in

ஈகை (சிறுகதை) – ✍ பீஷ்மா

நவம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

வி தன் பாக்கெட்டைத் திரும்பத் திரும்பத் தொட்டுப் பார்த்துக் கொண்டே சென்றான். அவனின் உழைப்பில் வீட்டு செலவுகள் போக சிக்கனமாயிருந்து மிச்சம் பிடித்து வைத்த காசிருந்தது.

அவனது நெடுநாள் ஆசை இன்று நிறைவேறும் என்னும் நினைப்பே அவனுக்குள் ஒரு மகிழ்ச்சியைக் கிளர்ந்து எழச் செய்தது.

சிறு வயது முதலே அவனுக்கு இந்த வடையின் மீது ஒரு அலாதி ஈர்ப்பு. அமாவாசை, தீபாவளிக்குக் கூட அவன் வீட்டில் வடை செய்ய மாட்டார்கள். யாரேனும் கொண்டு வந்து கொடுத்தால் அதுவும் ஆறேழு பங்கு போய் அவனுக்கு ஒரு பிட் வந்தாலே பெரிய விஷயம்.

அவன் வேலை செய்யும் வீட்டில் அவ்வப்போது வடை தட்டினாலும் அவனுக்கு எப்போதும் போல் உள்ள சாப்பாடுதான். அந்த வடை அவன் கண்ணில் கூட படாது. அவன் சம்பாதிக்கும் சிறு வருமானத்தில் அவன் அம்மா, ஒரு தம்பி, ஒரு தங்கை அனைவரும் ஜீவித்தாக வேண்டும்.

தந்தையை இழந்து தவிக்கும் குடும்பத்தில் தலை மகனான அவன்தான் குடும்பத் தலைவன். அவன் குடும்ப நிலையறிந்து அவனைத் தன் கடை வேலை மாத்திரமல்லாது வீட்டு வேலைகளுக்கும் உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார் அவன் முதலாளி.  முதலாளியம்மா அவ்வப்போது தரும் சில்லறைகளும் வீட்டுச் செலவுகளுக்கு சரியாகப் போய் விடும்.

அவன் தாய் உடல் ஆரோக்கியமில்லாமல் மூன்று குழந்தைகளைப் பெற்று இன்னமும் பலஹீனமாய்ப் போனதில் அவளால் எந்த வேலைகளும் செய்ய முடியாமல் தன் வாழ்க்கையை நினைத்து எப்போதும் தன்னிரக்கத்தில் அழுது அழுது மூக்கைச் சிந்திக் கொண்டே யிருப்பதைப் பார்த்து ரவிக்கும் பெரிய ஆற்றாமையாய் இருக்கும்.

தன் தம்பி, தங்கையை விட்டு விட்டு தான் மட்டும் வடை சாப்பிடச் செல்வது குறித்து ஒரு சிறு குற்றஉணர்ச்சி ஏற்பட்ட அடுத்த நொடி, அதன் மண்டையில் தட்டி அடக்கியது வடை தின்னும் நெடுநாள் ஆசை.

இதோ வடை சுடும் வாசனை, நெருங்கி விட்டான் கடையை. கண்களில் ஆசை மின்னல் போல் ஒளிர குதூகலத்துடன் எண்ணெயில் பொறியும் வடைகளை பார்த்துக் கொண்டே பாக்கெட்டில் கை விட்டவன் பதறிப் போனான்.

சற்று முன் வரை பாக்கெட்டில் இருந்த பணம் இப்போது இல்லை. அவனுக்கு அழுகை வந்தது. திரும்பத் தான் வந்த வழியில் தேடிப் பார்த்துக் கொண்டே வந்தான். கிடைக்கவில்லை. மனமெங்கும் ஒரே பாரமானது. அன்று முழுவதும் வேதனையிலும், மன உளைச்சலிலும் துடித்துக் கொண்டே வேலை செய்ய முடியாமல் செய்து முதலாளியிடமும், முதலாளியம்மாவிடமும் திட்டு வாங்கிக் கொண்டே நொந்து போனான்.

கேட்டவர்கள் யாருக்கும் தன் வடை ஆசையையும், தான் இழந்த காசையும் சொல்ல முடியாமல் மௌனம் காத்தான். மீண்டும் அந்த உளைச்சலிலிருந்து மீண்டு வந்த ரவி, இந்த முறை கூடுதல் விழிப்புணர்வோடு பாக்கெட்டை இறுகப் பற்றி வெற்றிகரமாய் வடைக் கடையில் வடை சொல்லப் போகும் நேரம், “அண்ணா, பசிக்குதுண்ணா” ஒரு சிறுமி அவன் தங்கை வயதில் அவனிடம் பரிதாபமாய்ச் சொல்லும்போது அவன் மனம் வலித்தது.

அந்தக் குழந்தையை அழைத்துக் கொண்டு ஹோட்டலில் அவளுக்குத் தேவையான சாப்பாடு வாங்கிக் கொடுத்தான். அதற்கே இருபது ரூபாய் குறைந்தது.

அந்த ஹோட்டல் காசாளர், “இந்த வயதில் நீ இந்தப் பொண்ணுக்கு உதவி பண்ணும் போது என்னோட பங்கா அந்த இருபது ரூபாய் இருக்கட்டும் தம்பி”

சென்ற முறை வடை கிடைக்காத ஆற்றாமையும், அழுகையும், இந்த முறை கொஞ்சமும் இல்லாமல், வடை கிடைக்காத போதும் மனம் முழுவதும் ஒரு மகிழ்ச்சியும் இனம் புரியாத திருப்தியும் பரவ குஷியுடன் ரவி நடப்பதை அதே மகிழ்ச்சியுடன் அந்த ஹோட்டல் காசாளர் பார்த்தார்.

“அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்புஎன்னும் நாடாச் சிறப்பு”

அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.

“புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துறுப்பு அன்பி லவர்க்கு”

உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும். மனமகிழ்ச்சிக்கும், மனநிறைவுக்கும் உண்டான செயல்பாடு என்னவென்று தனது சிறுவயதிலேயே கண்டு கொண்டான் ரவி.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. பிறருக்கு கொடுத்து உண்ணுவதும் பிறருக்கு உணவு வழங்குவதில் இருக்கும் திருப்தி வேறெதிலும் நமக்கு கிடைக்காது.
    கதை மிகவும் அருமை எழுத்தாளர் விஷ்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்👌👏👏👏

தனிவலை (சிறுகதை) – ✍ கோபாலன் நாகநாதன், சென்னை

அவையத்து முந்தி (சிறுகதை) – ✍ பீஷ்மா