டிசம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
கீழ் வானம் மெல்லச் சிவந்து விழிக்க ஆரம்பித்திருந்தது. தெருவில் மக்கள் நடமாட்டம், காய்கறி விற்போர் கூவல், பால் பேப்பர் போடுபவர்களின் சலம்பல்கள். முழிப்பு வந்தும் எழுந்திருக்க மனமில்லாமல், மனச்சோர்வுடனும், அதனால் ஏற்பட்ட உடல் சோர்வுடனும் படுக்கையில் புரண்டு புரண்டு படுக்க முடியாமல் படுத்துத் தவித்துக் கொண்டிருந்தான் சோமு.
அன்றுதான் கடைசி நாள் மகனுக்கு CA Fees கட்டுவதற்கு. ஏற்கெனவே இரண்டு முறை கட்டி கம்மி மார்க்கில் கோட்டை விட்டு விட்டான் மகன் முத்து. அவன் CA முடித்து ஆடிட்டர் ஆனால் தனது குடும்ப பாரத்தில் பெருமளவு தான் சுமப்பது குறையும் என்பது சோமுவின் நியாயமான ஆசை.
தான் பார்க்கும் ஜவுளிக்கடை வேலையில் அவன் மகன் முத்துவை ஆடிட்டருக்குப் படிக்க வைப்பதையே அவன் கூட வேலை செய்பவர்களிலிருந்து சொந்தபந்தங்கள் வரை அவனது நியாயமான ஆசையை வெகுவாய் விமர்சித்து, “உனக்கு இது தேவையா?” என்று அவனை அவமானப்படுத்தி மகிழ்ந்தார்கள்.
ஆனால் சவாலாய் எடுத்து படிக்க வேண்டிய முத்து, கொஞ்சம் கூட அந்தக் கவலையில்லாமல் ஸ்பெஷல் கிளாஸ், ஸ்பெஷல் ஸ்பெஷல் கிளாஸ் என்று சோமுவை மூச்சு முட்ட வைத்து இரண்டு முறை Inter பரிஷையையே முடிக்காமல் சோம்பித் திரிந்தான்.
Inter முடித்து articleship முடித்து சீனியர் ஆடிட்டரிடம் நல்ல பெயர் எடுத்துப் பின் CA பைனல்… எவ்வளவு பெரிய Process? நினைத்துப் பார்க்கவே சோமுவுக்கும், அவன் மனைவி ராஜிக்கும் அவ்வப்போது தலை சுற்றி மயக்கம் வரும், இருந்தாலும் ஒரே மகன்.
இன்று கஷ்டப்பட்டு படிக்க வைத்து விட்டால் அவன் வாழ்க்கை நன்றாய் அமைந்து தங்கள் கடைசிக் காலம் கொஞ்சம் சுகமாய்க் கழியும் என்னும் நம்பிக்கை, அவர்களை நெட்டித் தள்ளி முத்துவின் படிப்புக்கு அகலக்கால் வைத்து செலவு செய்ய துணிவைத் தந்து, ஒவ்வொரு முறை Fees கட்டும்போதும் CA கிளாஸ் attend பண்ண பணம் கட்டும் போதும் திணறித் திணறியேனும் கட்ட வைத்தது.
CA பரிட்ஷைக்கு பணம் கட்ட வேண்டும் என்று ஜவுளிக்கடை ஓனரிடம் அட்வான்ஸ் கேட்டால் வழக்கம் போல், “உன் தகுதி தெரிந்து செலவு செய்” என்று சொல்லி அட்வைஸ் மழை பொழிந்து லேசில் கொடுக்காமல், கொடுக்க மனமில்லாமல் கொடுத்ததால் தான் தன் மகன் இருமுறையும் பரிக்க்ஷையில் கோட்டை விட்டு விட்டானோ என்னும் கிலேசம் மனதில் உறுத்தியது.
இந்த முறை வேறு எதாவது காரணம் சொல்லி அட்வான்ஸ் வாங்க வேண்டும் என்று நினைத்து வந்தவன், என்ன காரணம் சொல்லலாமென்று யோசித்து யோசித்து, ஒரு காரணமும் தோன்றாமல் போகவே, தலையைச் சொரிந்து கொண்டு நின்றான்.
“என்னடே மறுபடியும் பரிக்ஷைக்கு பணம் கட்டணுமா? வாயத் தொறந்து சொல்லித் தொலையேன்” என ஆரம்பித்து, அடுத்தொரு கஸ்டமர் வந்து நிற்கும் வரை ஒரே அட்வைஸ் மழைதான்.
கடைசியில், “நான் என்ன சொல்லிக் கத்தினாலும் ஒரு பிரயோஜனமும் கிடையாது. நீ இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுட்டு அடுத்த வாட்டியும் பரிக்ஷைன்னு பணம் கேட்டுட்டு வந்து நிக்கத்தான் போறே. நானும் இந்த மாதிரி ஒனக்கு அட்வைஸ் சொல்லிட்டு அட்வான்ஸ் கொடுக்கத்தான் போறேன். இந்தா ஒழிஞ்சு போ”
பணம் கைக்குக் கிடைத்ததும், முதலாளிக்கு ஒரு கூழைக் கும்பிடு போட்டு பணம் கட்டி விட்டு வர பர்மிஷனும் பெற்று ஓட்டமாய் ஓடினான் ஆயக்கர் பவன் பக்கத்தில் இருக்கும் CA Instituteக்கு.
ஏற்கெனவே அங்கு வந்து காத்துக் கிடந்த முத்து, “என்னப்பா.. எனக்கு ஒரு டூ வீலர் வாங்கிக் கொடுத்திருந்தால், நானே உன் கடைக்கு வந்து உன்னை பிக்கப் பண்ணியிருப்பேன்ல. இந்த மாதிரி வேர்க்க விறு விறுக்க ஓடி வர வேண்டாம்ல”
மகனை ஏற இறங்க பார்த்த சோமு ஒரு பெரிய பெரு மூச்சு விட்டான்.
“அதுக்குத் தான்ல உன்னை ஒழுங்காப் படிச்சு பாஸ் பண்ணு, முத மாசம் வர்ற சம்பளத்ல ஒரு செகண்ட் ஹாண்ட் வண்டி வாங்கித்தரேன்னு சொல்லிட்டேன்ல. சும்மா சும்மா என்னவோ உங்கப்பன் காச வச்சுக்கிட்டு என்ன செய்யறதுன்னு தெரியாம தவிக்கிறா மாதிரி கேள்வி கேக்கறதப் பாரு”
“ம்ம்க்கும்.., நான் சம்பாதிச்சு எனக்கு வாங்கிக்கத் தெரியாதா?” முனகல் குரலில் கூறினாலும் ஸ்பஷ்டமாய்க் காதில் விழுந்ததும்.
முதன் முறையாய் மகனின் மீது ஒரு அவ நம்பிக்கை ஏற்பட்டது சோமுவுக்கு.
‘ம்.., இவன் இப்பவே இவ்ளோ சுயநலமாய் யோசிக்கிறானே.. இவனா குடும்ப நிலையை உயர்த்துவான்’ மனதில் ஒரு வலியுடன் வேதனை வந்தது.
சற்று மனச் சோர்வுடன் இன்ஸ்டிடியூட் உள்ளே சென்று Fees கட்டி முடித்து மகனை ஏக்கமாய்ப் பார்த்து, “இந்த முறையாவது பாஸ் பண்ணி ஆர்ட்டிகில்ஷிப் சேந்துடுவியா? அதுக்கு அப்புறம் பைனல் எழுதி பாஸ் பண்ணனும், உங்கூட சேந்து எழுதினவங்க இப்ப articleship பண்ண அடுத்த லெவல் போயிட்டாங்க. அவங்க கஷ்டப்படாம fees கட்ட முடிஞ்சவங்க, நாம கஷ்டப்பட்டு fees கட்டறவங்கப்பா. ஆனா நீ இன்னமும் ஆரம்ப இடத்திலயே இருக்கே, படிச்சு பாஸ் பண்ணிடு தம்பி”
அப்பாவின் கெஞ்சும் குரல் முத்துவைக் கொஞ்சம் அசைத்தது.
“கண்டிப்பா பாஸ் பண்ணிடுவேன்ம்பா”
வலுக்கட்டாயமாய் வரவழைத்துக் கொண்ட நம்பிக்கையில் மகனை அழைத்துக் கொண்டு தளர்வாய் ஜவுளிக்கடை நோக்கி நடந்தான் சோமு.
“அப்பா, நான் இப்படியே என் பிரண்ட் வீட்டுக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்துடறேன்ம்ப்பா, கொஞ்சம் புக் ரெபர் பண்ண வேண்டியிருக்கு”
தலையசைத்து தளர் நடை போட்டவன், என்றுமில்லாத மனச் சோர்வு இன்று தன்னை ஆட்டிப் படைக்கும் காரணம் அறியாது, தலை வலிக்கும் ஆளானான்.
