in

காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 19) – ✍ விபா விஷா, அமெரிக்கா

காதலாய்த் ❤ (பகுதி 19)

நவம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9  பகுதி 10   பகுதி 11  பகுதி 12  பகுதி 13  பகுதி 14  பகுதி 15  பகுதி 16  பகுதி 17  பகுதி 18

மின்னல் சுமக்கும் மேகங்களுக்கிடையே மாட்டிக் கொண்ட பறவை குஞ்சாய், படபடக்கும் இதயத்துடன் விழி நிறைந்த நீரோடும், மஞ்சள் சரடை கரம் பற்றியவள், அவள் தாயின் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவளது பார்வையில் என்ன கண்டரோ துளசி,  அவரது ஆழ்மன அதிர்ச்சிகளைச் சமாளித்துக் கொண்டு தன் மகளை ஆறுதலுடன் கட்டி அணைத்துக் கொண்டு, அந்த ஒரு செய்கையாலேயே அவளது திருமணம் அவருக்கும் ஒப்பானது என்று உணர்த்தினார்.

அவள் இத்தனையாய் பயப்படுவதற்கும்  ஒரு முக்கியக் காரணமும் உண்டு தான். ஏனென்றால் அவளின் வீட்டாரை பொறுத்த வரையில், அதாவது துளசி, செழியன் இவர்களைப் பொறுத்தவரையில் ரதிக்கு முறைப்பையன் தான் கிருஷ்ணா.

சிறுவயதிலிருந்த விளையாட்டு பேச்சு இத்தனை  சண்டைக்கும் காரணமாக இருந்தாலும், இம்முறை  இவர்களின் திருமணத்தைக் கொண்டே இவ்விரு குடும்பங்களின் உறவுமுறையை ஆலமரமாய்… ஆலமரத்தின் ஆணிவேராய் அமையுமென்ற எண்ணம் லயாவின் மனதில் ஏதோவொரு ஓரத்தில் தோன்றியிருந்ததோ என்னவோ.

இப்பொழுது கிருஷ்ணாவுடனான அவளது திருமணம் ஆகப்பெரும் குற்றமெனவே படுகிறது பெண்ணுக்கு.

அது அத்தனையும் விளக்கமாய்த் துளசியிடம் கூற வழியின்றி, அந்தக் குடும்பம் மொத்தமும் இப்பொழுது அங்குப் பிரவேசிக்க… இறைஞ்சுதல் மட்டுமே அவளிடம்.

எதுவும் புரியா நிலையிலும், தன் மகளின் மீது கோபம் கொள்ளவோ, அன்றி குற்றம் சுமத்தவோ எந்தத் தாய்க்கும் முடியாது தானே? அதுவே தான் அங்கும் நடந்தது.

அவள் அழுகையில் கரைவதையே தாங்காதவராக அவளை அணைத்து… ‘பெண்ணே.. உன் மீதிருக்கும் என் பேரன்பு விலகாது’ எனும்படியாய் அவளை அணைத்திருந்தார் துளசி.

இங்கு மறுபுறமோ, அந்த அறைக்குள் வந்து கொண்டிருந்தவர்கள் முதலில் கண்டது அம்மாவும் மகளும் இப்படிக் கட்டிக்கொண்டு கண்ணீர் உகுக்கும் காட்சி தான்.

அதைக் கண்ட மற்ற அனைவருமே உணர்ச்சி பிழம்பாகியிருக்க, முதலில் சமாளித்தது மருத்துவனான தருண் தான்.

“அடடா… இன்னும் அம்மாவும் மகளும் கொஞ்சி முடிக்கலையா? உங்க பாச மழையில என் ஹாஸ்பிடல் மொத்தமா மூழ்கிடும் போலயே” என்று கேலி பேசினான் தருண்.

அதில் சற்று இலகுவானாலும், இருக்கும் இடம் மருத்துவமனை என்பதாலும், அதுமட்டுமின்றி இப்பேரிழப்பில் இருக்கும் துளசியை எதிர்கொள்ள இயலாமலும்… அனைவரும் ஒரு பொதுவான நலவிசாரிப்புக்குப் பின்னர் வெளியே சென்று விட்டனர், வெண்மணி அம்மாவைத் தவிர.

அவருக்குள்ளும் என்னதான் உருத்துகிறதோ.. மக்களது முகத்தினைப் பார்க்காது தயங்கியபடியே தான் நின்றிருந்தார். பெரியவர் அரங்கநாதன் வாசல் வழியே நின்று பார்த்துவிட்டு சென்றதோடு சரி. அவருக்கும் மகளது இந்தக் கோலத்தைக் காண தெம்பில்லை.

அவர்கள் இருவரும் தனியே பேசிக் கொள்ள வகை செய்ய லயா தான், “நீங்க ரெண்டு  பேரும் பேசிட்டு இருங்க, நான் அம்மாவை எப்ப டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு கேட்டுட்டு வரேன்” என்று கூறிவிட்டு வெளியே வந்து விட்டாள்.

வெண்மணியம்மாவும், துளசியும் என்ன பேசினார்களோ தெரியவில்லை, கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஓரவிற்காவது சகஜநிலையை இருவரும் அடைந்திருந்தார்.

ஆனால் வெளியே வந்த லயா தான், தனித்துப் போய் ஓர் ஓரமாக அமர்ந்திருந்தாள்.

துளசியின் டிஸ்சார்ஜ் பற்றி விசாரிப்பதற்குச் சாக்கு சொல்லி வெளியே வந்தவள், அதையும் செய்யவில்லை. மற்றவருடன் சென்று விடவும் இல்லை.

அங்கேயே… அந்த ஐசியூ வாசலிலேயே ஒரு நாற்காலியில் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

அவளை அறிந்தவனாக அவள் கணவனும், அவளுக்கு அருகே இருக்கும் நாற்காலியில் வந்தமர, அதே தலை நிமிராத பாவனையுடன் வந்து விழுகிறது, “Just leave me alone” என்ற வார்த்தைகள்.

இதை என்னவென்று எடுத்துக் கொள்வானாம் அவன்? இத்தனை நாட்கள் தான் அவள் அம்மா படுத்த படுக்கையாய் இருந்தார். அதனால் பெண் எப்பொழுதும் சோக கீதமும், ருத்ரதாண்டவமும் ஒரு சேர ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தாள் என்றால், இப்பொழுது ஆபத்தைத் தாண்டி பரிபூரணக் குணமடைந்திருக்கும் அவள் தாயின் இந்நிலையிலும் என்னவாம் அவளுக்கு என்றிருந்தது.

பின்னர் அவனே சற்று சுதாரித்து, ‘சே… இத்தனை நாளா அவ மனசுக்குள்ள எந்தளவுக்கு உடைஞ்சு போய் இருந்துருப்பாளோ. இப்ப அந்தச் சோகமும் பயமும் போய்டுச்சுன்றதா கூட அவ மனசு முழுசா உணர்ந்திருக்காதா இருக்கும். அதனால அவளைக் கொஞ்ச நேரம் தனியா விட்டால் தன்னால சரியாகிடுவாளா இருக்கும்’ என்றெண்ணியவன், சத்தமின்றி எழுந்து அப்பால் சென்று விட்டான் கிருஷ்ணா.

சிறிது நேரத்தில், தருண் முக்கிய மருத்துவர்களுடன் கலந்தாலோசித்துவிட்டு வெளியில் வருவதும், வந்தவன் கிருஷ்ணாவிடம் சென்று எதையோ சொல்வதும், அதற்குக் கிருஷ்ணா ஏதோ பதிலுரைத்து அபியின் பக்கம் கைகாட்டியதும் அவன் இவளை நோக்கி வருவதும், அபியின் பார்வை வட்டத்துள் விழத்தான் செய்கிறது.

ஆனால் தலையை நிமிர்ந்து அந்த விரைத்த பார்வையை விலக்கிக் கொண்டு பார்க்க வேண்டுமே அவள். ஊஹூம்…. ஆனால் அவளிடம் நேரடியாக வந்த தருண், எவ்வித தயக்கமும் இன்றி அவள் முன்னால் நின்றான்.

அது தருண் என்று உணர்ந்ததாலோ என்னவோ அப்பொழுது தலையை நிமிர்த்தி அபி அவனைப் பார்த்ததும், “உன்னோட அம்மாவ இன்னும் ஒரு வாரத்துல  டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்” என்று அவன் கூறியதும், அந்த வாடிய முகத்திலும் சிறுபுன்னகை மலர தான் செய்தது.

அந்தப் புன்னகையில் நீட்சி,  அவனிடம் “தேங்க்ஸ்” சொல்லவும் வைத்தது.

அன்றிலிருந்து துளசி வீடு வந்து சேரும் வரையிலும் கூட… அபி கிருஷ்ணாவிடம் பேசவும் இல்லை, எதுவும் கேட்கவும் இல்லை. அவ்வளவு ஏன், அவனை நிமிர்ந்து பார்க்கவும் கூட இல்லை.

கிருஷ்ணாவுக்கும் அவளது இந்தத் திடீர் மாற்றம் புரியாமலும் குழப்பமாகவும் இருந்தது. ஒரு நாளுக்கு முன்பாகத் தான் ‘அவள் மனம் மாறி விட்டாள், தன்னை ஏற்றுக் கொண்டாள், தன் காதலை புரிந்து கொண்டாள்’ என்று நினைத்திருந்தான்.

ஆனால் அவள் தாய் கண்விழித்த செய்தி கேட்ட உடனேயே அவள் முகம் மாறிய விதமே  உரைத்தது, இனி வரப்போகும் காலத்தில்  ஏதோ பெரியதொரு பிரளயம் நடக்கப் போகிறது என்பதை.  

ஆனால் இவை  எதையும்  உணர்ந்து கொள்ளக் கூடப் பிடிக்காத  அபியோ,  தன் இதயத்தின் ஒரு பகுதி கதறித் துடித்தாலும், ரத்தம் வடித்தாலும், கிருஷ்ணாவை மனதறிந்து ஒதுக்கலானாள். ஆனாலும் கூட, இதெல்லாம் எதற்காகச் செய்கிறாள் என்று அவள் உணர்ந்திருந்தாள்.

