in

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்? (சிறுகதை) – ✍ சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்? (சிறுகதை)

நவம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பொன்னுசாமிக்கு வாழ்க்கை இனிமையாகத்தான் போய்க் கொண்டிருந்தது.  மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று, ஒரு நாகரிகமான தொகையை மாதாமாதம் ஓய்வூதியமாகப் பெற்றுக் கொண்டிருந்த‌ அவருக்கு, ஆண்டவன் எந்தக் குறையும் வைக்கவில்லை என்பதே அவரது எண்ணமும். 

குறையென்று சொல்ல வேண்டுமானால், நான்கு வருடங்களுக்கு முன்பு திடீரென்று காய்ச்சல் என்று படுத்த மனைவி சிவகாமி, நீண்டகால வைத்தியத்திற்குப் பின் காலமானதுதான்.

அந்தக் குறையை  இட்டு நிரப்புவது போல, ஆண்டவன் அவருக்கு ஒரு நல்ல மகனையும், குணவதியான ஒரு நல்ல மருமகளையும் கொடுத்திருந்தான்.  அத்தோடு  விடாமல், ஆறு வயதில் ஒரு பேரனையும், நான்கு வயதில் ஒரு பேத்தியையும் கொடுத்து பொன்னுசாமியின் வீட்டை கலகலப்பாக்கியிருந்தார், அவர்  தினமும் நெஞ்சார வழிபடும் அவரின் கடவுள். 

மகன் சரவணனுக்கு மாநில அரசில் கிளர்க் வேலை, மருமகள் சாந்தி பேங்கில் வேலை என்பதால் பொருளாதார  ரீதியாக  இதுவரை எந்த நெருக்கடியும் அந்தக் குடும்பத்திற்கு ஏற்பட்டது இல்லை.

இருந்தாலும், சரவணனுக்கு மனதில் ஒரு குறை மாத்திரமே இருந்தது. அப்பா பொன்னுசாமியின் ஓய்வுக்குப் பிறகு அவரை ராஜா போல் வைத்துக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்திருந்தான்.  அதுவும் அம்மாவின் மறைவுக்குப் பிறகு அந்த எண்ணம் வலுத்தது.  காரணம், அவனை வளர்த்தி,  படிக்க வைக்க அவர் பட்ட சிரமங்களை அவன் கண்கூடாகக் கண்டவன். 

அக்காவின் திருமணத்தில் அவரின் சேமிப்பின் பெரும் பகுதி செலவழிய, மீதமுள்ள சேமிப்பு அம்மாவின் வைத்தியச் செலவுக்குக் கரைய, அவனின் படிப்பிற்காக அவர் காசுக்கு அலைந்தது அவனால் இன்று வரை மறக்க முடியவில்லை. 

உறவினர் ஒருவரின் பைனான்ஸ்சில் வட்டிக்கு வாங்கி, வட்டி கட்டுவதற்கே அவர் பட்ட சிரமங்கள்தான் எத்தனை?ஆனால் இன்றுவரை அதை அவர் வெளியிலோ, அவனிடத்திலோ சொல்லிக் காண்பித்ததில்லை என்பதுதான் அவர் மேல் அவன் கொண்ட மரியாதையின் உச்சம். 

அப்படிப்பட்ட மனிதரை சாந்தி இடைவிடாமல் இப்போது வேலை வாங்கிக் கொண்டிருப்பதுதான் அவனின் பெரும் குறை. சாந்தி மோசமான குணம் கொண்ட பெண்ணாயிருந்தால் கூட, அவளிடம் சண்டைக்குப் போயிருப்பான். 

இந்த ஒரு விசயத்தைத் தவிர அவள் மீது எள்ளளவும் குறை சொல்லவே முடியாது. ஆனால் அவனுக்குப் புரியாதது என்னவென்றால், படுரோசக்காரரான அவன் அப்பா, அலுவலகத்தில் மற்றவர்களை விரட்டி விரட்டி வேலை வாங்கிய அவன் அப்பா, சாந்தி சொல்கின்ற எல்லா வேலைகளையும் முகம் சுளிக்காமல் செய்து கொண்டிருப்பது எப்படி என்பதுதான்.

காலை ஐந்து மணிக்கு பொன்னுசாமியை எழுப்பி விட்டு, பால் வாங்கி வர அனுப்புவாள் சாந்தி.  பால் வாங்குமிடம் வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும்.

பாலை வாங்கிக் கொண்டு வரும் போதே, வழியில் கிடைக்கும் அடுத்த நாளுக்குத் தேவையான காய்கறிகள், கீரை போன்றவற்றையும்  வாங்கி வந்து விடுவார்.  வந்தவுடன் புதுப்பாலில் அவருக்கு ஒரு நல்ல காப்பி கிடைக்கும். காப்பி குடித்து முடிப்பதற்குள், அவர் அன்றைய சமையலுக்கு நறுக்கித் தர வேண்டிய காய்கறிகள் டேபிளில் தயாராய் இருக்கும். 

அவர் காய் நறுக்கிக் கொடுத்தவுடன் சமையலில் முழுமூச்சாய இறங்கி விடுவாள் சாந்தி.  பேரன் பேத்தியை எழுப்பி, அவர்களை பல் துலக்க வைத்து, குளிக்க வைத்து தயாராக்குவது பொன்னுசாமிதான். 

