in

சித்ராவின் கல்யாணம் (சிறுகதை) – ✍ நாமக்கல் எம்.வேலு

சித்ராவின் கல்யாணம் (சிறுகதை)

நவம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

சித்ராவுக்கு கல்யாணமாகிவிட்டால், அடுத்தடுத்து மற்ற மூன்று பெண்களின் கல்யாணமும் முடிந்து விடும். ஆனால் அது முடிவதாகத்தான் காணோம்.  மணிமாறன் தடுமாறிக் கொண்டிருந்தார்.

சித்ராவுக்கு முப்பத்தி ரெண்டு வயது தாண்டி விட்டது. பிளஸ் டூ’விற்குப் பிறகு பி.காம். படித்தாள். அவளைப் பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்க மணிமாறனால் முடியவில்லை. சித்ராவும் நன்றாகவே படித்து முடித்தாள்.

கொஞ்ச நாட்கள் டைப்பிங் போனாள். பிறகு டைலரிங் போனாள். ஒரு நாள், கிளார்க் வேலைக்கு டைப்பிங் தெரிந்த பத்து கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்குள் இருக்கும் பெண் தேவை என்று பேப்பரில் விளம்பரம் பார்த்துவிட்டு மனு போட்டாள். வேலை கிடைத்து விட்டது. மாதம் ஆறாயிரம் கொடுத்தார்கள்.

மாதாமாதம் மூச்சு முட்டிக் கொண்டிருந்த மணிமாறனுக்கு கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்தது. பிளஸ் டூ முடித்த சமயத்தில் அடுத்தவள், கலா இஞ்சினீயரிங் தான் வேண்டும் என்று அடம் பிடித்தாள். ஆனால் அது கிடைக்காத அளவுக்கு அவளது மார்க் இருந்தது. கடைசியில் பி.சி.எ. எடுத்துக் கொண்டாள்.

படித்து முடிக்கும்போதே ஒரு கால் சென்டரில் வேலை கிடைத்தது. பகல் நேர வேலைதான் என்றதால் ஒப்புக்கொண்டு போக ஆரம்பித்தாள். மாதம் எட்டாயிரம் கொடுத்தார்கள். மணிமாறனின் பொருளாதாரச் சுமை மேலும் கொஞ்சம் குறைந்தது. மாதாமாதம் போடும் பட்ஜெட்டில் விழும் துண்டு ஓரளவுக்கு குறைந்தது. ஆனாலும் துண்டு விழத்தான் செய்தது. நான்கு பெண்களாயிற்றே.    

இப்போதுதான் சித்ராவுக்கு ஒரு கல்யாணத்தை செய்து விடலாம் என்று யோசித்தார்கள். கல்யாணத்துக்கு தேவையான பணத்தை சேர்க்க வேண்டும். அது அவ்வளவு சுலபம் இல்லை என்று புரிந்தது.  மாதாமாதம் கஷ்டப்படும் மணிமாறனால் குறைந்தபட்சம் ஐந்து லட்சமாவது வேண்டும் என்று நினைத்தபோதே மூச்சு முட்டியது.

ஆனாலும் வயிற்றைக்கட்டி வாயைக் கட்டி கொஞ்சம் காசு சேர்த்திருந்தாள் மல்லிகா. மணிமாறன் ஆயிரம் ரூபாய் கொடுத்தால், நூறை எடுத்து பருப்பு டப்பாவில் போட்டு விடுவாள். மீதியில்தான் செலவு செய்வாள். கடைக்கு மளிகை சாமான் வாங்கப் போனால், ஆர்கானிக், எக்ஸ்போர்ட் தரம் என்றெல்லாம் எடுக்க மாட்டாள். இருப்பதிலேயே கொஞ்சம் குறைவான விலையில் உள்ளதை எடுத்துக் கொள்வாள். இப்படித்தான் பணத்தை மிச்சம் பிடிக்கிறாள்.  அவள்தான் அந்த வீட்டுக்கு நிதியமைச்சர். 

அடுத்து கார்த்திகாவுக்கு இன்ஜினீயரிங் சீட் கிடைத்து செலவில்லாமல் படிக்கப் போனாள்.  கவுன்சிலிங்கில் அவள் விரும்பிய பாடமும், அவள் விரும்பிய காலேஜும் கிடைத்தது. அவளைப் பார்த்துவிட்டு கவிதாவும் விழுந்து விழுந்து படிக்க ஆரம்பித்தாள். டொனேசன் கொடுத்தோ மேனேஜ்மென்ட் சீட்டு வாங்கியெல்லாம் அப்பாவால் படிக்க வைக்க முடியாது என்றெல்லாம் அவளுக்கும் தெரியும்.

