நவம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
அரசு மருத்துவ கல்லூரியின் பின்புறம் அமைந்திருந்தது அந்த இருளடைந்த அறை. ‘பிணவறை’ நீல நிற போர்டில் வெள்ளை எழுத்துக்கள் மங்கி… உயிர் நீங்கினால் மனிதனுக்கும் இந்த மரியாதை தான் என்று சொல்வதைப் போல ஒரே ஒரு ஆணியில் சிரமப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தது.
ஒரு சின்ன 40 வாட்ஸ் பல்பு, அரைகுறை வெளிச்சத்தை உமிழ… பாதி இருளில் மூழ்கி இருந்த அந்த அறை, பார்ப்பவர் மனதில் ஒரு பீதியை உண்டாக்கியது.
அந்த அறைக்கு பொறுப்பாளன் மூர்த்தி, பக்கத்திலிருந்த ஒரு கல் பெஞ்சில் மதுவின் மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தான். உயிரற்ற அந்த உடல்களின் பாதுகாப்பிற்கான பெட்டகத்தின் சாவி மூர்த்தியின் இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்தது.
மெதுவாக தயங்கித் தயங்கி, வந்த அந்த உருவம் மெல்ல மூர்த்தி அருகில் வந்தது. அவனை இலேசாகத் தட்டி பார்க்க எந்த சலனமும் இல்லை. மெதுவாக சாவியை அவன் இடுப்பில் இருந்து உருவிக் கொள்ள… மூர்த்தி லேசாக அசைந்து விட்டு தூக்கத்தை தொடர்ந்தான்.
பிணவறை வாசலை நோக்கி நடந்த அந்த உருவத்தின் நடையிலேயே ஒரு பயமும் தயக்கமும் தெரிய… தயங்கி… பின் அறை வாசலை நெருங்கி, பூட்டின் வாயில் சாவியை போட்டு திருகியது.
அரசு மருத்துவக் கல்லூரி விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று முதல் வருட மாணவர்கள் சீனியர் மாணவர்களால் மலர் கொடுத்து வரவேற்கப்பட, வாழ்த்துரை வழங்க, மேடை தயாராக இருந்தது. கல்லூரி டீன் முதல் எல்லா துறையின் பேராசிரியர்களும் ஆஜராகியிருந்தனர்.
‘ராகிங்’ என்ற பெயரில் சீனியர் மாணவர்கள் புதிதாக வருபவர்களை ஒரு வழி பண்ணி விடுவார்கள். அதை தடுக்கவே சுமுகமான ஒரு அறிமுகமாக விழா நடத்தப்பட்டு வந்தது.
பேராசிரியர் முதல் வருட மாணவர்களை வரவேற்றுப் பேசினார். மருத்துவ உலகத்திற்கு அவர்களுடைய சேவை, அர்ப்பணிப்பு உணர்வு, இவற்றின் தேவையைப் பற்றி பேசிவிட்டு இறுதியாக விஷயத்திற்கு வந்தார்.
“சீனியர் மாணவர்கள், தற்போது சேர்ந்துள்ள புதிய பேட்ச் மாணவர்களை பரிவுடன் நடத்தி, அவர்களுக்கு வழிகாட்டுமாறு வேண்டிக் கொள்கிறோம். ராகிங் இல்லா கல்லூரியாக நம் கல்லூரி திகழ வேண்டும் என்பது எங்கள் ஆவல்” என்று கூற, சீனியர் மாணவர்கள் எல்லோரும் பெஞ்ச்சை தடதடவென்று தட்டி, விசில் ஒலியெழுப்பி ஓவென்று கூக்குரலிட்டனர்.
டீன் எழுந்து கூச்சலிடும் மாணவர்களை கையமர்த்தி விட்டு.. “புதிதாக சேரும் முதலாமாண்டு மாணவர்களின் நலன்கருதி ‘ஆன்ட்டி ராகிங் கமிட்டி’ ஒன்று அமைக்கப்படுகிறது, அதில் மூத்த பேராசிரியர்கள் இடம் பெறுவார்கள். முதலாமாண்டு மாணவர்கள் தங்கள் குறைகளை அவர்களிடம் தெரிவிக்கலாம். அவர்கள் அவ்வப்போது ஹாஸ்டலை விசிட் பண்ணுவார்கள். சீனியர் மாணவர்கள் ஜுனியர்களை ராகிங் பண்ணுவது அறியப்பட்டால் அவர்கள் மேல் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்”
டீன் தனது பேச்சை முழுமையாக முடிக்கும் முன்னரே சீனியர் மாணவர்கள் பெஞ்சை தட்ட, டீன் மேடையிலிருந்து இறங்கி தன் அறையை நோக்கி நடந்தார்.
