in

திசை மாறிய பறவைகள் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

திசை மாறிய பறவைகள் (சிறுகதை)

 நவம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ன்னல் ஓரம் இருந்த பெரிய கட்டிலில் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் சந்தியா. வீட்டு ஹாலில் இருந்த ‘குக்கூ’ கடிகாரம் பத்து முறை வந்து கூவி விட்டுப் போனது. அதே நேரத்தில் காலிங் பெல்லை யாரோ அழுத்தும் சப்தம் கேட்டு திடுக்கிட்டுப் ஜன்னல் வழியே பார்த்தாள்.

காலைச் சிற்றுண்டிக்கு ‘டோர் டெலிவரி’யில் ஆர்டர் செய்ததால் ஒரு ஆள் கம்பெனி யூனிபார்மில் காலைச் சிற்றுண்டியை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து காத்துக் கொண்டிருந்தான். அவனிடம் பணத்தைக் கொடுத்து விட்டு சிற்றுண்டியை வாங்கிக் கொண்டு மறக்காமல் தெருக்கதவைத் தாளிட்டுக் கொண்டு உள்ளே வந்து விட்டாள்.

சந்தியா மிலிட்டரி ஹாஸ்பிடலில் தலைமை நர்ஸாக இருந்து ஓய்வு பெற்றவள். பணியில் இருக்கும் போது ஆறு கிரௌண்ட் மனையுடன் கூடிய இந்த பங்களாவைத் தவணை முறையில் கட்டிக் கொடுத்தது மத்திய அரசு.

கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்பு ‘அலாட்’ செய்து கட்டிக் கொடுக்கப்பட்டது. அப்போதெல்லாம் இங்கு மனிதர்கள் நடமாட்டம் பகலிலேயே இருக்காது, இரவிலோ கேட்கவே வேண்டாம்.

சுடுகாட்டிற்குப் பக்கத்திலேயே ஒதுக்கப்பட்ட மனை. அடையாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அடையாற்றில் வெள்ளம் வந்தால் முதலில் பாதிக்கப்படுவது இந்த ஏரியா தான். அதனால் எல்லா பங்களாக்களும் இரண்டு அடுக்குகளாகத்தான் கட்டப்பட்டிருக்கும். வெள்ளம் வந்தால் மாடிக்கு ஓடி விட வசதியாக இருக்கும். ஆனால் வீடு மிகவும் பழையதாகி விட்டது.

இப்போது நகரத்தின் வளர்ச்சியாலும், தொழில், கணினி இவற்றின் வளர்ச்சியாலும் இவள் வீட்டின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது.

சந்தியா பல ஆண்டுகள் மிலிட்டரி சர்வீஸில் எல்லைப் பாதுகாப்பு பணியில் மருத்துவமனைகளில் பணிபுரிந்து விட்டு, சமீபத்தில் சில ஆண்டுகளாகத்தான் சென்னையில் தன் சொந்த வீட்டில் இருக்கிறாள். கீழே, தரை தளத்தில் உள்ள சமையலறையை இப்போது தான் மாடுலார் கிச்சனாக மாற்றினாள்.

தரையில் உள்ள பழைய காலத்து டைல்ஸ்களையும் எடுத்து விட்டு வீடு முழுவதும் இட்டாலியன் மார்பிளாக மாற்றினாள். மாடியிலும் புதியதாய் ஒரு சமையலறையை மாடுலார் கிச்சனாக அமைத்துக் கொண்டாள். தரை தளத்தை வாடகைக்கு விட, பழக்கமான ஒரு  ஏஜென்டிடம் சொல்லி வைத்திருக்கிறாள். அந்த ஆள் பகல் ஒரு மணிக்கு வருவதாக சொல்லியிருந்தார்.

அவருடன் பேசுவதற்குத் தன்னை தயார் செய்து கொள்ள அவசரமாகக் குளித்து விட்டு, பூஜை அறையிலிருக்கும் சாமிப் படங்களுக்கு ஒரு நமஸ்காரம் போட்டு விட்டு வந்தாள்.

சந்தியாவிற்கு எந்த ஒரு சாமிப் பாட்டோ, ஸ்தோத்திரங்களோ தெரியாது. அது அவளுக்கு ஒரு குறை தான். பக்தி சிரத்தையோடு பாடி பகவானை வணங்காததால் தான் கடவுளும் நம் குறைகளை சரியாகக் காது கொடுத்து கேட்கவில்லை போலும் என்று தனக்குத் தானே சொல்லிச் சிரித்துக் கொள்வதும் உண்டு.

