in

நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 20) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

மே 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9  பகுதி 10

பகுதி 11  பகுதி 12  பகுதி 13  பகுதி 14 பகுதி 15  பகுதி 16  பகுதி 17  பகுதி 18  பகுதி 19

பரீஷ்வர்  சிரித்துக் கொண்டே, “பஞ்ச் டயலாக் வேறு. மீனாட்சியிடம் ‘நீ ரொம்ப செல்பிஷ், நீ மட்டும் லவ் பண்ணி திருமணம் செய்து கொள்ளலாம், சுமனா மட்டும் கூடாதோ? மனிதர்களைப் பார், மதங்களைப் பார்க்காதே’ அப்படி இப்படியென்று ஒரு அரைமணி நேரம் லெக்சர் கொடுத்தாள் கிருத்திகா” என்றான்.

கிருத்திகா சிரித்துக் கொண்டே தலைகுனிந்தாள். அதற்கே‌ அவள் கன்னம் ‘ஜிவ்’ வென்று சிவந்து விட்டது, சபரீஷ்வர் அதையும் பார்த்து ரசித்தான்.

சுமனாவின் திருமண விஷயம் சந்தோஷமான ஒப்புதலில் முடியவே எல்லோருக்கும் மிகவும் மகிழ்ச்சி. கிருத்திகாவிற்கு இப்போது தான் மனம் நிம்மதி அடைந்தது.

அவளுக்கு இப்போது ஆஃபீஸ் டென்ஷனும் நன்றாகப் பழகி விட்டது. ராமனாக இருந்தாலும், இராவணனாக இருந்தாலும் ஒரே ‘ரூல்’ தான் என்று பயங்கர  ஸ்ட்ரிக்டாக நடந்து கொண்டாள்.

ஷீலாவிற்கும் அவள் சித்தப்பாவிற்கும் ‘பெயில்’  கிடைத்து விட, இளங்கோ சிறைக்குச் சென்று ஆறு மாதங்கள் ஆகி விட்டது. இன்னும் பெயிலுக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டாள் கிருத்திகா.

டைனிங் ஹாலில் உட்கார்ந்து நால்வரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இப்போதெல்லாம், கருத்திருமனும், சாம்புத் தாத்தாவும் அவர்களுடன் தான் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்று சபரீஷ்வரனும், கிருத்திகாவும் வற்புறுத்தியதால் இந்த ஏற்பாடு.

“மேலும் சாம்புத் தாத்தாவிற்கும், கருத்திருமன் அங்கிளுக்கும் வயதாகிறது. காலையில் எழுந்து கொள்கிறார்கள், அதனால் அவர்கள் சீக்கிரம் சாப்பிட்டு முடித்து சீக்கிரம் தூங்க வேண்டும்” என்றாள் கிருத்திகா.             

சாம்புத் தாத்தா ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட முதலில் ஒத்துக் கொள்ளவில்லை, சபரீஷின் வற்புறுத்தலால் ஒத்துக் கொண்டார். அவர்கள் இருவருக்கும் பீரியாடிகல் மெடிக்கல் செக்-அப்’பை சுமனாவும், இஸ்மாயிலும் கவனித்துக் கொண்டார்கள்.

ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் போது கருத்திருமன், “கம்பெனித் தொழிலாளர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த நான்கு பஸ்களும் ரெடியாகி வந்து விட்டன. டிரைவர்களையும் வேலைக்கு வைத்தாகி விட்டது. கிருத்திகா சொன்னது போல் அங்கு பணிபுரிபவர்களின் குழந்தைகளுக்கு ‘டே-கேரும்’ ரெடியாகி விட்டது. சப்ஸிடி புட்டுடன் கான்டீனும் தயாராகி விட்டது”

“டே-கேர் சென்டர் கரெக்ட்டான பார்மில் இருக்கிறதா?” சபரீஷ்வர்.

“சுமனா அம்மாவும், இஸ்மாயில் டாக்டரும் தான் அதை மேற்பார்வை செய்கிறார்கள். கிருத்திகா தான் வேலையை இப்படிப் பிரித்துக் கொடுத்து விட்டது” என்றார் கருத்திருமன்.

