in

தனிவலை (சிறுகதை) – ✍ கோபாலன் நாகநாதன், சென்னை

தனிவலை (சிறுகதை)

நவம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

னுவிற்கு திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வந்த நாளலிருந்தே அந்த வீட்டில் உள்ளவர்கள் மீது இனம் புரியாத கோபமும் எரிச்சலும் இருந்து வந்தது. அது அவ்வீட்டில் உள்ளவர்கள் அவள் மீதுகாட்டிய  அதீத அன்பினாலா என தெரியவில்லை.

மாமியார் லட்சுமியும், மாமனார் ராகவனும் கூட அனுவிடம் மிகவும் பாசத்துடனும், பிரியத்துடனும்தான் நடந்து கொண்டார்கள்.  வீட்டுக்கு வந்த மூன்றாவது மற்றும் கடைசி மருமகள் அனுதான், அதனால் அவளை குழந்தையாக நினைத்து செல்லமாக நடத்தினார்கள்.

அவள் கணவன் ரகுவும் அவளிடம்  ஆசையுடன் நடந்து கொண்டான். அவனின் அண்ணன்கள் ராஜா, நடேசன்  மற்றும் அவர்களது மனைவிகள் ராஜேஸ்வரி, நளினி  ஆகியோரும் அனுவை எந்த வேலையும் செய்ய விடாமல் தாங்களே எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தனர். 

இவ்வளவு வசதியாக உட்கார வைத்தும் அனுவிற்கு இந்த குடும்பத்தை பிடிக்கவில்லை. ஏன் என்றால் ஒரு சினிமாவிற்கு போவதென்றால் கூட அனைவரும் ஒன்றாக தான் சொல்கிறார்கள்.  இவ்வளவு ஏன் திருமணம் ஆனவுடன் ரகுவும் அனுவும்  தேன்நிலவுக்கு சென்றபோது கூட    சின்னம் சிறுசுகளை தனியாக அனுப்பக்கூடாது என்று சொல்லி இரண்டாவது மகன்  நடேசனையும்  அவன் மனைவி நளினியையும்   துணைக்கு அனுப்பி வைத்தார்கள்.

அனுவின் அம்மா பார்வதிக்கு அவள் ஒரே மகள்.  பார்வதியம்மா  ஆரணியில் தனியாக வசித்து வருகிறாள்.  அப்பா அனுவுக்கு சிறுவயதாக இருக்கும்போதே இறந்து விட்டார்.  அவளது அம்மா அரசுத் துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.  அனுவிற்கு மூர்த்தி என்ற ஒரே ஒரு தாய் மாமன் உண்டு,  அவரும் திருச்சியில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவர்களுக்கு சொந்தங்கள் ஏதுமில்லை.

அனு அவளது அம்மாவுடன் தினமும் போனில் பேசுவாள். அப்போதெல்லாம் புகுந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றி ஏதாவது குறைகூறிக் கொண்டே இருப்பாள். ஆனால்,  அவள் அம்மாவோ “உன் புகுந்த வீட்டு நபர்கள் அனைவரும் தங்கமானவர்கள்,  அவர்களை பற்றி எல்லாம் வீணாக குறை சொல்லிக் கொண்டு இருக்காதே, அங்கு உள்ளவர்களை அனுசரித்து நடந்துக்கோ” என அறிவுரை கூறுவார்.

கணவன் ரகுவிடம் தனிமையாக இருக்கும் நேரங்களில்  குடும்ப நபர்களை பற்றி  ஏதாவது கூறினாலும் கூட அவன் சிரித்துக் கொண்டே,  “உனக்கு எங்க குடும்பம் புதுசு,  அதனாலே இங்கே உள்ளவர்களை நீயே போகப் போக புரிஞ்சிக்குவே” என்று சொல்லி விடுவான்.

ரகு ஒரு தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறான். அவனுக்கு ஆபீஸில் வேலை பளு அதிகம், அதனால் வாரத்தில்  சில நாட்கள் மாலை நேரங்களில் மிகவும் தாமதமாக வீடு திரும்புவான்.

ஆனால், ரகுவின் அண்ணன்கள் இருவரும் சாதாரணமான கம்பெனியில் பணிபுரிந்த போதிலும் மாலை ஆறு முப்பது மணி அளவில் வீட்டிற்கு திரும்பி விடுவார்கள். வந்த பிறகு அவர்கள் தத்தமது மனைவியரை கூப்பிட்டுக்கொண்டு மார்க்கெட் என்றோ அல்லது கோவிலுக்கு செல்கிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்று விடுவார்கள். அந்த நேரங்களில் அனு மட்டும் வீட்டில் தனியாகத்தான் போர் அடித்து கொண்டு உட்கார்ந்திருப்பாள்.

அவளுக்கு  ரகுவின்  மீது மிகவும் கோபம் கோபமாக வரும், அவரது அண்ணன்கள் இருவரும் சரியாக மாலை ஆறு முப்பது மணிக்கு வீட்டிற்கு வந்து மனைவியை வெளியே கூட்டிச் செல்லும்போது இவர் மட்டும் தினமும் மிகவும் தாமதமாக வருவதும், தன்னை எங்கேயும் வெளியில் கூட்டிச் செல்லாமல் இருப்பதும் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தும்.