சித்ராவுக்கு முதன்முதலாக ஒரு வரன் வந்தது.  வந்தார்கள், பார்த்தார்கள், வடை, காபி சாப்பிட்டார்கள், பேசினார்கள், போய் விட்டார்கள். மறுநாள் தரகர் சொல்லித்தான் தெரிய வந்தது, அவர்களுக்கு பெண்ணைப் பிடிக்கவில்லை என்று.  சித்ரா கலர் கொஞ்சம் குறைவுதான். அத்துடன் நட்சத்திரமும் ஆயில்யம்.  இதுவே அவர்கள் சொன்ன காரணம். கலரில் சித்ரா மணிமாறன் மாதிரி, மற்றவர்கள் அம்மா மாதிரி.

அப்புறம் நிறைய வரன்கள் வந்தன. அவர்கள் வருவதற்கு முன்பே ஜாதகத்தையும் போட்டோவையும் பார்த்துவிட்டு வேண்டாம் என்று சொன்னவர்களை விட, பதிலே சொல்லாதவர்கள்தான் அதிகம்.

ஒரு வரன் வந்தது. ஒரு கார் ஷோ ரூமில் வேலைபார்த்துக் கொண்டிருந்தான் பையன். ஆனால் படித்தது மெக்கானிக் டிப்ளோமா.  மல்லிகாவுக்கு அவர்களை ரொம்பப் பிடித்திருந்தது. சித்ராவோ,  நாளைக்கு ஏதாவது சிறு மனஸ்தாபம் என்றால் கூட படிப்பு வித்தியாசம் தலை தூக்கிக் கொண்டு ஆடும். பையன் எதாவது ஒரு டிகிரியாவது படித்திருக்க வேண்டும் என்று சொல்லி மறுத்து விட்டாள்.

அடுத்து ஒரு வரன் வந்தது. டிகிரி இருந்தது. நட்சத்திரம் ஒத்து வந்தது. சித்ராவின் நிறத்துக்கு ஒத்து வந்தான். ஆனால் அவர்கள் போன பிறகு வந்து சொன்ன புரோக்கர்தான் குண்டை தூக்கிப் போட்டான்.

அவர்களுக்கு கலாவைப் பிடித்திருக்கிறது. “கொடுக்க முடியுமா என்று கேட்டுச் சொல்லுங்கள்” என்றிருக்கிறார்கள்.   

இப்போது கொஞ்சம் பயம் வந்து பற்றிக் கொண்டது மணிமாறனுக்கும்  மல்லிகாவுக்கும். இப்படியே போய்க் கொண்டிருந்தால் எப்படித்தான்  சித்ராவைக் கரை சேர்ப்பது.  மற்றவர்களையும் எப்படி கரை சேர்ப்பது.  மூத்தவளுக்கு முப்பத்திரண்டு, கலாவுக்கு முப்பது, கார்த்திகாவுக்கு இருபத்தெட்டு, கவிதாவுக்கு இருபத்தாறு.

சித்ராவும் யோசிக்க ஆரம்பித்தாள். நம் ஒருத்தியால் மற்றவர்களும் காத்திருக்க வேண்டியிருக்கிறதே என்று வேதனைப்பட்டாள்.  

அப்பாவிடம் வந்தாள்.  “அப்பா, நீங்கள் எனக்காக காத்திருக்க வேண்டாம்.  அந்தப் பையன் டிகிரி படித்திருக்கிறான். கை நிறைய சம்பாதிக்கிறான். கலாவுக்கும் முப்பது தொட்டுவிட்டது. இனியும் காலம் தாழ்த்த வேண்டாம். கலாவுக்கு பிடித்திருக்கிறதா என்று மட்டும் கேளுங்கள், சரியென்றால் மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பாருங்கள். நான் எங்கள் ஆபீஸ் ஸ்டாப் சங்கத்தில் லோன் போடுகிறேன்.  கல்யாணத்தை முடித்து விடலாம்” என்றாள்.

ஆனால் முழுதாக மறுத்து விட்டனர் மணிமாறனும் மல்லிகாவும்.

“உன்னை விட்டுவிட்டு அடுத்தவளுக்கு கல்யாணம் செய்தால், அடுத்தடுத்து மற்றவர்களின் கல்யாணமும் நடந்துவிடும் தான். ஆனால் உன்னுடைய கல்யாணம் அப்படியே நின்று போகுமே. அதற்கு நாங்கள் தயாரில்லை. இன்னும் நாலைந்து வரன்கள் வரட்டும், பத்து கூட வரட்டும். ஒன்று கூடவா அமையாமல் போய்விடும், பார்த்துக் கொள்ளலாம்” என்றார்கள்.

கவிதா மெல்ல அக்காவிடம் வந்தாள்.  “அக்கா, உனக்கும் முப்பத்திரண்டு தாண்டிடுச்சு. கலாவுக்கு முப்பது, கார்த்திகாவுக்கு இருபத்தெட்டு. அவ்வளவு ஏன் எனக்கே இருபத்தாறு. நானே கல்யாணம் பண்ணிக்க மனசளவுலே தயாராயிட்டேன். நாம இனிமேலும் அப்பா அம்மாவுக்கு பாரமாயிருக்கக் கூடாது. உன்னை யாருமேவா லவ் பண்ணலை இதுவரை. அப்படி யாராச்சும் இருந்தா சொல்லுக்கா, அப்பாவை விட்டு பேசச் சொல்லலாம்” என்றாள். 

“பெரிய மனுஷி நீ பேச வந்துட்டியா, போடி” என்று விரட்டினாள் சித்ரா.

ஆனாலும் பவானி இரண்டு தடவை அவளை வந்து சந்தித்து கேட்டுவிட்டுப் போனது அவ்வப்போது அவளை வந்து உரசிவிட்டுப் போகும். இப்போதும் நினைத்துப் பார்த்தாள்.அழகாகத்தான் இருக்கிறார்.  நன்றாகப் பழகுகிறார்.  ஆனாலும்…. யோசிக்க வேண்டும். யோசித்தாள்.

இன்னொரு நாள் காலையிலேயே காரத்திகா அக்காவிடம் வந்து நின்றாள்.  “அக்கா, இனிமே அது சொள்ளை இது சொள்ளைனு தட்டிக் கழிக்காதேக்கா. சீக்கிரம் நீ உன் மாமியார் வீட்டுக்கு போற வழியைப் பார்” என்றாள் அவள். 

“ஏண்டீ உனக்கு ரொம்ப அவசரமோ….” என்று நக்கல் செய்தாள் சித்ரா.

நாணிக்கோனியவள், “உன்கிட்டே சொல்ல எனக்கென்னக்கா, ஒரு பையன் எனக்கு ரூட் விட்டிட்டிருக்கான். பையன் நல்லவன்தான், எந்த கெட்டப் பழக்கமும் இல்லை, ஒரு கம்பெனில வேலை பண்றான், இருபத்தஞ்சாயிரம் சம்பளம் வாங்கறான்.  ஒன்னே ஒன்னு அவனுக்கு ஒரு அக்கா இருக்காளாம். அவங்களுக்கு வரன் பாத்துட்டே இருக்காங்களாம். அவங்க கல்யாணம் முடிஞ்சா ரூட் க்ளீயர்ங்கறான். என்னை ரொம்பத்தான் டாவடிக்கரான். நாந்தான் கொஞ்சம் தூர விலகியே போயிட்டிருக்கேன். ஆனா அதுக்காக நான் ஒன்னும் சாமியாரிணி இல்லையே, எனக்கும் வயசாகுதில்லையாக்கா. முப்பது தாண்டிடுச்சுனா எவன்க்கா என்னைக் கட்டிக்குவான். அப்புறம் நீ தவம் கிடக்கற மாதிரி நானும் காத்துட்டுக் கிடக்கணும். உனக்கும் முப்பத்திரண்டு தாண்டிடுச்சு. கலாவுக்கு முப்பது, எனக்கு இருபத்தெட்டுக்கா. அடுத்து கவிதாவும் காத்திட்டிருக்கா. உனக்கு கல்யாணம் ஆகற அன்னிக்கே என் ஆளை கூட்டிவந்து அப்பா அம்மா முன்னால நிறுத்தி, நான் இவனைக் கட்டிக்கறேன், பேசுங்கப்பானு சொல்லிடுவேன்” என்றாள், அக்காவின் விரல்களுக்கு சொடுக்கு எடுத்துவிட்டு கொண்டே. 

சித்ரா அதிர்ந்தாள். “ஏய்… உனக்கு முன்னால கலா கலான்னு ஒருத்தி இருக்கா தெரியும்ல. முந்திரிக் கொட்டையாட்டம் அலையறே… பேசாம போ… எல்லாம் தானா நடக்கும்” என்று முறைத்தாள்.  பதிலுக்கு கார்த்திகாவும் முறைத்துக் கொண்டே நகர்ந்து விட்டாள்.

