நவம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
அனுபமா… சீக்கிரம் வேலையை முடித்து விட்டு கிளம்ப வேண்டும் என்று அவசர, அவசரமாக ஒய்யாரமாக மாறி மாறி நின்றாள். கேமராவின் கண்கள் அவளை அழகாக விழுங்கி கொண்டிருந்தது.
அஸ்வினும் சிறிதும் சோர்வடையாமல் போட்டோக்களை எடுத்த வண்ணம் இருந்தான். ஏனெனில், இந்த வேலையை இன்று இரவிற்குள் முடித்து விளம்பர கம்பெனிக்கு அனுப்ப வேண்டும்.
“ஓகேவா அஸ்வின்…ஷேல் ஐ மூவ்”…
“ஓகே அனு… பட் நீ எப்படி போவ…”
“இதத்தான் நான் ஹாஸ்டல்ல இருந்து கெளம்பும் போது கேட்டேன். என்ன பண்ண ஆட்டோலதான் போனும்..”
“சரி ஓகே… பத்ரமா போ..நான் போய் எடிட்டிங் வேலைய பாக்கறேன். 12 மணிக்குள்ள பிக்சர்ஸ்லாம் எடிட் பண்ணி அனுப்பனும், மணி இப்பவே 11 ஆயிடுச்சு” என பரபரத்தான்.
இவள் சரியென விடைபெற்று கிளம்பி விட்டாள்.
அனு ஒரு விளம்பர மாடல், அஸ்வின் அவளின் நண்பன். அது ஒரு வளர்ந்துவிட்ட நகரம், எனவே இரவு ஆட்கள் நடமாட்டம், இரவு வேலை என அனைத்தும் சகஜம்.
இவனது ஸ்டூடியோ கொஞ்சம் இன்டீரியர், அதனால் ஆட்கள் நடமாட்டம் குறைவு. கால் டாக்ஸியும் அவ்வளவு எளிதில் கிடைக்காது.
அனுபமா பஸ் ஸ்டாப் வந்து நின்றாள், யாருமே இல்லை. ஒரு சில இரு சக்கர வாகனங்கள் கடந்து போயின. இவளது ஹாஸ்டல் போக 15 நிமிடம் பயணம் செய்ய வேண்டும். காத்திருந்தாள். ஆட்டோ வருவதாக தெரியவில்லை.
அஸ்வினை டிராப் செய்ய சொல்வோம் என மொபைலை எடுத்தாள். வேண்டாம் அவனுக்கு வேலை இருக்கும். நல்ல திறமைசாலி. அவனுக்கான அடையாளம் கிடைக்க போராடும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன். அவனை தொல்லை செய்ய வேண்டாம் என மொபைலை வைத்து விட்டாள்.
அவள் அருகே ஒரு பெண் வந்து நின்றாள். பக்கத்தில் உள்ள ஐ.டி கம்பெனியின் ஐடி கார்டு அணிந்திருந்தாள். அழகாக இருந்தாள். அனுபமாவை பார்த்து ஸ்நேக புன்னகை வீசினாள். இவளுக்கும் அவளை எங்கேயோ பார்த்த நியாபகம்.
“ஹாய்…உங்க நேம் என்ன?”
“ஐ யம் அனுபமா.. உங்க பேர் என்ன?”
“என்னோட நேம் ஷிவானி. இங்க இருக்க ஐ.டி கம்பெனில வேல பாக்கறேன். யூஷ்வலா கேஃப்ல போயிடுவேன். இன்னைக்கு டிரைவர் லீவ், ஸோ அப்பாக்கு கால் பண்ணேன். ஒரு 10 நிமிஷத்துல வந்துடுவாரு. நீங்க?”
“நான் ஒரு ஜுவல்லரி ஷாப்ல ரிசப்ஷனிஸ்ட்டா இருக்கேன். மாடலிங் என்னோட விருப்பம். அதுக்கு ஒரு போட்டோ ஷூட்காக இங்க ப்ரண்ட் ஸ்டூடியோக்கு வந்தேன். நேட்டிவ் கும்பகோணம் இங்க ஒரு ஹாஸ்டல்ல தங்கி வேல பாக்கறேன்”
“ஓஓஓ… ஓகே ஓகே. நேட்டிவ்லயே வொர்க் பண்ணலாம் இல்ல.
“இல்ல அங்க சம்பளம் கம்மி. குடும்ப சூழ்நிலை, அதனால இங்க வொர்க் பண்றேன்”
“ஓகே ஓகே..” என்றாள் ஷிவானி
இவர்கள் இருவரும் உரையாடுவதை ரோட்டில் போவோரும், வருவோரும் வித்தியாசமாக பார்த்து சென்றனர்.
“இப்போ நீங்க லேட்டா வரத ஹாஸ்டல் வார்டன்ட்ட சொல்லீட்டிங்களா?”
“இல்லப்பா… அவங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்”
“பரவாயில்ல ஜஸ்ட் இன்ஃபார்ம் பண்ணுங்க. உங்க சேப்டிக்கு” என்றாள் ஷிவானி.
இவளுக்கும் மறுக்க தோன்றவில்லை. வார்டனுக்கு கால் செய்து விவரம் தெரிவித்தாள்.
வார்டனும், “சரி சரி பத்ரமா வா… ஆட்டோ நம்பர் நோட் பண்ணி எனக்கு சென்ட் பண்ணுனு” கூறிவிட்டு வைத்து விட்டார்.
வார்டனின் அக்கறையில் மனம் மகிழ்ந்தவள், ஷிவானிக்கு நன்றி தெரிவித்தாள்.
தூரத்தில் ஆட்டோ ஒன்று வந்தது. அனு கைக்காட்டினாள். பின் திரும்பி ஷிவானியிடம் விடைபெற்றாள். அவளை பத்திரமாக போகச் சொல்லிக் கொண்டே இருக்கும் போது ஆட்டோ டிரைவர் அவசரபடுத்தவும் ஆட்டோவில் ஏறி கிளம்பினாள்.
தான் போக வேண்டிய இடத்தை ஆட்டோ டிரைவரிடம் கூறும் போது…
“என்ன, பொண்ணுமா நீ, உனக்கு விவரமே தெரியாதா. போன மாசம் இங்க ஒரு பொண்ண கூட்டு பலாத்காரம் பண்ணி கொன்னுட்டாங்க படுபாவிங்க. அந்த பொண்ணோட ஆவி நடமாடறதா பேச்சு… நீயும் அதுக்கு தகுந்த மாதிரி தனியா நின்னு பேசிட்டு இருக்க” என ஆட்டோ டிரைவர் கூறவும், அனுவிற்கு தூக்கி வாரி போட்டது.
“தனியா பேசிட்டு இருந்தேனா” என முனுமுனுத்துக்கொண்டு பஸ் ஸ்டாப்பை திரும்பி பார்த்தாள். ஆம், அங்கே யாருமே இல்லை. ஒரு மாதத்திற்கு முன் அப்பெண்ணின் முகத்தை நியூஸ் பேப்பரில் பார்த்தது நியாபகம் வந்தது அனுவிற்கு.
“ஆமாம்மா… அந்த ஆவி வயசு பொண்ணுங்க கண்ணுக்கு மட்டும் தெரியறதா பேசிக்கிறாங்க. இனி இங்கலாம் நைட் டைம்ல நிக்காதம்மா” என அறிவுரை கூறிக் கொண்டிருந்தார்.
‘அவள் ஆவி இல்லை, அவள் ஒரு தேவதை’ என அனு தனக்குத் தானே கூறிக் கொண்டாள்.
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings