in

ஆலம் விழுதுகள் (சிறுகதை) – ✍ ரமணி.ச, சென்னை

ஆலம் விழுதுகள் (சிறுகதை

நவம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“வாங்கப்பா, கல்யாணம் எல்லாம் நல்லபடியாக முடிஞ்சுதா?” கேட்டான் முகுந்தன், சமையல் ராமசாமியின் மூத்த பையன்.

 “ஆமாண்டா… கட்டு சாத மூட்டையைக் கையில கொடுக்கறதுக்குள்ள போரும் போரும்னு ஆயுடுத்து. நானும் எத்தனையோ கல்யாணம் பாத்துட்டேன். இந்தக் காலத்துல இந்த மாதிரி சம்பந்திகள்…. சே….. அவாளைத் திருப்திப் படுத்தறதுக்குள்ள பாடு பெரும்பாடாயிடுத்து. சரி… சரி…. வா… சாப்பிடலாம்…” 

“என்னப்பா அங்கே சாப்பிடலையா?”

“என்னடா…. என்னிக்குடா…. சாப்பிட்டேன்”

“என்னன்னா….  கையக்கால அலம்பிண்டு வாங்கோ…. தட்டை வைக்கிறேன்…” இது ராமசாமியின் தர்ம பத்தினி விசாலம். 

ராமசாமி பெரிய சமையல் காண்ட்ராக்டர். ஆனா கல்யாண வீட்டுல கை நனைக்க மாட்டார். அடிக்கடி காப்பி குடிச்சே வயிறை நிரப்பிப்பார்.

உள்ளூரானா கல்யாணப்பந்தி நடக்குற போது மெதுவா நழுவி ஆத்துக்கு வந்து நாலு வாய் போட்டுண்டு போயிடுவார். வெளியூர்னா அக்கம்பக்கம் ஏதாவது ஹோட்டல் இருந்தா போயிடுவர். வேற வழியே இல்லேன்னா தான் கல்யாணத்துல சாப்பிடுவார். அதுவும் ஒரு பிடி தயிர்சாதம் மட்டும்தான். 

ராமசாமிக்கு கனத்த சரீரம். எல்லாரும் கிண்டல் பண்ணுவா.  கல்யாணத்துல எல்லாத்தையும் இவரே முழுங்கிடுவாரோன்னு. ஆனா…. சரீரத்துக்கும் சாப்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

ராமசாமிக்கு ரெண்டு பசங்க ரெண்டு பெண்கள். மூத்தவன் முகுந்தன் இன்ஜினியரிங் முடிச்சுட்டு சென்னையில் பெரிய ஐடி கம்பெனில வேலை பார்க்கிறான். வீடு மாம்பலத்துல என்பதால் ரொம்ப சவுகரியம். கல்யாணம் நிச்சயமாயிருக்கு. நாளும் குறிச்சாச்சு. 

இரண்டும் மூணும் பெண்கள்…. லதா, மாலா. லதா கல்யாணம் ஆகி சென்னை நங்கனல்லூர்ல இருக்கா. ஆத்துக்காரர் ஜெயராமன் கவர்ன்மென்ட் ஸ்கூல்ல டீச்சரா இருக்கார். லதா பிரைவேட் ஸ்கூல்ல ஒர்க் பண்றா.

மாலா +2 படிக்கறா. கடைக்குட்டி மாதவன், பத்தாவது படிக்கறான். முகுந்தனுக்கு பாத்திருக்கற பொண்ணு உஷா சென்னையிலேயே பேங்குல ஒர்க் பண்றா.  அவ அப்பா புரோகிதம். மடிப்பாக்கத்துல இருக்கா.

இன்னிக்கு சண்டே… முகுந்தன் வீட்ல இருக்கான். அப்பாவும் பிள்ளையும் நண்பர்களாகத் தான் பேசிப்பா. அரசியல், சினிமா, சங்கீதம் எல்லாம் அடிபடும். சாயங்காலமானா எதிர்வீட்டு சுந்தரமய்யர் வந்து அப்பா கூட அரட்டை அடிப்பார். அது ஒன்னுதான் பொழுது போக்கு. டிவில பழைய பாட்டுக்களைக் கேட்பார். சீரியல், சினிமா எல்லாம் பாக்க பிடிக்காது.

