே அவளுக்கு முடித்துவிடலாம் என்று நினைத்திருந்தேன்.

அடுத்த வாரத்தில் ஒரு நாள் கடிதம் வந்தது, அந்த வேலைக்கு ரூ.10,000 கேட்கிறார்கள் என்று! எனக்கு உள்ளுக்குள் ஏனோ பயம். அனாவசியமாக ராஜசேகர் கனவில் வந்து பயமுறுத்தி விட்டு போனார்.

நான் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கையிலேயே அவன் தயங்கி தயங்கி கடிதத்தில் எழுதியிருந்தான் ப்ரீத்தியுடன் ஆன காதலை!

மனதை தேற்றிக் கொண்டு ரூ.10,000-ஐ இங்கு வர வைத்து கொடுத்து அனுப்பினேன். அடுத்த வாரத்தில் ஒருநாள் தந்தி பிரிக்கவே மனமில்லை. வியர்த்துப் போனேன்.

ப்ரீத்தி தான் பிரித்து படித்து விட்டு மூர்ச்சையாகி விழுந்தாள். பின்னால் தெரிய வந்தது காமராஜ் செய்து கொண்டது முழுக்க முழுக்க தற்கொலை என்று!

ஏன்?

யாருக்கு தெரியும்? அன்று எடுத்தது தான் உறுதி. இனி யாருக்கம் இந்த பாழாப்போன கையால் கடன் கொடுக்க கூடாது என்று! அதற்கு பிறகு புதிதாக யாரிடமும் பேசுவதற்கே பயப்பட்டேன்.

புதிய நட்பு தேவையில்லை என்ற முடிவுக்கே வந்திருந்தேன். நடை பிணமாகிப் போயிருந்த ப்ரீத்தியை தேற்றவதற்காக கடந்த மாதம் ஊட்டிக்கு அழைத்துப் போய் இருந்தேன்.

காட்டேஜில் தங்கி இருந்தோம். அடுத்த அறையில் ஒரு குடும்பமே தங்கி இருந்தது. ஹாலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டு இருந்த என்னிடம் வலிய வந்து பேசினார் மதிவாணன்.

நான் பட்டும் படாமல் பேசியும் கூட… தான் மதுரையில் இருந்து வந்திருப்பதாகவும்… “குளிர் ரொம்ப அதிகம்தானே சார்… வருஷம் வருஷம் வருவீர்களா?” இப்படி வலுக்கட்டாயமாக பேசி ஒன்றாகி விட்டார்.

வழக்கம் போல் என் மனம் இளகிவிட்டது. தன் மகள் வைதேகியை அறிமுகப்படுத்தினார்.

“இந்த வருட இறுதியில் திருப்பரங்குன்றத்தில் கல்யாணம் அழைப்பிதழ் அனுப்புவேன் அவசியம் வரணும்” என்றார்.

சங்கடத்தில் நெளிந்தேன். அதற்குள் என் தங்கையும் வைதேகியும் நெருங்கிப் போய் இருந்தார்கள்.

சேர்ந்தே சுற்றினோம். ஊருக்க வரும் போது வழியில் மதுரையில் இறங்குங்கள் என்று அடம் பிடித்தார்கள். இறங்கினோம். இரண்டு நாட்கள் தங்கினோம். அன்பில் குடும்பமே எங்களை திளைக்க அடித்தது.

ஊருக்கு வந்தவுடன் வரிசையான கடிதங்கள். பிரீத்தி கூட கொஞ்சம மனதளவில் மாறிப் போயிருந்தாள். எந்த ஒரு சூழ்நிலையில் இந்த நட்பை இழக்க நான் விரும்பவில்லை. அவ்வப்போது மட்டும் ராஜசேகரும், காமராஜும் கனவில் வந்து பயமுறுத்திக் கொண்டு இருந்தார்கள்.

மதுரையில் இருந்து கடிதம் வரும்போது எல்லாம் பயந்து கொண்டே பிரிப்பேன். இன்று நான் பயந்தபடியே ஆகிவிட்டது. மதிவாணன் தான் எழுதி இருந்தார்.

“வர்ற வெள்ளிக்கிழமை கல்யாணத்திற்கு வரும்போது எதுவும் நினைத்துக் கொள்ளாமல் ரூ10,000 மட்டும் கொண்டு வரவும் வரதட்சணை கொடுக்க ரூ.10,000 குறைகிறது. ஒரு வாரத்தில் தந்து விடுகிறேன்” என்று எழுதியிருந்தார்.

அருகில் வந்து உட்கார்ந்த ப்ரீத்தி என்னை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தாள்.

“வேண்டாம் அண்ணா… ப்ளீஸ் பணம் கொடுக்க வேண்டாம்… அந்த அங்கிளையும் இழக்க நா தயாரில்லை… அவர் எங்காவது வாங்கி விடுவார்…”என்று கெஞ்சினாள் ப்ரீத்தி!

ஏனக்கும் அது சரியாகப்பட்டது.

இது என்ன பைத்தியக்காரத்தனம்! அடுத்து அடுத்த இரு நண்பர்களுக்கு  இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது’ங்கறத்துக்காக கடன் வாங்கிற எல்லோருக்குமே இப்படி நடக்குமா? என்ன? 

இது என்ன முட்டாள் தனம்;! மூட நம்பிக்கை என்றது மனசு! நீ எப்படியோ சொல்லிக்கோ… வேண்டாம் இந்த விஷப்பரிட்சை என்னோட நண்பன் எனக்கு வேணும். என்னை போல அவருக்கு எத்தனையோ நண்பர்கள் இருப்பார்கள் யாரிடமாவது வாங்கிக் கொள்ளட்டும்.

போனால் தானே பணம் கேட்பார்… போகவிட்டால்! கடிதத்தையம் அழைப்பிதழையும் கிழித்து எறிந்தேன்.  அந்த கடிதம் வீட்டில் இருந்தால் கூட ஆபத்து என்று பைத்தியகாரதனமாய் நம்பினேன். தீயிக்குள் சிறை இருப்பது போல் இருந்தேன்.

வெள்ளிக்கிழமை மாலை போன் வந்தது. எடுத்தேன், கேட்டேன். மதிவாணன் தூக்கில் தொங்கிவிட்டார். பாடி போஸ்ட்மார்டம் போய் இருக்கு. வரதட்சணை கொடுக்க முடியாததால் கல்யாணம் நின்று விட்டது… அவமானம் தாங்க முடியாமல் தொங்கிவிட்டார்.

அப்படியே சரிந்து விழுந்தேன்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 18) – ✍ விபா விஷா, அமெரிக்கா

    வல்லபி ❤ (பகுதி 16) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை