in

காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 20) – ✍ விபா விஷா, அமெரிக்கா

காதலாய்த் ❤ (பகுதி 20)

நவம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9  பகுதி 10   பகுதி 11  பகுதி 12  பகுதி 13  பகுதி 14  பகுதி 15  பகுதி 16  பகுதி 17  பகுதி 18  பகுதி 19

புலராத பொழுது என்று ஒன்று உண்டா? மல்லிகை மணக்காத நாளும் இங்கு உண்டா? மழை சுமக்கும் நீரதமும், மாரி பொழியாது போவதும் உண்டா?

அதுபோலப் பெண் சுமக்கும் சிறுசிசுவும் தன் இருப்பை மறப்பதுண்டா? ஆம்… அவள் கணவன் அவளை வீட்டை விட்டு துரத்தும் முன்னரே அவளுக்குத் தான் கரு உண்டாகி இருப்பது தெரிந்துதான் இருந்தது. ஆனாலும் அவள் அதை அவனிடம் கூறவில்லை.

அவ்வளவு நேசமுடன், பாசமாகத் தாயின் மறுஉருவாக தன்னைப் பார்த்துக் கொள்ளும் மாமியாரிடம் கூட அவள் எதுவும் உரைக்கவில்லை. அன்றிரவு அந்தக் கொட்டும் மழையில் வீட்டைவிட்டு வெளியேறிய மாமியாரும் மருமகளும் எங்குச் செல்வது, யாது செய்வது என எதுவும் தெரியாமல் இந்த இடத்தை விட்டு தப்பித்தால் போதும் என்று மனநிலையுடன் அடுத்தப் பஸ்ஸில் ஏறி அடுத்தடுத்த ஊருக்கு சென்றிருந்தனர்.

அப்படி அவர்கள் இறுதியாகச் சென்ற இடம்தான் வேலூர். அவர்களின் அந்தப் பேருந்து பயணத்தின் பொழுதே அவள் மாமியாருக்கு அவள் கருவுற்றிருப்பாளோ என்ற சந்தேகம் சிறிதளவு எட்டிப் பார்த்தது.

ஆனால் இந்த நிலையில் இருக்கும் மருமகளிடம் இந்தச் சந்தேகத்தைக் கேட்பது சரியா எனவும் அவர் யோசித்தார். ஏனென்றால், அப்படி ஒருவேளை அவள் கருவுற்றிருந்தாள் என்றால், அடுத்த என்ன செய்வது என்ற சிந்தனையும்… அப்படி இல்லாவிட்டால் அது அவள் ஏற்கனவே பட்டிருக்கும் மரணக் காயத்துள் கத்தியை விட்டு கீறுவது போலாகாதா?

எனவே தான் இப்போதைக்கு அமைதியாய் இருந்து அவளைக் கவனித்துக் கொள்வது மட்டுமே மேற்கொள்ளலாம் என்ற முடிவில் இருந்தார். ஏனென்றால் மருமகளும் அப்படி ஒன்றும் முட்டாள் அல்ல. நிஜம் தானே… பாசத்துக்காக ஏங்குபவர் எவரும் முட்டாளும் அல்ல. பாசம் காட்டுவதாக நடிப்பவர் எவரும் அறிவாளிகளும் அல்ல என்பது நிதர்சனம் தானே.

மனம் போன போக்கில் போய்க் கொண்டிருந்த அவ்விருவரும் இறுதியில் வேலூரை அடைந்ததும், அங்கு ஏதோ சிறு வீடெடுத்துத் தங்கி தங்களால் ஆன வேலைகளைப் பார்த்து வந்தனர்.

அப்பொழுதே தான் உண்டாகி இருப்பதை மாமியாரிடம் தெரிவித்து விட்டாள். அதை அறிந்த அவள் மாமியார் மிகுந்த ஆனந்தம் அடைந்து, “நாம இப்பவே இந்த விசயத்த உன் புருஷன்கிட்ட சொல்லிடலாம்மா.. நீ மாசமாகாதது தான் அவனுக்குக் கோபம். இப்போ நீ உண்டாகியிருக்கறது தெரிஞ்சா, அவன் உன்ன சந்தோஷமாவே ஏத்துப்பான்” எனக் கூறினார்.