ஓட்டலில் இருந்து வரவழைத்த காலைச் சிற்றுண்டியை சாப்பிட்டு விட்டு, மதிய சாப்பாட்டிற்கும் எளிய முறையில் ஏதோ தயாரித்துக் கொண்டாள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அமெரிக்காவில் வசிக்கும் தன் மகள் சங்கமித்ரா, மாப்பிள்ளை சங்கரன், இரண்டு வயது பேத்தி ஆத்மிகாவுடன் சென்னை வந்தாள் சந்தியா. மகளும், மருமகனும் பேத்தியுடன் கேரளாவிற்கு, மாப்பிள்ளையின் சொந்த ஊருக்கு சென்று இருக்கிறார்கள்.

மகளும் மருமகனும் அமெரிக்காவில் மருத்துவராகப் பணி புரிகிறார்கள்.  அங்கே யூ.ஸி. டேவிஸில் மருத்துவம் படிக்குப் போது காதலர்கள். படித்து முடித்த பிறகு இரு வீட்டாரின் சம்மதத்துடன் தம்பதிகள் ஆனார்கள்.

அமெரிக்காவில் படிப்பை முடித்த அவர்கள் அங்கேயே வேலையிலும் சேர்ந்து விட்டார்கள். சந்தியா வேலையிலிருந்து ஓய்வு பெற்றவுடன் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மகளுடன் தங்கி இரண்டு அல்லது மூன்று மாதங்களில் திரும்ப இந்தியா வருவது வழக்கம். அப்படித்தான் இப்போதும் போய் வந்தாள்.

சங்கமித்ராவும் அவள் கணவனும் எப்போது இந்தியா வந்தாலும் சேர்ந்து தான் வருவார்கள். ஒரு மாத விடுப்பில் வந்து பதினைந்து நாட்கள் சென்னையிலும், பதினைந்து நாட்கள் கேரளாவிலும் கழித்து விட்டு, இருவீட்டிலும் மகிழ்ச்சியும், திருப்தியும் ஏற்படுத்தி விட்டு கிளம்பி விடுவார்கள்.

மீண்டும் மகளும் அவள் குடும்பமும்  வரும்வரை இவள் அவ்வளவு பெரிய வீட்டில் அதனால் சந்தியா தன் வீட்டின் தரைதளத்தை நல்ல ஒரு குடும்பத்திற்கு வாடகை விடவேண்டுமென்று தெரிந்த ஒரு புரோக்கரிடம் சொல்லியிருந்தாள்.

அவரும் யாரோ ஒரு நல்ல டாக்டரை வாடகைக்குப் பார்த்திருப்பதாகவும் அவருக்கே வாடகைக்கு கொடுத்து விடலாமா என்றும் அனுமதி கேட்டார்.  வீட்டின் சாவி ஏஜெண்டிடமே இருந்ததால் கால தாமதமின்றி உடனே வாடகைக்கு விடும்படி கேட்டுக் கொண்டாள்.

சந்தியா அமெரிக்காவில் இருந்து திரும்பிய போது அந்த டாக்டரும் ஏதோ மெடிகல் கான்பரன்ஸிற்காக மும்பை சென்றிருப்பதாகத் தெரிந்தது. வாடகை ஒழுங்காக வங்கியில்  சேர்ந்து விடுவதாலும், புரோக்கர் மேல் இருந்த அதீத நம்பிக்கையாலும்  சந்தியா டென்ன்டைப் பற்றி அதிகம் விசாரிக்கவோ, கவலைப்படவோ இல்லை.

ஆனால் அவள் பெண் சங்கமித்ராவும், மாப்பிள்ளை சங்கரனும் மட்டும் சந்தியா தனியாக இருப்பதால் டெனன்டை நன்றாக விசாரித்துத்தான் ஆக வேண்டும் என்றார்கள்.  ஆதலால் அந்த டாக்டர் வரும் போது இவர்களும் வந்து விடுவதாகத் தெரிவித்தார்கள்.

சந்தியா மதியம் சாப்பாட்டைத் தயாரித்துக் கொண்டிருக்கும் போது மீண்டும் காலிங் பெல் அழைத்தது. ஈரமான கைகளை ஒரு துண்டால் துடைத்துக் கொண்டு தெருக்கதவைத் திறந்தவள் சில நிமிடங்கள் திகைத்து சிலையாய் நின்றாள்.

வீட்டு புரோக்கருடன் இன்னொரு ஆள். அந்த ஆள் தான் இவள் வீட்டில் இப்போது வாடகைக்கு இருப்பவர் என்று அறிமுகப்படுத்தி விட்டு கிளம்பி விட்டார்.

வெளியே நின்றவன், அவனும் இவளை எதிர்ப்பார்க்கவில்லை போல் இருக்கிறது. இருவரும் திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்.

சந்தியா தான் முதலில் தன் உணர்வு பெற்று “வாருங்கள்” என்றாள்.

வந்தவன் சிறிது தயங்கி, “நான் தான் கீழ் வீட்டில் வாடகைக்கு வந்திருக்கும் டாக்டர்.  நீ… நீங்கள்.. சாரி, உங்களுக்குத் தெரியாதென்று நினைக்கிறேன். ஐயாம் வெரி சாரி” என்று தடுமாற்றத்துடன் கூறினான்.

 “உள்ளே வரலாமா?” என்று தயங்கி நின்றான்.

“வாருங்கள்” என்றுகூறிய படி உள்ளே சென்றாள்.

“எப்படி சந்தியா என்னை மறந்து இருபது ஆண்டுகள் உன்னால் இருக்க முடிந்தது?”

“பழைய கதைகள் எல்லாம் வேண்டாம். என் வீட்டில் வாடகைக்கு குடியிருக்க வந்து இருக்கிறீர்கள். நம் உறவு அந்த அளவிலேயே இருக்கட்டும். இப்போது டீ குடிக்கிறீர்களா?” என்று கட் அண்ட் ரைட்டாகப் பேசினாள் சந்தியா.

 ‘சரி’ என்று அவன் தலையாட்டவே, சமையலறைக்குச் சென்று ஒரு லெமன் டீ தயாரித்து எடுத்து வந்து கொடுத்தாள். சந்தியாவின் கைப் பக்குவத்தில் வழக்கம் போல் டீ மணத்தது. அதெற்கென்று ஒரு தனி ருசி இருந்தது.

டீயை மெதுவாக உறிஞ்சிக் குடித்தபடி, “சந்தியா, நான் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன். தயவு செய்து அதற்கு மட்டும் பதில் சொல்ல முடியுமா?” என்றான் மிகவும் மெல்லிய குரலில்.

“நம் மகள் மித்ரா இப்போது எப்படி இருக்கிறாள்? எங்கு இருக்கிறாள்? திருமணமாகி விட்டதா? நான் அவளைப் பார்க்க முடியுமா?” என்றான் ஆவலாக .

“அடேயப்பா ! வரிசையாக எத்தனைக் கேள்விகள். உங்களுக்கு உங்கள் பெண் பெயர் எல்லாம் கூட ஞாபகம் இருக்கிறதா? நாளை அவள் கணவனோடு கேரளாவிலிருந்து இங்கே வருகிறாள்” என்றவள், அதற்குள் ஏதோ ஒரு போன் வரவும், தன் கைபேசியோடு உள்ளே போய் விட்டாள்.

மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் டாக்டர் ரகு அவள் வீட்டிலிருந்து கீழே இறங்கினான். ஆம், அவன் சந்தியாவின் கணவன் டாக்டர் ரகு தான்.

அவனோடு பேசப் பிடிக்காமல் உள்ளே சென்ற சந்தியாவின் உள்ளம் வெறுப்பாலும், கோபத்தாலும் உலைக்களமாக்க் கொதித்தது. எவ்வளவு ஆசை வார்த்தைகள் பேசினான். யாருமற்ற அநாதையாக ஆச்ரமத்தில் வளர்ந்து, எதிலும் பிடிப்பில்லாமல் வாழ்ந்தவளைக் காதலித்து, வாழ்க்கையில் நம்பிக்கை வரும் வார்த்தைகளை அள்ளி வீசினான்.

இவனைப் போல் ஒரு நல்ல மனிதன் யாரும் இல்லை என்று அவனைத் தன்னை வாழ வைத்த தெய்வமாகவே நம்பினாள். ஆனால் அவள் ஆசை, நம்பிக்கை எல்லாம் இரண்டு வருடங்கள் தான் உயிர் வாழ்ந்தன. சங்கமித்ரா பிறந்து ஆறு மாதங்கள் வரை தான் இவளோடு ஒன்றாக வாழ்ந்தான்.

அதற்குள் அவனோடு பணிபுரிந்த மற்றொரு லேடி டாக்டருடன் தொடர்பு கொண்டு சந்தியாவிடம் கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பைக் காட்டி ஒதுக்கத் தொடங்கினான். வீட்டிற்கு வருவதையும் மெதுவாக குறைத்துக் கொண்டான்.