அவளும் ரகுவிடம் பல முறை வீட்டிற்கு சீக்கிரமாக வருமாறு கேட்டுக் கொண்டும், அவனும் “எனக்கு அலுவலகத்தில் வேலை அதிகம் உள்ளது, இருந்தாலும் நான் சீக்கிரம் வீடு திரும்ப முயற்சி செய்கிறேன்” என சமாதானம் கூறுவான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை கணவன் ரகுவுடன்   மாமல்லபுரம் சென்று வரலாம் என முடிவு செய்து கணவனிடம் முந்தைய இரவே சம்மதம் வாங்கி இருந்தாள்.  காலை ஏழு முப்பது மணி அளவில் புறப்பட தயாராகி கொண்டிருக்கும் போது திடீரென்று சமையலறையிலிருந்து ஒரு சத்தம்.

அனைவரும் ஓடிச்சென்று பார்த்தபோது மாமியார் லட்சுமி கீழே விழுந்து கிடந்தார்கள்.  மூத்தவன் ராஜாவும், நடேசனும் பதறிப் போய் அம்மாவை தூக்கி வந்து படுக்கையில் கிடத்தினார்கள்.  மற்ற மருமகள்களும் ஓடிவந்து என்னவென்று விசாரித்தார்கள்,

ரகுவும் சத்தம் கேட்டு ஓடி வந்து அம்மாவின் மயக்க நிலையை பார்த்துவிட்டு டாக்டரிடம் கூட்டி செல்ல ஆட்டோவை அழைக்க போனான்.

ஆனால்,  அதற்குள்ளாக அங்குவந்த மாமனார் ராகவன்  “யாரும் பயப்படவேண்டாம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து போயிருக்கும், உடனே வாயில் கொஞ்சம் சர்க்கரையை போடுங்க” என்றார்.

அவர் சொன்னபடி பெரிய மருமகள் மாமியார் லட்சுமியின் வாயில் சிறிது சர்க்கரையை போட்டவுடன் அவள் சற்று மயக்கம் தெளிந்து எழுந்து அமர்ந்தாள், பிறகு நடேசன் அம்மாவிடம்  “வாங்கம்மா, டாக்டர்கிட்ட போயிட்டு வந்துடுவோம்” என கூப்பிட்டான். 

ஆனால் அம்மாவோ  “இப்போ பரவாயில்ல, டாக்டர்கிட்ட எல்லாம் போக வேண்டாம்” என மறுத்து விட்டாள்.

ரகு அம்மாவிடம் “இல்லைமா, எங்களுக்கு கவலையாக இருக்கு டாக்டர்கிட்டே போய் செக்அப்  செய்துட்டு வந்திடலாம்” என்றான். 

அப்பா  குறுக்கிட்டு “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், அவ கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டா சரியா போய்விடும், நீங்கள் எல்லாம் உங்கள் வேலைகளை பாருங்க” என கூறினார்.

அப்போது இளைய மருமகள் நளினி லட்சுமிக்கு சற்று சூடான ஹார்லிக்ஸ் கலந்து கொண்டுவந்து கொடுத்தாள். ஆனால்,அனுவோ எதுவும் பேசாமல்  இதையெல்லாம் பார்த்துக் கொண்டே மௌனமாக நின்றாள்.  பிறகு அனைவரும் அவரவர் அறைகளுக்கு திரும்பினார்கள்.

ரகுவுடன் புறப்படலாம் என நினைத்துக் கொண்டு இருந்தபோது, அவன் “அம்மாவுக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போச்சு நாம இன்னைக்கு மாமல்லபுரம் போக வேண்டாம் அடுத்த வாரம் போகலாம்” என்றான்.

அவன் இவ்வாறு கூறியவுடன், “எனக்கு முன்னமே தெரியும்,  நீங்க இப்படிதான் சொல்லுவீங்க என்று,  இன்னைக்குதான் முதன்,  முதலாக வெளியே போகலாம்னு பிளான் பண்ணினோம்,  அத கெடுக்கிற மாதிரி உங்க அம்மா படுத்துகிட்டாங்க” என கோபமாக கூறினாள் அனு.

“அப்படி எல்லாம் பேசாதே அனு, எங்க அம்மாவுக்கு திடீர்னுதானே உடம்பு முடியாம போச்சு,  அதுக்கு அவங்க என்ன பண்ணுவாங்க?” என கேட்டான்.  மேலும் “அம்மா உடல்நலம் சரியில்லாமல் படுத்துக் கொண்டிருக்கும்போது நாம் இருவர் மட்டும் ஜாலியாக வெளியே சுற்றக் கிளம்பினால் அது மற்றவர் பார்வைக்கு தவறாக படும் அதனால்தான் நான் இன்று வெளியே போகவேண்டாமென்று  சொன்னேன்” என்றான்.

அப்போது அங்குவந்த  அண்ணி  ராஜேஸ்வரி அனுவிடம்,  “அனு வாஷிங் மெஷின்ல துணி எல்லாம் போட்டு இருக்கேன்,  நீ கொஞ்சம் அத பார்த்துக்கோ, அதுக்குள்ள நான் அத்தைக்கு கொஞ்சம் தேவையான உதவிகளை செஞ்சு கொடுத்துட்டு வந்து விடுகிறேன்” என்றாள்.

