டிசம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
டல்லாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து வந்த மின்னஞ்சலைப் படித்த தங்கராஜ் நிலைகுலைந்து போனார்.
“மலர்விழி தங்கராஜ் என்னும் இந்தியப் பெண் எங்கள் மாணவ, மாணவியர் பட்டியலில் இல்லை”” என்றது அந்த மின்னஞ்சல்.
ஒரு மாதத்திற்கு முன்னர் தான் மலர்விழி சென்னை, டெல்லி மார்க்கமாக டல்லாஸ் சென்றாள், டல்லாஸ் பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பு படிப்பதற்காக. மலர்விழிக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை திவாகர், அவளை டெல்லி வரை சென்று வழியனுப்பி விட்டு வந்தார்.
கல்லூரியில் சேர்ந்து விட்டேன் என்று மலர்விழியிடமிருந்து மின்னஞ்சல் வந்தது. வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பவோ, காணொளிக் காட்சியில் பேசவோ முடியவில்லை. வாட்ஸ் அப் சரி செய்தவுடன் பேசுகிறேன் என்று செய்தி அனுப்பினாள் மலர்விழி.
அதற்குப் பின் அவளிடமிருந்து தங்கராஜுக்கோ திவாகருக்கோ செய்தி வரவில்லை. அவளுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிய அஞ்சல்கள் “செய்தி வழங்கப்படவில்லை” என்று திரும்பி வந்தன.
பதட்டமடைந்த தங்கராஜ் பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பினார். அங்கிருந்து வந்த பதிலைக் கண்டு செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.
திவாகர், அமெரிக்காவில் இருக்கும் நண்பர் மூலமாக பலகலைக்கழகத்தில் விசாரித்தார். மலர்விழி தங்கராஜ் என்ற இந்தியப் பெண்ணிற்கு பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் அளித்ததாகவும், ஆனால் அந்தப் பெண் சேரவில்லை என்றும் கூறினர்.
விமான நிறுவனத்தில் விசாரித்த போது, மலர்விழ் தங்கராஜ் என்ற பயணி குறிப்பிட்ட அந்த நாளில் டல்லாஸ் செல்லப் பயணச் சீட்டு எடுத்திருந்ததாகவும், ஆனால் பயணம் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்கள்.
அந்த விமான நிறுவனத்தின் இந்திய அலுவலகமும் இதை உறுதி செய்தது. மத்திய அரசின் பாஸ்போர்ட் அலுவலகத்தில் விசாரித்ததில் மாலதி தங்கராஜ் பாஸ்போர்ட் கடந்த ஆறு மாதத்தில் உபயோகப்படுத்தப் படவில்லை என்று தெரிவித்தார்கள்.
சென்னையிலிருந்து டல்லாஸ் செல்வதற்காக டெல்லி சென்ற மாலதி, டெல்லி பன்னாட்டு விமான நிலையத்தில் நுழைந்தப் பின் என்ன ஆனாள், எங்கு சென்றாள், எப்படி மாயமாக மறைந்தாள் என்று தெரியவில்லை,
சாதிப் பித்துப் பிடித்த அப்பா, வேற்று சாதிப் பையனை மணக்க சம்மதிக்க மாட்டார் என்று தனக்குப் பிடித்த வாலிபனுடன் ஓடி விட்டாளா, கடத்தப்பட்டாளா, கொலை செய்யப்பட்டாளா?
ஒன்றும் தெரியாமல் திகைத்து நின்றனர் மலர்விழியின் பெற்ரோர் தங்கராஜூம், பர்வதமும்.
*****
படித்த தங்கராஜ் பரம்பரைப் பணக்காரர். வயல், தோட்டம், மில் என்று வசதியான வாழ்க்கை. பர்வதம் கணவரை எதிர்த்துப் பேசத் தெரியாத மனைவி.
கயல்விழி, மலர்விழி என்று இரண்டு பெண்கள். கயல்விழி, மலர்விழியை விட மூன்று வயது பெரியவள். இருவருக்கும் உருவ ஒற்றுமை அதிகம். இருவரும் ஒன்றாக வந்தால் அடையாளம் கண்டுபிடிப்பது கடினம்.