அதன் ஒரு பகுதியாகவோ  என்னவோ, துளசி  டிஸ்சார்ஜ் ஆக இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று கூறிய காரணத்தையே காரணமாகக் கொண்டு, ராத்திரி பகல் பாராது அவருடனே மருத்துவமனையில் விழுந்து கிடந்தாள்.

அவளது சாப்பாடு, குளியல், படுக்கை, இத்யாதி.. எல்லாமே துளசியின் அறையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டது. அவள் விரும்பியிருந்தால் அவளுக்கெனத் தனியறை ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால் அவள்  யாருக்கோ, எதற்கோ ஏன் தனக்கோ  பயந்துதான் தனித்திருக்க விரும்பவில்லை. 

இறுதியில் அவள்  தனித்து விட்டது என்னவோ அவளின் அவனைத்தான். அவளின் இத்தகைய செய்கையின் காரணம் புரியாத கிருஷ்ணா… காலை, மதியம், மாலை என எந்த நேரம் அவனுக்குக் கிடைக்கிறதோ அந்தந்த நேரத்தில் எல்லாம் மருத்துவமனைக்கு வந்து துளசியின் சுகபத்திரம் விசாரித்து, தன் மனைவியின் மனமும் விசாரிக்க முயன்றான் தான்.

ஆனால் அவள்தான் அவனைத் தூர நிறுத்துகிறாளே. வெளிப்படையாகத் தாயின் முன் எதையும் காட்டிக் கொள்ளாவிட்டாலும், யாரோ போலத்தான் அவனை நடத்தினாள்.

இதையெல்லாம் கண்டும் காணாது, கவனித்தும் உணர்ந்தும் கொண்டிருந்த துளசிக்கு…  நடப்பது எதுவும் சரி இல்லை என்ற  எண்ணம் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே போனது.

ஆனால் இப்படிப் படுக்கையில் கிடந்து கொண்டு எதைத் தான் சரியாக யோசிப்பது? என்னவென்று தான் அவர்களிடம் கேட்பது? என்று இருந்தது அவருக்கு.

சரி எதுவாயினும் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குச் சென்ற பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று அந்த ஒரு வாரத்தைப் பல்லைக் கடித்துக் கொண்டு கடத்தினார்.

மேலும் இத்தனை நாட்கள் அவரை அத்தனை தாங்கிய அவர் கணவர் செழியனின் இழப்பு அவரை வெளிப்படையாக இல்லாவிட்டாலும், உள்ளுக்குள் மிகவும் உடைந்து போகவே செய்திருந்தது. தனது பார்வை புரிந்த நடக்கும் மனிதர். எல்லாவற்றையும், எல்லாமுமாய் நின்று கவனித்தவர்.

அப்பாவிற்கு மகள் மேல் இருந்த பாசத்தைக் காட்டிலும் தன் மேல் ஒரு பங்கு அதிகம் இருக்கிறது என்று எண்ணுவார் துளசி. அது உண்மையும் கூட.

பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம் ஆனாலும்.. கண்ட நாள் முதல் காதல் பெருகத்தான் செய்தது.  அதனால் கனிந்த இல்லறமும் இனிக்கத்தான் செய்தது. ஆனால் அவர் இறந்ததும்… கடைசியாக அவராய் ஒருமுறை ஆயினும் பார்க்க முடியாதது… இத்தனை நாட்கள் சுயநினைவின்றி  அவரின் இழப்பை கூட அறியாதது.. இவை எல்லாமும் அவருக்கு பெரும் வேதனையை தந்தது.

ஆனால் ஏற்கனவே இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவில் இருக்கும் மகளை மேலும் வருத்த மனமின்றி, தன் மனத்துயரை தனக்குள்ளே புதைத்து இருந்தார் துளசி.

இத்தனை வருடங்களாகப் பிரிந்திருந்த தாயும் மனதளவில் தூரமாக யாரோ போல் ஆகி விட்டார்.  அதற்கு முன்பும் கூடப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் அந்த இரு குடும்பங்களுக்கும் இருந்ததால், திருமணத்தின்  பின்னே அவர் அப்பா அம்மாவுடன் அவ்வளவாக உறவு கொண்டாடியதில்லை.

ஆகவே அவர்களைப் பிரிந்த சோகம் ஏதோ கொஞ்சம் ஓரத்தில் இருந்ததால் மீண்டும் அவர்களைச் சந்திக்கப் போகிறோம் என்பது மகிழ்ச்சியாக வெளிப்பட்டது.

ஆனால் மனதின் மகிழ்வினை யாரிடம் வேண்டுமானாலும் பகிரலாம். அதுவே இதயத்தின் ரத்தக் கசிவை பகிர்ந்து கொள்வதற்கு மனதிற்கு நெருக்கமானவராய்… உயிர் கொண்ட உற்ற கணவராய் இருந்தவர், இன்று போனதாலே இது எல்லாம் நடக்கிறது அல்லவா?

மேலும் அவரின்றி ஒரு அணுவும் அசையாது என்றிருந்த துளசிக்கு இப்பொழுது தன் உயிரையே தனித்துச் சுமக்க வேண்டியிருந்தது பெரும் பாரமாகத் தானே இருக்கும். ஆனால் தன் துயரை விட மகளின் பெருவாழ்வு தானே எந்த ஒரு தாய்க்கும் பெரிதாய் இருக்கும்? அந்த ஒரு தாயாகத் தான் இருந்தார் துளசி.

இறுதியாக அன்று அவர் வீட்டிற்குச் செல்லும் நாளும் வந்தது. அவரை அழைத்துச் செல்ல கிருஷ்ணா மட்டுமே வந்து இருந்தான். தருணும் மற்ற  எல்லா பார்மாலிட்டிகளும் முடித்த பின்பு அவர்களுடன் வீட்டிற்குப் புறப்பட்டான்.

அபியின் இந்தக் குணங்கள், இத்தனை விலகல்  இவை யாவும் தருணுக்கும் கூட நன்றாகவே புரிந்திருந்தது. அவனுக்கும் என்ன பிரச்சனை புதிதாக நிகழ்ந்திருக்கும் என்பது புரியாததாகவே இருந்தது. ஆனாலும் எதையும் வெளிப்படையாகப் பேசும் அவன், இந்தப் பிரச்சனையில் என்னவென்று பேசுவது, எதை என்று விசாரிப்பது என்று குழம்பிய நிலையில் இருந்தான்.

ஆனால் மருத்துவரின் மனோதத்துவ மூளை இருக்கிறதல்லவா? அதன் மூலம் அனைவரையும் தனது பேச்சு வல்லமையால் சற்று இலகுவாக்கிக் கொண்டிருந்தான் தருண். மலர் வருடலில் இரும்பும் இளகுமா?

அது போல இரும்பாய்,  கரையாத கற்சிலையாய் வீற்றிருந்தாள் அபி. மனமெங்கும் திக்திக் மின்னல்கள், தீப்பொறியின் சிதறல்கள். இவையாவும் சேர்ந்து ஒரு இறுக்கிப் பிடித்த அமைதியுடன் காணப்பட்டாள் அபி.

 இப்படிப்பட்ட ஒரு அசாதாரண மனநிலையில்தான் மற்ற மூவருடனும் சேர்ந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் அபி.

ஆனால் நால்வரும் வீடு வந்து சேர்ந்ததும் ஆரத்தி எடுக்கப்பட்டுத் துளசி வீட்டினுள் அழைத்துச் செல்லப்பட, இத்தனை வருடங்கள் கழித்துத் தன் மகள் இப்படியா தன் வீட்டிற்கு வரவேண்டும் என்ற ஆதங்கத்தில் அரங்கநாதனும், வெண்மணி அம்மாளும் கண்ணீர் உகுக்க, மற்றவர் அனைவரும் அந்தக் கண்ணீரில் தாமும் கரைய, ஆனால் அந்த நாடகத்தைக் கொஞ்சம் எரிச்சலான முகபாவத்துடன் கண்ணுற்றுக் கொண்டிருந்தாள் அபி.

 வாசற்படிக்கு வந்து அரங்கநாதனும் பெண்மணி அம்மாவும் வெண்மணி அம்மாவும் துளசி அவர் கைபிடித்து உள்ளே அழைத்துச் செல்ல, அதே எரிச்சலில் வார்த்தையை விட்டாள் அபி.

“நீங்க உங்க ஒரு பொண்ணுக்கு செஞ்ச அநியாயம் எப்படி உங்க இன்னொரு பொண்ணையும் பழி வாங்குது பார்த்தீங்களா?” என்று கேட்க, அங்கிருந்த அனைவரிடத்திலும் அதிர்ச்சியின் உறைநிலை பனிமலையின் மிகைநிலை.

இதைக்கண்ட  துளசிக்கோ, ‘இந்தப் பெண்ணுக்கு என்ன தான் ஆச்சு? இவளுக்கு எல்லாமே தெரிஞ்சிடுச்சா?’ என்ற பதற்ற நிலை.

வேறெவரும் எதுவும் பேசும் முன்னே, அபியை கைபிடித்து அழைத்துச் சென்ற துளசி, வீட்டின் தோட்டத்திற்கு  அழைத்துச் சென்றவர், “உன்னோட அம்மாவுக்காக இப்ப நீ இவங்கள பழி வாங்கற… இல்லையா லயாம்மா?” என்று கேட்க

அவரது கண்களை நேராகப் பார்த்த அபி, “இத்தனை வருஷம் நான் கண்டுபிடிக்காமல் இருந்ததே நான் எவ்வளவு பெரிய முட்டாள்னு காட்டுதும்மா. ஆனா இந்த வீட்டுக்கு வந்த பின்னாடியும் கூட நான் கண்டுபிடிக்காமல் இருப்பேன்னு நீங்க நினைச்சுட்டீங்கல்ல? உங்க பொண்ணு அடி முட்டாளாமா?

உங்க ரெண்டு பேரையும் நான் எத்தனையோ முறை  சேத்து வச்சுப் பார்த்திருக்கேன். ரெண்டு பேரு கூடயும் ரெண்டு பேரையும்  அம்மான்ற சலுகையோட இருந்திருக்கேன். ஆனா எனக்கு இத்தனை வருஷமா இதெல்லாம் தெரியாம போயிடுச்சு, நீங்களும் என்கிட்ட சொல்லனும்னு நினைக்கல இல்ல? 

இங்கு வந்த கொஞ்ச நாள்லயே… நான் காதுல கேட்ட சில விஷயங்கள் கொஞ்சம் குழப்பமா இருந்துச்சு. அப்ப ஒருமுறை நீங்க ரெண்டு பேரும்.. அதாவது நீங்களும், என்ன பெத்த என் அம்மா பாக்கியவதி.. சௌபாக்கியவதி.. பாகிமா, அவங்களும் பக்கத்து பக்கத்துல   நின்னு எடுத்த குடும்பப் போட்டோவுல நல்லா தெரிஞ்சது… உங்க ரெண்டு பேருக்குள்ளேயும் இருக்கிற உறவு என்னன்னு.

இதெல்லாம் உங்க ரெண்டு பேரோட பழக்க வழக்கங்கள் பார்த்தே நான் கண்டுபிடிச்சு இருக்கணும்மா. ஆனா எனக்குத்தான் சந்தேகப்படவே தோணலையே… நீங்களும் பாகியமாவும் அக்கா தங்கச்சியா இருப்பீங்கன்னு.

ஆனால் அப்படி எனக்குத் தோணினதுக்கு முக்கியக் காரணம், இது எல்லாத்துக்கும் முன்னாடியே என்னோட பாட்டி… அதாவது நான் பிறக்க காரணமான எனக்கு அப்பானு சொல்லிக்கிற அந்த மனுஷனோட அம்மா, அந்தப் பாவப்பட்ட ஜென்மம்.. அந்த மனுஷியோட மரணப் படுக்கையில் தான் எனக்குச் சில விஷயங்கள அவங்க சொன்னாங்க. அது தான் உங்களுக்குள்ள உறவை எனக்கு இப்ப தெளிய வச்சுது.

அப்ப உங்களுக்குக் கர்ப்பப்பையில் ஏதோ பிரச்சனை வந்து ஆபரேஷன் செஞ்சிருந்தாங்க. அந்தச் சமயத்துல பாகிமா உங்ககூட  இருந்ததால, பாட்டி கூடத் துணைக்கு நான் தான் இருந்தேன். அந்த 15 வயசுல என்கிட்ட அந்த  மனுஷி தன்னோட மனசுக்குள்ள புதைச்சு இருந்தத என்னன்னு சொல்லியிருக்க முடியும்?

ஆனா அவங்க சொன்னாங்க. அத்தனை வருஷமா மனசெல்லாம் பாரமா அழுத்திட்டு இருந்த விஷயத்தை அவங்க மரணத்தின் போதாவது இறக்கி வச்சுட்டு போகணும்னு  நினைத்தாங்களோ  என்னவோ…” என்று சிறு கோபத்தால் கண்களில் மின்னல் வெட்ட, கண்ணீர் மழையும் கொட்ட அபி  கூறுவதைக் கேட்க, மனதிற்குள் பயம் வந்தது துளசிக்கும்.

“லயா… அப்படி என்னதான் அந்தம்மா  சொன்னாங்க?”  என்று படபடப்புடன் வினவினார் துளசி.

உடனே, “உங்களுக்கும் அவங்க அத்தைதான் இல்லையா ம்மா? அதாவது என் அம்மாவோட மாமியார், உங்களுக்கும் அத்தைதான் இல்லையா ம்மா? ஆனா அவங்க இருந்த வரைக்கும் நீங்க அப்படிக் கூப்பிடவும் இல்லை, ரெண்டு பேரும் அப்படி நடந்துக்கவும் இல்லை. இதுக்கெல்லாம் காரணம் என்னனு எனக்கு ஒரு யூகம் இருக்குமா. ஆனா அத விடுங்க, முதல்ல  அவங்க என்ன சொன்னாங்கன்னு சொல்றேன்” என்று கூறிவிட்டு அவள் உரைத்தது, பாவப்பட்ட ஒரு பெண்ணின் பரிதாபக் கதை.

கோயமுத்தூரில் ரொம்பப் பெரிய பணக்கார பெரியவருக்கு மூன்று குழந்தைங்க. முதல்ல ஒரு பையன். அவனுக்கு ஏழு எட்டு வருஷம் கழிச்சு ஒரு பொண்ணு, அப்புறம் ரெண்டு வருஷத்திலேயே இன்னொரு பொண்ணு.

பெரியவர் அந்தக் காலத்து ஆளு. அவர் பையன் பொண்ணு வித்தியாசத்தை வெளிப்படையா  காட்டிக் கொள்ளலைன்னாலும், அவரையும் அறியாது, பிறரையும் உறுத்தாது அவ்வப்போது அது வெளிப்படும். உதாரணமாகப் பல விஷயங்களில் மகனின்  விருப்பங்கள்… முக்கியமில்லாத, அவசியமில்லாத விருப்பங்கள் கூட, உடனடியாக நிறைவேற்றப்படும். அவனின் விருப்பமே அதி முக்கியமானதாக இருப்பதும் அந்த வீட்டில் வழமை.

அதேசமயம் பெண்களுக்குத் தேவையானவை எல்லாம் அவர்கள் கேட்கும் முன்னே கிடைக்கவும் தான் செய்தது. ஆனால் பெண் பிள்ளைகள் என்ற கிராமத்து கட்டுப்பாடு இருந்தது. இதையெல்லாம் இயல்பாக ஏற்றுக் கொண்டார் இரண்டாவது பெண். ஆனால் சற்று யோசனையுடன் உணர்ந்தார் மூன்றாம் மகள். 

அதுவுமின்றி… மகன் வயதில் மூத்தவன் என்பதாலும் அந்த ஊரின் ஏதோ ஒரு திருவிழாவில் தனது சொந்தக்காரப் பெண்ணையே பார்த்து மனதை பறிகொடுத்து விட்டதாலும், அவருக்கு முதலில் திருமணம் செய்து வைத்து விட்டார் பெரியவர். 

வீட்டிற்கு வந்த மருமகளும் மிக நல்லவிதம் என்பதாலும், மேலும் அந்த இரண்டாவது பெண்ணின் உயிர்த்தோழி என்பதாலும், அந்த வீட்டு பையனுக்கும் மருமகளுக்கும் அங்கு இன்னும் உயர்ந்த அந்தஸ்து கிடைத்தது.

அதனை விடவும்… வந்த மருமகள் மூன்றாம் மாதமே  கருவுற்று விட, குடும்பத்திற்குள் திருவிழாதான். இரண்டு நாத்திகளும் கூட அவரைத் தாங்கு தாங்கு என்று தாங்கினார். அதற்கு அவரும் தகுதியானவர் தான்.

இதில் மருமகள் முதல் குழந்தையை ஆணாகப் பெற்றுவிட, கேட்கவும் வேண்டுமா பெரியவருக்கு? வீட்டின் மொத்தப் பொறுப்பும் அப்பொழுதே மருமகளிடம் சென்றது.  ஆனால் இதிலெல்லாம் பிரச்சனை ஏதும் வந்திடவில்லை.

அதன் பின்பு மகள்களின் கல்யாணத்தைப் பற்றி யோசிக்கலானார் அவர்.  இரண்டு மகள்களுக்கும் வயது வித்தியாசம் பெரிதாக இல்லை என்பதால் ஒரே சமயத்தில் வரன் தேட ஆரம்பித்தார். அவர் விரும்பியது போலவே இருவருக்கும் ஒரே நேரத்தில் ஒரே மேடையில் திருமணம் நிச்சயமானது.

மூத்த மருமகள் வழியில் அந்த மருமகனுக்குத் தாய் தந்தையர் மட்டுமே. மேலும் அந்த  பையன்… அவர் ஏதோ கணிப்பொறி இயல் சம்பந்தமாகப் படித்திருப்பதால் அது தொடர்பான கம்பெனியே தனது நண்பர்களுடன் கூட்டாகச் சேர்த்து ஆரம்பித்திருந்தார். அந்த வகையில்  பெரியவருக்கு மூத்த மருமகன் வகையில்  பிரச்சனை இல்லாதிருந்தது.

ஆனால் நிச்சயம் முடிந்த பின்பு இரண்டாவது சம்மந்திக்கும், பெரியவருக்கும் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட, கடைசி மகளின் கல்யாணமே நிற்கும் நிலைக்குப் போய் விட்டது. ஆனால் கடைக்குட்டி மகள் தான் புலிக்குட்டி ஆச்சே?

தந்தையிடம் தனது எதிர்ப்பை தைரியமாக வெளியிட்டார் அவர்

“அப்பா நீங்க செய்யறது எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கல. எங்களைக் கேட்காமலே எங்களுக்குக் கல்யாணம் ஏற்பாடு செஞ்சீங்க. ஆனா இப்போ நிச்சயம் வரைக்கும் வந்துருச்சு, கல்யாணத்து புடவையும் கூட எடுத்தாச்சு. இந்த நிலைமைல அந்த மாப்பிள்ளை வேண்டாம்னு சொல்றீங்க. அதுவும் அந்த மாப்பிள்ளை மேல தப்புனு எதுவும் இல்ல. அவரோட அப்பாக்கும் உங்களுக்கும் நடந்த ஈகோ பிரச்சனைக்கு, நானும் அவரும் என்னப்பா செஞ்சோம்? நான் அவர தான் கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்படுறேன். தயவுசெஞ்சு உங்களோட இந்த ஈகோ, வறட்டுப் பிடிவாதம்… இதெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு எங்க கல்யாணத்தை  நல்லபடியா நடத்தி வையுங்க” என்று ஆத்திரத்தில் ஆரம்பித்து ஆதங்கத்துடன் முடித்தார்.

ஆனால் இதற்கெல்லாம் மசிபவரா பெரியவர்?

எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், “ஏய்.. இங்கப் பாரு, உன்னோட கல்யாணத்த பொருத்தவரைக்கும் என்னோட முடிவு தான் இறுதி முடிவு. உன்னோட இந்தக் கல்யாணம் நின்னுடுச்சு, அவ்வளவு தான். உனக்கு இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு தான் மறுபடியும் வரன் பார்க்கலாமின்னு இருக்கிறேன். முதல்ல உங்க அக்காவோட கல்யாணம் நல்லபடியா முடியட்டும். அதுவரைக்கும் வேற எதைப் பற்றியும் யோசிக்காமல் நல்லபடியா நடந்துக்கோ. தேவை இல்லாம எரிச்சல்படுத்தி என்னோட கோபத்துக்கு ஆளாகாத” என்று உறுமி விட்டு அவர் சென்றுவிட, கடைசி மகளும் அதன் பின்பு மீண்டும் மீண்டும் தாயிடமும், தந்தையிடமும் சண்டையிட்டும் கெஞ்சிக் கூத்தாடியும்  கூட… இருவரும் தங்கள் நிலையிலிருந்து இறங்கவில்லை.

இறுதியாகத் தனது அக்காவின் கல்யாணம் நடைபெறும் நாளன்றே வீட்டை விட்டு வெளியேறி விட்டார் அவர்.

கல்யாண மண்டபத்தில் மணப்பெண்ணின் தங்கை காணவில்லை என்று அனைவரும் பதைபதைப்புடன் தேடிக்கொண்டிருக்க, மாலையும் கழுத்துமாக… கூடவே தனது மணாளனுடனுமாக வந்து நின்றார் அவர்.

இது மூத்த பெண்ணின் கல்யாணத்திலும் குழப்பம் ஏற்படுத்தி விட்டது. ஆனாலும் அவர்கள் குடும்பம் இதையெல்லாம், அந்தப் பெண்ணின் விருப்பம்.. அவர்கள் குடும்பத்தின் தனிப்பட்ட விஷயம்.. என்று விட்டுத் தங்கள் மகனின் கல்யாணத்தை நல்லபடியாகவே நடத்தி மருமகளையும் மனமுவந்து மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்.

ஆனால், பெரியவருக்கு அந்தப் பெருந்தன்மை இருக்கவில்லை. தனது மகளையே ஒதுக்கி வைத்தார்.. விலக்கி வைத்தார். 

தன் மனதை தன் அப்பாவிடம் சொல்லிவிட்டால், அவர் புரிந்து கொள்வார் என்று இருந்த அந்தக் கடைசிப் பெண்ணுக்கு அவரது முந்தைய அந்த ஏச்சுக்களும், பேச்சுக்களுமே அதிர்ச்சியாக இருக்க, இப்படித் திருமணம் முடித்து வந்த பின்பு அவர் தன்னை முழுவதுமாய் விலக்கி வைக்க எப்படி இருக்கிறதாம்?

உயிரே காற்றில் கரைந்து காணாமல் போய்விடாதா அந்நேரம்? ஆனால் உயிரை விடவும் தன்மானமே அங்கு அப்பொழுது அவருக்குப் பெரிதாக இருந்தது. அப்பாவின் ரத்தம் தானே மகளுக்கு ஓடுகிறது.

அவர் அந்தக் கடைசிப் பெண்ணையும் அவர் கணவரையும் அத்தனை பேர் முன்னிலையிலும், “என்னோட முடிவ மதிக்காம, இவ்வளவு ஏன் என்னையும் கூட மதிக்காம, நீ இத்தனை பேர் முன்னிலையில என்ன இவ்வளவு அவமானப்படுத்திட்ட இல்ல? இனிமேல் நான் செத்தா கூட என்ன பாக்க நீ வரக்கூடாது. ஆனா இவ்வளவு கேவலமான காரியம் பண்ணியிருக்கிற நீ… பணத்துக்காக இந்தச் சொத்துக்காக மறுபடியும் பல்ல காமிச்சுட்டு இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சாலும் வப்ப. ஆனா.. உன் உடம்புல நிஜமாவே என் ரத்தம் தான் ஓடுதுன்னா.. இனி எதுக்கும் இந்த வீட்டு வாசல்ல காலடி எடுத்து வைக்காதே” என்று அவர் ஆவேசத்துடன் கூற, அதே ஆவேசம், ஆத்திரமாய்.. வைராக்கியமாய்ப் பதிந்தது பெண்ணின் மனதுள்.

அதுவே வார்த்தையாகவும் வெளிவந்தது

“உங்க வீட்டுக்கு இனிமேல் எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் வரமாட்டேன். அப்படி நான் வந்தன்னா அந்த நிமிஷமே என்னோட மூச்சு நின்னு போயிடும். நான் செத்துட்டேன்னு அர்த்தம்” என்று கூறிவிட்டு தன் கணவரின் கையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறி விட்டார்.

ஆனால் அந்தக் கணவரின் வீட்டில் அதிசயத்தக்க விதமாக எந்த ஒரு பிரச்சனையும் இன்றி அவரை ஏற்றுக் கொண்டது தான் பேராச்சரியம்.  அது எப்படியும் பின்னாளில் பெரியவர் பெண்ணை மனமுவந்து மனமார ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையில்  என்பது அப்போதைக்கு அந்தப் பெண்ணுக்குத் தெரியாது.

ஆனால் அந்த மாப்பிள்ளையின் அப்பா, அந்த மாமனாரின் எண்ணம் அதுவாகத்தான் இருந்திருக்கிறது என்பதும், அந்த எண்ணம் மகனின் மனதிலும் கொஞ்சம் கொஞ்சமாக அதன் பின் வரும் காலத்தில் ஊட்டி ஊட்டி பேராசையாக ஊற்றெடுக்க வைத்ததும்… எதுவுமே அந்தப் பெண் முதலில் அறியவில்லை.