ஜவுளிக்கடை சென்று தயங்கி நின்றவனைப் பார்த்த முதலாளி, “என்னப்பா உடம்பு சரியில்லையா? Fees கட்டிட்ட இல்ல?” கரிசனமான அவர் கேள்வியில் கொஞ்சம் ஆறுதலடைந்தவன்
“ஒண்ணுமில்ல முதலாளி, கொஞ்சம் லேசா தலையை வலிக்குது. தான் ஒரு டீ குடிச்சுட்டு வந்துட்டா சரியாப் போயிடும் முதலாளி. Fees கட்டிட்டு வந்துட்டேன்”
“சரி.. சரி.. போய் டீ குடிச்சுட்டு நாலாவது ராக்குல புதுசா வந்த சூரித்தார் மெட்டீரியல்ஸ் ரேட் ஸ்டிக்கர் ஒட்டி அடுக்கிடு”
“சரி முதலாளி”
நண்பன் வீட்டுக்கு புக் refer பண்ணுவதாகச் சொல்லிச் சென்ற முத்து, நேராய் சத்யம் தியேட்டர் சென்றான். அங்கு அவனுக்காக அவனது நண்பர்கள் டிக்கெட்டுடன் காத்துக் கொண்டிருந்தனர்.
அப்பாவின் கவலைகள் கொஞ்சமும் தன்னைப் பாதிக்காமல் தன் போக்குக்குத் தானுண்டு, தன் சினிமா உண்டு என்று கையில் சிகெரட்டுடன் பொழுதைக் கழிக்கும் முத்து இன்னமும் தன் குடும்பக் கவலைகள் எது குறித்தும் எந்த விதக் கவலைகளுமில்லாமல் இரண்டு முறை தன் CA Inter அட்டெம்ப்ட் Failure ஆகியும், மூன்றாவது முறையும் fail ஆனால் பரவாயில்லை. நமக்கென்ன என்ற விட்டேத்தி மனப்பான்மையுடன் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் முத்து இரவு வெகு நேரம் கழித்துத் தான் வீட்டுக்குத் திரும்பினான்.
அவன் வீடு திரும்பும் வரை சோமுவும், ராஜியும் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் தனக்காகக் காத்துக் கொண்டிருப்பது அவனுக்குக் கொஞ்சம் உறுத்தியது. மௌனமாய் உள்ளே நுழைந்து கை கால் கழுவி சாப்பிட உட்கார்ந்தான்.
அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமையாய் காத்திருந்த சோமு, “கொஞ்சம் உட்கார் முத்து.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”
கொஞ்சம் பயத்துடன் அருகில் வந்து அமர்ந்த முத்து, “ம்.. என்னப்பா?” என்றான் ஈனஸ்வரத்தில்.
அவனையே உற்று நோக்கிய சோமு, “முத்து… இப்ப நான் திடீர்னு செத்துப்போயிட்டா நீயும் உங்க அம்மாவும் என்னப்பா பண்ணுவீங்க?”
இந்தக் கேள்வியில் முத்து மட்டுமல்ல கேட்டுக் கொண்டிருந்த ராஜியும் அதிர்ந்து போனாள். “என்னங்க.. இப்படியெல்லாம் பேசறீங்க?”
“இது ஒரு நாள் நடக்கத் தானே போறது.. அந்த சிச்சுவேஷனை நீங்க சமாளிச்சுத் தானே ஆகணும். ஒரே பையன்னு நாம ரொம்ப செல்லம் கொடுத்து வீட்டுக் கஷ்டம் தெரியாம புரியாம நம்ம பையன வளத்துட்டோம். அவன் வளந்த முறை அவன் என்னப் போல ஜவுளிக் கடைலல்லாம் போய் வேலை செய்ய முடியாது. வேற எந்தத் தகுதியும் அவன் இன்னும் வளத்துக்கலை. நான் இல்லாம என்னோட வருமானம் இல்லாம நீங்க ரெண்டு பேரும் இந்த உலகத்தை எப்படி எதிர் கொள்வீங்கன்னு எனக்குத் தெரியணும்”
ராஜி அழவே ஆரம்பித்து விட்டாள்.
“என்னங்க உடம்பு எதாவது படுத்துதா? இப்படியெல்லாம் நீங்க பேச மாட்டீங்களே. உங்களுக்கு முன்னாடி நான் போயிடுவேங்க, என்ன விட்டுட்டு நீங்க போக மாட்டீங்க” விசும்பலுடன் அன்னை அழுவதைக் கண்ட முத்து நடுங்கித்தான் போனான்.