கயல்விழிக்குப் பிடிவாதம் அதிகம். நினைத்தது நடக்க வேண்டும் என்று நினைப்பவள். சாந்த குணமுள்ள மலர்விழி வளைந்து கொடுக்கும் தன்மை உள்ளவள். மலர்விழிக்கு அப்பா அம்மாவை விட அக்கா கயல்விழி மேல் பாசம் அதிகம்.
கயல்விழி கல்லூரியில் சேர்ந்த போது அப்பா தங்கராஜ் அவளிடம் சொன்னார்.
“கயல்விழி, என்ன படிக்கணும், எங்கே படிக்கணும், எந்த வேலைக்குப் போணும் இது எல்லாமே உன்னுடைய விருப்பம். அந்த சுதந்திரம் உனக்கு உண்டு. நான் இந்த விஷயத்திலே தலையிட மாட்டேன். ஆனால் ஒரு விஷயத்திலே நான் பிடிவாதக்காரன்.”
உன்னுடைய கல்யாணம் நம்ம சாதியிலே தான் நடக்கணும். நீயே நம்ம சாதிப் பையனை காதலித்து, இவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் அப்படின்னு சொன்னா, அவன் ஏழையாக இருந்தாலும், சந்தோஷமாக கல்யாணம் பண்ணி வைப்பேன். அந்தஸ்து பார்க்க மாட்டேன்.”
வேறு சாதிக்காரனா இருந்தா அவன் எத்தனை பெரிய பணக்காரனாக இருந்தாலும், நான் கண்டிப்பாக கல்யாணத்திற்குச் சம்மதிக்க மாட்டேன். நம்ம சாதிக்காரங்க முன்னாலே நான் தலை நிமிர்ந்து நடக்கணும்” என்றார்.
கல்லூரியில் படிக்கும் போது, கூடப் படித்த கார்த்திக் மீது கயல்விழிக்குக் காதல் ஏற்பட்டது. படிப்பு முடிந்து வேலையில் சேர்ந்தவுடன் தன்னுடைய காதலைப் பற்றிப் பெற்றோரிடம் கூறிய அவள் “மணந்தால் கார்த்திக்கைத் தான் மணப்பேன். இல்லையென்றால் கல்யாணமே வேண்டாம்” என்றாள்.
கார்த்திக் வேறு சாதியைச் சேர்ந்தவன் என்பதால் தங்கராஜ் கல்யாணத்திற்கு சம்மதிக்கவில்லை. பிடிவாதமான பெற்றோர் செய்த சாம, தான, பேதம், தண்டம் எல்லாம் செய்து பார்த்தார் தங்கராஜ்.
கயல்விழி மசியவில்லை. ஆகவே கயல்விழியை பண்ணை வீட்டில் அடைத்து வைத்தார். கார்த்திக், அவன் குடும்பத்தார்களை மிரட்டிப் பார்த்தார். அவர்களுக்கும் பணபலமும், அதிகார பலமும் இருந்ததால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
வீட்டுக் காவலில் இருந்து தப்பித்த கயல்விழி, கார்த்திக்கை மணமுடித்து வேறு ஊருக்குச் சென்று மண வாழ்க்கை தொடங்கினாள். கார்த்திக்கின் தந்தை ரங்கராஜ் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து மணம் செய்து வைத்தார். அவர்கள் இருக்குமிடம் தெரிவிக்க மறுத்து விட்டார்.
தங்கராஜ், கயல்விழியின் மணம் தனக்கு இழைக்கப்பட்டப் பெருத்த அவமானமாகக் கருதினார். சாதி மக்களிடையே தன்னுடைய தலை தாழ்ந்து விட்டது என்று வருந்தினார். கார்த்திக்கின் தந்தை ரங்கராஜ் கல்யாணத்தை நடத்தி வைத்தது அவருடைய கோபத்தை அதிகப்படுத்தியது.
ஆறு மாதம் உருண்டோடியது.
இந்த இடைவெளியில் தங்கராஜ் ரொம்பவே மாறி விட்டார். மகளைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை, அவர்களை மன்னித்து விட்டேன். கயல்விழியையும், மாப்பிள்ளையையும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இரு சாதியையும் சேர்ந்த பெரியோர்கள் கூடி இரண்டு குடும்பத்திற்கும் இணைப்பை ஏற்படுத்தினர்.
