in

“மர்ஃபியின் விஜயம்” (சிறுகதை) – ✍ மரு உடலியங்கியல் பாலா, சென்னை

"மர்ஃபியின் விஜயம்" (சிறுகதை)

செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“ஏண்டா இப்டி மூண்ணாளா சாப்டாம அமக்களம் பண்ற?” என முந்தானையில் மூக்கை சிந்தியபடி ஆற்றாமையால் தாய் மோகனாம்பாள் கடிந்து கொள்ள

1966 எஸ்.எஸ்.எல்.சி பரீட்சையில் “சோஷியல் சயன்ஸ்” பாடத்தில் 2 மார்க் குறைவாக எடுத்து ஃபெயில் ஆகி, “மீனா டுடோரியல்ஸ்” இல் பயிலும் மகன் குமாரோ, அவளை எரித்துவிடுவதுபோல் ஒரு பார்வை பார்த்துவிட்டு விலகி செல்ல முற்பட

அவன் கையை பிடித்து கிட்ட இழுத்து “என்  ராசா இல்ல… இன்னிக்கு உங்க அப்பன்கிட்ட எப்டியாவது பேசி, அந்த குட்டி ரேடியா பொட்டிய வாங்கித்தர சொல்றண்டா. சாப்ட வாடா  நைனா”என கொஞ்சலுடன் கெஞ்ச

“மர்ஃபி டிரான்சிஸ்டர். இப்ப எல்லா பசங்க கிட்டயும் இருக்கு, என்ன தவிர, தெரியுமா? இதுவரைக்கும் எத கேட்டு வாங்கி குடுத்திற்கீங்க, இத வாங்கி குடுக்க” என திமிறி செல்ல முயல்கிறான்.

மகனை எப்டியோ ஒருவழியாக சமாதானப்படுத்தி, வஞ்சிரம் மீன் வறுவல், எறா குழம்புடன் செய்த மதிய சாப்பாட்டை ஒருவழியாய் அவனை சாப்பிட வைத்து, அவன் உண்ணா விரதத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தாள்!

அக்காலக்கட்டத்திலதான், முதன் முதலாக மெட்ராஸில் (இன்றைய சென்னை) “டிரான்சிஸ்டர்” எனப்படும் சிறிய ரேடியோ பெட்டிகள் அறிமுகம் ஆகியிருந்தன.

4 பெரிய பேட்டரிகள் போட்டால் போதும், அதை கைக்கு அடக்கமாய் எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். அது மட்டுமல்லாமல், ஆன் பண்ணி அறை மணிநேரம் ‘லொங்கு  லொங்கு’ன்னு பாடல் கேட்க, காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்ல. போட்ட உடனே பாட்டு கேக்கும். அதுமட்டுமன்றி, நீண்ட செப்பு கம்பி வலைகளால் ஆன “ஏரியல்” என்ற, தண்ட சமாச்சாரமும் தேவை இல்லை.

திருச்சி, மற்றும் இலங்கை வானொலி கேட்கும்போது மட்டும், உள்ளே அடக்கமாய், சில்வர் நிறத்தில் “பளபள” என்று இருக்கும் ஒரு கம்பியை வெளியே இழுத்தால் மட்டும் போதும். அது சர்ரென்று அரை மீட்டர் நீளம் நீண்டு, அந்த ஊர் நிகழ்ச்சிகளை கரகரப்புடன் கொண்டு வந்து சேர்த்து விடும்.

அதுவுமன்றி, கண்ணாமூச்சி காட்டும் ‘பூனைக்கண்’ அட்ஜஸ்ட்மென்ட், டைப் ரைட்டர் பட்டன், இரண்டு பக்கமும் குமிழ் போன்ற தொந்தரவு பிடித்த விஷயங்கள் என எதுவுமே கிடையாது. சிறு அலாரம் டயல் போல் ஒரே ஒரு சிகப்பு முள்ளுடன், 100, 101 khz(கிலோ ஹெர்ட்ஸ்) என சுத்தி எழுதப்பட்டிருக்கும். அதை ஒரு அரை சுற்று மெல்ல சுற்றினால் போதும், எல்லா வானொலி நிலையத்தையும் கைகெட்டிய தூரத்தில் பிடித்துவிடலாம்.

பக்கவாட்டில், ‘ஆன் ஆப்’ மற்றும் ஒலி குறைப்புக்கு ஒரு சிறிய திருகு சக்கரமும் உண்டு. கையாள்வதில் எவ்வளவு எளிமை…? பின் ஏன் அதற்கு இவ்வளவு மவுசு கூடாது? 

அதல பாருங்க… ஒரு விசேஷம் என்னன்னா, புஷ், பிலிப்ஸ், என சிலபல கம்பெனிகள் இதை அறிமுக படுத்தியிருந்தாலும், நம்ம “மர்ஃபி” கம்பெனி டிரான்சிஸ்டர அடிச்சிக்க ஆளே இல்ல போங்கோ. ஏன் தெரியுமோ…?

அழகான வடிவமைப்பு, சற்றே குறைந்த விலை, நல்ல தொழில்நுட்பம் என பல காரணங்கள் இருந்தாலும், இதழோரம் விரல் வைத்தபடி, குழிவிழுந்த கன்னத்துடன் சிரிக்கும் அந்த அழகிய சுட்டி குழந்தையின் விளம்பர படம் தான், அதன் விற்பனைக்கு தனி மவுசை கூட்டியது என்றால் அது மிகையாகாது!!

அதுவுமன்றி, அன்றைய மெட்ராஸ் சென்ட்ரல் இரயில் நிலையத்தின் முகப்பை பல்லாண்டு காலம் பிரம்மாண்டமாய் முற்றும் முழுதும் ஆக்கிரமித்திருந்த அந்த மிகப்பெரிய மின் விளக்கு அலங்கார விளம்பரம் தான் மிகமுக்கிய காரணம் என்றால் அதுவும் மிகையாகாது!

சரி சரி வாங்க, நம் கதைக்கு திரும்புவோம். மிக சாதாரண சராசரி நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குமாரின் அப்பா கபாலி. அவர்களால் அதை வாங்கி கொடுப்பது, பகீரத பிரயத்தனமான காரியம் என்பதே உண்மையிலும் உண்மை.

இப்ப உள்ள இந்த கால கட்ட மக்களுக்கு விலாவாரியாக அதை புரிய வைக்க ஒரு சின்ன விளக்கம் தருகிறேன்.

அன்று மர்ஃபி டிரான்சிஸ்டரின் ஆரம்பவிலை ரூ.150. அதேசமயம் அன்று ஒரு சவரனின விலை ரூ 50. அப்படியாகின், ஒரு குட்டி “பாட்டு பெட்டி” வாங்க, 3 சவரன் பணம் கொடுக்க வேண்டும்!

இன்று 3 பவுன் விலை ரூ. ஒண்ணேகால் லட்சம் எனில், உங்களுக்கு அது எவ்வளவு விலை உயர்ந்தது என விளங்கி இருக்கும் என நம்புகிறேன்.

ஒரு நடுத்தர குடும்ப தலைவனுக்கு இது எப்படி சாத்தியம்?ஆனால் மனைவியின் கொஞ்சலாக கெஞ்சல், மகனின் வாலிப மூர்க்கம்… இதற்கு ஈடு கொடுக்க முடியாமல் பாவம் அந்த ஏழை தந்தை, எப்படியோ கடன உடன வாங்கி, அந்த வீட்டில் “மர்ஃபி”யின் திக்விஜயம் செய்விக்கிறார்.!

அப்பப்பா… அன்றைய நாள்…! அந்த குடும்பத்தின் குதூகலத்துக்கு எல்லையே இல்லை. அதை பூஜை அரையில் வைத்து, குங்குமம் மஞ்சள் இட்டு (அட்டை பெட்டியின் மேல் தான் குமார் பொட்டு வைக்கவே அனுமதித்தான்)

அந்த ஊதாவும் வெளிர்நீலமும் கலந்த அழகிய பிளாஸ்டிக் பொக்கிஷம்… குமாரின் கையில் ஒரு பிறந்த குழந்தையை, தாய் முதல் முதலில் ஏந்துவது போல், சந்தோஷமும் சர்வ ஜாக்கிரதையாக கையாண்டான்.

பிறகு மெல்ல ஏரியல் கம்பியை நீட்டி, அவனுக்கு பிடித்த, இலங்கை கூட்டு ஸ்தாபன வானொலியை வீட்டு மொட்டை மாடிக்கு எடுத்து சென்று ஆன் செய்ய, “நினைத்தேன் வந்தாய் நூறு வயது” என்ற அந்த காலக்கட்டத்தின் பிரபலமான எம் ஜி ஆர் பாடல் ஒலித்ததும், அவன் தம்பி மணி மற்றும் குழுமியிருந்த, மழலை பட்டாளம் முதற்கொண்டு, கீழ் வீட்டு ‘பரந்தாமன் பொக்கை தாத்தா’ வரை… அனைவரும் கைதட்டி விசில் அடித்து அரவாரம் செய்தனர். 

அதில் பங்கு பெறாத ஒரே ஆள், குமாரின் தந்தை மட்டும்தான். அவர் வேலை முடிந்து வீட்டுக்கு வரவே இரவு 11மணி ஆகும், அதை தொட்டு பார்க்க கூட அந்த பாவப்பட்ட உழைப்பாளி மனிதருக்கு  நேரமும் இல்லை ; வாய்ப்பும் இல்லை; ஆசையும் இல்லை!

