sahanamag.com
சிறுகதைகள்

நான் அவளல்ல (சிறுகதை) – ✍ ஜெயஸ்ரீ ரவி

டிசம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

சில பெண்கள்தான் அழகாக இருக்கிறார்கள்; அவர்களில் சரிதா ஒருத்தி. சில பெண்கள் ஏன் எவ்வளவோ பெண்கள் சாதாரணமாகத் தான் இருக்கிறார்கள். அவர்களில் நான் ஒருத்தி.

அழகு என்றால் அகத்தழகு அது இது என்று புத்தகங்களில் எழுதுகிறார்களே அது இல்லை. நான் சொல்வது அழகு. வெளியில் கண்ணுக்குத் தெரியும் அழகு.

உலகில் ரோபாட்டுகள் பெருகியதால், ஜனத்தொகை ஏதேதோ காரணங்களால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட கி.பி.3100 ஆன இப்போது பாதியாக குறைந்துவிட்டது!

ஏதேதோ வியாதிகள் பலவற்றிற்கும் ரோபாட்டுகள் மூலம் இக்காலத்தில் தீர்வு கிடைத்துவிடுகிறது; ஆனாலும் உடற்கூறு சம்பந்தப்பட்ட இந்த அழகியலுக்கு மட்டும் தீர்வே கிடைப்பதில்லை! ஒருசிலர் மட்டுமே படைக்கப்பட்டவர்களுள் அழகாக இருக்கிறார்கள், மேற்சொன்ன சரிதாவைப்போல!

மேலே நான் சொன்னதை வைத்து சரிதாவுக்கும், எனக்கும் ஒரேவயது என நினைத்துவிடாதீர்கள்! சரிதா என்னை விட சரியாக 18 வயது மூத்தவள். கல்லூரி பிராயத்தில் என்னை பெற்றெடுத்த என் அன்னையின் சிநேகிதி  அவள்.

என் அன்னைக்கும், சரிதாவுக்கும் நட்பு என்றால் நட்பு, இந்த வார்த்தையின் இலக்கணமே அவர்கள் இடையே உள்ள நட்புதான்! இத்தனைக்கும் சரிதா என் பார்வையில் ஒரு கர்வமும், துடுக்குத்தனமும் நிறைந்த பெண், ஆங்கிலத்தில் snob என்று சொல்வோமே, அது போல.

பெரிதாக ஜாடை என்ற ஒன்று இல்லாத போதும், என் அன்னையும் என் போலவே சாமானிய அழகிதான், பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் சரிதா என் வீட்டுக்கு வரும் போதெல்லாம், அநேகம் புதிய, புதிய உடைகளில், தன் அழகை பளீரென வெளிச்சம் போட்டு காட்டும் வண்ணமே வருபவள்.

அத்துடன் மட்டுமா அவள் நிறுத்தினாள்? கிடைக்கும் தருணத்தில் எல்லாம், என் அம்மாவின் எடையை சுட்டிக்காட்டி சிரித்தாள், தன் அழகை தானே போற்றிக் கொண்டாள்.

ஆனால் என் அம்மா மாதுரி, இதையெல்லாம் பொருட்படுத்தியதே இல்லை, அவள் சரிதாவின் அத்யந்த சிநேகிதி மட்டுமே, ஒருநாளும் விரோதி அல்ல!

உலகெங்கும் ரோபாட்டுகளின் தாக்கம் அதிகம் இருக்கும் இந்நாட்களில், மனிதரைப் போலவே செயலாற்றும் ரோபாட்டுகள் அதிகம் உலவிவந்தன. நான் வேலை செய்யும் அலுவலகத்திலேயே அநேகம் ரோபாட்டுகள் இருந்து வந்தன.

மனிதர்கள் வெகுவாக குறைந்துவிட்ட இந்நாட்களில், மனிதர்களிடையே எங்கே ரோபாட்டுகள் தங்களை வேரோடு இல்லாமல் செய்துவிடுமோ என்ற பயமும் உள்ளூர இருந்ததுவே.

