in

நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 6) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

நீ எனதின்னுயிர் ❤ (பகுதி 6)

பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4  பகுதி 5

கார் அந்த ஆஸ்ரமத்திற்குள் நுழைந்தது. அந்த இடத்திற்குப் பெயர் ‘மாந்தோப்பு’. அந்தப் பெயர் அந்த இடத்திற்கு மிகவும் பொருத்தம். வழியெங்கும் மாமரங்கள், அதைத் தவிர அந்த ஊரில் வேறு மரங்களே இருக்காது போல் தெரிந்தது.

உள்ளே நுழைந்ததும் வலதுபுறமாக செயற்கையாக உருவாக்கப்பட்ட மலையில் ஒரு பக்கம் செயற்கை நீர்வீழ்ச்சி கொட்டிக் கொண்டிருந்தது. மலை உச்சியில் மேரி மாதா, குழந்தை ஏசுவுடன் நின்றிருந்தார்.

கிருத்திகா, கிறிஸ்துவமுறைப்படி வணங்கி விட்டு, இன்னும் சிறிது தூரம் சென்றால் நுழைவாயிலுக்கு நேர் எதிரில் ஒரு சிறிய மண்டபமும், அதற்குள் ஒரு விநாயகர் சிலையும் பூக்களின் அலங்காரங்களோடு அழகாக இருந்தது.

விநாயகருக்கு ஒரு கிரில் கேட்டும் பாதுகாப்பாகப் போட்டு வைக்கப்பட்டிருந்தது. நம்மைப் பாதுகாக்கும் கடவுளுக்கே பாதுகாப்பு! எதிரே பல வண்ணங்களில் கோலம் போடப்பட்டிருந்தது.

கம்பிக் கதவிற்கு வெளியே ஒரு சிறிய கொத்துக் கிண்ணத்தில் விபூதி, சந்தனம், குங்கும்ம் எல்லாம் வைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து கொஞ்சம் விபூதி, சந்தனம், குங்குமம் எடுத்து வைத்துக் கொண்டாள் கிருத்திகா.

கொஞ்சம் தள்ளி இடதுபுறமாக ஒரு சிறிய குளமும், அதன் எதிரே வெள்ளை வெளேரென்று சலவைக்கல்லில் பெரிய வாயிலை வைத்து ஒரு சிறிய கட்டிடம் இருந்தது. அதன் உச்சியில் பெரிய ஆனியன் போன்ற ஒரு டூம். அதன் மேல் பிறையும், நட்சத்திரமும் போல் மதக்குறியீடு காணப்பட்டது. பள்ளிவாசல் என்று ஊகித்துக் கொண்டார்.

கிருத்திகா, அங்கேயும் துப்பட்டாவைத் தலை மேல் முக்காடு போல் போட்டுக் கொண்டு  முழந்தாளிட்டு வணங்கினாள். பிறகுக் கருத்திருமனைப் பார்த்துப புன்னகைத்தாள்.

“நீ எந்த சாமியின் முன் நின்றாலும் பொருத்தமாக இருக்கிறது கிருத்திகா” என்றார். கிருத்திகா சிரித்தாள்.

“சாமிக்கே நான் எந்த மதத்தைச் சேர்ந்தவள் என்பதில் கொஞ்சம் குழப்பம், அதனால் தான் இந்த பொருத்தம்” என்றாள். கருத்திருமன் முகம் வாடி விட்டது.

“நான் உன் மனம்  நோகப் பேசி விட்டேனா கிருத்திகா?” என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.

“நான் தான் ஏதோ விளையாட்டாகப் பேசி உங்கள் மனதை நோகச் செய்து விட்டேன், சாரி அங்கிள்” என்றாள். ஒருவருக்கொருவர் ‘சாரி’ சொல்லவும் இருவருக்குமே சிரிப்பு வந்து விட்டது.

கிருத்திகா, அவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே போனாள். பாதர் இவர்கள் வரவை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தார்.

பாதரின் காலில் விழுந்து அவர் ஆசீர்வாதத்தை வாங்கிய பிறகு, தன் ஹேண்ட் பேகிலிருந்து செக் ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தாள்.

“கிருத்திகா, ஏன் மூவாயிரம் ரூபாய்க்கு செக் கொடுத்திருக்கிறாய்?” என்றார் பாதர்.

“மூன்று மாதங்களாக என்னால் வரமுடியவில்லை பாதர். அதனால் மூன்று மாதத்திற்கு சேர்த்து மூவாயிரம்” என்று சிரித்தாள்.

