in

ஒரு பிரசுரமும் சில பிரசவங்களும் (சிறுகதை) – ✍ முகில் தினகரன், கோவை

ஒரு பிரசுரமும் சில பிரசவங்களும் (சிறுகதை)

டிசம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மணி ஏழரை ஆகியும் படுக்கையை விட்டு எழாமல் சோம்பல் முறித்துக் கொண்டே மெத்தையில் கிடந்தாள் மைதிலி.

அவள் கணவன் விசுவநாதன் எப்போதும் போல் அதிகாலையிலேயே எழுந்து வாக்கிங் போயிருந்தான். படுக்கைக்குப் பக்கத்தில் டீப்பாயின் மீதிருந்த மொபைல் ஒலிக்க, “ச்சை” என்று சலித்துக் கொண்டே எழுந்து எடுத்தாள்.

“ஹலோ நான் தான்” மறுமுனையில் அவள் கணவன்.

“என்னங்க …. எங்க இருக்கீங்க?”

“ரேஸ் கோர்ஸிலிருந்து பேசறேன்” அவன் குரலில் ஒரு சந்தோஷம் தெரிய

“என்ன விஷயம்?” ஆர்வமாய்க் கேட்டாள்.

“முதல்ல என்னோட வாழ்த்துக்களை பிடியுங்கள் எழுத்தாளரே!…” என்றான் விசுவநாதன் சற்றுப் பெரிய குரலில்.

“ஆஹா…. என்ன திடீர்னு வாழ்த்து மழை பொழியறீங்க?”

“இப்பத்தான் பார்த்தேன் இந்த வார  ‘நிலா வீதி’ இதழில் உன்னோட சிறுகதை வந்திருக்கு!”

“வாட் நெஜமாவா?” நம்ப முடியாமல் கேட்டாள்.

ஏனென்றால் அந்த ”நிலா வீதி” வார இதழில் கதை பிரசுரம் ஆவதென்பது சாதாரண விஷயமல்ல.

“ஏன் இப்படிக் கேட்கிற? உன்னாலேயே நம்ப முடியவில்லையா?” சிரித்தபடி விசுவநாதன் கேட்க

“அது வந்து… சந்தோஷத்தில் எனக்கு வார்த்தைகளே வரமாட்டேங்குதுங்க” திக்கித் திணறினாள்.

“சரி சரி சந்தோஷத்துல ஹார்ட் அட்டாக் வந்து செத்துடாதே!… பத்தே நிமிஷத்துல நான் வந்துடறேன்”

“என்னங்க வரும் போது நாலஞ்சு இதழ் வாங்கிட்டு வந்துடுங்க” கொஞ்சலாய்க் கெஞ்சினாள்.

“எதுக்கு விற்பனை செய்ய வா?” கிண்டலடித்தான்.

செல்லமாய் சிணுங்கியவள், “நம்ம கீழ் போர்ஷன் குடித்தனக்காரர்கள் கிட்டல்லாம் காட்டலாம்” என்றாள்.

“ஓகே!.. ஓகே!… வாங்கிட்டு வர்றேன்”

மொபைலை ஆஃப் செய்த மைதிலிக்கு சோம்பல் எல்லாம் பறந்து போய் புத்துணர்ச்சி வந்திருந்தது.  மீண்டும் மொபைல் ஒலிக்க எடுத்தாள். அவள் சினேகிதி காவேரி இணைப்பில் வந்தாள்.

“ஏய் மைதிலி இப்பத்தான் பார்த்தேன். கங்கிராஜுலேஷன்!…”

“கதையைப் படிச்சிட்டியா?… எப்படி இருக்கு?” கெத்தாய்க் கேட்டாள் மைதிலி.

“இல்லை!… இனிமேல்தான் படிக்க போறேன்” என்றாள் எதிர்முனையில் காவேரி.

“சரி சரி சீக்கிரம் படிச்சுட்டு கூப்பிட்டு கருத்துச் சொல்லு!… ஏன்னா வாசகர்களுடன் விமர்சனங்கள் தானே ஒரு எழுத்தாளருக்கு ஏணிப்படிகள்?” கர்வம் தொணிக்கச் சொன்னாள்.

“ஓ.கே படிச்சிட்டு கூப்பிடுறேன்” இணைப்பிலிருந்து அந்தக் காவேரி வெளியேற, கீழே ஸ்கூட்டர் வந்து நிற்கும் சப்தம் கேட்டது.

அடுத்த ஐந்தாவது நிமிடம்  “தடதட”வென படிகளில் தாவி ஏறி வந்த விஸ்வநாதனின் கையில் ஐந்து  “நிலா வீதி” இதழ்கள்.

ஆவலுடன் சென்று அவன் கைகளிலிருந்து அதைப் பறித்து, “பர பர”வென்று தேடினாள்.

“தேடாதே!… கடைசியிலிருந்து நாலாவது பக்கம்”

சட்டென்று அங்கு சென்றாள்.  “தேய்பிறை உள்ளங்கள்”என்ற கதையின் தலைப்பை பெரிதாய் போட்டு, அதன் கீழே “மைதிலி விஸ்வநாதன்” என்று சிறியதாய்ப் போடப்பட்டிருக்க, “சரியான கஞ்சனா இருப்பானுங்க போலிருக்கு!…. எழுதியவர் பெயரை இன்னும் கொஞ்சம் பெருசா போட்டா என்ன கொறைஞ்சு போகுதாம் இவனுகளுக்கு?”

சிரிப்புதான் வந்தது விஸ்வநாதனுக்கு.

“மள மள”வென்று அவசரமாய்த் தன் கதையை முழுவதுமாக வாசித்து முடித்த மைதிலி, ”பரவாயில்லைங்க, கொஞ்சம் கூட எடிட் பண்ண அப்படியே போட்டிருக்கான்”  பெருமையாய் சொன்னாள்

“ஆஹா அதுவே சிறுகதை, அதையெல்லாம் எடிட் பண்ணினா துணுக்கு ஆயிடும்டி!” சொல்லி விட்டு சத்தம் சத்தம் போட்டு சிரித்த கணவனை முறைத்துக் கொண்டே நகர்ந்தாள் மைதிலி.

“ஏய் எங்கே போறே?” என்று அவள் முதுகைப் பார்த்துக் கேட்டான்.

“கீழ் போர்ஷன்காரர்களுக்கு கொண்டு போய் காண்பித்து விட்டு ரெண்டு மூணு புத்தகத்தைக் கொடுத்துட்டு வர்றேன்” சொல்லி விட்டு ஓட்டமாய் ஓடினாள்.

ஆனால், உற்சாக்கமாய்ப் போனவள், போன வேகத்திலேயே திரும்பி வந்தாள். முகம் தொங்கிப் போய் இருக்க, கைகளில் அத்தனை புத்தகங்களும் அப்படியே இருந்தன.

“ஏண்டி எல்லாத்தையும் திருப்பிக் கொண்டு வந்திட்டே?”

“அவளுக கிடக்கிறாளுக எல்லாருக்கும் பெரிய கலெக்டர் பொண்டாட்டிகன்னு நினைப்பு” முகத்தை அஷ்ட கோணலாய் வைத்துக் கொண்டு சொன்னாள்.

“ஏய் மைதிலி என்னாச்சு?… அதை சொல்லு முதல்ல”

“அவளுகளுக்கெல்லாம் படிக்க நேரம் இல்லையாம்!… ரொம்ப பிசியா இருக்காளுகளாம்!… நேரம் கிடைக்கிற போது அவளுகளே வந்து கேட்டு வாங்கிட்டுப் போய் படிக்கறாளுகளாம்!… லொள்ளு பிடிச்ச கழுதைகள்”

“அதுல உன் கதை வந்திருக்குன்னு சொன்னியா?”

“சொல்லாமல் இருப்பேனா?…  ஒருத்தி பாக்கி இல்லாம எல்லார்கிட்டயும் காட்டிச் சொன்னேனே?… அப்படியும் ஒருத்தி கூட வாங்கிக்கலை. சொல்லி வெச்ச மாதிரி எல்லோரும் ஒரே மாதிரி  ‘நேரம் இல்லே’ன்னு சொல்லிட்டாளுக!… பொறாமை பிடிச்சவளுக” அவள் சொல்லிக் கொண்டே போக, விசுவநாதன் மனதிற்குள் ஏதோ நெருடியது.

“சம்திங் ராங்!… எல்லோரும் ஒரே மாதிரி நேரமில்லை என்று சொல்லி இருக்காங்கன்னா அதுல ஏதோ விஷயம் இருக்கும்!….யெஸ். அதைக் கண்டுபிடிக்கணும்!”

மறுநாள் காலை, வாக்கிங் போன இடத்தில் கீழ் போர்ஷன் ரவியை சந்தித்த விஸ்வநாதன், அவனுடன் வலியச் சென்று பேச்சு கொடுத்தான்.

“ஹலோ..மிஸ்டர் ரவி!… உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? என் மனைவி எழுதிய சிறுகதை  “நிலா வீதி” பத்திரிக்கையில் பிரசுரமாகியிருக்கு!…கேள்விப்பட்டிருப்பீர்களே!”

“ம் தெரியும் தெரியும்!… என் மனைவி சொன்னா”

தொடர்ந்து வெகு நாசூக்காக அந்த ரவியோடு உரையாடி ரவியின் வாயிலிருந்து ஒட்டு மொத்த  “நேரமில்லை”க்கான காரணத்தை தெரிந்து கொண்ட விஸ்வநாதன், “ஓகே மிஸ்டர் ரவி, கிளம்பலாமா” எனச் சொல்லி “படக்”கென்று உரையாடலைக் கத்தரித்துக் கொண்டு விலகினான்.

வீட்டை அடைந்ததும் முதல் வேலையாக மைதிலியை அழைத்து சோபாவில் தன் அருகே அமரச் சொன்ன விசுவநாதன் நிதானமாகக் கேட்டான்.