இப்போதெல்லாம் குமார் அடியோடு மாறிவிட்டான், நண்பர்கள் பட்டாளத்தை தாற்காலிகமாக தவிர்த்தான். எதிர் வீட்டு ஐயர் பொண்ணு கீதாவின் கடைக்கண் பார்வைக்கு தவமிருக்கும் குமாரை,  அவளே தன்னிச்சையாக வீட்டுக்கு வந்து  “குமார்.. என்னமோ புது மர்ஃபி மேக் டிரான்சிஸ்டர் வாங்கி இருக்கியாமே? தெருவே பேசிக்குது, எனக்கு கொஞ்சம் காட்டேன்” என ஆவலாய் கேட்க

ஆயிரம் மின்னலுடன் ஒரு அழகிய தேவதை வலிய வந்து வரம் கேட்டு நின்றதுபோல் உணர்ந்தான் குமார். அவள் முகத்தின் நெருக்கமும்.. “லக்ஸ்” சோப்பின் சுகந்த வாசமும், சிகப்பு தாவணியின் மெல்லிய ஸ்பரிசமும், அவனை சொர்க்கபுரிக்கே அழைத்து செல்ல, அவன் “மர்ஃபியால்” ஜென்ம சாபல்யம் பெற்றது போல் இன்புற்றான்.

தினமும் மாலையில், தன் மிக நெருங்கிய சகாக்களுடன் மெரீனா பீச் செல்ல தொடங்கினான்… ஏன் தெரியுமா? அங்கு சிமெண்ட் பெஞ்சுகள் அமைத்த நுழை வாயிலில், நான்கு ஒலிபெருக்கியுடன் கூடிய வானொலி நிகழ்ச்சிகள் கேட்க, பலர் குழுமுவர்.

இவன் அதற்கு போட்டியாக, உச்சபட்ச ஒலியில்..  தன் மர்ஃபியில் “திரைகானம்” கேட்க, சிறுவர்கள் கூட்டம் இவனை முற்றுமாய் சூழ்ந்து வட்டமடிக்க.. இவன் எதோ இளவரசன் போல் நடுவில் வீற்றிருப்பான்.

அவன் தன்னை மெரீனாவின் இளவரசன் போலவே உணர்ந்தான்! 

கிரிக்கெட்  “டெஸ்ட் மேட்ச்” வந்துவிட்டால் போதும். “ஸ்கோர்” கேட்பதற்கென்று ஒரு தனி கூட்டமே இவனிடம் பவ்யம் காட்டும். காலை மேட்ச் ஆரம்பித்த உடனேயே ஒரு இளைஞர் பட்டாளம் வீட்டில் குழுமிவிடும்.

ஆங்கில வர்ணனையில் “பாலு அலகண்ணன்”, “ஆனந்த செதல்வார்” போன்ற பிரபல வர்ணனையாளர்களின் இனிய குரலில் ஒலிக்கும். அவுட், காட்ச், போல்ட், சிங்கிள், பவுண்டரி, சிக்சர், நோபால், போன்ற சிலபல டெக்னிகல் வார்த்தைகள் மட்டுமே குமாருக்கும், இன்னும் சிலருக்கும் புரியும். மற்றவர்களுக்கு அதுவும் புரியாது என்பது வேறு விஷயம்.

ஆனால் அந்த பவுண்டரி, சிக்சர், போன்ற ரன்களை, நம் முன்னணி வீரர்களான இன்ஜினியர் “வடேகர்”  “பட்டோடி” போன்றோர் அடித்தால்… விசில் அடித்து ஆட்டம் போட்டு அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது.

தினமும் காலை மாநில செய்தியில் தொடங்கி, இரவு “வணக்கம்” சொல்லி நிகழ்ச்சி முடியும் வரை அவன் கைகளில் தாயிடம் பால்மணம் மாறா பச்சை குழைந்தை போல் தவழ்ந்த வண்ணம் இருந்தது மர்ஃபி!

இந்த குதூகலம் ஓரிரு மாதங்களே தொடர, திடீரென்று ஒருநாள் குமாரின் தந்தைக்கு கடும் காய்ச்சல் கண்டு படுத்து விடுகிறார். ஒரிரு நாட்களில் சுரம் அதிகமாகவே, அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.

என்றுமே பாயில் படுத்திராத நோயே கண்டிராத அந்த உழைப்பாளி, குடும்ப தலைவனின் சுகவீனத்தால் அந்த குடும்பமே நிலை குலைந்து போக, பணம் தண்ணீராக செலவாகிறது.

ஒரு கட்டத்தில் பணமுடை அதிகமாக, குமார் தன் உற்ற நண்பனும் அந்த மர்ஃபி டிரான்சிஸ்டர் மீது தனி ஆசையும் கொண்டிருந்த “ரவிக்கு”… சற்றே குறைந்த விலை போயினும் பரவாயில்லை என அதை விற்று விட முடிவு செய்கிறான். அதை வேறு யாருக்கும் விற்க அவனுக்கு மனமில்லை. ஏன் தெரியுமா?

முதல் காரணம் அவன் நண்பன் ரவியும் ஒரு ஏழை நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன், முழுப்பணம் கொடுத்து புது டிரான்சிஸ்டர, எழேழு ஜென்மம் எடுத்தாலும் அவனால் வாங்க முடியாது.

இரண்டாவது காரணம், மர்ஃபியை, அதன் மேல் கொண்ட  தீராத மோகத்தால், பத்திரமாக உயிரினும மேலாக அவன் அதை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை குமாருக்கு இருந்ததால்.

 ஆனால் அவன் தாயோ, “வேணாண்டா கண்ணு, இதை நீ எவ்ளோ ஆசப்பட்டு வாங்கன?  இதுன்னா உனக்கு உயிர் ஆச்சேடா, இத எப்படிடா பிரிஞ்சி இருப்ப? வேணா ராஜா. அத விக்காதடா கண்ணு. என் தாலிய பிரிச்சி தரண்டா, அடமானம் வச்சி பணம் ஏற்பாடு பண்ணிக்கலாம்” என தழுதழுத்த குரலில் கூற

“அம்மா நிறுத்தும்மா, என்ன பேச்சு பேசற நீ. போய் உன் வாய கழுவுமா. இப்போ இல்ல! எப்பவுமே இந்த வார்த்த, நான் உயிரோடு இருக்கும் வரை உன்கிட்ட இருந்து வரவே கூடாதும்மா…” என ஓவென்று அழுது விசும்பியபடி, “போம்மா… அப்பாவ விடவாமா எனக்கு இந்த டிரான்சிஸ்டர் முக்கியம்?” என்று பாசம் மேலிட மறுத்து, தன் உயிரினும் மேலாக நேசித்த அந்த ஒலி பேழையை ரவியிடம் விற்றுவிட்டு, பொங்கி வந்த கண்ணீரை அடக்கி கொண்டு வீட்டுக்கு வருகிறான்.

ஏதோ இழக்க கூடாத ஒன்றை பறி கொடுத்தவன் போல், தன் துன்பத்தை தாயிடம் காட்டிக்கொள்ளாமல் மறைத்து நடிக்க அரும்பாடு படுகிறான்.

அவன் தம்பி சிறுவன் மணி, இவற்றை பார்த்து மனம் வருந்தி, கோவிலுக்கு சென்று தன் தந்தையின் இஷ்ட தெய்வமான முருக பெருமானிடம் மனமுருகி தன் தந்தை தினமும் அதிகாலை பூஜை அறையில், முருகனிடம் பாடும் “கோள் என் செயும் கொடுங்கூற்று என் செய்யும்!” எனும் பாடலை மனமுருக அழுதபடி பாடி பிரார்த்தனை செய்கிறான்.

மணியின் வேண்டுதலுக்கு முருகக்கடவுள் செவி சாய்க்க, ஓரிரு நாட்களில் கபாலி முற்றும் குணமாகி வீடு திரும்புகிறார்.

அவர் வீட்டில் தங்கி சற்றே ஓய்வில் இருந்ததால், “டேய் குமாரு,! அந்த மர்ஃபி டிரான்சிஸ்டர கொண்டாடா பார்க்கலாம். அத இதுநாள் வரை கண்ணால கூட நான் பாக்கலடா, அவ்ளோ வேலடா எனக்கு. ஹூம் ! என்ன வாழ்க்கடா இது” என பெருமூச்சு விட்டபடி ஆவலுடன் கேட்க, குடும்பமே அதை விற்று விட்ட விஷயத்தை எப்படி அவரிடம் சொல்லுவது என தயங்கிபடி கையை பிசைந்து கொண்டு நின்றது.

ஆனால் ஒன்று, அவர்கள் அனைவரும் கவலை நீங்கி சந்தோஷித்து இருந்தனர்.

அப்போது எங்கோ இருந்து இலங்கை கூட்டு ஸ்தாபன வானொலியில், “பாட்டும் நானே பாவமும் நானே ! பாடும் உனை நான் பாட வைத்தேனே!” என்ற “திருவிளையாடல்” திரைப்படபாடல் சற்றே கரகரப்புடன் ஒலித்து கொண்டிருந்தது.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 9) – ✍ விபா விஷா, அமெரிக்கா

    வல்லபி ❤ (பகுதி 7) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை