in

காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 11) – ✍ விபா விஷா, அமெரிக்கா

காதலாய்த் ❤ (பகுதி 11)

செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9  பகுதி 10

நித்தம் நித்தம் உனைத் தேடும்

எந்தன் ஒற்றை அணுவதுவும்.,

சிறுபிள்ளையெனவே..

கட்டிக்கொண்டு ஒட்டிக்கொள்ளும்

நம் காதல் தருணங்களை..

தாத்தாவிடம் எவ்வளவு பேசியும் அபியால் அந்தக் கல்யாணத்தை நிறுத்த இயலவில்லை என்பது அபிக்கு மனதிற்குள் பெரும் அழுத்தம் கொடுக்க, அவள் உள்ளத்தின் எங்கோ ஒரு ஓரத்தில்.. சிறு ஓரத்தில்… அவள் இந்தத் திருமணம் நடக்க வேண்டுமெனவே விரும்பியிருந்தாள்.

மனம் கொண்ட மன்னவனை மணக்கும் நாள் தேடி மனதிற்குள் ஏங்கியிருந்தாள் அபி. இந்நிலையில் அபிக்கே இப்படி என்றால், கிருஷ்ணாவிற்கு எப்படி இருந்ததாம். அவன் இதுவரை நினைத்ததைச் சாதித்தே காட்டியவன். தான் மனதிற்குள் விரும்பிய ஒன்று நடக்காமற் போனதென்பதே அவனுடைய வரலாற்றில் இல்லை.

இப்பொழுது அபியாக அவனது வீட்டிற்கு வந்திருக்காவிடினும், அவளுக்கு அவன் கெடு வைத்திருந்தது போல, சரியாக ஐந்து வருடம் முடிந்த பிறகு அவளை எப்படியாவது கண்டுபிடித்து நிச்சயமாக அவளை மணம் செய்திருந்திருப்பான்.

இப்பொழுது கனவில் தேடிய சொர்க்கம் கைக்கெட்டும் தூரத்தில் வந்ததும்… மலையின் மடி தவழ்ந்து நிலம் வீழும் பேரருவியில் மூச்சடைக்க நனைகின்ற பரவசம் அவனுள்.

அவனின் அவள்… அவனவள்… இந்த மாயோனின் வேங்குழல் நாதமென வீற்றிருக்கப் போகும் அவளை, அந்த அக்கணமே கைக்குள் அடைத்து, நெஞ்சினுள்ளே புதைத்து, அவள் உயிரோடு தானும் கரைந்திடத் தான் தோன்றியது அவனுக்கு.

ஆனால் அபிக்கோ, மனம் கொள்ளா பேராசை மடியில் வந்து விழுந்த பொழுதும், அதைச் சட்டென உதறிவிட்டு எழுந்தோடிச் செல்லும் நிலை.

அவளது மாயவனின் மீதிருக்கும் ஆசை ஒரு பக்கமும், அவள் இந்த வீட்டுப் பெண்ணல்ல என்னும் உண்மை வெளிவந்தால் என்னவாகுமோ என்ற அச்சம் மறுபக்கமும் அவளை இழுத்து இழுத்து அலைக்கழிக்க, மனமும் உடலும் சோர்வுற்ற நேரம் இதற்கு மேல் தாங்க இயலாதென, தனது அன்னையைப் பார்க்காது இது தீரவும் தீராதென முடிவெடுத்த பெண்ணவளோ, வீட்டில் யாரிடமும் எதுவும் தெரிவிக்காமல் மருத்துவமனைக்கு விரைந்தாள்.

அங்குச் சென்று அவள் அம்மாவின் கையைப் பற்றியவாறு விழியில் திரண்டு அலைகடலாய் புரண்டு வரும் கண்ணீரை மிகவும் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்தி வைத்திருந்தாள். மானசீகமாக அவரோடு வார்த்தையாடவும் செய்தாள்.

“அம்மா… எனக்கு இப்போ என்ன செய்யறதுன்னு தெரியல மா.. இவங்க எல்லாரும் நான் ரதின்னு நினைச்சுட்டு எனக்கும் கிருஷ்ணாக்கும் கல்யாணம் செய்ய முடிவு செஞ்சுட்டாங்க. ஆனா.. நான் லயா ம்மா.. ஒரு வேலைக்காரியோட பொண்ணு. என்னால எப்படிம்மா ரதியோட இடத்தை எடுத்துக்க முடியும். I feel guilty.. and I cannot marry krishna with this guilty conscious. எனக்கு ஏதாவது ஒரு வழி காட்டுங்க அம்மா..” என்று மனதிலிருப்பவை எல்லாம் அவரிடம் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள்.

அன்று மாலை வரையிலும் அவள் துளசியை விட்டு அகலவில்லை. அந்தி சாய்ந்து இருள் கவியத் துவங்கவும், அவளுக்குச் சுற்றுப்புறம் புரிந்து அதன் பின்னே வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்தாள் அபி.

ஆனால் இங்கோ அவளை நித்தமும் கண்ணுக்குள் கருமணியாய் வைத்து காக்க துடிப்பவனுக்கு இது எப்படி இருக்கிறதாம்.. அவளைக் காணாது வீட்டையே ரணகளப்படுத்தியவனை, அவன் தங்கை தன்யா தான் அடக்கினாள்.

அவளுக்கு எப்படியும் தெரியும், இந்தக் கல்யாண விஷயம் பற்றிய முடிவின் பிறகு அவள் எப்படியும் தனது அம்மாவைப் பார்க்க சென்றிருப்பாள் என்று.

கொஞ்சம் நிதானமாக வம்சி யோசித்திருந்தால் அவனுக்கும் இது புரிந்திருக்கும் தான். ஆனால் அவன் தான் இப்பொழுதே அவளைத் தனக்குள் நிறைத்திடத் துடித்துக் கொண்டிருக்கிறானே.

அதனால், “அபி எங்க.. எங்க அபி.. அபிய காணல..” என்று வீடெங்கும் திரிந்து விட்டு, இறுதியாக வெளியே எங்கேனும் சென்றாளா என்றறிய கிளம்பியவனைச் சிறு சிரிப்புடன் தடுத்தாள் அவன் தங்கை.

“அண்ணா எங்க போற? எதுக்கு இத்தனை அலப்பறை?” என்று நிதானமாகக் கேட்டவளிடம்

“தனு நான் தான் அபியை வீட்டுல காணோம்னு சொல்றேன்ல? அவளைத் தேடத் தான் கிளம்பறேன்” என்று கூறினான் கிருஷ்ணா.

அதைக் கேட்டு மேலும் நகைத்தவள், “ஏண்ணா அவ என்ன வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடக்கணுமா? அவ, அவளோட அம்மாவை பார்க்க போயிருக்கலாம். இல்ல பக்கத்துல அவ பிரண்டு வீடு இருக்குன்னு என்கிட்டே ஒரு முறை சொன்னா, அங்க கூடப் போயிருக்கலாம். நீ ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்யற?” என்று கேட்டவளுக்குச் சிறு முறைப்பையே பதிலாகத் தந்தான் அவன்.

“அவ எங்க வேணாலும் போகட்டும், ஆனா வீட்டுல சொல்லிட்டு போகணும்ல?” என்று எரிந்து விழுந்தவனிடம்

“ஏன் அவ பாட்டிகிட்ட சொல்லிட்டு தான் போனா” என்கவும்,

“பாட்டிகிட்ட மட்டும் சொன்னா போதுமா? என்கிட்டயும் சொல்லணும்ல? அப்படி இல்லனா நான் போன் பண்றப்போ, அத எடுத்தாவது அவ எங்க இருக்காள்னு சொல்லலாம்ல?” என்று கேட்டவன், மேலும் அவள் சரியாக எங்கே இருக்கிறாள் என்றும் வினவினான்.

ஆனால், அபி பாட்டியிடம் சொல்லிவிட்டு தான் வெளியே சென்றாள் என்று தனு கூறியது உண்மையல்ல அல்லவா… அதனால் அவள் கொஞ்சம் திணறத் தான் செய்தாள்.

அது மட்டுமின்றி, அவள் வெளியே சென்று ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் கிருஷ்ணா இப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறானே? எவ்வளவு நேரம் தான் அவள் வீட்டுக்குளேயிருப்பாள்.

அதனால் அவள் எங்கே போனாள் என்று தெரிந்தாலும் கூடச் சொல்லக் கூடாது. இன்னும் சிறிது நேரம் கழிந்த பிறகு வேண்டுமானால் அபி எங்கே இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டு அதன் பின் கிருஷ்ணாவை அனுப்பி அவளை அழைத்தது வரச் செய்யலாம் என்று எண்ணியவளாக,

“அவ இப்போ தான் வெளிய போயிருக்கா கிருஷ்ணா, இன்னும் கொஞ்சம் நேரம் ஆகட்டும் அப்பறம் சொல்றேன். அதுக்கப்பறம் நீ போய்க் கூட்டிட்டு வா. இப்படி ரொம்ப இறுக்கி இறுக்கி வச்சுருக்கக் கூடாது” என்று வயதில் இளையவள், அனுபவத்தில் முதிர்ந்தவளாகத் தன் தமையனுக்கு அறிவுரை வழங்க…