“மூணு மாசத்துக்கு முன்னாடி கீழ் போர்ஷன் ரவியோட மனைவிக்கு குழந்தை பிறந்ததே நீ போய் பார்த்தியா?”

 உதட்டைப் பிதுக்கினாள் மைதிலி.

“ஏன்?…ஒரு நடை போய்.. தாயையும் சேயையும் பார்த்து நலம் விசாரிச்சுட்டு வந்திருக்கலாமே?”

“எனக்கு அதுக்கெல்லாம் எங்கீங்க நேரம்?”

“ஓகே, அதை விடு!…. அதுக்கப்புறம் ஆடிட்டர் சம்சாரத்துக்கு குழந்தை பிறந்ததாம், அது நடந்து சரியா ஒரே மாசத்துல வேணுகோபால் சம்சாரத்துக்கு குழந்தை பிறந்ததாம்! அதுக்கெல்லாம் கூட நீ போகலையா?”

“அய்யய்ய எனக்குத்தான் நேரமேயில்லையே?…எப்படிப் போவேன்?” எரிச்சலாய் சொன்னாள் மைதிலி.

“சரி, முந்தாநாள் உபயகாரர் வீட்ல அவரோட மூத்த மகளுக்கு பிரசவம் ஆச்சா?…. என்ன ஏது?ன்னு போய் விசாரிச்சியா?”

தலையை இடம் வலமாய் ஆட்டினாள்.

“ஏண்டி நீ மட்டும்  “நேரமில்லை டைம் இல்லை”ன்னு சொல்லி அவங்க பிரசவிச்சப்பவெல்லாம் போய் குழந்தையை பார்க்க மாட்டே… ஆனா அவங்க மட்டும் நீ பிரசவிச்ச உன்னோட கதையை படிக்கணும்!… படிச்சிட்டு கருத்து வேற சொல்லணும்!… அப்படித்தானே?… என்னடி இது நியாயம்?”

“அடப் போங்க!… அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?” சமாளிக்க பார்த்தாள் மைதிலி.

“சம்மந்தம் இருக்குடி!… ஒவ்வொரு பிரசுரமும் ஒரு பிரசவம் மாதிரிதான்!… அதே மாதிரி ஒவ்வொரு பிரசவமும் ஒரு பிரசுரம் மாதிரிதான்!… நீ கதையை பிரசுரிக்கிறாய், அவங்க குழந்தையைப் பிரசுரிக்கிறார்கள்!… அவங்க பிரசுரத்தை நீ போய்ப் பார்த்தால்தானே.. உன்னோட பிரசுரத்தை அவங்க பார்ப்பாங்க?… நீ  “நேரம் இல்லை”ன்னு சொன்னா அவங்களும் திருப்பி அதையே தான் சொல்லுவாங்க!…இட்ஸ் கொய்ட் நேச்சுரல்!” சொல்லி விட்டு விஸ்வநாதன் மனைவியின் முகத்தையே கூர்ந்து பார்க்க,

அவள் எங்கோ பார்த்தபடி யோசனையில் மூழ்கி இருந்தாள்.  அவள் தன் தவறை உணர ஆரம்பித்திருந்தது போல் அவள் முகபாவம் மாறிக் கொண்டே போக, “அப்பாடா உணர ஆரம்பிச்சிட்டா இனி திருந்திடுவா” என்று எண்ணியபடியே நகர்ந்து சென்ற விஸ்வநாதனுக்கு தெரியாது, அவள் கிடைத்துவிட்ட அடுத்த கதைக்கான கருவை உள்ளுக்குள் அசை போட்டுக் கொண்டிருக்கிறாள் என்பது.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. ஆமாம் உண்மைதான்
    நமக்கு என்ன வேலை இருந்தாலும் நம்மை சுற்றி இருப்பவர்களிடம் ஒரு சிறு புன்னகையாவது பரிமாறிக் கொள்ள வேண்டும் அவர்களின் நலத்தை விசாரிப்பது அவர்களுக்கு ஏதேனும் சிறு உதவி செய்வது என்று எப்பொழுதும் மனிதர்களோடு பேசி பழக வேண்டும்
    இது ஒரு வித்தியாசமான கதை அனுப்பவம்மாக இருந்தது மிகவும் பிடித்திருந்தது எழுத்தாளர் முகில் தினகரனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்👌👏👏👏💐

  2. ஆம் முற்றிலும் உண்மை
    நம் சுற்றியுள்ளவர்களிடம்
    பேசி பழக வேண்டும் இல்லை என்றாலும் ஒரு சிறு புன்னகையாவது அவரிடத்தில் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டுவது அவசியம்
    உங்களுடைய இந்த கதை ஒரு வித்தியாசமான கதையாக இருந்தது மிகவும் அருமை எழுதிய எழுத்தாளர் முகில் தினகரனுக்கு வாழ்த்துக்கள்👌👏👏👏💐

அவையத்து முந்தி (சிறுகதை) – ✍ பீஷ்மா

காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 21) – ✍ விபா விஷா, அமெரிக்கா