கார்த்திகாவிடம் அப்படி கடிந்து கொண்டாலும், அவள் சொன்னதிலும் உண்மை இருக்கத்தானே செய்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தாள் சித்ரா. தங்கைகள் எல்லோருமே தானே காத்திருக்கிறார்கள். வயது  எல்லோருக்குமேத் தானே ஏறிக் கொண்டே போகிறது. மூப்பு தட்டி விட்டால் யார் கொத்திக் கொண்டு போவர்?

யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்து விட்டாள். ரொம்ப நாட்காளாக கேட்டுக் கொண்டிருந்த பவானிக்கு சரி சொல்லிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்து கொண்டு உடனே மொபைலை எடுத்தாள்.

“மதியம் சாப்பாட்டு நேரத்தில் சந்திக்கலாம்” என்று மெசேஜ் போட்டு அனுப்பிவிட்டு ஆபீஸ் கிளம்பி விட்டாள்.

எப்போது பச்சைக்கொடி தெரியும் என்று காத்திருந்த பவானி, சாப்பாட்டு இடைவேளைக்கு ஒரு மணிநேரம் முன்பே வந்து உட்கார்ந்து கொண்டாள். அவளது முகத்தில் பரவசம். சித்ராவின் முகத்திலோ வெட்கம்.

“அண்ணாக்கிட்டே ஓகே சொல்லிடவா” என்றபடி சித்ராவின் முகத்தைப் பார்த்தாள் பவானி. அவளோ வெட்கத்துடன் தலைகுனிந்து கொண்டு தலையை ஆட்டினாள். அதைக் கேட்டு ரொம்பவும் சந்தோசத்துடன் அண்ணனைப் பார்க்க ஓடினாள் பவானி.

ணி மூன்று இருக்கும், வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிசயித்து நின்றாள் மல்லிகா. கவிதா தையல் மிஷினில் துணி தைத்துக் கொண்டிருந்தாள். சித்ரா, கலா கார்த்திகா எல்லோரும் வேலைக்கு போயிருந்தனர். மணிமாறன் கொல்லைப் புறத்தோட்டத்தில் இருந்தார். 

அவசரமாய் ஓடிப்போய் கணவனிடம், “ஏங்க, வாசல்ல ஒரு கார் வந்து நிக்குது. யாரோ வர்றாங்க போல இருக்கு, சீக்கிரம் வாங்க” என்றாள்.

அதற்குள், டிப்டாப்பாய் ஒருவரும், கூடவே ஒரு பெண்ணும் உள்ளே நுழைந்து விட்டனர். அவளது கையில் ஒரு சிறிய தட்டு, அதில் பழங்கள், பூக்கள், இனிப்பு. 

அதற்குள் கவிதா முன்னே வர, அவளிடம்  “இதுதானே சித்ரா வீடு, வெளியே மணிமாறன்னு போர்டு பார்த்ததும் தான் உள்ளே வந்துட்டோம். நாங்க கரெக்க்டாத்தான் வந்திருக்கோம்னு நினைக்கிறேன்” என்றார் அவர்.  முழித்தாள் கவிதா.

அதற்குள் துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டு மணிமாறன் உள்ளே வர, மல்லிகாவும் கூடவே வந்தாள்.

“வாங்க” என்றுவிட்டு சோபாவைக் காட்டி, “உட்காருங்க” என்ற மணிமாறன் “ஆனா, நீங்க யாருன்னுதான் தெரியலை… யாரை பார்க்க வந்தீங்க…” என்றார்.

“நீங்கதான் சித்ராவோட அப்பாவா?” என்று கேட்டுவிட்டு வணக்கம் வைத்தார் அவர். 

பதிலுக்கு மணிமாறன் வணக்கம் வைக்க,  “நான் சித்ரா கூட வேலை பண்றேன்… அங்கே நான் மேனேஜரா இருக்கேன். என்பேரு ரகுவரன்” என்றார்.

கூட வந்திருந்தவளைக் காட்டி, “இது பவாணி, என் பெரியம்மா பொண்ணு” என்றவர், “நான் இங்கே வந்தது சித்ராவுக்கு தெரியுமான்னு தெரியாது” என்றார்.

அதற்குள் கவிதா ஓடிப்போய் மொபைல் போனை எடுத்து சித்ராவுக்கு போன் போட்டாள்.