அதனால் பதுங்கும் இடங்கள் பலப்பல, புதியவகை ஸ்பை இயந்திரங்கள், வண்டிகள், மனிதர்களின் DNA டெஸ்ட் செய்யும் லேப் போன்றவற்றை மனிதர்கள் உண்டாக்கியிருந்தார்கள். அந்த அமைப்பின் பிரதிநிதிதான் இந்த சரிதா, நான் இந்த அமைப்பில் அவளுக்கு கீழே இயங்கும் ஒரு பணியாளி.

எனக்கும், சரிதாவுக்குமான தொடர்பை பற்றி சில வார்த்தைகள். என் சாமானிய அழகு சரிதா மேலே ஒரு லேசான பொறாமையை உண்டாக்கியிருந்தாலும், இந்த  பொறாமைத்தீ சரிதா என் அன்னையிடம் நடந்து கொள்வதில் கொஞ்சம் அதிகமாகவே கனன்று கொண்டிருந்ததென்னவோ உண்மையே! ஆனால் சரிதா என்னிடம் அத்யந்த நட்பு பாராட்டினாள்.

அநேகம் தடவை என் மறுப்புக்கு செவிமடுக்காமல், புதிய, புதிய, விலை உயர்ந்த ஆடைகளையும், பரிசுப்பொருட்களையும் பரிசளித்தாள். என் வீட்டுக்கு வரும் தருணங்களில் எல்லாம் என்னை சுற்றி, சுற்றி வந்தாள் சரிதா!

இது எனக்கு அவள் மேல் பச்சாதாபத்தையோ, பரிவையோ ஊட்டிவிடவில்லை, ஆயினும், கடைக்கோடி கண்களால் என்னை எப்போதும் கவனித்த என் அன்னையின் சந்தோஷத்துக்காக நான் சரிதாவிடம் இனிதே உரையாடினேன், மேம்போக்காக.

அதற்கு மேலும் சரிதாவை வெறுக்க அவள் அழகு ஒரு காரணமாய் இருந்தது. என் வெகுசாதாரண தோற்றத்தினால் எனக்கு டேட் செய்யவும், பின்னர் மணமுடிக்கவும் யாரும் இதுவரை கிடைக்கவில்லை.

அது எனக்கு என் தோற்றத்தை குறித்த பெரும் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விட்டிருந்தது. ஆனால் சரிதாவோ மாபெரும் அழகி! இந்த மனப்பான்மையோடு என்னால் அவளுடன், அவள் என்னிடம் எத்தனை பரிவு காட்டியும் நட்பு பாராட்ட இயலவில்லை.

இப்படியாப்பட்ட சூழலில்தான் என் அன்னை மாதுரி ஒருநாள் இறந்துபட்டாள். எக்டோடெர்மல் டிஸ்பிலேசியா என்னும் நோயின் தாக்கத்தில் தலைமுடி எல்லாம் இழந்து, கண்ணின் லென்ஸ், கார்னியா போன்றவை பழுதடைந்து, பேச முடியாமல் போய்……. இப்படி பலவகையில் துன்பப்பட்டு என் அன்னை இறந்தாள்.

Dementia நோய் போல இந்த புதியவகை நோய் தாக்குவதற்கு பலவருடங்கள் முன்னரே துவங்கி விடுகிறது. DNA ஆராய்ச்சி மூலமாக ஒருவரின் DNA மூலக்கூறுகளை வைத்து துவக்க நிலையில் இந்த நோய்க்கான அறிகுறி இருப்பதை கண்டறிந்து வெற்றிகரமாக இந்த நோயை முற்றிலும் சரி செய்ய முடியும்!