அவர் கூறியதை கேட்ட அந்தப் பெண் பதிலேதும் உரைக்காமல் தன் போக்கில் தான் செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

“என்னமா நான் சொல்றேன், நீ எதுவுமே பதில் பேசாம இருக்க?” என்று கேட்க

“அப்ப ஒரு பொண்ணுக்கு குழந்தை பெற தகுதி இல்லைனா, அவ அவளோட புருஷன் கூட வாழ தகுதி இல்லாதவளா அத்தை? இந்த உலகத்துல ஒரு பொண்ணுக்கான தகுதியா என்னென்னவெல்லாம் இருக்கு அத்தை? ஒரு பொண்ணு படி தாண்டாம இருந்தா அவ நல்ல பொண்ணு. இதே தன்னோட வீட்டுக்காக நாளெல்லாம் ஓடா உழைச்சுட்டு, பொழுது சாய்ந்த பின்னாடி வீட்டுக்கு வரவப் பத்தி என்னென்னவெல்லாம் பேசுறாங்க?

அதே மாதிரி அந்தப் பொண்ணு அவ பிறந்த வீட்டுல அத்தனை வருஷம் செல்ல பொண்ணா, மகாலட்சுமியா வெச்சு பார்த்துட்டு இருப்பாங்க. ஆனா அதே பொண்ணு வேற ஜாதி பையனை காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டா அவள தன்னோட ரத்தம்.. தன்னோட உயிர்.. தன்னோட பொண்ணு.. அப்படின்னு கூடப் பார்க்காம வெட்டி சாய்க்க தயங்கறதில்லை.

இதுல பொண்ணுங்க கைல தான் அந்த வீட்டு மானம் இருக்குதாம். இதே பையன் காதல் கல்யாணம் செய்யறப்ப அவங்க வீட்டு அருவாள் எல்லாம் அவங்கவீட்டு கொல்லைக்குள்ள ஓடிப்போய் பதுங்கிடும் போல. அதே மாதிரி கல்யாணம் ஆன பொண்ணு, அவ மாமியாருக்கு அடங்கியிருக்கனும்.. மாமனாருக்கு மரியாதைய கொடுக்கணும்.. அப்படினு சொல்றதெல்லாம் கூட வேற. அவங்க பெரியவங்க.. நாம கொஞ்சம் விட்டு கொடுத்துப் போனா தப்பில்லைன்னு சொல்றாங்கன்னு ஒத்துக்கலாம்.

ஆனா அவங்க எவ்வளவு கொடுமை செஞ்சாலும், புருஷன் அடிச்சாலும் கொன்னு புதைச்சாலும்.. அது அவ வீடாம். அவ புருஷனாம். அவனுக்கு எல்லா உரிமையும் இருக்காம். அதனால அவ எல்லாத்தையும் தாங்கிக்கனுமாம். ஏன்னா, பொண்ணுங்கன்னா பூமாதேவி மாதிரியாம்.

இதுல இன்னொன்னு வேற அந்தப் பொண்ணுக்கு குழந்தை பிறக்காதுங்கற குறை இருந்தா, அந்தப் பையன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாமாம். ஆனா பையனுக்குக் குறை இருந்தா அதை வெளியே கூடச் சொல்ல மாட்டாங்க.

இதெல்லாம் எந்த விதத்தில் நியாயம் அத்தை? என்னை எனக்காக ஏத்துக்காம, அவன் என்னோட குழந்தைக்காகவோ, இல்ல நான் சம்பாதிக்கிற பணத்துக்காகவோ, இல்ல என் அப்பா, அம்மா செய்யற சீர் செனத்திக்காகவோ என்னை மதிக்கிறவன் எனக்குத் தேவை இல்ல அத்தை.

அதேசமயம் அவனால உருவான இந்தக் குழந்தையை நான் விட்டுட மாட்டேன். ஏன்னா என்னோட காதல் உண்மையானது. இது என்னோட ரத்தம். அவனோட ஒரு துளி சாயல் கூட இல்லாமல் இந்தக் குழந்தையை நான் நல்ல மாதிரி வளர்ப்பேன்” என்றாள்.

இதையெல்லாம் கூறிவிட்டு லயா, அணையை உடைக்கக் காத்திருக்கும் பெருவெள்ளமான விழியின் உவர் நீரை, கண்ணுக்குள்ளே தேக்கி வைத்துக்கொண்டு துளசியைப் பார்த்து, “இப்போ தெரியுதாம்மா? அந்தப் பொண்ணு யாரு.. அவ மாமியார் யார்.. அந்தக் குழந்தை யார்னு? அந்தக் குழந்தை நான் தான். மாமியார்.. என்னோட பாட்டி. அந்தப் பொண்ணு உங்க தங்கச்சி பாகிம்மா.

ஆனா இதுல எனக்குத் தாத்தா மேல ஏன் இவ்வளவு கோபம்னா, என் அம்மாவுக்கு நடந்த அத்தனை கொடுமையையும் அவர் இதே ஊர்ல இருந்து பார்த்தது தான். ஏன்னா என்னோட அப்பாவும் இதே ஊர் தானே?