ஏற்கனவே கோபமாக இருந்த அனு “அதெல்லாம் நான் பார்க்க முடியாது,  வேணும்னா நீங்களே வந்து பார்த்துக்கோங்க” என்றாள்.

உடனே ராஜேஸ்வரி “இல்லை அனு, தினமும் அத்தைதான் இதை செய்வாங்க, இன்னைக்கு அவங்க முடியாமல் படுத்துகிட்டு இருக்கறதுனாலதான்    உன்ன பாத்துக்க சொன்னேன்.   நானும், நளினியும் சமையல் வேலைகளை கவனிக்க வேண்டி இருக்கு அதனாலதான் சொன்னேன்” என்றாள்.

“எனக்கு இன்னைக்கு மூடு இல்லை, நிச்சயமா நான் பார்க்க முடியாது” என்றாள் அனு.  

அப்போது குறுக்கிட்ட  ரகு, “ஏன் அனு இன்னைக்கு ஒரு நாளைக்குதானே பார்க்க சொல்றாங்க, கொஞ்சம் அவங்களுக்கு உதவி செய்யேன் “ என்றான்.

“இப்படித்தான் ஆரம்பிப்பாங்க, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எல்லா வேலையையும் என் தலையிலேயே கட்டிடுவாங்க எனக்கு தெரியாதா” என அனு பேச,  கோபமடைந்த ரகு பளார் என்று அவள் கன்னத்தில் அறைந்தான். அதிர்ச்சியடைந்த அனு கோபமாக அழுது கொண்டே தனது அறைக்கு சென்றாள்.

“என்ன தம்பி அவசரப்பட்டு கைநீட்டி அடிச்சிட்டீங்க,  இது தப்பு” என்றாள் அண்ணி.  

அப்போது கையில் பெட்டியுடன் வெளியே வந்தாள் அனு.   அதிர்ச்சி அடைந்த ரகு, “எங்க கிளம்பிட்ட அனு?” என கேட்டான். 

“நான் எங்க அம்மா வீட்டிற்கு போகிறேன்” என்றாள்.

ராஜேஸ்வரி, அனுவிடம்  “அவசரப்படாதம்மா,  நீ  எந்த வேலையும் பார்க்க வேண்டாம், நான் உன்கிட்டே வாஷிங் மெஷினை போடச் சொன்னது தப்புதான்,  அதுக்காக நீ கோவிச்சுக்கிட்டு போகாதே” என்றாள்.

ஆனால் அனு எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.   அவளை வழிமறித்த ரகு, “நான் ஏதோ கோபத்துல அடிச்சுட்டேன் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன், நீ உங்க அம்மா வீட்டுக்கு எல்லாம் போக வேண்டாம். அம்மாவுக்கு வேறு உடம்பு சரியில்லை, நீ கோவிச்சுக்கிட்டு ஊருக்கு போயிட்டேன்னு தெரிஞ்சா மிகவும் வருத்தப்படுவார்கள்” என்றான்

அனுவோ எதுவும் பதில் கூறாமல் வெளியேற முயற்சிக்கும்போது சத்தம் கேட்டு அங்கு வந்த ரகுவின் அப்பா ராகவன், “இங்கே என்ன சத்தம்? என்ன  நடக்கிறது இங்கே?” என கேட்டார். 

அதற்கு ரகு,  “அண்ணி இன்னைக்கு ஒரு நாள் மட்டும் வாஷிங்மெஷினை போட சொல்லி அனுவிடம் சொன்னாங்க, அவ நான் போட மாட்டேன்னு சொல்லி விவாதம் பண்ணினா, நான் கோவத்துல        அறைஞ்சுட்டேன்,  அதனால கோவிச்சுக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு புறப்பட்டு போகிறாள். நாங்க எல்லாம் போக வேண்டாம் என்று தடுத்துகிட்டு இருக்கோம்” என்றான்.

அதைக்கேட்ட ராகவன், “அவள்  ஆயிரம் எதிர்த்துப் பேசி இருந்தாலும்,  நீ கை நீட்டி அடித்தது தப்பு,  அவகிட்ட சாரி கேளு” என்றார். 

“இல்லப்பா, நான் ஏற்கனவே சாரி சொல்லிவிட்டேன்” என்றான் ரகு.

ராகவன் தற்போது அனுவின் பக்கம்  திரும்பி, “இத பாருமா எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம், நீ இப்ப உள்ளே  போ” என்றார்.

அனு  மாமாவின் சொல்லை தட்ட முடியாமல் மீண்டும் தன் அறைக்கு சென்று முடங்கிக் கொண்டாள்.  பிறகு அமைதியாக அவரவர்கள் தங்கள்  வேலைகளை  கவனித்தனர்.

ரகு,  பிறகு அப்பாவிடம் தனிமையில் பேசும்போது, “அனுவை இன்று மாமல்லபுரம் கூட்டிச் செல்வதாக கூறி இருந்தேன், அம்மாவிற்கு திடீரென்று உடம்பு முடியாமல் போனதால் போக இயலவில்லை. இன்று வெளியே கூட்டிப் போறேன் என்று சொல்லிட்டு  கூட்டிப் போகாமல் இருந்து விட்டதால் அவளுக்கு கோபம்,  அந்த கோபத்தை  இப்படி வெளிப்படுத்துகிறாள்” என்றான்.