முதலாமாண்டு மாணவர்கள் மனதில் ராகிங் பயம் பிடித்தாட்டியது. எவ்வளவு கண்காணிப்பு இருந்தாலும் முதல் மூன்று மாதங்கள் மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் நடப்பது… முதலாமாண்டு மாணவர்கள் சீனியர்களிடம் மாட்டிக் கொண்டு முழிப்பது… எல்லாம் வழக்கமாக ஒன்றுதான்.
பேராசிரியர்களின் பேச்சால் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை என்று புரிந்தாலும், அது ஒரு நடைமுறை நிகழ்வாகவே நடந்து முடிந்தது.
மரத்தடியில் காத்திருந்த மருதப்பன் தன் மகன் தங்கராசுவைப் பார்த்ததும் முகம் மலர்ந்தான்.
“ஏலே ராசா… கூட்டமெல்லாம் முடிஞ்சிருச்சா? டாக்டர்மாருங்க எல்லாம் பேசிட்டு போறதப் பாத்தேன். ரொம்ப பெருமையாயிருந்துச்சு. ‘என் மவன் அஞ்சு வருஷம் கழிச்சு இதே மாதிரி வெள்ளை கோட்டு போட்டு, கழுத்துல ஸதாஸ்கோப்ப மாட்டிகிட்டு டாக்டரா வெளிய வருவான்னு நினைச்சு பாக்கயிலயே மனசெல்லாம் பூரிப்பாயிருக்கு…”
“அப்பா.. இந்த சீனியர் மாணவர்கள் ராகிங் பண்ணுவாங்கன்னு எல்லாருக்குமே ஒரு பயம். ஹாஸ்டல்ல இருக்கத்தான் பயமாயிருக்கு”
“நீ ஒன்னும் பயப்படாத அப்பு.. நீ ஊர்ல எவ்வளவு தைரியமான ஆளு… உன்ன கண்டா மத்த பசங்க எப்படி பயப்படுவாக… அந்தப் பையல்க ஏதும் வம்பு பண்ணா பெரிய டாக்டர்கிட்ட சொல்லு… தனியாக வீடு எடுத்துக் கொடுக்கிற அளவுக்கு எனக்கு வசதி இல்லையே” என்றார் வருத்தத்தோடு.
“அதுக்காக சொல்லலப்பா… நான் சமாளிச்சுகிடுவேன்” என்றான் தங்கராசு.
தங்கராசு சிறுவயது முதலே படிப்பில் கெட்டி. பிளஸ் 2வில் நல்ல மார்க் வாங்க, எளிதாக மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.
பையன் படிப்பில் கெட்டியாக இருப்பதால் டாக்டராக்க வேண்டும் என்பது அந்த குடும்பத்தின் ஒட்டுமொத்த கனவாக இருந்தது. அதுவே இன்று தங்கராசுவை மருத்துவக் கல்லூரியில் கொண்டு வந்து நிறுத்தியது.
ஆயிரம் கனவுகளுடன் இருக்கும் அப்பாவையும், தன்னுடைய படிப்புக்காக மொத்த குடும்பமும் பண்ணிய தியாகமும் மனதில் வர, நன்றாக படித்து முதல் மதிப்பெண் பெற்று சிறந்த மருத்துவராக வேண்டும் என்ற உத்வேகம் அவனுக்குள் கிளம்பியது.
இரவு சாப்பாடு ஹாஸ்டலில் 7 மணி வரை என்பதால், தங்கராசுவும், மற்றவர்களும் சீக்கிரமாக சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர்.
அப்போது அங்கே வந்த பேராசிரியர் “என்னப்பா… சீனியர் மாணவர்கள் உங்களை ஒன்றும் தொந்தரவு பண்ணலியே.. ஏதாவது வேணும்னா இந்த போன் நம்பர்ல என்ன கூப்பிடுங்க” என்று ஒரு போன் நம்பரை கொடுத்துவிட்டு நகர்ந்தார்.