இவ்வளவு ஏன், என்னோட அம்மாவை அந்த ஆளு வீட்டை விட்டுத் துரத்தியது கூடத் தாத்தாக்கு தெரியும்மா. ஆனா அவர் அதைப் பத்தி எதுவுமே கண்டுக்கல. அந்த ஆளு இன்னொரு கல்யாணமும் செஞ்சிட்டாரு. இவர் எதையும் கேட்டுக்கல.

அப்படி என்னம்மா பாகிமா இவங்களுக்குத் துரோகம் செஞ்சுட்டாங்க? ஒருவேளை தாத்தா நல்லபடியா அம்மாவை ஏத்திட்டு இருந்திருந்தா, அம்மாவுக்கு இப்படி ஒரு நிலைமை அவங்க புகுந்த வீட்டுல ஏற்பட்டிருக்காது இல்லையா.

இது வெறும் பணம் காசுக்காக நான் சொல்லல. ஒரு பெண்ணுக்கு புகுந்த வீட்டுல கிடைக்கிற மரியாதைன்றது, அவளோட பிறந்த வீட்டு மக்கள் அவள எப்படி நடத்துறாங்க.. கல்யாணத்துக்குப் பின்னாடி எவ்வளவு அவளை மதிக்கறாங்க.. அப்படிங்கறத பொருத்தும் இருக்கு.

ஒருவேளை தாத்தாவோட ஆதரவு பாகிமாக்கு கிடைச்சிருந்தா என்னோட அப்பாவும், அவரோட அப்பாவும் இந்த அளவுக்கு அம்மாவுக்கு அநியாயம் செஞ்சிருக்க மாட்டாங்க. ஆனால் இத்தனையும் மீறி பாகியம்மா, என்னோட பாட்டியோட ஆதரவாலையும், தைரியத்தாலையும் தா உயிரோடவே இருந்தாங்க.

அவ்வளவு ஏன்.. தாத்தா அவர்களுக்குக் கொடுத்த படிப்பை கூடத் தன்னோட உயிரை வளர்த்துக்க உபயோகிக்க மாட்டேன்னு வீறாப்பா இருந்து.. கடைசியில வீட்டு வேலை செஞ்சு என்ன வளர்க்கறதுக்காக எனக்காக அந்த உயிரையும் வச்சிட்டு இருந்தாங்க” என்று அவள் அணையை உடைத்த வெள்ளமாய், கண்ணீர் கரை தாண்டி கன்னம் தொட கூறவும்.. அந்தக் கண்ணீரின் எதிரொலிப்பு துளசியின் கண்களிலும்.

“லயாம்மா… எனக்கு இந்த விஷயம் எல்லாம் இவ்வளவு முழுசா தெரியாட்டி கூட நானும் பாகிக்காக அப்பாகிட்ட ரொம்பச் சண்டை பிடிச்சேன் ம்மா. கடைசியா இங்க எனக்கு உறவுமுறிஞ்சு போன பின்னாடியும் கூட, நான் என்னோட தங்கச்சிய தேடுறத நிறுத்தல.

அப்பறம் செழியன் அப்பாக்கும் வேலூரில் அவர் பிரண்டு கூட ஒரு காலேஜ்ல பார்ட்னராகச் சான்ஸ் கிடைச்சது. அதனால நாங்க வேலூர் வந்துட்டோம். அப்போ வீட்டு வேலைக்கு ஆள் பார்த்த போது உன்னோட பாட்டி தான் முதல்ல வந்தாங்க.

அவங்க அப்ப இருந்த நிலைமையில் எனக்கு நிஜமா அவங்கள அடையாளமே தெரியல. ஏன்னா உன்னோட அம்மா கல்யாணத்தப்போ, அப்பறம் கல்யாணத்துக்குப் பிறகுன்னு அவங்கள நான் ஒரு ரெண்டு முறை தான் பார்த்து இருக்கேன்.

அதுக்கு அப்பறம் அவங்கள நான் எப்பயும் பாக்கல. திரும்பவும் நம்ம வீட்டுக்கு வேலைக்குச் சேர்ந்த போது அவங்க ரொம்பவே நொந்து போயி இருந்தாங்க. அதனால அவங்கள எனக்குச் சுத்தமா அடையாளம் தெரியல. உன் பாட்டியும் என்ன ஒரு முறை தான் பார்த்து இருக்காங்க. அதனால அவங்களுக்கும் என்ன சரியா தெரியல.