அவ்விதத்தில் என் அன்னை மாதுரியிடம் இருந்து எனக்கு இந்த நோய் வந்திருக்கக் கூடுமோ என்னும் ஆராய்ச்சிக்கு என் DNA கூறுகளை நான் பணிபுரியும் அலுவலகத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கூடவே ஒருவேளை அப்படி இந்நோய் கொண்ட DNA எனக்கும் வந்திருக்கும் பட்சத்தில், எனக்கு டிரீட்மென்ட் செய்ய ஒத்துவரும் DNA கொண்ட டோனர் பட்டியலும் சேர்த்து இணைத்து, அந்த ரிப்போர்ட்டை இன்று தருவதாக கூறியிருக்கிறார்கள். அதை வாங்க அலுவலகத்தின் படிகளை ஏறிக்கொண்டிருக்கிறேன்.

அலுவலகத்தின் கார் பார்க்கிங்கில் சரிதா அழகிய நீலப்புடவை காற்றிலாட இறங்கிக் கொண்டிருப்பதை பார்த்த வண்ணம் நான் லாப்பின் சுழலும் கதவுகளை திறந்து உள்ளே நுழைகிறேன்.

அந்த என் அலுவலகம் என்று நான் கூறும் அந்த பையோடெக்னாலஜி மரபணு லாப்பின் உள்ளே செல்கையில் சத்தியமாய் இன்றோடு, அதுவும் இன்னமும் அரைமணி நேரத்தில் என் வாழ்க்கை அடியோடு மாறப்போகிறது என்று நினைக்கவில்லை.

மேலே மாடிப்படிகளில் ஒருவித உற்சாகத்துடன் நான் ஏறுகிறேன். நான் எத்துணை தெம்பாக உணர்கிறேன், எனக்கு நிச்சயம் எக்டோடெர்மல் டிஸ்பிலேசியா நோய் என் அன்னை மாதிரியின் மூலம் கிடைத்திருக்காது, ரிப்போர்ட் Normal என்று வரப்போகிறது என்று நினைத்துக் கொண்டே ரிப்போர்ட் தரப்படும் விசாலமான அறைக்குள் நுழைந்து இருக்கையில் அமர்கிறேன்.

ஐந்தே நிமிடங்கள்……… ஒருவித உற்சாகம் கலந்த படபடப்பில் நான். ஒரு பெண்குரல் என் பெயரை அழைக்கவும் வரவேற்பு மேஜை அருகே சென்று எனக்கு முன்னே நீட்டப்பட்ட அந்த கரும் நீல நிற ரிப்போர்ட்டை வாங்குகிறேன்.

அதை நீட்டும் பெண் என்னை பார்த்து சிரிப்பது எனக்கு ஏதோ கொஞ்சம் வித்தியாசமாக படுகிறது. அவள் நான் பார்த்தவரை எப்போதும் கடுகளவும் சிரிப்பு தோன்றா சிடுமூஞ்சி அல்லவா?

கிடுகிடுவென்று அங்கிருந்து நகன்று என் பணிக்கென்று ஒதுக்கப்பட்ட அந்த விசாலமான குளிரூட்டப்பட்ட தனி அறைக்குள் சென்று, அங்கே பரந்த மேஜையின் முன்னே ஒரு அரசனுக்குரிய மரியாதையோடு விளங்கிய அந்த கருப்பு நிற சுழலும் நாற்காலியில் பதவிசாய் அமர்ந்து அந்த ரிப்போர்ட்டை பிரிக்கிறேன்.

மெல்ல முதல் பக்கத்தில் ஏதோ படங்கள் இருப்பதை விலக்கி, அடுத்த பக்கத்தை தேர்ந்தெடுத்து படிக்கையில்… சுமார் இரண்டே நிமிடங்கள்…. என் சப்த நாடியும் ஒடுங்கின.

மேலும் பரபரப்பாகி பக்கங்களை இங்கும், அங்குமாய் அவசரமாக என் கைகள் விலக்கி, விலக்கி படிக்க துவங்குகின்றன. “அம்மா, என்ன இது?” வாயில் வார்த்தைகள் என்னை அறியாமல் ஒரு கூவலாய் வெளியேறுகின்றன.

‘ஹக்’ தொண்டை அடைத்தது போல உணர்கிறேன். என் கைகளிலிருந்து ரிப்போர்ட் கீழே கார்பெட் போடப்பட்டிருந்த தரையில் விழாவும், தடுமாற்றத்துடன் சுழலும் நாற்காலியை பிடித்துக் கொண்டு ரிப்போர்ட்டை எடுக்க குனிகின்றேன் நான்.

‘டக், டக்’ என் அறையின் கதவு சன்னமாக தட்டப்படுகிறது. ‘யார் அது, இந்நேரத்தில்?’ என்று நான் வாயை திறந்து கேட்கும் முன்னேயே கதவை திறந்துகொண்டு அவள், என் இனிய விரோதி சரிதா, அழகிய நீல ஜார்கெட் புடவை நுணுக்கமாய் அசைந்தாட என் முன்னே வருகிறாள்.

என் முகத்தில் உறையும் பேரதிர்ச்சியை பொருட்படுத்தாதவளாய் அவள் ஒரு புன்சிரிப்புடன் என் அருகே வருகிறாள். என் தடுமாற்றத்தை உணர்ந்தவளாய் என்னை அவள் கைத்தாங்கலாக பிடித்து, சுழலும் நாற்காலியில் அமர்த்துகிறாள்.

பின்னர் என் கூந்தலை சற்றே உரிமையுடன் லேசாக வருடுகிறாள். அவள் முகத்தில் சற்றும் குறையாத புன்சிரிப்பு இப்போது இளமுறுவலாய் விரிகிறது. கனைப்புடன் அவள் என்னிடம் சொல்ல ஆரம்பிக்கிறாள்.

“ரிப்போர்ட்டை படித்து விட்டாயா?”.

நான் முதலில் சற்றே தலையாட்டி அவளை கூர்ந்து நோக்க இயலாமல் பார்வையை தாழ்த்துகிறேன்.

என் கண்களின் முன்னே ஒரு வெள்ளை நிற கவர் நீட்டப்படுகிறது. இதென்ன, சரிதாவிடமிருந்து மேலும் ஒரு கடிதம், எனக்காக? கேள்விக்குறியுடன் அவளை நிமிர்ந்து பார்க்கிறேன்.

“உன் மன நிலைமை எனக்கு புரிகிறது. அதனால் இதை வீடு சென்று நிதானமாக படித்துப் பார்” சரிதா அந்த கவரை என் கைகளில் திணித்து, ஒரு நிமிடம் நிதானிக்கிறாள்.

நான் அவளை பார்ப்பதை தவிர்த்து மீண்டும் தலையை தாழ்த்திக்கொள்கிறேன் என்று அறிந்ததும் அவள் மென்மையாக நடந்து அறையை விட்டு வெளியேறுகிறாள். அறையின் குளிரூட்டும் இயந்திரம் என் மனநிலையைப் போலவே கொஞ்சம் பலத்த சப்தத்துடன் ஹூங்காரமிடுகிறது.

அன்று மாலை நெடுநேரம் என் வீட்டு வரவேற்பறையில் ஆடும் நாற்காலியில் அமர்ந்து, எனக்கு கொடுக்கப்பட்ட ரிசல்ட்டுகள் அடங்கிய அந்த கரு நீல போல்டரையும், சரிதா எனக்கு கொடுத்த கடிதத்தையும் ஆயிரத்து ஆறாவது தரவையாக படித்துப் பார்க்கிறேன்.

இன்று முதல் என் வாழ்க்கையையே மாற்றிவிட்ட செய்தி அடங்கிய தாள்கள் அல்லவா அவை!

மெல்ல, நிதானமாக சரிதாவின் மடலை நோக்குகிறேன்.

“அன்புள்ள தாரிகா!” சரிதா என்னை அன்புடனே தான் விளிக்கின்றாள்.