“வேலைக்குப் போனதிலிருந்து மாதம் ஆயிரம் ரூபாய், இந்த ஹோமிற்காக தானம் செய்து கொண்டிருக்கிறாள் கிருத்திகா. பெரிய பணக்காரர்கள் தானம் செய்யலாம். இவள் பாவம் வளரும் குழந்தை” என்றார் பாதர் கருணையுடன் அவள் தலையைத் தடவிக் கொடுத்தபடி.

அப்போது  யாரும் எதிர்ப்பாராத விதமாக ஐந்து லட்சம் ரூபாய்க்கு  ஒரு செக் எடுத்துக் கொடுத்தார் கருத்திருமன்.

“எங்கள் எம்.டி. சபரீஷ்வர் இந்த ஹோமிற்காக்க் கொடுக்கச் சொன்னார். அவருக்கு இன்று ஒரு அவசர மீட்டிங் இருக்கிறது, அதனால் அவர் வர முடியவில்லை. என்னிடம் கொடுத்து தங்களிடம் சமர்ப்பிக்கச் சொன்னார். கூடிய விரைவில் தங்களை வந்து சந்திப்பதாகக் கூறினார்” என்றார்.

கிருத்திகா, தன் பெரிய கரு விழிகள் இன்னும் அகலமாக விரிய ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இவ்வளவு தயாள குணமுள்ள ஒரு மனிதரிடம் கிருத்திகா வேலை செய்வது அவள் பூர்வ ஜென்மப் புண்ணியமே” என்றார் பாதர்.

கொஞ்ச நேரம் பாதரிடமும், கொஞ்ச நேரம் அங்குள்ள மற்றவர்களிடமும் பேசிவிட்டுக் கருத்திருமனிடம் வந்தாள் கிருத்திகா. முகமெல்லாம் சிரிப்பு.

“உனக்குப் பிடித்தமானவர்களிடம் எல்லாம் பேசி விட்டாயா அம்மா?” என்றார் கருத்திருமன் .

“ஆம்” என்று கிருத்திகா முகம் மலரத் தலையாட்ட, இருவரும் காரிலேறி சென்னை நோக்கி தங்கள் அலுவலகத்திற்குக் கிளம்பினார்கள்.

வரும் வழியில் பெருங்களத்தூருக்கு முன்னால் ஒரு மண் பாதையில் காரை ஓட்டச் சொன்னார் கருத்திருமன்.

“என்ன சார், கார் ஆபீசிற்குப் போகாமல் பெருங்களத்தூர் ஊருக்குள் போவது போல் இருக்கிறதே, ஏன்?” என்றாள் கிருத்திகா வியப்புடன்.

“நம்  எம்.டி.யின் ரிசார்ட்  ஒன்று இங்கே இருக்கிறது கிருத்திகா. சில நாட்கள் அவர் இங்கே வந்து ஓய்வெடுப்பார். ஹோமிலிருந்து திரும்பும் போது இங்கு வந்து பார்த்து விட்டுப் போகும்படி கூறினார் அம்மா” என்றார் கருத்திருமன்.

“நம் எம்.டி யே ஒரு புதிர் சார். விதவிதமாக ஆர்டர் போடுகிறார். சில நேரங்களில் அவர் போட்ட உத்தரவை அவரே மீறுகிறார். நாம் ஒரு ஆபீசில் தான் வேலை செய்கிறோமா இல்லை வேறெங்காவது தனியார் வீட்டில் வேலை செய்கிறோமா என்று இருக்கிறது” என்றாள் எரிச்சலுடன்.

“தனியார் வீட்டில் இல்லை, தனியார் கம்பெனியில். இதில்  உனக்கு என்னம்மா கோபம்? முதலாளி சொல்வது போல் கேட்க வேண்டியது தானே நம் கடமை” என்றார் கருத்திருமன்.

“அது சரிங்க சார். நேற்று ஹோமிற்குப் போய் விட்டு வந்து என்னென்னவோ வேலைகள் செய்ய வேண்டும் என்று லிஸ்ட் கொடுத்தார் அல்லவா? அந்த வேலைகளை முடிக்க வேண்டாமா? நாம் இங்கெல்லாம் சுற்றிக் கொண்டிருந்தால் எப்போது ஆஃபீஸிற்குப் போவது? எப்போது அந்த வேலைகளை முடிப்பது?” என்று பெருமூச்சு விட்டாள் கிருத்திகா. கருத்திருமன் அவளைப் பார்த்து சிரித்தார்.

