in

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 23) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

அழைத்தான்...(அத்தியாயம் 23)

செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

காப்பாற்றிய சர்வோதயா

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இணைப்பு

தேர் திருவிழா..! 

ஆண்கள், பெண்கள் என வேறுபாடின்றி தேரை இழுத்துக் கொண்டிருக்க, குழந்தைகள் தேர்வடத்தைத் தொட்டுக் கும்பிட்டவாறு இருந்தனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த லட்சுமிக்கு, ஒரு கணம் உடலெங்கும் கண்கள் போல், வியப்பு. அதற்குக் காரணம், அங்கு பார்த்த காட்சி.

கூட்டத்தின் ஒரு பகுதி மட்டும், லேசாக ஆடத் தொடங்கியது. அவள் உணர்ந்தாலோ இல்லையோ, முதலில் மூளை தன் கணவனைப் போய் பற்று என்று அழுத்தமாக சொன்னது. அவளும் அவ்வாறே செய்தாள். அப்போது அடுத்த நியாபகம் மூளையில் அலை மோதியது.

திருமண மேடையில் இருக்கும் போது கூட, இதே போல் அதிர்வு ஏற்பட்ட நினைவு எழவும், “என்னங்க..” என்று சொல்ல வார்த்தை எடுத்தாள். பயத்தில் பேச்சு வரவில்லை. தொண்டை அடைத்துக் கொண்டது. 

அப்போது கூட்டத்தில் ஒரு குரல். “சுனாமி வரப்போவுது… எல்லோரும் ஒடுங்க… ஒடுங்க…” ஓரமாய் நின்றிருந்த பத்திரிகையாளரின் குரல் அது. அனைவரும் தலை தெறிக்க ஓடினர்.

உடனே அந்த விஷயம் காற்றோடு கலந்து, காற்றுப்பையை அடைத்த பெரும்பாலான மனிதர்களை எட்டியது. கூட்டத்தில் மிதிப்பட்டே சில உயிர்கள் போனது. ஒரு கூட்டம் மட்டும், தேரை இழுத்து நிலைக்குள் நிறுத்தியது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த லட்சுமி, ஆடிப்போனாள்.

“அனைவரையும் ஆட்டி வைக்கும் அம்பலத்தானுக்கே அடைக்கலமாக ஓர் இடமா? ஆனந்த தாண்டவம் ஆடும் அவர்க்கு, நிலைக்கு வரவேண்டிய கட்டாயமா?” என்று நினைத்தாள். 

பாலச்சந்தர், ராமலிங்கம் இருவரும் முதலில் கீழிறங்கி உதவச் சென்றனர். கிருஷ்ணன் உடனடியாக, தீயணைப்பு துறை, போலீஸ் என உதவிக்கு ஆட்களை இணைப்பில் அழைத்தான்.

ராமலிங்கம், தேர் பார்க்க வந்த தன் மனைவியிடம், “யமு..! மனோவும் நீயும் இங்கேயே இருங்க. கிருஷ்ணனோட மனைவி லட்சுமி கூட ஒரே அறைல இருங்க..” என்று கத்திக் கொண்டே படிகளில் இறங்கினான்.

யமுனா ஏதோ சொல்ல வந்தாள். அதை முழுமையாய் கேட்பதற்குள், ராமலிங்கம் அங்கு பார்த்த காட்சி அவனை உறைய வைத்தது. கடை வாசலில் தண்ணீர்… கிழக்கு, மேற்கு என எல்லா திக்கிலும் தண்ணீர்….. சுற்றி உள்ள இடமே பெரிய கடல் போல் இருக்கிறது… கடலில் குப்பைகள் விழ காரணமாக இருந்த மனிதர்கள், இன்று அதே கடல் நீரில் குப்பைகளாக உயிரின்றி மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்தான்.

ந்தோனேசியா..! 

இரு மாதங்களுக்கு முன்பு, யமுனாவும் ராமலிங்கமும் வந்த சுமத்ரா தீவு, இப்போது பாதிக்குப் பாதி இல்லை. அங்கு ஒரு தமிழ் நிருபர், தமிழ் குடும்பம் ஒருவரை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். ஒரு பெரியவர் பேசி கொண்டிருக்கிறார்.

“சார்… இங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, ரொம்ப பெரிய அதிர்வு. ஒரு சிலர் எங்களோட பாதுகாப்பான இடத்துக்கு வந்துட்டாங்க. மத்தவங்க மாட்டிக்கிட்டாங்க. எவ்ளோ உயிர்யா? அப்டே அடிச்சின்னு போயிடுச்சு…” என்று விசும்பினார். அத்தோடு அவர் பேசிய தமிழிலும் கொஞ்சம் வித்தியாசம் இருந்தது.

மேலும் அவர், “நீங்க கூட இங்க இருக்காதீங்க. அந்த ஆழி எவ்வளவு கோரமா இருந்தது….” என்று சொல்லிக் கொண்டே அழுதார். அதற்கு மேல் அந்த நிருபர் பேசினார்.

“உலகிலுள்ள தீயவைகளை அழித்தே தீருவேன் என்ற கர்வத்தோடு வந்திருக்கிறது என்பது சற்றுமுன் அந்தப் பெரியவர் சொன்னதில் இருந்து தெளிவாகிறது. மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும்..” என்று பேசும் போதே அவர் போட்டிருந்த ஆடையோடு சேர்த்து நிருபரையும் காற்று தள்ளிக் கொண்டிருந்தது.

சிதம்பரம் தெற்கு ரத வீதி..! 

யமுனாவும் லட்சுமியும் கடை மாடியில் நின்று கொண்டிருந்தனர். உயிரைக் காக்க பருகும் நீர், இப்படி உயிரை உறிஞ்சும் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். தேர் பார்க்க வந்தவர்களெல்லாம் தண்ணீரில் தேங்கி நின்று கொண்டிருந்தனர். நீரில் இறங்கி, ஆர்வலர்கள் உதவி செய்யத் தயாராகி விட்டனர். ஜில்லென்று காற்று முகத்தில் அடித்தது.

மனோவைக் கையிலேந்திய யமுனா திடீரென்று “ஏங்க.. அங்க பாருங்க.. அது அவரு தன..?” என்று எங்கோ கை காட்டினாள். லட்சுமியும் அங்கே பார்வையைச் சுழட்ட, பார்த்த நொடி லட்சுமிக்கு பார்வையே சுழன்று விட்டது.

பின் சமாளித்துக் கொண்டு, “என்ன இது? இவங்க ஏன் அங்க போனாங்க? பயமாவும் இருக்கு… அதே சமயம் சமூக சேவை தானே.! சரி வாங்க நாமளும் கீழ போய் நம்ம கடைக்குகிட்ட இருக்குறவங்களுக்கு உதவி செய்வோம்..” என்று பரபரத்தாள். யமுனாவும் புறப்பட்டு விட்டாள்..!

அவ்வப்போது தன் கணவர்களைப் பார்த்துக் கொண்டே, யமுனாவும் லட்சுமியும் கொஞ்சம் பேரை நீரிலிருந்து மேலே தூக்கி, கடைக்குள் அனுப்பினர். தீயணைப்பு பாதுகாப்பு வீரர்கள், போலீஸ், சமூக ஆர்வலர்கள் என்று மக்களோடு மக்களாக இருந்து, உதவிக்கரம் நீட்டினர். நடக்க இயலாததால், படகுகள், கட்டுமரங்கள் கொண்டு வரப்பட்டன. படகுகளின் உதவியோடு மக்கள் பாதுகாப்பான இடத்திற்குக் கூட்டிச் செல்லப்பட்டனர்.

ஜாதி மத பேதமில்லை என்று எத்தனை காலம் அவ்வையார் வந்து பாடினாலும், இப்படி ஏதாவது வந்தாலொழிய, மக்களிடையே இருக்கும் நஞ்சு நீங்குவதில்லை. 

அந்த சுனாமியிலும், ஒரு படகில் இரு பெண்மணிகள் பேசி கொள்கின்றனர். “ஒரு வேல அர்ச்சகர் ஒழுங்கா பதிகம் பாடலியோ?”

“ஆமா கா..! நா கூட கேள்விப்பட்டேன். நேரம் ஆனதால, பாதிலே முடிச்சி, தேர எடுத்துட்டு வந்துட்டாங்களோ? இப்போ பாத்தேளா? எல்லா அடிச்சிண்டு போயிடுச்சே..” என்று கைகளைக் கன்னத்தில் வைத்துக் கொண்டனர். படகு நேரே கடைக்குப் பக்கம் வரவும், லட்சுமி அவர்களைத் தூக்கி விட்டாள். 

இருவரும் மேலே வந்து, நேரே கடைக்குள் சென்று, தொலைக்காட்சி பெட்டியைத் தேடினர். பொம்மை செக்சனில் தொலைகாட்சி சத்தம் கேட்டு, விரைந்து நியூஸ் வைத்தனர்.

“ஸ்..ஸ்…” என்று பின்புறத்தில் காற்று அடிக்க, ஒரு நிருபர் பேசிக் கொண்டிருக்கிறார், மக்கள் கூட்டம் அந்த தொலைகாட்சியைப் பார்க்கிறது. லட்சுமியும் யமுனாவும் கூட உடன் செல்கிறார்கள். யமுனா, மனோவை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறாள். இந்தோனேசியாவில் பேசிய பெரியவரின் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. 

அதைக் கேட்ட யமுனா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தாள். லட்சுமி அவளைப் பற்றியவுடன் சிறு குழந்தை போல் பேசலானாள்.

“இங்க தாங்க நாங்க டூர் போனோம். இப்போ அந்த இடமே இல்லியே. இன்னும் கொஞ்ச நாள், இருக்கலாம்னு நினைச்சோம். நல்லவேளை கிளம்பி வந்ததால உயிர் பொழச்சோம்…” என்று கண் கலங்கினாள்.

லட்சுமி, ஆறுதல் சொல்ல வார்த்தை எடுக்கையில், யமுனா மேலும் பேசினாள். “சிதம்பரம் கோயில்ல ரொம்ப நாளா ஒரு சாமியார் இருந்தாரே..! அவர் என் அண்ணன் தான். சில வருஷங்களுக்கு முன்னாடி, கடவுள் நம்பிக்கை இல்லாத கணவனுக்கும் எங்க அண்ணனுக்கும் நடந்த சண்டைல வீட்ட விட்டு வெளியே போயிட்டாரு. இப்போ என் கணவர் மாறிட்டார். ஆனா, விதிய யாரு மாத்துவாங்க? சிதம்பரம் கோயிலுக்கு சாமியார் வராருன்னு தெரிஞ்சவுடனே நா அவர போய் பாத்தேன். கண் திறக்காம, உட்கார்ந்திட்டு இருந்தாரு. என்ன நினைச்சாரோ தெரில… தவமிருந்து பெத்த புள்ள தானமா போயிருவான்னு அவுரு சொன்னது இப்போ கூட எனக்கு கேட்டுட்டே இருக்கு..” என்று கதறினாள். 

லட்சுமிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. யமுனா சொன்னதிலிருந்து, அதே சாமியாரைத் தான் தன் கணவரும் பார்க்க வந்திருக்கிறார் என்பது மட்டும் புரிந்தது.

யமுனாவை ஒருவாறு தேற்றிய லட்சுமி, அங்கு வடிவேலு, ராமலிங்கம், பாலச்சந்தர் ஐயா, அனைவரும் வந்து விட்டதைப் பார்த்தாள். அப்போது தான் அவளுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது. தொலைகாட்சியில் பார்த்த செய்தியை அவர்களிடம் விவரித்தாள். வடிவேலு உள்ளே ஓடினான்.

அப்போது, திருச்செந்தூரிலிருந்து நிருபர் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். வடிவேலு அப்படியே சரிந்து உட்கார்ந்தான்.

பாலச்சந்தர் அவன் தோள் மேல் கை வைத்தவுடன், “எ அம்மா.. அங்க தான்யா இருக்கு.. சொந்தக்காரங்க கூட போறேன்னுச்சு.. அனுப்பி வெச்சேன்..” என்று சோகமாக சொன்னான் வடிவேலு.

பாலச்சந்தர் ஒரு தீர்க்க சிரிப்போடு சொன்னார். “திருச்செந்தூர் முருகன பத்தி ஒனக்கு தெரியாதாப்பா? கடல் மட்டத்திலிருந்து எப்படி பாத்தாலும், கிட்ட இருக்குற அந்தக் கோயில் கல்வெட்டுகள்ல ‘என் வாசலை கடல் நெருங்காதுன்னு’ பொறிக்கப்பட்டிருக்கு. இத நூறு வருஷத்துக்கு முந்தி கண்டுபிடிச்சி, இப்போ புத்தகங்கள்லாம் வந்திருச்சு. அதுனால, அந்த ஆண்டவன் பாத்துக்குவான். கண் முன்னே இங்க இருக்குற உயிர காப்பத்துவோம் பா.. அங்க உங்கம்மாவ முருக பாத்துப்பான்..” என்று தெகிரியம் சொன்னார். 

வடிவேலுவும் வேகமாக எழுந்து ரிசீவரை எடுத்தான். “ஹெட் ஆபீஸ்.. நாங்க சிதம்பரம் சர்வோதயா லேர்ந்து பேசுறோம். தெற்கு வீதி பூராவு தண்ணி ஆயிடுச்சு. சுனாமில பாதிக்கப் பட்டிருக்கிறவங்களுக்கு நம்ம சார்பா, டவல், பெட்சீட், சேர், இதெல்லாம் அந்தந்த ஊர்ல இருக்குற சங்கம் மூலமா கொடுக்கலாம்னு எங்க செகரெட்ரி நினைக்குறாரு.. இத மத்த சங்கங்கள் கிட்ட பேசி, உடனே செயலுக்குக் கொண்டு வரப் பாருங்க..” என்று ரிசீவரை வைத்தான். 

அந்தச் செயல், எல்லோரையுமே சந்தோஷ அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த அதிர்வை கிழித்துக் கொண்டு திரும்பவும் தொலைபேசி சிணுங்க, மறுமுனையில், “சிதம்பரம் சர்வோதய சங்கம்?”

