in

தாய்மையின் தவிப்பில் ஓர் இரவு (சிறுகதை) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

தாய்மையின் தவிப்பில் ஓர் இரவு (சிறுகதை)

நவம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ணி இரவு ஒன்பதரையை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் இரவுப் பணிக்காக வர வேண்டிய ரேச்சல் வரவில்லை. நேரம் கழியக் கழிய செல்விக்கு படபடப்பும், தவிப்பும் அதிகமாகி நிலைகொள்ளாமல் தவிக்க ஆரம்பித்தாள்.

பணியில் இருக்கும் போது ஃபோன் பேசவும் அனுமதி இல்லை. வேலைக்கான உடுப்பைப் போட்டதுமே கைபேசியை சூப்பர்வைசரிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் வரவேண்டும். இடைவேளை கிடைக்கும் நேரத்தில் மட்டுமே கைபேசி கைக்கு வரும்.

எட்டு மணியோடு முடியவேண்டிய வேலையை ஒன்பதரை ஆகியும் பொறுப்பை ஒப்படைத்து விட்டுக் கிளம்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் செல்வி.

குழந்தை இந்நேரத்துக்கு அழுது கொண்டிருக்கும். இதற்காகவே இரவுப் பணி வேண்டாம் என்று பலமுறை சொல்லி விட்டாள். தவிப்புடன் செல்வி மணியைப் பார்த்து கொண்டு உட்கார்ந்திருந்த போது, சூப்பர்வைசர் உள்ளே வந்தார்.

“செல்வி சிஸ்டர், நைட் டியூட்டிக்கு வரவேண்டிய ரேச்சலுக்கு திடீர்னு ரொம்ப உடம்பு முடியலையாம். இன்னைக்கு அவங்க வரமாட்டாங்க. நீங்களே நைட்ட்யூட்டியைக் கண்டின்யூ பண்ணுங்க. அதுக்கு பதில் நாளைக்கு  லீவ் எடுத்துக்கோங்க.”

“இல்ல சார், வீட்ல குழந்தையை விட்டுட்டு வந்திருக்கேன். காலைல டியூட்டிக்கு வரும்போது எங்க அம்மாகிட்ட விட்டுட்டு வந்தது. நைட் நான் போகலேன்னா குழந்தையை வச்சுட்டு அம்மா ரொம்ப சிரமப்படுவாங்க.”

“புரியுது சிஸ்டர். ஆனா உங்க வேலை அப்படி. உங்க பொறுப்பில் இருக்கற பேஷன்ட் வேற கிரிட்டிக்கலா இருக்காங்க. அவங்க பையன் அமெரிக்காவிலிருந்து வந்துட்டிருக்காரு. நைட் 2 மணிக்கு ஃப்ளைட் வந்துரும். ஏர்போர்ட்டில் இருந்து நேரா அவங்க அம்மாவைப் பார்க்கறதுக்குத் தான் வருவார். அவர் வந்து கேட்கும்போது டீட்டெய்ல்ஸ் எல்லாம் சொல்றதுக்கு உங்களுக்குத் தான் நல்லாத் தெரியும்.

வேற புதுசா யாரையும் உங்களுக்குப் பதில் போட முடியாது. சூழ்நிலையைப் புரிஞ்சுகிட்டு இன்னைக்கு ஒரு நாள் நைட் ட்யூட்டி பாருங்க. டென் மினிட்ஸ் டைம் தரேன். போய் வீட்டுக்குப்ஃபோன் பண்ணி சூழ்நிலையைச் சொல்லிட்டு, அவங்களைக் கவனிச்சுக்க சொல்லிட்டு வாங்க.”