“இப்போதெல்லாம் நீங்கள் சிரித்தால் கூட பல்வேறு அர்த்தங்கள் தெரிகின்றன” என்றாள் கிருத்திகா முகத்தைச் சுளித்துக் கொண்டு கோபமாக.

அதற்குள் சபரீஷ்வர் ரிசார்ட்டே வந்து விட்டது .

“சரியம்மா, நான் சிரிக்கவில்லை” என்றார் தன் கர்சீப்பால் வாயை மூடிக்கொண்டு.

சபரீஷ்வர் சோஃபாவில் அமர்ந்திருந்தவன் எழுந்து வந்து அவர்களை வரவேற்றான்.

“என்ன ஆங்கிள், வாயை மூடிக்கொண்டு வருகிறீர்கள்?” என்றான் ஆச்சர்யத்துடன்.

“கிருத்திகா சிரிக்கக் கூடாதென்று உத்தரவு போட்டு இருக்கிறார் சார்” என்றார் கர்சீப்பை எடுத்து விட்டு முகத்தை ரொம்பப் பாவமாக வைத்துக் கொண்டு.

“என்ன கிருத்திகா? அங்கிள் என்ன சொல்கிறார்?”

“நான் ஒன்றும் அப்படிச் சொல்லவில்லை சார். சிரித்தால் பல்வேறு அர்த்தங்கள் தெரிகின்றன  என்றேன்” என்றாள் மெதுவாக.

கருத்திருமனும், சபரீஷ்வரனும் ஒருவரை ஒருவர் புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டனர்.

பிறகு சபரீஷ்வர், “எனக்கு ரொம்பப் பசிக்கிறது, உங்களுக்காகத்தான்  காத்திருக்கிறேன். இங்கே  சாப்பிட்டுப் பிறகு தான் ஆபீஸ் போக வேண்டும்” என்றான் .

“இங்கே லஞ்ச்சா?” என்றாள் கிருத்திகா ஆச்சர்யத்துடன்.

“ஆம், இங்கே ஒரு சமையல்காரர் இருக்கிறார். முன்பெல்லாம் நாங்கள் அடிக்கடி இங்கே வருவோம். அப்பாவும் தவறிய பிறகு சுத்தமாக வருவதையே நிறுத்தி விட்டேன். இப்போது தான் இரண்டு மாதமாக இங்கே வந்து போகிறேன்” என்றான்.

மொத்தக் கட்டிடமும் சலவைக் கல்லால் கட்டப்பட்டிருந்தது. வயல்களுக்கு நடுவில் ஒரு பங்களா. வீட்டைச் சுற்றி ஓரடி அகலத்திற்கு, ஐந்தடி ஆழத்திற்கு பள்ளம் வெட்டப்பட்டிருந்தது. அந்தப் பள்ளம் முழுவதும் உடையாத கண்ணாடியால் சுவர் எழுப்பப்பட்டிருந்தது.

“வயல்களுக்கு மத்தியில் தனியாக மாளிகை மாதிரி இவ்வளவு பெரிய வீடு. தனியாக இருந்தால் பயமாக இருக்கும் இல்லையா சார். பூச்சி , பாம்பு எல்லாம் வராதா?” என்றாள்.

“பாம்பு வரக்கூடாதென்பதற்காகத் தான் வீட்டைச் சுற்றி ஸ்நேக் பிட்  கட்டப்பட்டிருக்கிறது. அதன் சுவர்களெல்லாம் கண்ணாடியால் ஆனதால் வழுவழுப்பாக இருக்கும். அதனால் அந்தப் பள்ளத்தில் விழுந்த பாம்பு எழுந்து வர முடியாது” என்றான் சிரித்தவாறு.

“கேள்விகள் தீர்ந்து விட்டதா? இன்னும் பாக்கி இருக்கின்றதா?” என்றான் சபரீஷ் அவளைக் குறும்பாகப் பார்த்து.

அவன் அப்படிப் பார்க்கும் போது மட்டும் இவளால் அவனை நேருக்கு நேர் பார்க்க முடிவதில்லை. கன்னங்கள் சிவந்து உள்ளங்கைகள் வேர்த்து விடும்.

கருத்திருமன் டிரைவரை சாப்பிடச் சொல்லிக் கொண்டிருந்தார். “கிருத்திகா, நாம் சாப்பிட்டு விட்டு  ஆபீஸிற்குப் போகலாமா?” என்றான் சபரீஷ்.

“நான் ஆபீஸிலேயே போய் சாப்பிட்டுக் கொள்கிறேனே சார்” என்றாள் கிருத்திகா தயக்கத்துடன்.

“இங்கே எல்லோருக்கும் சமையல் ரெடி செய்து விட்டார் சமையல்காரர். வாருங்கள் கிருத்திகா, வாருங்கள் அங்கிள்” என்று அவர்கள் இருவரையும் உட்கார வைத்து இவனும் சாப்பிட்டு முடித்து விட்டான்.

“இன்று மாலை உங்களுக்கு கிளாஸ் இருக்கிறதா கிருத்திகா?” என்று கேட்டான் சபரீஷ்.

“கிளாஸெல்லாம் முடிந்து விட்டது சார். தேர்விற்கு இன்னும் பத்து நாட்கள் தான் இருக்கின்றன” என்றாள் கிருத்திகா.

சபரீஷ்வர் இவர்கள் டிரைவரைத் தன்னுடன் நிறுத்திக் கொண்டு அவர்கள் இருவரையும் ஆஃபீஸிற்குப் போகச் சொன்னான்.

கருத்திருமன் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டு கிருத்திகாவைத் தன் பக்கத்தில் உட்காரச் சொன்னார்.

“வயதாகி விட்டதால் சாப்பிட்டவுடன் தூக்கம் வருதம்மா. நீ பக்கத்தில் உட்கார்ந்து வந்தால் பேசிக்கொண்டே கார் ஓட்டலாம் இல்லையா கிருத்திகா”

இரண்டு பக்கங்களிலும் இராணுவ வீரர்கள் போல் நின்றிருந்த மாமரங்கள் வீசும் காற்று, பக்கத்தில் சிறு அருவியாக கூடவே ஓடி வரும் காட்டாறு. எல்லாம் மிக அழகாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது கிருத்திகாவிற்கு.

“கிருத்திகா பரீட்சைக்குத் தயாராகி விட்டாயா, அம்மா?” என்றார் கருத்திருமன்.

“நேரம் கிடைக்கும் போது மனம் தெளிவாக இருக்கும் போது படிக்கிறேன் அங்கிள். ஆனால் பரீட்சைக்குத் தயாரா இல்லையா என்று தெரியவில்லை சார்”

“ஏம்மா கிருத்திகா, நீ நம் எம்.டி.யைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”

“அவர் பெரிய பணக்காரர். சில பணக்காரர்களுக்கு பணம் இருக்கும் அளவிற்கு தாராள மனப்பான்மை இருப்பதில்லை. ஆனால் இவருக்கு இரண்டும் இருக்கிறது”

“இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் நீ அவரைப் பற்றித் தனிப்பட்ட முறையில் என்ன நினைக்கிறாய்?”

“அங்கிள், இது தேவையில்லாத கேள்வி. அவர் எனக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளி, நான் அவரிடம் சம்பளம் வாங்கும் பெண், அவ்வளவுதான். நான் தனிப்பட்ட முறையில் என்ன நினைப்பது?”

“ஆனால் அவர் உன்னைப் பற்றி வேறு விதமாக நினைக்கிறார் கிருத்திகா. உன்னைப் பற்றி மிக உயர்வான எண்ணம் அவர் மனதில். அவர் உன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பிரியப்படுகிறார்” என்றார் கருத்திருமன்.

“வேண்டாம் அங்கிள், அந்த மாதிரி எண்ணம் எல்லாம் வேண்டாம். எனக்கு அந்தத் தகுதியும் இல்லை. அதற்கு பொருத்தமானவளும் நான் இல்லை. மறுபடியும் அந்தப் பேச்சு வேண்டாம் அங்கிள் ப்ளீஸ்”

“நான் சொல்வதையெல்லாம் நிதானமாக யோசனை செய். சபரீஷ்வரன் தனியாக நிற்கிறார், யாரும் அவருக்கு உண்மையான தோழர்களோ உறவினர்களோ இல்லை. சுற்றியிருப்பவர்கள் பணத்திற்காகத் தான் அவரிடம் உறவு கொண்டாடுகிறார்கள் என்று உனக்குத் தான் தெரியுமே. அவர் சந்தோஷத்தையோ, அவர் உணர்ச்சிகளையோ பங்கு கொள்ள யாரும் தயாராக இல்லை”

“நானெல்லாம் நல்ல துணையாக ஆக மாட்டேன் அங்கிள். இளங்கோ மாதிரியான ஆட்களை எதிர்கொள்ள, அவருக்கு நிறைய சொந்தங்களும் சொத்துக்களும் உள்ள நல்ல பெண்ணாகப் பாருங்கள் அங்கிள். என்னைப் போன்ற அநாதைப் பெண்களை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டால் அந்த நேரத்தில் மனம் சந்தோஷம் அடையலாம். ஒரு அநாதைப் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்துள்ளோம்  என்ற மனத்திருப்தி உண்டாகலாம்.