“மேலும் தொழிலாளர்களுக்கு ‘பீரியாடிகல் செக்-அப்’ மாதம் ஒரு முறை இன்னும் இரண்டு டாக்டர்களோடு சேர்ந்து செய்கிறோம். மொத்தம் எட்டுக் கம்பெனிகள், அதில் உள்ள தொழிலாளர்கள்” என்றார் கருத்திருமன்.

“ஆமாம், அதெல்லாம் இஸ்மாயில் சுமனா விருப்பப்படியே நடக்கட்டும். அவர்கள் எல்லோருக்கும் மெடிகல் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும். அதையும் சுமனாவைப் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள் அங்கிள்” என்றாள் கிருத்திகா.

சபரீஷ்வர் பாதரை அழைத்து பஸ்சர்வீசை தொடங்க வைத்தான். மீனாட்சியையும் சுந்தரத்தையும் தலைமைத் தாங்க வைத்து, சுமனா குத்து விளக்கேற்ற, இஸ்மாயில் திறந்து வைக்க, குழந்தைகளின் குதூகலத்தோடும் கும்மாளத்தோடும்  டே-கேர் சென்டர் தொடங்கப்பட்டது. சாம்புத் தாத்தா தலைமையில் ஸப்ஸிடி விலையில்  கான்டீன் தொடங்கப்பட்டது.

கருத்திருமன் தொழிலாளர்களிடம் அவர்கள் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பற்றி பலத்த கரகோஷத்திடையே அறிவித்தார். எல்லாவற்றிற்கும், எல்லோருடனும் கிருத்திகா இருந்தாள்.

தொழிலாளர்களும்,  “கிருத்திகா மேடம் வந்த பிறகு தான் எங்களுக்கு எல்லா வசதிகளும் கிடைக்கின்றன” என்று கிருத்திகாவை மேலும் மேலும் புகழ்ந்தனர்.

கிருத்திகாவிடம் பேச வேண்டும் என்று ஒரு நாள் மீனாட்சி அவளைத் தேடி வீட்டிற்கு வந்தாள்.

“சபரீஷ், ஒன்பது செவ்வாய்க்கிழமை நான் டி.நகரில் உள்ள முப்பாத்தம்மன் கோயிலில் போய் சுற்றி விட்டு அவர் வேண்டும். எனக்குத் துணையாகக் கிருத்திகாவை அனுப்புகிறாயா?” என்று கேட்டாள் மீனாட்சி.

“ஏன், சுந்தரம் எங்கே? உன்னோடு வருவதை விட அவருக்கு என்ன முக்கியமான வேலை?” என்று கிண்டலாக சிரித்தபடி கேட்டான் சபரீஷ்.

“அவர் டெல்லிக்குப் போயிருக்கிறார், திரும்பி வர இரண்டு வாரம் ஆகும். நீ உன் பெண்டாட்டியை அனுப்புகிறாயா, இல்லையா? அதைச் சொல்” என்றாள்.

“நீங்கள் இருப்பது அடையாறு போட் கிளப்பில். தி.நகர்  போய் முப்பாத்தம்மனிடம் என்ன வரம் கேட்கப் போகிறாய்?”

“அதெல்லாம் சொல்ல முடியாது, சொன்னால் சாமி வரம் தர மாட்டார்” என்றாள் மீனாட்சி. 

அப்போது கிருத்திகா தனக்குள் எழுந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டாள்.

“நீ ஏண்டி சிரிக்கிறாய்? என்னவோ எல்லாம் தெரிந்த மாதிரி”  என்றாள் மீனாட்சி.

“அதானே” என்றான் சபரீஷ்.   

“சுந்தரம் அண்ணா எப்போதும் கான்பரன்ஸ், மீட்டிங் என்று போய் விடுகிறார். நீங்கள் ஒரு பக்கம் கலெக்டர்ஸ் கான்பரன்ஸ் அது இது என்று கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை தனியாகச் சுற்றுகிறீர்கள். இரண்டு பேரும் இப்படி தனித்தனியே சுற்றிக் கொண்டிருந்தால் முப்பாத்தம்மன் எப்படி பிள்ளை வரம் தருவாள்?” என்று கேட்டு விட்டு மறுபடியும் விழுந்து விழுந்து சிரித்தாள் கிருத்திகா. சபரீஷும் அடக்க முடியாமல் சிரித்தான்.

