டிசம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20
சிக்கி முக்கி கல்லுக்குள் ஒளிந்திருக்கும் சிறு தீப்பொறியோ, அல்லது வெண்பஞ்சு மேகத்திற்குள் ஒளிந்திருக்கும் மின்சாரக் குவியலோ… இவை எல்லாவற்றையும் விட, அணைகட்டி வைத்திருந்த பெருவெள்ளமொன்று, சிறுமழைப் பொழிவில் வெடித்து, தன் தளையெல்லாம் உடைத்து வெளியேறுவது போல, துளசியைப் பார்த்ததும் தன் மனதிலிருந்ததை எல்லாம் வார்த்தைகளாகக் கொட்டி விட்டாள் லயா.
அத்தனை நாட்கள் மனதிலேயே அழுத்தி அழுத்தி தேக்கி வைத்துக் கொண்டிருந்த பெரும் பாரம் எல்லாம் மிச்ச சொச்சம் ஏதுமின்றி முழுதாகத் தன் தாயிடம் கொட்டித் தீர்த்து விட்டாள் லயா. சொல்லிய ஒவ்வொரு வார்த்தையும் சுமந்து வந்த வலியனைத்தும் சிறு துளியளவும் குறையாது அப்படியே சென்று அப்பிக் கொண்டது துளசியின் நெஞ்சை.
அவளது அந்தத் துயரில் தானும் கரைந்து தனது நினைவும் கரைந்து இருந்தவரும் சுற்றுப்புறம் உணரவில்லை. தன் மனசோகமனைத்தையும் வார்த்தைகளால் வடித்திட்ட பெண்ணவளும் உணரவில்லை, அவளைத் தவிரப் பிறரொருவரை.
ஆனால், பேச்சின் வேகம் சற்று மட்டுப்பட்டதும் தான் திரும்பி பார்த்த இருவரும் பேச்சின்றி உறைந்தனர். அதில் துளசிக்கோ, இத்தகைய உண்மையெல்லாம் மற்றவர்க்குத் தெரிந்துவிட்டால், அது எங்கே அபியின் திருமண வாழ்க்கைக்கு இடையூறாகிவிடுமோ என்ற கவலை அவரிடமிருக்க, அபியோ… என்னதான் மனமெல்லாம் அவர்கள் மேல் அதனைக் கோபம் இருந்தாலும், அதையெல்லாம் அவரிடம் நேரடியாகக் கூறுவதற்கோ, குத்திக் கிழிப்பதற்கோ என்றுமே மனம் இருந்ததில்லை.
ஆனாலும் அவள் கூறியதற்கும்… அவர்களின் மீதிருந்த வெறுப்புக்கும்… இதையெல்லாம் அவர்கள் கேட்டதற்காக மன்னிப்புக் கேட்கவேண்டுமெனவெல்லாம் அவள் நினைக்கவில்லை. அதனாலே எதற்கும் அசையாததான ஒருத்தி பார்வையில் தான் அவளிருந்தாள்.
ஆனால் அங்கு இருந்த மற்றவர்களோ, வார்த்தைகளால் விவரிக்க முடியாததொரு நிலையினுள் இருந்தனர். அதில் அதிமுக்கியமாக, அரங்கநாதன் தாத்தாவிற்கும், வெண்மணி பாட்டிக்கும் தாங்கள் இதுநாள் வரை சௌபாக்கியவாதி விஷயத்தில் தவறிழைத்து விட்டோமோவென்றிருந்த உறுத்தல், இப்பொழுது விஸ்வரூபமாய் உருவெடுத்து ‘ஆம்’ என்று ஓங்கி உச்சியில் அடித்தது.
என்ன தான் தவறிழைத்திருந்தாலும், அது தன் மகவல்லவா? தன் ரத்தமல்லவா? ஒன்று சௌபாக்கியவாதிக்கு அவர் தவறை இவர்கள் புரிய வைத்திருக்க வேண்டும், அன்றி அவர் கஷ்டப்படும் காலத்தில் அவருக்கு உற்ற துணையாக இருந்திருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றிப் பெற்றோர் பார்த்த ஒருவனையே அவர் பிடிவாதமாக மணந்ததெற்கெல்லாம் அவர் இத்தனை இத்தனை பெரிதான தண்டனை அனுபவித்திருக்க வேண்டியதில்லை அல்லவா?
யாரிடம் வேண்டுமானாலும் தனது கர்வத்தினை, செருக்கை, ஒருவர் காட்டிவிட முடியும். ஆனால் தன் மகவிடமே அது எப்படி இயலும்? அப்படியான அவர் பெற்றோரின் கர்வம் காரணமாகச் சௌபாக்கியாவதி இழந்தது அவர் வாழ்க்கையை அல்லவா?
இன்னொரு ஆண்… அவன் கணவனாகவே இருக்கட்டுமே, அவன் மதிக்காது கொடுமை செய்கையில் அந்தக் கால வீட்டுப் பறவையான அவர், மனம் தைரியமிழந்ததற்கும்… அவன் கொடுமையை அமைதியாகச் சகித்தமைக்கும், பெற்றோரே அவரை மதிக்காது போய்விட்டதைத் தவிர வேறொன்றும் புதுக்காரணம் சொல்லிவிட முடியாது தானே?
இவையத்தனையும் இத்தனை நாட்கள் உணராதிருந்த அரங்கநாதன் குடும்பத்தினர் அனைவரும், இப்பொழுது அபியின் வாய் மொழியாகவே சௌபாக்கியாவதி அனுபவித்த துன்பம் அனைத்தும் கேட்டறிந்ததும், முற்றிலுமாகக் கண் திறந்த நிலை.
ஆனால் அப்படி அவர்கள் கண் கொண்டு பார்க்கும் வேளை, காலம் கடந்து விட்டதென்பது தான் நிதர்சனம். அபி கூறியவெல்லாவற்றையும் கேட்டதும் அரங்கநாதன் தாத்தா, மெல்ல மெல்ல தள்ளாடியபடி அவள் அருகே வர முயற்சித்துக் கொண்டு இருந்தார்.
ஆனால் அதைக் கவனிக்காத நளினி, “என்ன அபிம்மா… நீ எங்க பாகிம்மாவோட பொண்ணா? ஏண்டா… ஏண்டா இத்தனை நாள் இத நீ சொல்லவேயில்ல. அப்ப இறந்து போனது தான் ரதியா? ஏன்மா… நான் கூடவா உனக்கு வில்லி மாதிரி தெரிஞ்சுட்டேன்? துளசி இல்லாத குறை உனக்குத் தெரிய கூடாதுன்னு தான் நினைச்சனே தவிர, இப்படி உனக்கு இத்தனை மரணக்காயம் எங்களாலேயே உண்டாகியிருக்கும்ன்னு எனக்குத் தெரியாம போயிருச்சேடா..” என்று அவர் பரிதவித்துக் கதறினார்.
அவரும் தான் இத்தனை நாட்களாய் சௌபாக்கியவதிக்காகவும், துளசிக்காகவும் அந்த வீட்டில் போராட்டம் நடத்திக் கொண்டு இருப்பவராயிற்றே. அவையனைத்தும் இப்பொழுது இவளைக் கண்டதும் வெடித்துக் கொண்டு வரத் தான் செய்தது.
அவர் பின்னே வந்த வெண்மணியம்மாவும் அதையே தான், தனது வேறென்ன வார்த்தைகளால் விளம்பினார்.
“அபிம்மா.. உன் அம்மா.. அத்தனை பேர் முன்னாடியும் எங்களை அவமானப்படுத்தீட்டாளென்ற கோபம் தான் எங்களுக்குப் பெருசா தெரிஞ்சுதே தவிர, அவ அந்த வீட்டுலபட்ட அவமானம், அனுபவிச்ச கஷ்டம் எதுவும் எங்களுக்குப் புரியவே இல்ல மா. அதெல்லாம் புரியற இப்போ.. என் குழந்தை இல்லாமயே போய்ட்டா. நீ சொன்னதும் ஒருவகையில் சரிதான் மா.. நாங்க எங்க ஒரு பொண்ணுக்கு செஞ்ச கொடுமைக்கு, என்னோட இன்னொரு பொண்ணோட குடும்பமே இப்படி அழிஞ்சுடுச்சே” என்று அவர் வெடித்துக் கதற…
அவர்களது அத்தனை பேச்சிலும் கொஞ்சம் கொஞ்சமாய் இளகிக் கொண்டிருந்த அபியின் மனம், அரங்கநாதன் அருகே வரவும் மீண்டும் விறைத்துப் போனது. அதையெல்லாம் அரங்கநாதன் கவனித்தாலும் அதற்கெல்லாம் தயங்குவதாய் இல்லை அவர்.
அவளருகே வந்தவர், அமைதியாக அவள் கரம் பற்றினார். ஆனால், பேத்தியின் பார்வையோ அவரை நேருக்கு நேர் பார்க்காது வேறெங்கோ இலக்கின்றி வெறித்தது.
அதன் பொருட்டே அவள் எவ்வளவாய் அவர் மீது கோபத்தில் இருக்கிறாள் என்பது அவருக்குப் புரிய செய்தது. ஆனாலும், தன் தரப்பு விளக்கத்தை எடுத்துரைத்தால், அவள் கொஞ்சமேனும் தன்னைப் புரிந்து கொள்வாள், அல்லது உணரவாவது செய்வாள் என்ற நம்பிக்கையுடன் பேசத் துவங்கினார்.
“அபிம்மா… நீ என் மேல எவ்வளவு வெறுப்புல இருக்கனு எனக்குப் புரியுது தான் மா. அதே மாதிரி இந்த வயசானவனையும், அவன் ரத்தத்துலயே ஊறிப்போன சிலதையும் நீ புருஞ்சுப்பனு நம்பறேன். எனக்கு முதல்ல உன் அம்மா பண்ணின அந்தக் காரியத்துல, நீ சொன்ன மாதிரி கோபத்த விட, அவ என் கௌரவத்தைக் கெடுத்துட்டாளென்னு ஆத்திரம் தான் அதிகம் இருந்துச்சு. அதுக்கும் மேல அவ என்கிட்ட, நான் எந்தச் சூழ்நிலையிலையும் இந்த வீட்டு படியேற மாட்டேன்னு சொன்னது எனக்குள்ள வெறியே உண்டு பண்ணிடுச்சு.
நான் பெத்த பொண்ணு, சின்னக் குழந்தையா இருந்ததுல இருந்து, என் கைக்குள்ளயே இருந்து, நான் பார்த்து வளர்ந்தவ, இப்ப எனக்கு முன்னாடி நின்னு என்கிட்டயே சபதம் போடறாளா? அதுவும் நான் வேணாம்னு சொன்ன ஒருத்தனுக்காக என்னையே பகச்சிக்கறாளா’ன்ற ஆவேசம் தான் மா வந்துச்சு.
அதனாலேயே, அவ என்ன இந்த வீட்டுக்குள் வர மட்டேன்னு சொல்றது, இனி நான் செத்தா கூட இந்த வீட்டுக்குள்ள அவ காலடி கூடப் படக்கூடாதுன்னு சபதமெடுத்துட்டேன். இதுல அவளுக்கு ஆதரவா பேசிட்டு வர யாரையும் அதுக்கு அப்பறம் அவளுக்காகப் பேசவே பேசாத மாதிரி மனச காயப்படுத்தி அனுப்பிச்சுருக்கேன்.
இதுல உன் பாட்டி, மாமா, அத்தை.. இவ்வளவு ஏன் உன் துளசி அம்மாவும், செழியன் அப்பாவும் கூடச் சேர்த்தி. ஏன்னா அப்பல்லாம் என் மனசுக்கு அந்தக் கோபம், ஆத்திரம், ஆவேசம், குடும்ப மானம், நான்’ற கௌரவம் இதெல்லாம் மட்டும் தான் பெருசா தெரிஞ்சுது.
கடைசியா அவ இந்த வீட்டை விட்டு போனதுக்கு அப்பறம், அவ காணாம போய்ட்டாளென்ற பதைபதைப்பு இருந்தாலும், அவ மாமியார் அவ கூடவே அந்த வீட்ட விட்டுப் போய்ட்டாங்கன்னதும் மனசுக்குள்ள கொஞ்சம் நிம்மதியாவே இருந்துச்சு. அத்தனைக்கும் மேல, அவன்கிட்ட இருந்து என் மக தப்பிச்சுட்டாளேன்னு நான் ஆசுவாசம் தான் பட்டனே தவிர, அவளைத் தேடணும்னு எனக்குத் தோணவே இல்ல.
அதுக்கப்பறம் அந்த ஆளு இன்னொரு பொண்ண பார்த்துக் கலியாணம் பண்ணிகிட்டப்பவும் கூட, சாக்கடை மேல கல்லெறிஞ்சா அது நம்ம மேல தான் படும் ‘சீ.. போ’ன்ற மனநிலையில் இருந்துட்டேன்.
உன் மாமா கூட அவன வெட்டி சாய்க்கற ஆத்திரத்துல இருந்தான். அவனையும் நான் கட்டுப்படுத்தி வச்சுட்டேன். அவன் பாக்கறதுக்கு இவ்வளவு அமைதியா இருந்தாலும், அவனோட தங்கச்சிங்களுக்காக அவன் எத்தனை எத்தனை பாடுபட்டிருக்கான் தெரியுமா. பெத்தவனான என்கிட்டயே எவ்வளவு போராடியிருக்கான்னு எனக்கு இப்பத் தான் முழுசா புரியுது.
இப்படி இந்த வீட்டுல இருக்கற மொத்த மக்களும் என் பொண்ணுங்களுக்காக இப்படித் தவியா தவிச்சுட்டு இருந்தப்ப, நான் மட்டும் எவ்வளவு கர்வத்தோட இருந்துருக்கேன். இப்ப நினச்சுப் பார்த்தா கூட எனக்கு அவ்வளவு அசிங்கமா இருக்கு. ஆனா.. எதையும் உணராமையே என் வாழ்க்கையில பாதிக்கும் மேல போய்டுச்சு.
அதெல்லாம் நான் உணர ஆரமிச்சப்போ தான், துளசி செழியன் மாப்பிளை பத்தின விவரம் கிடைச்சது. உடனே அவங்கள பார்க்கணும்னு மனசு தவியா தவிச்சுது. அதே மாதிரி அவங்களும் என்ன மன்னிச்சு ஏத்துக்கிட்ட சமயம் என் பொண்ணுக்கு இத்தனை பெரிய கொடுமை நடந்துடுச்சு.
அதக் கேட்ட நொடியே நான் பாதிச் செத்துட்டேன் மா.. ஆனா.. அப்பக் கூட நான் எப்படியாவது என் பாகிய கண்டுபிடுச்சுடலாம்ன்ற மனநிலையில தான் இருந்தேன். ஆனா.. என் கோபமும் வீரப்புமே என் பொண்ணுக்கு எமனாகிடுச்சே” என்று அவர் தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பிக்க…
அதுவரை அபியையே சலனமற்ற பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணா, இப்பொழுது தாத்தாவிடம் திரும்பி, “தாத்தா.. நீங்க எமோஷனல் ஆகாதீங்க. உங்க ஆரோக்கியம் முக்கியம் எனக்கு, தயவு செஞ்சு உங்க ரூம்க்கு போங்க” என்று அவரிடம் கூறியவன், தன்யாவிடம் அவரை உள்ளே அழைத்துச் செல்லும்படி கண்ஜாடை காட்டினான்.
அதைப் புரிந்து கொண்ட தன்யா, அமைதியாக தாத்தாவை உள்ளே அழைத்துச் சென்றாள். அவளால் அப்போதைக்கு முடிந்ததும் அது தானே? அவள் பிறப்பதற்கு முன்பே நடந்தேறிவிட்ட பிழைகள். அவளுக்குத் தெரிந்து, அந்த வீட்டில் யாரும் அதுவரை சௌபாக்கியவதியின் பேச்சை கூட வெளிபடையாகப் பேசியதில்லை.