முகுந்தன் “அப்பா… விக்ரம் படத்துக்கு டிக்கட் வாங்கட்டா… எல்லாருமா போயிட்டு வரலாம்”னு கூப்பிட்டா

“டேய்…. அம்மாவைக் கூட்டிட்டு நீங்க போங்கடா” என்பார். 

ராமசாமி, ஒரு கல்யாணம்னா பூவிலிருந்து பல்லக்கு வரை ஐந்து லட்சத்திலிருந்து எட்டு லட்சம் வரை வாங்குவார். காண்ட்ராக்ட் பேசும்போதே வந்திருக்கிற பார்ட்டியின் பொருளாதார நிலையை எடை போட்டு அதற்கேற்பத்தான் எல்லாம் செய்வார். எதையும் வீணாக்க மாட்டார்.

அதே சமயம் பெரிய பணக்கார இடம் மாட்டினா விட மாட்டார். ஒட்டக் கறந்துடுவார்.

(அப்புறம்….?)

கைபேசி ஒலித்தது. அவரது வருங்கால சம்பந்தி புரோகிதர் பஞ்சாபகேசன் பேசினார். “எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். சமையல் மட்டும்தான் பாக்கி… உங்களைக் கேக்காம செய்யப் படாதுன்னு தான்….” 

“அதுக்கென்ன…. பேஷா ஏற்பாடு செஞ்சிடுவோம். ஆனா….” இழுத்தார் ராமசாமி.

“என்ன ஆனா… ஆவன்னா…. இதோ பாருங்கோ…. உங்களுக்கு என்னோட பொருளாதார நிலமை என்னைவிட நல்லாவே தெரியும். உங்களுக்கு எந்த எதிர் பார்ப்புமில்லைன்னும் தெரியும். நாம் பேசிண்டபடியே முதல்நாள் சாயங்காலம் ஆரம்பிச்சு கல்யாணத்தன்னக்கி சாப்பாட்டோட முடிச்சுக்கறோம். அன்னிக்கி ராத்திரி ரிசப்ஷன் உங்க ஏற்பாடுன்னு சொன்னேள்…. ஸோ….. அதுக்குத்தக்கன ஏற்பாடு செய்தா நல்லாருக்கும்.”

“நன்னாச் சொன்னேள். முகுந்தனே ரிசப்ஷனுக்கு நல்ல ஹோட்டல்ல ஏற்பாடு பண்ணிட்டான்…. உங்க எஸ்டிமேட்டைச் சொன்னா…. அதுக்குத் தக்கபடி என் சப் காண்டிராக்டர்ஸ் யாரிடமாவது ஏற்பாடு பண்ணிடறேன் “

அவர் சொன்னார். அதன்படியே ஏற்பாடும் பண்ணிக் கொடுத்தார். ஆச்சு… கல்யாணம் நல்லபடியாக நிறைவடைந்தது.  உஷா ராமசாமி வீட்டில் மருமகளாக நுழைந்தாள்.

(அவ்வளவுதானா….)

ராமசாமி வீடு மாம்பலத்துல, பழைய கிராமத்து வீட்டைக் கொஞ்சம் புதுப்பித்து. எல்லாரும் கூட்டுக் குடித்தனமா இருக்க வசதியா செய்து கொண்டார். வீட்டிலேயே ஒரு பக்கத்துல கேட்டரிங் சமையல் பலகாரம் பண்ண வசதியா பண்ணிண்டிருக்கார்.

அநேக நாட்கள் அடுப்பு அணைவதே இல்லை. இப்போது முகுந்தன் திருமணமானதால் அவனுக்கென தனியறை ஏற்பாடு பண்ணியிருக்கார். அது போலவே மாதவன், மாலா ரெண்டு பேரும் படிக்க அறைகள் ஒதுக்கிக் கொடுத்திருந்தார்.‌

எல்லோரும் என்றும் ஒற்றுமையா ஒரே குடும்பமா இருக்கணும் என்பது ராமசாமியின் ஆசை. அதேபோல் குழந்தைகளிடம் எந்த அபிபிராய பேதமும் கிடையாது.