ப்ரொஃபஸர் திரும்பும் வரை அமைதியாக இருந்தது கேம்பஸ். அவர் போனதும் சீனியர் மாணவர்கள் இவர்களை அழைத்தனர்.
“டேய்! என்ன ப்ரொஃபஸர் எதோ ஓதிட்டுப் போறார்… நீங்க எங்களை தாண்டி அவர்கிட்ட ஒன்னும் சொல்லிட முடியாது. நாங்க அனுபவிச்சிருக்கோம்ல… எங்களை முதல் வருஷம் சீனியர்கள் என்ன பாடு படுத்தினாங்க. நீங்க மட்டும் அனுபவிக்கலைன்னா எப்படி? நாங்க ஆளுக்கு ஒன்னு சொல்லுவோம், அத செய்யணும்” என்று ராகிங் பண்ண ஆரம்பித்தனர்.
சட்டையை கழற்றி, பேண்டைக் கழற்றி, ஜட்டியோடு நிற்க வைத்தனர். அப்படியே ஜோடியாக டான்ஸ் ஆடச் சொன்னார்கள். டான்ஸ் ஆடும்போது ஒரு வாளி குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு வந்து மேலே அடிக்க, அந்த குளிருடன் அரை நிர்வாணமாக ஆடுவது அவமானத்தைத் தர, மாணவர்கள் கூசிக் குறுகிப் போயினர்.
ஒரு மணி நேரம் அவர்களை ஒரு வழி பண்ணிய பிறகே அடுத்த பிளாக்கை நோக்கி நகர்ந்தனர் அந்த சீனியர்கள்.
தங்கராசு சங்கரிடம், “சங்கர் நம்ம ப்ரொபசர் தான் நம்பர் கொடுத்திருக்காரே, பேசாம அவர்கிட்ட இன்னைக்கு நடந்தது சொல்லுவோமா?”
“நீ புரியாம பேசற ராசு… இதை இத்தோட விட்டோம்னா பேசாம இருப்பாங்க… இதை போய் நாம கம்ப்ளைண்ட் பண்ணிணோம்னா அவ்வளவுதான். நாளைக்கு இன்னும் கொஞ்சம் வச்சு செய்வாங்க…”
“சீனியர்னா என்ன அவங்களும் நம்மள மாதிரி படிக்க வந்தவங்க.. நம்மள இந்த மாதிரி கேவலப்படுத்துறதுக்கு இவங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு?” என்றான் லேசான எரிச்சலோடு.
கிராமத்தில் எதையும் தட்டிக் கேட்கும் அதிகாரத்தோடு வளர்ந்த தங்கராசுவுக்கு இந்த மாதிரி அடங்கிப் போய் அவமானப்படுவது மனசுக்கு கஷ்டமாக இருந்தது. முதல் நாளே இந்த கசப்பான அனுபவத்தால், எப்படி இந்த ஐந்து வருடத்தை முடிக்க போகிறோம்? என்ற ஒரு மலைப்பு மனதுக்குள் தோன்றியது.
அடுத்த வந்த நாட்களிலும், ஒவ்வொருவிதமாக தினமும் ராகிங் சித்திரவதைகள் தொடர, தங்கராசு தன்னிடம் பிரியமாக இருந்த ப்ரொபசர் ராஜவேலுவிடம் சீனியர் மாணவர்கள் பண்ணும் கொடுமைகளை பற்றி கூற, அவர் அதை ரிப்போர்ட்டாக எழுதி டீனிடம் கொடுத்து விட்டார்.
மறுநாள் தங்கராசு மற்றும் அவன் நண்பர்கள் சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது, சீனியர் மாணவர்கள் சூழ்ந்து கொண்டு, “என்ன குளிர்விட்டுப் போச்சா? எங்கள பத்தி கம்ப்ளைன்ட் பண்ணா உடனே எங்க மேல ஆக்சன் எடுத்து எங்களை காலேஜை விட்டு வெளியில அனுப்பிடுவாங்களா? இந்த கம்ப்ளைண்ட் எல்லாம் ஒண்ணுமில்லாம ஆக்குறது எப்படின்னு எங்களுக்கு தெரியும்… எங்க அப்பா பெரிய அரசியல்வாதி”
“நீ எங்க மேல கொடுத்த கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்கு, வாங்கினாலும் நாங்க சொல்றதை நீ செய்யணும் அதுதான் உனக்கு நாங்க கொடுக்கிற தண்டனை”
சங்கரும், மாதவனும், “டேய் தங்கராசு! பேசாம கம்ப்ளெய்ண்ட்ஐ வாபஸ் வாங்கி விடுவோம். இல்லேன்னா நம்மள நிம்மதியா படிக்க விடமாட்டாங்க. ஏதாவது பிரச்சனை பண்ணிகிட்டே இருப்பாங்க” என்றார்கள்.
அதற்குள் சீனியர் மாணவன் ராகேஷ்… “பசங்களா உங்கள்ல தைரியசாலி யாரு? அந்த கிராமத்தான் தங்கராசு வா?” என்றான் கேலியாக.
தங்கராசு லேசாக முறைக்க, “டேய்… கிராமத்தானுக்கு கோபம் வந்துடுச்சு… நாங்க சொல்றதை செய். செஞ்சுட்டேன்னா அதுக்கப்புறம் நீங்க இருக்கிற பக்கமே வர மாட்டோம்”
தங்கராசுவுக்கு இவர்களிடமிருந்து தப்பித்தால் போதும். இவர்கள் என்ன செய்யச் சொல்கிறார்களோ அதை செய்து விட்டுப் போய்விட வேண்டியதுதான் என்று தோன்றியது. அனாவசியமாக வம்பை வளர்க்க வேண்டாம் என நண்பர்கள் கூறுவது சரியாகவே பட்டது.
“சரி! என்ன செய்யணும் சொல்லுங்க… நீங்க சொல்றத நான் செஞ்சது பிறகு, நீங்க எங்கள தொந்தரவு பண்ண கூடாது”
“இது சூப்பர் டீல்” என்றான் ஹரீஷ்.
“அடே கிராமத்து தம்பி… நான் சொல்றத கேளு. நீயோ அல்லது உன் கூட்டாளி ஒருத்தனோ நாங்க சொல்ற இடத்துக்கு தனியா ராத்திரி 12 மணிக்கு போயிட்டு வரணும்”
“எங்க போகணும்?”
“இந்த காலேஜ்ல ஓரமா இருட்டா ஒரு அறை இருக்குது. மார்ச்சுவரி அதாவது பிணவறை, அதுக்குள்ள நிறைய பிணங்கள் வரிசையா அடுக்கி வைச்சிருப்பாங்க. நீங்க ராத்திரி 12 மணிக்கு அந்த மார்ச்சுவரி போய்… மூர்த்திகிட்டயிருந்து சாவிய எடுத்து திறந்து… ஒவ்வொரு பிணத்தோட முகத்தை மூடி இருக்கிற துணியை விலக்கி, ‘ஹலோ’ சொல்லிட்டு திரும்ப மூடணும். எத்தனை பிணங்கள் இருக்கோ அத்தனையும் முகத்தை பார்த்துட்டு… திரும்ப பூட்டி சாவிய மூர்த்திகிட்ட கொடுத்திடணும். உள்ள ஒரு செல்போன்ல வீடியோ செட் பண்ணி வைச்சிருப்போம். அதைப்பார்த்து நீங்க கரெக்டா முடிச்சாத்தான் உங்கள விடுவோம், இல்லேன்னா தினமும் டார்ச்சர் தான்” என்று பயமுறுத்தினர்.
தங்கராசு, மாதவன், சங்கர் மற்ற அனைவரும் அதிர்ந்து போயினர்.
‘இது எப்படி முடியும்? நடுராத்திரி 12 மணிக்கு பிணவறைக்கு போகக்கூடிய தைரியம் யாருக்கு வரும்? இருந்தாலும் தினமும் ராகிங் கொடுமையை விட இவர்கள் சொல்வதையே செய்து விட்டுப் போகலாம்’ என்ற முடிவுக்கு வந்தான் தங்கராசு.
“நீங்க சொல்ற மாதிரி நான் செய்யறேன். ஆனா நீங்க அதுக்கப்புறம் எங்க யார்கிட்டயும் உங்களுடைய ராகிங்க வச்சுக்க கூடாது” என்றான் மாதவனும் ஷங்கரும் அவசரமாக.
“வேண்டாம் தங்கராசு… இந்த ரிஸ்க் எடுக்க வேண்டாம். ராத்திரி 12 மணிக்கு பிணங்கள பார்க்கிற தைரியம் நமக்கு கிடையாது ” என மன்றாடினர்.