அவளும் சின்ன பொண்ணுதானே, கணவருடன்  வெளியே எங்கேயாவது தனியாக போயிட்டு  வரணும்னு ஆசை இருக்கும் இல்ல, பரவாயில்லை அவளை ஒரு மாற்றத்துக்காக அவங்க அம்மா வீட்டுக்கு ஆரணிக்கு கொண்டு விட்டுட்டு வா, இரண்டு நாட்கள் அங்கே இருந்துவிட்டு வரட்டும்” என்றார்.

“சரி” என்ற ரகு அன்று இரவு மீண்டும் அனுவிடம் அன்று நடந்ததற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, “ நீ வேண்டும் என்றால் இரண்டு, மூன்று நாட்கள் உங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வா, நான் நாளை லீவு போட்டுவிட்டு உன்னை ஊரில் கொண்டு விட்டு வருகிறேன்” என்றான்.

அனுவும் சற்று கோபம் தணிந்து, “நீங்க வர வேண்டாம்,  நானே பேருந்தில் புறப்பட்டு சென்று விடுகிறேன்” என்றாள். 

மறுநாள் காலையில் ரகு  அலுவலகம் செல்லும்போது, அனுவை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஆரணி செல்லும் பேருந்தில் அனுப்பி வைத்தான்.

லட்சுமி இரண்டு மூன்று நாட்களில் உடல்நிலை தேறி குணமாகி விட்டார். வீட்டில் நடந்தவைகளை கேட்டு மிகவும் வருத்தமடைந்தாள். 

“அனு புதுப்பெண் என்பதால் நம்மைப் பற்றி புரிந்து கொள்ள சிறிது காலம் பிடிக்கும்,  அதுவரை நாம்தான் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும்” என கூறினார்.

மகள் திடீரென்று வந்து நிற்பதைப் பார்த்து ஒருபுறம் ஆச்சரியம் அடைந்தாலும், மறுபுறம் என்ன பிரச்சனை என்று தெரியவில்லையே என கவலையும் அடைந்தாள் பார்வதியம்மா. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,  மகளை அன்புடன் வரவேற்று அவளின் நலம், அவளின் கணவர் மற்றும் புகுந்த வீட்டு உறவினர்களின்  நலம் குறித்து விசாரித்தாள்.

அம்மாவின் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதிலாக “அங்க எல்லோரும் நல்லாத்தான் இருக்காங்க” என்றாள் அனு. பிறகு அவள் சாப்பிட்டுவிட்டு தன்னுடைய அறைக்கு உறங்கச் சென்றாள்.

பார்வதிக்குதான் உறுத்தலாக இருந்தது.  ‘ஏதோ கோவத்துலதான் இருக்கா, முகமும் வாட்டமா இருக்கு என்னவென்று தெரியவில்லையே,  விசாரிக்க வேண்டும்’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

மாலையில் மீண்டும் எழுந்து வந்தவுடன் காபி கொடுத்தாள்.  அவளிடம் “என்ன திடீரென்று வந்து இருக்க ஏதாவது விசேஷமா?” என கேட்டாள்.

“ஒரு விசேஷமும் இல்லை” என சலிப்புடன்  கூறிய அனு,  புகுந்த வீட்டில் நடந்தவைகளை எல்லாம் அம்மாவிடம் விவரித்தாள்.

அதைக்கேட்ட அனுவின் அம்மா,  “நீ செஞ்சது தப்பு, ஒரு கூட்டு குடும்பத்துல ஆளுக்கு ஒரு வேலையா எடுத்து செய்வாங்க, அவங்க உன்கிட்ட எந்த வேலையுமே கொடுக்கிறது இல்லைன்னு நீயே சொல்ற. ஒருநாள்,  அதுவும் உன் மாமியாருக்கு உடல்நலம் சரியில்லை என்று உன்னை செய்யச் சொன்னா இவ்வளவு பிரச்சினைகளை உண்டாக்கி இருக்க”  என்றாள் பார்வதி.

அதைக்கேட்ட அனு,  “போம்மா, அந்த வீடே  எனக்கு பிடிக்கல, ஒரு பிரைவசி இல்ல. எதுவா இருந்தாலும் அப்பா, அம்மாகிட்டதான்  கேட்கணுமுன்னு சொல்றார். ஒரு நாள் கூட சந்தோஷமா வெளியே போனதில்லை. நாங்க தனியா இருந்தாதான் சந்தோஷமா வாழ்க்கையை நடத்த முடியும் போலிருக்கு” என்றாள்.

“அப்படி எல்லாம் பேசாதே,  கூட்டுக் குடும்பமாக இருக்கறதில் உள்ள சந்தோஷம் தனியா போனா கிடைக்காது, அதனால தனியா குடுத்தனம் போகணுமுன்னு எல்லாம் நினைக்காதே” என்றாள் பார்வதி.

“நீ சும்மா இரும்மா, உனக்கு ஒன்னும் புரியாது” என்று  சொல்லியபடி   உள்ளே போனாள் அனு.

உடனே சம்பந்தி அம்மாவிற்கு போன் செய்த பார்வதி அவரின் உடல் நலம் பற்றி விசாரித்துவிட்டு, “அனுவுக்கு இன்னமும் அனுபவமும், முதிர்ச்சியும் வரல, அதனால அவ ஏதாவது தவறாக பேசியிருந்தால் நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றாள். 

“அதெல்லாம் ஒன்னுமில்லை அனுவை நான் என் பொண்ணாதான் பார்க்கிறேன், அவ செய்யறதையெல்லாம்  நாங்க தப்பா எடுத்துக்க மாட்டோம்,  நீங்க கவலைப்படாதீங்க” என பதிலளித்தார் லட்சுமி.

மறுநாள் அனுவின் தோழி வினையா வந்திருந்தாள். தோழிகள் இருவரும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அனு விநயாவிடம்,  தன் புகுந்த வீட்டில் உள்ளவர்கள் பற்றியும், தனக்கு உள்ள குறைகளையும் கூறினாள்.

அதற்கு பதிலளித்த வினயா, “நீ சொல்வது  சரிதான் அனு, நாம தனியா குடும்பம் நடத்தினாதான் தனிப்பட்ட முறையில் நம் விருப்பப்படி  செயல்பட முடியும். கூட்டு குடும்பம் என்றால்  எந்த ஒரு விஷயத்திற்கும் அடுத்தவர் விருப்பங்களையும், கருத்துக்களையும் கேட்க வேண்டியிருக்கும். சுயமாக  எந்த முடிவையும் எடுக்க விடமாட்டார்கள்.

எனக்கு கூட  என்  மாமனார், மாமியார் எங்ககூடத்தான் இருந்தாங்க, ஒவ்வொரு விஷயத்திலும்  அவங்க  தலையீடு இருந்தது.  நான் என்  கணவர்கிட்ட பேசி பேசி மனசை மாத்தி நாங்க  தனிவீடு பாத்துகிட்டு  வந்துவிட்டோம்.  என் மாமனார், மாமியார் அவர்கள் சொந்த வீட்டிலேயே தனியா  இருக்காங்க. அதனாலே,  நீயும் உன் கணவர்கிட்ட எப்படியாவது பேசி அவரை சம்மதிக்க வைத்து அந்த வீட்டில் இருந்து வெளியே வந்து விடு: என்று அனுவிற்கு துர்போதனை செய்து விட்டு சென்றாள்.                            

ஒரு வார காலத்திற்கு பிறகு, பார்வதி மகளுக்கு பல அறிவுரைகளை வழங்கி மீண்டும் சென்னைக்கு அனுப்பி வைத்தாள். 

மீண்டும் புகுந்த வீட்டிற்கு வந்த பிறகு  கணவரிடமும், மற்றவர்களிடமும் அனு சாதாரணமாக நடந்து கொண்டபோதிலும் அவளது மனதில் தோழி வினயாவின்  போதனைகளே ஆக்கிரமித்து இருந்தது. எப்படியாவது ரகுவின் மனதை மாற்றி தனியாக செல்ல வைக்க வேண்டும் என தீர்மானித்துக் கொண்டாள்.

மறுநாள் காலையில் அதிசயமாக சமயலறைக்குள் சென்றாள் அனு. அங்கு சமையல் செய்து கொண்டிருந்த  இளைய மருமகள் நளினியிடம், “அக்கா நான் ஏதும் உதவி  செய்யவா?” என கேட்டாள்.

அப்போதுதான் அவளை திரும்பி பார்த்த  நளினி, “என்ன  அனு, ஏதாவது வேணுமா?” என கேட்டாள்.

“ஒன்னும் வேண்டாம், உங்களுக்கு சமையலில் ஏதாவது உதவி செய்யவா?” என மீண்டும் கேட்டாள்.

நளினிக்கு, ராஜேஸ்வரி வேலை செய்ய சொன்ன அன்று நடந்தவைகள் ஞாபகம் வந்தது, அவள் அவசரமாக  அனுவிடம் “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், நீ ரெஸ்ட் எடுத்துக்கோ” என்றாள். 

“இல்ல பரவாயில்லை ஏதாவது வேலை கொடுங்க செய்யறேன்” என்றாள் அனு.

பிறகு நளினி அவளிடம், “சரி  அந்த தேங்காய் துருவல மிக்ஸியில் போட்டு அரைச்சு எடுத்துக் கொடு” என்றாள்.

அனு,   அருகே பாத்திரத்தில் வைத்திருந்த தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு அரைக்க துவங்கினாள். மிக்ஸி ஓடி கொண்டிருக்கும் போதே  மூடியை திறந்து தண்ணீர் ஊற்ற முயற்சிக்கும் போது அனுவின் நடுவிரல் மிக்ஸியின் பிளேடுகளில் பட்டு விரலை வெட்டி காயம்  ஏற்பட்டு  ரத்தம் வர ஆரம்பித்தது.

வலி தாங்காமல் அனு கதறினாள். சத்தம் கேட்டவுடன், நளினி பதறியபடி ஓடிவந்து, “அதனாலதான் நான் உன்னை வேலை செய்ய வேண்டாம் என்று சொன்னேன்” என்று சொல்லியபடி அனுவின் விரல்களை சுத்தம் செய்து முதலுதவி செய்தாள்.

