in

வல்லபி ❤ (பகுதி 15) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

வல்லபி ❤ (பகுதி 15)

நவம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7  பகுதி 8_பகுதி 9_பகுதி 10 பகுதி 11  பகுதி 12  பகுதி 13  பகுதி 14

“இவன் எப்படி இங்கே?” என்றார் எரிச்சலாக.

பாலாஜி ‌அவரை முறைத்தான். விஷ்ணு அவனைக் கண்களாலேயே கண்டித்தான். சமையல் அறையில் இருந்து வந்த வாசனை மூக்கைத் துளைத்தது. மல்லிகா மூர்த்திக்காக என்னவோ தனியாக சமைத்துக் கொண்டிருந்தாள்.

“என்ன ஆன்ட்டி, சாப்பாடு இருக்கிறது என்று சொன்னீர்களே?” என்றான் விஷ்ணு.

“சாப்பாடு கிடைக்குமா என்று கேட்பவருக்கு இல்லை என்றா சொல்ல முடியும்? பூசணிக்காய் மோர்க் குழம்பு என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். அதனால் மோர்க்குழம்பும் கொஞ்சம் உருளைக்கிழங்கு பஜ்ஜியும் செய்கிறேன்” என்றாள்.

விஷ்ணு கண்களைச் சிமிட்டி விசிலடித்தான்.

“என்ன விஷ்ணு, கேலி செய்கிறாயா?” என்றாள் மல்லிகா.

“கேலி இல்லை ஆன்ட்டி, ஆச்சரியம். நம் நாட்டுப் பெண்கள் மட்டும், கணவன் என்ன துரோகம் செய்தாலும், எப்படி ஏமாற்றினாலும், அவன் மனம் திருந்தி வந்தால் அவனை ஏற்றுக் கொள்கிறார்களே எப்படி?” என்றான் ஆச்சரியமாக, தலையைச் சாய்த்து.

“விஷ்ணு, நம் நாட்டுப் பெண்கள் ஏமாந்த சோணகிரிகள் என்று நினைக்கிறாயா? எங்களுக்கு மன்னிக்கும் பரந்த மனப்பான்மையும், அன்பும் அதிகம். எங்கள் பலமும் அதுதான், பலவீனமும் அதுதான் விஷ்ணு” என்றாள் மல்லிகா அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டு.

மூர்த்திக்கு ஏற்கெனவே மல்லிகாவின் சமையல் மிகவும் பிடிக்கும். இப்போது நீண்ட பிரிவிற்குப் பின் அவள் கையால் சாப்பிடுவது தேவாமிர்தம் போல் இனித்தது.

ரண்டு நாட்களும் அவருக்கு மின்னலாய் மறைந்தது. மூன்றாவது நாள் அவர் தூங்கி எழுந்திருக்கும் போது பெட் காபி வரவில்லை. வீடே அமைதியாக இருந்தது. வல்லபிக்கு இரவுப் பணி முடிந்து இன்னும் வீடு திரும்பவில்லை. பாலாஜி மட்டும் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்.

மூர்த்தி மெதுவாகத் தன் அறையிலிருந்து வெளியே வந்தார். மல்லிகாவின் அறையில் ‌இருந்து லேசான முனகல் சப்தம் கேட்டது. கதவுத் தாளிடப்படாமல் சிறிது திறந்திருந்தது. முழுவதுமாகக் கதவைத் திறந்து மல்லிகாவின் படுக்கை அருகில் சென்றார்.

ஏ.சி. ஓடாமல் பேன் தான் ஓடிக் கொண்டிருந்தது. மல்லிகா லேசாக முனகிக் கொண்டிருந்தாள். இரண்டு கால்களையும் மடக்கி ஒருக்களித்த நிலையில் கைகளால் பிணைத்துக் கொண்டு இருந்தாள்.

மூர்த்தி மெதுவாக மல்லிகாவின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தார். நல்ல ஜுரம். குளிருகிறது போல் இருக்கிறது. ஒரு போர்வையை எடுத்துப் போர்த்தி விட்டு, பாலாஜியை அழைத்துப் பக்கத்தில் இருக்கும்படி சொன்னார்.