அதற்குக் கிருஷ்ணாவோ, “நான் பொறுமையா தான் இருந்தேன் தனு… அஞ்சு வருஷம் பொறுமையா இருந்தேன். இப்போ அவ எனக்குத் தான்னு முடிவாகிடுச்சு. இனியும் எப்படி நான் பொறுமையா இருக்கறது? எனக்கு… என்கிட்டே என் கண் பார்வையில அவ வேணும். இத்தனை நாள் எனக்கே தெரியல… என் மனசு அவளுக்காக இவ்வளவு ஏங்குதுன்னு. இப்போ தாத்தா கூடிய சீக்கிரம் எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்ன்னு சொன்னதுக்கு அப்பறம், அவ என் பார்வையில இருந்து ஒரு நிமிஷம் மறையறத கூட என்னால தாங்க முடில” என்று ஆற்றாமையுடன் ஏதோ ஆவேசம் வந்தவன் போல அவன் பேச, அவர்களுக்கு இடையிலான விஷயம் என்னவென்று முழுதாகப் புரியாததாலும், இவ்வளவு நாட்களுமின்றி இப்பொழுது இப்படி விசித்திரமாக நடந்து கொள்ளும் அவனது நடத்தையால், கிருஷ்ணாவை அந்நியனைப் பார்ப்பது போலப் பார்த்தாள் தனு.

பின்னே என்னவாம்… தன் மனதின் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல், கடப்பாரை முழுங்கியா காத்தவராயன் போல இருப்பவன், இன்று தன்னிலை மறந்து நிதானமின்றிப் பேசுவதைக் கண்டவளுக்கு உள்ளே அதிராதா என்ன?

அதனாலேயே அவனைச் சற்று மிரட்சியுடன் அவள் நோக்க, தனுவின் பார்வையில் மாறுதலை உணர்ந்த கிருஷ்ணா… தனது பேச்சை கட்டுப்படுத்திக் கொண்டு தங்கை கூறியது போலச் சிறிது நேரம் காத்திருக்க முடிவு செய்தான்.

ஆனால் அதெல்லாம் இன்னும் எவ்வளவு நேரம் தாக்குப் பிடித்ததாம்… வெறும் ஒருமணி நேரமே. அவன் அமைதியடைந்து சிறிது நேரத்திற்குள்ளாகவே, அபியை உடனே பார்த்துவிடாமல் இந்தத் தவிப்பு தீராது என்பது மட்டுமின்றி , காரணமே இல்லாமல் இந்தக் கல்யாணத்தை வேண்டாமென்கிறாளே, ஒருவேளை யாரிடமும் சொல்லாமல் எங்கேனும் போய்விட்டாளோ, மீண்டுமொரு முறை அவளை இழந்து விடுவோமோ என்ற பயமும் சேர்ந்து அவனை வெறி கொள்ள வைத்திருந்தது.

அதனால் தனுவிடம் மீண்டும் மீண்டுமாய் அபி இருக்கும் இடத்தைப் பற்றி விசாரித்தவாறு இருந்தான் கிருஷ்ணா. தனுவும் சற்று முன்பாகவே அவர்கள் மருத்துவமனைக்குப் போன் செய்து செய்து அபி அங்கே தான் இருக்கிறாள் என்பதை அறிந்து கொண்டிருந்தாலும், அவளது மனஉணர்ச்சிகளுக்கு மதிப்பு அளித்து, கிருஷ்ணாவிடம் அவள் எங்கே இருக்கிறாள் என்பதை இன்னுமும் கூறவில்லை.

ஏனென்றால், தானும் ஒரு பெண்ணாய், திருமணம் முடிவான பின் ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறிருக்கும் என்பதை அறியாதவளா அவள்?

ஆமாம்.. அவளும் அப்பருவத்தைக் கடந்தவள் தானே? திருமணம் முடிவானதென்றால், ஒரு பெண்ணுக்கு அதைப் பற்றிய ஒரு மகிழ்ச்சியான உணர்வு மனதெங்கும் விரவினாலும், தனது தாய், தந்தையைப் பிரிய நேருமே என்ற எண்ணம் உள்ளுக்குள் உழல்வதென்பது இயல்பு தானே. அதனாலேயே பெண்களின் மனம் அந்தச் சமயத்தில் இன்னும் தனது பெற்றோரை அதிகம் தேடும், குறிப்பாக அம்மாவை.

சும்மாவே அப்படி என்கிற போது, அபி இருக்கும் இந்தச் சூழ்நிலையில் அவளது மனம் எப்படி இருக்கும் என்பது புரிந்த தனு, அபி தானாகவே வீடு திரும்பட்டும் என்று எண்ணினாள். ஆனால் இதை எல்லாம் புரிந்து கொள்ளும் மனநிலையில் அவள் அண்ணன் இல்லை என்பதை உணர்ந்தாலேயே, அவள் இருக்குமிடம் கூறாது, தனது வார்த்தையாலேயே கட்டிப் போட்டிருந்தாள்.