“சபரீஷ், உன் பெண்டாட்டிக்கு வாய் ஜாஸ்தியாகி விட்டது. கொஞ்சம் அடக்கி வை” என்ற மீனாட்சி, அவளும் சிரித்து விட்டாள்.

“அந்த இளங்கோவினால் தான் பயம். அவன் தான் உள்ளே இருக்கிறானே, ஜாக்கிரதையாய் போய் ஜாக்கிரதையாய் வாருங்கள். நீ இருக்கும் போது எனக்கென்ன பயம்?” என்றான் மீனாட்சியிடம்.

மீனாட்சி சென்ற பிறகு சபரீஷ்வர் கிருத்திகாவைப் பார்த்து விஷமமாக சிரித்தான். “ஏன் என்னைப் பார்த்து ஒரு மாதிரியாக சிரிக்கிறீர்கள்?” என்றாள் கிருத்திகா சந்தேகமாய் அவனைப் பார்த்து.

“மீனாட்சிக்கு அருள் தரும் முப்பாத்தம்மன் உனக்கும் சேர்த்து அருள் தரப் போகிறாள் என்று நினைத்தேன். அந்த சந்தோஷத்தில் சிரித்து விட்டேன்” என்று கூறி அவளை அணைத்துக் கொண்டான்.

“கடவுள் வரம் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல முடியுமா?” என்றவள், தன் தலையால் அவன் மார்பில் லேசாக இடித்தாள்.

“அப்பா” என்று நெஞ்சை விளையாட்டாகப் பிடித்துக் கொண்டான் சபரீஷ்.

“இப்போதெல்லாம் உனக்கு வாயும் ஜாஸ்தியாகி விட்டது, முரட்டுத்தனமும் ஜாஸ்தியாகி விட்டது” என்று அவள் கன்னத்தில் ஒன்று கொடுத்து அவளை அனுப்பி வைத்தான்.

இரண்டு வாரம் கோயில சுற்றும் வரை ஒன்றும் பிரச்சினை இல்லை. மூன்றாம் வாரம் செவ்வாய்க்கிழமை மீனாட்சியுடன், கிருத்திகாவும் எல்லாப் பூஜைகளும் முறையாக செய்து விட்டுப் பிரகாரத்தை சுற்றி வந்தனர்.

அப்போது “அண்ணி” என்ற குரல் கேட்டு, எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறதே என்று திரும்பிப் பார்த்தனர் இருவரும். ஷீலா தான் தன் தாயாருடன் வந்து கொண்டு இருந்தாள்.

இதுவரை அவள் கிருத்‌திகாவை மரியாதையுடன் “அண்ணி” என்று அழைத்ததில்‌லை, ஆதலால் கிருத்திகா திகைத்தாள். அவள் தன்னைத் தான் கூப்பிடுகிறாளா அல்லது வேறு யாரையாவது கூப்பிடுகிறாளா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“உங்களைத் தான் அண்ணி, உங்களிடம் இத்தனை நாள் மரியாதையில்லாமல் நடந்து கொண்டதற்கு மன்னிப்பீர்களா?” என்று கிருத்திகாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அவள் கண்களில் கண்ணீர்.

“சீ… கண்களைத் துடைத்துக் கொள். கோயிலில் வந்து அழக்கூடாது. உடம்பு எப்படி இருக்கிறது? இது எத்தனையாவது மாதம்?” என்றாள் மீனாட்சி, லேசாக மேடிட்டிருந்த அவள் வயிற்றைப் பார்த்து.

“நான்காம் மாதம்” என்றாள் லேசான வெட்கத்துடன்.

“ஷீலா அழாதே, எல்லா விஷயங்களையும் செய்தித்தாளில் படித்தோம். மனம் மிகவும் வேதனை அடைந்தது” என்றாள் கிருத்திகா.

“உங்களோடு பேசவே எனக்கு ரொம்ப வெட்கமாக இருக்கிறது அண்ணி. இளங்கோவைப் பற்றி அண்ணா பலமுறை எச்சரித்தார், நான் தான் அவர் மேல் கொண்ட நம்பிக்கையால் கண்மூடித்தனமாக இருந்து விட்டேன்” என்று அழுதாள்.