தங்கராஜ், கார்த்திக் குடும்பத்துடன் நன்றாகப் பழக ஆரம்பித்தார். கயல்விழியின் வாழ்க்கை சிறக்க, குலதெய்வம் கோவில் சென்று படையல் போட வேண்டும் என்றும், ரங்கராஜ், மனைவியுடன் அவர்களை கோவிலுக்கு கூட்டிச் சென்று, வேண்டுதலை நிறைவேற்றுவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும் கூறினார்.
சம்பந்தி மனம் மாறியதில் ரங்கராஜூக்கு மிக்க சந்தோஷம். மகனையும், மருமகளையும் ஊருக்கு வரவழைத்தார். இரண்டு பக்கங்களிலும் தடபுடலாக விருந்து, அருகிலிருந்த கோவிலில் பூஜை என்று ஒரு வாரம் எல்லோரும் சந்தோஷமாக இருந்தனர்.
குலதெய்வம் கோவிலுக்குப் போகும் நாள் வந்தது. தங்கராஜ் அவருடைய காரை எடுத்துக் கொண்டு போகச் சொன்னார். மறுத்த கார்த்திக் அவர்களுடைய காரில் செல்வதாகக் கூறினார்.
கயல்விழி, கார்த்திக், ரங்கராஜ், அவர் மனைவி ஆகிய நால்வரும் கோவிலுக்குச் சென்றனர். ஊரை விட்டுத் தள்ளி சிறிய குன்றில் இருந்தது அந்தக் கோவில். பிரதான சாலையிலிருந்து கோவிலுக்கு வலதுபுறத்தில் திரும்ப வேண்டும்.
அந்தப் பாதை சற்றுக் குறுகலானது. பாதையின் இருபக்கமும் பள்ளம். கற்கள் நிறைந்தது. எதிர் எதிரில் வண்டி வருவதும், வண்டிகள் ஒன்றையொன்று முந்துவதும் கடினம்.
கோவிலிலிருந்து ஊருக்கு வருகின்ற குறுகலான பாதையில், பின்னால் வேகமாக சரக்குடன் வந்த லாரி, முந்துவதற்கு முயற்சி செய்யும் போது காரின் பின்னால் வேகமாக மோதியது.
மோதிய வேகத்தில் பள்ளத்தில் விழுந்த வண்டி வெடித்துச் சிதறி தீப்பற்றிக் கொண்டது. சம்பவம் நடந்த இடத்திலேயே நால்வரும் மாண்டனர். லாரி ஓட்டுநர் லாரியை அந்த இடத்திலே விட்டுவிட்டு தலை மறைவாகி விட்டார்.
மகள், மருமகன் மரணத்தில் தங்கராஜ் நிலைகுலைந்து போனார்.
“என் பேச்சைக் கேட்கலைன்னா நீ நல்லா இருக்க மாட்டேன்னு சொன்னேன். எனக்கு கரி நாக்கு, நான் கொடுத்த சாபம் பலித்திடுத்தே” என்று புலம்பினார்.
“நீதாம்மா எனக்கு எல்லாம் இனி மேலே, நீயும் என்னை வெறுத்திட்டுப் போயிடாதே” என்று மலர்விழியிடம் புலம்பினார்.
கார்த்திக்கின் உறவினர்கள் சிலர் இது திட்டமிட்ட சாதிக் கொலையாக இருக்கும் என்று சந்தேகித்தனர். மேலிடத்திலும் அவர்கள் ஐயப்பாட்டைத் தெரிவித்தனர்.
போலிஸ் விசாரணையில் அந்த லாரி சரக்குடன் கடத்தபட்ட லாரி என்று தெரிந்தது. தப்பியோடிய லாரி டிரைவரைப் பிடிக்க முடியவில்லை. வண்டி சமீபத்தில் தான் சர்வீஸ் செய்யப்பட்டது என்றும், வண்டி நல்ல நிலையில் இருந்ததாகவும் கார்த்திக் வீட்டு டிரைவர் வாக்குமூலம் கொடுத்தார். இது சற்றும் எதிர்பாராத விபத்து என்று முடிவு செய்தது காவல்துறை.
கயல்விழியின் மரணம் மலர்விழியை அதிகமாகப் பாதித்தது. யாருடனும் ஒட்டி உறவாடாமல் ஒதுங்கியே இருந்தாள். மற்றவர்களிடம் பேசுவதை அறவே தவிர்த்தாள்.
ஒருநாள் கோவிலில் இருந்து திரும்பி வந்த போது மலர்விழி கண்ட காட்சி அவள் மனதை மிகவும் பாதித்தது. ஆழ்ந்த யோசனையில் மூழ்கிய அவள் ஒரு தெளிவான முடிவிற்கு வந்தாள்.
“மேல் படிப்பிற்கு அமெரிக்கா போக வேண்டும் என்று ஆசை”” என்று அப்பாவிடம் சொன்னாள்.
“கல்யாணம் பண்ணிக் கொண்டுதான் போக வேண்டும்” என்று பிடிவாதம் பிடித்தார் தங்கராஜ்.
அவர்கள் சாதியில், படித்து, நல்ல உத்தியோகத்தில் இருந்த திவாகர் என்ற வரனுடன் மலர்விழிக்கு நிச்சியதார்த்தம் நடந்தது. மலர்விழி மேல் படிப்பிற்கு அமெரிக்கா செல்வதென்றும், ஒரு வருடம் முடிந்து அவள் இந்தியா வரும் பொழுது திருமணம் என்றும் முடிவு செய்யப்பட்டது.
மலர்விழி மாயமாக மறைந்தப் பின், அவளைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை.
தினந்தோறும் ஏதாவது செய்தி வருமா, மின்னஞ்சல் வருமா என்று தவித்தார்கள் தங்கராஜும் பர்வதமும். கோவிலுக்குச் செல்வது, குறி கேட்பது, பரிகாரம் செய்வது என்று பித்துப் பிடித்தவர்களாய் அலைந்தார்கள்.
ஆறு மாதம் கழிந்தது. அன்னிய நாட்டு முத்திரையுடன் தபால் வந்தது.
“அப்பாவிற்கும், அம்மாவிற்கும்,
அன்புள்ள என்று எழுத முடியவில்லை. உங்கள் மனதில் அன்பு இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.
கயல்விழி, கார்த்திக், அவருடைய பெற்றோர்கள் ஆகியவர்களுக்கு நடந்த கார் விபத்தை அறிந்து அப்பா துடித்த போது மிகவும் வருத்தம் அடைந்தேன். சாதி வெறியில் பேசினாலும் அப்பா மனதில் இருந்த ஈரம் என்னை நெகிழ வைத்தது.
அந்த மரணத்திற்குப் பின்னால் நடந்த சதியை அறிந்து திடுக்கிட்டேன். ஐந்து மனிதர்களைக் கொலை செய்து விட்டு உங்களால் எப்படி நல்லவர் போல நடிக்க முடிகிறது.
ஒருநாள் கோவிலிலிருந்து திரும்பி வீட்டிற்குள் நுழையும் போது கார்த்திக் வீட்டுக் கார் டிரைவர் நம் வீட்டிலிருந்து வெளியே செல்வதைப் பார்த்தேன். உங்களிடம் இதைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று நினைத்து உங்களின் அலுவலக அறைக்கு வரும் போது நீங்கள் உங்களுடைய உதவியாளருடன் பேசுவது கேட்டது.
“ஏன்யா, டிரைவரை நம்ம வீட்டுப் பக்கம் வரக் கூடாதுன்னு மிரட்டி வைக்கலையா? மலர்விழி டிரைவரைப் பார்த்து ஏடாகூடமாக் கேள்வி கேட்டா என்ன சொல்றது? டிரைவர்க்குப் பேசினதெல்லாம் கொடுத்திட்டியா?”
“சார், வண்டியோட ப்ரேக் வயரை அறுத்துக் கொண்டு வந்த போதே மூன்று இலட்சம் ரூபாய் கொடுத்தேன். இது விபத்து அப்படின்னு சர்டிவை பண்ணிப் போலீஸ் ஃபைலை முடிச்ச போது மீதி இரண்டு லட்சம் கொடுத்தேன். இன்னும் இரண்டு லட்சம் வேண்டும்னு கேட்கிறான். காரோட ப்ரேக் பத்தி சந்தேகம் சொன்னால் உங்களுக்குத் தான் தலைவலின்னு சொல்றான்”
“இரண்டு லட்சம் கொடுத்துத் தொலை. ரொம்ப தகராறு பண்ணினால் லாரி டிரைவர் போன இடத்துக்கு அவனையும் அனுப்பி வைக்க வேண்டியது தான். இன்ஸ்பெக்டர் நம்ம பக்கம். அவரையும் கவனிச்சிக்க. டிரைவர் பத்தி சொல்லி வை”” என்றார்.
