in

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 21) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

அழைத்தான்... (அத்தியாயம் 21)

செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

அம்பலத்தில் கடன்

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இணைப்பு

சிதம்பரம் நடராஜர் கோயில்..! 

காவி உடை மனிதரின் தேகம், நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே போனது. ஆனால், அவரோ அதையெல்லாம் நினைப்பவராகத் தோன்றவில்லை. அர்ச்சகர் அவரைப் பார்த்து மிகவும் சலனப்பட்டார். ஒரு நாள் அவரிடம் கேட்டே விட்டார்.

“சாமி.. நீங்க ஓய்வெடுக்கக் கூடாதா? உடம்பு ரொம்ப சோர்ந்து போச்சே? இப்போல்லாம் தூக்கத்தில கூட புலம்பிண்டே இருக்கேள். என்ன விவரம்னு சொன்னேள்னா என்னால முடிஞ்ச உதவியப் பண்ணுவேன்” 

பெரியவரிடம் தீர்க்கமான ஒரு சிரிப்பு. அர்ச்சகரை ஊடுருவி பார்த்து, “சரி..! உன் மனசுல ஒன்னுல்ல. நீ நல்லவன்னு எனக்கு தெரியும். நீ இந்த மாறி வந்து கேப்பேன்னு தெரியும். உனக்கு ஒன்னு சொல்றேன். நல்லா கேட்டுக்கோ.! இந்த ஊர்ன்னு இல்ல. தமிழ்நாட்டுல பல மாவட்டங்கள் ஜலப்பிரவாஹத்துல மாட்டிட்டு முழிக்க போவுது. நானு அதுல தான் சமாதி ஆகலாம்னு இங்கே நடராஜர் காலடில குந்தினு இருக்கேன். நான் யாருன்னு அம்பலத்தான் சொல்லிட்டான்” என்று சொல்லி, சட்டென்று எழுந்து போய் விட்டார். அவர் கூறிய விவரங்களைக் கேட்டு அர்ச்சகரின் முகத்தில் ஏக வியப்பு. 

ல்யாண மண்டபம்..! 

லட்சுமி அப்படியே தூங்கிப் போனாள். நல்லவேளையாக அன்று 6.30-7.00 தான் முகூர்த்தம். அம்மா புனிதவதி 3.30 மணிக்கே எழுந்து, அனைவரையும் தயாராகச் சொன்னாள்.

கடைக்குட்டி வைத்தி மட்டும், “மா… அக்காக்கு தான கல்யாணம். அவள போய் எழுப்புங்க” என்று சிடுசிடுத்து, திரும்பவும் போர்வையினுள் போய் விட்டான்.

புனிதவதி அப்போது நினைத்துக் கொண்டாள். ‘எம்மக இனிக்கு தான், நல்லா தூங்குது..! இதுக்குமேல நா எங்க அவள எழுப்ப போறேன். இனிக்கு ஒரு நாள் தூங்கிக்கட்டும்’ என்று ஏக்கத்தோடு லட்சுமியின் அறை நோக்கி நடந்தாள். அவள் அங்கே அயர்ந்து உறங்கி கொண்டிருந்தாள். 

பக்கத்தில் கிருஷ்ணன் கலங்கிய விழிகளோடு நின்று கொண்டிருந்தான். அந்தக் காட்சி புனிதவதிக்கு ஆச்சரியம் அளித்தாலும், தன்னை மறைத்துக் கொண்டு, கிருஷ்ணன் என்ன செய்கிறான் என்றபடி பார்க்கலானாள். 

கிருஷ்ணன் லட்சுமியின் முகத்தை கைகளில் தொடாமல், காற்றில் அளந்து, திருஷ்டி எடுத்தான்.

பின் அவள் கால்களை நீவி கொடுத்து, அதில் தலை வைத்து, “எ கண்ணே.. என்ன எவ்ளோ நம்புறே..! இங்க வந்தவுடனே உன் அண்ண வேலு, நீ எனக்காக தவிச்ச தவிப்பெல்லாம் சொன்னார்..! கல்யாணத்துக்கு முன்னாடி வராம, உன்ன கண் கலங்க வெச்சிட்டேன். நிஜமா நா வேணும்னு பண்ணல. இனிமே அப்டி நடக்காம பாத்துக்குவேன். உன்ன பாக்கவே விடல அந்த மீசைக்காரன். இப்போ அந்த வேலையே வேண்டான்னு வந்துட்டேன். எனக்கு நம்பிக்க இருக்கு.. நிச்சயம் கடவுள் நம்ம பக்கம் தா இருப்பாரு..” என்றபடி கண்களைத் துடைத்துக் கொண்டான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த  புனிதவதிக்கும் விழிகள் நனைந்தன.  

கிருஷ்ணன் வெளியே செல்லவும், புனிதவதி உள்ளே சென்று, அவளை உலுக்கி எழுப்பினாள்.

லட்சுமிக்கு ராத்திரி அழுத அழுகை நியாபகம் வரவே, “அவுரு வந்துட்டாரா?” என்று பளிச்சென்று கேட்டாள்.

புனிதவதி அவள் தலையை வருடியவாறு, “வந்தாச்சு, நீ போய் கிளம்பும்மா…” என்றாள். 

லட்சுமிக்கு வெகு உற்சாகம். வேக வேகமாக கிளம்பி வந்து விட்டாள். புனிதவதி அவளுக்குத் தலையெல்லாம் சீவி, ஜடை தைத்து, நிறக்க பூ வைத்தாள். பின்பு, முக அலங்காரத்திற்கு ஒரு பெண் வந்து, லட்சுமியின் முகத்திற்கு மேலும் அழகூட்டினாள். லட்சுமி அப்படியே மகாலட்சுமி போலவே மாறினாள்.

“பொண்ண அழச்சிண்டு வாங்கோ..” என்று ஐய்யர் கூப்பிடுவது புனிதவதி காதில் விழ, கூடியிருந்த தோழிகளுடன் லட்சுமி மணமேடைக்கு அழைத்து வரப்பட்டாள். 

இந்தப் புரோகிதர் சற்று வித்தியாசமாக திருமணத்தை நடத்தினார். அதாவது, கணவன் – மனைவி ஆகவிருக்கும் கிருஷ்ணன்-லட்சுமிக்கு, உச்சரிக்கும் மந்திரங்களின் அர்த்தங்களை எடுத்துரைத்தார். சுருக்கமாக ஒவ்வொன்றையும் புரோகிதர் சொல்லச் சொல்ல, லட்சுமியின் முகத்தில் பூரிப்பு. அது அவளை மேலும் அழகாக்க, கிருஷ்ணன் இதயம் கண்மூடித்தனமாக எகிறி குதித்தது. 

லட்சுமியும் அதைப் புரிந்து கொண்டு, தான் வெட்கப்படுவது தெரிய வேண்டாம் என்று மறைக்க, மாலையை சரி செய்து கொண்டே இருந்தாள்.

6.50 மணி இருக்கும். ஐய்யர், “கெட்டிமேளம் கெட்டிமேளம்….” என்றவுடன், கல்யாண ஒலியில் மண்டபமே எழுந்து, பூக்களையும் ஆசீர்வாதத்தையும் தூவி வாழ்த்தின. புனிதவதி கண் கலங்கி, தன் கணவனை நோக்கினாள். கிருஷ்ணனின் தாய், லட்சுமிக்கு நன்றி கூறுவது போல் பார்த்தாள்.

அதற்குப் பிறகு, ஒரு சில சடங்குகளுக்காக, லட்சுமியும் கிருஷ்ணனும் யாக குண்டத்திற்கு அருகே உட்கார வைக்கப்பட்டார்கள். அதற்குள் உறவினர்கள் சாப்பிடச் செல்ல, அப்போது மண்டபம் ஒரு குலுங்கு குலுங்கியது. சீர் தட்டுகள் அதிர்ந்தன. கூட்டமே அப்படியே ஆடிப்போய் நின்றது.

புரோகிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், “ஏம்பா..! அந்த ரெடியோ செட்ட செத்த நிறுத்துங்கோ.. மண்டமே அதிருதோன்னோ?” எனவும், சத்தம் குறைக்கப்பட்டது. லட்சுமி பயத்தில் தன் கணவனான கிருஷ்ணனின் கையை உரிமையோடு பற்றிக் கொண்டாள்.

சிதம்பரம் கோயில்..! 

சிதம்பரம் கோயிலில் யமுனா பிரதட்சணம் செய்து கொண்டிருந்தாள். உடன் கணவனும், குழந்தையும் பிரகாரத்தில் உட்கார்ந்திருந்தார்கள். அவள் கணக்கு வைத்த சுற்றுகளை முடித்து, நேரே சன்னதிக்குச் சென்று பிரசாதம் வாங்கி வந்தாள்.

வாங்கி வந்த திருநீற்றை மனோவின் நெற்றியில் இட்டு அழகு பார்த்தாள். ராமலிங்கம் ஏனோ பயந்து போய் இருந்தான். ‘கடவுளின் மீது நம்பிக்கை கொள்வதா? இல்லை, தான் செய்த கர்மவினைக்குப் பயப்படுவதா?’ என்று மனதில் ஒரே குழப்பம். 

யமுனா வெடுக்கென்று கேட்டாள். “ஏங்க.. நம்ம சதுரகிரிக்குப் போய்ட்டு வருவோமா?”

ராமலிங்கம் ஆடிப்போய் விட்டான்.

கொஞ்சம் யோசித்து, “நீ வேற யமுனா..! கூட வேலை செஞ்சானே கிருஷ்ண.. அவன் கல்யாணத்துக்கு கூட அனுப்பல இந்த மீசைக்கார..! ஒரு மாசம் போவட்டும்..” என்று பிரகாரத்திலிருந்து எழுந்து, மனோவைத் தூக்கிக் கையில் வைத்துக் கொண்டான். 

உள்ளே அர்ச்சகர் நடராஜர் சந்நதியில் தீபாராதனை காட்டிக் கொண்டிருந்தார். “கிடு…கிடு..கிடும்…” என்ற சப்தத்தோடு அந்த இடம் லேசாக ஆடிற்று. அர்ச்சகரின் கையிலிருந்த தட்டு கீழே உருண்டோடியது. பக்தர்கள் கன்னத்தில் போட்டுக் கொண்டு, நிசப்தமாயினர். 

உடனே மற்றொரு குருக்கள் ஓடி வந்து, “என்ன சாமி தட்ட கீழ போட்டீங்க?” என்றார் சாதாரணமாக. அர்ச்சகருக்கு வியர்த்து விட்டது.

“அப்போ உங்களால அத உணர முடிலியா? இப்போ தரையெல்லாம் லேசா ஆடுச்சே..!” என்று தயங்கி தயங்கி கேட்டார்.

குருக்கள் சிரித்துக் கொண்டே, “அடப்போங்க.. சாமி..! உங்களுக்கு உடம்புக்கு என்ன? காலம்புற நீங்க சாப்புடலன்னு சீனு சொன்னான். நீங்க போய் கொஞ்ச ஜலம் குடிச்சிட்டு வாங்கோ.! நான் ஆரத்தி காட்டிண்டு இருக்கேன்” என்று ஆரத்தி தட்டை எடுத்து மந்திரத்தை ஓதினார்.

அர்ச்சகருக்கு ஒன்றும் புரியவில்லை. “தன் பிரமையா? இல்லையேல் மற்றவர்கள் பிரமை பிடித்தவர் போல் இருக்கிறார்களா?” என்ற சிந்தனையோடே குளத்திற்கு அருகில் சென்றார். உள்ளூர, பெரியவர் சொல்வது போலவே, நடக்க போகிறதை நினைத்து நடுக்கமும் கொண்டார்.

ல்யாண மண்டபம்..! 

லட்சுமி கழுத்தில் இப்போது புதுமலர்ச்சி..!  ரேடியோ நிறுத்தப்பட்ட பிறகு, சப்தம் ஏதும் இல்லை என்று சாதாரணமாக எண்ணி, அனைவரும் அதை சட்டை செய்யாமல் விட்டு விட்டனர். சில சடங்குகள் எல்லாம் முடிந்து, உறவினர்கள் மட்டும் இருக்கையில், பார்வதி லட்சுமியிடம் கேட்டாள்.

“மா.. கிருஷ்ணங் கூட இருக்கனும்னா நீ சிதம்பரம் போய்டு… உன் முடிவு தான் கண்ணு. எப்பிடி சொல்றியோ அப்டி செஞ்சிப்போம்..” என்றாள்.

லட்சுமிக்கு முடிவு எடுக்க தெரியவில்லை. கிருஷ்ணனைப் பார்த்தாள். கிருஷ்ணன் தயங்காமல் சொன்னான்.

“மா.. எனக்கு வேலை போயிடுச்சு. இனிமே ஊர்ல தா இருப்பேன்.. இங்கே பாத்துக்கலாம்..” என்றதும் மாப்பிள்ளை வீட்டாருக்கு பெரும் அதிர்ச்சி. நிறைய பேர், கிருஷ்ணனைக் கேள்வி கேட்டார்கள். அவர்களை எல்லாம் அமைதி படுத்திவிட்டு, புனிதவதி சொன்னாள்.

“என் மாப்பிள்ள மேல எனக்கும் சரி; எம் பொண்ணுக்கும் சரி.. நிறைய நம்பிக்கை இருக்கு. அவுரு பாத்துக்குவாறு..!” கிருஷ்ணனுக்கு இந்த வார்த்தைகள் ஓரளவு ஆறுதல் அளித்தன.

அடுத்த பத்து நாட்களில், பூமி ஒரு சில இடங்களில் நடுக்கம் ஏற்பட்டதை அனைவருமே மறந்து விட்டார்கள். கிருஷ்ணன் ஒரு பக்கம் வேலை தேடி அலைந்தான். லட்சுமி புகுந்த வீட்டிற்கு அனுப்பப்பட்டாள். அவ்வப்போது புனிதா வந்து மகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்து விட்டுப் போவாள். 

பார்வதி புனிதாவிடம், “எம்மவன் வேலையில இருக்குறான்னு தாங்க, கண்ணானம் பண்ணி வைக்குறே முடிவுக்கே வந்தோம். இப்டி ஆவுனு எங்களுக்கு தெரியாது…” எனவும்

அதற்குப் புனிதா, “அட விடுங்க..! வேல என்னங்க வேல? காசு பணம் எப்போ வேணா சம்பாரிக்கலாம். மனசு தாங்க முக்கியம். பாருங்க, சீக்கிரம் மாப்ளக்கு நல்ல வேலை கிடைச்சிடும். ஏன்? அவுரு விட்டுட்டு வந்த அதே வேலையே கூட கிடைக்கலாம். எல்லாம் நல்லத்துக்கு தான். நீங்க ஒன்னு வருத்தப் பட்டுக்காதீங்க..”  என்பாள். 

இதைக் கேட்ட பார்வதி, “உங்க குணம் அப்படியே உங்க பெண்ணுக்கும் இருக்கு. இதே தா அது எனக்கும் சொல்லும்..” என்பாள். உடனே லட்சுமி வெட்கப்பட்டு எழுந்து போய் சமையறைக்குள் புகுந்து கொள்வாள். 

நாட்கள் மாதங்களாகப் பெருகி, நவம்பரிலிருந்து டிசம்பருக்கு வந்தன. வீராப்பாக அம்பலத்தை விட்டு வந்த கிருஷ்ணன், திரும்பவும் அங்கே செல்லவே இல்லை. ஆனால், அங்கே ஒரே ஒரு வேண்டுதலும், சந்திப்பும் பாக்கி இருந்தது. அதை லட்சுமியிடம் சொல்ல நினைத்தான்.

அன்றைய மதிய வேளையில், லட்சுமியின் கைப்பக்குவத்தில் மணத்தக்காளி கடையல் மணந்து கொண்டிருக்க, கிருஷ்ணன் அதை முகர்ந்து கொண்டே சொல்லலானான்.

“லட்சுமி..! எனக்கு சிதம்பரத்துல ஒரு வேண்டுதல் இருக்கு. அப்ரோ அங்க இருந்த ஒரு சாமியார பாக்கணும்னு ஒரு நெனைப்பு. கண்ண மூடினா, அவர் முகம் தான் தெரியுது. அவரைப் பாக்கறச்சே அப்படியே எனக்கு நைனா நியாபகம் வந்துரும்..” என்று பேச்செடுக்க, லட்சுமி அதைக் கேட்டபடியே இருவருக்கும் உணவு பரிமாறினாள்.

தட்டில் கோஸ் கூட்டுடன் கூடவே அவளும் ஒரு கோரிக்கையை வைத்தாள். “ஆமாங்க..! எங்கம்மாகிட்ட கூட அந்த சாமியார் பேசினாரு. கண்டிப்பா, நம்ம போய்ட்டு வருவோம். அப்டே யூனிவர்சிட்டியில, என்னோட பி.எட் டிகிரி சர்டிபிகேட்டையும் வாங்கிட்டு வந்துடலாமே…” என்பது தான் அது. 

கிருஷ்ணன் சரி என்கிற ஆமோதிப்போடு, “அடுத்த வாரம் போலாம். அங்க ஆருத்ரா கூட ஜோரா இருக்கும். தேர் பாத்துட்டு வருவோம்” என்று இதையும் சேர்த்துக் கொண்டான்.

(தொடரும் – வெள்ளி தோறும்)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இணைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    குடும்பம் ஒரு கோயில் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 9) – ✍ விபா விஷா, அமெரிக்கா