in

காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 9) – ✍ விபா விஷா, அமெரிக்கா

காதலாய் ❤ (பகுதி 9)

செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8

யாம் கண்ட கனவது

விழி நீரில் கரைந்திடுமோ?

என்றென் அச்சமது

விலகித் தான் போகும்படி

கைக்கெட்டிய நித்தியமாய்என்

கரம் நீ பற்றிடத்தான்

பேராசை பெருங்கனவு

பலித்துத் தான் போனதடா

தாத்தாக்கும், பாட்டிக்கும் கிருஷ்ணா தன்னைக் காதலிக்கும் விடயம் தெரிந்திருக்கும் என்று தன்யா கூறியதும்… (அது அவளது அனுமானமாக இருந்தாலும்), அது அபிக்கு மனத்தில் என்ன மாதிரியான அதிர்வை ஏற்படுத்தியது என்பதை எதிரில் இருந்தவள் உணரவில்லை.

அபி சட்டென்று படுக்கையில் இருந்து எழவும், தாத்தாவிற்கு இந்த விடயம் தெரிந்து விட்டது என்றெண்ணி பயந்து விட்டாளோ எனக் கருதிய தன்யா அபியிடம், “நீ இவ்வளவு பயப்படற அளவுக்கு எதுவும் பிரச்சனை ஆகாது அபி. எதுவா இருந்தாலும் சமாளிச்சுக்கலாம்… அண்ணன் சமாளிச்சுக்குவான் கவலைப்படாத” என்று கூறவும், சற்று உள்ளம் தணிந்து அமைதியாய் அமர்ந்தாள் அவள்.

அதற்கு மேல் இதைப் பற்றி வேறெதுவும் பேச வேண்டாமென்று அபி கருதியதால், இருவரும் சிறிது நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு உறங்கியும் விட்டார்கள்.

மறுநாள் அதிகாலையிலேயே அபிக்கு விழிப்பு தட்டிவிட, மணியைப் பார்த்தவள், அதற்கு மேல் தூங்க இயலாது என்பதால், எழுந்து சத்தமின்றிக் குளித்து முடித்துத் தயாராகிச் சமையல் அறைக்குச் சென்றாள்.

அங்குத் தன் அத்தை நளினி இருப்பார். அவருக்குச் சமையலில் ஏதாவது உதவி செய்யலாம் என்று எண்ணி சென்றவள், அங்கு அவரைக் காணாது ஒரு வேலையாளிடம் விசாரிக்க, அவர் தோட்டத்தில் இருப்பதாக அவர் தெரிவிக்கவும், சரி தோட்டத்திற்கே செல்லலாம் என்று எண்ணி கிளம்பலானாள்.

அதற்குள் சமையற்காரம்மா அவளுக்குக் காபி கலந்து கொடுத்திட, அதை வாங்கிப் பருகிக் கொண்டே வெளியே வந்தவளுக்கு முன்பு, திடுமென்று வந்து நின்றான் கிருஷ்ணா.

அவன் அப்படித் திடீரென்று வரவும், அபி சற்று விதிர்த்து விட, அவள் கையிலிருந்த காபி கோப்பை கீழே விழுவது போலத் தடுமாறவும், அதை அவள் கையிலிருந்து வாங்கியவன், “ஹே கோல்ட் பிஷ், நைட் எல்லாம் தன்யா கூடச் செம அரட்டை போல? பாரு நீ சரியா தூங்காததால உன் கண்ணு இப்போ ரெட் பிஷ் ஆகிடுச்சு. ஆனா இப்பவும் கூட நீ கயல் விழியாள் தான்” என்று மெல்லத் தன் சீண்டலை ஆரம்பித்தான்.

அவன் சீண்டலை உணர்ந்த அபி எதையும் கண்டுகொள்ளாது, “என் காபியை குடுங்க, நான் கார்டனுக்குப் போகணும்” என்று மட்டும் கூறினாள்.

“ஹோ… காபி வேணுமா? எது என் கையில இருக்குதே, இந்தக் காப்பியா?” என்று கேட்டுக் கொண்டே, அவள் ஏற்கனவே பருகிய அந்தக் காபியை அவனும் பருகிட, இப்பொழுது நிஜமாகவே கோபம் வந்துவிட்டது அவளுக்கு.

“ஹையோ என்ன செய்றீங்க க்ரிஷ்…” என்று கேட்டுக் கொண்டே அவன் கையிலிருந்து அவள் அந்தக் கோப்பையைப் பிடுங்க முயல, அதை அவன் தடுக்க, அந்த நேரம் பார்த்து அங்கே வந்தார்கள் கிருஷ்ணாவின் மாமா நாகேந்திரனும், அவர் மனைவியும்.

வந்தவர்கள், கிருஷ்ணாவும், அபியும் மிகவும் அருகருகே நின்று கொண்டு ஒரு காபி கோப்பையை இருவரும் பற்றியிருப்பதைக் கண்களில் அசூசையுடன் கண்டனர்.

அதைப் பார்த்த அபி தீச்சுட்டார் போலக் கையை வெடுக்கெனப் பின்னே இழுத்துக் கொள்ளவும், சிறிது ஏளனமாகக் கிருஷ்ணாவின் அத்தை மஞ்சுவோ, “அட அட அட… என்ன அருமையான காட்சி. ஒரே கப்புல ரெண்டு பேர் காபி குடிக்கறீங்களா? இது தான அரங்கநாதன் அய்யாக்குப் பெருமை… இந்தக் குடும்பத்துக்குக் கவுரவம்… இல்லங்க?” என்று கூறவும்

கை முஷ்டி இறுக கோபத்துடன் அவரைப் பார்த்த கிருஷ்ணா, “இங்க என்ன நடந்தாலும் அது உங்களுக்குச் சம்மந்தம் இல்லாத விஷயம். அன்னைக்கு அப்படி ரோஷத்தோட கிளம்பி போனவங்க இப்போ எதுக்குத் திரும்பி வந்தீங்க?” என்று முகத்தில் அடித்தார் போலக் கேட்க

அவன் கோபம் கண்டு பயந்த அபி, “கிருஷ்ணா… ஏன் பெரியவங்ககிட்ட இப்படிப் பேசறீங்க? கொஞ்சம் அமைதியா இருங்க” என்று கூறினாள்.

அவள் அவ்வாறு கூறியதற்கும் கூட, “அச்சச்சோ வாங்கம்மா நியாயவாதி… நடுவீட்டுல இப்படிக் காலங்காத்தால ஒரு வயசுப் பையனோட கூத்தடிச்சுக்கிட்டு இருக்கற… நீ எல்லாம் வாய் பேசற?” என்று வேண்டுமென்றே அபியின் மானத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்த வீடே அதிரும்படி கத்தினார் மஞ்சு.

அவர் போட்ட சத்தத்தில் அங்கு நளினியுடன், கோவேந்தன், பாட்டி வெண்மணி அம்மாவும் வந்து விட, இன்னும் இவர்கள் முன்னிலையில் அந்த அம்மாள் என்னென்ன பேச்சு பேசுவார்களோ என்று அபிக்கு பயம் வர ஆரம்பித்தது.

ஆனால் கிருஷ்ணாவிற்கு, அவன் அத்தை பற்றியும் தெரியும், அவனது குடும்பத்தாரைப் பற்றியும் மிக நன்றாகவே தெரியும் என்பதால், அவன் அசராமல் தான் இருந்தான்.