பிரஷ் செய்து முகம் கழுவிக் கொண்டு சமையல் அறையில் போய் பில்டரில் டிகாக்ஷனை இறக்கி, பாலையும் காய்ச்சி, சர்க்கரையும் அளவாகப் போட்டு கலந்து மல்லிகாவிற்கு எடுத்துச் செல்லும் போது, வல்லபி டியூட்டி முடிந்து உள்ளே நுழைந்தாள்.

“என்ன அப்பா, நீங்கள் காபி போடுகிறீர்கள்? அம்மா எங்கே?” என்றாள்.

“உன் அம்மாவிற்கு நல்ல ஜுரம் வல்லபி. ரொம்ப குளிரும் இருக்கும் போல் இருக்கிறது. அதனால் தான் காபி கொடுத்து விட்டுப் பிறகு உனக்கு போன் செய்யலாம் என்று இருந்தேன். இந்தா, நீயும் காபி சாப்பிடு” என்றார்.

“இல்லையப்பா, நான் மருத்துவமனையிலிருந்து வரும் போதே காபி சாப்பிட்டுத் தான் கிளம்பினேன்” என்றவள் வேகமாகத் தன் தாயின் அறைக்குச் சென்றாள்.

ஜுரம் தான் அதிகமாக இருந்தது. இரத்த அழுத்தம் எல்லாம் சரியாக இருந்தது. மல்லிகாவை எழுப்பி, மூர்த்தி தந்த காபியைக் கொடுத்தாள். பிறகு பேசிக் கொண்டே, தன் மெடிக்கல் கிட்டைத் திறந்து ஒரு பாராசிடமல் இன்ஜெக்ஷனைப் போட்டாள்.

“ஜுரம் குறைந்து விடும். வெறும் வைரல் பீவர் தான். மூன்று நாட்கள் ஜுரம் குறைவதும், அதிகமாவதுமாக இருக்கும். அதனால் பயப்பட வேண்டாம்” என்றாள் மூர்த்தியிடம்.

“நீயும் குளித்து விட்டு, சாப்பிட்டு நன்றாகத் தூங்கம்மா” என்றார் மூர்த்தி.

மல்லிகா மெதுவாக, “சாப்பிடுவதற்கு நான் ஒன்றும் செய்யவில்லையே, நன்றாகத் தூங்கி விட்டிருக்கிறேனே” என்றாள் அங்கலாய்ப்புடன்.

“உனக்கு நல்ல ஜுரம். நீ கொஞ்சம் அமைதியாக இரு. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றார் மூர்த்தி.

எல்லோரும் வெளியே போகவும் மல்லிகா மீண்டும் படுத்துக் கொண்டாள். உடம்பு தான் படுத்ததே தவிர உள்ளம் அலைபாய்ந்தது.

மூர்த்தியுடன் வாழ்ந்த பழைய வாழ்க்கையை நினைத்துக் கொண்டாள். எவ்வளவு பிரியமாக இருந்தார். ஆனால் பார்வதியுடன் உண்டான தொடர்பில் வாழ்க்கை கானல் நீரானது. சிறிய குழந்தையாக வல்லபி. எவ்வளவு துன்பங்கள். வாழ்க்கை, கடவுள் எல்லாவற்றின் மேலும் இருந்த நம்பிக்கையை இழந்தாள்.

வல்லபி வளர, வளர அவள் சிரிப்பில், அவள் அறிவில், அழகில் மூர்த்தியை மறந்தாள். வல்லபி மட்டுமே உலகம் என்றானது. அவள் கொண்டு வரும் வெற்றிக் கோப்பைகளும், சான்றிதழ்களும் அவள் மனதில் பசுமைப்புரட்சி ஏற்படுத்தியது. வாழ்க்கையே கவிதையாகியது. வல்லபி டாக்டராகப் பட்டம் பெற்றதும் ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆற்றின் தடம் மாறியது போல் வாழ்க்கை திசை மாறியது.

மீண்டும் இந்த மூர்த்தி இப்போது இவள் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். ஆனால் அவர் காட்டும் அன்பையும், பாசத்தையும் இவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நடுக்கடலில் தத்தளிப்பவன் ஏதாவது ஒரு மரப்பலகையைப் பிடித்துக் கொண்டு கரை சேர நினைப்பது போல, இவளின் துணையோடு வாழ நினைக்கிறாரோ என்று ஒரு எண்ணம் இவள் உள்ளத்தில் உறுத்தியது. ஆனாலும் அவரின் சிறுசிறு அன்பான அணைப்பிற்காகவும், பாசமான வார்த்தைகளுக்காகவும் ஏங்கியது உள்ளம். ஆனால் அறிவு அவள் உள்ளத்து  உணர்ச்சிகளைக் கண்டித்தது.

இவ்வாறு இதயத்திற்கும், மூளைக்கும் நடக்கும் போராட்டத்தில் மல்லிகா களைத்து விட்டாள். சமயத்தில் மூர்த்தி மேல் அனுதாபம் பொங்கும். சில சமயங்களில் வெறுப்பு தான் தோன்றியது. பாம்பென்றும் தாண்ட முடியாமல், பழுதென்றும் நீங்க முடியாமல் என்று சொல்வார்கள் இல்லையா, அதைப் போல் திண்டாடியது அவள் மனம். இந்த மனப்போராட்டத்தில் அவளுக்கு இரத்த அழுத்தம் அதிகமாகியது.

ஒரு நாள் திடீரென்று கை கால்களும், வாயும் இழுத்துக் கொண்டது. பக்கவாதம் ஏற்பட்டது. நல்லவேளையாக வல்லபி மதுரையிலேயே இருந்தாள். சில நாட்களில் சென்னைக்கு மீட்டிங் என்று சென்று விடுவாள்.

மல்லிகாவை மூர்த்தியின் உதவியோடு தன் மருத்துவமனையில் அட்மிட் செய்தாள். (TPA அதாவது டிஷ்யூ பிளாஸ்மினோஜன் ஆக்டிவேட்டர்) நரம்பின் மூலம் செலுத்தி, இரத்தக் குழாயில் உள்ள கட்டிகளை அகற்ற வேண்டும் என்றாள்.

அவள் கூறிய மருத்துவ வார்த்தைகள் பல மூர்த்திக்குப் புரியவில்லை. ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த முறையை செய்தால் பக்கவாதத்திலிருந்து காப்பாற்றலாம் என்று விளக்கினாள்.

அதன் பிறகு வல்லபி வேகமாக செயலில் இறங்கினாள். மல்லிகாவை சீனியர் டாக்டர்களின் உதவியுடன் ஐ.சி.யூ’வில் சேர்த்து ‘ஸ்ட்ரோக்’கிலிருந்து  காப்பாற்றினாள். படிப்பின் மகத்துவம் உணர்ந்தார் மூர்த்தி. அதிலும் மருத்துவப் படிப்பின் உயர்வை நன்கு உணர்ந்தார்.

மல்லிகா எப்போது மயக்க நிலையில் இருந்து கண் விழிக்கும் போதும், தூக்கத்தில் இருந்து விடுபட்ட போதும், மூர்த்தி அருகிலேயே இருப்பதை உணர்ந்தாள். கண்கள் கலங்க, முகம் வேதனையில் சுருங்க, அவளை விட்டு நீங்காமல் இருபத்தி நான்கு மணி நேரமும் அமர்ந்திருந்தது அவள் உள்ளத்தை உருக்கியது.

வல்லபி கூட தன் தந்தை தன் தாயிடம் காட்டும் அன்பில் மனம் நெகிழ்ந்தாள். தாயிடம் மட்டும் அல்ல, மூர்த்தி அவளிடமும் காட்டும் அன்பு அவளை சிலிர்க்க வைத்தது. இது வரை அனுபவித்திராத ஒரு தந்தையின் அன்பு.