அன்றைக்கு ராமசாமிக்கு ரெஸ்ட்.  சுந்தரமய்யர் வந்தார்.

“முகுந்தன் கல்யாணத்தைப் பிரமாதமா நடத்திட்டீர்…. இனி கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட் எடுக்கலாமே….”

“ரெஸ்டா…. எனக்கா…. அதுக்கு இன்னும் நாளிருக்கு. இப்ப நிறையப் பேர் என்னை நம்பி கல்யாணம், காட்சிக்கு ஏற்பாடு பண்ணிண்டிருக்கா…. அது மட்டுமில்லே என்னை நம்பி எங்கிட்ட வேலை செய்யற பத்துப் பன்னிரண்டு பேரோட குடும்பங்கள் இருக்கு… அதனால் திடீர்னு நான் வேலையை நிறுத்தினேன்னா. அவாள்ளாம் நடுத்தெருவுக்கு வந்துடுவா. நம்ம உடம்புல சக்தி இருக்கற வரை நாலு பேருக்கு உபகாரமா இருக்கணும்…. அப்பத்தான் அந்த நாலுபேர் கடைசீல வந்து நம்மைக் கரையேத்துவா.”

“அதுக்காக எத்தனை வயசுவரைத்தான் உழைக்கிறது?”

“முடியற வரை…. ஒரு நாள் படுத்துடக் கூடாது…. வேலை செய்யலேன்னா மிஷின் கெட்டுடும்… ஐ மீன் நம்ப உடம்பைச் சொல்றேன்….”

ஆம்… தொடர்ந்து உழைத்தார்… மாதவனை கேட்டரிங் படிக்க வைச்சார். மாலாவுக்கு சென்னையிலேயே ஒரு ஓட்டல்காரரின் மகனுக்கு மணம் செய்வித்தார். இப்போது மாதவன் அப்பாவுக்கு உதவியாக.

லதாவுக்கு ரெண்டு பெண்குழந்தைகள். மாலாவுக்கு ஒரு பையன். மூத்த பையன் முகுந்தன், உஷாவிற்கு குழந்தை ஏதும் இல்லை. ஆயிற்று கிட்டத்தட்ட பத்து வருஷம். கடவுள் கண்திறக்கலை. 

இப்போது மாதவனுக்கு பெண் பார்க்கப் தொடங்கினார் ராமசாமி. (ஸார்…. காதலில்லாம கதையா… நல்லாருக்காது….. ஓகே….)

மாதவன், ராமசாமிக்கு சமையலில் உதவி செய்யும் பாலசாமியின் மகள் வைதேகியைக் காதலித்தான். அவள் இங்கு வருவதும், இவன் அங்கு போவதும்…. எல்லோருக்கும் தெரிந்தே நடந்து கொண்டிருந்தது.

இப்போது விசாலம், (மறந்துட்டீங்களா…. ராமசாமியின் தர்மபத்தினி) தன் கணவரிடம் ஜாடைமாடையாக ஜோடிகளின் லீலைகளைச் சுட்டிக் காட்டினாள். ராமசாமி புரிந்து கொண்டார். 

எந்தவித பந்தாவும் இல்லாமல் பாலசாமியைக் கூப்பிட்டுப் பேசினார். பாலசாமி தயங்கினார். அவரை அருகில் அழைத்து, முதுகைத் தட்டி தைரியமூட்டினார். கோயிலில் திருமணம்…. மாலை ரிசப்ஷன்…. இனிதே நிறைவடைந்தது. வைதேகியும் மருமகளாக இணைந்தாள்.

கொஞ்ச நாளாயிற்று. முகுந்தன் வழக்கம் போல் அப்பாவிடம் பேசுகையில், தான் ஹவுசிங் லோன் வாங்கி ஓஎம்ஆரில் ஒரு ஃப்ளாட் வாங்கப் போவதாகக் கூறினான். இராமசாமி அதை அவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் விசாலம் கணவரிடம் முகுந்தன் தனியாகப் போய்விடுவானோ என வருந்தினாள்.