நர்ஸ் தானே என்று மட்டமாக பேசத் தொடங்கி விட்டான். பிறகு சில நாட்கள் கழித்து வருவதும் முழுவதுமாக நின்று விட்டது. குழந்தையோடு அப்படி ஒன்றும் பாசம் பொங்கி வழியவில்லை. குழந்தையை அவன் தேவையில்லாத ஒன்றாகவும், அவன் சந்தோஷத்திற்கு இடைஞ்சலாகவும் தான் நினைத்தான்.

அதனால் அவன் பிரிவு சங்கமித்ராவை ஒன்றும் பெரியதாக பாதிக்கவில்லை. குழந்தை வளர வளர அவளாகவே அவள் தந்தையின் குணத்தைப் புரிந்து கொண்டாள். சந்தியா சில நேரங்களில், ரகுவின் போட்டோவைக் கையில் வைத்துக் கொண்டு வெறித்துப் பார்ப்பதையும், கண்கள் கலங்குவதையும் பார்த்திருக்கிறாள்.  

மிகவும் அறிவான, புரிந்துகொள்ளும் தன்மையுள்ள பெண். சந்தியா கண் கலங்கி நிற்கும் போது மெதுவாக வந்து பின்னால் நின்று அவளை அணைத்துக் கொள்வாள். ‘இப்போது அவள் நினைவில் தந்தை முகம் இருக்குமா என்பதே சந்தேகம் தான்’ என்று பலவும் யோசித்தாள் சந்தியா.

அப்போது வெளியில் உள்ள மெயின் கேட் அருகில் ஒரு நீல நிற ஹோண்டா கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய மாப்பிள்ளை சங்கரன், பால்கனியில் நின்றிருந்த சந்தியாவைப் பார்த்து கையசைத்தான்.

காரைச் சுற்றிக் கொண்டு போய் முன் சீட்டில் அமர்ந்திருந்த சங்கமித்ராவின் கைகளில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை ஆத்மிகாவை தூக்கிக் கொண்டான்.

சிரித்துக் கொண்டே மாடிப்படி ஏறப்போன சங்கரனையும், அவன் பின்னால் பயணத்தினால் களைத்து மெதுவாக வந்த சங்கமித்ராவையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் டாக்டர் ரகு. தற்செயலாகத் திரும்பிப் பார்த்த சங்கமித்ரா, டெனன்ட்டைப் பார்த்து திகைத்தாள்.

அவன் கண்களும், பேன்ட்டில் கைவிட்டு நின்றிருந்த தோரணையும் அவளுக்கு,  யாரையோ எங்கோ பார்த்த முகத்தையோ நினைவுபடுத்தின. அவள் மெதுவாக அவன் அருகில் சென்றாள்.

“நீங்கள்?” என்று மெதுவாக சந்தேகத்துடன் கேட்டாள்.

“நான் கீழ் வீட்டில் வாடகை இருப்பவர், டாக்டர் ரகு”  என்றான் தயக்கத்துடன்.

“டாக்டர் ரகுவா? அப்படியானால்…” என்று தயக்கத்துடன் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசித்தாள்.

“நீ , சங்கமித்ரா… என் மகள் தானே?”

அதற்குள் மாடியிலிருந்து சங்கமித்ரா அழைக்கும் குரல் கேட்டு “வருகிறேன்” என்று தலையசைத்து விடை பெற்று மாடிக்குச் சென்றாள்.

“அம்மா, கீழே குடிவந்திருக்கும் டாக்டர் யார் என்று தெரியுமா?” சங்கமித்ரா கோபமாகக் கேட்டாள் .

“தெரியும், இப்போது தான் பார்த்தேன்” என்றாள் மெதுவாக.

“தெரிந்தும் ஏன் அவரை வீட்டில் அனுமதித்தீர்கள்? அட்வான்ஸ் வாங்கியிருந்தால் திருப்பிக் கொடுத்து விடுங்கள்”

“நான் கூட அப்படித்தான் முதலில் நினைத்தேன். எனக்கும், கோபமும் எரிச்சலுமாகத்தான் வந்தது. ஆனால் வீட்டு சாப்பாட்டிற்கே வழியில்லாமல், எல்லா நேரமும் ஏதோ ஒரு ‘ஆப்’ மூலம் சாப்பாடு வரவழைக்கிறார். டீ வேண்டுமென்றால் தெருக்கடையில் போய் தான் குடித்து விட்டு வருகிறார். அதெல்லாம் பார்க்கும் போது தான் மனம் கஷ்டப்படுகிறது”.

