in

காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 17) – ✍ விபா விஷா, அமெரிக்கா

காதலாய்த் ❤ (பகுதி 17)

நவம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9  பகுதி 10   பகுதி 11  பகுதி 12  பகுதி 13  பகுதி 14  பகுதி 15  பகுதி 16

கனன்றெரிக்கும் பெருநெருப்பாய் விதியது எனைச்சூழ,

கருகிடுமுன் வந்தெனைக் காத்திடுவாயோ..

காதலால் கதிமோட்சம் எனக்கருள்வாயோ?

அவளது கோபமே பெரும் நெருப்பாய் அவளைச் சூழ்ந்திங்கு இருக்க, அதுவே அவளைப் பொசுக்கவும் காத்திருக்க, அந்த நெருப்பிலிருந்து அவளைக் காக்கும் வலிமை கிருஷ்ணாவின் காதலொன்றிற்கே இருந்தது. அதை அபியும் உணரவே செய்தாள் தான்.

ஆனால் ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு அல்லவா? அது போலக் கோபமெனும் கார் மேகம் சூழ்ந்திருந்த அபியின் மனத்தில் காதல் சூரியனின் ஒளி மங்கியே இருந்தது.

இருப்பினும் காதல் கொண்ட மனம் கிருஷ்ணாவின் கோபத்தில் இப்பொழுது சிதையவே செய்தது. ஆனால் அபி அவளது விதியை நொந்திருந்தால் கூடப் பரவாயில்லை. ஆனால் அவள், அவளது இந்த நிலைமைக்கு முழுமுதற் காரணம் நினைத்திருப்பது.. நினைத்து வஞ்சம் கொண்டிருப்பது அரங்கநாதன் மேலல்லவா?

அதில் சிறிதளவு உண்மை இருப்பதும், அந்த உண்மையின் காரணமாகவே அந்த வீட்டில் கூடிய சீக்கிரம் பெரும் பிரளயம் வெடிக்கப் போவதென்பதென்னவோ உண்மை தான்.

கிருஷ்ணாவின் கோபத்தை எண்ணி வருந்திய மனம் அந்த மாயவனின் முகம் காண ஏங்கிப்போய் இருந்தது. அவனை நினைத்தே மருகிக்கொண்டு தோட்டத்தில் போடப்பட்டிருந்த மரபெஞ்சில் இரு கால்களையும் கட்டிக்கொண்டு இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தவளை, தனதறையின் பால்கனியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணாவின் மனமெங்கும், அவளது இந்தக் காரணம் புரியாத கோபத்தில் நொந்து போய்த் தான் இருந்தது.

அந்த இரவு நேரத்தில் அவள் அப்படித் தோட்டத்தில் தனித்திருப்பதும் நல்லதல்ல என்று எண்ணிய கிருஷ்ணா, அவளைத் தேடி தோட்டத்திற்குச் சென்றான்.

சுழற்காற்று மூச்சடைத்தாலும், அது மெய்தீண்டும் மென்சுகம் தேடவே செய்யும் ரசிக மனம். அது போலக் காதல் கொண்டவரின் கோபம் மனம் சுட்டாலும், அவர் பின்னே ஓடிச் செல்லும் காதல் இதயம்.

அது போலவே அபியின் நலம் தேடியே என்றாலும், அவள் அப்படித் தனிமையில் யாருமில்லாதவள் போல் அமர்ந்திருந்தது கிருஷ்ணாவின் மனதை பாதித்ததே, இப்பொழுது அவன் அவளைத் தேடிச் சென்றதன் காரணம்.

கிருஷ்ணா அவளருகே வந்து அமரும் வரையிலும் கூட, தனிமையில் உருகும் அனிச்சமாய், தனக்குள்ளேயே… தன்னவனின் நினைவிலேயே உருகிப்போய் அமர்ந்திருந்தவள், கிருஷ்ணாவின் மெல்லிய இதமான தலை வருடலிலேயே சுயநினைவுக்கு வந்தாள்.

அந்த ஒரு நொடியிலே பூவுக்குள் ஊற்றெடுக்கும் துளி தேனாய் அவள் மனமெங்கும் அவன் காதல் துளிர்விட, கண்கள் கண்ணீர் மழை பொழிய, இமை எனும் குடையும் முழுதாய் அங்கு நனைந்திட, ஒரு விசும்பலுடன் அவன் மார்மீது சாய்ந்தாள் அபி.

அவளை அப்படி அணைத்தவாறே தங்களது அறைக்குள் கூட்டி வந்த கிருஷ்ணா, உள்ளே வந்த பின்பும் அவளை விட்டு விலகாது அவளை அணைத்தபடியே அசையாது நின்றிருந்தான்.

பின்னர் சிறிது நேரம் கழித்துத் தானே விலகியவன், “அபி… உன் மனசுல என்ன இருந்து இப்படி அழுத்துது? எதனால நீ என்ன விட்டு அப்போ போன? அந்தச் செமஸ்டர் லீவ்ல உனக்கு என்னதான் ஆச்சு?” என்று மென்மையாகவே அவளைக் கரைதிட முனைந்தான்.

ஆனால் அதுவரை மெல்ல மெல்ல உருகிக் கொண்டிருந்தவளோ, அவனது இந்த ஒரு கேள்வியில் மீண்டும் கடினப்பட்டு விட, அவனை விட்டு நன்றாகவே விலகி தூரம் நின்று, “அத பத்தி மட்டும் நீங்க எதுவும் என்கிட்டே கேட்காதீங்க கிருஷ்ணா” என்றுவிட்டு திரும்பி நின்று கொண்டாள்.

இப்படித் தனக்குள்ளே முடங்கிக் கொண்டு, உள்ளுக்குள் பூட்டிக் கொண்டிருப்பவளை என்ன தான் செய்வது?

ஆனால் அடம்பிடிக்கும் குழந்தை அவள். அவளைக் கெஞ்சியோ கொஞ்சியோ தான் அவளை அவளுக்கே உணர்த்தவே முடியுமென்றால், இருக்கும் எல்லாக் கதவுகளையும் தட்டவும் வேண்டும், சில சமயங்களில் முட்டவும் வேண்டும் தான்.

எனவே தனக்கு முதுகு காட்டி நிற்கும் தன்னவளை பின்னோடு சென்று அவளது தோள் பற்றி மிருதுவான குரலில், “அபி, நான் உன்கிட்ட இனி பழசு எதையும் கேட்கல. ஆனா இப்ப நிகழ்காலத்த பத்தி பேசலாம் இல்லையா? இப்ப இந்த நொடி துடிக்கற என்னோட இதயம் உன்னோட காதலுக்காகத் தான் ஏங்குதுனு உனக்குத் தெரியலையா?” என்று தவிப்புடன் அவன் கேட்க, சட்டெனத் திரும்பியவள் விழிகள் கலங்கியிருந்தன.

அந்த விழிகளுக்குள்ளே தன்னை முழுதாய் நிரப்பியபடி இன்னும் நெருங்கி சென்றவன், “அதே மாதிரி இந்தக் கண்ணீரும் உனக்குள்ள என்மேல இருக்கற காதலால தான?” என்று அவன் கேட்ட அந்நொடி, “கிருஷ்ணா” என்ற ஒரு சிறு கதறலுடன் அவனைக் கட்டிக் கொண்டாள் அப்பதுமை.

ஆனால் அது மட்டும் போதுமா அவனுக்கு? அபியின் வாய்மொழி உத்திரவாதத்தைத் தான் அப்பொழுது வேண்டினான் கிருஷ்ணா.

கருநீல விதானத்தில் பால் பொழியும் வெண்மதியாய் இருக்கும் அவளது அந்தப் பளிங்கு முகத்தினைத் தனது இரு கைகளிலும் ஏந்தியபடி, “நீ உணர்ச்சிவசப்படாம பதில் சொல்லு டா… உனக்கு இன்னமும் என் மேல அதே காதல் இருக்கு தான?” என்று அவன் கேட்டிட, அவள் ‘இல்லை’ என்பதாய் தலையசைத்தாள்.

அதில் அதிர்ந்து அவன் தனது கரங்களை விலக்கிட, அவளே அவன் கைகளை எடுத்து மீண்டும் தன் கன்னங்களோடு இழைத்தபடி… “முன்ன இருந்த அதே காதல் இப்போ எனக்குள்ள இல்ல, ஆனா இத்தனை வருஷத்துல அது கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து அளவே இல்லாம பெருகிப் போய்க் கிடக்கு. உங்ககிட்ட எவ்வளவு தான் என்ன… என் காதலை நான் அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் தீராத… தீர்ந்து போகாத அளவுக்கு நாளுக்கு நாள் பெருகிட்டே இருக்கு” என்று அவள் கூறியதும், அவனுக்குள் ஊற்றெடுத்த காதல் சூழலில் அவளைச் சுழற்றி… இறுக்கி… காற்றுப்புகும் இடைவெளி கூட இனி தங்களுக்குள் இருக்கக் கூடாது என்று எண்ணியவனாய் அவளை அணைத்தான்.