அப்பொழுது அங்கிருந்த நளினி, “என்ன அண்ணா.. என்ன அண்ணி.. எங்க வந்து யாரை பார்த்து இப்படிப் பேசறீங்க? கொஞ்சம் வார்த்தைகளை அளந்து பேசினா நல்லது” என்று கூறவும்

 நாகேந்திரனோ, “என்னம்மா… உண்மைய சொன்னா உங்க வீட்டுல யாருக்கும் பிடிக்காதோ? இப்படிப்பட்ட ஒண்ண வீட்டுல வச்சுக்கிட்டு கூத்தடிச்சுட்டு இருக்கான் உன் பையன், அதையெல்லாம் யாரும் கேட்க மாட்டீங்களோ?” என்று அபியின் மீதும், கிருஷ்ணாவின் மீதும் மேலும் சேற்றை வாரி இறைத்தார் அவர்.

அதற்குக் கோவேந்தன், “எங்க வீட்டு பசங்கள பத்தி எங்களுக்குத் தெரியும். அவங்களுக்கு நீங்க சர்டிபிகேட் குடுக்கணும்ன்ற அவசியம் இல்ல. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா இங்க நடக்கறதே வேற. முதல்ல நீங்க எதுக்கு இங்க வந்தீங்க? யார கேட்டு வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சீங்க?” என்று ஆத்திரத்துடன் கேட்டார்.

அவரது கோபத்திலும் கூட அசராத நாகேந்திரனும், மஞ்சுவும், “நாங்க ஒன்னும் உங்க கூட உறவு கொண்டாட வரல. எங்க வீட்டுல ஒரு நல்லது நடக்கப் போகுது, அத சொல்ல தான் நாங்க இங்க வந்தது” என்று கூறிவிட்டு

அனைவரைம் கர்வமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு, “எங்க ரஞ்சுவுக்கு ஒரு பெரிய இடத்துச் சம்மந்தம் வந்திருக்கு. யார் தெரியுமா? குன்றுடையார் வீட்டு ஒரே வாரிசு ஹரிஷ். பெரிய மில்லு, ஜவுளி கடை, சூப்பர் மார்க்கெட்டுன்னு பயங்கரப் பணக்காரங்க. எங்க பொண்ண தேடி வந்து சம்மந்தம் பேசியிருக்காங்க. அடுத்த வாரம் நிச்சயதார்த்தம். அதுக்குச் சொல்லிட்டுப் போகத் தான் வந்தோம்.

அதுவும் அந்தக் குன்றுடையார், அரங்கநாதன் அய்யாவை நேர்ல அழைக்கணும்ன்னு சொன்னார். அதுக்காகத் தான் நாங்க மறுபடியும் இந்த வீட்டுல காலடி எடுத்து வச்சோம். இல்லன்னா.. நாங்க எதுக்கு இங்க வரோம். ஹ்ம்ம்.. அப்பறம் உங்க குடும்பம் இப்படி இருக்கறதால, அந்தப் பெரியவர் வரப்போ நீங்க எல்லாரும் மூஞ்சிய தூக்கி வச்சுக்காம நல்லபடியா அவரைக் கவனிச்சு அனுப்பனும்.

அப்பறம் இது இருக்கே.. இந்த அபிரதி. இத அவர் கண்ணுல காமிச்சுடாதீங்க. இத பார்த்தா, அப்பறம் என் பொண்ண பத்தியும் தப்பா நினச்சுக்குவாங்க. நாங்க எல்லாம் மானம் மரியாதைன்னு வாழறவங்க. சம்மந்தி வீட்டுக்காரங்க முன்னாடி நமக்குள்ள இருக்கற பிரச்சனை தெரிய வேணாம்னு நினச்சு தான் நாங்க இங்க வந்தோம். அதனால நீங்களும் அதுக்குத் தகுந்த மாதிரியே நடந்துக்கங்க.

ஆங்.. அப்பறம்.. இன்னொரு விஷயமும் உங்க கவனத்துல வச்சுக்கோங்க. இதோ இந்த அபிரதிய பாத்துப் பத்திரமா கண்காணிச்சு வச்சுருங்க. ஏன்னா.. உங்க குடும்பத்துல ஏற்கனவே ஒன்னு நிச்சயம் செஞ்ச கல்யாணம் வேணாம்னு ஒரு குடிகாரனோட ஓடி போயிருச்சு. இன்னொன்னு ஒழுக்கமா கல்யாணம் செஞ்சுகிட்டும் கூட, ரெண்டே வருஷத்துல உங்ககூடப் பேச்சு வார்த்தை இல்லாம கண்காணாம போயிருச்சு.

சரி இத்தனை வருஷம் கழிச்சு அந்த இன்னொண்ணாவது திரும்பி வருதேன்னு பார்த்தா.. அதுவும் தாலி அத்து மூளியா வருது. அந்த ரத்தம் தான இந்தப் பொண்ணோட உடம்புலையும் ஓடுது. அதனால உங்க பையன மயக்கி இந்தப் பொண்ணு இழுத்துட்டுப் போயிடப் போகுது. அதனால தான் சொல்றேன், எப்பவும் இந்தப் பொண்ணு மேல ஒரு கண்ணோட இருங்கன்னு” என்று, என்ன தான் இருந்தாலும் வம்சி கிருஷ்ணா தனது மகளை மனம் செய்து கொள்ளவில்லையே என்ற ஆத்திரத்திலும், தன் மகளுக்கு இன்னொரு பெரிய இடத்தில் சம்மந்தம் அமைந்திருந்ததில் தலைக்கேறிய ஆணவத்திலுமாகச் சரமாரியாகச் சாக்கடையாய்ப் பேசினார்கள் இருவரும்.

அவர்கள் பேசிய பேச்சில் அபி கூனிக் குறுகி போய் நிற்க, மற்றவர்கள் சினம் கொண்டு அவர் பேச்சை அடக்க முனைந்த தருணம்.. “ஏய்…” என்றொரு சிங்கத்தின் கர்ஜனை கேட்டது.

அந்தச் சத்தத்தில் அனைவருக்குமே பயத்தில் உடல் ஒரு கணம் சிலிர்த்துப் பின் அடங்க சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பினார்கள். அங்குக் கண்கள் இரண்டும் கோபத்தில் அனல் கங்குகளாய்ச் சிவந்திருக்க, உச்சபட்ச ஆத்திரத்தில் நின்றிருந்தார் அரங்கநாதன்.

“என்ன நானும் பார்த்திட்டு இருக்கேன், ரொம்ப அதிகப்பிரசங்கித் தனமால்ல இருக்கு உங்க பேச்சு. உங்க பொண்ணோட நல்ல குணத்துக்கு அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு. அதுக்கு சந்தோசப்படாம, இங்க வந்து இப்படிப் பேசிட்டு இருக்கீங்க? அதுவும் யாரப் பத்தி? என் பேர பசங்கள பத்தி என் வீட்டுலயே பேசறதுக்கு என்ன தைரியம் இருக்கணும்” என்று ரௌத்திரமாகக் கூறவும், பயத்தில் கை கால்கள் வெலவெலக்க நின்றனர் நாகேந்திரனும் மஞ்சுவும்.

“அப்பறம் வேற என்ன சொன்னீங்க? நடுவீட்டுல கூத்தடிக்கறாங்களா? சீக்கிரமே கல்யாணம் கட்டிக்கப் போற பசங்க இப்படி இருந்தா என்ன தப்பு? வம்சிக்கும், அபிக்கும் அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் வச்சுருக்கேன். அது தெரியாம நாக்கு இருக்குன்னு கண்டபடி பேசுவீங்களா நீங்க?” என்று அவர் கேட்கவும், அதிர்ச்சியில் பேயறைந்தது போல அவர்கள் இருக்க, கோவேந்தனின் முகமும், நளினியின் முகமும் சந்தோஷத்தைக் காட்ட, வம்சி கிருஷ்ணாவோ அரங்கநாதனை குழப்பத்துடன் ஏறிட, அபி மயக்கம் போடாத குறை தான்.