“ஏய்.. உங்க மேனேஜரும் இன்னொரு அக்காவும் இங்கே வந்திருக்காங்கடி. கையில பழம் பூவெல்லாம் கொண்டு வந்திருக்காங்க. என்ன விஷயம்? நீ அனுப்பிவச்சியா என்ன?” என்று கிசுகிசுத்தாள். 

படபடப்பாய், “ஓ அப்படியா… சரி சரி சத்தம் போடாம அம்மாகிட்டே கொண்டு போய் போனைக் கொடு” என்றாள் சித்ரா.

ஜாடைக்காட்டி அம்மாவை உள்ளே அழைத்தாள் கவிதா. போனை வாங்கினாள் மல்லிகா.

“அம்மா, அவர் என்னோட மேனேஜர். ரகுவரன்னு பேர். மூணு வருஷம் முன்னாடி அவருக்கு கல்யாணம் ஆச்சு. உனக்கு ஞாபகம் இருக்கா நாங்க ஆபிஸ்ல எல்லாரும் திருநெல்வேலில ஒரு கல்யாணத்துக்கு போனோமே. அது அவர் கல்யாணம்தான். ரெண்டு வருஷத்துக்கு முன்னே அவங்க சம்சாரம், பிரசவத்துலே இறந்து போய்ட்டாங்க. குழந்தையும் வயித்துலேயே இறந்துதான் பொறந்துச்சு. கொஞ்ச காலமாவே என்கிட்டே கொஞ்சம் நெருக்கமா வந்து பேசிக்கிட்டிருப்பார். நான் புரிஞ்சிக்கிட்டேன் அவர் என்னை விரும்பறாரோனு. ஆனா நான்தான் உங்ககிட்டே அதை சொல்லலை. ரெண்டு தடவை அவரோட தங்கச்சி பவானி மூலம் என் விருப்பத்தைக் கேட்டார்.  முதல்லே நான் சரி சொல்லலை. அப்புறம் இன்னிக்குத்தான் மத்தியானம் வந்தாங்க பவானி. நானும் சரி சொல்லிட்டேன். ஆனா இன்னிக்கே பெண் கேட்டு வந்திடுவாங்கனு நான் நினைக்கலே.  உங்களுக்கு பிடிச்சிருக்கான்னு பாருங்க, உங்களுக்கு சரின்னா எனக்கும் சரி” என்றாள்.  குரலில் சந்தோஷம் மிகுந்திருந்தது.

அதிர்ந்தாள் மல்லிகா. இரண்டாம் தாரமாகவா… எப்படி இவள் ஒத்துக் கொண்டாள். மெல்ல வந்து மணிமாறனின் காதில் கிசுகிசுத்தாள். அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

“சொல்லுங்க சார், என்ன விஷயமா வந்திருக்கீங்க” என்றார் மணிமாறன்.

“அநேகமா சித்ரா உங்ககிட்டே இப்போ பேசியிருப்பாங்கன்னு நினைக்கறேன். சொல்றதுக்கென்ன. எனக்கு அப்பா அம்மா இல்லை. அதான் என் பெரியம்மா பொண்ணு பவானியை கூட்டிட்டு வந்தேன். மூணு வருஷத்துக்கும் முன்னாடி கல்யாணம் ஆச்சு எனக்கு.  அடுத்த வருஷமே பிரசவத்துல தவறிட்டா அவ”

கொஞ்சம் நிறுத்திய ரகுவரன் தொடர்ந்து, ”அதுக்கப்புறம் கல்யாணத்தை பத்தி யோசிக்கலை. பவானிதான் உனக்கு ஒரு மனைவி தேவப்படாம இருக்கலாம், ஆனால் ஒரு துணை தேவை, ஆத்திர அவசரத்துக்கு தோள்ல சாஞ்சிக்கறதுக்காவது  ஒரு துணை தேவை. ஏதாவது ஒரு பொண்ணைப் பார், நான் வந்து பேசறேன்னா. சித்ராவை எனக்கு ரொம்பப் பிடிக்கும், ஆனா அவங்க ஒத்துக்குவாங்களான்னு பின் வாங்கிடுவேன்.