எலும்புகள் நொறுங்கும்படியான அவ்வணைப்பிலேயே அவர்களுக்குள் இருந்த தளைகள் யாவும் கட்டுடைத்து கரைபுரளும் வெள்ளம் அணையுடைத்து இறுதியில் அன்புடைத்தது.

அதுவரை அபியின் கோபத்திலும் கூடக் காதல் வளர்த்தவன், இப்பொழுது அவளது மனமறிந்த பிறகு காதலை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தினான்.

கழுத்துவரை கொண்ட ஆசையது முழுதும் படர்ந்து மூச்சடைத்த பொழுதும் கூட, காதலையே துணைக்கழைத்து, அவளையே முழுதும் சுவாசித்து, அவளின் நாணம் பறித்து, உயிராய் உடலெங்கும் பரவி, தனக்குள் அவளை நிரப்பி, தானும் நிறைந்து இத்தனை வருடம் காதல் விரதம் கொண்டிருந்தவன், ஒரு வழியாய் தனது விரதம் முடித்தான்.

காதல் படித்து, அவனுள் திளைத்து, மனம் நிறைந்து, அன்று தான் நிம்மதியான உறக்கம் கொண்டிருந்தாள் அபி.

மெல்ல மெல்ல இரவு மகளை ஆக்கிரமித்து, முழுதாய் தனது விஜயத்தை நிலைநிறுத்தி புவியைக் கண்டு அதன் மீது செவ்வானம் போர்த்த மலை முகத்தின் மேல் பள்ளியெழுந்தான் பகலவன்.

அந்தவொரு அழகான புலரலில்… சிறு சிட்டுக்குருவியின் மதுரக்குரலில் விழி திறந்த அபி… இன்னமும் தன்னவனின் அணைப்பில் இருப்பதை உணர்ந்து உடலெங்கும் இரவில் பூத்து… அப்பொழுதே உதிர்ந்த வெட்கமலர்கள் மீண்டும் பூக்க, அந்த வைகறையின் செவ்வண்ணம் கொண்டு முகமெங்கும் அரிதாரம் பூசிட, அவனை விட்டு விலகி எழுந்து குளிக்கக் கிளம்பினாள்.

மழைவிட்ட பொழுதும் நீர் தெளிக்கும் மரக்கிளைகள் போல, அவனை விட்டு விலகிய பின்னும் கூட, அவனது ஸ்பரிசமும் சுகந்தமும் அவளைச் சூழ்ந்திருந்தது.

அவன் நினைவிலே இருந்தவள்… எவ்வளவு நீர் கொண்டு குளித்த பின்னும் கூட, அவனால் தான் பூண்ட வெட்கச் சிவப்பு கரையாது குளியலறையில் இருந்து வெளியே வந்தாள்.

அவள் தன்னை விட்டு எழுந்து சென்றதுமே, கிருஷ்ணாவிற்கு விழிப்புத் தட்டி விட்டது. அவள் குளிக்கும் அரவம் உணர்ந்தவன், அவள் வெளியே வரக் காத்திருந்தான். அவன் காத்திருப்புக்கு முடிவுரை வாசித்து வெளியே வந்தவளை, விழுங்கும் விழியுடன் ஆசையுடன் நோக்கினான்.

அவன் பார்வையிலேயே மீண்டும் கரைந்தவள், ஒரு செல்ல மிரட்டலுடன் அறையை விட்டு வெளியேறினாள்.

பைந்தமிழாய் கொஞ்சிச் செல்லும் பெண்ணவளின் முந்தானையிலே முடிந்து கொண்டது, காதல் கொண்டவனின் ஆசை மனது.

அவளுக்குப் பின்னே செல்லத் துடித்த மனதை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டவன், இன்னும் சற்று நேரம் அவள் நினைவுகளுடன் இருக்கலானான்.

அந்தப் பொழுதிலும் கூட அவனுக்கு அவளைப் பற்றிய பேராச்சர்யம் தான். இவ்வளவு காதலை மனதுள் அடக்கிக் கொண்டு எப்படித்தான் அவளால் அவனிடம் அவ்வாறு கோபத்தில் காய முடிந்ததோ?

ஆனால்… ஏதோ ஒன்று அவள் மனத்தைப் பாதிக்கும்படியாக நிச்சயமாக நடந்திருக்க வேண்டும் என்பது மட்டும் அவனுக்கு உறுதிப்படத் தெரிந்தது.

அது என்னவென்பதை சொல்ல அபி தயாராக இல்லை. வேறு யாரிடம் கேட்பதென்றால்… இது பற்றிய தகவல் அபிக்கும், அவள் சார்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கலாம். அப்படி அவளைச் சார்ந்தவர்கள் யாரென்றால், அது அபியின் தாய் தான். அவரும் இப்பொழுது சுயநினைவில் இல்லை.

என்ன தான் அபி அவள் மனதிலிருக்கும் காதலை அவனிடம் பகிர்ந்து விட்டாலும், அவனை முழுதாய் ஏற்றிருந்தாலும், அவளுக்குள்ளிருக்கும் உறுத்தல் அவனுக்கு உணரவே செய்தது.

அவனவளின் மனதிலிருக்கும் சிறு சஞ்சலம் கூட அவனால் தாங்கவியலாது என்றிருக்க, இப்படி அவளையே மறைத்து எங்கோ ஒளித்து வைத்திருக்கும்படியான ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.

அதற்கும், இவள் அப்படித் தாத்தாவிடம் கோபப்பட்டதற்கும் ஏதாவது சம்மந்தம் இருக்குமா என்றெண்ணி, அவள் கூறாத விடுகதைக்கு விடைதேடினான் கிருஷ்ணா.

மறுபுறமோ, அவர்கள் அறையை விட்டு வெளியே சென்ற அபி, மீண்டும் தஞ்சம் அடைந்தது தோட்டத்தில் தான். முன்னிரவு எந்த இடம் தனது சோகங்களை எல்லாம் தாங்கியதோ… எந்த இடம் தாய் மடியெனத் தன்னை ஏந்தியதோ… அந்த இடத்திற்கு இப்பொழுது மழை பொழிந்த மண் தரையென மிருதுவான மனதோடு வந்து சேர்ந்தாள் அவள்.

அவள் மனமெங்கும் பூக்காடு பூத்திருக்க, பிரபஞ்சத்தில் கூத்தாடும் ஆதி சக்தியைப் போல, ஆனந்தக் கூத்தாடத் தோன்றியது அவளுக்கு. அவளது அந்தப் பேரானந்தத்தைப் பரமானந்தமாக மாற்றும் நிகழ்வொன்று அன்று அவளுக்காகக் காத்திருந்தது.

சிறிது நேரம் தோட்டத்தில் சுற்றி அந்த விடியற்காலை பொழுதின் அழகில் லயித்திருந்தவள், தோட்டத்து மலர்களைப் பறித்து, அதைப் பூஜையறையில் இருந்த சாமிப்படங்களுக்கு வைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அங்கு வந்தார் நளினி.

அவள் தாயைப் போலவே, அவளது மனத்தை முகம் கொண்டே படிப்பவர் அல்லவா அவர். எனவே, இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து பூஜை அறை பக்கமே செல்லாதிருந்தவள், இப்பொழுது இந்த அதிகாலை நேரமே குளித்து, மலர் தொடுத்து புது மலரிதழாய் முகம் மலர்ந்து புதுப்பொலிவுடன் திகழ்பவளைப் பார்த்ததுமே, அவருக்கு ஏதோ மகிழ்ச்சிகரமான விஷயம் காத்திருக்கிறது என்று புரிந்து விட்டது.

அவரும் பூஜையறைக்குள் வந்து காலை பூஜை முடித்தது பிரசாதம் வழங்க, அவர் கொடுத்த குங்குமத்தை முதன் முதலாக நெற்றியின் வகிட்டில் அணிந்தவள், அவர் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றாள்.

அந்த ஒரு செய்கையிலே அபி, கிருஷ்ணாவை முழுதாய் ஏற்றுக் கொண்டாள் என்றுணர்ந்த அந்தத் தாயோ, மனம் கொள்ளா மகிழ்வுடன் அவளை அணைத்துக் கொண்டார்.