“இன்று உனக்கு இந்த ரிசல்ட் கிடைத்து, அனைத்தும் தெரியவரப் போகின்றது என்பது சமீப காலத்தில் நான் எதிர்பார்த்த ஒன்று. யாருக்குத்தான் ஒரு ஆட்கொல்லி நோய் தன்னை தாக்குவதற்கு வாய்ப்புள்ளதா என்று தெரிந்துகொள்ள ஆசை இருக்காமல் போகும்.

என்ன, மரபணு ரிப்போர்ட் படி, உனக்கு எக்டோடெர்மல் டிஸ்பிலேசியா வர வாய்ப்பு இல்லை, ஆனால் அதற்கான காரணம் மாதுரி உன் அன்னையே இல்லை, உன் உண்மை அன்னை சரிதாவாகிய நான்தான் என்று தெரிந்து பேரதிர்ச்சிக்கு ஆளாகி விட்டாயா?

இந்த நிலையத்தின் அதிகாரி என்னும் நிலையில் நான் உள்ளதால் இங்கே செய்யப்படும் டெஸ்டுகள் அனைத்தும் என் மேற்பார்வையிலேயே நடக்கின்றன. அதனால் நீ உன்னைப் பற்றிய டெஸ்ட் கோரியிருந்ததும் அதை பற்றி நான் அறிந்தேன்.

ஆம், உன் ரிப்போர்ட்டில் சரிபார்க்கக்கூடிய வரைபடங்களுடனும், டேட்டாவுடனும் உனக்கு அளிக்கப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் நூறு சதவிகிதம் சரியானவையே….. ஆமாம், நானே உன் உண்மையான அன்னை!

உன் அன்னை மாதுரி இளம் வயதிலிருந்தே அவள் மரணித்த கொடிய நோயினால் தாக்கப்பட்டிருந்தாள். நீ பிறக்கும் சமயம் அந்நோயிலிருந்து, அவளுக்கு ஒரு தற்காலிக remission கிடைத்திருந்தது. ஆனாலும் அந்த நோயினால் அவளது தாயாகும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

அதனால் துவண்ட உன் அன்னை, என்னிடம் நீ பிறக்க வாடகைத்தாயாக இருக்க மிகவும் கோரினாள். ஆரம்பத்தில் திருமணமே புரியாததால் மறுத்த நான், பின்னர் மனம் மாறி உன் அன்னை மீது இரக்கம் கொண்டு அவளுக்காக சம்மதித்தேன்.

அதன்படி, உன் மறைந்த தந்தையின் உயிர் அணுக்களை என் கர்ப்பப்பையில் செலுத்தி, அதன் மூலம் கருத்தரித்து, நான் உன்னை ஈன்றெடுத்தேன். நீ பிறந்ததும் உன்னை உன் அன்னையிடம் கொடுக்க எனக்கு மனம் வரவேயில்லை.

ஆனாலும் உன் அன்னையின் நிலை கருதி அவளிடம் கொடுத்து விட்டேன். உன் அன்னை தன்மேல் நீ பிரியமாக இருக்க வேண்டும் என்பதற்காக நான்தான் உன் உண்மை அன்னை என்னும் விஷயத்தை ரகசியமாக வைக்க என்னிடம் மன்றாடினாள். நானும் ஒப்புக் கொண்டேன்.

பின்னர் நீ தற்சமயம் வளர்ந்த நிலையில் மீண்டும் அந்த கொடிய நோய் தாக்கவே, உன் வளர்ப்பு அன்னை மாதுரி மாண்டு விட்டாள். ஆனால் மரணிக்கும் முன்னே, எல்லா உண்மையும் உனக்கு தெரியவரச் சொல்லி என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாள் மாதுரி.

நானும் நீ எப்படியும் மரபணு டெஸ்ட் செய்து கொள்வாய், அப்போது அந்த ரிசல்ட் மூலம் உனக்கு உண்மை தெரிந்துவிடும் என்று காத்திருக்கத் துவங்கினேன்.