ஆனால் அலுவலகப் பங்ஷன்’களிலோ, அல்லது  உறவினர் வீட்டு விழாக்களிலோ என்னை அறிமுகம் செய்யும் போது அவருக்கு அவமானம் தான் உண்டாகும்.  எந்த விதத்திலும் பொருத்தமில்லாத திருமணம் நாளடைவில் மனக் கசப்பை ஏற்படுத்திப் பிரிவைத் தான் உண்டாக்கும்.

இதே போல் யாராவது பணக்காரரிடம் மயங்கிப் தான் என் அம்மா ஏமாந்திருக்க வேண்டும். அதனால் ஏற்பட்ட அவமானச் சின்னமாக நினைத்துத்தான் என்னை தூக்கி எறிந்தார்கள் என்று நினைக்கிறேன். என்னுடைய இந்த நிலை இனித் தொடர வேண்டாம். இன்னொரு கிருத்திகா உருவாக வேண்டாம்” என்றாள் கம்மிய குரலில்.

“நிஜமாகவே நீ ஸ்பெஷல் தான் கிருத்திகா. இதே வேறு பெண்களாக இருந்தால் அவர்கள் பேச்சும் நினைப்புமே வேறாக இருக்கும். அதனால் தான் சபரீஷ்வரும் உன்னைத்தவிர வேறு யாரையும் மனதாலும் நினைப்பதில்லை என்ற முடிவோடு இருக்கிறார் போலும். யாருக்கு யாரென்று அன்று ஆண்டவன் போட்ட முடிச்சை யாரால் மாற்ற முடியும்?” என்று பெருமூச்செறிந்தார் கருத்திருமன்.

அலுவலகத்திற்குப் போனவுடனே, கிருத்திகா, சபரீஷ்வர் கொடுத்த வேலைகளின் பட்டியலை எடுத்து வைத்துக் கொண்டாள். மாலை மணி ஆறாகியும் வேலை முடியவில்லை.

மும்தாஜும், வயலெட்டும் அவளுக்காக சிறிது நேரம் காத்திருந்து விட்டுத் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பி விட்டார்கள். அலுவலகத்திலிருந்து பெரும்பாலும்  எல்லோரும் கிளம்பி விட்டிருந்தார்கள்.

தான் செய்து முடித்த வேலைகளையும், சபரீஷ்வர் கொடுத்த வேவைக்கானப் பட்டியலையும் அவன் டேபிள் மேல் அழகாக அடுக்கி வைத்தாள். அப்போது சபரீஷ்வர் உள்ளே நுழைந்தான்.

“கிருத்திகா, எல்லோரும் கிளம்பி விட்டனர். மற்ற வேலைகளை நாளைப் பார்த்துக் கொள்ளலாம், நீங்களும் உங்கள் ஹாஸ்டலுக்குக் கிளம்புங்கள்” என்றான்.

தன் கேபினுக்குச் சென்று ‘லஞ்ச் பாக்’ஸையும் ஹேண்ட் பேகையும் எடுத்துக் கொண்டு கிருத்திகா கிளம்புவதற்குள் நல்ல மழை வந்து விட்டது. அவளுடைய செக்ஷன் இரண்டாவது மாடியில் இருந்தது. லிப்டில் கீழே இறங்கி வந்து ரிஸப்ஷனில் நின்று கொண்டாள்.

ஏதாவது ஆட்டோ பிடித்துக் கொண்டு போய் விடலாம் என்று நினைத்து ரிஸப்ஷனை ஒட்டிய வெளி வெராண்டாவில் வந்து நின்றாள். அப்போது சபரீஷ்வர் லிஃப்டிலிருந்து வெளியே வந்தான்.

“கிருத்திகா, இன்னும் நீங்கள் போகவில்லையா? என் காரில் வாருங்கள். நான் உங்களை ‘டிராப்’ செய்து விட்டுப் போகிறேன்” என்றான்.

(தொடரும் – திங்கள் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வைராக்கியம் ❤ (பகுதி 6) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

    “மாரீஸ்வரன்” எனும் “மாரி” (சிறுகதை) – ✍ டாக்டர். பாலசுப்ரமணியன், சென்னை