“ஷீலா இங்கே பார்… உன் மீது எனக்கோ உன் அண்ணாவிற்கோ எந்தக் கோபமும் இல்லை. நீ இப்போது அம்மாவோடு வீட்டிற்குப் போய் விட்டுப் பிறகு எங்களோடு சில நாட்கள் இரு. எல்லாம் சரியாகி விடும்” என்றாள் கிருத்திகா.

“நான் நேரில் வந்து உங்களோடும் அண்ணாவோடும் நிறையப் பேச வேண்டும் அண்ணி”           

“ஃபோன் செய்து விட்டு சனி, ஞாயிறுகளில் வா. நாங்கள் உனக்காகக் காத்திருக்கிறோம்” என்றாள் கிருத்திகா.

“ஆமாம் இந்த நல்ல புத்தி யாரால் வந்தது?” என்று கேட்டாள் மீனாட்சி ஆவலை அடக்க முடியாமல்.

“கிருத்திகாவை வளர்த்த அந்த ஹோமிலிருந்து பாதர் ஒரு நாள் வீட்டிற்கு வரலாமா என்று போன் பண்ணிக் கேட்டார். அவ்வளவு பெரிய மதத்தலைவர், அவரைப் போய் எப்படி வரச் சொல்வது என்று நான், அம்மா, அப்பா மூவரும் போயிருந்தோம். பாதர் தான் எல்லாம் விளக்கிச் சொன்னார். நீங்கள் உங்கள் பூஜையை முடியுங்கள், நான் வேறு பூஜை வேளையில் கரடி மாதிரி” என்று சிரித்தாள்.

மிகவும் மெலிந்து, ஷீலாவா இவள் என்று ‌ஆச்சர்யப்படும்படி இருந்தாள். கிருத்திகாவின் மனம் மிகவும் இளகி விட்டது. ‘எப்படி தளதளவென்று செல்வத்தின் செழுப்பில் இருந்தவள் இப்படி மெலிந்து விட்டாள்’ என்று வருத்தத்துடன் நினைத்துக்  கொண்டாள்.

“கிருத்திகா, என்ன யோசனை பலமாக இருக்கிறது?” என்றாள் மீனாட்சி.

“ஒன்றுமில்லை மேடம், அன்பின் வலிமையைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தேன். இளங்கோ எவ்வளவு மோசமானவன், அவன் மேல் வைத்த காதலால்  உருகி, இளைத்து, கருத்து எப்படி ஆக விட்டிருக்கிறாள் பார்த்தீர்களா?”

“நீ ஏன் கிருத்திகா இவ்வளவு நல்லவளாக இருக்கிறாய்? உன்னை என்னவெல்லாம் பேசியிருக்கிறாள் இந்த ஷீலா, ஆனால் அவள் உன் சபரீஷிற்குப் பிடித்த தங்கை என்பதால் நீ அவளை  மன்னித்து ஏற்றுக் கொண்டாய்… அப்படித்தானே”

“ஆமாம் மேடம்… சபரீஷ் என் உயிர். அவருக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ, அதெல்லாம் எனக்கும் பிடிக்கும். அதுவுமல்லாமல், சிறியோர் செய்த சிறுபிழையெல்லாம் பெரியோராயின் பொறுப்பது நன்றே என்று நம் பெரியவர்கள்  சொல்லியிருக்கிறார்கள் இல்லையா?  நாமும் பெரியோர் ஆகி விடலாமே என்ற ஆசை தான்” என்ற கிருத்திகா, மீனாட்சியைப் பார்த்து தன் வெண்மையான  வரிசைப்பற்கள் தெரியச் சிரித்தாள்.

மீனாட்சி அவளை அன்புடன் பார்த்தாள். கிருத்திகாவை அவள் வீட்டில் இறக்கி விட்டுப் “பிறகு பார்க்கலாம்” என்று கிளம்பி விட்டாள்.

சபரீஷ்வர் ஹாலில் உட்கார்ந்து ஏதோ ஆபீஸ் பைல்கள் பார்த்துக் கொண்டிருந்தான். டைனிங் டேபிளில் காலைச் சிற்றுண்டிக்கான உணவு ஹாட்பேக்கில் வைக்கப்பட்டிருந்தது.

“இன்னும் நீங்கள் சாப்பிடவில்லையா? அங்கிள் எங்கே?” என்று கேட்டாள் கிருத்திகா.

“தேவி சாப்பிட்டப் பிறகு சாப்பிடுவதே என் பாக்கியம்  என்று காத்துக் கொண்டிருக்கிறேன் நான்” என்றான் கிண்டலாக.

“அங்கிள்?”

“அவர் எப்போதோ சாப்பிட்டு விட்டு ஆபீஸ் கிளம்பி விட்டார். ஆமா, நீ என்ன ரொம்ப சாவகாசமாக கோயிலிலிருந்து வருகிறாய்? உனக்கு ஆபீசிற்கு நேரமாகவில்லையா? உன்னை டிராப் செய்து விட்டு நான் போக வேண்டும்” என்றான் சபரீஷ்வர்.

ஆப்பம், இடியாப்பம் குருமா எல்லாம் காலை உணவிற்காக டைனிங் டேபிளில்  ரெடியாக இருந்தது.  நேரம் ஆகி விட்டதால் இருவருடைய லஞ்ச்’சும் சாம்புத் தாத்தாவே கட்டி வைத்து விட்டிருந்தார்.

இருவருக்கும் இரண்டு தட்டுகளில்  உணவை வைத்து ஒன்றை அவள் கணவரிடம் கொடுத்து விட்டு ஒன்றைத் தான் எடுத்துக் கொண்டாள் கிருத்திகா.

அவசர அவசரமாக சாப்பிட்டுக் கொண்டே, “சபரீஷ் , நான் இன்று கோயிலில் யாரைப் பார்த்தேன் தெரியுமா?” என்றாள். அவன் புருவங்களை உயர்த்தி பார்வையாலேயே ‘யார்’ என்று கேட்டான்.

“ஷீலாவும் அவள் அம்மாவும் வந்திருந்தார்கள். ஷீலா அவளாகவே வந்து பேசி ‘அண்ணி’ என்றாள். மிகவும் இளைத்துக் கருத்துப் போயிருக்கிறாள்”

“யார் என்ன செய்ய முடியும்? நல்லவர்களோடு சேர்ந்தால் எல்லாம் நன்றாக இருக்கும். சரி கிருத்திகா, நீ சீக்கிரம் கிளம்பு. இன்னும் ஒரு மணி நேரத்தில் எனக்கும் ஆபீசில் ஒரு முக்கிய மீட்டிங் இருக்கிகிறது. பேச வேண்டியதெல்லாம் ஓய்வாக இருக்கும் போது பேசிக் கொள்ளலாம்” என்றான்.

கிருத்திகா காலைப் பத்துமணி முதல் பிற்பகல் ஒரு மணி  வரை இன்ஸ்பெக்‌ஷன் போவாள், பிறகு லஞ்ச் பிரேக். இரண்டு மணிக்கு இன்ஸ்பெக்‌ஷன் போய்விட்டு வந்த விவரங்களை தன் பி.ஏ.விடம் டிக்டேட் செய்து மேலதிகாரிகளுக்கு ஆன்லைனில் கம்ப்யூட்டர் மூலம் அனுப்பி விட்டு ஒரு நகல் அவள் பர்சனல் அஸிஸ்டென்ட்டிடமும், ஒன்று இவளுடைய கோப்பிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்வாள்.

எந்த வேலையும் எவ்வளவு நேரம் ஆனாலும் நாளை என்று தள்ளி வைக்க மாட்டாள். எல்லா விவரங்களும் விரல் நுனியில் சரியாக இருக்கும். மேலதிகாரிகளோ, அமைச்சர்களோ ஏதாவது விவரம் கேட்டால் அந்த நேரத்தில் போய் பைலைத் தேடி விவரம் சொல்வது அவளுக்குப் பிடிக்காத ஒன்று, அதனால் அவள் பி.ஏ’வும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்.

அன்றும் அவ்வாறே தான் செய்தாள், ஆனால் அவள் மனம் குழப்பத்தில் இருந்ததால் நேரம் அதிகமாகி மாலை ஆறுமணி ஆகி விட்டது.

(தொடரும் – திங்கள் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மணிப்பர்ஸ் மாமி (சிறுகதை) – ✍ மரு உடலியங்கியல் பாலா, சென்னை

    வசியம் (சிறுகதை) – ✍ சசிகலா ரகுராமன்