“ஆமாங்க..” என்று வடிவேலு ஸ்பீக்கரை அழுத்தினான்.

“உங்க செகரெட்ரி சொன்னது நல்ல விஷயம். நா மேலிடத்தில சொல்லி அப்ரூவல் வாங்கிட்டேன். உடனே வேலைய ஆரம்பிங்க… போக்குவரத்து கம்மியா இருக்குது. மொதல்ல, சங்கத்துல இருக்குற பொருள கொடுத்து முடியுங்க… அடுத்து, என்னன்னு நா சொல்றேன்..” என்றார். 

ராமலிங்கமும் கிருஷ்ணனும் உடனே தன் மனைவிகளிடம் விடைபெற்றுக் கொள்ள நினைத்தனர். பாலச்சந்தர் வடிவேலுவின் செயலைப் பாராட்டியதோடு, லட்சுமி, யமுனாவின் பக்கம் திரும்பி, “மா.. யமுனா..! கொழந்தக்கு உள்ள இருக்குற தேன்மிட்டாய், ஸ்நாக்ஸ்ன்னு எதுனா எடுத்துக் குடு. லட்சுமி நீ மத்தவங்கள, கடைல இருக்குற இடத்தில உட்கார வைம்மா. உங்க ரெண்டு பேர் கணவரையும் நா பத்திரமா கூட்டிட்டு வந்துடறேன்…” என்று இரண்டு கைகளில் இருவரைப் பிடித்துக் கொண்டு கிளம்பினார்.

சர்வோதயா கடை வாசல்..!

தெற்கு ரத வீதியில், சர்வோதய கடை வாசலில் தள்ளாடித் தள்ளாடி ஒருவர் வந்தார். அவரிடம் இருந்த வாக்கி டாக்கி “ஹலோ… மாறன்… ஆர் யூ இன் லைன்..?” என்று ஒலித்தது.

அவர் தன்னை மெல்ல ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “எஸ் சார்.. என்ன சார் இப்டி ஆயிடுச்சு..?” என்று மூச்சு வாங்க கேட்டார்.

மறுமுனையில், “மாறன்..! தேரோட்டம் எடுக்க வந்த உங்க கேமராமேன் இருக்காரா? உங்களுக்கான அடுத்த டாஸ்க்.. ரெடியாயிடுச்சு..” என்று பரபரத்தார்.

அவர் சொல்லவும் தான், மாறன் தன்னுடன் வந்த கேமரா மேனைத் தேடினான். ஓடும் தண்ணீரில் கைகளில் கேமராவோடு ஒருவன் மிதந்து கொண்டிருப்பது தெரிந்தது.

“எஸ்..சார்.. ஒரு நிமிஷ சார்..” என்று ரிசீவரை அங்கு நின்றிருந்த லட்சுமியிடம் “ஒரு நிமிஷ மேடம்..” என்று கொடுத்துவிட்டு தண்ணீரில் இறங்கினான். 

மறுமுனையில் “ஹலோ ஹலோ..” என்ற குரல் நிற்கவில்லை. லட்சுமி பொறுக்கமாட்டாதவளாய், “ஹலோ.. உங்களோட பேசிட்டிருந்தவரு, ஒருத்தர காப்பாத்த போயிருக்கார்.. ஒரு நிமிஷ வெயிட் பண்ண முடியாதா உங்களால..?” என்று சடைத்தாள்.

அதற்குள் மாறன், தன் கேமராமேனுடன் கடை வாசலுக்கு வந்துவிட்டான். லட்சுமி நிற்பதைப் பார்த்து யமுனாவும் வெளியே வந்தாள். மாறன் காப்பாற்றிய அந்த கேமராமேனுக்கு 20 வயது கூட தாண்டியிருக்காது.

லட்சுமி பரிதாபத்தோடு பார்த்தாள். அவன் நாடியில் உயிரில்லை. ரொம்பவும் உற்றுக் கேட்டாள். “லப்…. டப்..” என்று மெதுவாக கேட்டது. கடையுள் சென்று, “இங்க யாராவது டாக்டர் இருக்கீங்களா? இங்க ஒரு உயிர் ஊசலாடிட்டு இருக்கு. ப்ளீஸ் கொஞ்ச சொல்லுங்களேன்..” என்று கெஞ்சினாள். 

உருக்கமாக கேட்கவும், ஒரு இளைஞனும் உடன் ஒரு ஜீன்ஸ் சூட் போட்ட பெண்மணியும் வந்தார்கள்.

(தொடரும் – வெள்ளி தோறும்)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இணைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மச்சக் குப்பனும் பிசாசுகளும் (சிறுவர் கதை) – ✍ கே.என்.சுவாமிநாதன், சென்னை

    காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 11) – ✍ விபா விஷா, அமெரிக்கா