“இல்லப்பா இது நம்முடைய தன்மான விஷயம். நாளைக்கு நீங்க யாரும் வர வேண்டாம், நான் மட்டும் தனியா போய் அவங்க சொல்றபடி செஞ்சுட்டு வர்றேன்” என்றான்.
உடனே சீனியர் மாணவர்கள் அனைவரும் சம்மதிக்க, மறுநாள் இரவு 12 மணிக்கு தங்கராசு மட்டும் தனியாக பிணவறைக்கு செல்வது என்ற முடிவோடு நகர்ந்தனர்.
“தங்கராசு வேண்டாம். இது விஷப்பரீட்சை. உங்க வீட்டுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவாங்க…”
“டீன் கிட்ட போய் இப்படி சொல்றாங்கன்னு கம்ப்ளைன்ட் கொடுப்போமா?” என்றான் மாதவன்
“கொடுத்து என்ன பிரயோஜனம்? பெரிய அரசியல்வாதி விட்டு புள்ள, அதனால ஏதாவது ஒரு காரணம் சொல்லி தப்பிச்சுடுவான். நம்மள தான் பொய் கம்ப்ளைன்ட் கொடுத்ததா சொல்லி மன்னிப்பு கேட்க வைப்பாங்க… இதான் நடக்கும்” என்றான் கசப்பாக.
மறுநாள் இரவு, தங்கராசு மற்றும் அவன் நண்பர்களும், ராகேஷும் அவன் நண்பர்களும் ஒரு மரத்தடியில் குழுமினர். தூரத்தில் பிணவறை கண்ணில்பட்டது. 40 வாட்ஸ் வெளிச்சத்தில் இருளடைந்து இருந்த அந்த சூழலே மனதில் திகிலை கிளப்பியது.
தங்கராசு மனசில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டாலும், இப்படிப்பட்ட சூழல் அவனுக்கும் புதிது. உயிருள்ள மனிதர்களுடன் நேருக்கு நேர் போராடி நியாயத்தைக் கேட்டிருக்கிறான்.
பிணங்களின் அருகில் போய் பார்த்தது கிடையாது. இருந்தாலும் ராகேஷ் திட்டத்தை தவிடு பொடியாக்கி, தன்னுடைய வீரத்தை நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம் என்று மனதை தேற்றிக் கொண்டு பிணவறை நோக்கி நடந்தான்.
கல்பெஞ்சில் மூர்த்தி குடிமயக்கத்தில் ஆழ்ந்திருக்க, அவனிடமிருந்து சாவியை எடுத்துக் கொண்டு பிணவறை வாசலை நெருங்கினான் தங்கராசு.
அந்த இருட்டிலும், அந்த குளிரிலும் குப்பென வேர்த்தது. தான் எடுத்தது தவறான முடிவோ… ஒரு கணம் குடும்பம் அவன் கண் முன்னே வந்து சென்றது. சரி பாதிவழி வந்தாகி விட்டது, இனி பின்வாங்க முடியாது.
பூட்டை திறந்து கதவை மெல்லத் திறக்க, இதயத்தின் லப் டப் சத்தம் அவன் காதில் கேட்டது. அறையின் குளிர்ச்சியையும் மீறி வியர்வை ஆறாக ஓடியது.
தங்கராசு உள்ளே நுழைய… “ராகேஷ் அவன் உள்ளே போயிட்டான்… சொன்ன மாதிரி டாஸ்க்க முடிச்சிடுவான்” படபடத்தான் அவன் நண்பன்.
ராகேஷ் அவனிடம் கிசுகிசுப்பாக, “உள்ளே ஒரு ட்விஸ்ட் வைச்சிருக்கேன்… நீ கவலைப்படாத. அதுல பையன் மாட்டிக்குவான். அலறிகிட்டு ஓடி வருவான் பாரு” என்று சிரித்தான்.
என்ன பேசுகிறார்கள் என்று கேட்காவிட்டாலும், தங்கராசுவின் நண்பர்களுக்கு முதுகு தண்டு சில்லிட்டது. தங்கராசு பத்திரமாக வந்து விடவேண்டும் என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டனர்.
தங்கராசு உள்ளே நுழைய, வரிசையாக கட்டில்களில் ஒவ்வொரு பிணமாக கிடத்தப்பட்டிருந்தது. தலையிலிருந்து கால் வரை பச்சை நிற போர்வையால் மூடப்பட்டு இருந்தது. அந்த அறையின் குளிர்ச்சி மேலும் முதுகுத்தண்டை உறைய வைத்தது.