கிருஷ்ணாவின் பொறுமை சிதறும் பொழுது தன்யாவின் ஸ்கூட்டியில் வீடு வந்து சேர்ந்திருந்தாள் அபி. அவள் வந்ததும் ஓடிச் சென்றவன், கோபமாய்ப் பார்க்க முயன்றான். ஆனால் அவனால் முயற்சி செய்யத் தான் முடிந்ததே தவிர, அதைச் செயலாக்க முடிந்ததா? இல்லையே.

பின்னே.. அவனது கோபப் பார்வையைப் பார்க்கவோ, அதைத் தாங்கவோ அபி அவனைக் கண்டு கொண்டால் தானே. கிருஷ்ணா போய் அவள் முன்னே நிற்கவும், குனிந்த தலை நிமிராது வண்டியைப் பூட்டி விட்டு அப்படியே வீட்டிற்குள் நுழைந்து விட்டாள்.

அதனால் அங்கே இவன் தான் ‘ங்கே..’ என்று நிற்க வேண்டியதாய்ப் போயிற்று.

அதைக் கண்ட தன்யா, “அம்மா.. இங்க ஆறடியில ஒரு பெரிய பல்ப் நின்னுட்டு இருக்கே உங்களுக்குத் தெரியுதா?” என்று கலாய்க்கவும், அவளை விளையாட்டுக்கு அடிப்பது போலத் துரத்திக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான் கிருஷ்ணா.

அதன் பின்பு தனுவும், நளினியும் இரவு சமையலை மேற்பார்வையிட சென்றுவிட, அபி எங்கே என்று தேடிய கிருஷ்ணாவிற்கு அவளின் உள்ளுக்குள் பூட்டப்பட்ட அறை தான் விடையாகக் கிடைத்தது.

‘சும்மா இவளுக்கு என்னவாம்…’ என்று மனதிற்குள் கடுப்பாக நினைத்தவாறு, அவளது அறைக்கதவை தட்டப் போனவனை, அரங்கநாதனும், கோவேந்தனும் பிசினஸ் பேச அழைக்க, வேறு வழியின்றி அப்போதைக்கு அவ்விடம் விட்டு அகன்றான் அவன்.

அங்கே அறைக்குள் இருந்தவளோ, அவளது குடும்பப் புகைப்படத்தைக் கையில் வைத்து பார்த்துக் கொண்டு இருந்தாள். அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கை தவறி அந்தப் புகைப்படம் கீழே விழுந்துவிட, அதன் சட்டங்கள் பெயர்ந்து கண்ணாடி தரையில் பட்டு நொறுங்கியது.

உடனே பதட்டத்துடன் கீழே குனிந்து உள்ளிருக்கும் புகைப்படத்தை மட்டும் எடுக்க விழைந்தவள், ஒரு கணம் நிதானித்துப் பின் திகைத்தாள். ஏனென்றால்… அதில் ஒன்றல்ல இரண்டு புகைப்படங்கள் இருந்தன. வெளிப்படையாக இருந்த புகைப்படத்திற்குப் பின்னே.. மற்றொன்று வேண்டுமென்றே மறைத்து வைக்கப்பட்டிருந்தது. ரொம்ப வருடங்களுக்கு முன்னர் எடுத்ததாக இருக்க வேண்டும் அது.

அந்த மற்றொரு புகைப்படத்தில் இருப்பவர்களில் ஒருவர் தன்னைப் பெற்ற தாய் , மற்றவர் தன்னை வளர்த்த தாய். இருவருமே அவர்களுடைய இருபதுகளில் இருந்தனர்.

அதை எதற்காக இவ்வாறு மறைத்து வைத்திருக்கிறார்கள் என்ற சந்தேகத்துடன் எடுத்துக் கொஞ்சம் ஊன்றிக் கவனித்தவளுக்கு, ஒரு பேருண்மை உடலெங்கும் மின்சாரமாய்த் தாக்கியது.

அந்தக் கசப்பான உண்மையின் விளைவை உணர்ந்தவள்.. இனி இந்த வீட்டில் இருப்பதே கூடாது என்னும் முடிவை எடுத்தாள்.

(தொடரும் – சனிக்கிழமை தோறும்)

பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9  பகுதி 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 23) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

    பிரசவத்தில் மரணித்த ஒட்டியாணம் (சிறுகதை) – ✍ மரு. உடலியங்கியல் பாலா