அதற்குள் சமையல் முடிந்திருந்தால், இரண்டு குழந்தைகளுக்கும் டிபன் பாக்சில் மதிய உணவும் போட்டு வைத்து விடுவார்.  குழந்தைகள் காலை டிபன் சாப்பிடும்போதுதான் கொட்டாவி விட்டுக் கொண்டு எழுந்து வருவான் சரவணன். 

குழந்தைகள் இருவரையும் பள்ளிப் பேருந்தில் ஏற்றி விட்டு விட்டு வந்தபின்னர் தான் குளித்து, காலை உணவு உட்கொள்வார்.  அதற்குள், சரவணனும், சாந்தியும் அலுவலகம் கிளம்பி விடுவார்கள். 

போகும் போது அன்று ஏதாவது கரண்ட் பில் அடைப்பது, பேங்க் வேலை என்று முக்கிய வேலை இருந்தால் அதுவும் பொன்னுசாமிக்குக் கொடுத்து விடுவாள் சாந்தி. 

மீண்டும் மாலை நான்கு மணிக்கு பள்ளியிலிருந்து வரும் பேரன், பேத்தியை வீட்டிற்குக் கூட்டி வந்து, சாந்தியும், சரவணனும் வரும் வரை பார்த்துக் கொள்ளுவதும் அவர் வேலை தான்.                                    

இப்படி இடைவிடாமல் அவரை சாந்தி வேலை வாங்குகிறாள் என்பது தான் சரவணனின் குறை.  மனதில் வைத்துப் புழுங்காமல் சாந்தியிடம் கேட்டுவிட வேண்டும் என்று இருந்த சரவணனுக்கு ஒரு ஞாயிறன்று வாய்ப்புக் கிடைத்தது.  குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு அப்பா அருகிலுள்ள பார்க்குக்குப் போயிருந்தார்.

அவனின் குற்றச் சாட்டு அவளுக்கு ஒன்றும் அதிர்ச்சி அளிக்கவில்லை.  இதை அவள் முன்னமே எதிர்பார்த்திருந்தாள்.  ஒரு நிமிடம் யோசித்துவிட்டு பதிலளித்தாள்,

“பல பேரை வைத்து வேலை வாங்கிய ஒரு அதிகாரியின் மனநிலை எப்படி இருக்கும் என்பது உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம்.  ஆனால் சைக்காலஜி படித்த எனக்குத் தெரியும்.  ஓய்வு பெற்று, மாலை மரியாதை பெற்று வீட்டிற்கு வரும்போதே பாதி பலம் போய்விட்டது போல் உணர்வார்கள். அதுவும் மனைவியை இழந்தவர்கள் அதிகாரம் செய்ய வீட்டில் மனைவியும் இருக்க மாட்டார். சர்க்காரே, தன்னை உபயோகம் இல்லாதவன் என்று வீட்டுக்கு அனுப்பிவிட்டதே என்ற குறையுடனேயே இருப்பார்கள்

அத்துடன் வீட்டில் உள்ளவர்களும், ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு வேலையும் கொடுக்க வேண்டாம் என்று இருந்தால், தான் யாருக்கும் உபயோகம் இல்லாதவன் ஆகிவிட்டோம் என்ற எண்ணம் அவர்களுக்கு வலுத்து, மன நோய் வருவதற்கும் வாய்ப்புண்டு. வெட்டியாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோமே என்ற மனக் குறையும் தோன்றும். 

இந்த நிலை மாமாவுக்கு வரக் கூடாது என்பதற்காகத்தான் நான் அவரிடம் என் மனசாட்சிக்கு விரோதமாக சிறு சிறு வேலைகளை வாங்கிக் கொண்டிருக்கிறேன்.  காலையில் பால் வாங்க அனுப்புவது ஒரு சாக்கு. அதன் மூலம் அவர் காலை நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கம். 

மாமாவின் போனின் லொக்கேசனை ஒரு ஆப் மூலம் என் போனில் போட்டு வைத்துள்ளேன். அவர் எங்கே இருக்கிறார் என்பதை இதன் மூலம் நான் அலுவலகத்தில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும்.  தவிரவும், காலையிலிருந்து மாலை வரை நானும், மாமாவும் வாட்ஸப் தொடர்பில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? 

ஒரு தந்தையின் அன்பை அவரிடமிருந்து நானும், ஒரு மகளின் கண்டிப்புடன் கூடிய அன்பை என்னிடமிருந்து அவரும் பரிமாரிக் கொண்டிருக்கிறோம். அது தெரியாமல் ஏதாவது ஏடாகூடமாக மாமாவிடம் பேசி விடாதீர்கள்.  நான் சொன்னது புரிந்ததா?” என்று முடித்தாள் சாந்தி.  

இத்தனை வருடங்கள் உடன் வாழ்ந்தும், மனைவியைப் புரிந்து கொள்ள முடியாததற்கு வெட்கப்பட்டுக் கொண்டே தலையை அசைத்தான் சரவணன்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. முழுமையும் படித்தேன். மிகவும் அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள் திரு Chinnasamy Chandrasekharan

வல்லபி ❤ (இறுதிப்பகுதி) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

சிவனடியார் (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி.