in

செய்துதான் பாருங்களேன் (சிறுகதை) – ✍ சித்து அம்மாசி, சேலம்

செய்துதான் பாருங்களேன் (சிறுகதை)

நவம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ருணிற்கும், நளினாவிற்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் கடந்து விட்டது. அவர்கள் அன்பின் அடையாளமாக நிதினும், நித்யாவும் பிறந்தனர். இருவரும் தங்களது பள்ளி படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

நிதின் நான்காம் வகுப்பு படிக்கிறான். நித்யா இரண்டாம் வகுப்பு. நிதினுக்கு ஓரளவு விவரம் தெரிந்தது. நித்யாதான் கேள்விகளால் துளைத்து எடுப்பாள். ஒரு நாள் மாலையில் வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் நளினா.

அப்போது நித்யா, “ஏம்மா, என் பிரண்டு ஹரிணி இருக்கா இல்ல… அவளோட அப்பா போலீசா இருக்காங்களாமா. நம்ம அப்பா என்ன வேல செய்றாங்கம்மா?”னு கேட்க

அதற்கு நளினா, “நம்ம அப்பா பேங்க்ல அக்கவுண்ட்டட்டா இருக்காரு” என்று கூறினாள்.

“சரிமா ஹரிணி அவங்க அம்மா இருக்காங்க இல்லமா, அவங்க ஒரு ஸ்கூல்ல டீச்சரா இருக்காங்களாமா. நீ என்ன வேலைக்குமா போற?” என வினவினாள்.

இந்த கேள்வியில் நளினா சற்று தடுமாறித்தான் போனாள். இதுவரை குடும்பம் குழந்தைகள் என யோசித்தவள் தனது அடையாளத்தை தேடவில்லை என்பது உண்மையே.

இத்தனைக்கும் நளினா முதுகலை பட்டதாரி. குழந்தையின் கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல், “அம்மா இனிமேதான் வேல தேடி போகப் போறேன்” என்று கூறினான்.

“சரிமா நீ வேல தேடிட்டு என்ன வேலன்னு சொல்லு, ஹரிணி அவங்க அம்மா மாதிரி டீச்சராக போறாலாமா”

“நானும் நீ என்ன வேலைக்கு போறியோ அந்த மாதிரி வேலைக்கு போறேன். இல்லேன்னா ஹரிணிகிட்ட நான் எங்க அம்மா மாதிரி வீட்ல சாப்பாடு செய்யப் போறேன்அப்படின்னு சொல்லிடறேன்ம்மா” என்று குழந்தை சொல்லவும்

நளினி அதிர்ச்சியிடைந்து, “இல்ல, இல்ல பாப்பா… அம்மா வேலைக்கு போயிட்டு என்ன வேலன்னு சொல்றேன். நீங்க அந்த வேலைக்கு  போக போறேன்னு ஹரிணிகிட்ட சொல்லிருங்க” என்று கூறினாள்.

‘இனி வேலைக்கு செல்ல வேண்டும்’ என மனதில் உறுதி எடுத்துக் கொண்டாள். இதைப் பற்றி இரவு குடும்பத்தினர் அனைவரிடமும் வினவினாள்.

“ஏங்க நான் தான் எம்எஸ்சி வரைக்கும் படிச்சிருக்கேன் இல்ல. நான் ஏதாவது  வேலைக்கு போட்டுமா?”னு கேட்டாள்.

மனைவியின் எதிர்பாராத கேள்வியில் அருண் சற்று குழம்பிப் போனான்.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம்… நான் வேலைக்கு போறதே போதும். ஒரு பொண்ணா வீட்ல இரு, பிள்ளைகளை பார்த்துக்கோ. குடும்பத்தை பாரு, வேலைக்குலாம்  போக தேவையில்லை” என்று கூறி விட்டான்.

அப்போது மாமியாரும், “ஆமாம்மா வேலைக்கு எல்லாம் போக வேணாம். இருக்கறத பாக்கவே இங்க நேரம் இல்ல” என்று கூறவும்

“என்ன அத்த இப்படி சொல்றீங்க? நான் எல்லா வேலையும் சீக்கிரம் முடிச்சிடுறேன். பிள்ளைகளையும் ஸ்கூலுக்கு அனுப்பிச்சிடறேன். அவரையும் வேலைக்கு அனுப்பிச்சுட்டு வீட்டுல சும்மா தான் இருக்கேன். ஏதாவது ஒரு வேலைக்கு போறேன்” என மன்றாடி பார்த்தாள், பயனில்லை. இருப்பினும் நளினா பின்வாங்குவதாக இல்லை.

“நான் இன்று வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே சமையல் செய்து கொண்டிருந்தால்,  நாளை பெண்கள் எல்லாம் வீட்டில் சமையல் மட்டுமே செய்ய வேண்டும் என்று எனது மகள் எண்ணக்கூடும். இந்த எண்ணத்தை நான் மாற்ற வேண்டும்” என நளினா அனைவரிடமும் போராடியதோடு மட்டுமல்லாமல், ஒரு அலுவலகத்தில் வேலை பெற்றாள்.

அதுவரை ஏதாவது உதவி செய்து கொண்டிருந்த மாமியார், மருந்துக்கு கூட சமையலறை பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. மாமனாரும் சரி, அருணும் சரி எந்த வகையிலும் நளினாவிற்கு உதவியாக இருக்கவில்லை.

எதற்கும் நளினா சோர்ந்து போகவில்லை. அத்தனையும் சமாளித்து வேலையும் பார்த்துக் கொண்டு, பிள்ளைகளையும் கவனித்துக் கொண்டு, வேலையையும் சரி, குடும்பத்தையும் சரி மிகச் சாதுர்யமாக சமாளித்தாள்.

அருண் வேலை பார்த்த தனியார் வங்கியில் நஷ்டம் காரணமாக வேலையை இழக்க நேரிட்டது. வீட்டில் அனைவரும் சோர்ந்து போயினர். நளினா அனைவருக்கும் ஆறுதல் சொல்லி தேற்றினாள். குடும்ப பாரத்தை தானே சுமந்தாள்.

அனைவருக்கும் நளினா மீதான எண்ணங்கள் மாறியது. அவளுக்கு துணையாய் நின்றனர். சில மாதங்களுக்கு பிறகு அருணிற்கும் வேலை கிடைத்து விட்டது.

நளினாவின் அத்தை நளினாவிடம், “என்ன மன்னிச்சிடும்மா, நான் ஒரு பொண்ணா இருந்துக்கிட்டே உன் அடையாளத்த உருவாக்க தடையா நின்னேன். ஆனா நீ உன் உறுதியால எல்லாத்தையும் தகர்த்துட்ட”னு கூறவும்

“பரவாயில்ல அத்த விடுங்க” என கூறினாள்.

நளினாவிற்கு ஆனந்தம் தாங்கவில்லை. அத்தை புரிந்து கொண்டார்கள் என்பதற்காக அல்ல, இனி நித்யாவுக்கு தான் ஒரு எடுத்துக்காட்டாக வாழப் போகிறோம்  என்ற எண்ணத்தால்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆலம் விழுதுகள் (சிறுகதை) – ✍ ரமணி.ச, சென்னை

    தனிவலை (சிறுகதை) – ✍ கோபாலன் நாகநாதன், சென்னை