“நான் பார்த்துக்கிறேன் சார்” என்றார் உதவியாளர்.
என்னுடைய தலையில் இடி விழுந்தது போல இருந்தது. உங்களுடைய சாதி வெறிக்கு ஐந்து உயிர்கள் பலியா? திட்டமிட்டு கொலை செய்து விட்டு, புலம்பி அழுதது எல்லாம் வெறும் நாடகமா?
அம்மாவிற்கு இதைப் பற்றித் தெரியுமா? மார்பிலும், தோளிலும் தூக்கி வளர்த்த மகளையே கொல்லத் தூண்டும் அளவுக்கா ஒரு மனிதனின் அறிவை சாதி வெறி மறைக்கும்?
ஒன்று நிச்சயமாக எனக்குப் புரிந்தது. காவல்துறைக்கு கொண்டு செல்வதற்கு என்னிடம் தகுந்த ஆதாரமில்லை. உங்களைப் பார்க்கும் போது எனக்கு மரியாதையும், பாசமும் வரவில்லை. என்னையும் கொலை செய்து விடுவீர்கள் என்ற பயம் வளர ஆரம்பித்தது. ஆகவே, உங்களைப் பிரிந்து கண் காணாத இடத்திற்குச் செல்ல முடிவெடுத்தேன்.
நான் தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து இருக்கிறேன். ஆதரவற்றோர்க்கு உதவுவதே என்னுடைய வாழ்க்கை என்று முடிவெடுத்து விட்டேன். நம் குடும்பம் செய்த தவறுக்கு இதுதான் என்னுடைய பிராயச்சித்தம். என்னைத் தேட முயற்சிக்க வேண்டாம். நான் சட்டப்படி என்னுடைய பெயரை மாற்றிக் கொண்டு விட்டேன். அந்தப் பெயரில் தான் என்னுடைய பாஸ்போர்ட்.
நான் சொல்லப் போகும் மற்றொரு செய்தி உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். நீங்கள் திட்டமிட்டு செய்த கொலையில் மடிந்தது, உங்கள் கட்டளையை மீறி வேறு சாதியில் மணம் புரிந்து கொண்ட உங்கள் மூத்த மகள் கயல்விழி இல்லை. சாதுவான உங்கள் இளைய மகள் மலர்விழி.
நீங்கள் மனம் மாறி விட்டதாக நான் நம்பினேன். மலர்விழிக்கு சந்தேகம் இருந்தது. எங்கள் உருவ ஒற்றுமையை பயன்படுத்தி என்னை ஏமாற்றி கார்த்திக் குடும்பத்துடன் அன்று குல தெய்வம் கோவிலுக்குச் சென்றது மலர்விழி.
சாதுவான உங்கள் இளைய மகளை வேண்டாம் என்று எமனுலகிற்கு அனுப்பி விட்டீர்கள். நீங்கள் கொல்லத் துடித்த மூத்த மகள் உங்களை ஒதுக்கித் தனியாக இருக்கிறேன். நீங்கள் செய்த பாவத்திற்கு இதுதான் உங்களுக்கும் எனக்கும் தண்டனை.
எனக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த மலர்விழியிடம் மன்னிப்புக் கோருகிறேன்.
மலர்விழி என்னை மன்னித்து விடு.
இப்படிக்கு
கயல்விழி”
(முற்றும்)
சாதி என்னும் பேய் ஒரு மனிதனை எப்படி ஆட்டி வைக்கிறது என்பதற்கான ஒரு நல்ல கதை கரு இரண்டு மகள்களை பெற்றும் கடைசியில் துணைக்கு ஒருவரும் இல்லாமல் வாழும் நிலைக்கு அவரே அவரை தள்ளிக்கொண்டார் வாழ்க்கையில் எத்தனை செல்வங்கள் இருந்தாலும் நம்மைச் சுற்றி நல்ல சொந்தங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் 👌👏👏👏வாழ்த்துக்கள்💐
கே.என்.சுவாமிநாதன்😊
உங்கள் பதிவிற்கு நன்றி. இது என்னை மேலும் ஊக்குவிக்கின்றது . நன்றி
கே.என்.சுவாமிநாதன்