“அதுதான் பிராப்தம்னா அப்படியே நடக்கட்டும்” என்றார் ராமசாமி.

ஓரிரு நாளிலேயே பெற்றோரை அழைத்துக் கொண்டுபோய் வீட்டைக் காட்டினான். நல்ல வசதியான இடம். மறு வாரத்திலேயே லோன் சாங்ஷனாகி, ரிஜிஸ்டரேஷன் முடிந்தது. கிரகப்பிரவேசமும் முடிந்தது. ஆனால், முகுந்தன் தனிக் குடித்தனம் போக வில்லை! வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டான். விசாலம் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

(கதை போரடிக்குது சார்…)

அமைதியான நதியினிலே ஓடம், ஓடும் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும். ஆம், அமைதியான நீர் பரப்பில் கல் எறிந்தால் ரவுண்ட்ரவுண்டா அலை எழுமே….

லதா… (யாருங்கறீங்களா… மூத்த பெண்) வின் கணவர் ஜெயராமன் திடீரென ஒரு விபத்தில் மரணமடைந்தார். இது ராமசாமியைத் துயரத்தில் ஆழ்த்தியது. அவரும் அந்த அதிர்ச்சியிலேயே ‘ஸ்ட்ரோக்’ வந்து படுத்த படுக்கையானார்.  விசாலம் மிக வருந்தினாள். கணவரிடம் பேசினாள்.

“என்னங்க…. ஊர்ல என்னென்னமோ சொல்லிக்கிறாங்களே…. முடியாத மூத்த குடிமக்களை பிள்ளைகள் முதியோர் இல்லத்தில் விட்டு விடுவதாக… நமக்கும்……” சொல்லி முடிக்கும் முன் முகுந்தன் அங்கே வந்தான்.

“என்னம்மா…. இப்படி ஒரு எண்ணமா, உங்க மனசுலயா…. அம்மா, உங்க பிள்ளைகள் உங்களுக்கு ஒழுங்காய் பொறந்த வங்க தானே…. அப்புறம் ஏன் இப்படி…. சே…. நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலே. அம்மா, நாங்க நீங்க போங்கன்னு சொன்னாலும் போகத் தயாராயில்லே… உங்க மருமக்களுக்கும் அந்த எண்ணம் துளிக்கூட இல்லே… ஏன்… அவங்களைப் பெத்தவங்களைவிட உங்களை நேசிக்கறாங்க.

ஏனப்பா, கவலைப்படுறீங்க…. நீங்கதானே எப்போதும் சொல்வீங்க, நடப்பெதெல்லாம் நன்மைக்கேன்னு நினைக்கணும்னு. அப்படியே இதையும் நினையுங்க அப்பா… எதுவும் நாம் செய்யறதில்லே. நாம் கருவாக உருவாகும் போதே, இதுதான், இப்படித்தான் வாழ்க்கை என புரோக்ராம் பண்ணப்படுகிறது. அதை மாற்றவோ திருத்தவோ யாராலும் முடியாது. நன்மை, தீமை இரண்டையும் ஒரேமாதிரி ஏற்றுக்கற பக்குவம் வரணும்.

அப்பா…. இப்ப என்ன தங்கை லதாவைப் பாத்துக்கணும். அவ்வளவுதானே. நாங்க இருக்கோம்பா…. பாத்துக்கறோம்… அவ இனி நம்மாத்துல நம்ப கூடத்தான் இருப்பா, நீங்க கவலையை விட்டு நிம்மதியா ரெஸ்ட் எடுங்க.  இனிமே இந்த மாதிரி தவறா எல்லாம் யோசிக்காதீங்க…”

ஆஹா… இப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெற்றதற்காக, ஆனந்தக் கண்ணீர் விட்டார் ராமசாமி. இனி அவர் நிம்மதியாகத் தூங்குவார்..!.

(உஷ்…. சத்தம் போடாதீங்க…. )

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 20) – ✍ விபா விஷா, அமெரிக்கா

    செய்துதான் பாருங்களேன் (சிறுகதை) – ✍ சித்து அம்மாசி, சேலம்