“இல்ல சார், குழந்தைக்கு ஃபீட் பண்ணணும்…”

“என்ன சிஸ்டர், இதெல்லாம் எனக்குத் தெரியாதா? எல்லா நாளுமா உங்களுக்கு இந்த மாதிரி வேலை கொடுக்கறோம். க்ரிட்டிக்கல் சிச்சுவேஷன்…. உங்களை மாதிரி அனுபவம் இருக்கறவங்க தான் பார்த்துக்க முடியும். டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. அவங்களுக்கு 10 மணிக்கு இன்ஜெக்ஷன் போடணும். அதுக்குள்ள போய் ஃபோன் பேசிட்டு வாங்க. அதுவரைக்கும் நான் இங்கே இருக்கேன்.”

கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது செல்விக்கு. எதுவும் பேச முடியாத சூழ்நிலை. பரிதவிப்புடன் ஓடிவந்து தன் கைபேசியை எடுத்து வீட்டிற்கு ஃபோன் செய்தாள். இவள் ஃபோனுக்காகவே காத்திருந்த செல்வியின் அம்மா ஃபோனை எடுத்தார்.

“என்ன செல்வி, இன்னும் கிளம்பலையா? எப்போ வருவே?  பாப்பா உன்னைத் தேட ஆரம்பிச்சுட்டா.”

தொண்டை அடைத்தது செல்விக்கு. பால் கட்டிக்கொண்டு மார்பு வலித்தது. இதயம் கனத்தது.  மிகவும் சிரமப்பட்டு கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசினாள்.

“அம்மா… இங்கே ஒரு எமர்ஜென்சி. நைட் டியூட்டி பார்க்க வேண்டியவங்க வரல. பேஷன்ட் கொஞ்சம் சீரியஸா இருக்காங்க. நான் தான் பாத்துக்கணும். இன்னைக்கு ஒரு நாள் நைட் எப்படியாவது பாப்பாவை நீ பாத்துக்கோ மா.”

“என்ன செல்வி பேசறே? நான் பார்த்துக்க மாட்டேன்னு சொல்லல. காலைல நீ பால் கொடுத்துட்டுப் போனது. அதுக்கப்புறம் வெறும் புட்டிப்பால் தான். ராத்திரி உன்கிட்ட பால் குடிக்காம அவ தூங்க மாட்டான்னு தெரியும்ல. உன் குரலைக் கேக்கணும். கேட்காம ஏங்கிப் போய்டுவா. தூங்க மாட்டா. விவரம் தெரிஞ்ச குழந்தையா….சொல்லிப் புரிய வைக்க. பத்து மாசம் தான் ஆகுது. என்ன வேலையோ போ…. நீ சுமந்து பெத்த குழந்தையைக் கூட கவனிக்க நேரமில்லாம இந்த நர்ஸ் வேலை ரொம்பப் பெருசா போச்சா உனக்கு?”

“அம்மா….  வேலை பெருசாங்கறது முக்கியமில்லமா. பொறுப்பு அதிகம்மா. டாக்டர் எப்படியோ அதே மாதிரி தான் நானும். நேரம் காலம் எல்லாம் பார்க்க முடியாது. எப்படியாவது பவுடர் பால் கொடுத்து சமாதானப்படுத்தி அவளைத் தூங்க வை. தூங்கிட்டானா நைட் எந்திரிக்க மாட்டாமா. காலைல எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடறேன் மா. எனக்கு டைம் ஆச்சு. பார்த்துக்கோமா.”

“ப்ளீஸ் செல்வி… குழந்தைகிட்ட ஒரு நிமிஷம் பேசறியா? உன் குரலையாவது அவ கேட்கட்டும்.”

“இல்லமா… என் குரலைக் கேட்டா அவ அழ ஆரம்பிச்சுடுவா. நான் பத்து மணிக்கு அவங்களுக்கு இன்ஜெக்ஷன் கொடுக்கணும். பைமா.”

மனதைக் கல்லாக்கிக் கொண்டு ஃபோனை வைத்துவிட்டு அறைக்குத் திரும்பினாள் செல்வி.

