நவம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
செங்கட்டாங்குடி கிராமமே அந்த கருக்கல் நேரத்தில் அமைதியில் ஆழ்ந்திருந்தது. சேவல் கூவி பொழுது புலர்ந்ததை அறிவித்துக் கொண்டிருந்தது.
காலை கதிரவன் தன் செங்கதிர்களை பரப்பி வானத்தை சிவக்கடித்துக் கொண்டிருந்தான். வாசலில் நின்ற வேப்பமரத்தின் குளிர்காற்று வீட்டுக்குள் பரவி ஒரு இதமான சூழலை கொடுத்தது.
மரக்கிளையில் காத்திருந்த அணில்களும்.. கிளைகளில் அமர்ந்திருந்த காகங்களும் வெண்மதி வைக்கப்போகும் உணவை எதிர்பார்த்து காத்திருந்தன.
ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் முதல் சாம பூஜை மணியோசையின் டணார்.. டணார்.. என்ற சப்தம் கிராமத்தை நிறைத்தது.
கோவிலுக்கு வரும் சிவனடியார்கள் ஆண்டவனை கண்குளிர தரிசனம் பண்ணிய பின் நாடுவது உணவளிக்கும் சத்திரமாய் விளங்கிய அயனசேனர் இல்லத்தை தான்.
அயனசேனரும், அவர் இல்லாள் வெண்மதியும் நாடி வரும் சிவனடியார்களுக்கு மனம் கோணாமல் உணவளித்து, உபசரித்து வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர்.
தன் அருகே வந்து நின்ற மனைவியை ஏறிட்ட அயனசேனர், “என்ன வெண்மதி, ஏதும் வேண்டுமா?” என்றார் கனிவோடு.
“ஒன்றுமில்லை ஐயனே… நான் பண்ணையார் தோட்டம் வரை சென்று வருகிறேன். விறகுகள் எல்லாம் ஈரமாக இருக்கின்றன. சமைப்பதற்கு காய்ந்த சுள்ளிகள் பொறுக்கி வருகிறேன். வாழைமரத்தில் காய்கள் கிடைக்கும், முற்றிய தேங்காய்களும் தோப்பில் விழுந்து கிடக்கும். எடுத்துக் கொண்டு, அப்படியே சோளம், திணை, கம்பு என ஏதாவது பறித்துக் கொண்டு வருகிறேன். அதை வைத்து நாளைய பொழுதை ஓட்டிவிடலாம்” என்றாள்.
மனசங்கடத்துடன் அவளை நிமிர்ந்து பார்த்தார் அயனசேனர்.
“ஏன் வெண்மதி! வீட்டில் ஏதுமில்லையா?” என்றார்.
“சிறிது அரிசி குருணையும்.. கொல்லையில் பறித்த முருங்கைக் கீரையும் இருக்கிறது. அதை வைத்து இன்று வரும் அடியவர்களுக்கு உணவளித்து விடலாம்” என்றாள் நம்பிக்கையுடன்
“வெண்மதி! உன் மனது யாருக்கு வரும்? இல்லையென்று சொல்லாத பெண்ணரசி நீ! உன்னை நான் சங்கடத்திற்கு உள்ளாக்குகிறேன். அடியவர்களுக்கு உணவிட இதுவரை நம்மிடம் போதிய செல்வம் இருந்தது. இப்போது அன்றன்றைக்கு என்ன கிடைக்கும் என்று பார்த்து சமாளிக்க வேண்டிய நிலைமை. நீதான் பாவம் என்ன செய்வாய்?” என மனம் நெகிழ்ந்தார்
வெண்மதி பக்கத்து ஊரின் பெரிய வணிகரான மாசாத்துவானின் செல்வமகள். மிகுந்த செல்வத்தோடும் பொருளோடும் அயனசேனரை திருமணம் செய்து கொண்டு இந்த வீட்டிற்கு வந்தாள்.
வந்த நாள் முதல் அவள் அவருடைய கூற்றிற்கு எதிராக எதுவும் செய்ததில்லை. அவர் மனம் கோணாமல் இன்றுவரை நடந்து வருகிறாள்.
சிவபக்தியில் அவர் மனம் திளைத்திருப்பது போலவே, அவளும் சிவபக்தியை மிக்கவளாக இருந்தாள். அடியவர்களுக்கு தினமும் உணவிட்டு விட்டு, உண்பது அவர்கள் வழக்கம். இதுவரை பசியென்று வந்த அடியவர்களுக்கு உணவிடாமல் இருந்ததில்லை.
கையில் இருந்த பொருளெல்லாம் சிவதொண்டிற்கு பயன்படுத்தியாகி விட்டது. இனிவரும் நாட்களில் எப்படி தொண்டை மேற்கொள்வது. அயனசேனர் மனதில் ஒரு கலக்கம் எழுந்தது.
மறுநாள் வெண்மதி சமைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அயனசேனர், “வெண்மதி! நான் சற்று வெளியே சென்று வருகிறேன்” என்றார்
“ஆகட்டும் ஐயனே! தாங்கள் கவலையின்றி சென்று வாருங்கள்… அடியவர்கள் வந்தால் அவர்களை தக்கபடி உபசரித்து நானே உணவு பரிமாறி விடுகிறேன்”
அந்தி சாயும் பொழுதில் வீடு திரும்பினார் அயனசேனர்.
“வெண்மதி இன்று வந்த அடியவர்களுக்கு உணவிட்டு விட்டாயா?”
“ஆமாம் ஐயனே! அவர்களை நன்றாக உபசரித்து, அவர்கள் மனம் கோணாமல், என்னால் முடிந்த இனிய உணவுகளை படைத்தேன். அவர்களும் மனமகிழ்ந்து சென்றனர். ஐயனே தாங்கள் உணவு உண்ண வாருங்கள்” என்று அழைத்தாள்.
கை கால்களை கழுவிய பின் வாழை இலையில் உணவு உண்ண அமர்த்த அயனசேனரின் கைகளைப் பார்த்து திடுக்கிட்டாள் வெண்மதி.
“ஐயனே! தங்கள் கைகள் ஏன் சிவந்து, தடித்து இருக்கின்றது, என்ன ஆயிற்று தங்கள் கரங்களுக்கு?”
“ஒன்றுமில்லை வெண்மதி”
“ஐயனே! தாங்கள் காரணத்தை கூறினால் தான் என் மனம் நிம்மதியுடையும்” என்றவள், உரியில் வைத்திருந்த தேனை எடுத்து மயிலிறகால் தேனை அவர் கரங்களில் தடவி, நீவி விட்டாள். இதமான உபசரணை ஆறுதல் அளிக்க நித்ரா தேவி அவரை ஆட்கொண்டாள்.
மறுநாள் காலை அயர்வு நீங்கியவராக எழுந்தார் அயனசேனர்.
” ஐயனே! நேற்று நான் கேட்ட கேள்விக்கு தாங்கள் பதில் கூறவில்லையே! தங்கள் கைகள் ஏன் சிவந்திருந்தன? தாங்கள் நேற்று பகல் பொழுதில் எங்கு சென்றிருந்தீர்கள்?” என்று வெண்மதி கேட்க
“என் நண்பர் தேவதத்தனை சந்திக்க போயிருந்தேன்” என்றவருக்கு நேற்றைய பொழுதில் நடந்தவை மனதில் நிழலாடியத
“நண்பரே! எனக்கு ஏதேனும் வேலை இருந்தால் வாங்கி கொடுங்கள். எனக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கித் தந்தால் பொருள் கிடைக்கும்” என்றார் பணிவுடன்.
“உமக்கு எதுக்கு வேலை அயனசேனரே?”
“ஐயா! அறப்பணிகளுக்கு பொருள் தேவைப்படுகிறது. எம்மிடம் செல்வம் இருந்தவரை அதைக்கொண்டு அறச்செயல்கள் செய்து வந்தோம். தற்சமயம் அறச்செயல்கள் தடைபடாமல் செய்ய பொருள் தேவைப்படுகிறது, எனவே நான் ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து பொருளீட்டலாம் என்ற முடிவுடன் தங்களை சந்திக்க வந்தேன்”
“மாசாத்துவான் மருமகன் தாங்கள் வேலை செய்வதா?”
“நல்ல முறையில் உழைத்து பொருள் ஈட்டுவது தவறாகாது நண்பரே! எனவே தாங்கள் சற்று யோசிக்க வேண்டாம். எனக்கு ஒரு வேலை வாங்கித் தாருங்கள்” என்று கூற, தேவதத்தன் யோசித்தார்.
“தற்சமயம் அரண்மனையில் வேலை எதுவும் இல்லை. ஆனால் நந்தவனத்து செடிகளுக்கு நீர்பாய்ச்சும் வேலை மட்டுமே இருக்கிறது. அதை எப்படி தங்கள் செய்ய முடியும்?” என்றார்
“தாராளமாகச் செய்கிறேன். இதில் என்ன குறையிருக்கிறது? பசுஞ்செடிகளுக்கு நீர் பாய்ச்சுவதில் உண்டான இன்பமே தனிதான்”
“கிணற்றிலிருந்து அல்லவா நீர் எடுக்க வேண்டும்!”
“அதில் சிரமம் ஒன்றுமில்லை நண்பரே! நான் கண்டிப்பாக அந்த வேலையை செய்கிறேன்” என்றார் அயனசேனர்.
சிறிது கடினமாக இருந்தாலும், வெண்மதியின் சிரமத்தை மனதில் கொண்டு அந்த வேலையை பார்த்த போது அவர் மனதிற்கு நிறைவாக அந்த வேலையை செய்ய முடிந்தது.
“வெண்மதி… நான் தற்சமயம் செய்யும் வேலையில் கிடைக்கும் பொருளை உன்னிடம் தருகிறேன், நீ அதைக் கொண்டு தினமும் சமையலுக்கு தேவையானதை வாங்கிக் கொள்” என்றார்.
தன் கணவர் கடினமான வேலையை செய்ய வேண்டியதை நினைத்து வெண்மதியின் மனம் கலங்கியது. ஆனால் வேறு வழியும் தெரியவில்லை. பெரிதாக பொருள் கிடைக்கவில்லையென்றாலும் அன்றாடத் தேவைக்கு அவர் ஈட்டிய பொருள் போதுமானதாக இருந்தது.
வெண்மதியும் கட்டும் செட்டுமாக அக்கம்பக்கம் கிடைக்கும் காய்கறிகளையும் கீரை வகைகளையும் கொண்டு வரும் சிவனடியார்களுக்கு இன்னமுது படைத்து உபசரித்து வரலானாள்.
சில காலம் இப்படியே சென்றது.
ஒருநாள் காலை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் காலை பூஜை முடித்து சிவனடியார்கள் வர, அவர்களுக்கு அமுதளித்தாள் வெண்மதி. அவர்கள் அனைவரும் உண்டு மகிழ்ந்து இளைப்பாறி சென்ற பின், கதவை பூட்டிவிட்டு வெளிக் கிளம்பினாள்.
வேலை சீக்கிரமாக முடிய, அயனசேனர் அன்று இயல்பாக வரக்கூடிய நேரத்திற்கு முன்னதாகவே வீடு திரும்பினார். வாசற்கதவு பூட்டப்பட்டிருக்க, வெளியே சிவனடியார் ஒருவர் அமர்ந்திருப்பதைப் பார்த்து திடுக்கிட்டார்.
“அடியார்க்கு வணக்கம்! தங்கள் பாதம் பணிந்து தங்களை என் இல்லத்திற்கு வரவேற்கிறேன். தங்கள் வரும் சமயம் நான் வீட்டிலிருந்து தங்களை உபசரிக்கத் தவறியதற்கு மன்னிப்பு கோருகிறேன்”
அப்பொழுது வெண்மதியும் வந்து சேர, சிவனடியாரை பார்த்து திடுக்கிட்டவள், தன்னுடைய மனஉணர்வுகளை மறைத்துக்கொண்டு, அவர் பாதங்களில் விழுந்து வணங்கி, “ஐயா! மன்னித்துக் கொள்ளுங்கள்… தாங்கள் வரும் சமயம் தங்களை உபசரிக்க இல்லத்தில் இல்லாமல் போய்விட்டேன்” என்றபடி கதவை திறந்து உள்ளே அழைத்து உபசரித்தாள்.