சத்தம் கேட்டு அங்கு வந்த மாமியார் லட்சுமியும், மூத்த மருமகள் ராஜேஸ்வரியும் அனுவிற்கு கையில்காயம் பட்டதை அறிந்து துடித்துப் போனார்கள். ராஜேஸ்வரி  ரகுவிடம் சொல்லிவிட்டு அவளை அழைத்துக்கொண்டு  டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்று வந்தார். 

வீட்டிற்கு திரும்பியவுடன் மாமியார் லட்சுமியும், மற்றவர்களும் அனுவை ஓய்வு எடுக்கும்படி வற்புறுத்தினார்கள். ஆனால், அனுவுக்கு காயத்தினால் வலி இருந்தாலும் கூட, மனதிற்குள் சிரித்துக் கொண்டாள். ஏனென்றால்  இனிமேல் எந்த காலத்திலும் இவளை வேலை செய்ய சொல்ல மாட்டார்கள் என்று.

மீண்டும் சில நாட்கள் அமைதியாக சென்றது.   ராகவன், ரகுவிடம் “அனுவை ஒரு மாற்றத்திற்காகவும், அவள் சந்தோஷத்திற்காகவும் எங்கேயாவது வெளியூர் அழைத்து செல் “ என்றார்.

“சரிப்பா”  என்ற ரகு வார இறுதியில்  கொடைக்கானல் சென்று வர ட்ரெயினில் டிக்கட் முன்பதிவு செய்தான்.

ஆனால், அனுவிடம்கூட  சொல்லாமல் வைத்திருந்து புறப்படும் நாளன்று அவளிடம்  தெரிவித்தான். அதை கேட்ட  அனு  மிகவும் மகிழ்ச்சியாக அவனுடன் கொடைக்கானலுக்கு  புறப்பட்டு சென்றாள். இரண்டு நாட்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக கொடைக்கானலில் பல இடங்களை சுற்றிப் பார்த்தார்கள்.

இந்த சந்தோஷமான தருணத்திலேயே ரகுவிடம் பேசி அவனை எப்படியாவது தனிக்குடித்தனம் செல்வதற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டாள்  அனு. அதன்படி அன்று இரவு ரகுவிடம் நைசாக தனிக்குடித்தனம் செல்வது பற்றி பேசினாள். 

“ஏங்க,  நீங்க தினமும் ஆபீசுக்கு கஷ்டப்பட்டு வண்டியில போயிட்டு வர்றீங்க, தினமும் வீட்டுக்கு வருவதற்கும்  மிகவும் தாமதம் ஆகிறது. எனக்கும் நீங்கள் வருவதற்கு தாமதமானால்  மிகவும் கவலையாகி விடுகிறது. உங்க அண்ணன் தம்பி மூவரில் நீங்க மட்டும்தான் கஷ்டப்பட்டு வேலைக்கு போயிட்டு வர்றீங்க,   வீட்டுல மத்தவங்க எல்லாம் ஜாலியா இருக்காங்க.  வீட்ல இருக்கிறவங்க எல்லாருமே என்னை தனிமைப்படுத்தறாங்க, நெருங்கி பழக மாட்டேங்கிறாங்க, அதனால நான் ரொம்ப காயப்பட்டு உள்ளேன். பேசாம   நாம உங்க ஆபிசுக்கு அருகிலேயே ஒரு வீடு பாத்துகிட்டு   போய்விடலாம். உங்களுக்கும் ஆபிசுக்கு போயிட்டு வர வசதியாக இருக்கும், நானும் ஏதாவது ஒரு வேலைக்கு போனா பொருளாதார ரீதியாகவும்  நமக்கு  மிகவும் உதவியாக இருக்கும” என ரகுவின் முகத்தை பார்த்தப்படியே பேசி முடித்தாள்.

மனைவியின் பேச்சைக் கேட்டதும் ரகுவின் முகம் மாறியது, மிகவும் கோபமான அவன்  அனுவை பார்த்து, “உன் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்க? நாங்க அனைவரும் ஒற்றுமையாக சந்தோசமா கூட்டுக் குடும்பமா இருக்கிறத கெடுக்கணும்னு நினைச்சு இருக்கியா? உனக்கு எங்க குடும்பத்தை பற்றியோ, அப்பா, அம்மா அண்ணன்கள் பற்றியெல்லாம்   என்ன தெரியும்? நாங்க ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு பாசமும், உயிருமா  இருக்கோமுன்னு உனக்கு தெரியுமா?  இந்த அழகான குருவிக்கூட்டை கலைக்கனுமுன்னு  திட்டம் போடறியா? நான் தனியா வீடு பார்த்து போக போறேன்னு சொன்னாலே என்னோட  அப்பாவும், அம்மாவும் நெஞ்சுவலி வந்து செத்துடுவாங்க

நீ புதுசா கல்யாணம் செஞ்சுகிட்டு வந்தவள் என்பதாலும், உனக்கு இன்னமும் முதிர்ச்சி வரவில்லை என்பதாலும் இந்த முறை உன்னை மன்னிக்கிறேன். இன்னொரு முறை என்னிடம் தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று  ஏதாவது பேசினால், உன்னை உன் வீட்டிற்கு அனுப்பிவைத்து விட்டு விவாகரத்து செய்யக் கூட தயங்க மாட்டேன். இனிமே என்கிட்ட இந்த மாதிரி எல்லாம் பேச நினைக்காதே” என்று பேசி முடித்தான்.