“சிஸ்டர்… குழந்தையை விட்டுட்டு நைட் டியூட்டி பார்க்க வேண்டியதாப் போச்சேங்கற அதே கவலைல பேஷண்ட்டைக் கவனிக்காம விட்டுடாதீங்க. எப்படியாவது அவங்க பையன் வரவரைக்கும் அவங்களுக்கு எதுவும் ஆகக்கூடாது. புரியும்னு நினைக்கறேன்.”

“புரியுது சார், நான் பாத்துக்கறேன்.”

சூப்பர்வைசர் சென்றதும் சுவாசிக்க சிரமப்பட்டுக் கொண்டு, ஆக்சிஜன்  உதவியோடு உயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த மரகதம் அம்மாவிற்குப் போட வேண்டிய ஊசியைப் போட்டாள். பிபி, சுகர் என எல்லாவற்றையும் ஒருமுறை பரிசோதித்துப் பார்த்துக் கொண்டாள்.

சுவாசப் பிரச்சனை காரணமாக திடீரென்று அட்மிட்டான மரகதம் அம்மா, மகனைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே உயிரை இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறார் என்று தான் அனைவருக்குமே தோன்றியது.

மிகவும் அபாய கட்டத்தில் வந்த சேர்ந்த மரகதம் அம்மாவை மருத்துவர்கள் பலவிதங்களில் போராடி, காப்பாற்ற பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மிகவும் சிரமப்பட்டு ஆக்சிஜன் உதவியுடன் மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் மரகதம் அம்மாவிற்கு அவ்வப்போது நினைவு வரும். கண்களை விழித்து ஏதாவது பேச முயற்சி செய்வார்.

அவர் கண் விழிக்கும் போதெல்லாம் முதலில் கேட்பது அவரது மகனைத் தான். அதனால்தான் அவர் மகன் மதனை உடனே கிளம்பி வரச் சொல்லி மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

சலனமில்லாமல் மூச்சை மட்டும் இழுத்து இழுத்து விட்டுக் கொண்டு படுத்திருக்கும் மரகதம் அம்மாவைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள் செல்வி. கண்கள் தான் அங்கே இருந்ததே ஒழிய மனம் எல்லாம் குழந்தை தூங்கி இருக்குமா, அழுது கொண்டே இருக்குமா என்ற கவலையிலேயே இருந்தது. அந்தக் கவலை அவள் கண்களிலிருந்து அவளையும் அறியாமல் கண்ணீரை வரவழைத்தது.

கடிகாரத்தில் மணியைப் பார்ப்பதும், மரகதம் அம்மாவைப் பார்ப்பதுமாக, தவிப்புடன் நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள் செல்வி.

மணி 12 ஆனது. சட்டென்று மரகதம் அம்மாவிடம் அசைவு. அவரின் கையைப் பிடித்துக் கொண்டு கூப்பிட்டுப் பார்த்தாள் செல்வி.

“அம்மா…. இங்க பாருங்க. நான் கூப்பிடறது கேக்குதா?”

கண்களை விழித்து செல்வியைப் பார்த்த மரகதம் அம்மா ஏதோ பேச முயற்சித்தார்.

“என்னமா, என்ன வேணும்? உங்க மகனைக் கேட்கறீங்களா? அவரு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாரு.”

இல்லை என்பது போல் தலையாட்டிய மரகதம்அம்மா, சிரமப்பட்டு வார்த்தைகளை உதிர்த்தார்.

“ஃபோன்” என்றார்.

“ஃபோனாமா? உங்க ஃபோனைக் கப்போர்டில் பத்திரமா வச்சிருக்கேன். ஃபோன்ல யார் கூடவாவது பேசணுமா?”

‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்ட, செல்வி மரகதம் அம்மாவின் ஃபோனை எடுத்து வந்தாள்.

“இந்த நேரத்துல யாருக்கு மாஃபோன் பண்ணணும்?”

“நீ…. உங்க அம்மாகிட்ட பேசு. குழந்தை தூங்கிட்டாளான்னு கேளு”

மிகவும் சிரமப்பட்டு வார்த்தைகளை உதிர்த்தார் மரகதம் அம்மா.

“அம்மா… உங்களுக்கு எப்படி? நாங்க பேசறது உங்களுக்குக் கேக்குதா?”

தெரியும் என்பது போல் தலையாட்டி, கண்களை மூடிக் கொண்டார் மரகதம். செல்வி மரகதம் அம்மாவின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கலங்கினாள்.

“அம்மா…. நீங்க இவ்வளவு முடியாம இருக்கும் போதும் இப்படி யோசிக்கறீங்களேமா… நீங்க சொன்னதே எனக்குப் போதும்மா. உங்களை மாதிரி தான் என் அம்மாவும். குழந்தையை அவங்க சமாளிச்சுப்பாங்கமா.”

“இல்ல… நீ எதுக்கும் கூப்பிட்டுப் பாரு.”

“இல்லம்மா, வேலை நேரத்துல பேசக் கூடாது. கேமரால பார்த்துடுவாங்க. அப்புறம் வேலையே போய்டும். இன்னும் கொஞ்ச நேரத்துல பத்து நிமிஷம் டைம் தருவாங்க நான் அப்போ பேசிக்கறேன்.”

மரகதம் அம்மாவிற்கு கொடுக்க வேண்டிய மருத்துவ உதவிகளைச் செய்வதில் கவனத்தைச் செலுத்தினாள். ஒருமணிக்கு அடுத்த அறையில் இருக்கும் வேணி சிஸ்டர் வந்தார்.

“செல்வி, நான் பத்து நிமிஷம் பார்த்துக்கறேன்.  நீ டீ குடிச்சுட்டு வரியா?”

இதற்காகவே காத்திருந்த செல்வி,  வேகமாக வெளியே வந்து ஃபோனை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்கு ஓடினாள். டீ குடிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடத் தோன்றவில்லை.

பாத்ரூமுக்குள்புகுந்துகொண்டுஅம்மாவுக்குவீடியோகால்செய்தாள். 

“என்ன செல்வி, ஒருமணிக்கு வீடியோகால் போடறே? கொஞ்சம் முன்னாடியே கூப்பிட்டிருக்கக் கூடாதா? இந்தா… பாரு உன் பொண்ணை. கொட்ட கொட்ட முழிச்சுட்டு…. தூங்குவேனான்னு அடம்பிடிக்கறா.”

“செல்லக்குட்டி…. அபிநயா… அம்மாபாருடா. ஜோ… ஜோ… ஜோ… தூங்குடா தங்கம்….”

குழந்தை செல்வியைப் பார்த்து சிரித்தது.  கையை நீட்டி வீடியோவில் அவளைத் தொட முயற்சித்தது. கண்ணீரை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள் செல்வி. அதற்குள் பாத்ரூம் வாசலில் குரல் கேட்டது.

“செல்வி, பேஷண்ட்க்கு திடீர்னு மூச்சு வாங்குது.  சீக்கிரம் வா….”

அப்படியே ஃபோனை கட் செய்துவிட்டு ஓடிவந்தாள் செல்வி. அங்கே மரகதம் அம்மாவிற்கு மிகவும் மூச்சுத் திணறல் இருந்தது.

சட்டென்று அவரைப் பரிசோதித்து ஆக்சிஜனின் அளவைக் கூட்டி வைத்தாள் செல்வி. அதற்குள் டியூட்டி டாக்டருக்கும் தகவல் போக, அவரும் அங்கே விரைந்தார்.

“என்ன செல்வி சிஸ்டர், எப்படி திடீர்னு மூச்சுத்திணறல் அதிகமாகும்? மருந்தெல்லாம் கரெக்டா கொடுத்தீங்களா?”

“எல்லாம் கரெக்டா கொடுத்துட்டேன் டாக்டர். ஆக்சிஜென் லெவல் கொஞ்சம் கூட்டியிருக்கேன். இப்ப கொஞ்சம் பரவாயில்ல.”

“இன்னும் ரெண்டு மூணு மணி நேரம் தான். அவங்க பையன் வந்துருவார்.  டேக்கேர். இந்த இடத்தை விட்டு நகராதீங்க”

டாக்டர் மற்ற பரிசோதனைகளை முடித்து விட்டு, கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தார். மரகதம் அம்மா மீண்டும் கண்களை மூடி ஆழ்ந்த தூக்கத்திற்குப் போனார்.

செல்விக்கு முள்மேல் இருப்பதுபோல் இருந்தது. அடுத்து வந்த இரண்டு மூன்று மணி நேரங்களை தவிப்புடனேயே கழித்தாள் செல்வி. சற்று முன் தன்னிடம் குழந்தையிடம் பேசும் படி சொன்ன மரகதம் அம்மா இப்போது எந்தச் சலனமுமின்றிப் படுத்திருப்பதைப் பார்த்தபோது துக்கம் தொண்டையை அடைத்தது செல்விக்கு.

பாத்ரூமில் மங்கலான வெளிச்சத்தில் வீடியோ காலில் பார்த்த குழந்தையின் முகமும் கண்ணுக்குள் வந்து வந்து போனது.

திடீரென்று மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இரவு நேரப் பணியில் இருந்த டாக்டருடன், மரகதம் அம்மாவின் மகன் பயண களைப்போடு தன் அம்மாவைப் பார்க்க வந்தார்.

மரகதம் அம்மாவின் மகன் மதன் தன் அம்மாவுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகள் பற்றியும், அவரின் உடல்நிலை பற்றியும் அவசரகதியில் கேட்டுவிட்டு, அம்மாவின் கையை பிடித்துக் கொண்டு தழுதழுத்த குரலில் கூப்பிட்டார்.

ஐந்து நிமிடத்திற்குப் பின் கண்களை மிகவும் சிரமப்பட்டு திறந்த மரகதம் அம்மா, மகனைப் பார்த்ததும் மெலிதாகச் சிரித்தார். கண்களில் ஒரு நிம்மதி தெரிந்தது. மதனுக்கு தன் தாயுடன் பேச தனிமை அவசியம் என்பதால் அனைவரும் அறையை விட்டு சற்று வெளியே வந்தார்கள்.

மதன் தன் தாயுடன் மெலிதான குரலில் கண்ணீருடன் பேசிக் கொண்டிருந்தான். மரகதம் அம்மா அளவான பதில்களைக் கொடுத்துக் கொண்டிருப்பது வெளியில் நின்று கொண்டிருந்த செல்விக்குக் கேட்டது. மணி பார்த்தாள் செல்வி. மணி நாலரையைத் தாண்டியிருந்தது.

சட்டென்று ஒரு மணிக்கு வீடியோவில் பார்த்த குழந்தையின் முகம் மின்னல் போல் கண்ணில் தோன்றி மறைந்தது. தூக்கமில்லாமல் தன் மகளும் இந்த இரவைக் கழித்திருக்கிறாள் என்று நினைத்தபோது பெற்ற மனம் துடித்தது.

“இங்கே செல்விங்கறது யாரு? என்று அறைக்குள் இருந்து வந்த மதன் கேட்கவே, சட்டென்று திரும்பினாள்.

“சார்,  நான் தான்.”

“அம்மா கூப்பிடறாங்க.”

வேகமாக உள்ளே ஓடி மரகதம் அம்மாவின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

“சொல்லுங்கமா, உங்க பையன் வந்துட்டார் பாத்தீங்களா. உங்களுக்கு ஒண்ணும் இல்ல. எல்லாம் சரியாயிடும். இன்னும் ரெண்டு நாள்ல எல்லாம் சரியாகி எழுந்து உட்கார்ந்துருவீங்க. உங்களுக்காக உங்க பையன் வந்திருக்காரு. அவர்கிட்ட பேசினீங்களா?”

“இனிமே அவன் என்னைப் பார்த்துப்பான். நீ உன் குழந்தையைப் பார்க்க கிளம்பு”

“அம்மா, எனக்கு டியூட்டி முடிய இன்னும் நேரம் இருக்குமா. நீங்க அதைப் பத்தி யோசிக்காதீங்க.”

“இல்ல செல்வி, 35 வயசுல இருக்கற என் பையனைப் பார்க்கிறதுக்காக என் உயிரையே இழுத்துப் புடிச்சிட்டு நான் தவிப்போடு காத்திருக்கேன்.  நீ 10 மாசக் குழந்தையை விட்டுட்டு வந்திருக்கே. உன்னோட தவிப்பு எனக்கு நல்லாப் புரியுது. என்னால தானே நீ இன்னிக்குக் குழந்தையைப் பார்த்துக்க முடியாம போச்சு. அது எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அதனாலத் தான் ஃபோனைக் கொடுத்து பேசச் சொன்னேன்.

இவ்ளோ வருஷம் வளர்த்த எனக்கே என் பையனைப் பார்க்கணும்னு தவிப்பு இருக்கும்போது, இன்னும் தாய்ப்பாலை நிறுத்தாத உனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு எனக்குப் புரியுது. டாக்டர்கிட்ட நான் சொல்லிக்கறேன்”

திணறித்திணறிப் பேசினார் மரகதம்அம்மா.

“சிஸ்டர், அம்மாகிட்ட நான் கேட்டதுக்கு இதைத்தான் தன்னோட கடைசி ஆசையா சொன்னாங்க. செல்வி சிஸ்டரை உடனே வீட்டுக்குக் கிளம்பிப் போய் குழந்தையைப் பார்க்க சொல்லு. அதுதான் இப்போதைக்கு என்னுடைய ஆசைன்னு இதைத்தான் என்கிட்ட சொன்னாங்க.”

மரகதம் அம்மாவின் இந்த உணர்வுப்பூர்வமான ஆசையைக் கேட்டதும் டாக்டரே சற்று கலங்கித்தான் போனார்.

செல்விக்கு பதில் வேறொரு நர்சை அங்கே கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்துவிட்டு, செல்வியை வீட்டுக்குக் கிளம்பச் சொன்னார்.

மரகதம் அம்மாவின் கையைப் பிடித்து கண்ணீருடன் நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்து டாக்ஸி, பிடித்து வீடு வந்து சேர்ந்தாள் செல்வி.

பறவைகளின் சத்தத்தோடு விடிய ஆரம்பித்திருந்த அந்த ஐந்தரை மணிவிடியலில், தூக்கமில்லாமலும், விட்டுவிட்டு அழுததாலும் கண்கள் இடுங்கிப் போயிருந்த தன் செல்ல மகளை வாரி மார்போடு அணைத்துக் கொண்டாள் செல்வி.

குழந்தைக்கு இப்போது அழுகை வரவில்லை. பிஞ்சுக் கைகளால் தன் தாயின் முகத்தை வருடியது. பசியாற மார்பைத் தேடியது.

குழந்தையை உச்சி முகர்ந்து விட்டு, அதற்கு பாலூட்ட ஆரம்பித்தாள் செல்வி. பால் கட்டியிருந்த மார்பின் பாரம் குறைய ஆரம்பித்து. மனதுக்குள் இப்போது மரகதம் அம்மா நிறைந்திருந்தார்.

அங்கே தன் மகனின் கையை இறுகப் பிடித்தபடி மரகதம் அம்மா தன் உயிரை விட்டிருந்தார்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வல்லபி ❤ (பகுதி 16) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    சித்ராவின் கல்யாணம் (சிறுகதை) – ✍ நாமக்கல் எம்.வேலு