ஆனால், அப்படியான ஒரு உறவு இருக்கிறதென்பது வரை அவள் அறிந்ததே. ஆனால், அதைப் பற்றிய விவரம் கேட்பதும், உரைப்பதும், அவ்விடத்தில் தேசிய குற்றம் போலப் பாவிக்கப்பட்டதால், இதுவரை அதனைத் தோண்டித் துருவ வேண்டுமென்ற எண்ணம் கூட அவளுக்கு இல்லை.
ஆதலால், அபி தான் சௌபாக்கியவாதி அத்தையின் மகளென்பதை அறிந்ததும், அவள் கொண்ட முதல் அதிர்ச்சிக்குப் பின், அவளுக்கு மேலும் என்ன செய்வது, இத்தனை நாட்களாய் தம் வீட்டினர் கொண்டிருந்த அந்தச் செருக்கே அழிந்து, அவர்களது கர்வமெல்லாம் உடைந்து அந்தச் சிறு பெண்ணுக்கு முன்பு தலைகுனிந்து அவளது மன்னிப்பை யாசித்து நிற்கும் அந்நிலை, அவளுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.
எனவே தான் அண்ணன் கண் காட்டியதும், தாத்தாவை அழைத்துக் கொண்டு அவள் உள்ளே சென்று விட்டாள். அவள் சென்றதுமே, தருணும் கூட, இது அவர்களாவே பேசித் தீர்த்துக் கொள்ளும் விஷயம். தான் இங்கு இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பது அங்கு அனைவருக்குமே சங்கடமானதாய் இருக்குமென்று கணித்து, அவனும் தாத்தாவை கவனிக்கச் சென்று விட்டான்.
அவர்கள் மூவரும் செல்வதையே பார்த்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணாவையே நோக்கிக் கொண்டிருந்தாள் அபி. அதுவரை அங்கிருக்கும் அனைவரும் அபியின் நிலையைக் கண்டு பரிதவித்தும், குற்றஉணர்விலுமாய் இருக்க, என்றுமில்லாத வழமையாய் அப்பொழுது அவனது பார்வையில் என்றுமிருக்கும் காதலும் இல்லை, அவள் நிலை உணர்ந்த கனிவும் இல்லை.
அதன் காரணம் அபிக்கு ஓரளவிற்குப் புரிந்தாலுமே, அவனிடம் எதைப் பேச அபிக்கு இப்பொழுது விருப்பம் இருக்கவில்லை.
அதனாலேயே தாத்தா அவரது அறைக்குச் சென்றுவிட்ட பிறகும் கூட… அவளிடம் மேலும் பேச வந்த அனைவருடமும் விலகலான பார்வையுடனே, “எனக்கு என் அம்மா ஹெல்த்தும் ரொம்ப முக்கியம். அவங்க இன்னைக்கு இவ்வளவு அனுபவிச்சதே போதும்” எனப் பொதுவாய் உரைத்துவிட்டு, அவர்களது அறைக்குச் செல்ல முனைந்தாள்.
அப்பொழுதும் கூட அதே போன்றதானவொரு பார்வையே கிருஷ்ணாவிடமிருந்து.
அந்தப் பார்வைக்கான பொருளை முழுமையாக விளங்கிக் கொள்ளவோ, அன்றி அவன் மனஉணர்வுகளை முழுவதுமாக உணர்ந்து கொள்ளவோ துளியும் விருப்பப்படாதவளாக, அவனை அலட்சியப்படுத்திச் சென்றுவிட்டாள் அபி.
ஆனால் துளசியுடன் அறைக்குள் வந்துவிட்ட போதிலும் கூட, அவர் உறங்க செல்வதாய்க் கண்மூடி படுத்துவிட்ட பொழுதும், அவளுக்குக் கிருஷ்ணாவின் அந்தப் பார்வையே… அவனது கண்களும், அதன் பாவமும் உள்ளுக்குள் புகுந்து ஏதோ செய்தது.