ஒரு முறை உன் பாட்டிக்கு உடம்பு சரி இல்லாமல் போகவும், உங்க அம்மா நம்ம வீட்டுக்கு வேலைக்காரியா வந்தா. அவளை அந்த நிலைமைல நான் சத்தியமா எதிர்பார்க்கல. எனக்கு அப்ப என்னோட உயிரே வெடிச்சு போய்டுச்சு தெரியுமா? எங்க வீட்டுல அவ தான் கடைக்குட்டி பொண்ணு. அவள நானும் அண்ணாவும் அப்படித் தாங்குவோம்.

என்ன விட ரெண்டு வயசு தான் அவ சின்னப் பொண்ணா இருந்தாலும், நான் அவளை என்னோட குழந்தையா தான் பார்ப்பேன். அப்படிப்பட்ட ஒருத்தி அவ்வளவு அழகோட இருந்தவ, இப்ப அந்த அழகை எல்லாம் போய் முகத்துல உயிர்ப்பே இல்லாம நம்ம வீட்டுல அவள வேலைக்காரியா பார்க்கவும் நான் கதறிட்டேன்.

ஆனால் அவளுக்குள்ள என்னமோ எப்பவோ செத்துருச்சு. அவ நம்ம வீட்டுக்கு வந்ததும் என்ன அவளோட அக்காவா பார்க்கல. என்ன வேலை இருக்கு அப்படின்னு கேட்டுகிட்டே நம்ம வீட்டுல வேலை செய்ய ஆரம்பிச்சுட்டா. உடனே அவ கையைப் பிடித்துத் தடுத்து நான் இன்னும் கதறினேன்.

ஆனா அவ அமைதியா ‘இனி இந்த அழுகைக்கு எல்லாம் எந்த உபயோகமும் இல்ல. நான் உன்னோட வீட்டுல வேலை செய்ய வந்து இருக்கேன். என்ன வேலைக்காரியா மட்டும் பார்த்தேனா, நான் இதே ஊரிலயாவது இருப்பேன். இல்ல உன்னோட தங்கச்சியா பார்த்தா, மறுபடியும் நான் எப்பயும் பார்க்க முடியாத இடத்துக்கு போயிடுவேன். என்ன அந்த அளவுக்குக் கோழை ஆக்காத’னு சொல்லிட்டா.

இதுக்கு மேல நான் என்ன தான் செய்ய? ஆனா அப்பக் கூட அவ உன்ன என் கண்ணுல காட்டல. அவளுக்கு ஒரு குழந்தை இருக்குன்றதே எனக்கு அடுத்த ஆறு மாசம் கழிச்சு தான் தெரியும். அதுக்கும் மேல, அவ என்கிட்ட ஒரு வேலைக்காரி அப்படிங்கறது தவிர வேற எந்தச் சலுகையும் வாங்கிக்கல.

இவ்வளவு ஏன் உன்னைப் பார்த்த பின்னாடி கூட நான் அவகிட்ட கேட்டேன்.. அவளோட புருஷன்கிட்ட பேசுறதா கெஞ்சினேன். ஆனா அவ அதை அடியோடு மறுத்துட்டா. அந்த ஆளு கூடத் திரும்ப வாழ்றது, தான் சாகறதுக்குச் சமம்னு சொல்லிட்டா.

உன்னோட படிப்பு செலவுக்குக் கூட அவ என்கிட்ட காசு வாங்குனது இல்ல. இதை எல்லாம் உன்கிட்ட எந்தக் காலத்துலயும் சொல்லக்கூடாதுனு என்கிட்ட சத்தியம் வாங்கி, என்ன கட்டிப் போட்டு வச்சிருந்தா.

அதே மாதிரி நீயும் அவளோட ஆசைப்படி சாதாரணக் கார்ப்பரேஷன் ஸ்கூல் கூட நல்லாவே படிச்ச. உன்னோட காலேஜ் செலவுக்குக் கூட உன்னோட ஸ்காலர்ஷிப் தான்” என்று துளசி கூறவும், தன் தாயைப் பற்றி ஏற்கனவே இருந்த பெருமிதம் இன்னும் மிக அதிகமாகி கண்களில் ஒளிர்ந்தது.

அந்த ஒளியுடன், லயா.. “ஆமாம்மா… எனக்குப் பாகிம்மாவ பத்தி நல்லா தெரியும். அதே சமயம் உங்க நிலைமையும் நல்லா புரிஞ்சுக்க முடியும். நான் உங்கள என்னோட அம்மாவா தான் அந்தச் சின்ன வயசுல கூடப் பார்த்தேன். பாகிமாவும் அதே தான் சொல்லுவாங்க. ‘உனக்கு நான் எப்படியோ, அதே மாதிரிதான் துளசியம்மாவும்’ன்னு.

ஆனா தன்னோட அப்பா அம்மாவை பத்தி அவங்க எதுவுமே சொன்னதில்லை. எனக்குத் தாத்தா மேலயும், பாட்டி மேலயும் இருக்குற கோபம் பாகிம்மாக்காக மட்டுமே இல்ல. உங்களுக்காகவும் தான். ஏதோவொரு விசேஷத்தில் அப்பாவுக்கும், மாமாவுக்கும் சண்டை வந்துருச்சு. அதுக்காக இத்தனை வருஷம் பொண்ணு வேண்டாம்னு இருந்தாங்கல்ல?

அப்ப என்ன அர்த்தம்? அவங்களுக்குப் பொண்ணுங்கள விட, அவரோட பையன் மட்டும் தான முக்கியம்? இத்தனை நாள் நாம எங்க இருக்கோம்.. எப்படி இருக்கோம்னு கூடத் தெரியாம கண்டுக்காம இருந்துட்டாங்க. இப்போ இந்த வயசான காலத்துல அவங்களுக்கு உங்க ஞாபகம் வந்துருச்சு. உடனே நாமளும் அவங்க கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்துட்டோம்.

ஆனா இப்ப நாம எத்தனை இழந்துட்டோம்? இதையெல்லாம் நினைக்க நினைக்க எனக்கு உடம்பெல்லாம் தீப்பிடிச்ச மாதிரி எரியுது. அதுதான் நானே எவ்வளவு என்ன கட்டுப்படுத்தினாலும், அந்தக் கட்ட எல்லாம் மீறிக்கொண்டு.. என் கோபமெல்லாம் வார்த்தையா வெளிவந்துடுது.

நிஜமா நான் இவங்கள பழி வாங்கனும்னு நினைக்கல. ஆனா எனக்கு ஒவ்வொரு விஷயமும் தெரிய தெரிய என்னோட ஆதங்கம் எல்லாம் இப்படி வெளியில் வருது. இவ்வளவுக்கு மேலயும், நான்.. அந்த ஆளு. என்னோட பிறப்புக்கு காரணமான அந்த மனுஷனையும் நான் சும்மா விடல.

இங்க தான இருக்காரு பக்கத்து தெருவிலேயே? அவரைக் கண்டுபிடிக்க எனக்கு இத்தனை நாள் ஆச்சு. போன வாரம் தான் அவரை நேரடியா நான் போய்ப் பாத்து பேசிட்டு வந்தேன். என்னோட அம்மாக்கு செஞ்ச துரோகத்துக்கு அவருக்கு இரண்டாவது கல்யாணம் நல்லபடியா அமையல.

அவங்க மனைவி என்னமோ நல்லவங்க தான். ஆனா இவரு பண்ற ஆட்டம் எல்லாம் அந்தக் கோடீஸ்வரி பொண்டாட்டிகிட்ட செல்லுபடி ஆகல. அதுமட்டுமில்லாம இவங்களுக்கு வேற எந்தக் குழந்தையும் இல்ல. குறையும் இவர்கிட்ட தான் இருக்குன்னு தெரிஞ்சதால, அவரு வீட்டுல ஒரு செல்லாக்காசா இருக்காரு.

நான் அவரோட பொண்ணுன்னு தெரிஞ்சதும் அவருக்குப் பாசமெல்லாம் வரல. மாறா, பயந்தான் வந்துச்சு. ஏன்னா இப்படி ஒரு பொண்ணு இருக்கான்னு அவரோட இந்த மனைவிக்குத் தெரிஞ்சா, அவர் வீட்டுல அவருடைய நிலைமை இன்னும் பரிதாபம் ஆயிடும்னு ரொம்பக் கெஞ்சினார்.

என்னோட அம்மாவை அந்த அர்த்த ராத்திரி கொட்டுற மழையில வீட்டை விட்டு வெளிய தள்ளினாங்க. அந்தத் திமிரான, அவ்வளவு பெரிய மனுஷன் எத்தனை வயசு சின்னப் பொண்ணுகிட்ட… அவர் பெத்த அவரோட பொண்ணுகிட்ட காலில் விழாத குறையா கெஞ்சினார். அந்தப் பயம் எனக்கு இன்னொன்னையும் புரிய வச்சது.

கடவுள் நின்று எல்லாம் கொடுக்கறது இல்ல.. அன்றே கொடுக்கறார். ஆனால் மனுஷங்க தான் அதைப் புரிஞ்சுக்கறதில்ல. அதேமாதிரி தாத்தாவையும் நான் காயப்படுத்தணும்னே நினைக்கல. அதேசமயம், என்னோட ஆதங்கத்தை அப்படி அடக்கி  வச்சிட்டு அவங்களுக்கு நல்லவளா நடிக்கவும் விருப்பம் இல்லை” எனக் கூறவும், அவளின் நிலையை உணர்ந்த துளசியும், அவளது கையை ஆறுதலாக பற்றித் தட்டிக் கொடுத்தார்.

ஆனால் அடுத்த வார்த்தையாக, “உனக்கு உன்னோட அப்பாவ நினச்சு எல்லா ஆம்பளைங்க மேலயும் வெறுப்பு வந்துடுச்சா லயாம்மா?” என்று கேட்க திடுக்கிட்டு நிமிர்ந்தாள் பெண்.

“அது எப்படி மா இப்படிக் கேட்டுட்டீங்க? செழியன் அப்பாகிட்ட வளர்ந்த பொண்ணுக்கு எப்படி ஆம்பளைங்கள பற்றிய தப்பான அபிப்ராயம் இருக்கும்? நான் செழியன் அப்பாவோட பொண்ணும்மா. எனக்கு அந்த மாதிரி எல்லாம் இல்ல, ஆனா என் அம்மாவுக்குத் துரோகம் செஞ்ச ஆம்பளைங்களை என்னால நல்லபடியா நினைக்க முடியாது. அது எந்தச் சூழ்நிலையா இருந்தாலும்” என்று கூற, அவளது கருத்தை ஒப்பித் தலையசைத்தார் துளசி.

“அப்புறம் ஏன்மா கிருஷ்ணாகிட்ட நீ இவ்வளவு வெறுப்பா நடந்துக்கிற? தாத்தா செஞ்ச தப்புக்கு அவன் என்ன பண்ணுவான்? அதுமட்டுமில்லாமல் எப்படி அவனுக்கும் உனக்கும் கல்யாணம் ஆச்சு? இது கண்டிப்பா உன்னோட சம்மதத்தோட நடந்து இருக்கும்னு எனக்குத் தோணல. ஏன்னா உன்னோட அம்மா உன்கிட்ட வாங்கியிருந்த சத்தியம் அப்படி” என்று கூற, இருவரின் எண்ணமும் ஐந்து வருடம் பின்னோக்கி சென்றது.

அன்று தான் முதல் பருவ செமஸ்டர் பரிட்சை முடிந்து லயா வீடு வந்து கொண்டிருந்த தருணம், அப்பொழுது பேருந்தில் வீடு வந்து கொண்டிருக்கும் பொழுது அவளது மொபைல் அபஸ்வரமாய்.. அவசரமாய்.. அலறியது, அதுவும் அப்பாவின் எண்ணிலிருந்து.

அவர் பொதுவாக வீடு வந்து சேர எப்படியும் ஏழு எட்டு மணி ஆகிவிடும். இப்படி வேலைக்கு இடையில் வீட்டுக்கு அழைத்துப் பேசும் வழக்கமெல்லாம் அவர்களுக்கிடையில் என்றுமே இருந்ததில்லை. ஆனால் இப்பொழுது ஐந்து மணிக்கு அவர் எண்ணிலிருந்து அழைப்பு வரவும், என்ன ஏதென்று பதைத்தவாறே தான் போனை அட்டென்ட் செய்தாள். அவள் பயந்ததற்கு ஏற்றாற் போலவே, அவளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி மறுபுறம் காத்திருந்தது.

ஆம். அவள் அம்மாவிற்கு விபத்து நடந்து விட்டதாகவும், அவரை மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதால் அவளைச் சீக்கிரமாக அங்கே வர சொல்லி அழைத்திருந்தார் செழியன்.

அவர் அங்கே சென்றதும் தான் லயாவிற்கு முழு விவரமும் தெரியவந்தது. ரதி வேறு மாநிலத்தில் மருத்துவம் பயின்று கொண்டிருந்தாள். அவளுக்கு உள்ளூரிலேயே கல்லூரி சென்றுவர விருப்பம் இருக்கவில்லை.

அவளும் அப்பொழுது அவளது முதல் பருவ செமஸ்டர் பரிட்சை முடிந்து இரண்டு நாட்கள் முன்னரே வீட்டிற்கு வந்திருந்தாள். அன்று மதியம் அவளும், சௌபாக்கியவதியுமாக, இருவரும் கடைவீதிக்கு எதுவோ வாங்கவேண்டுமெனச் சென்றிருந்தனர்.

அப்பொழுது ஒரு பெரிய காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஆனது ரதியை கடத்திச் செல்ல முயல, அந்தக் கும்பலிடம் இருந்து ரதியைக் காப்பாற்ற முயன்ற போராட்டத்தில் சௌபாக்கியவதிக்கு பலத்த காயம் பட்டிருந்தது.

ஆனால் அப்படி மரணக்காயம் பட்டும் கூட ரதியை அந்தக் கும்பலில் இருந்து காப்பாற்றி இருந்தார். உடனே ரதிதான் ஆம்புலன்சுக்கு அழைத்துச் சௌபாக்கியவதியை இங்கே மருத்துவமனையில் அனுமதித்திருந்தாள்.

லயா மருத்துவமனையை அடைந்த நேரம், அவள் தாய் தன் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் நின்றிருந்தார். அதுவரையில் தன் உயிரை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது லயாவை காணத் தான்.

அவள் ஓடோடி சென்று தாயை பார்க்கவும், அந்தக் கண்களில் தான் எத்தனை எத்தனை நிம்மதி. இறுதியாகத் தன் மகளைப் பார்த்து விட்டோமே என்ற ஆசுவாசத்துடன், எப்பொழுதும் பெண்ணைக் கண்டதும் முகமெல்லாம் மலரும் புன்னகை இந்த மரணப்படுக்கையிலும் கூட அவருக்குத் தோன்றியது.

“லயாம்மா…” என்று நடுங்கும் குரலைக் கட்டுப்படுத்துவிட்டு, “எனக்கு நேரம் கம்மியா இருக்கும்மா. உன்கிட்ட சில விஷயங்கள் நான் சொல்லணும். அதுல சிலது.. இந்தச் சமயத்துல சொல்ல வேண்டியது அவசியம். ஆனா இன்னும் சிலத இந்த வயசுல தேவையில்லையென விடவும் முடியாது. அது என்னன்னா… உனக்கு உன்னோட படிப்பு ரொம்ப ரொம்ப அவசியம் கண்ணு.

அதுவும் உன்னோட படிப்பு உன்னோட காசுலையா தான் இருக்கணும். ‘பிச்சை புகினும் கற்கை நன்றேன்னு பெரியவங்க சொல்றாங்க. ஆனா, என் பொண்ணு படிப்புக்காகக் கூட யார்கிட்டயும் கையேந்த கூடாது. அது இந்த அம்மாவுக்கு எப்பவுமே சந்தோஷத்தை கொடுக்காது. அத நீ நல்லா புரிஞ்சுக்கோ.

மற்றபடி உன்னோட கல்யாணத்துக்கு நானும், பாட்டியும் சேர்ந்து கொஞ்சம் சேர்த்து வச்சுருக்கோம். அந்தப் பணம் உன்னோட பேர்ல பேங்க்ல இருக்கு. பேங்க் டீடைல்ஸ் எல்லாம் துளசி அம்மாகிட்ட தான் இருக்கு. அதே சமயம் உனக்கு அவங்க தான் இனி அம்மா. அவங்க வழிகாட்டுதல்படி நீ நடந்துக்கோ. எந்தக் காலத்துலயும் அவங்கள நாம நல்லபடியா பாத்துக்கணும்.

அவங்களுக்காக நீ என்ன வேணாலும் செய்யலாம். ஆனா தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேற மா. உன்னோட செலவுகளுக்கு மத்தவங்க கைய எதிர்பார்க்கிற நிலைமை மட்டும் என்னைக்கும் வர வேண்டாம். நீ அப்படி ஒரு நிலைமை வர மாறி வெச்சுக்காத.

அப்பறம் இன்னும் முக்கியமான ஒன்னு.. ரதி உன்னோட அக்கா. அவளுக்கு அந்த மரியாதையை நீ எப்பயும் தரணும். ஏன்னா எனக்கு நீ எப்படியோ அதே மாதிரி தான் ரதியும். என்னோட உயிர் போனாலும் நான் அவளைக் காப்பாத்திட்டேன்ற நிம்மதி எனக்குள்ள நிறைஞ்சிருக்கு. அதனால நீயும் அவளை உன்னோட அக்காவா ஏத்துக்கணும்.

கடைசியா இப்ப நான் சொல்லப் போற விஷயம் தான் ரொம்ப ரொம்பவே முக்கியமானது லயாம்மா. உன்னோட வாழ்க்கைல உனக்கு உன்னோட புருஷன தேர்ந்தெடுக்கிற உரிமை முழுசா இருக்கு. இப்ப இல்லைன்னாலும்.. இன்னும் உன்னோட வாழ்க்கை நீண்டு இருக்கு. அதுல உனக்கு எப்ப வேணும்னாலும் யார் மேலயும் காதல் வரலாம். அந்தக் காதலுக்கானவன் நல்லவனா அப்படினு மட்டும் இல்லாம, அவனை நீ கல்யாணம் பண்ணிக்கிற’ங்கும்போது அந்தக் கல்யாணம் ரெண்டு வீட்டு பெரியவங்களோட முழுச்சம்மதத்தோடு தான் நடக்கணும்.

முக்கியமா துளசி அம்மாவும், செழியன் சாரும் உன்னோட கல்யாணத்தைச் சந்தோஷமா நடத்தி வைக்கிற சூழ்நிலை தான் இருக்கணும். இது அந்தப் பையன் எப்பேர்பட்ட நல்லவனா இருந்தாலும் சரி. அதுமட்டுமில்லாமல் காதல்ன்ற முடிவு எடுக்குறதுக்கு மனசுக்குக் கொஞ்சம் நாள் ஆகணும். நீ படிச்சு முடிச்சு உனக்குன்னு ஒரு வேலை கிடைச்சதுக்கு அப்புறம், அந்த வேலையும் நீ நல்லபடியா பார்க்க ஆரம்பிச்சு, அதுக்கு அப்புறம் இந்தக் காதல் கல்யாணம் இதைப் பற்றி எல்லாம் யோசிச்சா உன்னுடைய தெளிவு நல்லவிதமா இருக்கும்.

அதுக்கு முன்னாடி இந்த வயசுல கல்யாணத்தைப் பத்தின தெளிவு இருக்காது. காதல் என்ற மாயாஜாலத்துல மூழ்கிப் பார்க்கற ஆர்வம் மட்டும் தான் தெரியும். அதனால உன் வாழ்க்கையில காதல் கல்யாணம் இதையெல்லாம் பற்றி நீ யோசிக்கிறதுக்கு இன்னும் உனக்கு அஞ்சு வருஷம் டைம் இருக்குன்னு நினைச்சுக்கோ. அப்பதான் உன்னால நிதானமா ஒரு முடிவு எடுக்க முடியும்னு நான் நம்புறேன்” என்று கூறி மூச்சு வாங்கியவர், அதன் பின் இன்னுமே இன்னமுமாய்ச் சிரமத்துடன் தன் பேச்சைத் தொடர்ந்தார்.

“இந்த விஷயம் மட்டும் தான் என் மனசுக்கு கவலைய கொடுத்துச்சு. எங்க உன்கிட்ட இத எல்லாம் நான் சொல்லாமலே போயிடுவேனோன்னு இருந்துச்சு. ஆனா இப்ப அந்தப் பயம் எல்லாம் இல்ல. என் பொண்ணு நான் ஒருமுறை சொன்னதையே கற்பூரமா புரிஞ்சுக்குவானு எனக்குத் தெரியும். இப்ப எனக்கு ரொம்ப நிம்மதியா…” என்று வார்த்தையை முடிக்காமலே தன்னை முடித்துக் கொண்டார் அவர்.

சௌபாக்கியவதி என்று பெயர் கொண்ட அவர் வாழ்க்கை, எந்த ஒரு பாக்கியத்தையும் முழுமையாக அனுபவித்து விடாமல் முடிந்தே போய் விட்டது.

அதன் பின்பு யார் அழுதும்.. எவர் கதறியும்.. அவர் கண் விழிக்கவில்லை. இதில் பெரும்பாலான பகுதி, ஏன் முழுவதுமே கூட அவர் துளசியிடமும் கூறியிருந்தார்.

துளசியும் லயாவும்.. சௌபாக்கியவதி மரணத்திலிருந்து, மரண நிகழ்விலிருந்து மீண்டும் நிகழ்காலத்திற்கு வந்தனர். இவை அனைத்தையும் நினைவு கூர்ந்த லயாவின் கண்களில் இப்பொழுது வலியுடன் கூடிய கோபமே வீசியது.

இறுதியாகத் தன் திருமணம் நடந்த விதத்தையும் கூறியவள்.. தனக்குப் பின்னே ஏதோ அரவம் கேட்பதற்கு உணர்ந்து திரும்ப, அங்கே வீட்டினர் அனைவரும் அரங்கநாதன் உட்பட அவர்களுக்குப் பின்னே அவர்கள் இருவரும் பேசிக்கொண்டது அனைத்தையும் கேட்டவாறு நிற்க கண்டதும், என்ன செய்வது எனத் தெரியாது திகைப்பில் உறைந்தாள்.

(தொடரும் – சனிக்கிழமை தோறும்)

பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9  பகுதி 10   பகுதி 11  பகுதி 12  பகுதி 13  பகுதி 14  பகுதி 15  பகுதி 16  பகுதி 17  பகுதி 18  பகுதி 19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சிவனடியார் (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி.

    ஆலம் விழுதுகள் (சிறுகதை) – ✍ ரமணி.ச, சென்னை