அப்பா சொன்ன விஷயத்தின் தீவிரம் அவன் மண்டையில் சொரேர் என்று அடித்தது. நாளையே அப்பா இல்லையென்றால் நம் நிலைமை என்னவாகும்? இதுவரை எட்டிப் பார்க்காத பயமும், கவலையும் அவனை ஆடிப் போகச் செய்தது.
அப்போதுதான் தன்னால் எந்த ஒரு வேலைக்கும் போகும் அளவுக்கு அனுபவமோ மனபலமோ தான் இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை என்ற பட்டறிவு முகத்தில் அறைந்தார்போல் உணர்ந்தான்.
“ஏன்பா.. இப்படி பயமுறுத்தறீங்க? நான் என்ன செய்ய முடியும்?” உண்மையிலேயே பயம் உறுத்தக் கேட்டான்.
“முத்து… முதல்ல ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோ. இந்த வயசுல மனச அலை பாய விட்டு எதிர்காலத்தைத் தொலைச்சிட்டா ரொம்பக் கஷ்டப்படணும்பா. இப்ப கொஞ்சம் கவனம் எடுத்து எதிர் காலத்தைத் தீர்மானிச்சுட்டா, பின்னாடி நாங்க இல்லேன்னாலும் உன் வாழ்க்கை அமோகமாயிருக்கும்பா. நாங்க ஒரு பைத்தியக்கார அப்பா, அம்மா.. ஒரே புள்ள.. நம்ம கடைசி காலத்தில நம்மை நல்லா வச்சுப்பான்னு பேராசைப்பட்டுட்டோம். ஆனா, நீ உன்னைக் காப்பாத்திக்கவே ஒரு முயற்சியும் எடுக்காம இருக்கறது எங்களுக்கு ஒரு பயத்தைத் தருதுப்பா.
என்கூட வேலை செய்றவங்கள்லேந்து நம்ம சொந்தக் காரங்க வரைக்கும் என்ன எவ்ளோ கேலி, கிண்டல் பன்றாங்க தெரியுமாப்பா? ஒரு ஜவுளிக்கடை வேலைக்காரனுக்கு பையன ஆடிட்டர் ஆக்கணும்னு ரொம்ப பேராசை. அப்படி, இப்படின்னு என் காது படவே எப்படியெல்லாம் பேசறாங்க தெரியுமா? ஒவ்வொரு வாட்டி உன் பீஸ் கட்டறதுக்கு என் முதலாளிகிட்ட எவ்ளோ பாட்டும், கிண்டலும்… உனக்குத் தெரியாது அந்த நேர என்னோட அவஸ்தையான அவமான உணர்ச்சி முத்து” அடக்க மாட்டாமல் கண்களில் கண்ணீர் கசிந்து வந்தது சோமுவுக்கு.
நிஜமான பதற்றத்தில் அவன் கண்ணீரைத் துடைத்த முத்து, “அப்பா, என்ன மன்னிச்சிடுங்க. நம்ம நிலைமை தெரியாம திமிர்த்தனமா நான் இத்தனை நாள் இருந்துட்டேன். இப்ப உணந்துட்டேன், இனிமே என்னோட படிப்பு மட்டும் தான் எனக்கு லட்சியம். கவலைப்படாதீங்கப்பா, உங்க ரெண்டு பேரையும் நல்ல படியாக் காப்பாத்த வேண்டிய என் கடமைய நான் உணந்துட்டேன். இனிமே உங்களுக்கு என்னப் பத்தின எந்தக் கவலையும் நான் கொடுக்கமாட்டேன்”
நிஜமான பொறுப்புணர்ச்சியுடன் முத்து சொன்னது சோமுவுக்கு நிம்மதியையும், மன சந்தோஷத்தையும் ஒரு சேரத் தந்தது.
“தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும் “
பிள்ளைகளைத் தம் செல்வம் என்று கூறும் போது, அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.
“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்”
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
(முற்றும்)
இதுவரை உழைப்பின் அருமை புரியாமல் தெரிந்தவனுக்கு இப்பொழுது அதன் மதிப்பு தெரிந்து விட்டது அவன் கையில் வைத்திருப்பது வைரம் அவன் தந்தை ஒரு வைரம் என்று புரிந்து கொண்டான் அதை வைத்துக்கொண்டு அவன் வாழ்வில் முன்னேற போகிறான் அவன் படிப்பின் உதவியோடு மிகவும் அற்புதமான கதை