உண்மையில் நீ செய்து கொண்ட டெஸ்டில் உனக்கு அந்நோய் மாதுரி மூலம் சாத்தியமா என்று மட்டுமே தெரிய வரவேண்டும். ஆனால் நீ கூடவே உனக்கு பொருந்திவரும் டோனர் லிஸ்டும் கேட்டிருந்தாய்.

அது எனக்கு இவ்விஷயத்தை ஆதாரபூர்வமாக தெரிவிக்க வசதியாக ஆகிவிட்டது. ஆகவே உனக்கு கொடுக்கப்பட்ட ரிப்போர்ட்டில், என் ப்ரொபைல் இணைக்கப்பட்டு, மரபணு ஆராய்ச்சியின்படி நானே உன் உண்மை அம்மா என்று தெரிவித்து விட்டார்கள்.

இதெல்லாமே உனக்கு மிகவும் அதிர்ச்சியும், புதுமையும் நிறைந்ததாக இருக்கும் என்று நான் அறிகிறேன். அதனால் என் கடிதத்தை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். மேலும் பேச நீ உன் மனநிலை தேரியதும் என்னை தேடி வருவாய் என்று நான் அறிவேன். அதுவரை உனக்காக காத்திருக்கிறேன்.

ஓ, சொல்ல மறந்து விட்டேன், உனக்கு நீ கேட்காமலேயே ஒரு இணைப்பு ரிப்போர்ட் ஒன்றும் மரபணு டெஸ்ட் லேப்பில் கொடுக்க சொல்லியிருக்கிறேன். அதை நாளை லேப் சென்று வாங்கிக் கொள்ளவும். இப்படிக்கு, உன் அன்னை சரிதா”.

நூறாவது தரவையாக படித்தாலும் என் இருதயம் இன்னமும்கூட கொஞ்சம் பலமாக அடித்துக் கொண்டது. யாரோ நெஞ்சை பிடித்து அமுக்கினாற்போல ஒரு சுமையும் கூட சேர்ந்துகொண்டது.

“இந்த சரிதாவா என் உண்மை அன்னை? இது தெரிந்திருந்தால் அவள் மீதும் இத்தனைநாள் இன்னும் கொஞ்சம் பரிவு காட்டியிருக்கலாமே!”

என் நெஞ்சம் பச்சாதாபத்திலும், சுய-பச்சாதாபத்திலும் மாறி, மாறி நிலைகொள்ளாமல் தவித்தது. எப்படியோ அன்று இரவு 2 மணிக்குமேல் அந்த ஆடு நாற்காலியிலேயே  தூங்கிப் போனேன்.

விடிந்ததும் தலைவலியோடு அனைத்தும் ஞாபகம் வந்தன. “நடப்பதெல்லாம் கனவா, நினைவா” என்று வியந்தபோது மடியில் இன்னமும் கிடந்த ரிப்போர்ட்டும், கடிதமும் என் நினைவுகளை ஊர்ஜிதம் செய்தன.

அயற்சியோடு எழுந்த நான் சரிதா சொன்ன இணைரிப்போர்ட் ஞாபகத்துக்கு வரவே, பரபரப்புடனும், ஏதோ ஓர் எதிர்பார்ப்புடனும் அவசர, அவசரமாக கிளம்பினேன்.

நான் லேப் சென்றதும் படபடப்புடன் படிகளில் ஏறி முதல் மாடியில் இணை ரிப்போர்ட் கிடைக்குமிடம் சென்றேன். அங்கே வரவேற்பு மேஜையில் இருந்த பெண் என்னை பார்த்ததும் உடனே அந்த இணை ரிப்போர்ட்டையும், மேலும் ஒரு வெள்ளை நிற லெட்டர் அடங்கிய கவர் ஒன்றையும் கொடுத்தாள்.

வழக்கம்போல அந்த லெட்டரை வீடு வந்ததும் முதலாக படித்த நான் இன்ப அதிர்ச்சிக்கு ஆளானேன். அதுவும் சரிதா எழுதிய கடிதமே!

“அன்புள்ள தாரிகா,

பிரிய முத்தங்களுடன் உன் அன்னை சரிதா எழுதிக் கொள்வது. நீயும் ஒரு ஜெனெடிசிஸ்ட் தானே. அதனால் நான் சொல்லுபவற்றை இந்த இணை ரிப்போர்ட்டில் சரிபார்க்கலாம்.

நவீன மரபணு டெஸ்டுகள் மிகவும் உன்னத நிலையில் மேம்பட்டுவிட்டன. உன் மரபணுக்களை என்னுடையதுடன் வைத்து சரிபார்க்கையில், இரண்டும் பல்வேறு வகையில் பொருந்தியுள்ளன.

இருப்பினும், நீ என் ஜாடையில் பிறக்கவில்லை, அதில் நீ உன் தகப்பனை கொண்டிருக்க வேண்டும். ஆனால் இந்த இணை ரிப்போர்ட்டின் படி, உனக்கு மணமாகி, குழந்தை பிறந்தால், அது ஆணானாலும், பெண்ணானாலும் என் ஜாடையிலேயே இருக்கும் என்பது ஊர்ஜிதம் ஆகிறது.

ஆம், என் அழகுக்கான ஜீன் உன்னிடத்திலும் உண்டு. மேலும்,  உன் குழந்தை அறிவுஜீவியாக மிகவும் மேம்பட்ட புத்திசாலித்தனத்துடன் திகழ்வதற்கான சாத்தியக்கூறும் நூற்றுக்கு நூறு சத்தம் ஆகும் என்று மரபணு ஆராய்ச்சிகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன.

நிற்க, இந்த உன் ஜீன் ப்ரோபைலை நான் எனக்கு தெரிந்த வட்டத்தில் எடுத்துரைத்து விட்டேன். இன்னமும் மணமாகாத நீ ஏற்கனவே 28 வயதை எட்டிவிட்டாய். உன் ஜீன் ப்ரோபைலை பார்த்து உன் மூலம் கிடைக்கப்போகும் குழந்தைக்காக மிகவும் ஆசைப்பட்டு, உன்னை பார்க்க சிலர் இன்று வரலாம். அவர்களில் தகுவாய்ந்த ஒருவரை நீ மணமுடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இப்படிக்கு, உன் அன்னை சரிதா”.

ஒருநிமிடம் எனக்கு கனவுலகில் சஞ்சரிப்பது போலவே இருந்தது.

“என் மூலம் பிறக்கப்போகும் குழந்தை சரிதாவின் அம்சமா, அச்சு, அசல் அப்படியே! என்னைப் பார்க்கவும் மணமகன்கள் தயாரா?” வியப்பிலும், மகிழ்ச்சியிலும் என் மனம் துள்ளியது.

குதிபோடும் மனநிலையில் சற்றே கனைப்புடன் சன்னமான சப்தங்கள் என் பின்னர் கேட்கவும், அப்படியே நின்ற நிலையில் நான் திரும்புகிறேன், அப்போது 6 பேர் என்னை நெருங்கினார்கள்.

(முற்றும்)

Similar Posts

One thought on “நான் அவளல்ல (சிறுகதை) – ✍ ஜெயஸ்ரீ ரவி
  1. சொல்ல வார்த்தைகளே இல்லை மிகவும் அற்புதமான கதை இந்த கதையின் சாரம்சம் அழகு பத்தினது என்று நான் நினைத்திருந்தேன் ஆனால் இது ஒரு மரபணு சார்ந்த ஒரு கதையாக இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை மிகவும் அற்புதமான கதை எழுதி எழுத்தாளருக்கு என் வாழ்த்துக்கள்👌👏👏👏💐😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!