“நம்மை எவ்வளவு கஷ்டப்படுத்தினார், நீங்கள் எவ்வளவு அழுதிருப்பீர்கள்? இப்போது கூட உங்களைப் பார்க்க என்ன திட்டத்தோடு வந்திருக்கிறாரோ, யாருக்கு தெரியும்? அவர் நல்லவராக மாறிவிட்டாரா, இல்லை நல்லவராக நடிக்கிறாரா என்பதும் யாருக்குத் தெரியும். அவர் எப்படியோ போகட்டும், நரி இடமாகப் போனால் என்ன, வலமாகப் போனால் என்ன, லே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி”

“நான் கூட அப்படித்தான் நினைத்தேன் மித்ரா. ஆனால் அவர் சரியாக சாப்பிடாமல் ஓட்டல் சாப்பாடு நன்றாக இல்லை என்று  குப்பையில் கொட்டும் போது எனக்கு சாப்பிட முடியவில்லை. எனக்கே அறுபத்தி ஐந்து வயதாகிறது. அவருக்கு எழுபது  முடிந்து விட்டது. இந்த வயதில் போய் நிர்தாட்சண்யமாய் பேசி விரட்ட மனம் கஷ்டப்படுகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் மாப்பிள்ளை?” என்று சங்கரிடம் கேட்டாள் சந்தியா.

“நீங்கள் அமெரிக்காவில் இருக்கும் போது ஏஜென்ட் டாக்டரைப் பற்றிய விவரங்கள் அனுப்பியிருந்தார் இல்லையா? அந்த விவரங்களை சீக்ரட் ஏஜென்டிடம் கொடுத்து விசாரித்ததில் நல்ல ரிப்போர்ட் தான் கிடைத்திருக்கிறது. தினம் குறிப்பிட்ட சில மணி நேரங்களில் ஏழைகளுக்கு இலவச வைத்தியம் பார்க்கிறார் என்று கூட தெரிவித்திருக்கிறார்கள். காலம் கடந்து விட்டது, இதற்கு மேல் விரோதம் பாராட்ட வேண்டாம் என்று தான் நினைக்கிறேன். உங்களுக்கு ஒரு மகன் இருந்து அவன் கெட்ட வழியில் சென்று பிறகு திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா?” என்று கேட்டான் சங்கரன்.

“நான் கொஞ்சம் பழமைவாதி தான். திருமணம் என்பது வியாபாரமில்லை, லாப நஷ்ட கணக்கு பார்க்க மனமில்லை. ஸீனியர் சிட்டிசன் ஹோமில் தெரியாத ஆட்களோடு இருக்கிறார்கள் இல்லையா? அதைப் போல் இருக்கலாம் என்று நினைக்கிறேன்” என்றாள் சந்தியா.

“அதாவது தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசே மேல் என்கிறாயா அம்மா” என்றாள் சங்கமித்ரா.

அப்போது  டாக்டர் வீட்டைப் பூட்டி சாவியைக் கொண்டு வந்து சந்தியாவிடம் கொடுக்க வந்தார். “ஏன்” என்பது போல் சந்தியா பார்த்தாள்.

“நான் என் மனைவிக்கும் மகளுக்கும் செய்த துரோகத்திற்கு, நீங்கள் என்னுடன் முகம் கொடுத்து பேசுவதே அதிகம். என்னை மன்னித்து விடுங்கள்” என்றார் குரல் தழுதழுக்க. சாவியைப் பிடித்திருந்த விரல்கள் நடுங்கின.

அப்போது தூக்கத்திலிருந்து எழுந்து வந்த ஆத்மிகா , டாக்டரைப் பார்த்து, “யார் பாட்டி இந்த தாத்தா?”என்றாள்.

“உன் தாத்தா தான் ஆத்மிகா” என்றவள் டாக்டரைப் பார்த்து “உங்கள் தவறை நீங்கள் புரிந்து கொண்டதே போதும். நீங்கள் உங்கள் போர்ஷனில் இருங்கள். நான் கொடுத்தனுப்பும் சாப்பாட்டை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் சரியாக சாப்பிடாமல் வேலைக்கு போனால், உங்கள் வைத்தியத்தையே நம்பியிருக்கும் ஏழைகளுக்கும் நான் துரோகம் செய்வது போல் ஆகும்” என்றார் சந்தியா.

“நம் நாட்டுப் பெண்கள் பசிப்பிணிப் போக்கும் அன்னலட்சுமிகள்  தான்” என்று கை கூப்பி வணங்கினார்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஒரு அகதியின் கடிதம் (சிறுகதை) – ✍ வெண்பா, திண்டுக்கல்

    காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 19) – ✍ விபா விஷா, அமெரிக்கா