ரகுவின் கோபத்தையும்,ஆவேசத்தையும் பார்த்து அதிர்ச்சி அடைந்த  அனு அவன்  முகத்தை பார்க்க முடியாமல், அமைதியாக திரும்பி படுத்துக் கொண்டாள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் கோபத்தில் தூங்க ஆரம்பித்த நிலையில் ரகுவின் மொபைல் ஒலித்தது. 

எடுத்து “ஹலோ” என்றான் ரகு.

எதிர்முனையில் பேசிய அண்ணன் ராஜா, “அனுவின் அம்மாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆரணியிலிருந்த அவர்களது பக்கத்து வீட்டுகாரர்கள் போன் செய்தார்கள். நானும் ராஜேஸ்வரியும் அம்மாவுடன் புறப்பட்டு செல்கின்றோம்.  நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். நான் தேவையான மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன், இருந்த போதிலும் நீங்கள் இருவரும் உடனே புறப்பட்டு வாருங்கள்” என்று கூறி போனை வைத்தார்.

ரகு அனுவிடம் விஷயத்தை கூறிய உடனே அவள் அதிர்ச்சி அடைந்து அழத் தொடங்கினாள். அவளை சமாதானம் செய்த ரகு  “பயப்படாதே அனு,  அம்மாவிற்கு ஒன்றும் ஆகாது. எங்க அண்ணன், அம்மா அண்ணி எல்லாருமே ஆரணிக்கு கிளம்பி போய்ட்டாங்க. அவங்க தேவையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துடுவாங்க. நாம் இருவரும் உடனே புறப்படுவோம்” என்று கூறினான்.

அனு அழுதுகொண்டே புறப்படுவதற்கான ஆயத்தங்களை செய்ய ஆரம்பித்தாள் . அவசர உதவிக்கு மாமியார் லட்சுமி மற்றும் அண்ணன், அண்ணி ஆகியோர் புறப்பட்டு சென்றுள்ள போதிலும் அனுவிற்கு கவலையாக இருந்தது.  அவளது மாமா மூர்த்திக்கு போன் செய்தாள்., அவரோ குடும்பத்துடன் டெல்லி வந்திருப்பதாகவும், உடனடியாக திரும்ப இயலாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆரணிக்கு சென்ற ரகுவின் அண்ணன் ராஜா, உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அனுவின்  அம்மாவை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வேலூரில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் சென்று அனுமதித்தான்.

இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பார்வதிக்கு செய்யப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் பார்வதியின் இதயத்தில் அடைப்புகள் உள்ளதாகவும்,  உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி ரூபாய் மூன்று லட்சத்தை முன் பணமாக கட்ட வேண்டும் என்றும் கூறினார்கள்.

ராஜா  அப்பாவிடம்  பேசியபோது அவர்,  “பணத்தைப் பற்றியெல்லாம்  கவலைப்படாதே கட்டிவிடு” என்று கூறினார்.  

மருத்துவமனையில் ராஜாவின் மனைவி ராஜேஸ்வரியும், லட்சுமியும் கவலையுடன் அமர்ந்திருந்தார்கள்.

ரகு மீண்டும் ராஜாவிற்கு போன் செய்து மாமியாரின் நலம் விசாரித்தான். அப்போது ராஜா அவனிடம் அனுவின் அம்மாவை வேலூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதையும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதால் அதை எப்போது செய்வது என்பது  குறித்து நாளை மருத்துவர்கள் கூறுவார்கள் என்றும் கூறினான்.  பிறகு அனுவையும், ரகுவையும் நேரடியாக வேலூர் மருத்துவமனைக்கு வந்து விடுமாறு கூறினான்.  

மறுநாள் மதியம் ஒரு மணி அளவில் ரகுவும், அனுவும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.  அம்மாவை பார்த்ததும்  அவசர சிகிச்சை பிரிவில் பார்த்ததும் கதறி அழுதாள் அனு.  அவளை மாமியார்  லட்சுமி அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினார். 

“பயப்படாத அனு, அம்மாவுக்கு ஒன்றும் ஆகாது நாங்கள் எல்லாம் எதுக்கு இருக்கோம், நாங்க பார்த்துக்குறோம்” என்றாள்.

அண்ணி ராஜேஸ்வரியும் “கவலைப்படாத அனு, அறுவை சிகிச்சை முடிந்தவுடன் அம்மா நார்மல் ஆயிடுவாங்க” என்றாள்.

மருத்துவரை சந்தித்து விட்டு வந்த ராஜாவும் ரகுவும் அனுவிடம் “நாளை காலையில் அறுவை சிகிச்சை செய்யலாம் என முடிவு செய்து உள்ளார்கள்” என்றான்.