அதை ஒரு தடவை பவானிக்கிட்டேயும் சொன்னேன். ஒருநாள் ஆபிஸ் வந்து சித்ராகிட்டே பேசினா. முதல்லே மறுத்தாங்க, ரெண்டு மாசம் கழிச்சு இன்னிக்கு பவானி மறுபடியும் வந்து பேசி சம்மதம் வாங்கிட்டாங்க. அதான் ரொம்பத் தள்ளிப் போடவேனாமேனு இன்னிக்கே பவானியைக் கூட்டிக்கிட்டு கிளம்பி வந்துட்டேன். நான் இன்னிக்கே வர்றேன்னு  சித்ராவுக்கிட்டே சொல்லலை. அட்ரஸ்கூட அவங்க பர்சனல் ஃபைல்லேர்ந்துதான்  எடுத்தேன்” என்று நிறுத்தினார் அவர். 

தொடர்ந்து, “என்னைப் பத்தி சித்ராவுக்கு நல்லாத் தெரியும். எண்பதினாயிரம் சம்பளம் வாங்கறேன். ஆபிஸ்ல சம்பளத்துக்கு மேல வீட்டு வாடகையும் தனியா குடுத்துருக்காங்க, கார் கொடுத்திருக்காங்க. எனக்கும் பெத்தவங்க யாரும் இல்லை.  நீங்களே பெத்தவங்களா இருந்து சித்ராவை எனக்கு கட்டிக் கொடுங்க” என்று அவர் சொல்லி முடிக்கும்போது, உள்ளே நுழைந்தாள் சித்ரா, வெட்கப் பட்டுக் கொண்டே.  

மல்லிக்காவும் அவள் கூடவே போனாள், “பேசிட்டிருங்க.. இதோ வர்றேன்” என்று விட்டு.

மாப்பிள்ளை சொன்னார், “எனக்குத் தெரியும், சித்ராவுக்கு மூணு தங்கச்சிங்க இருக்காங்கனு. அவங்களுக்கு என்னாலான உதவியை நிச்சயம் செய்ய முடியும். கல்யாணத்துக்கப்புறம் சித்ராவுக்கு வேலையை விட வேண்டியிருக்கும்.  ஏன்னா ஒரே ஆபிஸ்ல கணவன் மனைவி சேர்ந்து வேலை பண்ண முடியாது.  அது கம்பெனி ரூல்ஸ். தேவைப்பட்டா எனக்குத் தெரிஞ்ச ஒரு கம்பெனில என் பிரண்டுதான் ஹெச்.ஆர்.றா இருக்கான். சொன்னா உடனே வேலை போட்டுக் கொடுத்துடுவான். அதே பில்டிங்லதான் அந்த கம்பெனியும் இருக்கு. எனக்கு கிடைக்கற சம்பளத்துக்கு சித்ரா வேலைக்கு போகனுங்கறதில்லே. ஆனாலும் தங்கச்சிங்க கல்யாணம் முடியற வரைக்கும் வேணுமானா  வேலைக்கு போகட்டும்.  அந்த சம்பளம் அதுக்கு உதவியா இருக்கும். அதற்கப்புறம் எனக்கு ஒரு முழு மனைவியா இருந்தா போதும். உங்களை என்னோட அப்பா அம்மா மாதிரி பார்த்துக்கறேன். ஒரு பேச்சுக்காக சொல்றேனு நினைக்க வேணாம். நிறைஞ்ச நெஞ்சோடத்தான் சொல்றேன்” என்று அவன் சொல்லி முடிக்கவும் கையில் காபி டம்ளருடன் சித்ரா வரவும் சரியாக இருந்தது.

கூடவே,  சித்ரா வாங்கி வந்திருந்த மிக்சரையும், மைசூர் பாகையும் தனித்தட்டில் வைத்து எடுத்து வந்தாள் கவிதா.

“நீங்கதான் சார் சொல்லனும்” என்று புன்முறுவலுடன் அமைதியை களைத்தான் ரகுவரன்.

“சித்ராவுக்கும் சம்மதம்னு தெரிஞ்சதுக்கப்புறம் நாங்க ஏன் குறுக்கே நிற்கப் போறோம், எங்களுக்கும் சம்மதம்தான். ஒரு நல்ல நாளா பார்த்துட்டு முகூர்த்தத்தை வெச்சுக்கலாம்” என்றார் மணிமாறன்.

“கல்யாணசெலவு முழுசும் என்னோடது” என்றான் ரகுவரன்.

சித்ராவின் கல்யாணம் அடுத்த பத்துநாட்களில் இனிதே நடந்து முடிந்தது.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தாய்மையின் தவிப்பில் ஓர் இரவு (சிறுகதை) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

    ஒரு அகதியின் கடிதம் (சிறுகதை) – ✍ வெண்பா, திண்டுக்கல்