அவள் தாத்தாவிடம் மறுத்து பேச வாயைத் திறக்கையில், அவளது கையைப் பற்றி எதுவும் பேச விடாமல் தடுத்தான் கிருஷ்ணா. அடுத்தவர்கள் முன்னிலையில் எதுவும் பேச வேண்டாமெனக் கருதி அபியும் அமைதி காத்தாள்.

அதைத் தனது ஓரக்கண்ணால் அரங்கநாதனும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார். ஆனால் அவர் மேலும் நாகேந்திரனிடமே, “இவ்வளவு பேச்சு பேசினதுக்கு உங்கள நான் உயிரோடவே விடக் கூடாது. ஆனா உங்க பொண்ணுக்காகவும், அவ கல்யாணத்துக்காகவும் உங்கள கடைசி முறையா மன்னிக்கறேன். இது தான் நான் உங்கள பார்க்கற கடைசி நாளா இருக்கணும். கிளம்புங்க இங்கிருந்து. குன்றுடையான்கிட்ட நான் பேசிக்கறேன். இனி சொந்தம்ன்னு சொல்லிட்டு இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சா… அது தான் உங்க வாழ்க்கைக்கான கடைசி நாளா இருக்கும். ம்ம்ம்.. போங்க..” என்று சண்டமாருதமாய் அவர்களைச் சுழற்றி அடித்தார்.

அந்தச் சுழலில் சிக்கி தவித்து, இறுதியில் உயிர் பிழைத்தால் போதுமென்று அங்கிருந்து அந்த இருவரும் கிளம்ப, அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு அப்பொழுதும் கோபம் தணியாமல் தான் அங்கிருந்து சென்றார் அரங்கநாதன்.

மற்றவர்களோ, அவர் கோபம் இப்போதைக்குத் தானாகத் தணியாது என்று உணர்ந்திருந்தாலும், அவர் வம்சி கிருஷ்ணாவிற்கும், அபிக்கும் திருமணம் என்று கூறியதிலேயே பேருவகைக் கொண்டு ஆனந்தமடைந்தனர்.

அன்று காலை சிற்றுண்டிக்காகச் செய்திருந்த கேசரியை எடுத்து வந்து வெண்மணி அம்மா அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருக்க, வீட்டில் அவ்வளவு பெரிய பூகம்பம் வெடித்ததையே அறியாதவளாக அப்பொழுது தான் உறங்கி எழுந்து வந்தாள் தன்யா.

அங்குக் குடும்பமே மகிழ்ச்சி நீரூற்றில் குளித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து, விவரம் புரியாத தன்யா என்னவென்று கேட்க, அவளுக்கும் அந்தச் சந்தோச விஷயம் கூறி கேசரியை ஊட்டி விட்டார் நளினி.

அந்த மகிழ்ச்சியுடனே தமையனிடம் வாழ்த்து கூறியவள், அவன் அதை அவ்வளவு சுரத்தின்றி ஏற்றது அவளது கண்களில் படாமல் போக, திரும்பி அபியிடமும் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்து வாழ்த்துக் கூறினாள்.

ஆனால் அதற்கு அபி, “நான் இந்தக் கல்யாண விஷயத்தைப் பத்தி தாத்தாகிட்ட பேசணும்” என்று கூறிவிட்டு, அரங்கநாதன் இருக்கும் இடம் நோக்கிச் செல்ல, அனைவரையும் சிறிது பதட்டமாய்ப் பார்த்தபடி வம்சி கிருஷ்ணாவும் அவளைப் பின் தொடர்ந்தான்.

(தொடரும் – சனிக்கிழமை தோறும்)

பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 21) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

    “மர்ஃபியின் விஜயம்” (சிறுகதை) – ✍ மரு உடலியங்கியல் பாலா, சென்னை