“ஐயா சற்று இளைப்பாருங்கள்! நான் சிறிது நேரத்தில் உணவு சமைத்து தங்களுக்கு அமுதளிக்கிறேன்!” என்றபடி உள்ளே சென்றாள்.
கோபத்துடன் உள்ளே வந்த அயனசேனர், “நீ செய்தது மாபெரும் குற்றம் வெண்மதி.. உணவை நாடி சிவனடியார் வரும்போது அவரை உபசரிக்க நீ ஏன் இல்லத்தில் இல்லை? எங்கே சென்றாய்?”
“என்னை மன்னித்து விடுங்கள்! என்னுடைய செயலுக்கு தாங்கள் என்ன தண்டனை அளித்தாலும் ஏற்றுக் கொள்கிறேன். சிவனடியாருக்கு உணவளித்து உபசரித்து அனுப்பிய பின் நாம் பேசிக் கொள்ளலாம்” என்றாள் பணிவாக.
அதன் பின்னரும் அயனசேனர் கோபம் தணியாமல் மனைவியிடம் கடுமையாகப் பேச, “அயனசேனரே! நான் ஒரு கொள்கை வைத்திருக்கிறேன். கணவன் மனைவி கருத்து வேறுபாடு உள்ள இல்லத்தில் நான் உணவருந்துவதில்லை… எனவே நான் கிளம்புகிறேன்” என்றார் சிவனடியார்.
பதறிப் போனார் அயனசேனர்.
“ஐயா தாங்கள் இவ்வாறு கூறுவது என் துரதிர்ஷ்டம். நானும், என் மனைவியும் மனமொத்து சிவனடியார்களுக்கு உணவுவளித்து வருகிறோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. என் மனைவி இல்லத்தை பூட்டி தங்களை உச்சரிக்காமல் சென்றதற்குதான் கோபித்துக் கொண்டேன். மற்றபடி அவள் என் மனம் இசைய நடக்கும் தர்மபத்தினி” என்றார்.
வெண்மதியும் அங்குவந்து, “சுவாமி! என் பிழை பொறுக்க வேண்டும், என் கணவர் சிவனடியார்களுக்கு உணவளிக்க மிகவும் சிரமத்துடன் பொருளீட்டி வரும்போது, நான் வீட்டில் இருக்க என் மனது ஒப்பவில்லை. எனவே பண்ணையார் இல்லத்தில் உள்ள தோட்டத்தில் வேலைகளை கவனித்து வருகிறேன். அதற்கு ஈடாக கிடைக்கும் காய்கறி, கீரை, கனி வகைகளை சிவதொண்டிற்கு பயன்படுத்தி வருகிறேன்”
“இதை ஏனம்மா நீ முன்னரே உன் கணவரிடம் கூறவில்லை?”
“சுவாமி! இதைக் கூறினால் அவர் என்னை வேலை பார்க்க அனுமதிக்க மாட்டார். அவர் மனம் மேலும் புண்படும். எனவே சிவனடியார்கள் வந்து சென்றபின், அவர் திரும்பி வருவதற்குள் என்னுடைய பணியை மேற்கொள்வேன். இந்த நேரத்திற்கு, பூஜை முடிந்த பின், சிவனடியார் யாரும் வரும் பழக்கம் இல்லாததால் நான் சற்று நிதானமாக இருந்துவிட்டேன். மன்னிக்க வேண்டும்” என்றாள்.
