in

அனல் மழை (சிறுகதை) – ✍ புனிதா பார்த்தி

அனல் மழை (சிறுகதை)

நவம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

நேற்றைய இரவில் அவன் உறக்கம் கொள்ளவில்லை என்பதன்  அடையாளமாய் சிவந்து சோர்ந்திருந்தன வேலவனின் கண்கள். விடியல் பொழுதில் இருந்தே அவன் விழிகள் வானத்தை நொடிக்கொருமுறை நிமிர்ந்து பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டன.

கடந்த இரண்டு வாரங்களாக இதே புதன்கிழமை அடித்து ஊற்றிய மழை, வாரச் சந்தையில் விற்பனைக்காகத் தான் போட்டிருந்த காய்கறிகள் முழுவதையும் பலியாக்கித் தன் வயிற்றில் அடித்த வலி இன்னும் முழுதாய் அவன் மனதிலிருந்து அகன்றிருக்கவில்லை.

பகலவன் பாந்தமாய் தன் கதிர்களை வீசியதில் வேலவனின் மனதில் லேசாய் ஒரு தென்றல் வீசிச் சென்றது. சிவந்த விழிகளை இருக்கமாய் மூடி இறைவன் முன் கையெடுத்துக் கும்பிடுகையில் லேசாய் அவன் தொண்டை விம்மியது அவனுக்காக மட்டும் அல்ல. கையிருப்பு என்று எதுவும் இல்லாமல், கடன் மட்டுமே இப்போதைய இருப்பாகியிருந்தது.

இன்றைய சந்தை வியாபாரம் தான் கடனைத் தளர்த்தி கரை சேர்க்க ஒரே வழி.  இருள் விலக்கிய கதிரவனையும் இறைவனையும் மனதில் நிறுத்தி, வாடகைக்கு வண்டியை எடுத்துக் கொண்டு இன்றைய வாரம் சந்தைக்குத் தேவையான காய்கறிகளை வாங்கப் புறப்பட்டான்.

போன வாரம் கடன் வாங்கிப் போட்ட முதல், மொத்தமாய் சறுக்கிக் கொண்டு போய், கடன்காரனை இன்னும் கடனாளியாக்கியிருந்த வேதனை  அவனைத் தளர்வடையச் செய்திருந்தது. வண்டி மீது அமர்ந்து சென்றவனின் கரத்தில் உரைத்த கதிரவனின் சூடு கொஞ்சம் குறைந்தாலும் அவன் மனதிற்குள் படபடவென வியர்த்துக் கொட்டியது. 

பக்கத்து டவுன் மொத்தக் காய்கறி குடௌனில் இறங்கி வாயிலில் நின்றவனைப் பார்த்தும் பார்க்காதது போல மற்றவர்களுக்கு பில் போட்டுக் கொண்டிருந்த முதலாளியின் புறக்கணிப்பு, ‘இன்று உனக்கு காசில்லாமல் காய்கறி தர முடியாது, முதலில் இங்கிருந்து ஓடு’ என்பதைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது. 

“அண்ணே, அண்ணே” என ஐந்து நிமிட இடைவெளிகளில் வேலவன் அழைத்த அழைப்புகளுக்கு பதினைந்தாவது நிமிடம் நேருக்கு நேராய் நிமிர்ந்து பார்த்த கடை முதலாளி, “ச்சே போ” எனப் பக்கத்தில் கத்திக் கொண்டிருந்த காகத்தை விரட்டியபடி, உள்ள போ என்பது போல வேலவனிடம் கண்ணைக் காண்பித்தார். 

‘ச்சே போ’ என்பது காகத்திற்கான உத்தரவு மட்டுமல்ல என்பது புரிந்தும் அலட்சியத்தின் உட்சத்தில் இருந்த அவரின் பார்வையை ஏற்றுக் கொண்டு குடௌன் வாசலில் ஏறிய வேலவன்,  “அண்ணே போன வாரம் சந்தை போட்ட அன்னைக்கும் ஒரே மழை, இந்த வாரம்…..“ என அவன் முடிப்பதற்குள், 

“உன் கதையெல்லாம் கேட்க எனக்கு நேரமில்ல, இது தான் கடைசி, காசு இல்லேன்னா அடுத்த வாரம் வந்து கடை முன்னாடி நிக்காத” என்றவர், சத்தமில்லாமல் ஏதோ முணுமுணுத்துக் கொண்டார்.

அதில் நிச்சயமாக ஏதோ கெட்ட வார்த்தை பயணப்பட்டிருக்கும் என்பது மட்டும் வேலவனுக்குப் புரிந்தது. கெட்ட வார்த்தையைத் தன் காதில் விழாதபடி உச்சரித்த முதலாளியின் பெருந்தன்மையை எண்ணிப் பெருமூச்சு விட்டபடி அந்தக் காய்கறிக் கடலுக்குள் நுழைந்தவன், சில பல மூட்டைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு, எரித்து விடும் படியான குடௌன் முதலாளியின் பார்வைக் கணையைத் தாங்கியபடி புறப்பட்டான்.

மதியத்தைத் தாண்டிய அப்பொழுதில் கதிரவனின் ஒளி, மிளகாய் பொடி போல் காரமாய் உடல் மீது உரைத்தது. 

“எப்பா, என்னா வெயிலு மண்டையைப் பொளக்குது, அடிக்குற வெயிலுக்கு பொழுது சாய மழை கொட்டப்போகுது போல, நீ வேலைய வேகமா முடிச்சுட்டு வந்து சேரு” என்ற வண்டிக்காரனின் போன் உரையாடல் அபசகுனமாய் வேலவன் காதில் வந்து விழ, ‘இன்றைக்கு வர முடியாது’ எனச் சொல்லிச் சென்ற பழைய வண்டிக்காரனை நினைத்து நொந்து கொண்டான்

மாலை ஐந்து மணி அடித்திருந்த போது, அந்தச் சந்தைக் கூடத்தில் இடி முழக்கம் கூட ஊசி விழும் சத்தமாகும்படி, வியாபாரிகள் தத்தம் விற்பனைப் பொருட்களோடு, தங்களுக்கான இடத்தில் கூச்சலிட்ட படி பொருட்களை அடுக்கி வைப்பதுமாய், ஒரு துளி இடத்தைத் தெரியாமல் களவாட முயன்ற பக்கத்து வியாபாரியுடன் சண்டைக்கு போவதுமாய் அந்த இடம் அல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.

தனக்கான இடத்தில் காய்கறிகளைப் பிரித்து அடுக்கி வைத்தான் வேலவன்.  அவனுக்கு பக்கத்து இடத்தில் எப்போதும் வந்து புதினா, கொத்தமல்லி கடை போடும் தாத்தாவின் மீது அவனுக்கு அளவற்ற கரிசனம் உண்டு. அதற்கு காரணம், அவர் வயது மட்டுமே அல்ல.

ஓடி உழைத்து, ஊர் மெச்சப் பிள்ளைகளைக் கரை சேர்த்த வெள்ளந்தி மனிதன், பெற்ற பிள்ளைகளாலே வஞ்சிக்கப்பட்டு இன்று அன்றாடச் சோற்றுக்கு அல்லாடி, மற்ற சந்தைகளில் எல்லாம் இடம் கிடைக்காமல், இந்தப் புதன் கிழமை சாயங்காலச் சந்தை ஒன்றை மட்டுமே நம்பி வாழ்வதாலும் மட்டுமல்ல, ஐந்து, பத்து இலாபத்துக்கு விற்றாலும், வாங்க வருபவர்களின் முகத்தை வைத்துக் கணித்து, “போதும்த்தா, போதுமையா, அஞ்சு ரூபா மட்டும் குடுத்துட்டு புதினாக்கட்ட எடுத்துட்டுப் போ” எனப் பத்து, இருபது ரூபாய் புதினாக் கட்டுக்களை புன்னகைத்தபடி கொடுக்கும் அவர் மனம் தான் முதன்மைக் காரணம். 

காய்கறி குடௌன் முதலாளிக்கு மனமில்லாமல் போனாலும் வேலவனுக்கு காய்கறி கடனாய் கிடைத்தது அவன் வாலிபன் எனும் வசதியால் இருக்கலாம்.

‘புதினாத் தாத்தா இன்றைய வாரத்திற்கு என்ன செய்வார்?’ என்ற கேள்வி வேலவனின் மனதுக்குள் லேசாய் தைக்க,  “இன்னைக்காவது உயிர் மிஞ்சுமா, இல்ல மழை பறிச்சுட்டுப் போயிருமாயா?” எனக் கேட்டபடியே புதினாக் கட்டு மூட்டையோடு வேலவனுக்கு அருகில் வந்திருந்தார் தாத்தா. 

அவர் முதுகில் சுமந்து வந்த புதினா மூட்டையை இறக்கி வைத்த வேலவன், “மேகக் கூட்டம் கண்ணுக்குத் தட்டுப்படல தாத்தா மழை வராது, தைரியமா இருப்போம்” என்றபடி அடுக்கி வைத்தவன், காய்கறிக் குவியலுக்கு இடையில் வைத்திருந்த சிறிய சாமிப்படத்தை கைக்கூப்பி மனமார வேண்டிக் கொண்டான். 

“பிச்சை எடுக்குறாப்ள கெஞ்சிக் கூத்தாடி இந்த மூட்டையை வாங்கிட்டு வந்துருக்கேன் வேலவா, ராத்திரி காசோட போலேனா, காலையில தோளப் புடிச்சு கடைக்கு வெளிய தள்ளுனவன், காலால எத்தித் தள்ளுனாலும் தள்ளிப்புடுவான்” என்றவரின் கையோடு, குரலும் நடுங்கியது. 

“இன்னைக்கு கண்டிப்பா பை நிறைய காசோட போவ தாத்தா” என வேலவன் சொல்லிக் கொண்டிருக்க, கொஞ்சம் கொஞ்சமாய் மக்கள் உள்ளே தலையெடுக்க ஆரம்பித்திருந்தன.