மறுநாள் விடியற்காலையிலேயே அனுவின்  அம்மாவை அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்து சென்று விட்டார்கள்.  வெளியில் அனுவும், மற்றவர்களும் பதட்டத்துடன் அமர்ந்திருந்தார்கள்.

ஒருவழியாக அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவர் வெளியே வந்து, “அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து விட்டது,  ஆனாலும் இரண்டு நாட்கள் தீவிர  கண்காணிப்பில் வைத்த பின்பே பார்வதியம்மாவை  தனி அறைக்கு மாற்ற முடியும்” என்று கூறினார்.

அம்மாவுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது குறித்து ஒருபுறம் மகிழ்ச்சி அடைந்தாலும் அவர் நினைவு திரும்பும் வரை பதட்டமாகவே இருக்கும் என நினைத்தாள் அனு.   

மறுநாள் காலையில் ரகு, அண்ணன் ராஜாவிடம்,  “நீங்கள் அனைவரும் சென்னைக்கு புறப்பட்டு சொல்லுங்கள். நானும், அனுவும் அருகில் இருந்து பார்த்துக் கொள்கிறோம்” என்றான்.

அனுவும், மாமியார் மற்றும் அண்ணியிடம்  “நீங்க சென்னைக்குப் புறப்பட்டுச் செல்லுங்கள்,  நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றாள்.

ஆனால் ராஜாவோ “இல்லை, அப்பா அனுவின் அம்மா நன்றாக குணமாகி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் வரை இங்கேயே தங்கியிருந்து உதவி செய்ய சொல்லியிருக்கிறார்.  மேலும் மருத்துவமனைக்கும் செலுத்த வேண்டிய மொத்த கட்டணத்தையும் செலுத்த சொல்லி விட்டார்” என்றான்.

அதைக் கேட்ட அனு  கண்ணீர் விட்டாள். “லட்சக்கணக்கில் பணம் செலுத்தி உள்ளீர்களே,  இதை நாங்கள் எப்படி திருப்பி அளிக்கப் போகிறோம் என தெரியவில்லை” என்றாள்.  

அதைக் கேட்ட லட்சுமி “என்ன இப்படி எல்லாம் பேசுற? உனக்கு அம்மா என்றாலும்,  எனக்கு நீ பெண் மாதிரிதான், என் பொண்ணுக்கு  செஞ்சதா நான் நினைச்சுக்கிறேன்”  என்றாள்.

மாமியாரின் அன்பான பேச்சும், அண்ணன் அண்ணி ஆகியோரின் தனிப்பட்ட கவனிப்பும் , அவளுக்கு மிகவும் நெகிழ்ச்சியை தந்தது. அதிலும் ராஜாவும்,  அண்ணியும் தங்களது சொந்த வேலைகளை விட்டுவிட்டு தன்னோட அம்மாவிற்காக மருத்துவமனையில் தங்கி இருப்பதையும், மாமியார் லட்சுமி உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோதும் வேலூருக்கு வந்து தன்னுடைய அம்மாவை அன்புடன் கவனித்துக்  கொள்வதையும் பார்த்து அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இவ்வளவு அன்புடன் நடந்து கொள்ளும் இவர்களிடம் இருந்து நாம் தனியாக பிரிந்து செல்ல வேண்டும் என நினைத்தோமே ? என்று மிகவும் வருத்தப்பட்டாள்.

உடனே,  அவள் அங்கிருந்த அனைவரையும் பார்த்து கைகூப்பி “உங்கள் அனைவரின் அன்பையும், பாசத்தையும் உணராமல்  இது நாள் வரை நான்  நடந்து கொண்டேன்.   இந்த அன்பான குடும்பத்திலிருந்து விலகி தனியே போக வேண்டும் என்று நினைத்தேன். இப்போது  நான் இந்த கூட்டுக் குடும்பத்தின் அருமையை உணர்ந்து கொண்டேன்,  இனிமேல் உங்கள் யாரையும் விட்டு விலகிப் போக நினைக்க மாட்டேன்,  இதுநாள்வரை நான் நடந்து கொண்ட முறைக்கு நீங்க எல்லாரும் என்னை மன்னிக்க வேண்டும்” என கண்ணீருடன் கூறினாள்.

அப்போது அனுவின் மாமியார் லட்சுமியும், ராஜேஸ்வரியும் “பைத்தியம் எதுக்கு மன்னிப்பு எல்லாம் கேட்கிற,   நீ என்னைக்குமே எங்க வீட்டின் கடைக்குட்டி மற்றும்  செல்ல குட்டிதான். எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத”

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரகுவிற்கு தன் மனைவி மனம் மாறியது குறித்து மிகவும் சந்தோஷம் அடைந்தான்.

அப்போது அங்கு வந்த மருத்துவ செவிலியர்,  “பார்வதியம்மாவுக்கு நினைவு திரும்பி விட்டது, அவங்க உயிருக்கு இனிமே ஆபத்து இல்லை, நீங்க போய் பார்க்கலாம்” என்றவுடன் அனைவரும் ஆவலுடன் பார்வதியம்மாவை பார்க்க விரைந்தனர்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

செய்துதான் பாருங்களேன் (சிறுகதை) – ✍ சித்து அம்மாசி, சேலம்

ஈகை (சிறுகதை) – ✍ பீஷ்மா