என்னவென்றே அறியாது, ஏதோ தவறிழைத்து விட்டதாய், குற்றம் செய்து விட்டதாய் உணர்ந்தாள் அவள். ஏனெனில் அவன் பார்த்த பார்வையின் அர்த்தம் அதுதான். இவளை குற்றவாளியாக்கி, கூண்டுக்குள் ஏற்றி நிற்க வைத்திடும் பாவம் அது.
ஏன்.. ஏனிப்படி.. தவறிழைத்தவரெல்லாம் அவனைச் சார்ந்தவாயிருக்க, பாதிக்கப்பட்ட இவள் மீது கோபம் ஏனாம்? மற்றவர்கள் எல்லாரும் அவனைச் சார்ந்தவர்கள் எனில், அவன் கையால் தாலி கட்டிக் கொண்ட இவள் யாராம் அவனுக்கு?
இப்படி ஏதேதோ எண்ணங்கள்… சம்மந்தமின்றி அவனைக் குற்றவாளியாக்க முனைந்து கொண்டிருந்தது. இதில் அபியின் இந்தக் கோபத்தையும், அதிலுள்ள நியாயத்தையும் துளசி எப்படி எடுத்துக் கொள்வாரோ என்றிருக்கிறது.
இன்னமும், அவரது இந்த நிலையில், அபியும் தான் தனது இத்தனை கோபத்தை அவரிடம் வெளிப்படையாகப் பிரஸ்தாபித்திருக்க வேண்டாமோ என்ற மறுகலும் கூட.
இங்கு கிருஷ்னாவிற்கோ, அவள் மீது கண் மண் தெரியாத கோபம். ஏன் எதற்கு என்றெல்லாம் புரிபடாததான ஒரு பார்வை. ஏன் இத்தனை இத்தனையான கோபம் என்பதை அவனாலேயே முழுவதுமாக விளங்கிக் கொள்ள முடியவில்லை.
அவனது மனதில் அபியைப் பற்றி இருந்த அனைத்து கேள்விகளுக்கும் இன்று தெளிவானதொரு விடை கிடைத்துவிட்ட பொழுதும் கூட, மனம் ஏனோ ஆற மறுக்கிறது. அவனது இந்த மனநிலையை முழுவதுமாக உணர்ந்து கொண்டது யாரென்றால், தனுவும், தருணும் தான்.
மற்றவர்கள் அனைவரும் தாத்தாவிற்காகவோ, துளசிக்காகவோ, சௌபாகியவதிக்காகவோ, அல்லது அபிக்காகவோ வருத்தப்பட்டு, பரிதாபப்பட்டுக் கொண்டிருக்க, இங்கு இப்பொழுது முழுமையான அதிர்ச்சியில் இருக்கும் கிருஷ்ணாவை கவனிக்க எவருக்குமே தோன்றவில்லை, அவன் தாய் துளசி உட்பட.
ஆனால்… இங்கு அவனது வாழ்வும், அவனது காதலும் கேள்விக் குறியாகியிருப்பதை முற்றிலும் உணர்ந்தது அவன் தங்கை தான். ஏனெனில், தன்யாவிடம் அவன் முழுவதுமாகத் தங்களது காதல் கதையைப் பற்றிக் கூறாவிட்டாலும், ‘அபி’ என்னும் ஒற்றை வார்த்தைக்குத் தன் அண்ணனிடம் தோன்றும் உணர்வு, அவன் கண்களில் தோன்றும் காதல் கசிவு, வதனமதில் தோன்றிடும் பரவசநிலை…
இதையெல்லாவற்றையும் விட, இப்பொழுது தான் அவன் வாழ்வும் சீர்படுத்தத் துவங்கியிருக்கும் இந்நிலை… இதையெல்லாம் வைத்து யோசிக்கையில், இப்போதைய பிரச்சனை அவன் வாழ்க்கையில் என்னதான ஒரு மாற்றத்தை ஏற்படுத்த போகும் என்று தெரியவில்லை.