சந்திக் கடவைக் கண்டவுடன் கூச்சலிடும் ரயில் போல, மக்களின் தலையைக் கண்டவுடன், “அக்கா வாங்கக்கா, அண்ணே வாங்கண்ணே, வெங்காயம் கிலோ முப்பது, தக்காளி கிலோ இருபது, உருளைக்கிழங்கு கிலோ பதினைஞ்சு” என அடுக்கிக் கொண்டே தொண்டைத் தண்ணீர் வற்ற கத்த ஆரம்பித்தான்.

ஒரு பெண், ஒரு ஆண், அடுத்து இரண்டு பெண்கள் என விற்பனை தொடங்கியிருக்க, அவன் மனதுக்குள் லேசாய் நிம்மதி ஊடுருவியிருந்தது.

“என்னத்தா அஞ்சு ரூபாய்க்கு எவ்வளவு குடுக்க முடியும்?” என சொல்லிக் கொண்டே, குழந்தையோடு நின்றிருந்த அப்பெண்ணிடம், புதினாக் கட்டை அவிழ்த்துக் கொடுத்த தாத்தாவுடன் ஒரு நிம்மதிப் பார்வையை பரிமாறிக் கொண்டவன், சரித்து எடுத்த வெங்காயக் குவியலை மீண்டும் சரி செய்து வைத்த போது, எழுந்திருந்த கூச்சல் கொஞ்சம் அதிகப்பட்டது போலத் தோன்ற திரும்பிப் பார்த்தான்.

கொண்டு வந்த பைகளால் தலையை மறைத்து மண்ணைக் கொத்த விழுந்த மழைத் துளிகளை மறைத்தபடி சில மக்கள் நின்ற காட்சி அவன் இதயத்தை லேசாய் உலுக்கியது. படபடவென மனம் அடித்துக் கொள்ள, வேகமாய் தார்ப்பாயை இழுத்து முதலில் தாத்தாவின் புதினாக் கட்டுகள் மீது கட்டிவிட்டு, தனது காய்கறிகளை மறைத்து கட்டத் துவங்கிய போதே, தூறிய மழை, தெப்பமாய் மாறியிருந்தது.

சந்தை வாயிலுக்கு வந்த சனம், சாரை சாரையாய் திரும்பச் செல்ல, மக்கள் குவிந்திருந்த சந்தை, சகதி சேர்ந்து வெறிச்சோடியது. நேரம் கடந்து, இருள் சூழ்ந்த போதும், தேடி வந்த மழைக்கு திரும்பிச் செல்ல விருப்பம் இல்லை.

இரவாகிவிட்ட இப்பொழுதில் இனி மக்கள் வரவும் வாய்ப்பில்லை. இனி இங்கு பரப்பிக் கிடக்கும் காய்கறிகளை மழை சகதியோடு அள்ளிக் கொண்டு போக வேண்டும். உலர்த்தக் கூட இடமில்லாமல் ஒட்டிப் போகும் காய்கறிகளை காலை ஐந்தாறு காய்கறிக் கடைகளிலாவது ஏறி இறங்கி அடிமாட்டுக்கும் குறைவான விலையில் விற்க வேண்டும். அருகிலிருக்கும் புதினா தாத்தாவிற்கு அதற்கும் வாய்ப்பு இல்லை.

எத்தனை பிரயத்தனம் செய்து வைத்தாலும், காலை கருமை பூசி பாதி அழுகிவிடும் புதினா, கொத்தமல்லி கட்டுக்கள். வேண்டாத எதிரி எவனோ பணம் கொடுத்து சொல்லி அனுப்பியது போல், மூன்றாவது வாரமாய் இன்றும் மழை அடி மடியில் கை வைத்து விட்டதை நினைத்து, தலை நிறைய விழுந்த தண்ணீர் முடியிலிருந்து மண்ணுக்குச் சேரும்படி தலை குனிந்து அமர்ந்த வேலவனுக்கு அருகிலிருந்த தாத்தாவைத் திரும்பிப் பார்க்க பயமாக இருந்தது.

இத்தனை நேரம் குளிர் மழையில், இடப்புறம் இருந்து அனலாய் வீசிக் கொண்டிருந்த ஒரு மூச்சுக் காற்று காணாமல் போயிருந்ததாய் அவன் மனம் உணர, அவர் புதினா விற்ற ஐந்து ரூபாய் நாணயம் உருண்டு வந்து தண்ணீரில் சலக் என விழுந்தது.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. “Intha anal mazhai kathaiyum, arumaiyaaga varainthuLLa free style vaNNa oviyamum jOre thaan !!! Thirumathi. Punitha Paarththiyin kathai ‘Anal Mazhai’-kkup paaraattukkaL. Nam whole-sale ‘KOyambEdu Chanthai’ palich enRu ninaivukku varuGinRathu. Eppadi varaamal irukka mudiyum?

    -“Mandakolathur Subramanian”.
    Chapel Hill, N.CarOlina, USA.

வல்லபி ❤ (பகுதி 15) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

அவள் ஒரு தேவதை (சிறுகதை) – ✍ சித்து அம்மாசி, சேலம்