பேசித் தீராத கதைகள் அனைத்தும் அபியும் நளினியும் பேசியவாறே சமைத்து முடித்திருக்க, காலை டிஃபனுக்கே தன்யாவையும் தருணையும் அழைத்தாள் அபி.

அவள் போன் செய்து அவர்களை இங்கே அவர்கள் வீட்டிற்கு வரச் சொன்னதுமே, தானும் அவளுக்கு ஒரு நல்ல செய்தி கூறப் போவதாய் சஸ்பென்ஸ் வைத்தாள் தன்யா. அது என்னவென்று அபி எவ்வளவு வற்புறுத்தியும் தன்யா கூறவில்லை.

தன்யாவும், தருணம் இங்கு வந்த உடனே அபி மற்றும் கிருஷ்ணாவின் முகத்தில் பூத்திருந்த சந்தோச ரேகைகளை அனுபவத்தில் முதிர்ந்தவர்களாய் பார்த்ததுமே உணர்ந்து, புரிந்து கொண்டவர்கள், தாங்களும் உள்ளூர மகிழ்ந்து போயினர்.

அவர்கள் வீட்டிற்குள் வந்த உடனே ராஜ உபசாரம் தான். தன்யா கூறிய அந்தச் சஸ்பென்ஸ் என்னவாயிருக்கும் என்பதைக் கூட மறந்து தனது மகிழ்ச்சியைப் பங்கிடுவதிலேயே முனைப்பாய் இருந்தாள் அபி.

இப்போதைக்கு அவள் மனதை உணர்ந்து ரதிக்கு அடுத்தபடியாக இருக்கும் ஒரே தோழி அபிக்கு, தன்யா மட்டுமே. அதனாலேயே தன்யாவின் தமையன் மீதிருந்த காதல் மழையின் சாரல் கொஞ்சம் அவள் மீதும் தெளித்தது.

அவர்கள் இருவரும் உணவருந்தி முடிக்கும் வரையிலும் அவர்களைப் பேசவே விடவில்லை அபி. ஆனால் அனைவரும் சாப்பிட்டு முடித்து விட்டுப் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், தன்யா சரியாக அதை மீண்டும் ஞாபகப்படுத்தினாள்.

“ஹே அபி, நான் இன்னைக்கு உனக்கு ஒரு சஸ்பென்ஸ் இருக்குன்னு சொன்னேன் இல்ல? அத பத்தி நீ கொஞ்சமாவது கண்டுகிட்டியா?” என்று போலிக் கோபத்துடன் முறைக்க, அப்பொழுது தான் அந்த விஷயமே ஞாபகத்திற்கு வந்தது அபிக்கு.

உடனே தனக்குத் தானே தலையில் குட்டிக் கொண்டவள், “அட மறந்தே போய்ட்டேன் தனு. சொல்லு சொல்லு அது என்ன சஸ்பென்ஸ்?” என்று கேட்கலானாள்.

அதற்கு, “க்கும்… இதுதானா உன்னோட டக்கு?” என்று முறைத்தவளை

“என் அம்மா செல்லம் இல்ல? என் அப்பா செல்லம் இல்ல, சொல்லிடு கண்ணு…” என்று கொஞ்சலாய் கேட்கவும், சட்டெனச் சிரித்துவிட்டு, தன் கணவனிடம் விஷயத்தைக் கூறும்படி கூறினாள் தன்யா.

அவனோ அபியிடம், “இத சஸ்பென்ஸ்னு சொல்றத விட, சர்ப்ரைஸ்னு சொல்லலாம்…” என்ற பீடிகையுடன் தொடங்கியவன், “அது என்ன ஸ்வீட் சர்ப்ரைஸ்ன்னா… உன் அம்மா உன்ன இன்னைக்குப் பார்க்க போறாங்க” என்று சந்தோஷக் கூச்சலுடன் கூறினான்.

அந்தச் செய்தி செவியில் பட்டு மூளையைத் தொட்ட அந்நொடி, அபியின் முதுகுத்தண்டு சில்லிட்டு சிலிர்த்துப் போனது.

(தொடரும் – சனிக்கிழமை தோறும்)

பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9  பகுதி 10   பகுதி 11  பகுதி 12  பகுதி 13  பகுதி 14  பகுதி 15  பகுதி 16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அழைத்தான் அம்பலத்தான் (இறுதிப் பகுதி) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

    குடம்பி (சிறுகதை) – ✍ நிழலி