நிச்சயமாக அவள் குடும்பத்தார் எவரும் அபியை வேண்டாமென விலக்க மாட்டார்கள் தான். எப்படியாயினும் இனி இந்தக் குடும்பத்தில் எந்தவொரு பெண்ணுக்கும் சின்னக் கெடுதலோ, அல்லது அக்கறையற்ற மனநிலையே எவரும் கொள்ள மாட்டார்கள் என்று தனுவிற்கு நன்றாகப் புரிந்து தான் இருக்கிறது.
ஆனால்… இங்குப் பிரச்சனையே அபி தானே. தான் ரதி என்று அவள் மாற்றிக் கூறியதற்கு என்ன காரணம்? அவளுக்கு அப்பொழுது முழு உண்மை தெரிந்திராவிட்டாலும் கூட, தான் துளசியின் வளர்ப்பு மகளென்று இந்தக் குடும்பத்தில் உரைத்தால், இங்குள்ளோர் அவளை ஒதுக்கி வைப்பது மட்டுமின்றி, துளசியையும் மீண்டும் விலக்கி விடுவார்களோ என்ற பயம் தானே?
அப்படி முதல் அபிப்பிராயம் தான் இப்படி என்றால், கொஞ்ச நாள் கழிந்த பிறகாவது… கிருஷ்ணாவிடமாவது அவள் தனது உண்மையை விளக்கி இருக்கலாம் தானே? அப்படியும் அவள் எதுவும் கூறவில்லை என்றால்… அதற்கு அர்த்தம், இந்தக் குடும்பத்தை அவள் நம்பவில்லை என்பது தானே?
அதனால் இனி கிருஷ்ணாவுடனான அவளது வாழ்க்கை பற்றிய இறுதி முடிவு அபியிடம் தான் இருப்பதாய் தனு உணர்ந்தாள். ஆனாலும், மனதின் ஏதோவொரு ஓரத்தில் சிறு நம்பிக்கை ஒளி… காதல் கொண்ட மனதில் உள்ள கோபமும், தாபமும் அந்தக் காதலாலேயே ஆறும் தானே?
இப்படி இந்தவொரு நம்பிக்கையை மட்டுமே கொழுகொம்பாய் பற்றியபடி தான் கிருஷ்ணா நடமாடிக் கொண்டிக்கிறான் என்பதும் தனு உணர்ந்தே இருந்தாள்.
அவனது நிழலாய் அவனது அடிபற்றியே தருணும், தன்யாவும் தொடர்ந்து கொண்டு இருக்க, இவை எதையுமே.. எவரையுமே உணராது ஒரு வெறுத்ததான மனநிலையில் இருந்தான் கிருஷ்ணா.
அதே வேளையில், அரங்கநாதன் தாத்தாவோ, அவர்கள் குடும்ப ஆல்பத்தை எடுத்துப் பார்த்துக் கொண்டு இருந்தார். அது அவர் மக்களது சிறுவயது புகைப்பட ஆல்பம்.
அதுவும் சௌபாக்கியவாதி அவர்களது குடும்பத்தின் கடைசிக் குழந்தை என்பதால், அனைவருக்கும் அதிகச் செல்லம் தான். அவரைச் சிறுகுழந்தையாய் கையில் ஏந்தியதிலிருந்து, அவரது ஒவ்வொரு பருவமும் அரங்கநாதனின் மனக்கண்ணில் திரைப்படம் போல் ஓடிக் கொண்டிருந்தது.
இறுதியில், மீண்டும் சௌபாக்கியவாதி அவர் கையில் குழந்தையாய் வீற்றிருக்கும் அந்தக் கோலம் மீண்டுமாய் அவரது மனக்கண்ணில். அதன் பிறகு உடனே காட்சிகள் மாற, ஜீவ களை இழந்த அந்தச் சுந்தரச் சொரூபம் தோன்ற, “ஐயோ.. பாகி..” என்று அலறி விட்டார்.
அவரது அந்த அலறலில் அவரருகே ஓடி வந்த வெண்மணியம்மா பார்க்கையில், அவர் முழு மூர்ச்சையாகி விட்டிருந்தார்.
(தொடரும் – சனிக்கிழமை தோறும்)
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20