“ஆகா…. ஒருமித்த கருத்துள்ள தம்பதி. கணவன் மனம் புண்படக் கூடாது என்று நினைக்கும் மனைவி… மனைவியை விட்டுத் தராத கணவன்… உம்முடைய தாம்பத்தியம் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாய் இருக்கட்டும். இல்லறத்தை நீவிர் நல்லறமாக கொண்டு, சிவத்தொண்டு செய்து வருவதை அறிந்து உம்மை காண வந்தேன். உம்மைப் பற்றி பிறர் கூறுவது சரியாவென அறியவே சற்று காலம் தாழ்த்தி வந்தேன்” என்றபடி சிவனடியார் வேடத்தைக் கலைத்தார் அந்நாட்டின் மன்னன் ராஜசிம்மன்.
“மன்னா! எங்களை மன்னிக்க வேண்டும்” என்று இருவரும் அவர் காலில் விழுந்தனர்.
“தங்களை யாரென்று அறியாமல் பேசி விட்டோம், பிழை பொறுத்தருள வேண்டும். எங்கள் குடிசைக்கு தாங்கள் எழுந்தருளியுள்ளது எங்கள் பாக்கியம்”
“அயனசேனரே! நீர் அரண்மனையில் பணிபுரிவதை தற்செயலாகவே அறிந்து கொண்டேன். மாசாத்துவான் மருமகன் இந்த பணியை செய்து வர காரணம் என்னவென கேட்கும்போது, உம்மைப்பற்றி விஷயங்கள் தெரிய வந்தது. உம்மையும் உம் தர்மபத்தினியும் நேரில் காணவே சிவனடியார் வேடத்தில் வந்தேன். ஆஹா என்னவொரு மனமொத்த தம்பதி. நீவிர் இருவரும் சிவதொண்டு செய்ய பொருளுதவியளிக்க நான் ஏற்பாடு செய்கிறேன்”
அயனசேனர் சற்று தயக்கத்துடன், “அரசே! தங்களிடம் அடியேன் ஒரு விண்ணப்பம். இந்த சிவத்தொண்டு நான் உழைத்து என்னுடைய பணத்தில் செய்யவே விரும்புகிறேன். தாங்கள் எனக்கு அதற்கு அனுமதியளிக்க வேண்டும் ” என்றார் விநயத்துடன்.
“தாராளமாக இதுவே உமது நற்பண்பை காண்பிக்கிறது. நீவிர் இதுவரை செய்த வேலையை விடுத்து ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் வரவு செலவுகளை கவனிக்கும் பணியை மேற்கொள்ளும். உம் வீட்டின் அருகிலேயே ஒரு இடமளிக்கிறேன். அதில் உம் தர்மபத்தினி காய்கறிகள், கீரைகளை தோட்டமிட்டு வளர்த்து அதனை சிவதொண்டிற்கு பயன்படுத்திக் கொள்ளட்டும். உம் சேவை தொடரட்டும்… இல்லறம் நல்லறமாக நன்மக்களைப் பெற்று, எல்லோருக்கும் உதாரணமாக திகழுங்கள்” என்றார் ராஜசிம்மன்.
மன்னன் கூற்றுப்படியே இருவரும் பல்லாண்டு காலம் சிவத்தொண்டாற்றி, நன்மக்களை ஈன்று… ஆண்டுகள் பல ஆனபின் ஜீவமுக்தி அடைந்தனர்.
(முற்றும்)
“சிவனடியார்களுக்கு ஆற்றும் தொண்டு அந்த சர்வேஸ்வரனுக்கேச் செய்யும் தொண்டே ஆகும் என்று கருதிச் செயல்பட்ட அந்தத் தொண்டனை எவ்வளவு புகழ்ந்தாலும் அவைகள் போதுமா? போதவே போதாது தான் என்பது ஆன்றோர்களின் கருத்தாகும். அதுவே உயர்ந்த பக்திக்கு உதாரணமும் ஆகும் என்று சொல்லவும் வேண்டுமா?
“ம.கி. சுப்ரமணியன்.”
எண் 12, லோகநாதன் முதல் தெரு,
சூளைமேடு,
சென்னை-600076.இந்தியா.