இதில் மூத்த மகள் மணமுடித்த அந்த மாதத்திலேயே கருவுற்றும் விட, அவருக்குச் செய்யப்படும் சீர்வரிசைகளும்.. அவர் இங்கு வந்தால் நடக்கும் ஆர்ப்பாட்டமும் பெரிதளவில் இருந்தன.

ஆனால்.. அந்தக்  கடைசி மகள் இன்னும் கரு உண்டாகவில்லை. ஒருவேளை அவர் சீக்கிரமாகக் கருவுற்றால் பெரியவரும் மாறிவிடுவார் அதன் மூலம் அவர் சொத்தின் பெரும்பகுதியும் கிடைக்கும்.. எனவே அதற்கு அடிப்படையான ஒரு விஷயம் இந்த வீட்டில் நடந்த ஏறவில்லையே என்பதை அப்பாவுக்கும் மகனுக்கும் மனதெல்லாம் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

இப்படிக் கணவனும் மாமனாரும் அந்தப் பெண்ணை மனதளவிலும் உடலளவிலும் துன்புறுத்த, அத்தனைக்கும் துணையாய் இருந்ததென்னவோ அவளின் மாமியார்தான்.

இத்தனைக்கும் இவர்கள் வீட்டிலும் சொத்துக்கும் பணத்துக்கும் ஒன்றும் பஞ்சமில்லை. சொந்தத் தொழிலிலும், சொந்த உழைப்பிலுமே முன்னேறிய குடும்பம் தான் அது. ஆனால் காலம் ஒருவரை எந்த நிலைக்கு இழுத்துச் செல்லும். அந்தக் கடைசிப் பெண்ணையும் இழுத்துச் சென்றது.

திருமணமாகி ஒன்றரை வருடம் மட்டுமே முடிந்த நிலையில் அந்த மூத்த மகளுக்கு ஒரு பெண் குழந்தை. ஆனால் இங்கு அப்படிப்பட்ட நல்ல விஷயத்துக்காக எந்த ஒரு அறிகுறியும் இல்லை. அந்தப் பெரியவரும் மனம் மாறுவதாகவும் இல்லை, இந்தக் கடைசி மகளும் வீராப்பை விடுவதாகவுமில்லை. 

இதுபற்றிய தந்தையின்  தூண்டுதலால் மகன் மனைவியைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விலகி வெறுத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் முற்றிய சண்டையில்… தந்தையின் போதனையிலும் கூடவே போதையிலும் அந்தப் பெண்ணை அவள் கணவன் கடும் மோசமாக அடித்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டான்.

அந்தப் பெரிய வீட்டில் வீட்டின் வாசலில், அதாவது நடுத்தெருவில் கொட்டும் மழையில் வீசப்பட்டார் அந்தப் பெண். கண்ணீரின் சாயலை மழை மறைத்தாலும், இதயத்தின் வலியை எவர் அறிவார்?   கரம் பிடிக்கும் வரையில் இருந்த காதல், கழுத்தில் தாலி ஏறியதும் தரையிறங்கியது.

அந்த வெளிவாசலிலேயே உட்கார்ந்து கொட்டும் மழையில் அழுகையில் கரைந்து கொண்டிருந்தவரை, ஆதுரத்துடன் தொட்டது ஒரு கரம். அது வேறு யாருமல்ல அவரின் மாமியார் தான். அவர் சொன்னது ஒரே ஒரு விஷயம் தான்.

“இந்த வீட்டுல எனக்கு இருந்த மரியாதை நான் என்னோட அப்பா அம்மா வீட்டில இருந்து கொண்டு வந்த பணமும், இதோ என் வயித்துல வந்து பொறந்தானே அவனாலையும் தான்னு இதுவரைக்கும் எனக்குத் தெரியல. ஒருவேளை எனக்கு உன்ன மாதிரி குழந்தை இல்லாமல் போயிருந்தா இந்த மனுஷன் என்னையும் இப்படித்தானே பண்ணி இருப்பாரு? என் கண்ணு முன்னாடி என் பொண்ணு இப்படிக் கஷ்டப்படுறத என்னால பார்த்துட்டு இருக்க முடியாது. நீ வா மா… உனக்கு நான் இருக்கேன்” என்று அவரை  அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

உண்மையாகச் சொல்வதென்றால்,  விடுவித்துச் சென்றார் எனலாம். ஆனால் அந்த நேரம் எவரும் அறியாத புதையலாய்.. பூட்டிவைத்த பொக்கிஷமாய் அந்தப் பெண் கரு உண்டாயிருந்தாள்.

(தொடரும் – சனிக்கிழமை தோறும்)

பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9  பகுதி 10   பகுதி 11  பகுதி 12  பகுதி 13  பகுதி 14  பகுதி 15  பகுதி 16  பகுதி 17  பகுதி 18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    திசை மாறிய பறவைகள் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    கடன் கொடுத்த பணம் (கவிதைகள்) – ✍ ஜேஸூ.G, ஜெர்மனி