விஷ்ணு கூட மூர்த்தியின் இந்த மாற்றத்தை வெகுவாக ரசித்தான்.

திருமணம் கூடிவரும் நேரத்தில் மல்லிகா இப்படிப் படுத்துக் கொண்டது மரகதத்திற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

“அண்ணா, திருமண நெருக்கத்திலா மல்லிகா இப்படிப் படுத்துக் கொள்ள வேண்டும்” என்றாள் எரிச்சலுடன் மூர்த்தியிடம். ஆனால் மூர்த்தியோ அவளைக் கோபித்துக் கொண்டார்.

“நானே ரொம்ப வருத்தத்துடன் இருக்கிறேன் மரகதம். இப்போது தான் மல்லிகா என்னிடம் வேற்றுமை மறந்து சகஜமாகப் பழகுகிறாள். இந்த நேரத்தில் போய் அவளுக்கு உடம்பு இப்படி ஆகிவிட்டதே என்று கவலைப்படுகிறேன். நீயானால் திருமணம் தாமதம் ஆவதைப் பற்றிக் கவலைப்படுகிறாய்” என்று சிடுசிடுத்தார்.

மரகதம் மனதிற்குள் நொந்து கொண்டாள். “சின்ன வயசுப் பசங்க திருமணம் பற்றிப் பேசினால், வாழ்ந்து முடிந்து இவர் தன் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்பட்டால் என்ன செய்வது?” என்று புலம்பிக் கொண்டாள்.

மல்லிகாவை டிஸ்சார்ஜ் செய்து ஒரு வாரம் ஆனது. இந்த நேரத்தில் வல்லபிக்கு ஜெர்மனியில் மூன்று மாதங்கள் பயிற்சி என்று அரசாங்கம்  உத்தரவு அனுப்பி இருந்தது.

ஜெர்மனிக்குப் போவதில் வல்லபிக்கு ஒன்றும் பெரிய ஆசையில்லை. விஷ்ணுவிடம் ஐடியா கேட்டாள்.

விஷ்ணுவோ, “மல்லிகா ஆன்ட்டி உடம்பு தேறுவதற்கு குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும். அதனால் நீ ஜெர்மனிக்குப் போய் வா. இதெல்லாம் நல்ல அனுபவம். இதை நீ தவற விடக் கூடாது. உனக்கும் இந்த டென்ஷனில் இருந்து கொஞ்சம் ‘ரிலீப்’ கிடைக்கும்” என்றான்.

மூர்த்தியோ, “திருமணத்தில் மல்லிகா தான் பாதபூஜை செய்ய வேண்டும். மூன்று மாதங்களில் மல்லிகா உடம்பு நல்ல பலம் பெறும். ஆதலால் நீ ட்ரெயினிங் போய் விட்டு வா” என்றார்.

வல்லபி வீட்டிலேயே மூர்த்தி நிரந்தரமாகத் தங்கி விட்டார். மல்லிகாவை முழுவதும் அவரேதான் கவனித்துக் கொண்டார்.

“மூன்று மாதங்கள் கனகாவால் தனியாக அம்மாவை கவனித்துக் கொள்ள முடியாது. அதனால் சிஸ்டர் மேரி, அவர்கள் நடத்தும் சீனியர் சிட்டிசன் ஹோமில் சேர்த்து விடலாம் என்று சொல்லுகிறார். அங்கே நர்ஸ், டாக்டர் எல்லோரும் இருப்பதால் அது தான் வசதி” என்றாள் வல்லபி.

அப்போது தான் மூர்த்தி கோபத்தைப் பார்த்தாள் வல்லபி.

“உன் அம்மா ஒன்றும் அநாதை இல்லை வல்லபி. தாலி கட்டிய கணவன் நான் இருக்கிறேன். என் உயிரைக் கொடுத்தாவது அவளை நான் காப்பாற்றுவேன். என் மனைவியை எந்த ஹோமிலும் சேர்க்கக் கூடாது. நான் தாமரைக் குளத்தில் உள்ள நம் வீட்டில் ஒரு நர்ஸை வைத்து நன்றாகக் கவனித்துக் கொள்ளுகிறேன் வல்லபி. என்னை நம்பு கண்ணா. நான் ஒன்றும் கொடூரமானவன் இல்லை. நீ மூன்று மாதம் பயிற்சி முடிந்து திரும்பும் போது, நான் என் ‌மனைவியுடன் ஏர்போர்ட் வந்து எங்கள் மகளை வரவேற்போம். என்னை நம்பு வல்லபி” என்றார் உணர்ச்சி பொங்க கெஞ்சும் குரலில். அவர் கண்கள் கலங்கியிருந்தன.

மல்லிகாவின் கண்களிலும் உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் வழிந்தது. அவளும் வாய் குழற “ஆமாம் வல்லபி” என்றாள்.

விஷ்ணுவும், “நான் அத்தையை தினம் மதுரையில் இருந்து வந்து பார்த்துக் கொள்கிறேன். நீ கவலைப்படாமல் போய் வா” என்றான்.

கனகாவோ, “நானும் அம்மாவுடன் மூர்த்தி ஐயாவின் வீட்டிலேயே தங்கி விடுகிறேன். அம்மாவை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள்.

மல்லிகா, வல்லபியின் தலையைத் தடவி, நெற்றியில் முத்தமிட்டு. “போய் விட்டு வாடா” என்றாள்.

ல்லபியும் ஜெர்மன் சென்றாள். முனீச் என்னும் சிட்டியில் உள்ள ‘லட்விக் மேக்ஸ்மில்லன்’ (Ludwig Maxmillan) பல்கலைக்கழகத்தில் தான் பயிற்சி. அது ஜெர்மனியின் பவேரியா மாகாணத்தில் முனிச் நகரத்தின் பிரபல பல்கலைக்கழகம். வல்லபிக்கு அந்த பல்கலைக்கழகத்தைப் பார்த்து ஏற்பட்ட பிரமிப்பு அடங்க பல நாட்களாயின.

அந்தப் பல்கலைக்கழகத்திற்கு பயிற்சிக்கு வருமுன் ஜெர்மன் மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தாள். வல்லபிக்கு அது மிகவும் உதவியாக இருந்தது. ஜெர்மனியில் ஆங்கிலத்தை விட ஜெர்மன் மொழியைத் தான் மக்கள் அதிகம் பயன்படுத்தினர். பெர்லின், முனிச், ப்ராங்க்பர்ட், ஹனோவர் என்று முக்கியமான நகரங்களைச் சுற்றிப் பார்த்தாள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இவளுடன் பயிற்சி பெறும் நான்ஸி என்னும் இன்னொரு டாக்டருடன் சேர்ந்து முக்கியமான இடங்களுக்குப் பயணப்பட்டனர்.

நான்ஸி இட்டாலி நாட்டைச் சேர்ந்த பெண். தீவிர மேரி பக்தை. ஆனால் மற்ற மதத்தினரை இழிவுபடுத்த மாட்டாள். முக்கியமாக இந்தியாவும், மகாபாரதமும், இராமாயணமும் கட்டுப்பாடான இந்தியத் தலைவர்களையும் மிகவும் பிடிக்கும்.

அவர்கள் நாட்டுப் பெண்ணான சோனியா காந்திக்கு இந்தியாவில் கொடுக்கும் மரியாதை மிகவும் ‘அமேஸிங்’ என்று ஆச்சரியப்படுவாள். வேறு எந்த நாட்டிலும் இப்படி ஒரு தலைமைப் பதவி வேற்று நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கோ அவள் குழந்தைகளுக்கோ கிடைக்காது என்று தினம் ஒரு முறையாவது ஆச்சரியமாகக் கூறுவாள்.

அவர்கள் நாட்டிற்கு வல்லபி கட்டாயம் வரவேண்டும் என்றும், முக்கியமாக வெனிஸ் நகரத்தின் அழகைப் பார்க்க வேண்டும் என்றும் வற்புறுத்துவாள். ஆண்ட்ரியாடிக் கடலில் பிரிந்து நூற்றுக்கு மேற்பட்டத் தீவுகளை வாய்க்கால்கள் மூலமாக ரோடே இல்லாமல் இணைக்கப்பட்டிருக்கும் அந்த ஊரின் அழகையும், கொண்டாலா படகுச் சவாரியும் வாழ்நாளில் ஒரு முறையாவது அனுபவிக்க வேண்டும் என்று தன்னை மறந்து கூறுவாள்.

வல்லபி ஒரு நாள் விஷ்ணுவின் போட்டோவை அவளுக்குக் காட்டி “தன் வருங்காலக் கணவர்” என்றாள்.

“வல்லபி, நீ கட்டாயம் ஹனிமூனுக்கு இட்டாலி வரவேண்டும்” என்று வற்புறுத்தினாள்.

வல்லபி கலகலவென்று சிரித்து, “நான்ஸி, நீ டாக்டராக இருப்பதற்கு சமமாக ஒரு நல்ல கவிஞராகவும் இருக்கிறாய்” என்று விளையாட்டாகக் கூறுவாள்.

“ஆம் வல்லபி, எனக்குக் கூட இந்தியாவின் கங்கையாற்றைப் பார்க்க வேண்டும் என்று மிக ஆவல். அதன் வேகத்தையும், தூய்மையையும்  ஆன்லைனில் படிப்பேன். அந்த ஆற்றினை கடவுளாகவே உங்கள் நாட்டு மக்கள் வணங்குகிறார்கள் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறேன். நான் இந்தியா வந்தால்‌‌ என்னை அங்கே அழைத்துச் செல்வாயா?” என்று ஆவலுடன் கேட்பாள் நான்ஸி.

“நானே இன்னும் கங்கையைப் பார்த்ததில்லை நான்ஸி. நீ சொன்ன பிறகு தான் எனக்கும் கங்கையைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் உண்டாகிறது. நீ கட்டாயம் இந்தியாவிற்கு வா. கங்கை முதல் காவிரி வரை எல்லா புண்ணிய நதிகளையும் பார்க்கலாம்” என்று வல்லபியும் கூறுவாள்.

தான் விசிட் செய்த இடங்களையும், அதன் விசேஷங்களையும் விஷ்ணுவிற்கும், மல்லிகாவிற்கும் வாட்ஸ் ஆப்பில் அனுப்பினாள். நான்ஸியின் புகைப்படத்தையும், அவள் பாய் பிரண்டின் போட்டோவையும் அவர்களுக்கு அனுப்பினாள்.

படிப்பும், ஊர் சுற்றலும், சந்தோஷமாகக் கழிந்தது. ஆல்ப்ஸ் மலையின் அடிவாரத்தில் நின்று நான்ஸியுடனும், வேறு சில நண்பர்களுடனும் அவள் அனுப்பிய புகைப்படம் ஒன்று மிக அழகாக இருந்தது. விஷ்ணு அதை மட்டும் பெரிது பண்ணி, வல்லபியின் வேறு சில புகைப்படங்களுடன் தன் மேஜை மேல் வைத்துக் கொண்டான்.

இந்த “வல்லபி” நாவல் அச்சுப் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. நாவலை வாங்க விரும்பும் வாசகர்கள், கீழே பகிர்ந்துள்ள ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின் QR Code Scan செய்து தொகையை செலுத்தி Screen Shot எடுத்து, 77082 93241 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியுடன் பகிருங்கள். விரைவில் புத்தகம் உங்களை வந்து சேரும். அல்லது 77082 93241 என்ற எண்ணில் அழைத்தும் ORDER செய்யலாம். நன்றி

(தொடரும் – திங்கள் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

குடம்பி (சிறுகதை) – ✍ நிழலி

அனல் மழை (சிறுகதை) – ✍ புனிதா பார்த்தி