பயத்தில் படபடக்க… முதல் கட்டிலில் இருந்த பிணத்தின் முகத்திரையை எடுத்து பார்த்துவிட்டு ‘ஹலோ’ என்று சொல்லிவிட்டு மூடினான். சுற்றி முற்றி பார்க்க ராகேஷ் எங்கே செல்போனை வைத்து இருக்கிறான் என்று பிடிபடவில்லை.
பின் மெதுவாக அடுத்த கட்டிலில் போய் அடுத்த பிணத்தை முகத்தில் உள்ள போர்வையை விலக்கி ‘ஹலோ’ என்று சொல்லிவிட்டு மூடினான்.
மூன்றாவதாக திறந்தது விபத்தில் சிக்கிய உடல் என்பதால் முகம் விகாரமாக காட்சியளித்தது. தங்கராசுவுக்கு அதற்குமேல் தைரியமில்லை. வெளியே ஓடி விடலாமா என்று நினைக்கும் போது… இன்னும் இரண்டே இரண்டு கட்டில்கள் பாக்கி இருக்க… இதை முடித்து விட்டால் ராகேஷ் திமிரை அடக்கிடலாம் என்று நினைத்தவனாய், அடுத்த பிணத்தையும் முகத்தை திறந்து பார்க்க… அது ஒரு இளம் பாலகன். மனம் முழுக்க அதிர்ச்சியோடு நகர்ந்தான்.
கடைசி பிணத்தின் முகத்திரையை விலக்கும் போது “ஓஓஓஓ…” என்ற சத்தத்தோடு அந்தப் பிணம் எழுந்து உட்கார… தங்கராசு அப்படியே அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்தவாறு சாய்ந்தான்.
தங்கராசு ஒரு கணம் உணர்விழக்கும் முன் தன் குடும்பமும், தந்தையின் முகமும், மனக்கண்ணில் வர, மிகுந்த பயத்துடனும், வேதனையுடனும் கீழே சரிந்தான்.
அந்தக் கட்டிலில் இருந்து இறங்கி ஓடி வந்த ராகேஷின் நண்பன் ராகேஷை கையைத் தட்டி அழைத்தான். ராகேஷ் நண்பர்களும் ஓடிவர, “என்னப்பா அலறி அடிச்சுக்கிட்டு வருவான்னு பார்த்தா ஆள காணோம்” என்று சிரிக்க
ராகேஷின் நண்பன், “ஒவ்வொரு பிணமாக பயந்துகிட்டே பாத்துக்கிட்டு வந்தான். நான் எந்திரிச்சு உட்கார்ந்து கத்த… ஏதோ பிணம்தான் எழுந்து உட்கார்ந்துடுச்சுன்னு நினைச்சு பயந்து போய் மயங்கி கீழே விழுந்துட்டான்” என்று சிரிக்
தங்கராசுவின் நண்பர்கள் ஓடிவந்து அவனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு உலுக்க… அவன் உடல் அசைவற்று இருந்தது. உயிர் உடலைவிட்டுப் பிரிந்திருந்தது.
விளையாட்டாய் ஆரம்பித்த விஷயம் உயிர்ப்பலியில் கொண்டு வந்து நிறுத்தி விட்டது புரிந்ததும் ராகேஷும் அவன் நண்பர்களும் அந்த இடத்தை விட்டு சட்டென ஓடி மறைந்தனர்.
பலவித கனவுகளை சுமந்து கொண்டு அந்த கல்லூரியில் காலடி எடுத்து வைத்த அந்த கிராமத்துப் பயிர், நகரத்தில் நட்டு வைத்ததுமே கருகி விட்டது. ராகிங் என்னும் கொடுமையான செயலால் ஒரு ஒரு குடும்பத்தின் கனவே சிதைந்து போனது.
(பல வருடங்களுக்கு முன் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கதை எழுதப்பட்டது. இச்சம்பவத்திற்கு பிறகே கதையில் குறிப்பிடும் முதல் வருட வரவேற்பு விழா… ஆன்ட்டி ராகிங் கமிட்டி… போன்றவை ராகிங்கை தடுக்க அமைக்கப்பட்டது. எனினும் இந்த நிகழ்வு அதிகம் வெளியே வராமல் மறைக்கப்பட்டது)
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings